Skip to content
Post Views: 6,843
அத்தியாயம் 22:
அன்று இரவு சந்தியாவும் மிகுந்த வருத்தத்தில் இருந்தாள். ஆதியிடம் அப்படி எடுத்தெறிந்து பேசி அவன் கோபமாக சென்றது மனதில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. நிச்சயத்திற்கு வேறு இன்னும் மூன்று நாட்களே இருந்தது.
இந்த காதல் ஏன் நமக்கு வந்தது என்று ஏக கடுப்பாக வந்தது. வாழ்க்கையில் ஃபிரீயாக சந்தோசமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஸ்ரீதருடன் நிச்சயம் நின்றபொழுது கூட இவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸாக பீல் செய்யவில்லை சந்தியா.
இவ்வளவெல்லாம் குழம்பவேயில்லை ஆதி. அன்று இரவு தீவிரமாக யோசித்தவன் மறுநாள் காலையே எழுந்து அரவிந்தின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
Advertisement
கிருஷ்ணன் எழுந்து வாக்கிங் சென்றிருந்தார். அரவிந்த் எழுந்து வீட்டிலேயே ஒர்க்கவுட் செய்து கொண்டிருந்தவனிடம், வேலையாள் வந்து ஆதி வந்திருப்பதாக சொன்னான்.
அரவிந்திற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. குஷியாக விசில் அடித்து கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தவன் ஆதியை பார்த்து “வாட் எ சர்ப்ரைஸ். நீங்க எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க ஆதி சார். என் உதவி எதாவது உங்களுக்கு தேவைபடுதா. இல்ல கோயில் நோம்புக்கு நன்கொடை வசூல் பண்ண வந்துருக்கீங்களா” என்று கேட்டு கொண்டே ஆதியின் எதிரில் வந்து அமர்ந்தான்.
ஆதி “இந்த பாரு அரவிந்த். நா சுத்தி வளச்செல்லாம் பேச விரும்பல. நேராவே விஷயத்துக்கு வரேன். சந்தியாவோட உனக்கு நடக்க இருக்கிற நிச்சயத்தை நீ நிறுத்தணும்” என்றான்.
Advertisement
ஆதி சொன்னதை கேட்டு நிதானமாக சோபாவில் நன்றாக சாய்ந்தமர்ந்த அரவிந்த் “உனக்கு சரக்கடிக்கிற பழக்கம் இல்லன்னு எனக்கு தெரியும். வேற என்ன. ம்ம் பைத்தியம் ஏதும் பிடிச்சிடுச்சா. காலைலயே வந்து உளறிட்டுருக்க”
Advertisement
“இதோ பாரு. சும்மா உக்காந்து நீ நக்கலடிச்சிட்ருக்கத கேக்க நா வரல. உன்னால நிச்சயத்தை நிறுத்த முடியுமா முடியாதா?”
“சரி நக்கலடிக்கல. என் நிச்சயத்தை ஏன் நிறுத்தணும்?”
“ஏன்னா நா சந்தியாவ லவ் பண்றேன்”
Advertisement
“இந்த விஷயம் சந்தியாக்கு தெரியுமா”
“தெரியும்”
“தெரிஞ்சா அவ ஏன் என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா. ஓ. அவ உன்ன வேணான்னு சொல்லிட்டாளா. நீ ஒன் சைடா லவ் பண்றியா. அதான் என்ன நிச்சயத்தை நிறுத்த சொல்றியா” என்று கிண்டலாக கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவனை பார்த்து கடுப்பான ஆதி,
“அவளுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும். அவ என்கிட்ட சொல்லும்போது நான்தான் ஒத்துக்கல. திட்டிட்டேன். அந்த கோவத்துலதான் உன்ன கல்யாணம் பண்ண ஒத்துகிட்ருப்பா” என்று ஆதி கூறியதும் அவனை மேலிருந்த கீழ் பார்த்த அரவிந்த்,
“ஹா ஹா உன்ன அவள் லவ் பண்றன்னு சொல்லி நீ ஏத்துக்கலையா. சரி காமெடி போ. அவ கலர் என்ன , அழகென்ன, ஸ்டைலென்ன” என்று அவ்வையார் மாதிரி ராகம் போட்டு கொண்டிருந்தவனை
“போதும் நிறுத்து. என் தலையெழுத்து. உன்னட்டையெல்லாம் வந்து பேசிட்டு உக்காந்துருக்கேன். நீ முடிவா என்ன சொல்ற. நிச்சயத்தை நிறுத்த முடியுமா முடியாதா” என்றான் ஆதி.
