Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 12

ஷ்..ஷ்.. என்று குக்கர் விசில் சத்தம் கேட்டு புரண்டுப் படுத்தாள் ஜனனி தீபிகா.

கை தன் போக்கில் அருகில் இருந்த மொபைலை எடுத்தது.

டைம் பார்த்தாள். அதிகாலை ஐந்தரை மணி!

யார் இந்த அர்த்த ராத்திரியில் சமைத்துக் கொண்டிருப்பது என்ற கேள்வியுடன் கண்களை முழுவதுமாக திறந்தாள்.



Advertisement

ஓ.. நாம் இப்போது இருப்பது பரணியின் கிராமத்து வீட்டில் அல்லவா?

அப்படின்னாலும் இந்த பட்டிகாட்டான்களில் யாரு இந்த நேரத்துக்கே கிளம்பி சென்று எந்த ஆபீசில் அட்டென்ட்டன்ஸ் போடப்போகிறார்கள்?

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “ஏய்.. ஜானு.. ஜானு” என்று பரணியின் ஹஸ்கி வாய்ஸ் கேட்டது!

Advertisement

அட பரணியா, நம்மை இந்த காலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அழைப்பது?

Advertisement

அவளுக்குள் ஆச்சர்யம்!

அட, தான் அவனை வேண்டாம் என்று ப்ரேக் அப் செய்து விட்டு போனப் பின்பும், இவன் தன்னை இன்னும் மறக்கவே இல்லையா? என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது!

கூடவே, அப்புறம் ஏன், நேற்று வேண்டா வெறுப்பாய், கொஞ்சம் கூட விருப்பமே இல்லாதது போல நடந்து கொண்டு, மனிதாபிமான உதவி என்றும் சொல்லி அழைத்து வந்தான் என்ற கேள்வியும்!

Advertisement

ஆம்!

நேற்று பரணி ஜான்வியை அழைத்து வர வேண்டும் என்று, எப்போதடா விடியும் என்றே காத்திருந்து, அவள் பிளைட் வருவதற்கு  மூன்று மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விட்டான் ஏர்போர்ட்டிற்கு!

அவள் வரும் பிளைட் வரும் நேரம் காலை பதினொன்றரை மணிக்கு! இவனோ எட்டு மணிக்கே கிளம்பிவிட்டான்!

அங்கு போய்க் கொண்டிருக்கும் போது அவனின் ஆடிட்டரிடம் இருந்து போன்!

அவரின் ஜூனியர் அவனுக்காக அவர் ஆபிசில் காத்திருப்பதாகவும், அவன் ஒரு சில டாக்குமென்ட்களில் சைன் பண்ண வேண்டியிருப்பதாகவும் ரொம்பவும் அவசரம் என்றும் சொன்னார்.

பரணி டைம் பார்த்தான். ஜான்வியின் பிளைட் வர இன்னமுமே நேரம் இருந்தது!

சரி என்று அவரின் ஆபீஸ்க்கு காரை திருப்பினான்.

அங்கு போய் அவன் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும் போது, அவனை யாரோ அழைப்பது போல இருந்தது!

திரும்பிப் பார்த்தான்! ஜனனி தீபிகா!

யாரை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று இருந்தானோ அவள்!

கையில் சின்ன சூட்கேஸ், தோளில் இரு ஹாண்ட்பாக் சகிதம் நின்று கொண்டிருந்தாள்!

“பரணி! எப்படி இருக்க?”

அது பத்தி உனக்கென்ன என்பது போல பார்த்தான்.

அவன் பேச மாட்டான் என்று உணர்ந்து கொண்ட அவள் தானாகவே பேசினாள்.

அவளுக்கு தற்சமயம் வேலை ஒன்று இல்லையாம்.

திருச்சியில்  புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் ஒரு கார்பரேட் கம்பெனியின் கிளை அலுவலகத்திற்கு ஒரு இன்டர்வியூக்காக வந்திருப்பதாகவும், ஒரு லெவல் கம்ப்ளீட் பண்ணி விட்டதாகவும், இன்னும் இரண்டு லெவல்கள் இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரம் இங்கு தான் இருக்கப் போவதாகவும் சொன்னாள்.

“உனக்கு திருச்சி மாதிரி ஊர் எல்லாம் பிடிக்காதே, நீ எப்படி இங்கே?” என்றான் குத்தலாகவே!

