11 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,552
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 11
.
“வீட்டுக்கு போவோமா யாழ் பேபி?” இடது கரத்தில் தவழ்ந்து கொண்டிருந்த யாழினியாளிடம் கௌதமன் கேட்க, அந்த குட்டி மகளுக்கு என்ன புரிந்ததோ, புருவம் சுருக்கி இதழ் குவித்து “ஓ ஆஆ ஊ” எனப் பதில் கொடுத்தாள்.
Advertisement
“கோலிக்குண்டு கண்ண உருட்டி பேசற அளவுக்கு பெரிய ஆளா நீ?” இவன் சிரிக்க, கௌதமனின் மலர்ந்த முகம் பார்த்த மழலையும் சிரித்தது.
மகளின் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தவன், “இப்படி மூணே நாளுல உன் மேல பைத்தியம் ஆக்கி வச்சிருக்கியே. நான் உன்ன பாப்பேனா என் பொழப்ப பாப்பேனா பேபி?” என்றவன் ஆசை தாளாது மீண்டும் மீண்டும் முத்தத்தால் குளிப்பாட்ட, யாழிக்குத் தகப்பனின் இரண்டு நாள் மழிக்காத முள் தாடியும் மீசையும் கொடுத்த குறுகுறுப்பில், புதிதாகச் சிரிக்க ஆரம்பித்திருந்த குழந்தையும் “ஹே ஹா” எனச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“சார்” என்ற சத்தத்திற்குத் திரும்பி பார்த்தான். அவன் அழைத்திருந்ததால் வந்து நின்றிருந்தான் அவன் காரோட்டி. “அந்த ரெண்டு பெட்டியும், இந்த பேகையும் எடுத்துக்கோ செந்தில்” என்றவன் மகளைக் கொஞ்சிக் கொண்டே வாகன நிறுத்துமிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
Advertisement
‘தென் கொரியாக்கு பிளேன்ல தானே போனார்… அப்பறம் ரயில்ல வந்து நிக்கிறார்? ரயில்ல வர தூரம் தானா அது?’ என தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு அதைக் கௌதமனிடம் கேட்கும் தைரியமில்லை. முன்பிருந்த கௌதமனிடம் அப்படி எல்லாம் சட்டென பேசிவிட முடியாது. சில நேரம் ‘வா செந்தில்’ எனத் தோளில் கரம் போட்டு பேசுபவன், பல நேரம் ‘தள்ளி நில்’ என்ற பார்வை பார்ப்பான். அதனால் கார் ஓட்டுவதோடு தன் இடத்தில் நின்றுவிடுவான் செந்தில்.
Advertisement
கார் கதவைத் திறந்து விட்டவன், என்ன அடக்கியும் முடியாதவனாக, “நம்ம பாப்பாங்களா சார்?” என்றுவிட, நிதானமாக அவனைப் பார்த்து சிரித்தான்.
தன் எஜமான் சிரிக்கிறான். கண்கொள்ளா காட்சியை ஆசையோடு பார்த்து நின்றான் செந்தில்.
சிரித்த முகத்தோடே மகளைப் பார்த்தான் கௌதமன். தந்தையின் பார்வை தன் மீது விழுந்ததும், மகிழ்ச்சியை காட்டும் விதமாக குழந்தையின் கை கால்கள் வேகமாக காற்றை தள்ள ஆரம்பித்தன.
Advertisement
“ஆசைய பார்த்தியா பேபி… நம்ம பாப்பாவாம்…” எனக் குழந்தையின் கன்னம் வருடியவன், “என் பாப்பா செந்தில்” என்றான், குழந்தை மீதிருந்து பார்வையை அகற்றாது.
“என் பொண்ணு… அப்படி தான பேபி?” என இவன் கேட்க, கைகால் ஆட்டி, உதடுகள் குவித்து… அவளும் அவள் பங்கிற்கு “ஆ ஆ அ ஊ” என்றாள்.
‘பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கெதுக்கு’ என நினைத்தவன், “பாப்பா உங்கள மாதிரியே ரொம்ப அழகு. ரோசா பூவாட்டம் இருக்குங்க சார்” என்றதற்கு வாய் விட்டு சத்தமாகச் சிரித்தான் கௌதமன்.