“உன்ன யாருப்பா என்னட்ட வந்து பேச சொன்னா. நீ சொல்றது உண்மையா இருந்தா சந்தியாகிட்டயே பேச வேண்டியது தான”
“ம் எல்லாம் என் நேரம். முடிவா சொல்றேன். நிச்சயத்தைன்னைக்கு நீ வராத. மத்தத நா பாத்துக்குவேன்”
“ஓ இது வேறயா. இப்ப நிறுத்த கூடாதா. அன்னைக்குதான் நிறுத்தணுமா”
“ஆமா, நா அவள ரொம்ப பேசிட்டேன். நீ நிச்சயத்த நிறுத்தினாலும் என் மேல உள்ள கோவத்துல என்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிறாளான்னா தெரியல. அதனால நீ நிச்சயத்தை நிறுத்தின பதட்டத்தில எல்லாரும் இருக்கும்போது, சந்தியாவ யோசிக்க விடாம நா நிச்சயம் பண்ணிடனும்”
“ஓஹோ. அப்ப நா நிச்சயத்தை நிறுத்தி வில்லனாகணும். நீங்க அத நடத்தி ஹீரோவாயிடுவீங்க. இந்த உங்களோட பிளானுக்கு நா எப்படி ஒத்துக்குவேன்னு நீங்க என்னட்ட வந்து பேசிட்டு இருக்கீங்க ஆதி”
“ம் உன்ன புத்திசாலின்னு நினைச்சுதான் வந்து பேசிட்ருக்கேன். நீயே யோசிச்சி பாரு. உன்ன விரும்பாத சந்தியாவை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு ஓகேவா” என்று ஆதி கேட்டதும் யோசிக்கும் பாவனையில் நெற்றியில் தட்டி கொண்டிருந்த அரவிந்த்
“ஆனா நீ இப்படி யோசிச்சி பாரேன். உன்ன விரும்பற சந்தியாவை நா கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு நீ விரும்பற சந்தியா கிடைக்காம போவாளே. ஆஹா கேக்கவே நல்லாருக்குல்ல. சின்ன வயசுல இருந்து உன்னட்ட எல்லாத்துலயும் தோக்க வச்ச கடவுள், இப்ப உன்ன என்கிட்டே தோக்க வைக்க எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்துருக்காருன்னு நா ஏன் யோசிக்க கூடாது?” என்று ஆதியை பார்த்து கேட்டான்.
அவனை கண்கள் இடுங்க பார்த்த ஆதி, “இங்க பாரு. எதோ ஒரு வேகத்துல சந்தியா இந்த நிச்சயத்துக்கு சம்மதிச்சிருக்கணும். ஆனா கண்டிப்பா உன்னோட கல்யாணம் வரைக்கும் வர மாட்டா. உன்னன்னு இல்ல என்ன தவிர அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா” என்றான்.
“ஓஹோ. அவ்ளோ கான்பிடன்ட். நீ நினைக்கிறது நடக்கலைன்னா. நானும் நிறுத்த போறதில்ல. சந்தியாவும் கல்யாணம் வரைக்கும் வந்துட்டான்னா?” என்று அரவிந்த் கேட்டதும் நிதானமாக சோபாவை விட்டு எழுந்து வேட்டியை மடித்து கட்டிய ஆதி
“கண்டிப்பா அப்பவும் உன் கல்யாணம் நடக்காது. கல்யாண பொண்ண மண்டபத்துல புகுந்து தூக்குவேன். அதனால இந்த நிச்சயத்தை நிறுத்தறதுதான், எப்படி இருந்தாலும் உனக்கு நல்லது. யோசிச்சிக்கோ” என்று எழுந்து சென்றவன் வாசல் கதவின் அருகில் நின்று கொண்டு “அப்புறம் இந்த விஷயம், அதாவது நா வந்து நிச்சயத்தை நிறுத்த சொன்ன மேட்டர் எக்காரணத்தை கொண்டும் சந்தியாக்கு தெரியக்கூடாது. ஏன்னா நா அவளை லவ் பன்றேன்னு அவகிட்ட நான்தான் சொல்லணும். உன் மூலமா தெரியக்கூடாது. புரியுதா? ” என்று கேட்டுவிட்டு வெளியில் சென்று விட்டான்.