“அதெல்லாம் அப்போ பரணி, நானும் கொஞ்சம் இம்மெச்சூர்டாக இருந்த போது பேசியது, இப்போது காலம் எனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துடுச்சு!” என்றாள் கொஞ்சம் கண்கள் கலங்க!

பரணி ஒன்றுமே சொல்லாது அவளைப் பார்த்தான்.

அவளின் அப்பா, அவரின் தங்கைப் பெண் வீட்டோடு போய் விட்டாராம். அவள் அம்மாவை அவள் அண்ணன் அழைத்துக் கொண்டுப் போய் விட்டானாம்!

இப்போது இவள் மட்டும் தனியே இருக்கிறாளாம்.

பார்த்துக் கொண்டிருந்த வேலையில் நிறைய தொல்லைகள் இருந்ததாம். அதனால் விட்டு விட்டாளாம்.

இப்போது, திருச்சி வேலைக்கு அப்ளை செய்து இன்டர்வியூக்காக வந்திருக்காளாம்.

அவள் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சாலரி ரொம்பவே குறைவு என்றாலும், இங்கு காஸ்ட் ஆப் லிவிங் குறைவு என்று வந்து விட்டாளாம்!

வந்த இடத்தில் தங்க இடம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இப்போது யதேச்சையாக அவனைப் பார்த்தாளாம்.

உண்மையில் அவள் சொன்னதில் சரி பாதி மட்டுமே உண்மை!

அதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவள் அம்மா பேபியின் கதையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்!

ஜனனி தீபிகாவின் அப்பா ராஜசேகரன், ரொம்ப காலம் கல்யாணமே செய்துக் கொள்ளாமல், விபத்தில் பெற்றோர் இருவரையுமே இழந்து விட்ட அவரின் ஆசைத் தங்கை மகள் நிஷாந்தியை வளர்த்து வந்தார்!

அவர் கூட அவரின் அம்மா பங்கஜம்.

பங்கஜம் அம்மாளுக்கு தன் மகன் இப்படி ஒண்டிக் கட்டையாகவே இருப்பது குறித்து மிகவும் வருத்தம்!

இப்படி தன் இரு மக்களின் வாழ்க்கையுமே ஆகி விட்டதே என்று மிகவும் வருத்தம்! இதில் அவருக்கு ஆஸ்த்துமா வேறு!

அப்போது பக்கத்து வீட்டிற்கு சைட் போர்சனில் குடிவந்தவர்கள் தாம் பேபியும் அவரது தாய் நீலவேணியும்!

குடிவந்த கொஞ்ச நாளிலேயே அந்த வீட்டின் உரிமையாளர் தாத்தா இறந்து விட்டார்!

அவர் இறக்கும் முன், இந்த வீட்டை நீலவேணிக்கும் பேபிக்கும் குறிப்பிட்ட தொகை வாங்கிக் கொண்டு கிரயம் செய்துக் கொடுத்து விட்டதாக சொல்லிக் கொண்டு, முழு வீட்டிலும் அவர்களே இருந்து கொண்டனர்.

இப்போது அவர்கள் பார்வை ராஜசேகரன் மீதும், அவர்கள் வீட்டை விட இரண்டு மடங்கு பெரிதான வீட்டின் மீதும் விழுந்தது.

அந்த வீடுகள் எல்லாம் செமி கமர்ஷியல் வகையை சார்ந்தவை.

எதிர்காலத்தில் மிகவும் விலை உயர வாய்ப்பிருக்கும் சிட்டியின் முக்கிய இடம் அது!

அவர்களுக்கு தூண்டில் ஆக கிடைத்தாள் நிஷா!

“புட்டு செஞ்சேன், இடியாப்பம் செஞ்சேன், கொழுக்கட்டை செஞ்சேன் , நிஷா பாப்பாவுக்கு கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்று நீலவேணி தொடங்கி வைத்தார்.

“என் பொண்ணு அழகா தலைப் பின்னி விடுவா, வா நிஷா கண்ணு, அக்கா கிட்ட பின்னிக்கோ” என்றும்,

“அம்மா உங்களுக்கு முடியலைன்னா சொல்லக் கூடாதா, ஒரு வெந்நீர் கூடவா வச்சு தர மாட்டோம் பக்கத்து வீட்டுல இருந்துட்டு” என்றும்  மெல்ல மெல்ல ஒட்டகம் கூடாரத்தில் நுழைவது போல நுழைந்து விட்டார்கள் அம்மா பெண் இருவரும்!

