Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 08 ( PART 01 )

 

ராஜேஸ்வரி அம்மாளை வீட்டில் விட்ட வெற்றிச்செல்வனுக்கு தாமதம் ஆகியிருந்தது. காலையில் வயலுக்கும் செல்லவில்லை. இப்பொழுது மில்லுக்குச் சென்று மேற்பார்வை பார்த்து வரவும் நேரமில்லை.

 



Advertisement

பொதுவாக காலையில் வயலுக்குச் சென்று மேற்பார்வையிடுவது. பின்னர் வீட்டில் காலை உணவு. அதன்பிறகு மில்லில் மேற்பார்வை பார்த்துவிட்டு, பஞ்சாயத்து ஆபிஸ் சென்று அங்கிருக்கும் அலுவலக வேலைகளையும், வெளி வேலைகளையும் செய்வது என அவனது நாள் தொடங்கும்.

 

மாலையில் பஞ்சாயத்து ஆபிஸில் பணி முடிந்தபிறகு மீண்டும் மில்லிற்குச் செல்வான். அங்கு பணியை எல்லாம் முடித்து விட்டு வீடு திரும்புவான். நாள் முழுவதும் பம்பரமாகச் சுழல்பவன். உடனிருந்து பார்ப்பவர்களுக்கே தலை சுற்றிப் போகும்.

Advertisement

 

Advertisement

இன்று ஏற்கனவே தாமதம் ஆகி விட்டதால், எங்கும் செல்லாமல் நேராகப் பஞ்சாயத்து ஆபிஸிற்குச் சென்றான். அலுவலகத்தில் வேலை இல்லாத நாட்களிலோ, அல்லது மில்லில் அதிக வேலை இருக்கும் நாட்களிலோ, மதிய உணவு இடைவேளையின் போது வீட்டில் உணவை முடித்துவிட்டு மில்லுக்குச் சென்று பார்த்து வருவது அவனது வழக்கம். இன்றும் அதுபோல சென்று மேற்பார்வை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

 

அலுவலகத்தில் சின்னச்சாமி ஐயா தான், இவன் அனைத்து முடிவுகளையும் கலந்தாலோசனை செய்யும் அதிமுக்கியமான நபர்.

Advertisement

 

உள்ளே வந்ததும், சில கோப்புகளைப் பார்வையிட்ட படி, “இன்னைக்கு எதெல்லாம் கவனிக்கணும்ன்னு சொல்லுங்க ஐயா” என அவரிடம் கேட்டான்.

 

“தாசில்தாரை இன்னைக்கு பார்க்க போகணும் தம்பி. அப்பறம் இதெல்லாம் நீங்க பார்க்க வேண்டியது” என மேலும் சில கோப்புகளைக் காட்டினார்.

 

சின்ன சிரிப்புடன், “தொடங்கிட்டேன். இதோ முடிச்சிடலாம். முடிச்சுட்டு தாசில்தாரையும் பார்த்துட்டு வந்துடலாம்” என்றவனின் பார்வை கோப்புகளிலேயே இருந்தது.

 

முடிக்கும் வரை அவனை யாரும் தொந்தரவு செய்ய கூடாது. ஆதலால் சின்னச்சாமி ஐயா மற்ற வேலைகளில் கவனம் பதித்தார். அனைத்தையும் முடித்து வைத்துவிட்டு அவன் எழுந்ததும் இருவரும் தாலுக்கா ஆபிஸுக்குப் புறப்பட்டனர்.

 

“வேற என்ன விஷயம் ஐயா?” அவரது முகத்திலிருந்த யோசனையைப் படித்தவனாகக் கேட்டான்.

 

“இல்லை தம்பி, ஒரு துக்க செய்தி நம்ம ஊருல…”

 

“அப்படியா? யாருக்கு என்ன ஆச்சு? ஏன் என்கிட்ட யாரும் சொல்லலை”

 

“இப்போ தான் தம்பி தகவல் வந்தது. ரெண்டு கைக்குழந்தைங்க மூச்சு திணறி இறந்துட்டாங்களாம்”

 

நெற்றி சுருக்கியவன், “ரெண்டா?” என்றான்.

 

“ஆமா தம்பி ரெட்டை பிள்ளைங்க. பிறந்து ஐம்பது நாளு தான் இருக்கும்”

 

‘அதெப்படி ரெண்டும் ஒரே மாதிரி இறக்கும்?’ என யோசித்தவன், “விவரம் என்னன்னு கேட்டு வைங்க. ஸ்டேஷனுக்கும் தகவல் தந்துடுங்க. தாசில்தாரைப் பார்த்துட்டு நேரா அங்கே போவோம்” என்று அடுத்துச் செய்ய வேண்டியவற்றை வரிசைப்படுத்திக் கூறியவனை யோசனையாகப் பார்த்தவர்,

 

[the_ad id=”6605″]

 

“ஸ்டேஷன்’ல எதுக்கு தம்பி?” என்றார் குழப்பமாக.

