Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு – 7

பகுதி 7

எல்லாம்‌ ஓரளவுக்கு ஒழுங்குபடுத்தி ஆட்கள் செல்ல நேரம் பத்தை தொட்டது.



Advertisement

அதன் பின் ஃபுட் ஆர்டர் செய்த ரியான் முகுந்துக்காக பிரட் ஆம்லெட் செய்து கொடுக்க சமத்தாக சாப்பிட்ட குழந்தை அவனின் பேவரேட், ‘முபாசா, தி லைன்ஸ் கிங்..’ படத்தில் மூழ்கி போனான்.

பெட்ரூம் சுவரில் மாட்டியிருந்த டீவியில் படம் ஓட சிரிப்போடு அதை பார்த்து கொண்டிருந்த குழந்தையை அவ்வப்போது கண்காணித்த படியே, தங்களின் பெட்டியில் இருந்தவற்றை அடுக்க துவங்கினான் ரியான்.

Advertisement

Advertisement

அவனுக்கு உதவ முயன்ற சந்தீப்பை மறுத்து அவனுக்கு ஓய்வு கொடுத்தவன் தனக்கு ஏற்றவாறு அனைத்தையும் வரிசைபடுத்தி வைத்தான்.

எதிலும் அத்தனை‌ ஒழுங்கு.. ஆரம்ப கல்வி முதலே ஹாஸ்டலில், அதுவும்.. மிகவும் ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றும் நிறுவனத்தில் படித்ததாலோ என்னவோ.. அவனுக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும்.

Advertisement

அவனுக்கு தேவையானதை.. தானே செய்து கொள்வது.. அவனின் இயல்பிலேயே ஊறிய ஒன்றான பின்.. அதை எளிதில் மாற்ற முடியுமா..?

திருமணத்திற்கு பின், பிருந்தாவிடம் கூட அவன்.. அவனின் தேவையை செய்ய சொன்னது இல்லை..(?!). அவ்வாறு இருக்க, சந்தீப் செய்வதை ஏற்பானா..?

இடையே வந்திருந்த உணவை உண்டு முடித்து சந்தீப் விடை பெற, வீட்டின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டு வந்தவன், முகுந்தை பார்க்க அவனோ மிகவும் உற்சாகமாக படத்தில் மூழ்கியிருந்தான்.

அவன்.. இதுவரை இருந்த ஊரில் இது காலை வேளை ஆயிற்றே..! 

எனவே அவனுக்கு சிறிதும் உறக்கம் என்பது வராமல் இருக்க, சின்ன சிரிப்போடு மகனை தொட்டு செல்லம் கொஞ்சியவன்,

அவனின் கண்பார்வை படும்படியாக வெளியே அமர்ந்து அடுத்த நாள் சமையலுக்கு தேவையானதை தயார்படுத்தி வைத்தான். 

அடுத்து அங்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஊற வைத்திருந்த அரிசி உளுந்தை.. இட்லி ஊற்றுவதற்கு ஏற்ற பதத்தில் ஆட்டி எடுத்து, தேவையான அளவு மட்டும் உப்பு போட்டு கலந்து வெளியே வைத்தவன், மீத மாவை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்து மூடினான்.

காய்கறி முதல் பால் மற்றும் மளிகை பொருட்கள்‌ எல்லாமே இருக்க, அதையும் சரி பார்த்து எடுத்து வைத்து பார்க்க நேரம் நள்ளிரவை தொட்டிருந்தது.

முகுந்த் அப்போது தான் மெல்ல தூக்கத்துக்கு செல்ல துவங்க, பாலை அவன் குடிக்கும் பக்குவத்திற்கு ஆற்றி எடுத்து சென்றவன், குழந்தையை தூக்கி மடியில் வைத்து சிப்பரை கொடுக்க, பாதி உள்ளே போகும் போதே தூக்கத்தின்‌ பிடியில் மூழ்கியிருந்தான் பிள்ளை.