அது வரை கல்யாணம் பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்த ராஜசேகருக்கும் இவள் கல்யாணம் செய்துக் கொண்டால், நிஷாவை நன்குப் பார்த்துக் கொள்வாள் என்ற யோசனையும் நம்பிக்கையும்  ஏற்படத் தொடங்கும் அளவுக்கு!

ஆமாம், ஆரம்பத்தில் மட்டுமே நீலவேணி வந்தது, பிறகு “அம்மாவுக்கு முடியல” என்று வர ஆரம்பித்து அவர் கண்ணில் அடிக்கடி பட்டு இந்த யோசனைக்கு வர வைத்ததும் பேபி தான்!

“ஊர்ப் பிள்ளைகளை எல்லாம் எடுத்து வளர்க்கிறா என் பொண்ணு பேபி! அவளுக்கும் ஒரு கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆறதுக்கு தான் எனக்கு வழியே இல்லை!

எடுத்து செய்ய தெம்பும் இல்ல, ஆம்பிளையும் இல்ல” என்ற நீலவேணியின்  புலம்பல், ஒரு நாள் தாயையும் மகனையுமே பெண் கேட்க வைத்து, அவர்கள் செலவிலேயே கல்யாணத்தையும் நடத்திக் கொடுத்து விட்டது!

முதலில் ஒரு ஆண்  சஞ்சய். பிறகே ஜனனி தீபிகா பிறந்தாள்.

ஜனனி என்பது அவரின் அப்பாவின் எக்ஸ்சோட பேர். அதையும் சேர்த்து தீபாவளி அன்று பிறந்ததால் தீபிகாவையும் சேர்த்து வைத்து விட்டார்.

சஞ்சய் முழுக்க முழுக்க அப்பா பிள்ளை. அவனுக்கு அவன் வீட்டுப் பெண்கள் மூவரையுமே பிடிக்காது. ஒட்டியே இருக்க மாட்டான்.

ஜனனி தீபிகா வளர்ந்து ப்ளஸ் டூ படிக்கும் போது , அவள் அண்ணனின் நண்பன் ஆக வந்தவன் தான் ரிஷி. ரொம்ப நல்லப் பையன்.

அவனுக்கு ஜனனியை ரொம்ப பிடித்து விட்டிருந்தது.

படிக்கும் போதே கேம்பஸில் தேர்வாகி நல்ல வேலையில் அமர்ந்து விட்டவன். ரொம்பவும் கஷ்டப்பட்டு படித்து வந்தவன். எந்தவித பணக்கார பின்புலமும் இல்லாமல்.

நீலவேணி இறந்து விட்டுருக்க, இப்போது அந்த இடத்தில் பேபி!

அவருக்கு ரிஷிக்கு எப்படியாவது ஜனனியை கல்யாணம் செய்து விட ஆசை.

அதனால் அவர்கள் பாணி தனிப்பட்ட உபசரிப்புகள்! விருந்தோம்பல்கள்!

சஞ்சய்க்கும் அவன் அப்பாவிற்கும் இது கொஞ்சம் கூட பிடிக்க வில்லை!

அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதே இல்லை.

நிஷாவிற்கு திருமணம் ஆகி விட்டிருக்க, ராஜசேகரன் அவள் வீட்டிற்கு போய் விடுவார்.

இந்நிலையில் தான், காலேஜில் படிக்கும் போது, பரணி ஜனனியை அவனது வீட்டிற்கு அவன் சித்தப்பா கதிர் சொன்னப்படி கோவில் திருவிழாவை சாக்கிட்டு அழைத்துப் போயிருந்தான்.

அப்போது அந்த வீட்டில்  வைத்து எடுத்த போட்டோக்களைப் பார்த்த பேபிக்கு இப்போது வேறு யோசனை வந்து விட்டது!

இந்த பரணி வீட்டைப் பார்த்தால், பழங்கால ஜமீன் வகையறாக்கள் போல தெரிகிறது.

இந்த பையனும் மேற்படிப்பு படிக்க ஜெர்மனி போகப் போகிறானான். பின் அங்கேயே வேலையில் அமரவும் போகிறானாம்.