இவனைக் கடைசியாக இப்படிச் சிரித்த முகமாக என்று பார்த்தோம் என்ற யோசனையோடே செந்தில் கரத்தில் வாகனம் வீட்டை நோக்கிச் சென்றது. ஒன்றரை வருடங்குளுக்கு முன் விமான நிலையத்தில் இறக்கி விட்ட அன்று தான் கடைசியாகக் கௌதமன் சிரித்தது.
இருந்த வெந்நீர் தீர்ந்துவிட்டிருக்க, மகள் மீண்டும் பாலுக்கு அழும் முன் வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டுமே… இவன் அவஸ்தை புரியாது செந்தில் கார் ஓட்ட, கௌதமனின் பொறுமை அதன் கரையைக் கடந்தது.
“என்ன வண்டி ஓட்ற்ற? மாட்டு வண்டின்னு நினைச்சுட்டியா?” என சத்தம் போட்டான் கௌதமன்.
‘இப்போ தானே இவர் சிரிச்ச முகமா இருக்கார்ன்னு நினைச்சேன்’ என நினைத்தவன், “பாப்பா இருக்குன்னு…” என இழுத்தான்.
“ம்ம்ம்… நீ ஓட்டுற லட்சணத்துக்கு நாங்க ரெண்டு பேரும், ஒரு நாள் ஆனாலும் இங்க தான் இருப்போம் போல இருக்கு. வண்டிய ஓட்டு செந்தில். நீ ஓட்டுற ஸ்பீடுக்கு என் மகளுக்குத் தூக்கமே வந்துடுச்சு.” என முடித்தான்.
கை முஷ்டியை வாய்க்கு கொண்டு செல்வதும் அதைச் சூப்பும் முன்பே தூங்கி வழிவதுமாக இருந்த மகளை நெஞ்சோடு அணைத்துப் பிடிக்க, அவன் இதயத்துடிப்பு தாலாட்டாய் மகளைத் தூங்க வைத்தது.
அந்த ஆடம்பர பங்களாவின் மதிலுக்குள் நுழைந்தது கௌதமன் அமர்ந்திருந்த லெக்சஸ். விழுந்தடித்துக் கொண்டு கௌதமனுக்குக் கதவைத் திறந்து விட்டான் வீட்டு வாயிலில் நின்றிருந்த வேலையாள்.
மகிழுந்தில் இருந்து இறங்கியவன் முகத்தில் வெக்கை அடித்தது. தூங்கிக் கொண்டிருந்த மகளிடம், “சென்னை ரொம்ப சூடு பேபி” என்றவன் பொதியில் இருந்து மகளை பிரித்தெடுத்தான். குட்டி உருவம் சிகப்பு பருத்தி ஃபிராகில் உண்மையிலுமே ரோஜா பூவே தான். அவன் கைக்குள் பொக்கிஷமாக அடங்கியிருந்த குட்டி புதையலின் மேல் சுற்றி வேலையில் இருந்த வேலையாட்கள் அனைவர் கண்களும் பதிந்து விலகியது.
ஓட்டுநர் செந்திலின் கிருபையால் காட்டில், ‘சின்ன சாரோட மகளாம்’ என்ற தீ பற்றிக் கொண்டது. “பெரிய இடத்து குழந்தைங்கனாலே தனி மினிமினுப்பு தான்” என்ற பேச்சு அவன் காதுகளில் உரசிச் சென்றது. தகப்பனுக்குப் பெருமை கொள்ளவில்லை.
“கண்ணுப்பட்டுடுமே” என முனகி கொண்டே மீண்டும் புசுபுசு வெள்ளை துண்டால் மகளை மூடினான் புது தகப்பன். ஏகப்பட்ட அசைவுகள் குழந்தையின் தூக்கத்தை ஓயாது கெடுப்பதைக் கௌதமன் உணாறாது இல்லை.
“கொஞ்சமே கொஞ்சம் பொறுத்துக்கோங்க பேபி. வீட்டுக்கு வந்துட்டோம்.” என மகளுக்கு விளக்கம் கொடுத்தான்.
செப்பு வாய் திறந்து கொட்டாவி விட்ட பின்பும் தூக்கிக் கொண்டிருந்த அழகு பூ குவியலின் மேல் இருந்து கண்களை பிரிக்க முடியாது பிரித்துக் கொண்டு வீட்டுனுள் வேலையாள் நுழையவும், “கௌத்தமா… வா பா” என ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு வந்தார் வைஷாலி.
