Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

4.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 4.2

.

கார் மருத்துவ வளாகத்தில் இருந்து வெளியே செல்லும் வேளை நினைவு வந்தவனாக வாகனத்தை நிறுத்த கூறி, எரிந்த கட்டிடம் நோக்கி நடந்தான். உள்ளே புகாதே என்றது கட்டித்தை சுற்றிக் கட்டி இருந்த மஞ்சள் ‘போலீஸ்’ ரிப்பன். காலை வரை சுறுசுறுப்பாக இருந்த இடம் காலியாக இருந்தது. அவ்வளவு தான் வாழ்க்கை எனத் தோன்றியது கௌதமனுக்கு. சற்று நேரம் நின்று நான்காம் தளத்தை அண்ணாந்து பார்த்தான்.



Advertisement

மீண்டும் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தவன் கண்களில் அந்த மரம் விழுந்தது. காலையில் பார்த்த பெரியவரின் தோற்றம் நினைவைச் சுட்டது. உள்ளுக்குள் ஏதோ செய்ய மரத்தை நோக்கி நடந்தான்.

பேய்ப் படம் பார்ப்பது போல் இவனையே வீட்டினர் பார்த்திருந்தாலும், அவன் அருகில் செல்லவில்லை. என்ன செய்கிறான் என ஒதுங்கி நின்று பார்த்தனர்.

மரத்தின் அடியில் கருநீல நிற பை ஒன்று இருந்தது. இதைத் தானே அந்த பெரியவர் கட்டிப் பிடித்து நின்றிருந்தார்? குனிந்து அதை எடுத்தான்.

Advertisement

“கௌதமா… என்ன பண்ற?” என அதுவரை பொறுமை காத்த வைஷாலி அவசர அவசரமாக மகனை நோக்கி வந்தார்.

Advertisement

அன்னை வந்து சேரும் முன் அந்த செவ்வக பையின் சிப்பரைத் திறந்திருந்தான் கௌதமன். செவ்வக பையினுள் நான்கு பக்கங்களில் இருந்த ‘ஜெல் ஐஸ் பேக்’ அதன் குளுமையை இழந்திருந்தன. நடுவே பாதுகாப்பாக இருந்த பாட்டிலை எடுத்தான் கௌதமன். குட்டி ஃபீடிங் பாட்டிலில் பாதி வரை பால் இருந்தது.

“என்ன டா அது?” என வந்த அன்னை அதை பார்த்து, “தாய் பால். கெட்டு போயிருச்சு.” என அதை மகனிடம் இருந்து வாங்கி மீண்டும் அதை இருந்த இடத்தில் வைத்தார். ஏதோ ஒரு குழந்தையின் வயிற்றுப் பசியை ஆற்ற வேண்டிய அமுதம் கெட்டுப் போய் இருந்தது. மகன் மனம் மட்டும் அல்லாது அன்னையின் மனமும் கனத்தது.

“வா கௌதமா… போலாம்” என மகனின் கரம் பற்றி அழைத்துச் சென்றார் அன்னை.

Advertisement

ஒருவழியாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திறங்கினான் கௌதமன். ஒரு வாரம் முன்பு வரை இங்கு தான் இருந்தான் என்றாலும் புதிதாக தோன்றியது அந்த வீடு. வசதியான குடும்பம் எனத் தெரியும் ஆனால் இவ்வளவு வசதியானவர்களாக இருப்பார்கள் என கௌதமன் எதிர்பார்க்கவில்லை.

உள்ளே செல்லும் முன் வேலையாள் கொண்டு வந்த ஆரத்தி தாட்டை வாங்கி மகனுக்கு திருஷ்டி கழித்தே உள்ளே அனுப்பினார் வைஷாலி.

“என்ன ஆன்ட்டி ஏதோ எல்லாம் முடிஞ்ச மாதிரி ஒவ்வொரு தரமும் ஆரத்தி எல்லாம் எடுக்கிறீங்க? இன்னும் தொரையோட தழும்ப எல்லாம் சரி பண்ணனுமே” என விக்ரம் பேசுவது காதில் விழுந்தது.

