தித்திக்கும் நிலவு 2
“பெரியோர்களே, சான்றோர்களே, என்னை போன்றோர்களே நமது
அம்மாபாளையம் கிராமத்தில் சிலம்ப போட்டியை காண வந்திருக்கும்
அனைவரையும் வருக! வருக! என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்“
என்று மைக்கினை கையில் வைத்து பேசிக் கொண்டிருந்த சிவபாலனின் குரல் ஒலிபெருக்கி மூலம் ஊர் முழுவதும் எதிரொலித்தது.
Advertisement
சுத்து வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருந்தனர். சிலம்ப கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். சேனாதிபதி சிலம்ப கமிட்டியின் முன்னாள் தலைவர். தற்போது அதிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரை மேடைக்கு அழைத்தனர் கமிட்டியினர். நாகரீகமாக மறுத்து விட்டார்.
களத்தில் போட்டியாளர்கள் அனைவரும் தயாராக இருந்தனர்.
எப்போதும் போல் முதலில் அகரன் தான் களமிறங்கினான். தனது குருவிற்கு நேராக சிலம்ப கம்பினை தரையில் வைத்து குருவை வணங்கி விட்டு, ஆட்டத்தை துவங்கினான். அவன் சுற்றியதில் அவன் முன்பு யாராலும் 2 நிமிடத்திற்கு மேல் கூட நிற்க முடியவில்லை. அனைவரையும் சாய்த்து விட்டான்.
Advertisement
இம்முறை அகரனை சுற்றி மூவர் வந்திருக்க, தயங்காமல் எதிர் கொண்டான் அவர்களை. அவன் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் காண்போரை கட்டிப் போட்டான். காற்றை விட அவன் சுற்றும் கைகள் தான் வேகமாக பாய்ந்தது. அவன் சுற்றிய ஒவ்வொரு சுற்றிற்கும் கூட்டத்தில் பெரும் ஆரவாரம். அதனை பார்த்துக் கொண்டிருந்த ராகவனிற்கு வெறுப்பு கூடிக் கொண்டே போனது.
Advertisement
இறுதியில் ராகவன் களத்திற்கு வந்தான் அகரனிற்கு எதிராக. அதுவரை அகரன் சுற்றுவதை ரசித்துக் கொண்டிருந்த இளங்கோ, “விடாத அகரா, 5 நிமிசத்துக்கு மேல அவன் அங்க நிக்கக் கூடாது“ என்று கத்தினான்.
சேனாதிபதி இளங்கோவை முறைத்தார். அவன் அவரை பார்த்தால் தானே, அகரன் சுற்றுவதற்கு ஏற்றது போல் அவனின் கண்களும் அனைத்து பக்கமும் பாய்ந்து கொண்டிருந்தது.
இளங்கோ சொன்னது போல் ராகவன் ஐந்து நிமிடம் கூட தாக்கு பிடிக்கவில்லை. அதற்கு முன்பே அவனை களத்தில் சாய்த்திருந்தான்.
Advertisement
எப்போதும் அகரன் தனக்கு எதிரில் களத்தில் நிற்பவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை ஆட்டம் ஆரம்பித்து ஒரு நிமிடத்திற்குள் கணித்து விடுவான். அடுத்த ஒரு நிமிடத்திற்குள் அவர்களை சாய்த்தும் விடுவான். ராகவனுடன் முதல் முறை தான் மோதுகிறான். அவனின் பலவீனத்தை கணிக்க மேலும் ஒரு நிமிடம் தேவைப்பட்டது. அதனால் 4 நிமிடங்கள் ஆனது ராகவனை வீழ்த்துவதற்கு. ராகவனை பற்றி ‘நன்றாக தான் பயின்றிருக்கிறான்‘ என்று மனதில் நினைத்தான்.
அகரன் வென்றதும் கரகோஷம் காதை கிழிக்கும் அளவிற்கு இருந்தது. விசில் சத்தம் வேறு பல இடங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு விசில் சத்தம் தனியாக தெரிந்தது அகரனிற்கு. ஒன்று இளங்கோ என்றால் மற்றொன்று முகிலன். நண்பன் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி முகிலனுக்கு.