 

“அதான் முறையா இருக்கும் ஐயா, சொல்லிடுங்க” என்று முடித்து விட்டான்.

 

அவருக்கு காரணம் புரியவில்லை. ஆனால், வெற்றி கூறினால் எதையும் யோசித்துத் தான் கூறுவான் என்பதால் அடுத்த சந்தேகத்தைத் தயக்கமாகக் கேட்டார். “இல்லை அந்த இன்ஸ்பெக்டர்…” என அவர் தயக்கமாக இழுக்க, அவன் அமைதியாகச் சிரித்தான். அந்த சிரிப்பின் அர்த்தம் அவருக்குப் புரிந்திருந்தது. இது எப்பொழுது என்ற யோசனையில் ஆழ்ந்தார். வெற்றியின் வேகம் வழக்கம் போல இப்பொழுதும் அவருக்கு பயத்தையே தந்தது.

 

தாசில்தார் அலுவலகத்தில், வெற்றிச்செல்வன் சென்றதும் தாசில்தார் தனது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இவனோடு கலந்தாலோசித்தார்.

 

“இப்ப எல்லா லிஸ்டும் சரியா இருக்கு தான சார்? பண உதவி சரியா தானே போகுது” என்று வெற்றிச்செல்வன் கேட்க,

 

“இப்ப எந்த பிரச்சனையும் இல்லை வெற்றி சார்”

 

“அவங்க இதை கண்டுக்காம இருக்கிறதைப் பார்த்தா…” என வெற்றி யோசனையாக இழுக்க,

 

“அதான் சார் எனக்கும் சந்தேகம். மாரியப்பன் ஐயா எல்லா விஷயத்துலேயும் பணம் எதிர்பார்ப்பார். அவருக்கு ரோட் கான்டராக்ட் விடறது, பள்ளிக்கூடம் கட்டறது, குளம் வெட்டறதுன்னு எல்லா வேலையிலும் வர லாபம் போதாமல், இப்படி உங்க ஊருல இருக்கவங்களுக்கு வர நிதியுதவி திட்டத்துலேயும் கை வெக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கும் அவங்க ஏமாத்தறாங்கன்னு புரியும். ஆனா என்ன செய்ய சொல்லுங்க. நான் பேசினா எனக்கு ட்ரான்ஸ்பெர் தான். அவரு செல்வாக்கு அந்த மாதிரி. இப்ப நீங்க வந்து எல்லாத்தையும் தடுத்துட்டீங்க. இன்னும் அவரு அதுக்கு எந்த எதிர்வினையும் காட்டலைன்னு நினைச்சாலே நம்ப முடியலை” என்று தாசில்தார் கூறினார்.

 

கேலியாகப் புன்னகைத்தவன், “சார் அதெல்லாம் என்னை வித விதமா கவனிக்க முயற்சி செஞ்சுட்டே தான் இருக்காரு. நீங்க அப்படியெல்லாம் நினைக்காதீங்க. உங்க விசயத்துல தலையிடலை தானே? அதுவே போதும் விடுங்க” என்றான்.

 

“ஓ எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க வெற்றி சார். அவருக்குச் செல்வாக்கு அதிகம்”

 

“அதையும் பார்த்திடலாம் விடுங்க”

 

“அந்த இன்ஸ்பெக்டர் வேற மாரியப்பன் ஆளாச்சே சார். அதுக்கு எதுவும் ஏற்பாடு செஞ்சுட்டீங்களா?”

 

“அதெல்லாம் சமீபமா தான் செஞ்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் அவரு ஹாஸ்ப்பிட்டல்ல பெட் ரெஸ்ட் எடுக்கணும்” என்றான் கண் சிமிட்டி.

 

“என்ன சார் நீங்க இவ்வளவு சாதாரணமா சொல்லறீங்க?” என்று தாசில்தார் தான் பதறினார்.

 

“நீங்க கவலை படாதீங்க சார், அதெல்லாம் நாம பார்த்துக்கலாம். அவன் குணமாகி வரதுக்குள்ள ட்ரான்ஸ்பெர் ஆர்டர் அவனுக்கு கிடைச்சுடும்” என்றான் மீண்டும் புன்னகையோடு.

