Skip to content
Post Views: 4,359
“நான் ஜானகி! ஜகதுவோட சினேகிதி! பெங்களூரில் இருந்து பேசுறேன்!” என்றவுடன் தமிழரசிக்கு ஒரே ஆச்சரியம்!
“ஜானகின்னா, அப்ப.. அவங்க.. அவங்க ஜான்வியோட பாட்டியாய் இருப்பாங்களோ! இருக்கும்!” அவருக்கு ஒரே சந்தோசமாகி விட்டது!
“கொஞ்சம் அப்படியே லைனில் இருங்க, நான் அத்தையைக் கூட்டிட்டு வரேன்!” என்று சொல்லி விட்டு, சின்னப் பெண் போல கிட்டத்தட்ட ஓடி சென்றார் ஜகதுவிடம்!
“அத்தை.. யாரோ ஜானகியாம், உங்க சிநேகிதியாம், பெங்களூர்ல இருந்து பேசுறாங்க, லைனில் இருக்காங்க வாங்க” என்றார் வேகமாக!
Advertisement
“என்ன ஜானகியா?”, அதிர்ச்சி குரலில் இருவரும் சட்டென்று எழுந்து விட்டார்கள் ஜகதுவும், கனகுவும்!
அவர்களும் ஓட்டமும் நடையுமாக ஹாலில் இருந்த அந்த போனை எடுத்தார்கள். எடுத்து ஸ்பீக்கரில் போட்டு பேசினார்கள்!
“ஹலோ நான் ஜானகி பேசுறேன்!” என்றது மீண்டும் அந்த குரல்!
Advertisement
“ஹலோ நான் ஜகது தாண்டி பேசுறேன் ஜானு!
Advertisement
நம்ம கனகுவும் கூட தான் இருக்கா, சொல்லு ஜானு எப்படி இருக்க?
எங்க இருக்க? இப்ப தான் உனக்கு போன் பண்ண நேரம் வந்ததா?
எங்களை எல்லாம் அப்படியே மறந்து போயிட்டியேடி!
Advertisement
உன்னை இரு வாட்டி திருப்பதில வச்சுப் பார்த்தப்ப கூட போன் நம்பர் தரேன்னு சொன்னவ அவசரத்துல கொடுக்காம போயிட்டியே!” என்றார் தழுதழுத்த குரலில் ஜகது!
“ஏய் ஜானு எப்படி இருக்க? நான் கனகுடி! எப்படி இந்த நம்பர் கிடைச்சுது உனக்கு?
இது புது நம்பர் ஆச்சே?” அந்த உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையிலும் கனகுவிடமிருந்து லாஜிக்கான கேள்வி!
மறுமுனையில் போனில் சிரித்தார் ஜானு!
“எல்லாம் அந்த நம்ம மூணு பேரோட வீடியோ நெட்ல வந்து ரொம்ப பிரபலமாச்சுதே!
அதில் இருந்து தான் என் பேரன் தான் பார்த்துட்டு சொன்னான். பாட்டி உங்க சின்ன வயசு போட்டோ மாதிரி இருக்கு.
அநேகமாக இவங்க இங்க பிரண்ட்ஸ் ஆ இருக்கலாம் பாருங்கன்னு” சொல்லி ஒரு வீடியோவை காட்டினான்!” என்று சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரித்தார் ஜானு!
“வீடியோவா, நாம சின்ன வயசுல எங்கடி வீடியோ இருந்துச்சு, வெறும் போட்டோ தான், அதுவும் ப்ளாக் அண்ட் ஒயிட்!” என்றார் ஜகது புரியாமல்!
“ஆமாண்டி, ஒரு வீடியோ தான். ஒரு பழைய பாட்டு!
அதில் தான் நம்ம மூணு பேத்தோட மூஞ்சியையும் வைத்து எடிட் பண்ணி இருக்காங்க!
முத முத பார்த்தப்ப எனக்கு சிரிச்சு சிரிச்சி வயிறே வலிச்சு போச்சு!