ஏற்கனவே மகன் தோற்றதில் அம்மையப்பன் கோவத்தின் உச்சியில் இருந்தார். இதில் சின்ன மகன் விசில் அடித்ததில் எரிமலையாய் மாறிக் கொண்டிருந்தார். இதுவரை எந்த போட்டியிலும் தோற்காத தன் மகன் இன்று நிச்சயம் வென்று விடுவான் என்று மகன் மீது இமாலய நம்பிக்கை வைத்திருந்தார். அது இல்லை என்று ஆனதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
ராகவன் இரண்டாம் இடம் வெற்றி பெற்றிருந்தான் தான். ஆனால் அவருக்கு அது போதாதே அகரனை ஜெயிக்க வேண்டுமே. அது நடக்கவில்லை என்பதில் கோவத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல் வெடிக்கும் நிலையில் இருந்தார்.
வெற்றியாளர்களை மேடைக்கு அழைத்தனர். எப்போதும் போல் அகரன் செல்லவில்லை. தனது குருவை தான் அனுப்பி வைத்தான். இது அவருக்கான சமர்ப்பனம். எப்போது வெற்றி பெற்றாலும் அவன் மேடை ஏற மாட்டான். வெற்றி முழுவதும் அவருக்கு மட்டுமே சொந்தம் என்பதை காட்டுவதாய் தன் தந்தையை தான் மேடை ஏற செய்வான். தற்போதும் சேனாதிபதியே மேடை ஏற சிலம்ப கமிட்டி உறுப்பினர்கள் அனைவருடன் ஊர் தலைவரும் சேர்ந்து ரூ.50,000/-த்திற்கான காசோலையும், கோப்பையும் கொடுத்தனர். அதன் பின் வந்த ராகவனிற்கு ரூ.25,000/-த்திற்கான காசோலை கொடுத்தனர்.
“உங்க ஆட்டத்தை பாத்த மாதிரியே இருக்கு வாத்தியாரே, இரண்டு கண்ணு போதல பாக்குறதுக்கு“ என்றார் கமிட்டி தலைவர்.
“தலைவரே அகரன் எப்ப ஜெயிச்சாலும் பரிச அவன் வாங்க மாட்டான் வாத்தியார் தான வாங்குராரு என்று தலைவரிடம் கூறிவிட்டு “உண்மையிலேயே உங்கள மாதிரி யாராலையும் புள்ளங்கள வளக்க முடியாது வாத்தியாரே!“ என்று உறுபினர்கள் கூற, கர்வம் பொங்க தன் மகனை பார்த்தார்.
கீழே அகரனை இளங்கோவும், முகிலனும் அணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
“என்னடா உன் அண்ணன் தோத்ததுல உனக்கு வருத்தம் இல்லையா?“ என்று முகிலனிடம் கேட்டான் இளங்கோ.
“அவன் எங்க தோத்தான் அவனும் தான ஜெயிச்சிருக்கான், சும்மாவா அதான் ரூ.25,000/- கொடுத்துருக்காங்களே“ என்று விட்டு அகரனை பார்த்துக் கொண்டே “எனக்கு முதல்லயே தெரியும் இவன் தான் ஜெயிப்பான்னு யாரு கேட்டா வீட்டுல எவ்ளோ பேச்சு இப்ப அனுபவிக்கட்டும்“ என்று இளங்கோவிடம் கூறினான்.
எழிலும், செல்வியும் போட்டி துவங்கியது முதல் தற்போது வரை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இருவரும் தங்கள் கல்லூரி நண்பர்களிடம் நடந்தவற்றை எல்லாம் கடைபரப்ப வேண்டுமே அதற்காகத்தான்.
“ஊர் கண்ணு எல்லாம் புள்ள மேலதாங்க இருக்கு, போனதும் முதல்ல சுத்தி போடணும்“ என்று யசோதா தன் கணவரிடம் கூறிக் கொண்டிருந்தார்.
சிலபாலன் மைக்கில் வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த மைக்கை வாங்கி தன் கம்பீர குரலால் பேச ஆரம்பித்தான் அகரமுதல்வன்.
“எல்லாரும் ரொம்ப நல்லாவே போட்டி போட்டிங்க, எல்லாரோட திறமைக்கு வாழ்த்துக்கள்“ என்று சொல்லி அனைவர் முன்பும் தலை வணங்கினான். தான் ஜெயித்து விட்டேன் என்ற பெருமையோ, கர்வமோ முகத்தில் துளியும் இல்லை. அவர்களின் திறமையை பாராட்டும் பாவனை தான் இருந்தது முகத்தில்.
பக்கத்து ஊரை சேர்ந்த முருகனை பார்த்து “நீங்க இடது கையை தூக்கிட்டு வலது கையால அடிக்க வந்திங்களே அந்த அசைவு நல்ல இருந்தது நான் எதிர்பாக்கவே இல்லை“ என்று சொன்னான். இவ்வாறு தன்னுடன் போட்டியிட்ட ஒவ்வொருரையும் சுட்டிக்காட்டி அவர்கள் போட்டியிட்ட விதம் பற்றியும், அவர்களிடம் அவனை கவர்ந்த அசைவுகளை பற்றியும் அவன் மைக்கில் பாராட்டி கூறினான்.