அப்போ நம்ம ஜனனியை இவனுக்குத் தானே கொடுக்க வேண்டும்!

நல்லவேளை, இந்த ரிஷி பையனிடம் மாப்பிள்ளை என்று எதுவும் வெளிப்படையாக சொல்லி எல்லாம் பேசியிருக்க வில்லை!

இவரின் மனப்போக்கிற்கு ஏற்றார் போல, பரணியும் ஜனனியிடம் ப்ரபோஸ் செய்து விட, அன்றிலிருந்து ரிஷி ஜனனிக்கு சஞ்சய் மாதிரி இன்னொரு “அண்ணன்” ஆகி விட்டான்!

பரணி ஜெர்மனிக்கு படிக்க போயிருந்த அந்த காலங்களில், ஜனனி அவனுக்காக ரொம்ப நல்லவள் போல காட்டிக் கொண்டு காத்து தான் இருந்தாள்!

ஆனால், திடீரென்று அவன் வீட்டில் ஏற்பட்ட அந்த பெரிய சோக நிகழ்வால், எல்லாமே தலை கீழ் ஆகிவிட்டது!

ஆனால், அப்போதும் பேபி, “அவனை வேண்டாம்னு சொல்லிடாதடி, கொஞ்சம் பொறுமையா இரு, கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வரட்டும். அப்புறம் அவனை நம்ம இஷ்டத்துக்கு எங்க வேணுமின்னா கூட்டிட்டு வந்திடலாம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே” என்று தான் ஜனனியிடம் சொன்னார்!

ஆனால் ஜனனியோ, “போம்மா, என்னால எல்லாம் போய் அந்த பட்டிக் காட்டுல, அந்த கண்ட்ரி பீப்பில்ஸ் கூட எல்லாம் ஒரு நாள் கூட இருக்க முடியாது! ஒரே மாடு, சாணி, நெல்லு மூட்டைங்க. எனக்கு அந்த என்விரோன்மெண்டே பிடிக்கல!”

“நான் உன்னோட அனுபவசாலி நான் சொல்றத கேளு!” பேபி விடவில்லை அவளை!

“என்ன பெரிய அனுபவசாலி! நீ கூட அந்த வீடு அப்பவோடதுன்னு நம்பிக்கிட்டு, அந்த நிஷாவுக்கு ஆயா வேலைப் பார்த்து அப்பாவை கரைக்ட் பண்ணி கல்யாணம் பண்ணின! கடைசில என்னாச்சு, நிஷா மேஜர் ஆனவுடன் அந்த வீடு அவ பேர்க்குப் போய்டுச்சு!

அதுக்கப்புறம் ,அவளுக்கு கல்யாணம் ஆகி, அவ புருசனோட வந்து நம்மை வீட்டைக் காலி பண்ண வச்சுட்டு வித்துட்டு மும்பையில் போல செட்டில் ஆகிட்டா! உன்னை மாதிரி நாளைக்கு கிடைக்கும்னு, இந்த இலவு காத்தக் கிளின்னு சொல்வாங்களே அது மாதிரி வெயிட் பண்ணி ஏமாற நான் தயாரா இல்ல!” தீர்மானமாய் சொல்லி பரணியை அன்று ப்ரேக் அப் செய்து விட்டாள்!

ஆனால் அதுக்கப்புறம் அவளுக்கு ஒரே இறங்குமுகம் தான்!

ரிஷி வேறு ஒரு ஊருக்குப் போய் விட்டான்.

அவள் அண்ணன் அவனுக்குப் பிடித்தப் பெண்ணை அவனாகவே கல்யாணம் செய்து கொண்டு விட்டான்.

இவள் வேலைக்குப் போய் ஆக வேண்டிய சூழ்நிலை!

எங்கும் நிலைத்து இருக்கவில்லை!

சில இடங்களில் அதிக வேலை என்று இவளே விட்டு விடுவாள், சில இடங்களில் அவர்களே டீசண்டாக பேசி டெர்மினேட் செய்தும் இருக்கிறார்கள்.

இவள் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவளின் அப்பா நிஷா வீட்டுக்கே போய் விட்டார்!

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சோற்றுக்கு பிரச்சினை ஆகிவிட்டது.

அந்த தாத்தாவை ஏமாற்றி கிரயம் செய்த வீடும் அவரின் பேரன் வெளிநாட்டில் இருந்து வந்து கேஸ் போட்டு பிடுங்கி விட்டான்!