பாட்டி இவ்வளவு சந்தோசமா சிரிச்சு பார்த்ததே இல்லையேன்னு என் பேரன் அத போட்டவனை எப்படியோ கண்டுபிடிச்சு பேசினா, அது நம்ம ஊரு பையன் , அதுவும் உங்க வீட்டுல வேலை செய்ற ஒரு பையனாம்!
அவன் தான் இது மாதிரி போட்டு இருக்கான். அவன் மூலம் தான் இந்த போன் நம்பர் வாங்கி, கொஞ்சம் நம்பிக்கை இல்லாம தாண்டி நான் போன் பண்ணினேன்! ஆனா உண்மையிலேயே உங்க கிட்ட பேசுனதுல எனக்கு அப்படி ஒரு சந்தோசம்!
போதுமடி எனக்கு இதுவே மனசு நிறைஞ்சு போச்சு!” என்றார் ஜானு!
“அதுக்குள்ள மனசு நிறைஞ்சுடுச்சா, இன்னும் இருக்கே உனக்கு சந்தோசப் பட வேண்டிய விசயங்கள்!” என்றார் கனகு பொடி வைத்து!
“அப்படி என்ன விசயம் இருக்கு? சொல்லு சொல்லு” என்றார் ஜானு!
“நீ சரியான நேரம் பார்த்து தாண்டி போன் பண்ணியிருக்க, நாளை மறுநாள் என் பேரன் பரணிக்கு கல்யாணம்!” என்றார் ஜகது!
“ஓ அப்படியா ரொம்ப சந்தோசம்! நானும் வந்துடறேன்!” என்றார் ஜானு ஆர்வமுடன்!
“வர்றவ சும்மா வரக் கூடாது! கல்யாணப் பொண்ணுக்கு மாமன் சீர் கொண்டு வரணும்!” என்றார் கனகு இப்பவும் பொடி வைத்தே!
“இவ என்னடி சொல்லுறா? உன் பேரன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு சரவணன் எதுக்கு மாமன் சீர் கொண்டு வரணும்?”
“ஏன்னா, என் பேரன் கட்டிக்கப் போற பொண்ணு..” என்று ஜகது சொல்லப் போக, அதற்குள் கனகு முந்திக் கொண்டு “நான் அவ பேரை சொல்லுறேன், அதுக்கப்புறம் மாமன் சீர் கொடுக்கலாமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்க!” என்றார்.
“என்னடி ஒரே சஸ்பென்சா சொல்லிட்டு இருக்க! சரி சொல்லு பொண்ணு பேரு என்ன?” ஜானு கேட்க,
“ம்ம். பொண்ணு ஒரு டாக்டர்! பேரு டாக்டர் ஜான்வி தேவி! இப்ப சொல்லு சீர் கொடுப்பியா மாட்டியா?”
ஜான்வி தேவி பேரைக் கேட்டதும், ஜானுவுக்கு அவரின் பேத்தி நினைவும் விஜியின் நினைவும் வந்து கண்கள் சட்டென்று குளமாகி, குரல் தடுமாறிய படி,
“ஓ! பொண்ணோட பேரு ஜான்வி தேவியா, நம்ம விஜியோட பொண்ணு பேரும் அது தான்! நான் அவளை சின்ன வயசுல பார்த்தது! இப்ப எப்படி இருக்காளோ, எங்க இருக்காளோ? இப்ப அவளுக்கும் கூட கல்யாண வயசு வந்திருக்கும்! கல்யாணம் கூட ஆனாலும் ஆகியிருக்கும்!” ஜானு வருத்தப் பட்டு சொல்லைக் கொண்டே போக,
“யம்மா, யம்மாடி, நிறுத்து கொஞ்சம்! இங்க கல்யாணம் நடக்க போறது யாருக்குன்னு நினைச்ச?” கேட்டார் கனகு.
“எல்லாம் பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேருமே நம்ம பேரன் பேத்திங்க தான்!
