Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் பேசிடு கண்மணி

காதல் பேசிடு கண்மணி – 2 (2)

அவர்களின் நட்பு வேர் விட்டது கல்லூரியில் காலடி எடுத்து வைத்த தினத்தில்தான். பெருமாள், வரதராஜன் என இருவரின் அப்பாக்களும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணி புரிந்ததுதான் அவர்களின் அறிமுகத்திற்கு காரணமாக அமைந்தது. 

மகள்களை கல்லூரியில் சேர்க்க கால் கடுக்க நின்றிருந்த நேரத்தில் அப்பாக்கள் பொதுவாக பேசுகையில் அறிமுகமாகி, “அட நானும் அந்த பேங்க்லதான் வொர்க் பண்றேன்” என்று ஆச்சரியப்பட்டு நட்பாக, அருகருகே நின்ற மகள்களும் நட்பானார்கள். 



Advertisement

மூன்று வருடங்களில் நட்பு தழைத்து, மலர்ந்து, கிளைப் பரப்பி பெரும் மரமாகி இருந்தது. கல்லூரி முடித்து இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் ஓராண்டுக்கும் மேல் பணிபுரிந்து, அனுபவம் பெற்று, இரு வீட்டு பெற்றோரிடமும் ஆலோசித்து, அப்பாக்களின் வங்கியிலேயே கடன் வாங்கி சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக இரண்டாண்டுக்கும் மேலாகிறது. 

நிறைய பயணங்களை திட்டமிட்டு, பெயர் வாங்கி, புகழோடு பணமும், பல பிரச்சனைகளையும் பார்த்து, தீர்த்து, ஓரளவு அனுபவம் பெற்று விட்டார்கள். 

Advertisement

Advertisement

அந்நேரம் இருவர் வீட்டிலும் கல்யாண பேச்செழ, நட்சத்திரா, “இன்னும் ஒரு வருஷம் போகட்டும் ப்பா” என்று விட்டாள். 

கார்த்திகாவின் அக்கா கயல்விழிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்க, “உனக்கு இப்போ பார்க்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்” என்று அவளின் மறுப்பை புறந்தள்ளி விட்டு அவளுக்கு வரன் பார்த்தார்கள். 

Advertisement

கார்த்திகாவின் கல்யாணம் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்டதே. கபிலனை நேரில் கண்டு பேசிய பிறகு கார்த்திகா கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லவில்லை. 

இப்பொழுது, ஏதேதோ கேள்விகளுடன் நட்சத்திராவின் கைப் பிடித்து நின்றிருந்தாள் கார்த்திகா. 

“நீ ரெஸ்ட் எடு. எங்கேயும் வெளில போறேன்னா, சொல்லிட்டு போ. நான் ஆஃபீஸ் கிளம்பறேன். இன்னைக்கு நீயும் இல்லாம நான் தனியா சமாளிக்கணும்.” என்ற நட்சத்திரா, குளிக்கச் சென்றாள். 

அடுத்த இரண்டு மணி நேரங்கள் காலை பரபரப்பில் கழிய, காலை உணவிற்கு பின் அவரவர் அலுவலகம் செல்ல விரைந்தார்கள்.

“கார்த்தி, உனக்கு லஞ்ச் கிட்சென்ல வச்சுருக்கேன். சூடு பண்ணிக்கோ. சாப்பிடாம இருக்காத. சரியா? மறக்காம உங்கம்மாகிட்ட பேசு. நான் மதியம் சீக்கிரம் வரப் பார்க்கறேன்” என்றார் ஜானகி. கார்த்திகா சப்பாத்தியை வாயில் திணித்தப்படி தலையசைத்தாள். 

“நீங்க காரை எடுங்க. நான் வந்துட்டேன்” என்று கணவரிடம் சொன்னார் ஜானகி. 

தன் கார் சாவியை கைப் பையில் துழாவிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா. 

அவர்களையே பார்த்திருந்த கார்த்திகாவின் கண்ணில் பெரு வெள்ளம் துளித் துளியாக சேர்ந்துக் கொண்டிருந்தது. 

“நான் உன் கூடவே இருக்கவா கார்த்தி?” 

சில கேள்விகள் கூட ஆறுதலாகவே மொழி பெயர்க்கப்படும். 

“நானும் உன் கூட ஆஃபீஸ் வரவா?” என்று பதில் கேள்வி கேட்டாள் கார்த்திகா. 

“நோ. நீ ரெஸ்ட் எடு”

“இன்னும் மூனு நாள்ல வியட்நாம் குரூப் டூர் இருக்குல்ல? லாஸ்ட் மினிட் வொர்க் நிறைய இருக்கும். இந்நேரம் நான் வராம..”

“ப்ச், நான் பார்த்துப்பேன் கார்த்தி. நீ ஏதாவது புக் படி. இல்லனா படம் பாரு. ரொம்ப யோசிக்காத. ஓகே?” அதற்கு கார்த்திகா தலையசைக்கவும், புன்னகைத்து வெளியேறினாள். 

வாசலை அடைந்ததும் காரையும், அதன் சாவியையும் தேடியவளுக்கு, தன் கார் கதிரவனின் வீட்டில் நிற்பது அப்போதுதான் நினைவு வந்தது. 

அவள் தேடிய சாவியும் கையில் சிக்கவில்லை. இப்போ அது கிடைச்சா மட்டும் என்ன பண்ண போறேன்? என்று புலம்பிக் கொண்டே அம்மாவிடம் சென்றாள். 

“அம்மா நீங்க போற வழில என்னையும் ட்ராப் பண்ணிடுங்க” என்றாள்.

“உன்னையுமா? அப்பாவையும் பேங்க்ல விடணுமே. சரி, ஏறு” என்றார். ஜானகி கல்லூரி பேராசிரியை. நிரம்ப கண்டிப்பானவர்தான். மகளென்று வந்து விட்டால் மட்டும் மனம் இறங்குவார். 

இருபது நிமிடங்களில் அவளது அலுவலகம் இருந்த கட்டிடத்தின் முன் அவளை இறக்கி விட்டுச் சென்றார்கள். 

நட்சத்திரா இறங்கி உள்ளே செல்ல அவளுக்கு முன்னே வந்து அவளுக்காக பார்க்கிங்கில் காத்திருந்தது அவளின் ஒயின் நிற வெர்னா கார். 

“குட் மார்னிங் மேடம்” என்று வணக்கம் வைத்த செக்யூரிட்டி அவளின் கார் சாவியை நீட்டினார். 

அவருக்கு நன்றி சொல்லி அதை வாங்கி காரை திறந்தாள். காரில் குப்பென்று கதிரவன் மணம். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தது அவனது குளிர் கண்ணாடி. அதன் மேல் அவளுக்கொரு கண் உண்டு. நெற்றியில் புரளும் அவனது முடியை தாங்கிப் பிடித்து தலையில் அமர்ந்திருக்கும் கண்ணாடியை பலமுறை கைப்பற்ற முயன்று தோற்றிருக்கிறாள். 

இன்று அவனாகவே கொடுத்திருக்கிறான். 

நினைவு பரிசா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!