எப்போதும் நடப்பது தான் என்பதால் மெல்ல உசுப்பி மிச்சமிருப்பதை ஒருவழியாக குடிக்க வைத்தவன், தூக்கி சென்று சிறுநீர் கழிக்க வைத்து தூக்கி வந்து, தன் தோளில் போட்டு நடக்க, குழந்தை இன்னும் ஆழ்ந்த தூக்கத்தின் பிடிக்குள் சென்றிருந்தான்.

அவனை படுக்கையில் விட்டவன், கபோர்டை திறந்து அதிலிருந்த திரவத்தை டம்ளரில் சிறிது நிறைத்தவன், ஹாலில் மாட்டியிருந்த பிருந்தா மற்றும் அவனின் தாய், தந்தையின் படங்களின் அருகே வந்தவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஏம் ப்பா.. ஏம்மா.. ஏன்.. என்னை மட்டும் எப்பவும் தனியாவே தவிக்க விடறீங்க..? 

பிறந்த கொஞ்ச நாள்ல படிக்கன்னு தனியானேன்.. 

படிப்பு முடுஞ்சு வேலைன்னு‌ வெளி நாடு.. 

சரி.. எனக்குன்னு வர்ற வாழ்க்கை துணையாவது எப்பவும் கூட இருப்பான்னு இருந்தேன்.. ஆனா, அவ கூட எனக்கு நிரந்தரமில்ல ன்னு என்னை விட்டு போயிட்டாளே ப்பா.. 

இதுக்கு நா தனியாவே இருந்திருக்கலாம்.. 

கண் இல்லாதவனுக்கு.. கொஞ்ச நேரம் கண்பார்வையை கொடுக்கற மாதிரி.. எல்லாரோடவும் கொஞ்ச கொஞ்ச காலம் மட்டும் வாழ்ந்துட்டு..  இப்படி தனியா கஷ்டப்பட முடியலயே.. நா என்ன செய்வேன்..?

அப்படி என்ன பாவம் பண்ணினேன் நான்..?

பெத்தவங்க கூடவும் வாழல.. கட்டினவ கூடவும் வாழல.. இப்போ என் குழந்தை.. அவனையாச்சும் எனக்காக விட்டுடுங்க அப்பா.. 

அவனாவது எனக்கு கடைசி வரை இருக்கட்டும்..” என்றவனின் கண்ணீரை துடைக்க தான் அங்கு யாரும் இல்லையே..!

அறியா பிள்ளையோ தூக்கத்தின் பிடியில்.. எல்லாம் தெரிந்த வளர்ந்த குழந்தை துக்கத்தில் தேடும் ஆறுதல் தர யார் இப்போது அங்கே..?

அந்த டம்ளரில் இருந்ததை குடித்தவன் அதை கழுவி வைத்துவிட்டு மீண்டும்‌ மூவரின் மீதும் தன் பார்வையை பதித்துவிட்டு படுக்கைக்கு வந்தவன் தன் குழந்தையின் அருகே படுக்க,

‘நான்‌ இருக்கிறேன்..’ என்பதாய் தந்தையை தனது பிஞ்சு கரத்தால் அணைத்திருந்தான்‌ அந்த பாலகன்.

அந்த அணைப்பு கொடுத்த பலத்தில், தனது வலியெல்லாம் மாயமாய் மறைந்து போக.. அவனை அன்பாய் பார்த்து விட்டு விழி மூடியவன் ஆழ்ந்த உறக்கத்தை தழுவினான்.

*****

“சித்தா… கட சொல்லு..” என்றாள் சம்யுக்தாவின் அருகே அவளின் வயிற்றில் காலை போட்டு ஒய்யாரமாக படுத்திருந்த வெண்பா.

“முடியாது போடீ.. உங்க அம்மா வர்ற வரை என்னை செல்லம் கொஞ்சுவ.. அவ வந்தா.. என்னை கழட்டி விட்டுவ..” என்று பிகு பண்ண,

“டில்ல.. சித்தா.. பியாமிஸ்ஸா நா உங்கூட படுக்கேன்.. நீ கட சொல்லு..” என்றாள் கொஞ்சும் குரலில்.