விஜி பொண்ணு ஜான்வி தாண்டி பரணி கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணே!” என்றார் ஜகது சந்தோசமாய்!
“ஏய்.. என்ன சொல்ற, நீ சொல்றது நிஜமா? பொய் ஏதும் சொல்லலையே?” ஜானு அதிர்ச்சியில் கத்தியே விட்டார்!
“இந்த விசயத்தில் போய் சொல்லி விளையாடுற வயசாடி நமக்கு?
உண்மையாலுமே உன் பேத்திக்கும் என் பேரனுக்கும் தான் கல்யாணமே! நீ உடனே கிளம்பி வா!”
“அவ எப்படி அங்க வந்தா? எப்படி இந்த கல்யாணம் ஏற்பாடானது? விஜி இப்ப எங்க இருக்கா? அவ மாப்பிள்ளை எங்க?” ஜானு பட படவென்று கேள்வியாய் அடுக்க,
“மெல்ல மெல்லடி! எல்லாம் நீ நேரிலே வந்து தெரிஞ்சுக்க! எல்லாத்தையும் போனிலேயே பேச முடியுமா?” ஜகது சந்தோசத்துடன் சினேகிதியை செல்லமாக திட்டினார்!
கனகு மனதில் மட்டும் ஏதோ யோசனை !
“சரிடி என் பேத்தி பக்கத்துல இருக்காளா, போனை அவ கிட்ட கொடு, இல்ல விஜி கிட்டயாச்சும் கொடு!” என்று பரபரத்தார் ஜானு!
“அவங்க இப்ப இங்க இல்ல! நீ உன் போன் நம்பரைக் கொடு.
நான் முதல்ல அவ போட்டாவை அனுப்புறேன்! பார்த்தா ஆச்சர்யப்படுவ, அப்படியே நீ சின்ன வயசுல இருந்த மாதிரியே இருப்பா!” என்றார் ஜகது!
“சரி, நான் சரவணன் கிட்ட போனைக் கொடுக்கிறேன், அவன் சொல்லுவான்.” போனை மகனிடம் கொடுத்தார் ஜானு.
சரவணன் போனை வாங்கியவர், அம்மாவின் தோழிகளுடன் நலம் விசாரித்து விட்டு, போன் நம்பர் சொன்னார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கனகு குறுக்கிட்டு,
“சரவணா, நீ கொஞ்சம் ஜானுவை விட்டு தள்ளி வந்து கொஞ்சம் பேசு, உன்கிட்ட தனியா கொஞ்சம் பேசணும்” என்றார்.
சரவணனும் அவர் சொன்னபடியே தனியே வந்து “என்ன பெரியம்மா, ஏன் தனியே வர சொன்னீங்க?” என்று கேட்க,
“சரவணா, உன் அம்மாவுக்கு உடம்பில் ஏதும் பிரச்சினை இல்லையே?: கேட்ட கனகுவிடம்,
சரவணன் கொஞ்சம் அதிர்ந்து, “ஏன் பெரியம்மா அப்படி கேக்குறீங்க? ஏன் என்ன விஷயம்!” என்று கேட்டார்.
“அது.. வந்து.. இப்ப அவளுக்கு இங்க காத்திருக்கிறது ரெண்டு விஷயம்!
ஒண்ணு சந்தோஷ விஷயம்! இன்னொண்ணு துக்க விஷயம்! அதான் கேக்குறேன்!”
“இது வரை அப்படி ஒண்ணும் பெரிசா இல்ல பெரியம்மா!”
“அப்படின்னா சரி! நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க, நாம் நேரிலே பேசிக்கலாம்!
அது வரை இந்த சந்தோஷ மன நிலையிலேயே அவள் இருக்கட்டும்!” என்றார் கனகு.
“நாங்க மதிய லஞ்சுக்கே அங்க வந்திடுவோம்!” என்று சொல்லி விட்டு போனை வைத்தார் ஜானு மன நிறைவுடன்!
போனில் பேசி முடித்த பிறகு தான் கனகுவுக்கு மீண்டும் அந்த கேள்வி வந்தது!
