Skip to content
Post Views: 8,904
மார்கழி – 1
“தை பொறந்தா வழி பொறக்கும். இதுதான் மருமகனுக்கான வழி போல… நீ மனச போட்டு வருத்திக்காத, இதுதான் நடக்கணும்னு இருந்தா யார் என்ன பண்ண முடியும்?”
அவனின் ஒன்றுவிட்ட மாமா ஒருவர் தன் அன்னையிடம் பேசுவது செவி எட்ட, உள்ளிருந்து பொங்கும் ஆத்திரத்தையும் அதனால் உண்டான நடுக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாது கையில் கிடைத்த அவன் அலைபேசியை தூக்கி எறிந்தான். அவன் ஆங்காரத்தின் மொத்த பலத்தையும் தாங்கி சுவரில் பட்டு தெரித்து உடைந்தது அந்த சாம்சங் அலைபேசி.
“குடும்பமா கூடியிருக்கும் போது இப்படி தலையிறக்கமாகிடுச்சேன்னு அவர்தான் சோர்ந்துட்டாரு அண்ணா.” என்ற அன்னையின் குரலும் அவன் காதை எட்டியது.
Advertisement
“இதுதா விருப்பம்னு முதல்லேயே அறிவும் சொல்லியிருக்கலாம். என்ன செய்ய… தைரியமா இருங்க. நாளைக்கு பொங்க வச்சிட்டு எல்லாரும் கிளம்பி வந்துர்றோம்.” என்று அவர் சொல்லிக்கொண்டு கிளம்புவதும் தெரிந்தது அறிவழகனுக்கு.
சூரியனின் ஆதிக்கத்தில் தொய்வு ஏற்பட்டு துருவப்பகுதி குளிர்ந்து தமிழக பகுதிகளுக்கு குளுமை பரப்பும் முன்பனிக்காலமான மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று. அறுவடைத் திருநாளான பொங்கலை எதிர்நோக்கி தை மாதத்தை வரவேற்கும் பொருட்டு அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டிருக்க, அதை கழிக்க சொந்த ஊர் வந்த அறிவழகன் வாழ்க்கை இப்படி ஒரேடியாய் மாறும் என்று தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டானோ என்னவோ. இன்று அனைத்தும் அவன் கைமீறி சென்றுவிட்ட உணர்வு. சற்று தாமதமாக காலை பொழுதினில் வீடு வந்திறங்கிய போதே அவன் அத்தை வீட்டிலிருந்து பலர் வந்திருக்க யோசனையாக வீட்டினுள் நுழைந்தவனை ஆராய்ச்சியாக பார்த்தனர் அங்கிருந்தோர். அவர்களின் பார்வை உணர்ந்து,
“என் ஃபிரெண்ட்.” என்று தன்னுடன் வந்த நபரை அறிமுகம் செய்துவைத்தான்.
Advertisement
வந்திருந்தவர்களின் முகம் தெளியாவிட்டாலும் அதனை அவன் பெரிதாக கண்டுகொள்ளாமல் தன் அன்னையை பார்க்க, குழப்பத்துடன் அவனை நெருங்கியவர், “உனக்கு உமாவ பேசலாம்னு வந்திருக்காங்க. சீக்கிரம் குளிச்சிட்டு வா.” என்று அவசரப்படுத்த, அவன் அலுப்பு எல்லாம் எங்கோ பின்சென்ற உணர்வு. ஒரு கூடை பனிக்குமிழிகளை தலையில் கொட்டியது போலிருந்தது. மனமெல்லாம் பரவசம். அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலிக்க, திருப்தியடைந்த அவன் அன்னை வந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்தார். ஆனால் எல்லாம் சற்று நேரத்திற்குத் தான். அதிர்ச்சியில் மெலிதாக துவங்கிய சலசலப்பு பின் கலவரமாகி அவன் தந்தை அவன் திருமணத்தை உறுதி செய்ததில் வந்து நின்றது. ஆனால் மணப்பெண் அவன் எதிர்பார்த்த அவன் அத்தை மகள் உமா அல்ல, தோழி என்று உடன் அழைத்து வரப்பட்டவள் மனைவியாகப் போகிறாள். இவன் மறுப்புகள் எல்லாம் சபை ஏறவில்லை, இதுதான் முடிவு என்பது போல் தீர்மானமானது.