அரவிந்த் தான் மண்டை காய்ந்து உட்க்காந்திருந்தான். இவனுக்கு எவ்ளோ எகத்தாளம். நிச்சயத்த நிறுத்துன்னு கெஞ்சுவான்னு பாத்தா, வந்து மிரட்டிட்டு போறான். இதுல போற போக்குல ஆர்டர் வேற? என்று புலம்பி கொண்டிருந்தான்.
தோட்ட வீட்டின் கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்தான் ஆதி. அவனுக்கு அருகில் வசந்தனும் அமர்ந்திருந்தான். எதிரில் தென்னை மரத்தில் சாய்ந்தபடி முரளி நின்றிருந்தான்.
வசந்தன் “என்ன மச்சான். காலைல கோச்சிங் கிளாஸ் கிளம்பிட்டிருந்தவனுக்கு போன போட்டு உடனே கிளம்பி வான்னு சொன்னதொட்டு, நானும் என்னமோ ஏதோன்னு இங்க வந்தா, நீ அரை மணி நேரமா இப்படியே உக்காந்துருக்க. என்னன்னு சொல்றதா இருந்தா சொல்லு. இல்ல நா கிளாசுக்கு போகோணும்” என்றுவிட்டு கிளம்ப போனான்.
அப்பொழுது ஆதி “அரவிந்த் நிச்சயம் நடக்க கூடாது” என்றான்.
“என்ன விளையாடுறியா நீயி ? சந்தியா அப்பாகிட்ட அவன் நல்ல பையன், கல்யாணத்தை நடத்துங்கன்னு செர்டிபிகேட் கொடுத்து போட்டு இப்ப வந்து நிறுத்தோணும்னா எப்படி. அதுலயும் அந்த அரவிந்த்கிட்ட போய் இத பேசுனம்ன்னு வை, உன்ன கடுப்பேத்த நல்ல வழி கிடைச்சி போட்டுதுன்னு எப்படியாவது கல்யாணத்த நடத்தத்தேன் பாப்பான்” என்று வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆதி
“நா அவன்கிட்ட பேசிட்டேன்”
“என்ன… பேசி போட்டியா?. அவன் என்ன சொன்னான்?”
“ஒன்னும் சொல்லல”
“அடங்… ஒன்னும் சொல்லலைன்னா என்ன அர்த்தம். நிச்சயத்தை நிறுத்துறேன்னு சொன்னானா நடத்துவேன்னு சொன்னானா?”
“அப்படிலாம் ஏதும் சொல்லல”
“மச்சான்…” என்று பல்லை கடித்த வசந்தன் “முழுசா என்ன பேசுனீங்கன்னு சொல்லு” என்றான்.
ஆதியும் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை சொன்னான்.
“ம் எதிர்பாத்ததுதேன். இப்ப நீ என்ன செய்ய போற”
“நிச்சயத்தன்னைக்கு அவனை தூக்கணும்”
இதுவரை அமைதியாக இவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த முரளி “அண்ணா சூப்பர்ங்ண்ணா. எதுக்கு இப்படி அனாவசியமா பேசிக்கிட்டு. மாப்பிள்ளையை தூக்கறோம். நம்ம அண்ணா கல்யாணத்த நடத்தறோம்” என்றான்.
