Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

5.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 5.1

.

சென்னை விமான நிலைய கூட்ட நெரிசலிலும் அவள் சத்தம் அவனுக்கு நன்றாகவே கேட்டது. “கௌதம்” என்ற சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பியவன் பார்வையில் அவள் விழுந்தாள். தூக்கம் கலைந்த விழிகள் அவனை ஆர்வமாகப் பார்த்தன. தயங்கி, பின் இதழ்கள் வாஞ்சையோடு புன்னகைத்தன. ஐந்தரை அடி உயரத்தில் இருந்தவளுக்கு, கௌதமனின் பெண் தோழியாக இருக்கும் பத்துப் பொருத்தமும் இருந்தன.



Advertisement

புன்னகையும் ஏக்க பார்வையுமாக நின்றிருந்தவளை அடையாளம் காண, நொடி நேரம் மட்டுமே எடுத்தது கௌதமனுக்கு. தெரியும் இவளை. விபத்திற்கு முன்பு இவனின் ‘கேள்ஃப்ரெண்ட்’ என்ற பதவியோடு சுற்றித் திரிந்தவள்.

அவன் நெற்றி சுருங்கிய விதம் பார்த்தவள் முகம் நொடியில் வாடிப் போனது. ‘மத்தவங்கள மாதிரி என்னையும் மறந்துட்டியா?’ என்ற ஏமாற்றப் பார்வை பார்த்தவளை, முகத்தில் ஆச்சரியம் காட்டி, “தாக்ஷா? எப்பிடி இருக்க?” என்றான் கேள்வியாக. முன்பை விட குரல் கரகரப்பாக மாறியிருந்தது.

கண்களை மூடி நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் தாக்ஷாயினி, கௌதமனின் கடைக்கண் பார்வைக்காக தவமாய் தவமிருந்து அதைப் பெற்றவள்.

Advertisement

‘கௌதம்’ மனம் மீண்டும் மீண்டும் அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தது. நாவிற்கு மட்டும் தான் இனிப்பு தெரியுமா என்ன? கோதமன் பெயரை உள்ளுக்குள் நினைத்தால் உள்ளமெல்லாம் இனிக்கிறதே. கௌதமனின் ஆழமான அழுத்தமான குரலின் தாக்கத்தால் உடலிலும் மனதிலும் இனம் புரியாத படபடப்பு வந்து ஒட்டிக் கொள்ள, பெண் தவித்துப் போனாள்.

Advertisement

“தாக்ஷா?”

“லாஸ்ட் வீக் விக்ரம நவீனோட பார்டில பார்த்தேன். பேசும் போது உங்களுக்கு உடம்பு முடியலன்னு விக்ரம் சொன்னார்… இப்போ ஓக்கேவா?” என்றவளின் விழிகள் அவனை ஆசையாக விழுங்கின.

அவளின் படபடப்பு மற்றவர் பார்வைக்கு தெரியாது போகலாம். கௌதமனுக்கு தெரியுமே. அம்மா இருப்பதால் தள்ளி நிற்கிறாள் போலும் என நினைத்தவன், “ஆம் குட். நீ?” என்றான் சாதாரணம் போல.

Advertisement

கடைசியாக பாண்டிச்சேரிக்கு இருவரும் ஒன்றாகச் சென்றது. அதன் பின் இன்று தான் பார்க்கிறாள் இவனை.

“நான் போன வாரம் தான் பேரிஸ்ல இருந்து வந்தேன்” அவள் பேசினாள், அவன் கேட்டு நின்றான்.

“உங்கள இங்க பாப்பேன்னு எதிர்பாக்கவே இல்ல”. வார்த்தைக்கு வார்த்தை ‘உங்க… நீங்க’ எனப் பேசும் பெண்ணை ஆழப் பார்த்து நின்றவனுக்கு அவளின் தவிப்பும் ஏக்கப் பார்வையும் கருத்தில் பதியாது இல்லை. ஆனால் அதைக் கண்டு கொண்டதாக காட்டும் எண்ணம் சிறிதும் இல்லை கௌதமனிடம்.

கௌதமனின் தோற்றத்தில் விழுந்தவள் தான் என்றாலும் மற்றவர்களைப் போல அவள் பார்வை அவன் தழும்புகளை ஆராயவில்லை. அவன் கண்களையே ஏக்கத்தோடு பார்த்து நின்றிருந்தாள். அவனாலும் அவளைப் புறக்கணிக்க முடியவில்லை.