Advertisement
செங்கொழுந்தாய் தகித்துக் கொண்டிருக்கும் அனலை அடக்கும் வழியறியாது விரல்களை ஒன்றோடு ஒன்று கொக்கியிட்டு இறுக்கி மடக்குவதுமாய் பிரிப்பதுமாக இருந்தான். எழுந்து இங்குமங்கும் நடந்தான். சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து சுவாசப்பையில் நிரப்பி அதிவேகமாக படபடக்கும் இதயத்தின் துடிப்பை சீர் செய்ய முயன்றான். ம்கூம் இதயம் தன் வேகத்தை மட்டுப்படுத்தினாலும் அவன் மனம் சமநிலைக்கு வருவதாய் இல்லை. நடந்ததை புரட்டிப்பார்த்து தேகமெல்லாம் வெகுண்டு கொந்தளித்தது. அந்த நொடி எதிரே யார் வந்தாலும் குத்திக் குதறிவிடும் வேகம். ஆசைப்பட்டது கைவிட்டு போனது ஒருபுறம் வலியென்றால் உடன் வந்தவள் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலை நினைக்க நினைக்க அவளை கொலை செய்யும் ஆத்திரம். நம்பி அழைத்து வந்ததற்கு பலனாய் முதுகில் குத்திவிட்டாளே என்ற ஆங்காரத்துடன் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியேறியவன் விழிகள் அவளை தேடி அலைந்தது. இவன் எண்ணம் புரிந்தது போல் பதுங்கியிருந்தது பதுமை.
“பண்றது எல்லாம் பண்ணிட்டு நடுவீட்டுல விறைப்பா நிக்குறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்ற முணுமுணுப்புடன் அவனை கடந்து சென்ற தந்தையை இயலாமையுடன் பார்த்தவன், “நீங்க செய்யுறது சரியில்லை அப்பா. நான் சொல்றதையும் காது கொடுத்து கேளுங்க.” தன்னை புரியவைத்துவிடும் வேகத்துடன் அவரை பின்தொடர்ந்தான் அறிவழகன்.
“காது கொடுத்து கேக்குறது மட்டுமில்லை ரெண்டு கண்ணால எல்லாத்தையும் பாக்கவும் செஞ்சாச்சு. என் பையன் லட்சம் லட்சமா சம்பாரிக்குறானோ இல்லையோ ஒழுக்கமா இருக்காங்குற கர்வத்துல இருந்தேன். அதை குழி தோண்டி புதைச்சிட்ட. பெத்த கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்குறோம். இனியாவது ஒழுங்கா இருக்கப்பாரு.” அவன் முகம் கூட பார்க்காது சொல்லிச் சென்றவரை வருத்தத்துடன் பார்த்தவன் அடுத்து சென்று நின்றது அன்னை மேகலாவிடம்.
Advertisement
“ம்மா நீயாவது நான் சொல்றதை கேளு. எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
“இல்லாமத்தான் வீடு வரைக்கும் கூட்டிட்டு வந்து ஃபிரெண்டுனு சொன்னியா?” என்று அழுத்தமாய் மகனைப் பார்த்தார் மேகலா.
“அம்மா… அது வேற மேட்டர்…”
“அப்போ மூணு மாசம் அந்த பொண்ணோட ஒரே வீட்டுல இருந்தது?” இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாய் என்பதாய் ஒரு கூர்பார்வை மேகலாவிடம்.
“ம்மா நீயும் என்னை சந்தேகப்படுறியா?” இப்போது மகனின் உடலிலும் இறுக்கம் பரவியது.