அதற்கு வசந்த் “இவன் ஒரு ஆகாவளி. ஏன்டா பின்னாடியே கல்யாணம் பண்ணிக்க சொல்லி வந்த புள்ளைய விரட்டி போட்டு, இப்ப மாப்பிள்ளையை தூக்குறான்ங்களாம் . நீங்க மாப்பிள்ளையை தூக்குனாலும் என்ர தங்கச்சி உன்ர நொண்ணன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டா” என்றான்.
அதற்கு ஆதி “ஒத்துக்கலைன்னா அவளையும் தூக்குவேன்” என்றுவிட்டு எழுந்து சென்றான்.
சரியாக ஒரு மாதம் கடந்த ஒரு இரவில் ஆதியின் வீட்டு அறையில், ட்ரெஸ்ஸிங் டேபிளின் எதிரில் அமர்ந்திருந்த சந்தியாவிற்கு அலங்காரம் பண்ணி கொண்டிருந்தார் சித்ரா. அன்று காலைதான் ஆதிக்கும் சந்தியாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது.
அரவிந்தை பற்றித்தான் யோசித்து கொண்டிருந்தாள் சந்தியா. அவனுக்கும் சந்தியாவிற்கும் நிச்சயம் நடக்கவிருந்த காலையில் கிருஷ்ணன்தான் செல்வத்திற்கு கால் செய்திருந்தார்.
குஜராத்தில் அவரின் மனைவியின் அண்ணனின் மகள் அரவிந்தை காதலித்ததாகவும், இப்பொழுது அரவிந்திற்கு நிச்சயம் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் அவள் விஷம் குடித்துவிட்டதால், அவளை பார்க்க செல்கிறோம், நிச்சயத்தை நிறுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அவரும் அரவிந்தும் குஜராத் செல்லப்போவதாகவும் தெரிவித்துவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதே செய்தியை ஈஸ்வரமூர்த்திக்கும் கால் செய்து சொல்லிவிட்டார் கிருஷ்ணன். அவரும் சுந்தரமூர்த்தியும் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி போய் அமர்ந்திருந்தார்கள்.
ஆதியும் அரவிந்த் நிச்சயத்தை நிறுத்துவானா மாட்டானா என்று இரவு முழுவதும் குழம்பிவிட்டு காலையில் யோசனையிலேயே கீழே இறங்கி வந்தான்.
அவனை பார்த்ததும் ஈஸ்வரமூர்த்தி, அவனை அழைத்து நிச்சயம் நின்ற விஷயத்தை கூறினார். அதை கேட்டதும்தான் நிம்மதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து மூச்சை விட்டான் ஆதி.
பிறகு தொண்டையை செருமி கொண்டவன் “இப்போ என்னங்ப்பா செய்ய போறீங்” என்றான்.
“அதான் தெரியல சாமி. கிருஷ்ணன் செல்வத்துகிட்டயும் சொல்லி போட்டாரு போல. அவரும் இன்னும் என்ரகிட்ட பேசல. அவர எப்படி சமாதான படுத்தப்போறேன்னுதேன் தெரியல” என்று புலம்பியவரிடம் ஆதி “அப்பா சந்தியாவ எனக்கு பொண்ணு கேளுங்க” என்றான் நேரடியாக.
சற்று நேரம் ஈஸ்வரமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் சுந்தரமும் சிவகாமியும் மிகுந்த சந்தோஷமாகிவிட்டனர்.
சுந்தரம்தான் “என்னங்ண்ணா யோசிக்கிறீங். ஆதி சொல்றது புரியலீங்களா. அண்ணி என்னங் மச மசன்னு நின்னுட்டுருக்கீங். போய் தாம்பூல தட்டு ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்கங்க. உண்மைய சொல்ல போனா இப்பத்தானுங்ண்ணா எனக்கு நெம்ப சந்தோசமாட்ட இருக்குதுங். இந்த சந்தியா புள்ளைய வெளில குடுக்க எனக்கு மனசே இல்லீங். நம்ம வீட்லயே ரெண்டு மாப்பிள்ளைக இருக்கும்போது எதுக்கு வெளில கொடுக்கோணும். ஆனா கிருஷ்ணன் இவ்ளோ வேகமா பொண்ணு கேப்பாருன்னு நா எதிர்பாக்கலீங். ஆனா கடவுளுக்கு தெரியும்ங்க யாருக்கு யாரை ஜோடி சேக்கோணும்ன்னு” என்று பரபரப்பானவரை பார்த்து சிவகாமியும் வேகமாக உள்ளே சென்றார்.