வைஷாலியை பார்த்தவனுக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாமலில்லை. நீண்ட மூச்சை இழுத்து விட்டான். “என்ன டா அது? கையில துண்டோட நிக்குற?” எனக் கேட்டு கொண்டே ஓடோடி வந்தவர் மகன் கையில் இருந்த வெண்பஞ்சு குவியலுக்குள் கைகளை சுருக்கிக் கொண்டு தூக்கத்தில் கீழ் உதட்டைச் சப்பிக்கொண்டே தூங்கும் அழகு குழந்தையை எதிர்பார்க்கவில்லை.
“இது… இது குழந்தையா கௌதமா?” என கைக்குள் எட்டிப் பார்த்தார் வைஷாலி. இந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவான்? கை கால் முளைத்த ரோஜா குவியலை ஆசையோடு அவன் கண்கள் தழுவியது. “ஆமா மா” என்றான் புன்னகை தவழ.
“யார் குழந்த கௌத்தமா இது?” என்றவர் முகத்தில் அவ்வளவு குழப்பம்.
தென் கொரியாவிற்குச் சென்றவன் அங்குத் தங்கி சிகிச்சை முடிந்தபின் நேரே வீட்டிற்கு வருவான் என நினைத்தால்… அவனோ இரு வாரங்கள் முன்பே வீங்கிய முகத்தோடும் கையில் மொசு மொசு முயல் குட்டியை… இல்லை இல்லை கை கால் முளைத்த குட்டி பன்னீர் ரோஜா குவியலோடு வந்து நிற்கிறான்.
கூறலாம் தான். நடந்த அனைத்தையும் கூறினால், கண்டிப்பாக நம்புவார் தான். ஆனால் அதன் பின் யாழினியாளை இந்த வீட்டில் இருக்க விட மாட்டார். அவன் மகள் மீண்டுமாக ஏதோ ஒரு இல்லத்திலோ, வேலையாள் வீட்டிலோ வளருவாள் என்பதால், “என் குழந்தை மா” என்றான்.
பிள்ளையோடு நிற்கும் கௌதமனை ஒருகாலும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவன் பிள்ளை என வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஒருத்தி வந்து நிற்பாள் என எதிர்பார்த்திருந்தார் வைஷாலி. ஆனால் அதெல்லாம் ஒரு காலம்… இப்பொழுது மகன் அப்படி இல்லையே!
“என் குழைந்தைனா? என் குழந்தைன்னா என்ன கௌதமா அர்த்தம்?” வைஷாலியின் ரத்தக் கொதிப்பு தாறுமாறாக ஏறியது.
“என் குழந்தன்னு அர்த்தம். அவ்வளவு தான்!” என்றான் சற்று கடுப்போடே.
“எப்படி டா?” என்றார் ஆற்றாமையோடே.
“இது என்னமா கேள்வி?” என்றவனுக்கு அன்னையைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், இப்போதைக்கு மறந்தும் உண்மையை உரைக்க முடியாதே.
வைஷாலிக்கு கோபமாக வந்தது. கோபத்தை எப்படி அடக்குவதெனத் தெரியவில்லை. குழந்தை பொம்பைப் போல் அத்தனை அழகு. “இல்ல இல்லவே இல்ல… உன் ஜாடையே இல்ல இதுக்கு. இந்த குட்டி உன் குழந்தையே இல்ல கௌதமா” என்றார் குழந்தையை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே. இந்த அம்மா கண்களுக்கு எதுவும் தப்பாதோ? சொல்லிவிடுவான் தான்… ஆனால் கண்டிப்பாக இன்று இல்லை.
‘அது என்ன குட்டி?’ “குட்டி இல்ல மா… யாழினி. என் மக பேரு யாழினியாள் கௌதமன்.” என்றான் ஆழமான அழுத்தமான குரலில்.