எப்போது போட்டியிட்டாலும் முடிவில் அவனுடன் போட்டியிட்டவர்களின் திறமை பற்றி கூறி பாராட்டுவான். இது அவன் எப்போதும் செய்வது தான். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவனிடம் தோற்றதிலும் பெருமை என்று தான் தோன்றியது. ஒரு வீரன் சக வீரனின் திறமையை மதிக்கிறான் அவ்வளவே. இதனை அவர்களும் கற்றுக் கொண்டனர் அவனிடமிருந்து.
இங்கே அவன் மைக்கில் பேச பேச சற்று தள்ளி நின்று அவனையே விழி அகலாமல் பார்த்து இல்லை இல்லை ரசித்துக் கொண்டிருந்தாள் ஆதிரயாழிசை. இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அவனை பார்த்து. அவனின் உருவத்தை விழி மூலம் மனதில் பரப்பிக் கொண்டிருந்தான். இரண்டு வருடமும் மனதில் நிறைந்து இருந்தவன் தான். ஆனால் நின்று நேரில் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு.
ஊருக்கு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. அவனை இன்று தான் பார்க்கிறாள். அவள் அருகில் நின்றிருந்த சில்வண்டுகள் காயத்ரி, மஞ்சு, லட்சுமி அனைவரும் அவளை “அக்கா, அக்கா“ என்று அழைத்து அவர்களின் தொண்டை வலித்தது தான் மிச்சம். அவளுக்கு கேட்கவில்லை. இது சரிவராது என்று அவளை அழைப்பதை நிறுத்திவிட்டு அவர்கள் அனைவரும் அருகில் இருந்த கடைகளுக்குள் சென்று விட்டனர்.
எவ்வளவு நேரம் அப்படியே அவனை பார்த்துக் கொண்டிருந்தாளோ தெரியாது. அவளின் தோள் மேல் யாரோ கையை வைத்து உலுக்கவும் தான் நினைவிற்கு வந்தாள். யார் என்று திரும்பி பார்க்க இளமதி நின்றிருந்தாள். “எவ்வளவு நேரமா உன்ன கூப்ட, என்ன நின்னுக்கிட்டே கனவா?“ என்றாள்.
அவள் கேட்டதை காற்றில் பறக்க விட்டுவிட்டு “தலைவர் வீட்டு இளவரசி என்ன இந்த பக்கம்“ என்று கேட்டாள்.
“இங்க எதுக்கு வருவாங்க ஊறுகா போடவா வருவாங்க“ என்றாள் இளமதி.
“நல்ல இடந்தான், போடேன் நானும் வேணா முடிஞ்சத செய்றேன்“
“என்ன கிண்டலா? பாக்கத்தான் வந்தேன்“ என்றாள்.
“யார பாக்க“ என்று கேட்டவளை முறைத்து விட்டு “போட்டிய பாக்கத்தான்“ என்றாள்.
“அதுக்கு போட்டி நடக்குறக்கு முன்னாடில வரணும், போட்டி முடிஞ்சு பரிசு எல்லாம் கொடுத்து எல்லாரும் வீட்டுக்கு கிளம்புன அப்பறம் வந்தா?“ என்றாள் ஆதிரா.
போட்டி முடிந்து விட்டது என்பதை கேட்டு பதறாமல் “என்னது எல்லாரும் போயிட்டாங்களா“ என்று வேகமாக திரும்பி பார்க்க அங்கு அகரன் பேசிக் கொண்டிருக்க அருகில் இளங்கோவும், முகிலனும் நின்று கொண்டிருந்தனர். அதை பார்த்த பின்பு ஆசுவாசமாக “அப்பாடா“ என்றாள்.
“என்ன?“ என்று ஆதிரா கேட்க அதற்கு பதில் சொல்லாமல் “எப்படி இருக்க யாழி உன்ன பாத்து எவ்வளவு வருசம் ஆச்சு“ என்றாள்.
“அடடா! எவ்வளவு சீக்கரம் கேட்டுட்ட இன்னும் 4 நாள் கழிச்சி கூட கேட்டுருக்கலாம், நான் ஊருக்கு வந்து 3 நாளாச்சி அக்கறை இருந்தா வீட்டுக்கு வந்துருக்கனும் என்ன பாக்க“ உரிமையாய் அவளை கடிந்தாள்.