”யார் கண்ணு பட்டுச்சோ எல்லாம் இத்தோட ஒழிஞ்சு போகட்டும். இனி எல்லாம் என மகனுக்கு நல்லதே நடக்கும்” என அன்னை விக்ரமிடம் பதில் கூறுவது காதில் விழுந்தாலும் அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

தாய் மாமா எனப் பெயர் சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார். “நல்லா இருக்கியா மாப்பிள?” என விசாரித்துச் சென்றார். கடந்து ஒரு வாரத்தில் இரு முறை மருத்துவமனைக்கு வந்து போனார் அவர் மனைவியோடு. அப்பொழுதும் இவனைப் பார்க்க வந்தது போல் இவனுக்குத் தோன்றவில்லை. வந்த இரண்டு தரமும் அப்பாவோடு ஏதோ தீவிரப் பேச்சு வார்த்தை நடந்ததையும், ஏதிலோ கை எழுத்து வாங்குவதையும் பார்த்திருந்தான்.  

இன்றும் அதையே தான் மனுஷன் செய்து கொண்டிருக்கிறார். “மச்சான்… சி.ஜி.ஐ. பண்றவனுங்க இன்னும் செலவு இருக்குன்னு கணக்கு கொடுக்கறானுங்க. பணம் கொடுத்தா தான் அடுத்த மாசம் படத்த ரிலீஸ் பண்ண முடியும்” என அப்பாவிடம் எதிலோ கை எழுத்து வாங்கியவர், “உடம்ப பாத்துக்கோ கௌதமா.” எனக் கூறிச் சென்றார். அனைத்தையும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த கௌதமனுக்கு தாய் மாமனின் மீது நல்ல அபிப்பிராயம் வரவில்லை.

“ரொம்ப நேரமா முழிச்சு இருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு கௌதமா” என அவன் அறைக்கு வாசுதேவன் அழைத்துச் செல்ல, அதனுள் நுழைந்தான் கௌதமன்.

“நீ ரெஸ்ட் எடு. ஏதாவது வேணும்னா இன்டர்காம் யூஸ் பண்ணு” என மகனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்து… காண்பித்து வெளியே சென்றார் பொறுப்பான தந்தை.

அது வீடு வகையில் வராது. மாளிகை எனலாம். அப்படித் தான் இருந்தது. அவனுக்காக கொடுக்கப்பட்ட அறையில் ஒரு சின்ன வீட்டைக் கட்டலாம் போல் இருந்தது. சுவரில் ஸ்போர்ஸ் பைக் போன்ற அழகிய அமைப்பும், ஸ்போர்ஸ் கார் போன்ற மெத்தையும் அவன் கவனத்தை ஈர்த்தது. ஒரு வாலிபனின் கனவு அறை என்று கூறினால் சரியாக இருக்கும். அப்படியான அவன் அறை அவனுக்கு எந்த வித உணர்வையும் தரவில்லை. சுற்றிப் பார்த்தான். ஒரு காலத்தில் இவன் ரசனையோடே அறையை அலங்கரித்திருப்பான் போலும். ஆனால் அந்த ரசனை இன்று ரசிக்கவில்லை.

நேரே குளியல் அறைக்குள் புகுந்தவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. இதுதான் அவன் வீடா? இந்த அறையில் தான் தன் நாட்களை ஆனந்தமாகக் கழித்தானா? ஏன் எதுவுமே பிடிபட மறுக்கிறது? இந்தப் பத்து நாள்கள் முன்பு அவன் வாழ்வு எப்படி இருந்தது? தான் எப்படிப்பட்டவன்? எதுவுமே நினைவில் இல்லை. இந்த சொந்தங்களோடு ஏனோ ஒட்ட முடியவில்லை. ஏனோ விக்ரமோடு தோழமை வரவில்லை.

மாட மாளிகையும், ஆடம்பரங்களும், அதில் இருக்கும் மக்களும் என இந்த வாழ்வும், இடமும் அன்னியமாகப் போனது அத்தனை வலித்தது கௌதமனுக்கு. ஆனால் இது தானே அவன் வீடு. இவர்கள் தானே தன் மக்கள். புரிந்துகொள்ள மாட்டேன் என அடம் பிடிக்கும் மனதை நொந்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை கௌதமனால்.

வீடு முழுவதும் இவன் பிறந்த அன்றிலிருந்து ஒரு வருடம் முன்பு வரையுள்ள புகைப்படங்கள் நிரம்பி இருக்க அவைகளில் எதுவுமே நினைவில் இல்லை. மிக மிக சந்தோஷமாகச் சட்டத்திற்குள் குறும்பு கொப்பளிக்கச் சிரித்துக் கொண்டிருக்கும் கௌதமனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தோன்றவில்லை இன்றைய கௌதமனுக்கு.