“வேற என்ன பண்ணட்டும்? உன் கல்யாணப் பேச்சு இங்க கூடத்துல போயிட்டிருக்கு அங்க பின்னாடி ரூம்ல அந்த பொண்ணோட என்ன வேலை உனக்கு? அதுவும் எந்த கோலத்துல?” எனும்போதே அசுயையாய் மேகலாவின் முகம் சுருங்கியது.
மேகலாவின் பார்வையில் சங்கடமாய் உணர்ந்தவன் சிகை கோதி பார்வையை தவிர்த்து, “ம்ப்ச்… அது ஆக்சிடென்ட் ம்மா… போன் பேசணும்னு என் ரூமுக்கு…” என்றவனை முழுதாக பேச விடாமல் தடுத்தவர்,
“இனி விளக்கம் சொல்லி எதுவும் மாறப்போறதில்லை. உன் தங்கச்சியோட நாத்தனாரை உனக்கு கொடுக்கணும்னு அவங்க வீட்ல ரொம்ப ஆசைபட்டாங்க. உன் மனசுல உமா இருக்கானு நாங்களா நினைச்சுகிட்டு அதை நாசுக்கா தடுத்துட்டோம். அதுவும் நல்லதா போச்சு, சம்மந்தி வீட்டுக்காரங்க முன்னாடி தர்மசங்கடமா போயிருக்கும். இதுக்கே உன் அத்தையும் மாமாவும் குதிச்சிட்டு போயிருக்காங்க. இனி இங்க வருவாங்களோ என்னவோ…”
“அத்தை மாமாகிட்ட நான் பேசுறேன். இந்த கல்யாணம் தப்பும்மா. இப்போவும் உமா தான் எனக்கு விருப்பம்.” குரல் தழைத்து அறிவு மன்றாட, கை விரிக்கும் நிலை மேகலாவுக்கு.
“கல்யாணம் பத்தி பேச வீட்டுக்கு உன் அத்தை மாமா மட்டும் வந்திருந்தா கூட சமாளிச்சிருக்கலாம். கிட்டத்தட்ட முடிவான மாதிரிதானே… நீ மறுப்பு சொல்ல மாட்டே, நேரடியா பரிசத்தை பத்தி பேசிடலாம்னு கூட அவங்க பங்காளிங்கள அழைச்சிட்டு வந்து அவங்க உங்க ரெண்டு பேரையும் அந்த நிலைமையில பாத்து ஆளுக்கு ஒன்னா பேசி எல்லாம் கை மீறி போச்சு. ஊருக்குலேயும் இந்நேரம் இந்த விஷயத்தை திரிச்சி விட்டிருப்பாங்க. பேரு கெட்டுப்போச்சுன்னு அப்பாவுக்கு வருத்தம்.”
“என் வாழ்க்கையை விட உங்களுக்கு பேர் கெட்டுப்போறது தான் பெருசுல்ல?” மொழியும் முகமும் ஆவேசத்தை கொட்டியது.
“பொண்ணு விஷயத்துல பேர் அடிபடுறது குடும்பத்துக்கு நல்லது இல்லை அறிவு. நம்ம வீட்டு பொண்ணும் இன்னொரு வீட்டுல வாழுறா.”
“முடிவா என்னதான் சொல்ற?”
“நான் என்ன சொல்லணும்?”
“நீயும் என் பக்கம் தப்பிருக்கும்னு நம்புறியா?” அன்னையை அழுத்தமாக பார்த்தான் அறிவழகன்.
அவனுக்கு சற்றும் சளைக்காத பார்வை பார்த்த மேகலா, “உன் பார்வையில சலனம் இல்லாம இருக்கலாம் ஆனா அந்த பொண்ணு பார்த்த பார்வைதான் எங்க எல்லார் கவனத்திலும் பதிஞ்சுச்சு. அந்த பார்வை வேற கதை சொல்லுச்சே…” என்றவரை புரியாது பார்த்து வைத்தான் மகன்.