எத்தனையோ பெண்கள் இவன் வாழ்வில் வந்து சென்றிருந்தாலும், ‘கேர்ள் ஃபிரெண்ட்’ என இவன் மனம் ஏற்றுக் கொண்ட ஒரே பெண் இவள் மட்டும் தான். ஆறு மாதங்களுக்கும் மேல் இவரும் ‘கமிட்டெட்’ உறவில் இருந்த பின் எப்படி இவளை மறப்பான்? மிகவும் இனிமையானவள். நெருக்கமானவளும் கூட. மிக மிக ரசித்து… சுகித்த நாள்கள் அவை.

“நீ எப்படி இருக்க தாக்ஷா?” என பொறுமையாக வினவி, அவளின் படபடப்பைக் குறைத்தவன், “இவங்க என் அம்மா. மா இவ என் ஃப்ரெண்ட் தாக்ஷாயினி” என்று இருவரையும் அறிமுக படுத்தினான். மகனுக்கு இருந்த தோழிகளின் அளவு அன்னைக்கு அரசல் புரசலாக தெரியும் என்றாலும் இன்று தான் முதன் முதலாக ஒருத்தியை பார்க்கிறார்.

சீனர்களின் நீளக் கொண்டை ஊசிக்குள் அடங்கியிருந்த தூக்கிப் போட்ட கொண்டையும், ஸ்வெட் பேன்ட், டிஷர்ட் என மிக சாதாரணமாகத் தெரிந்தாலும், அவள் சாதாரணமாக இல்லை. பளிச்சென்ற முகமும், அவள் நின்றிருக்கும் தோரணையும், பல உடல் பாகங்களில் இழைந்தோடும் மெல்லிய பிளாட்டினங்களும் வைரங்களும் அவளை சாதராண பெண்ணாக காட்டவில்லை வைஷாலிக்கு.

தோழி என்றால்? இவள் எந்த வரிசையில் வருவாள் எனத் தெரியாத போதும் முகம் காட்டாது, நல்ல விதமாகவே அவளின் நலன் விசாரித்தார்.

“நீ எங்க மா போற?” என்றவர் பார்வை கைப்பேசி மட்டுமே எந்தி பயணப்பை இல்லாத அவள் கரத்தை நோக்கியது.

“என் கசின் டோக்கியோ கிளம்பறான் ஆன்ட்டி. சென்ட் ஆஃப் பண்ண வந்தேன்” என்றவளிடம், “நேரம் ஆகுது. கிளம்பறேன் தாக்ஷா. ஹோப் டு சீ யூ சூன்” என விடைபெற்றுக் கிளம்பியவனை, “டேக் கேர் கௌதம்” என அணைத்து விட்டாள். மிக மிக நேர்மையான தோழமையான அணைப்பு தான். இருந்தாலும்… அவனின் ஸ்பரிசம்… ஹூம்! அமிழ்ந்திருந்த அவளின் பழைய உணர்வுகளைத் தூண்ட அதுவே போதுமானதாக இருந்தது.

கண்ணாடிக் கதவின் பின் மறையும் வரை அவனையே பார்த்திருந்தவளுக்குப் படபடப்பு அடங்குவேனா என்றிருந்தது. இந்தச் சந்திப்பு அவள் எதிர்பார்க்காத இன்ப அதிர்வை பெண்ணில் விதைத்தது. ‘கீள் கட்’ அவர்களுடையது. அதாவது படிப்பு முடியும் வரை மட்டுமே அவர்களது ‘உறவு’ என அவன் கூறியிருந்தான். அவன் மீது பித்தாய் இருந்தவளுக்கு, அன்று… அதுவே பெரிய வரம் போல் தோன்றியது.

“பார்க்குற பொண்ணுங்க பின்னாடி எல்லாம் போக மாட்டான் இந்தக் கௌதமன். நான் பாக்கணும்னாலே அவளுக்குன்னு ஒரு தகுதி வேணும்டா” என்று கெத்து காட்டும் கௌதமனுக்கு காதல் என்றாலே அலர்ஜி. வேண்டியது எல்லாம் எளிதில் கிடைக்க வாய்ப்பிருந்தவனுக்கு, காதல்… குடும்பம் என்ற ‘கமிட்மென்ட்’ எல்லாம் வேண்டாத ஆணிகள். அப்படிப்பட்ட கௌதமனே அவளோடு ‘கமிட்டட்’ உறவில் இருக்க விருப்பப்பட்டால்… எப்படி இருந்திருக்கும் பெண்ணிற்கு?