 

“பல வேலைகளைச் சத்தமே இல்லாம செய்யறீங்க சார்” என்று தாசில்தாரும் புன்னகைத்தார்.

 

பதிலுக்குப் புன்னகைத்தவன், “என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம சொல்லுங்க சார்” என கூறினான்.

 

“கண்டிப்பா சார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதியோர்கள்ன்னு எல்லாருக்கும் அரசாங்கம் தர நிதியுதவியில ஊழல் நடந்தது. அதை நீங்க வந்த பிறகு தான் தீர்த்தே வெச்சுருக்கீங்க. எனக்கு இப்ப தான் நிம்மதியாவே இருக்கு. இனி என் வேலையில எந்த குறுக்கிடல் வந்தாலும் உங்க நினைவு தான் சார் வரும்” என்று உண்மையான மனதுடன் கூறினார்.

 

அவரின் கடமையை நேசிக்கும் மனம் அவனுக்கு அவனுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவர் கூறியதற்குப் பதிலாகப் புன்னகையை உதிர்த்தவன், அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

 

வெற்றிச்செல்வனின் மனம், ‘ஏன் இந்த பெண்களால் தனித்து இருக்க முடியாது? கணவனால் கைவிடப்பட்டாளோ, அல்லது அவன் இறந்து விட்டாளோ பெண்களுக்குப் பண உதவியும், மற்றவர்களுடைய உதவியும் தேவையாக இருக்கிறதா? அப்படி இல்லாவிட்டால் அவர்களது நிலை எப்படி இருக்கும்? எத்தனை சிரமங்கள் எதிர்கொள்வார்கள்?’ என்று சிந்தித்தது.

 

அவன் வளர்ந்த சூழலில் இதை எதிர்கொண்டதில்லை. இப்பொழுது இதற்கான விடையையறியச் சிறிது திணற வேண்டியதாய் இருந்தது. ஆனால், ஊர்த்தலைவராய் அடுத்த பிரச்சனை இழுக்க, அதில் கவனம் செலுத்தினான்.

 

[the_ad id=”6605″]

 

அடுத்து அவர்கள் சென்ற வீடு, துக்க வீடு. காவல் துறையினர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். வெற்றி சென்றதும் அவ்விடம் சற்று பரபரப்பானது. எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றவன், விசாரணைக்குக் கிடைக்கும் பதில்களைக் கவனிக்க தொடங்கினான்.

 

ஏற்கனவே மூன்று வயதில் அந்த பெண்மணிக்கு ஒரு மகள் இருப்பாள் போலும். அந்த குழந்தை வேறு, “அம்மா… அம்மா…” என்று நடப்பது புரியாமல் அழுது கொண்டே இருந்தது.

 

இறந்த குழந்தைகளின் அன்னையின் பதிலில் அவனுக்குப் பல விஷயங்கள் நெருடியது. அங்கிருந்த காவலர்கள் வெற்றிச்செல்வன் மீது நன்மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவனால் அங்கு நடந்த விஷயத்தில் தலையிட முடிந்தது.

 

காவலர்களிடம் பேசியவன், அடுத்த கட்ட விசாரணையைத் தனதாக்கிக் கொண்டான். “இவ உங்க பொண்ணா?” என்று மூன்று வயதுக் குழந்தையைக் காட்டி அந்த பெண்மணியிடம் கேட்டான்.

 

“ஆமாங்கய்யா…”

 

“குழந்தைகளுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு?”

 

“தெரியலைங்கய்யா. திடீர்ன்னு மூச்சு திணறுச்சு. நான் கவனிக்கிறதுக்குள்ள ரெண்டும்…” என விசும்பினாள் அன்னை.

 

“ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மூச்சு திணறுச்சா?” போலி ஆச்சரியத்துடன் வெற்றி கேட்க,

 

“அது… அது… முதல்ல ஒரு குழந்தைக்குத் தான் ஐயா. அதை கவனிச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ளே இன்னொரு குழந்தைக்கும்…” என்று திக்கித் திணறினாள் அந்த பெண்.

 

“உங்க கணவர் எங்க?”

 

“அவரு… அவருக்குத் தகவல் தந்து இருக்கோம் ஐயா” என்றாள் விழித்தபடி.