கிட்டத்தட்ட தெருவில் நிற்கும் நிலை தான் இருவருக்கும்!

வேறு வழியில்லாமல் சஞ்சய் வீட்டுக்குப் போனார்கள்.

“எனக்கும், என் மனைவிக்கு எந்த தொந்தரவு தராத வரை நீங்கள் இங்கு இருக்கலாம்” என்று அவன் அவர்களை வீட்டுக்குள் விட்டான்.

“அப்புறம் இன்னொரு விசயம் உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி என்னை கட்டாயபடுத்தக் கூடாது! என்னால் எல்லாம் அந்த பாவத்தை ஒரு ஆம்பிளைக்கு செய்ய முடியாது” என்றும் சொல்லிவிட்டான்!

அங்கு பேபி அனுசரித்துப் போய் விட, ஜனனியின் “சுழி” அங்கும் சும்மா இருக்க விட வில்லை!

அவள் அண்ணியோடு போட்டிப் போட, சஞ்சய் அவளை எங்காவது வேலை வாங்கிக் கொண்டு போய்விட கண்டிசனாக சொல்லி விட்டான்!

 இப்போது திருச்சி என்றாலும் பரவாயில்லை என்றே கிளம்பி வந்து விட்டாள்!

இதில் இன்னொரு விஷயமும் உண்டு, இவளின் இந்த முடிவிற்கு!

சமீபத்தில் ஒரு யுடியூப் சானல் ஒன்றில் அக்ரி பிசினசில் டெக்னாலஜி புகுத்தி சாதனை செய்துக் கொண்டிருக்கும் இளைஞன் என்று பரணியின் பேட்டி வந்திருந்தது.

அதில் தனக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்றும் சொல்லியிருந்தான் பரணி!

எதுக்கும் அவனிடம் இன்னொரு முறை பேசிப் பார்ப்போம், சான்ஸ் இருந்தாலும் இருக்கும் என்றே அவள் நினைத்தாள்.

வேலை கிடைத்தவுடன் அவனைப் போய் பார்க்க எண்ணியிருந்த அவளுக்கு அன்று அதிர்ஷ்டம் அடித்து, அன்றே பரணி அவளின் கண்ணில் பட்டான்.

அவனிடம் மெல்ல பேசி சிம்பதி ஏற்படுத்தி, அவனுடன் அவன் வீட்டிற்கு வந்தே விட்டாள்.

வீட்டின் வாயிலில் அவளை இறக்கி விட்ட பரணி, அவன் தம்பி பரத்திடம்,

“இவங்க என்னோட காலேஜ்மேட், இங்க ஒரு வாரம் தங்கியிருப்பங்க, கொஞ்சம் பார்த்துக்கோ நான், அவசரமா ஏர்போர்ட் போகணும்” என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே முடியவில்லை!

ஆபிசில் பிசி என்றார்கள்.

இப்போது என்னவென்றால் இந்த அதிகாலை  வந்து யாருக்கும் தெரியாமல் “ஜானு ஜானு” என்று அழைத்துக் கொண்டிருக்கிறான்!

அவள் ஆச்சரியமாக போர்வையை விலக்கி விட்டு எழுந்து உட்கார,

மீண்டும் இன்னொரு பெண் குரல் கேட்டது!

“நோ வே, இப்படி காலங்கார்த்தால பிரஷ் கூட பண்ணாம, போங்க சான்சே இல்லை!”

“ஏய் டாக்டர், நீ இப்படி சொல்வேன்னு தான் நான் பிரஷ் பண்ணி, மவுத் ப்ரெஷனர் எல்லாம் போட்டுட்டு வந்திருக்கேன், ப்ளீஸ் ஜானும்மா, பத்து நாள் ஆச்சுடி! நான் பாவம் இல்லை!”

மெல்லியதாக பரணியின் குரல் கேட்டது!

லேசாக அங்கிருந்த ஜன்னல் கதவை சத்தமில்லாமல் திறந்துப் பார்த்த ஜனனிக்கு அதிர்ச்சி!

ஜான்வியை முத்தமிட்டுக் கொண்டிருந்த பரணியைக் கண்டு!

அடப்பாவி, என்னை லவ் பண்ணும் போது இடுப்பில் கைப் போடக் கூட அவ்வளவு யோசித்தவன், அதுவும் தனியே இருக்கும் போது கூட!