அந்த மலர்ச்சி எங்குப் போனது? கண்ணாடி முன் சென்று நின்றவனால் தன்னை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. நெற்றி முதல் காது வரை நீண்டிருந்த ஆழமான வடுவைத் தொட்டுப் பார்த்தான். தாடை பக்கம் பெரிதாகக் தெரிந்த தழும்பில் கண்கள் நிலைத்தன. கழுத்தில் இருந்த பேன்டேஜ் அவ்வளவு பெரிதாக இல்லை என்றாலும் உள்ளுக்குள் வலியைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

“கடல் அலை பாறையில தூக்கி அடிச்சிடுச்சு. தூக்கிட்டு போன ஆம்புலன்ஸ் ஆக்சிடென்ட் ஆகி… நெருப்பு பிடிச்சு… ப்ச்! ஆறு மாசம் செத்து பிழைச்ச. நீ பிழைச்சது எல்லாம் தெய்வச் செயல் டா மச்சான்” என்றிருந்தான் விக்ரம்.

 கை மெல்லக் கழுத்துக்குச் சென்றது. கழுத்தைச் சுற்றி சுருக்கு மாட்டியது போல் தழும்பு. கழுத்துக்குக் கீழ் கண்கள் சென்றன. அழுகை வரும் போல் இருந்தது. உறுப்பு தானம் போல் தோல், நரம்பு, டிஷ்யூ என இவைகளை கூட தானம் செய்யலாமாம். இறந்தபின் தன் கண்களை தானம் செய்யுமாறு கேட்டிருந்தானாம். ஆனால் இவன் தானம் பெற்று உயிர் பெறுவான் என ஒருவரும் எதிர்பார்க்கவே இல்லை.

குளியலறையிலும் கௌதமனின் புகைப்படங்கள் அலங்கரித்திருக்க, அதில் கருப்பு வெள்ளையில் சட்டையில்லாது கையை மடித்து பெரிதாக ஏற்றியிருந்த புஜத்தைக் காட்டி நின்றிருந்தான். அதில் ‘லவ் யூ மாம்’ என்பது மட்டும் சிகப்பில் இருந்தது. அன்னையின் மீது தனக்கு இத்தனை அன்பா எனப் பார்த்தான்.

சட்டையைக் கழட்டி தூர போட்டான். உடல் எந்த பாதிப்பும் இல்லாது இருந்தது. நல்ல சிகப்பான திடகாத்திரத் தேகம். ஒன்பது மாதங்களாக இவன் உடலைப் பேணி காக்கவென ஒரு குழுவே வேலை பார்ப்பதால் தேகம் நன்றாகவே இருந்தது. புஜத்தை திருப்பிப் பார்த்தான் ‘லவ் யூ மாம்’ இல்லை.

மார்பைத் தடவ, வலது மார்பில் ‘இதயம் துடிக்கும் வரை உன்னோடு’ என ஆங்கிலத்தில் பச்சை குத்தி, அதன் கீழே இதயம் இருந்தது. இதயத்தில் ஏதோ பெயரை டிசைனாக போட்டிருக்க, அதை படிக்க முயன்று தோன்றான். கையில் இருந்த டேட்டூ என்னானது? மார்பில் இருக்கும் இதயம் யாருக்கு சொந்தம்? தோலின் சொந்தக்காரன் சொன்னால் தெரியும். ஆனால் அவன் தான் உயிரோடு இல்லையே. இதை நினைத்த மாத்திரத்தில் கண்கள் குளம் கட்டியது.

தன்னை அதற்கு மேல் பார்க்க முடியாது முதுகைக் கண்ணாடிக்குக் காட்டி திரும்பியவனுக்கு முகம் சிவத்து மூச்சு வாங்கியது. முதுகைப் பார்க்க முடிந்தால் அதில் பூரான் போல் கழுத்தில் ஆரம்பித்து கால்சட்டையினுள் நுழைந்திருக்கும் தையல் தழும்பும் தெரிந்திருக்கும்.

தன்னையும் தெரியவில்லை. சுற்றி இருப்பவரையும் தெரியவில்லை. தனக்கு நடந்த எதுவும் நினைவில் இல்லை. அழுத்தம் தாள முடியவில்லை. அந்த விபத்தில் சாகவிடாது ஏன் தன்னை காப்பாற்றினர்? இதன் பெயர் தான் காப்பாற்றுவதா? 22 வருட வாழ்வை மறந்த பின் இனி எதை நோக்கிச் செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. உலகம் ரசிக்கவில்லை அதில் இருக்கும் ஒன்றையும் தனக்கென பிடித்துக் கொள்ள முடியவில்லை. நிற்கும் தரை வழுக்குகிறது. தலை சுற்றுகிறது. வாழ்வு கசக்கிறது. இனி எப்படி வாழ்வேன். குளியலறையில் மடிந்து அமர்ந்தான். அனாதரவாக உணர… உடல் குலுங்க அழுதான்.