“எங்க வீட்டுல தான் என்ன விடமாட்டாங்களேடி“ பரிதாபமாய் சொன்னாள்.
“இப்ப மட்டும் எப்படி விட்டாங்களாம்“ என்ற கேள்விக்கு “அதான் அப்பாவும் அண்ணன்களும் இங்க தான இருக்காங்கா“ என்றாள்.
பின்னர் ஞாபகம் வந்தவளாய் “உங்க அப்பாக்கு தான் இங்க வரது பிடிக்காதே, என்ன சொல்லிட்டு வந்த“ என்று கேட்ட இளமதிக்கு “அப்பா வீட்ல இல்ல அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லிட்டு வந்தேன்“
“அப்ப வீட்டுக்கு போனதும் பஞ்சாயத்து இருக்குன்னு சொல்ற“
“கண்டிப்பா நாம பாக்காத பஞ்சாயத்தா சமாளிப்போம்“ என்றாள் ஆதிரா. இளமதி எதோ கேட்க வர “போதும் வந்த வேலையை பாரு“ என்று சொல்லி விட்டு மேடை பக்கம் திரும்பினாள்.
இளமதியும் திரும்பி பார்க்க அகரன் இறுதியாக ராகவனை பாரட்டி விட்டு தனது உரையை முடித்திருந்தான்.
அனைவரும் கிளம்ப தயாராக மீண்டும் எப்போது பார்க்க முடியுமோ என்று தன்னவனை அவசரமாக விழிகளில் நிரப்பினாள் இளமதி. ஒரே ஊர் பக்கத்து பக்கத்து தெரு என்று தான் பெயர் ஏதேனும் விஷேசத்தின் போது மட்டுமே அவனை பார்க்க முடிகிறது. அவள் வீட்டில் அவளை எங்கும் அனுப்புவதில்லை. அனுப்பினால் தானே பார்க்க முடியும். கிடைக்கும் இந்த சில நிமிடங்களை கூட அவள் வீணாக்க விரும்பவில்லை.
கிளம்பும் முன் அகரன் தன்னவளிடம் விழிகளால் விடை பெற, சிலிர்த்தது ஆதிராவிற்கு. ‘எப்ப நான் வந்ததை பாத்தார், அப்ப நான் பாத்ததையும் பாத்துருப்பாரோ‘ என்று நினைத்தாலும் எதையும் முகத்தில் காட்டாமல் நின்றிருந்தாள். அவள் பதில் எதுவும் கூற போவதில்லை என்பது தெரியும். மீண்டும் ஒரு முறை விடை பெற்று கிளம்பி விட்டான்.
போட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது.
ஆதிரா தனது அலுவலகத்தில் இருந்தாள். அவள் தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப்–2 தேர்வில் வென்று ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிகிறாள். இரண்டு ஆண்டுகள் வேறு ஊரில் பணிபுரிந்து விட்டு 5 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கிறாள்.
திருவிழாவிற்கு விடுப்பு எடுப்பதால் பணிகளை முடிக்க வேண்டும் என்று நேரம் பார்க்காமல் செய்து வேலை கொண்டிருந்தாள். முடித்து விட்டு நிமிர்ந்து பார்க்க மணி 08.00 ஆகியிருந்தது. வேகமாக அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு தனது அறைக்குள் வர அங்கு தான் செல்போனை வைத்திருந்தாள். எடுத்து பார்க்க தாய், தந்தையிடமிருந்து அழைப்புகள் வந்திருந்தன. தந்தைக்கு அழைத்து “வேலை அதிகமா இருந்துச்சுப்பா அதான் லேட் இப்ப கிளம்பிட்டேன் வந்துருவேன்“ என்று அவர் கேள்வி கேட்க இடமே அளிக்காமல் வேகமாக சொல்லிவிட்டு வைத்து விட்டாள்.
வெளியில் வந்து தனது வண்டியை எடுக்க வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்தாள் முடியவில்லை. அலுவலகத்தில் அனைவரும் கிளம்பியிருந்தனர். அங்கிருந்து அவளது வீட்டிற்கு 5 கி.மீ செல்ல வேண்டும் என்ன செய்ய என்று யோசிக்க, வேகமாக செல்போனை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க சென்ற கையை நிறுத்தி புலனம் சென்று அவன் எண்ணிற்கு ஒற்றை புள்ளி மட்டும் வைத்து குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அவள் அனுப்பிய 5 நிமிடங்களிலேயே பார்க்கப்பட்டு விட்டது. நம்பிக்கையுடன் காத்திருந்தாள். 15 நிமிடத்தில் புல்லட் சத்தம் கேட்க அவன் தான் என்று வேகமாக திரும்பி பார்க்க வந்து கொண்டிருந்தான் அகரமுதல்வன்.