 

அவளை குற்றம் சாட்டும் பார்வையோடு பார்த்தவன், இறந்த குழந்தைகளை பார்வையிட்டான். பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகள். இரண்டும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி இருந்தது. அதன் இதழ்களில் ஒட்டியிருந்த பால் கூட ஒன்று போல… என்ன ஒரு குழந்தையின் வலது இதழின் ஓரம் கசிந்திருந்த பால் மற்றொரு குழந்தையின் இடது இதழின் ஓரம் கசிந்திருந்தது. பார்த்துக் கொண்டே வந்தவனுக்குச் சட்டென்று ஏதோ பொறி தட்டியது.

 

நெற்றியைச் சுருக்கியவன், “குழந்தைங்க எப்போ கடைசியா பால் குடிச்சாங்க” என்று கேட்டான்.

 

“காலையில குடிச்சுட்டு தூங்கிட்டாங்கய்யா. அதுக்கு அப்பறம் தான்…” என மீண்டும் முகத்தை மூடியபடி அழுதாள்.

 

அந்த பெண் அழுவதிலும், விசும்புவதிலும் ஒருவித நாடகத்தன்மையை அவனால் உணர முடிந்தது. அதில் சற்று எரிச்சலும் வந்தது.

 

காவலர்களைப் பார்த்தவன், “ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்க” என்று கூறினான்.

 

அந்த பெண் அதிர்ந்து நோக்கவும், “உண்மையை சொல்லுங்க. குழந்தைகளை ஏன் இப்படி செஞ்சீங்க?” என்று கோபத்தில் விழிகள் சிவக்கக் கேட்டான்.

 

அதில் திடுக்கிட்டாலும், “நான் இல்லைங்கய்யா…” என அந்த பெண் கதறினாள்.

 

“அதெப்படி ரெண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி மூச்சுத் திணறல் வரும்?”

 

“அது… அது… தெரியலைங்கய்யா”

 

“பிறந்த ஐம்பது நாள் நல்லா இருந்த குழந்தைகளுக்கு இப்போ ஒரே மாதிரி… ஒரே நேரத்துல மூச்சுத் திணறல் வந்ததா?”

 

[the_ad id=”6605″]

 

என்ன சொல்லிச் சமாளிக்க என் புரியாமல் அந்த பெண் விழிக்க, “அதுவும் நீங்க பால் கொடுத்ததும்…” என்று அடுத்த கேள்வியைக் கேட்டிருந்தான்.

 

“இல்லை இல்லை… குழந்தைங்க தூக்கத்துல தான் இப்படி ஆச்சு”

 

“சும்மா சொல்லாத. இந்த அழுது நடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். குழந்தைங்க தூங்கியிருந்தா, இன்னும் வாயில பால் ஒட்டிட்டு இருக்குமா? குழந்தைங்களை எப்படி கொலை செஞ்ச? உண்மையை சொல்லிடு. எப்படியும் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் ல எல்லாம் தெரியத் தான் போகுது. அப்பறம் நீ தப்பிக்க முடியாது” என வெற்றி மிரட்ட,

 

அதற்கு மேலும் சமாளிக்க முடியாது எனப் புரிய, “வேற வழி தெரியலை ஐயா…” என்றாள் முகத்தை மூடிக்கொண்டு விசும்பலாக.

 

“உன் காரணத்தைக் கொண்டு போயி குப்பையிலே போடு. எப்படி கொலை செஞ்சன்னு சொல்லு?” வார்த்தைகளின் அழுத்தம் கூட, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்தான்.

 

“பால் கொடுக்கும்போது… குழந்தைங்க முகத்தை மார்பில அழுத்தி…” என மேற்கொண்டு சொல்ல முடியாமல் மீண்டும் முகத்தை மூடி விசும்பினாள்.

 

“ச்சீ… நீயும் ஒரு பிறவியா? பிறந்த குழந்தைகளை…” என்றவனுக்கு அந்த பெண்ணை கண்டம் துண்டமாக வெட்டிவிடும் ஆத்திரம்.

 

காவலர்களிடம், “கூட்டிட்டு போங்க…” எனக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். அந்த குழந்தைகளின் முகம் அவனது மனக்கண்ணில் ஒட்டிக்கொண்டு மறைய மறுத்தது. மனம் வேதனையில் துவண்டது. ‘இப்படியுமா ஒரு அன்னை இருப்பாள்?’ என அவளை எண்ணி ஆத்திரம் அடைந்தான்.

 

மூன்று வயது மூத்த மகள் அழ, மற்ற இரு குழந்தைகளும் சடலமாக இருக்க, கண்களில் வழியும் கண்ணீரோடு, சுற்றியிருப்போரின் பார்வையை எதிர்கொள்ளக் கூட முடியாமல் அழுதபடியே காவலருடன் சென்றாள் அந்த பெண்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!