“நீங்க கடந்து வந்த பாதை ரொம்ப கடினமானது கௌதமன். இன்னைக்கு நீங்க உயிரோட இருக்கதே மெடிக்கல் மிராக்கிள். அந்த சர்ஜரில இருந்து நீங்க பிழைக்க 1% தான் வாய்ப்பிருந்தது. நீங்க பிழைச்சு வந்து நிக்கிறீங்க. இது உங்களுக்கான மறுபிறப்பு. புது மனுஷனா புது உலகத்த பாருங்க. கிடைச்ச இந்த வாய்ப்ப புத்திசாலித் தனமா பயன்படுத்திக்கோங்க கௌதமன். இழந்த எதுவுமே கிடைக்க போறதில்லங்கிற நிதர்சனத்த ஏத்துகிட்டு வாழ்ந்தா இந்த கஷ்டமான காலகட்டத்த தாண்டிடலாம்.

ஒரு நதி, பெருசா ஆரம்பிச்சு… கிளைபரப்பி பல ஊருக்கு நீர் கொடுத்து பல உயிர காக்குது. கடைசியா தேஞ்சு போற நதி கடல சேரும். அந்த ஸ்டேஜ்ல தான் நீங்களும் இருக்கீங்க. நதி தன்னோட சுயத்த அதோட இழந்து போனாலும், அது புது உருவம் பெருது. சின்ன நதி பெரிய கடலா மாறுது. பல உயிருக்கு உலகமா மாறுது. நான் சொல்றது புரியுதா கௌதமன்? நதியா உங்க வாழ்க்கை ஓட்டம் முடிஞ்சாலும் கடலா புது பொலிவோட நிக்கிறீங்க. நடமாடவே முடியாதுன்னு இருந்த நீங்க, கொஞ்ச நாள்ல ஓடவே ஆரம்பிச்சுடுவீங்க. சியர் அப் யங் மேன்.

தழும்பெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. இப்போதைக்கு அவசியமான அளவுக்கு ஃபிக்ஸ் பண்ணி இருக்கோம். பிளாஸ்டிக் சர்ஜரி முடியும் போது, பாக்க ஜம்முன்னு ஆகிடுவீங்க. சியர் அப் கௌதமன்” என்ற இதையே பல விதமாகக் கூறி அனுப்பி இருக்கின்றனர் மருத்துவர்கள். பார்க்கலாம் என்ன வித்தை காட்டி என்னை மனிதன் ஆக்குகிறார்கள் என எண்ணியவன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டான். 

அன்றைய தினமும் அதற்கும் பின்னும் கூட கௌதமன் வீட்டினரோடு அதிகம் பேசவில்லை. கூடாதென்றில்லை அவனால் முடியவில்லை.

“பழைய ஆல்பம் பாக்கிறியா?” எனக் கௌதமன் பிறந்த அன்றிலிருந்தே எடுக்க ஆரம்பித்த படங்களின் தொகுப்புகளை எடுத்துக் கொடுத்தார் வைஷாலி.

“இந்த வீடியோ எல்லாம் பாரு. இது தான் நீ” என்றார் அன்னை.

“இது எல்லாம் என்னோட பைக்கா?” என வாய் திறந்தவனுக்கு மலைப்பாக இருந்தது அவன் வாழ்ந்த வாழ்க்கை.

“நீ ரொம்ப அடம்” என்றார். “நீ பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு நிப்ப” என சிரித்தார். “இப்போ அந்த ஆஸ்பத்திரில வேல பாக்கிற பொம்பளைக்கும் அவங்க பொண்ணுக்கும் வேலை…வீடு… மருத்துவம்ன்னு வசதி பண்ணி கொடுத்தே ஆகணும்ன்னு நின்னியே. அது மாதிரி தான். நீ நினைச்சது நடக்கணும். எல்லாம் மறந்தாலும் உன் பிடிவாதம் மறக்கல பாரு” என மகன் கன்னம் வழித்தார்.