“கையில இருக்க குட்டிய நீ என்ன வேணா சொல்லி கூப்பிடு. ஆனா அது உன் குழந்த இல்ல. யாருக்கோ பிறந்த குழந்தைக்கு ஏன் கௌதமா நீ உன் பேர கொடுக்கணும்?” வைஷாலியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“நான் மட்டும் என்னமா… முழுசா உங்க மகனா? உங்க இரத்தமா இன்னும் எனக்குள்ள ஓடுது? அன்னைக்கு அவங்களும் அப்படி நினைச்சிருந்தா… இன்னைக்கு, நான் இல்ல மா” என்றவன், கண்களை இறுக மூடி திறந்து,
“இப்போ நான் என் மகளோட உள்ள போறதா? இல்ல அப்படியே ஒரு கேப் புக் பண்ணிட்டு ஒரேயடியா வெளில போகவா? எதுனாலும் சட்டுன்னு சொல்லிடுங்க. யாழிய படுக்க போடணும். எனக்கு குளிச்சிட்டு படுக்கணும்.” என்றவனை அவர் பங்கிற்கு முறைத்து நிற்க,
“என்ன வைஷு வாசல்ல வச்சு பேசிட்டு இருக்க?” என அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்த வாசுதேவனின் பார்வை மகனின் கைக்குள் ஒய்யாரமாகத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது படிந்து மீண்டது.
“யாருக்கோ பிறந்த குழந்தையைத் தூக்கிட்டு வந்து ‘என் குழந்த’ன்னு கதை சொல்லிட்டு இருக்கான் உங்க மகன்.” கணவனை நீதிபதியாக்கி மகனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றினார் வைஷாலி.
“யாரோ குழந்தையா? என் குழந்தைன்னு இவ்வளவு நேரமா சொன்ன எதுவுமே உங்களுக்கு கேக்கலையா…” என கோபமாக ஆரம்பித்த மகனைப் பார்த்தவர், மனைவிக்கு பதில் உரைக்காது, “ஹால்ல ஏன் நின்னுட்டு இருக்க. உள்ள போ கௌதமா. குழந்தைக்கு என்ன வேணும்ன்னு மீனாட்ட பாக்க சொல்லு” என்றவர், “மீனா” என அவர்கள் வீட்டை மேற்பார்வை பார்க்கும் மீனாவிடம் குழந்தைக்கான தேவைகளைக் கவனிக்கும்படி அவரே கூறினார்.
கௌதமன், தன் அறையை நோக்கி நகரவும் கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்த வாசுதேவன், “வா உக்காரு” என மனைவியை அருகில் அமர்த்தினார்.
“நேத்தே அந்த குழந்தைய பத்தி சொன்னான்” என்றார் வாசுதேவன் சலனமில்லா முகத்தோடு.
கண்ணீர் மல்க, “என்ட்ட என் மகன் சொல்லவே இல்ல” என்றார் வைஷாலி. “அவனுது இல்ல தான? அப்பறம் எதுக்கு அத அவன் வளக்கணும்? நாம காசு கொடுக்கிறோமே அந்த இல்லத்துல கொடுத்த பத்திரமா பாத்துப்பாங்கல்ல?”
“அவன் தான் அது அவன் மகன்னு சொல்றானே… கேக்கலியா? அவன் மகன்னு சொன்னா… அவன் வளக்க விரும்பறான்னு அர்த்தம். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத ஒருத்தன் இவ்வளவு பெரிய பொறுப்ப சுமக்கத் தயாரா இருக்கான்னா… அந்த குழந்த அவனுக்கு முக்கியம்ன்னு ஏன் யோசிக்க மாட்டேன்ற?”
“அவன் யோசிச்சு இருக்க மாட்டாங்க. அழகா பொம்ம மாதிரி இருக்குன்னு தூக்கிட்டு வந்திருக்கான். ஊர் உலகத்துல என்ன நினைப்பாங்க. கையில குழந்தையோட நின்னா இவனுக்குன்னு நல்ல எதிர்காலம் எப்படிங்க அமையும்?”
“அப்போ… அத அவனுக்கு புரிய வை. அவன்கிட்ட குழந்த வளர்ப்புல இருக்க ரெஸ்பான்சிபிலிடிய சொல்லு. அத விட்டுட்டு சண்டை போடாத.”
“அழகா இருக்குன்னு அவன் கொள்ளிக் கட்டைய வச்சு சொறிஞ்சுக்க நிக்கிறான்… அவனுக்கு பேசறது எதுவும் கேக்க மாட்டேங்குது. இதுல குழந்த வளர்ப்ப பத்தி நான் கிளாஸ் எடுக்கணுமா? முதல்ல அந்த குட்டிய வாங்கிட்டு வந்தவங்கட்டயே திருப்பி கொடுக்க சொல்லுங்க” என வைஷாலி கத்தி தீர்த்தார்.