“தெளிவா குழப்பி என்னை மொத்தமா க்ளோஸ் பண்ண முடிவு பண்ணிட்டீங்க. உண்மை ஒருநாள் வெளிய வரும், அப்போ திரும்பி வர முடியாத தூரம் போயிருப்பேன்.” என்றுவிட்டு சென்ற மகனை கண்கள் கலங்க பார்த்து நின்றார் மேகலா.
மகன் மேல் நம்பிக்கை கொள்ளை அளவு இருக்கிறது. ஆனால் சொந்தங்கள் மகனின் ஒழுக்கத்தை சபை ஏற்றி விமர்சிக்கும் போது அவன் பெயரில் களங்கம் படியாது பார்த்துக்கொள்ள பெற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிதான் இந்த திருமணம்.
என் மகனை உத்தமனாக வளர்த்திருக்கிறேன், அவன் சோடை போகவில்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மகனின் மனதை பொருட்படுத்தாது சொந்தத்தின் முன் அவசரகதியில் வாக்கு கொடுத்துவிட்டார் அறிவழகனை பெற்ற மாறன். தன்னை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆற்றாமை அறிவழகனுக்கு. பெற்றவர்கள் கைவிரித்துவிட, போகிப்பண்டிகையான அன்று முழுதும் அறையில் அடைந்து கிடந்தான். யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. அதைவிட உமாவை பார்க்க வேண்டும் என்று உந்துதல் தவிப்பாய் உருமாற, அவளை நேரில் சென்று பார்க்கவே அத்தனை யோசனையாய் இருந்தது. அவன் அத்தையும் மாமாவும் அவளிடம் என்ன சொல்லியிருப்பார்களோ? அவளுக்கு தன் மீது நம்பிக்கை இருக்குமா? தன் நேசத்தின் மீது சந்தேகம் கொள்ளாமல் இருப்பாளா? என்று பல்வேறு சிந்தனைகள்.
உமா! அழகி அவன் விழிகளுக்கு. நெட்டையோ குட்டையோ, ஒல்லியோ சதை பற்றுள்ளவளோ எதுவும் அவன் கருத்தில் இல்லை, என் அத்தை மகள் அவள் என்ற எண்ணமே நேசம் வளர்த்தது.
இளங்கலை படிப்பு முடித்துவிட்டு இவனுடனான திருமணத்திற்கு காத்திருக்கிறாள். தந்தை மாறனின் உடன்பிறந்த சகோதரி மகள். அடிக்கடி பார்த்துக்கொண்டாலும் அதிகம் பேசிக்கொள்வதோ நெருங்கி பழகுவதோ இன்றி பார்வை பரிமாற்றம் மூலம் இரசாயனங்கள் கடத்தி ஒருவர் மீது ஒருவர் விருப்பம் வளர்த்துக்கொண்டனர். இவர்களின் கண்ணாம்பூச்சி நேசத்துக்கு தூபமாய் இருவரின் பெற்றோர்களும் உறவுக்குள் திருமணம் முடிக்கவே விழைந்தனர். பலன், பரிசம் பற்றி பேச வந்து மனக்கசப்பு ஏற்பட்டு மணப்பெண்ணும் மாறிவிட்டது.
தந்தையின் வாக்கை மீறி மணம் முடிக்க முடியாது என்று அனைத்தையும் எடுத்தெறிந்துவிட்டு இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்றாலும் கூடவே தோழி என்று அழைத்து வந்திருப்பவள் உளறி வைத்திருக்கும் விஷயங்கள் காலத்திற்கும் துரத்துமே, உமாவின் மனதை உறுத்துமே என்ற கவலை வேறு. நடந்த கலவரங்கள் ஊர் மத்தியில் திரித்து கூறப்பட்டிருக்கும் என்று அன்னை சொன்னது வேறு நினைவில் வந்து அழுத்தியது.
சுற்றத்தார் மதிக்கும்படியான கண்ணியமான உத்தியோகத்தில் இருப்பவனுக்கு மற்றவர் பார்வையில் தன் நிலை கீழிறங்குவது தலையிறக்கமாய் தோன, துணிந்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினான்.