மலர்ந்த முகத்துடன் அவள் அருகில் செல்ல, அவன் அவளை கடந்து பக்கத்தில் இருந்த டீக்கடை அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றான்.
‘அங்க எதுக்கு போறாங்க, என்ன பாத்தாங்களா இல்லயா?‘ என்று நினைத்துக் கொண்டே வண்டி அருகில் சென்று நின்றாள்.
அவன் கடைக்குள் சென்று யாரின் வீடோ எங்கிருக்கிறது என்று கேட்டு மேலும் பல விவரங்களை விசாரித்து விட்டு வெளியில் வந்தான். உள்ளே அவன் பேசியது அனைத்தும் அவளுக்கும் கேட்டது.
வந்தவன் வண்டியின் அருகில் நின்றிருந்தவளை கண்டு கொல்லாமல் வண்டியை எடுக்க அவள் வேகமாக தன் செல்போனை எடுத்து அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அவன் பார்த்து விட்டானா என்று பார்க்க பார்க்கப்பட்டதற்கான அறிகுறி தான் காட்டியது.
அவளின் செய்கைகளை ரசித்த அகரன் முகத்தில் எதையும் காட்டாமல் “எல்லாம் பாத்தாச்சு பாத்தாச்சு, தெரியாம உங்க கைப்பட்டு வந்துருச்சி அதான நீங்க சொல்லாமயே எனக்கு தெரியும் மேடம்“ என்றான் வேண்டுமென்றே.
‘மண்ணாங்கட்டி‘ என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனை பார்க்க, அவனோ “வந்தது வந்துட்டேன் வீட்ல கொண்டு போய் விட்டுறேன், அதுல எனக்கும் வண்டிக்கும் எந்த பிரச்சனையும் இல்ல“ என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவ தேறமாட்டா‘ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே “சரி அப்ப நம்ம ஸ்கூல் கணக்கு டீச்சர் கவிதாவோட அப்பா கடை இங்க தான இருக்கு இப்ப வேலை முடிஞ்சி கிளம்புற நேரம் தான் நான் அந்த கவிதாவையே கூட்டிட்டு போறேன்“ என்று சொல்லி முடிப்பதற்குள் வண்டியில் அமர்ந்திருந்தாள் ஆதிரா.
விரிந்த புன்னகையுடன் வண்டியை கிளப்பினான் அகரன். அகரன் தோளில் ஆதிரா கையை வைத்தவுடன் மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வண்டி சீறிப் பாய்ந்தது அவனின் கையில். இருவருக்கும் மத்தியில் மௌனமே ஆட்சி செய்தது. நீண்ட நெடு நாட்களுக்கு பின்னான பயணம். இருவரின் மனமும் விரும்பியது இத்தருணத்தை. இருவரும் அதை கலைக்காமல் கலைக்க விரும்பாமல் இருந்தனர்.
ஆள் அரவமற்ற அந்த ஒற்றை பாதையில் நிலவொளியில் ஏகாந்த பொழுதில் மனம் கவர்ந்தவளுடன் பயணம். அகரனின் மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. அவளும் அதே மனநிலையில் தான் இருந்தாள். இப்பயணம் முடிவடையாமல் இப்படியே சென்று கொண்டிருக்க மாட்டோமா என மனம் ஏங்கியது.
வீடு வந்ததும் வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தினான். அவள் இறங்கி திரும்பி நடக்க வண்டியை நிறுத்தி விட்டு அவளை முந்திக் கொண்டு சென்று கேட்டை திறந்தான். வேகமாக அவன் அருகில் வந்து “எங்க வரீங்க அப்பா வீட்ல தான் இருக்காங்க“ ஒரு வழியாக 2 ஆண்டு மௌன விரதத்தை கலைத்தாள்.
“நான் கூட உனக்கு பேச்சு மறந்து போச்சுன்னு நினைச்சேன், பரவாயில்லேயே இன்னும் மறக்கலயா?“ என்று அவளை சீண்டினான். அவள் முறைத்துக் கொண்டு நிற்க “உங்க அப்பா கிட்ட தான் பேச போறேன் இப்படி மசமசன்னு நிக்காமா வா“ என்று மேலும் அவளை அதிர வைத்து விட்டு உள்ளே சென்றான் அவளவன்.