“நீ அவன் நிலைய கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேன்ற வைஷூ! ஒரு மேஜர் சர்ஜரிய தாண்டி வந்திருக்கான். ஒன்னரை வருஷம் ஆகி இருக்கு அவன் உயிரோட பிழைச்சு நடமாடுற மனுஷனா மாற. இன்னும் டிப்ரஷன் மாத்திர எடுக்கிறான் மறக்காத. இதுல திடீர்ன்னு அவனுக்கு தான் யாரு என்னான்னு புரிஞ்சும் புரியாத நில. இருக்க குழப்பத்துல அவன் அவனாவே இல்ல. நேத்து தான் என் மகனோட சிரிப்பையும் துள்ளலான பேச்சையும் கேட்டேன். அதுக்கு காரணம் அந்த குழந்தை தான்னா… அது யாருதா இருந்தா என்ன?
என் மகனுக்கு முக்கியமான நபர் எனக்கும் முக்கியம். உனக்கும் தான். முன்ன அவன் சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டி அவன கெடுத்த. இப்போ நீ சொல்றத மட்டும் அவன் கேக்கணும்ன்னு அவன படுத்தி எடுக்குற வைஷாலி. அவன ஃபிரியா விடு. அவன் நிம்மதியா குணமாகட்டும். அவன அவனா இருக்க விடு வைஷூ. ஒரே ஒரு நிமிஷத்துல வாழ்க்கையே மாறிப் போய் நிக்கிறான்.
என் மகன் உயிரோட இருந்தா போதும்ன்னு கண்ணீர் விட்டத மறந்திடாத. நம்ம என்ன புண்ணியம் செய்தோமோ… அம்மான்னு உன்னையும் அப்பான்னு என்னையும் கூப்பிட அவன் இருக்கான். இது அவனுக்கு மட்டும் இல்ல, நமக்கு செக்கெண்ட் சேன்ஸ்… தவற விட்டுடாத வைஷூ. அவன் பிடிவாதம் உனக்கு தெரியும். அந்த குழந்தைய துரத்த நினைச்சு அவன துரத்திடாத.” என்ற வாசுதேவன் கூற வேண்டியதெல்லாம் கூறிவிட்டாயிற்கு இனி உன் இஷ்டம் என்பது போல் எழுந்து சென்றுவிட்டார்.
வைஷாலி அமைதியாக எழுந்து அடுக்களை பக்கம் சென்றார். ஏனோ மகனின் எதிர்காலம் குறித்து கவலையாக இருந்தது. அவன் குழந்தையாக இருக்குமோ? மிகவும் சின்னதாக தானே இருந்தது? ஆறு மாதங்கள் கூட இருக்காது அந்த குழந்தைக்கு… அப்படியிருக்க அது அவரின் பேத்தியாக இருக்க வாய்ப்பே இல்லை என மனம் அடித்துக் கூறியது.
வெளி உலகிற்கு இந்த குழந்தையை பற்றித் தெரிந்தால், மகனின் வாழ்க்கை? அவன் போக்கிலேயே போய் மெல்ல மெல்ல புரிய வைத்துவிடலாம் என மனதில் கணக்குப் போட்டார் வைஷாலி.
கௌதமனோடு சென்ற மீனாவிடம் மகளின் தேவைகளை உரைத்தவன் அறைக்குள் நுழைந்தான். நான்கு நபர் தாராளமாக படுக்க கூடிய படுக்கையை தவிர்த்து, தரையில் கம்பளி விரித்து மகளை அதில் படுக்க வைத்தான். மகள் முகம் சுருங்கவும் கண்டுக் கொண்டவன், ‘நீ இருக்கியே’ என செல்லமாக கோபித்து, மகளின் அருகில் படுத்து தட்டிக் கொடுத்தான். மகள் கண்ணயரவும், தலையணையைத் துணைக்கு வைத்தான்.
“அப்பா குளிக்க போறேன். சமத்தா தூங்குவியாம்.” என கிசுகிசுத்து குளிக்கச் சென்றான்.