“கவனமா இருந்திருக்க வேண்டாமா நீ?” என்று தங்கையும் அழைத்து கேட்டாகிற்று.
‘தப்பு பண்ணா தான் கவனமா பண்ணனும். நாந்தான் எதுவும் பண்ணலையே.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது, அடக்கிக்கொண்டான்.
“நான் சொல்ற எதையும் காதுல வாங்காம நீங்களா ஒன்னை முடிவு பண்ணிட்டு என்கிட்ட கேட்டா?” எரிச்சல் மேலோங்க கேட்டான் தங்கையிடம்.
“உன்னைத்தான கேக்க முடியும்.”
“அதுதான் கேளுங்கன்னு சொல்றேன். அந்த பொண்ணு நான் தங்கியிருந்த வீட்டுல மூணு மாசமா இருந்தாதான், ரூம் மேட் மாதிரி.” இறுதி மொழிக்கு அழுத்தம் கூடியது.
“ரூம்மேட்னு நீ ஈசியா சொல்ற மாதிரி அத்தனை இலகுவான விஷயம் இல்லை ண்ணா இது. நம்ம வீட்டுக்குள்ள இப்படி யாரையும் மாசக் கணக்குல இருக்க விட்டிருப்பாங்களா என்ன? அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைனாலும் இருந்திருக்கட்டும் தனியா நீ இருந்த வீட்டுல அவங்களை தங்கவிட்டது தப்புண்ணா…” தான் பார்த்து தூக்கி வளர்த்த தங்கை தன் செயலை தவறென்று சொல்லவும் அசவுகரியத்துடன் நெற்றியை தேய்த்துக்கொண்டவன்,
“உதவி பண்றதா நினைச்சி என் தலையில நானே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்.” என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் சொல்ல, சில நொடி மெளனத்துக்கு பிறகு,
“உமாகிட்ட பேசுனியா ண்ணா?”
“எப்படி பேச?”
அவன் தொண்டை கமறியதோ? சந்தேகம் கொண்ட தங்கை மென்குரலில், “நான் பேசுனேன்.” என்று சொல்ல, பரபரப்பு அண்ணன்காரனிடம்.
மூச்சை பிடித்துக்கொண்டு தங்கை என்ன சொல்லப்போகிறாள் என்று காத்திருந்த அண்ணனை ஏமாற்றாத தங்கை, “ஒரே அழுகை. மாமா உன்கூட பேசக்கூடாதுனு போன் எல்லாம் புடுங்கி வச்சிகிட்டார். நானே அத்தை போனுக்கு கூப்பிட்டு பேசுனேன்.” என்றவள் சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
“உன்னைப்பத்தி மூச்சு விடலை அண்ணா. என்ன கேட்டாலும் மூக்கு உறிஞ்சுறா. எதுனாலும் தெளிவா பேசிடுங்க. எல்லாம் கைமீறி போனதுக்கு அப்புறம் பேசுனா நல்லாயிருக்காது.” என்ற தங்கையின் அறிவுரையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அடுத்த நிமிடமே உமாவின் அலைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நெற்றியில் அடித்துக்கொண்டவன் அத்தை எண்ணிற்கு அழைத்தான். மேகலாவின் எண்ணிலிருந்து அழைத்ததால் அழைப்பு ஏற்கப்பட்டது.
தடதடக்கும் இதயத்துடன், “நான் அறிவு பேசுறேன் அத்தை. உமாகிட்ட போன் கொடுக்க முடியுமா?”
மறுபக்கம் அமைதி.
“த்தை ப்ளீஸ்… நீங்களாவது புரிஞ்சிக்கோங்க.” அவன் இறைஞ்சவும் என்ன நினைத்தாரோ அலைபேசியை மகள் கைக்கு மாற்றியிருந்தார்.
“யாருமா?” என்று கேட்டுக்கொண்டே அலைபேசியை காதில் வைத்து ஹலோ என்றிருந்தாள் உமா.
“உமா!” அத்தனை தவிப்பையும் பதட்டத்தையும் குரலில் தேக்கி அறிவழகன் அவளை அழைக்க, முணுக்கென கண்ணீர் வந்தது உமாவுக்கு.