ஆனால் ஈஸ்வரன் ஆதியிடம் “ஐயா உண்மையதேன் சொல்றீங்களா. இது ஒன்னும் விளையாட்டு இல்ல சாமி. அந்த புள்ளைக்கு ரெண்டு வாட்டி நிச்சயம் நின்னு போயிருக்கு. நம்ம திரும்பவும் அவசரப்பட்டு ஏதும் பண்ணி போட கூடாதுங்” என்றவரிடம் ஆதி “இல்லங்ப்ப நா உறுதியாதான் சொல்றேனுங். எனக்கு சந்தியாவ பிடிச்சிருக்கு. இதுல எந்த மாற்றமும் இல்லீங்ப்பா” என்றான் அழுத்தமாக.
சரியென்று ஈஸ்வரனும் நிம்மதியாக சித்ரா அருண் உட்பட எல்லோரையும் அழைத்து கொண்டு சந்தியா வீட்டுக்கு சென்றார். கௌரி சந்தியா வீட்டில்தான் இருந்தாள்.
இவர்கள் தாம்பூல தட்டுடன் உள்ளே சென்றதும் ஏற்கனவே கவலையிலும் குழப்பத்திலும் இருந்த செல்வமும் பத்மாவும் ஒன்றும் புரியாமல் பார்த்தனர்.
சுந்தரம்தான் செல்வத்திடம் “என்ன மச்சான் பாக்றீங்க. என்ர பையன் ஆதிக்கு உங்க புள்ளைய பொண்ணு கேட்டு வந்துருக்கோம்ங் . உங்களுக்கு சம்மதம்ன்னா தட்ட பிடிங்க” என்றார்.
மேலும் குழம்பி போன செல்வத்திடம் சிவகாமி “என்னங்ண்ணா ஆதிக்கு இதுக்கு முன்ன நடந்த கல்யாணத்த பத்தி உங்களுக்கு தெரியும்ங்களா. அதுனால ஏதும் யோசிக்கிறீங்ளா” என்றார்.
“அதெல்லாம் இல்லம்மா. அந்த விஷயம்லாம் மச்சான் சொல்லிருக்காரு. ஆதி தம்பி பத்தில்லாம் எனக்கு ஒரு குறையும் இல்லம்மா. எனக்கு என்ன பண்றதுன்னு உண்மையா புரியல. இன்னும் சொல்ல போனா நாங்க அவளுக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு யோசிக்கவே இல்ல. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் தானாதான் பொண்ணு கேட்டு வராங்க. ஆனா அப்புறம் வேண்டான்னு சொல்லிடறாங்க. முடிவெடுக்கவே எனக்கு பயமா இருக்கும்மா”
“உங்க பயம் எனக்கு புரியுதுங்ண்ணா. ஆனா என்ர வீட்டுக்கு வர போற மஹாலக்ஷ்மியை வேற யாரும் கூட்டிட்டு போக கூடாதுன்னுதேன் இவ்வளவும் நடந்துருக்கிறதா நா நினைக்கிறேங்ண்ணா. உங்க புள்ளை எங்க வீட்டுக்கு வந்த மொத நாளே அவ எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லாருக்கும்ன்னு நானும் என்ர வூட்டுக்காரரும் பேசிக்கிட்டோம்ங்க். ஆனா ஆதி கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னதொட்டுதேன் இத பத்தி பேசாம இருந்தோமுங். இப்ப அவனே பொண்ணு கேக்க சொல்லிட்டான். நீங்க நம்பி உங்க புள்ளைய எங்க வூட்டுக்கு அனுப்புங்க. எங்க குலதெய்வம் மாதிரி வச்சி பாத்துக்குவோம்” என்று சிவகாமி கூறியதும் பக்கத்தில் இருந்த சித்ராவும்
“அண்ணா ஆதி தங்கமான பையன். எனக்கு ஒரு பையன் இருந்தா உன் புள்ளைய கொடுப்ப இல்ல. அத மாதிரி ஆதிக்கும் நீ யோசிக்காம நம்ம சந்தியாவ குடுக்கலாம். அவ எங்க வீட்ல மஹாராணி மாதிரி இருப்பா” என்றார்.