இன்றும், அவள் பார்வையில் இருந்து அவன் மறையும் வரை ‘அபிராமி… அபிராமி’ எனப் பார்த்து நின்றிருந்தாள். கண்ணாடி தடுப்பிற்குப் பின் இருந்தவன் இவள் இருந்த பக்கம் தலையை திருப்ப அவனையே பார்த்து நின்றிருந்தவளிடம் கை அசைத்து சென்றான். ‘காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க; ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே’ எனக் கௌதமனை பார்த்து உருகி நின்றிருந்தாள் கௌதமனின் தாக்ஷாயினி.

கௌதமனை பார்த்த அன்றிலிருந்தே இப்படித் தானே. அவன் பார்வைக்காகக் காத்திருந்து, அவன் தோழமைக்காகத் தவமிருந்து, ஒரு வழியாக அவன் கடைக் கண் பார்வை அவள் மேல் ஒரு நாள் விழுந்தது. தோழியாக ஆரம்பித்து பெண்தோழியாகப் பதவி உயர்வு பெற்றாள். தாக்ஷாயினியை அதன் பின் கையில் பிடிக்க முடியவில்லை. முடிசூடா தலைவியாகவே கல்லூரியில் சுற்றித் திரிந்தாள். பின்னே… இருக்காதா? ‘கௌதமன் கேள் ஃபிரெண்ட்’ என்றால் சும்மாவா?

இன்று போலவே அன்றும் கௌதமன் பெண்ணிடம் உருகவில்லை என்றாலும், இன்று போல் அன்றும் அழகு தாக்ஷாயினி, கௌதமனிடம் உருகி நின்றாள் அவனின் ஒற்றை பார்வைக்கு. ஆறடியில் அசத்தும் உடல் வாகுடன் தினமும் ஒரு ஸ்போட்ஸ் பைக்கிலும் காரிலுமாக வந்து இறங்கும் கௌதமனை எந்தப் பதின்ம வயது பெண்ணிற்குப் பிடிக்காது? தாக்ஷாயினி தலை கால் தெரியாது அவனுக்காகக் குப்புற விழுந்து கிடந்தாள் என்று தான் கூறவேண்டும்.

‘ரொம்ப மெதக்காத டி. வேற ஒருத்தி உன்னவிட அழகாகவும், அவன் கேக்கிறத கொடுக்க ரெடியா வரவரைக்கும் தான் நீ. அப்பறம் நீ யாருன்னு உன்னையே கேப்பான். யூஸ் அண்ட் துரோ கப் மாதிரி, உள்ள இருக்க சரக்கு தீந்ததும் உன்னையும் தூக்கி போட்டுட்டு மறந்துடுவான்’ எனத் தோழி இவள் அறிந்ததைதே கூறி எச்சரித்தாள். ‘உனக்கு வயத்தெரிச்சல் போடி’ என்றவள், ‘ஒரு மாசம்னாலும் இது போதும் டி என் வாழ்நாளுக்கு’ எனப் பிதற்றவும் செய்தாள்.

மற்ற பெண்களைப் போல் அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காததால் நாளடைவில் கௌதமனின் மூளையின் ஏதோ ஒரு மூலையில் தாக்ஷாயினி என்ற எழில் உருவம் பதிந்து போனது. பல இரவு தூக்கங்களை பெண் விழுங்கியதும் உண்மை. பெண்ணை பிடித்தது… அவளோடு படுக்கையை பகிர மிக மிக பிடித்தது அன்றைய கௌதமனுக்கு. ஆனால் அவளுக்காக அவன் உல்லாச வாழ்வை எல்லாம் விட்டுக்கொடுக்க கௌதமன் தயாராக இல்லை.

கல்லூரி முடிந்த கையோடு கௌதமன் கூறியது போலவே அவள் வாழ்வில் இருந்து கௌதமன் காணாதே போனான். ஏனோ அதன் பின் இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லை இவளுக்கு. ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன. இன்று தான் பார்க்கிறாள் மனதைக் கொள்ளையிட்டவனை.

இந்த ஒரு வருடத்தில் பலர் அவள் வாழ்வினுள் வர முயன்றும் ஒருவரும் கௌதமனை போல் அவளை வசீகரிக்கவில்லை என்பதால் ஒருவருக்கும் முயற்சி அதன் கூலியைத் தரவில்லை. கௌதமன் தன்னை மறக்கவில்லை என்பதே அத்தனை பேரானந்தத்தைக் கொடுத்தது தாக்ஷாவிற்கு.

கௌதமனின் நினைவோடு தாக்ஷாயினி சென்றிருக்க, விமானத்தில் ஏறும் முன்பே அவளின் நினைவுகளை மறந்து போயிருந்தான் கௌதமன்.

.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!