“உமா…”
“…”
“உமா ஏதாவது பேசேன்…”
“அவங்க பேர் என்ன?”
“எவுங்க?” என்ன கேட்கிறாள் இவள் என்று புரியாத நெற்றிச் சுருக்கம் அவன் முகத்தில்.
எப்படி கேட்பது என்று நொடி யோசித்தவள், “உங்க கூட வந்திருக்காங்களே…” என்று இழுக்க,
“என்கிட்ட உனக்கு கேக்க வேற எதுவுமே இல்லையா உமா?” ஏமாற்றம் பிரதிபலித்தது அந்த குரலில்.
“நீங்களா சொல்லி இருந்தா நான் ஏன் கேக்கப்போறேன்?” கோபம் முந்தியது அவளிடத்தில்.
“சொல்ற அளவுக்கு முக்கியம் இல்லைனு நினைச்சேன்.” அவன் பதில் அவனுக்கே அபத்தமாய் ஒலித்ததது போலிருந்தது. அதில் குரலும் உள்ளே சென்றுவிட்டது.
“முக்கியம் இல்லாதவங்களை தான் வீட்டுல தங்க வச்சிருந்தீங்களா?” சீறியதோ பெண்…
“ம்ச்… அப்படியில்லை. அது ஒரு ஹெல்ப். கொஞ்ச நாள்ல அந்த பொண்ணு கிளம்பி போயிடும்னு இருந்துட்டேன்.” தடுமாற்றத்துடன் பதில் சொன்னான் அறிவழகன். அந்த பெண்ணை தங்க வைக்கும் போது புரியாத அனர்த்தம் எல்லாம் இப்போது புரிவது போலிருக்க, தன் மடத்தனத்தை நினைத்து தலையில் கொட்டிக்கொண்டான். தவிர்க்க முடியாத நபர் உதவி என்று கேட்டதும் தயக்கம் அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவளை தங்க வைத்திருக்க கூடாது என்று தாமதமான ஞானோதயம்.
“உங்களை நம்பனும்னு எனக்கும் ஆசைதான் அத்தான். ஆனா அந்த நம்பிக்கையை என் மேல நீங்க வைக்கலையோன்னு தோணுது. நீங்க என்கிட்ட சொல்லியிருக்கணும்.” என்னிடம் ஒளிவு மறைவு இல்லாது இருந்திருந்தால் இந்த சிக்கலே கூட வராமல் தடுத்திருக்கலாம் என்ற அர்த்தம் பொதிந்திருந்தது அவள் பேச்சில்.
“…”
“நான் கேட்ட அப்புறமும் நீங்க வெளிப்படையா சொல்ல மாட்டேங்குறீங்களே.”
“அந்த பொண்ணு பேர் இயலணி. ஃபிரெண்ட் ஒருத்தன் இந்த பொண்ணை கொஞ்ச நாள் பாதுகாப்பா தங்க வச்சிக்க முடியுமான்னு கேட்டான். அந்த பொண்ணை பாக்கவும் பாவமா இருந்துச்சு, ஏதோ பெரிய ஆபத்துலேந்து தப்பிச்சி வந்த மாதிரி இருந்துச்சு. மனசு கேட்காம சரி சொல்லிட்டேன். அந்த பொண்ணை பத்தி வேற எதுவும் தெரியாது உமா. என்னை நம்புறியா?” கடகடவென்று தெரிந்தவற்றை பகிர்ந்தான் அந்த காதலன்.
“அப்புறம் ஏன் அந்த பொண்ணு உங்களை விரும்புறேன்னு சொல்லணும்?”
“தெரிலையே…”
“அப்பா வராங்க அப்புறம் பேசுறேன்.” என்று உமா அழைப்பை துண்டிக்க,
“உமா…” என்ற அழைப்பு காற்றில் கரைந்து போனது உமாவுடனான அவனது வாழ்க்கை கனவுகள் போல.
error: Content is protected !!