இப்போது என்னவென்றால், பக்கத்தில் அவன் அம்மா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க, கிச்சனுக்கு வெளியே இருக்கும் ஒரு சந்து போன்ற ஹான்ட்வாஷ் பண்ணும் இடத்தில வைத்து இப்படி தைரியமாக!

அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது!

நேற்றே சாப்பிடும் போது கவனித்தாள், இந்த ஜான்விக்கு இந்த வீட்டில் இருக்கும் முக்கியத்துவத்தை!

“ஏன் ஆண்ட்டி, இன்னிக்கு நான் வெஜ் ஒண்ணும் செய்யலையா?” என்று தமிழைக் கேட்க,

அவர், “இப்போ வீட்டில் யாரும் அவ்வளவு இஷ்டப்படுறதில்லம்மா, நானும் வத்சுவும் சாப்பிட மாட்டோம், தாமரையும் இப்ப சாப்பிடறதில்ல,

பொண்ணுங்க ரெண்டு பேரும் டயட்டில் இருக்கேன்னு அவங்களும் சாப்பிடறதில்ல,

அப்புறம் பரணி அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, அவர் சாப்பிடாததால அவர் தம்பியும் விரும்புறதில்ல!

பசங்க தான், அதில் இப்ப பரணியும் விட்டுட்டான்! எனக்கு ஒருத்தருக்காக ஏன்மா என்று பரத்தும் வேண்டாம்னு சொல்லிட்டான்!”

“ஏய் தமிழு, இவ்வளவு விளக்கம் எதுக்கு, நம்ம ஜான்வி சாப்பிட மாட்டா, அதனால் சமைக்கிறது இல்லன்னு நேரா சொல்லிட்டு போயேன்!” என்றார் கனகு பட்டென்று!

“உங்க கிட்ட வேலை செய்ற ஒரு பெண்ணுக்காக இவ்வளவு செய்யனுமா! ரிடிகுலஸ்!” என்றாள் ஜனனி வெறுப்புடன்!

“ஜான்விய பத்தி நீ இப்படி சொன்னது மட்டும் ஜகது காதுக்குப் போனுச்சு, நீ அவ்வளவுதான்!”  என்றார் கனகு!

ஜனனிக்கு ஜான்விக்கு இந்த வீட்டில் இருக்கும் முக்கியத்துவம் புரிந்தது!

அது யாரால், எதனால் என்று தான் புரியவில்லை!

முதலில் இந்த ஜான்வியை முடிந்தவரை பரணியிடம் பேச விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! இதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

பார்க்கலாம், நான்கு வருடக் காதலா, இல்லை இந்த ஆறு மாதக் காதலா என்று!

ஜனனி தனக்குள் தீர்மானித்துக் கொண்டு, ரூமை விட்டு வெளியே வந்தாள்.

அவளின் அறை கிச்சனுக்கு அருகில் இருந்தது.

அவள் வெளியே வந்த போது, ஜான்வி டைனிங் டேபிளின் முன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆண்ட்டி போதும், இதுக்கு மேலே சாப்பிட்டா, நான் டூட்டியில் தூங்கிடுவேன்!” அவள் தமிழிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஜனனிக்குப் பற்றிக்கொண்டு வந்தது!

ஓ இந்த மேடமுக்காக தான் இவ்வளவு காலையில் சமையலா?

இருடி உன்னை வச்சுக்கிறேன்! உள்ளுக்குள் கறுவினாள்!

“ஜானு சீக்கிரம் சாப்பிட்டுட்டு ரெடி ஆகு, நான் உன்னை டிராப் பண்ணிட்டு டவுனுக்குப் போகணும்” என்றபடி வந்து அவள் அருகில் அமர்ந்தான் பரணி!

“டேய் இருடா, அவளே வச்சத சாப்பிடாம மல்லு கட்டிட்டு இருக்கா நீ வேற அர்ஜன்ட் பண்ணாத! ஒரு உனக்கு காபி எடுத்து வரேன்” அவன் அம்மா உள்ளே போனாள்.

அந்த கேப்பில் ஜான்வியிடம் ஒரு வாய் பொங்கல் ஊட்டிக் கொண்டான் பரணி!

பின்னால் ஒரே கருகிற வாடை!

அது ஜனனியிடம் இருந்து தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!