“அப்படி என்ன வீடியோ அது! யார் போட்டு விட்டா?
ஒரு வேளை இது பரத்தின் வேலையோ?
இல்லையே அவன் தான் சாப்பிடக் கூட நேரமில்லாமல் அண்ணன் கூட ஆபிஸ் வேலையா சுத்துறானே?
மணியா இருக்குமா? ச்சே அவனுக்கு அந்த அளவு தெரியாது!
வேற யாரா இருக்கும்” என்று நினைத்தவருக்கு சட்டென பொறி தட்டியது!
“டேய் விக்கி! இது உன் வேலை தானா?”
அப்போது சரியாக அவனும் உள்ளே வந்தான், தினகரனை வீட்டைச்சுற்றி வாக்கிங் அழைத்து போய் விட்டு!
“விக்கி, அப்படி எங்களோட எந்த வீடியோவை நெட்ல போட்டு விட்ட? உண்மையை சொல்லு” என்று கனகு அவனை செல்லமாக மிரட்டினார்!
“அய்யோ பாட்டி, நான் உங்க பழைய போட்டோவை வைத்து ஏ ஐ யில் வழக்கம் போல ஒரு பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் பாட்டு ரெடி பண்ணுனேன், சும்மா நாம சிரிச்சுப் பார்க்கிறதுக்கு!
ஆனா அத சோசியல் மீடியாவுல போட்டது நான் இல்ல! மணி! மணி தான் அவன் புதுசா வச்சுருக்கிற ஐ போனில் இருந்து போட்டு விட்டான்!”
“என்னது மணியா? வீடியோவா? அப்படி என்ன வீடியோ அது, எங்க போட்டு காட்டு!”
அவன் ப்ளே பண்ணி விட்டான் அவன் போனில் இருந்தபடியே.
“ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே!”
என்ற பழைய பாமா விஜயம் பாடலுக்கு தான், அதில் வரும் சவுகார் ஜானகிக்கு பதில் ஜானகியும், ஜெயந்திக்கு பதில் ஜகதுவும் அப்புறம் காஞ்சனாவிற்கு பதில் நம்ம கனகுவும்!
பார்த்தவுடன் குபீர் என்று சிரித்து விட்டார்கள் தினகரன் உட்பட எல்லோருமே!
ஒரு நாள் கனகு அவர் பிளாஸ்பேக் கதையை விக்கியிடம் சொல்லியிருந்தார்.
அதாவது ஜானு, ஜகது அப்புறம் கனகு மூவரும் பள்ளிக்கு கட் அடித்து விட்டு பாலச்சந்தரின் பாமா விஜயம் படம் பார்த்ததை சொல்லி, அதில் வருபவர்கள் போல அவர்கள் மூன்று பேரும் நடித்து காட்டி பன்(fun) பண்ணுவோம் என்று!
அதை தான் ஒரு நாள் விளையாட்டிற்காக ஏ ஐ துணையுடன் இப்படி ஒரு வீடியோவாக விக்கி உருவாக்கி, எதேச்சையாக அதை மணிக்குப் போட்டு காட்டினான்.
“அண்ணே சூப்பர்ண்ணே! எங்க எனக்கு கொஞ்சம் அனுப்பி விடு” என்று சொல்லி வாங்கியவன் அதை சோசியல் மீடியாவில் போட்டு விட்டான்!
அது தான் வைரல் ஆகி பெங்களூரில் இருக்கும் ஜானுவின் பேரன் கண்ணில் பட்டு, அதைப் பார்த்து விட்டு அவன் பாட்டியின் சின்ன வயது போட்டோ மாதிரி இருக்கு என்று ஜானுவிடம் போட்டுக் காட்டினான்.
அதற்கப்புறம் ஜானு விசாரிக்க சொல்லி, அவன் எப்படி எப்படியோ முயற்சி செய்து ஆளைப் பிடித்து விசாரித்து போன் நம்பர் வாங்கி விட்டான்!