“இந்த வீடியோவ எல்லாம் பாரு. புரியும்” என்றவன் மகனின் உள்ளங்கையை எடுத்து அவர் கன்னத்தில் வைத்துக் கொண்டார். கண்கள் கலங்க, “நீ எனக்கே கிடைச்சுட்ட கௌதமா. இது எனக்கு கிடைச்சிருக்க செக்கன்ட் ச்சான்ஸ். கண்டிப்பா உன்ன நல்லா பாத்துப்பேன்.” என்றவர், “நீ பாரு… இந்த பைக் ஓட்டற வீடியோ எல்லாம் உன் ஃபேவரைட்” என கண்களை துடைத்துக் கொண்டே வெளியே சென்றார்.

போகும் அன்னையைப் பார்த்து அமர்ந்திருந்தவனுக்கு அப்படி எல்லாம் அவர் மேல் பாசம் ஊற்றெடுக்கவில்லை என்றாலும் அவர் பாசத்தை அலட்சிய படுத்தவில்லை.

எதிரில் இருந்த திரையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த கௌதமனையும் விக்ரமையும் பார்த்தான். பத்தாவது பிறந்த நாள் விழாவின் காணொளி அது. ஆட்டம் பாட்டம் விளையாட்டு எனக் காணொளி நீண்டது. அதில் தனக்கான நினைவுள் எதுவும் எல்லை என்றதும் ரசிக்கவில்லை கௌதமனுக்கு. எதையோ யாரையோ பார்பதுப் போல் பார்த்தான். எத்தனை முறை பார்த்தாலும் எதுவும் பதியவில்லை. அனைத்தையும் தூக்கி குப்பையில் போடத் தோன்றியது.

“இது நான் இல்ல” எனக் கத்த தோன்றியது. வாழ்கையைத் தொலைத்து எங்கோ எதினுள்ளோ மாட்டிக் கொண்ட உணர்வை அவனால் விரட்டவே முடியவில்லை. சுற்றி இருக்கும் யாரையும் பிடிக்கவில்லை…. ‘இது தான் நீ’ என தன்னை குறித்து விக்ரம் கூறியபின் தன்னையே தனக்குப் பிடிக்கவில்லையே.

“தாத்தா வீட்டுக்கு பக்கத்துல இருக்க குட்டியோட இன்னைக்கு டேட்டிங்” என இரு தினங்கள் முன் உரைத்த விக்ரமனின் பழக்க வழக்கங்களைச் சத்தியமாக கௌதமனுக்கு பிடிக்கவே இல்லை. ‘இவனா என் நெருங்கிய தோழன்?’ என மனம் குழப்பம் கொண்டது.

“பொண்ணு… தண்ணி… தம்மு… கொண்டாட்டம்! இத தவற நீ எதுமே பேச மாட்டியா? உனக்குன்னு ஒரு குறிக்கோள் எல்லாம் இல்லையா? உனக்கான அடையாளம் என்ன?” எனக் கேட்ட கௌதமனை, விக்ரம் பார்த்த பார்வையில் அத்தனை ஆச்சரியமும் பயமும் சரி விகிதத்தில் இருந்தாலும் அது சில நொடிகள் மட்டுமே நிலைத்தது.

“கௌதம புத்தருக்கு போதி மரத்தடியில ஞானம் வந்துதாம்… சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து தானே விந்திருக்கீங்க? போதி மரத்தடியில இருந்து இல்லியே?” என கேலி பேசியவன்,

“நீங்க எப்படி சார்? சரியான பிளேபாய் டா நீ! எத்தன பொண்ண உன் பின்னாடி சுத்த வச்சிருப்ப? 22 வயசாகுது…. நீ மட்டும் என்ன கிழிச்சியாம்? உன் அப்பன் சேத்து வச்சத அழிச்சத தவிர? நீ சொல்ற பாரேன்… எல்லாம் நேரம் டா” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

தன்னை நினைத்து… தன் வாழ்வு முறையை நினைத்து சத்தியமாகக் கௌதமனுக்கு சிரிப்பு எல்லாம் வரவில்லை.

சித்தார்த்த கௌதமர், போதி மரத்தடியில் வாழ்வின் புரிதலே ஞானத்தின் அடிக்கல் என உணர்ந்து மகிழ்ச்சியை உணர்ந்தாராம். கௌதமன் எந்த மரத்தடியில் தன் வாழ்வின் நிறைவையும் மகிழ்ச்சியையும் அடைவான்?

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!