“எல்லாம் சரிதாம்மா. நா இப்ப யோசிக்கிறது என் மகளை பத்திதான். திடீர்னு வேற மாப்பிள்ளைன்னு சொன்னா என்ன சொல்வான்னு தெரியலம்மா”
“சரிங்ண்ணா. நீங்க சந்தியாவையே வரச் சொல்லி கேட்டு போடுங்” என்றார் சிவகாமி. செல்வத்தின் பதிலுக்கு காத்திராமல் சித்ராவே சென்று சந்தியாவை அழைத்து வந்தார். கூடவே கௌரியும் வந்தாள். வரும்போதே சந்தியா ஓரளவு விஷயத்தை புரிந்து கொண்டாள். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக வந்து நின்றவளிடம் சிவகாமி “ஏன் கண்ணு, என்ர பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த அத்தை வீட்டுக்கு மருமகளா வந்து போடறியா” என்றதும் சந்தியா நிமிர்ந்து ஆதியை பார்த்தாள்.
ஆதியும் அழுத்தமாக சந்தியாவை பார்த்து கொண்டிருந்தான். அவளின் பார்வையை கவனித்த சிவகாமி “என்ன சாமி அங்க பாக்கிற. ஆதிக்கு விருப்பமா இல்லையான்னு பாக்கறியா கண்ணு. அவன்தேன் முதல்ல உன்ன பொண்ணு கேக்க சொன்னான். அதனால நீ உன்ர விருப்பத்தை சொல்லிப்போடு” என்றார்.
சந்தியா அடுத்து அவள் தாய் தந்தையை பார்த்தாள். பத்மா “உன் விருப்பம்தான் முக்கியம் சந்தியா. நீ என்ன நினைக்கிற” என்றார்.
அதை தொடர்ந்து சந்தியாவும் சிவகாமியிடம் “எனக்கு சம்மதம் அத்தை” என்று சொல்லிவிட்டாள்.
அவளை சம்மதிக்க வைக்க சிரமப்பட வேண்டி வரும் என்று நினைத்திருந்த ஆதி, உடனே அவள் ஓகே சொல்லவும் யோசனையானான்.
அன்று சிம்பிளாக தட்டை மாத்தி நிச்சயம் பண்ணி கொண்டவர்கள் அடுத்த ஒருமாதத்தில் கல்யாணத்திற்கு நாள் குறித்தார்கள்.
இடைப்பட்ட நாட்களில் சந்தியாவிடம் தனியாக பேசுவதற்கு நிறைய முயற்சி எடுத்திருந்தான் ஆதி. ஆனால் சந்தியா பிடி கொடுக்கவே இல்லை. இப்படியாக இன்று காலை திருமணமும் நடந்து முடிந்திருந்தது.
ஆனால் அரவிந்த் மட்டும் சந்தியாவின் கண்களில் படவும் இல்லை. போன் செய்து பேசவும் இல்லை. கிருஷ்ணன் மட்டும் ஊருக்கு வந்தவர், அவர் மச்சானின் மகள் நன்றாக இருப்பதாகவும், அரவிந்த் அவர்கள் வீட்டிலேயே சிறிது நாள் தங்கியிருந்து விட்டு வருவதாக இருக்கிறான் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு, நிச்சயத்தை நிறுத்தியதற்கு நேரடியாக சந்தியாவின் பெற்றவர்களிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டார்.
சந்தியா தனியாக அவரிடம் சந்தித்து கேட்டதற்கு, முறைப்பெண் கதையெல்லாம் பொய் என்று கூறியவர், ஆனால் அரவிந்த் அவன் மாமா வீட்டில் இருந்துவிட்டு வருவதாக கூறிவிட்டான் என்று மட்டும் கூறினார்.
error: Content is protected !!