அதற்கு பிறகு தான் இதெல்லாம் நடந்து விட்டது!
மணி வழக்கம் போல ஏதோ ஒன்று , ஒரு இன்டன்சனும் இல்லாமல் தான் பண்ணுகிறான்!
ஆனால் அவனை அறியாமலே அது எல்லோருக்கும் நல்லதாகவே முடிந்து விடுகிறது!
நாரதர் கலகம் நன்மையில் முடிவது போல!
அன்று விக்கி பியான்சியின் பர்த்டே பாட்டியில் ஆரம்பித்து, அப்புறம் பரத் ஆக்சிடன்ட் பற்றி மொட்டை மொட்டையாக ஜான்வியிடம் பேசியதும், இதோ இப்போது இந்த வீடியோவை போட்டது வரை!
“இந்த மணிப்பயல் இருக்கானே! இவன்.. “என்று கனகு பொய்யாய் சலித்துக் கொண்டார் சிரிப்புடன்!
இதில் கனகுவின் பங்கு என்னவென்றால், ஜனனியைத் துரத்தி விடும் போது, தனியே போய் மணியின் காதில் கனகு சொல்லி விட்டு வந்தார்!
“டேய். அவ கையில் இருக்கிற ஐ போன் பரணி உனக்காக வாங்கியது! முடிஞ்சா அதையும் வாங்கிக் கிட்டு அனுப்பி வச்சுட்டு வா” என்று சொல்லி அனுப்பி விட, அவனும் அப்படியே செய்தான்!
பரத்திற்கு கூட அப்போது ஒரே சந்தோசம்! “டேய் இருடா” என்று சொல்லி அந்த போனில் இருந்த ஹேக்கிங் சிப்பை கழற்றி விட்டு தந்திருந்தான்!
அந்த போனில் இருந்து தான் அய்யா இந்த வேலைப் பார்த்து இருக்கிறார்!
“கழுதையால் நல்லது தான் நடந்து இருக்கு! கிறுக்குப் பய” என்று சொல்லி அவன் காதை திருகி கொஞ்சினார் கனகு!
இவர்கள் எல்லோரும் இங்கே கூடி இருக்க, பரணியும் ஜான்வியும் ஜான்வியின் வீட்டில் தனியே!
“ஏங்க டாக்டர் அம்மா, இன்னும் உங்களுக்கு கோபம் தீரலையா?” என்றான் பரணி அவள் அருகில் வந்து அணைக்க முயற்சி செய்து கொண்டே!
அவனிடம் இருந்து விலகிய ஜான்வி, “ம்ம். காட்டான். காட்டான் கருப்பு காட்டான் போடா, கோபம் வந்தா அப்படியே அறைஞ்சுடுவியோ போடா , இப்ப கிட்ட வந்தே அவ்வளவு தான்” என்றாள்!
அவள் இப்படியெல்லாம் பேசி அறியாத பரணியும் சிரித்துக் கொண்டே
“ஏய் வெள்ளச்சி, அவ்வளவு கோபம் இருந்தா வா, என்னை நீ அறைஞ்சு உன் கோபத்தை தீர்த்துக்கோ!”
“ஏன் அறைய மாட்டேன்னு தைரியமா? அதெல்லாம் அறைவேன்”, என்று கையை ஓங்கிக்கொண்டு அவள் கிட்ட வர, அவளைத் தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டவன், “நான் அடிக்க மட்டும் செய்யல! கடிக்கவும் தான் செஞ்சேன்! திருப்பிக் கொடுக்கிறதா இருந்தா ரெண்டையும் திருப்பிக் கொடு!“
“அடப்பாவி!” என்றாள் ஜான்வி!
“அடப்பாவி எல்லாம் இல்ல! நான் ஒரு அப்பாவி!
இல்லன்னா இப்படி ஒருத்தி கிட்ட இப்படி சரண்டர் ஆகி அடி வாங்க கன்னத்தைக் காட்டிக் கொண்டு நிப்பேனா?” என்றான் பரணி குறும்புடன்!
error: Content is protected !!