சித்திக்கும், மகளுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையை கேட்டபடியே.. சிறு புன்னகையுடன் ஹாலில் அமர்ந்து ஆரி வேலைப்பாட்டை செய்து கொண்டிருந்தாள் அமிழ்தினியாள்.

இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால்.. குழந்தை நடுவில் எழுந்து அழுதால், அது தனத்தின் தூக்கத்தை கெடுக்கும்.. என தனம் ஒரு அறையில் தங்கிட,

அக்கா, தங்கை அவர்களின் வாண்டு குட்டியுடன் மற்றொரு அறையில் தங்கிக் கொண்டனர்.

வெளிச்சம் அதிகமிருந்தால், இரவு முழுவதும் தூங்காமல் பேசுவாள் குழந்தை.. என்பதால், சம்யுக்தா படிக்க வேண்டி இருந்தாலும், இனியாளுக்கு கை வேலைப்பாடு இருந்தாலும், அவை அனைத்தையும் ஹாலில் வைத்து செய்வது அவர்களின் வழக்கம்.

இன்று இனியாளுக்கு வேலை இருக்க இனியாள் உணவு ஊட்டி, பால் குடிக்க வைத்ததும் தூங்க வந்த குட்டியோ.. தாய் அருகில் இல்லாததால் தனது சிற்றன்னையை பிடித்துக்கொண்டாள்.

“நேத்து அம்மா கூட நான் மட்டும் தான் படுப்பேன்னு.. மெத்தையில இருந்து என்ன தள்ளிவிட்ட தானே..?” என்று சம்யுக்தா கோபமாக இருப்பது போல பிகு செய்ய,

அவசரமாக எழுந்து அவளின் தாடையை பற்றிய குழந்தை, “சாதி சித்தா.. இனி நோ தள்ளி.. நீயூ வா எல்லா படுக்காம்..” என்றவள், நன்றாக தள்ளி படுத்து இடம் காட்டிட,

பத்துக்கு பத்து அறையில் சிறிய கட்டில் போட்டால் படுப்பதற்கு மூவருக்கு சிரமம் என்பதாலும், பொருளாதார பற்றாக்குறையாலும்.. மூவர் படுக்க தோதான மெத்தை மட்டும் அந்த அறையில் தரையில் போடப்பட்டிருந்தது. 

அதில் படுக்க விடாமல் கீழே தள்ளி விட்டதை பெரிதாக பேசி சண்டையும், சமாதானமும் செய்து கொள்ளும் இருவருக்கும் வித்தியாசமில்லை.. என்ற எண்ணம் தான் இனியாளுக்கு.

“போடீ சிலுப்பி.. எனக்கு தேவையில்ல.. நீயும் உன்னோட அம்மாவுமே தூங்குங்க..” என்று மீண்டும் முறுக்கிக் கொள்ள,

“சித்தா.. குட் கேளு தானே.. தொன்னா கேப்பா தானே.. படுத்தோ..” என்று அவளை கட்டிக்கொண்டு முதுகு வருடி, அவளுக்கு இனியாளும், சம்யுக்தாவும் எப்படி சமாதானம் சொல்வார்களோ.. அதை அப்படியே சொல்ல, 

சம்யுக்தாவிற்கு தன் சிலுப்பியிடம் அதற்கு மேலும் முகம் திருப்ப பிடிக்காமல், அவளை அள்ளிக்கொண்டவள், 

“அச்சோ.. எங்க பட்டு தங்கம் என்னம்மா சமாதானம் பண்ணறாங்க.. அழகுடீ செல்லம் நீங்க..” என்று கன்னத்தில் முத்தமிட,

தனது சித்தி தன்னோடு சமாதானம் ஆனதில் குட்டி பெண்ணிற்கும் அவ்வளவு சந்தோஷம். 

அதோடு.. ‘தானே சமாதானம் செய்து விட்டேன்..’ என்ற பெருமை வேறு அவளுக்கு அப்படி ஒரு துள்ளலை கொடுத்தது.

அதே மகிழ்வோடு இருவரும் அந்த மெத்தையில் உருண்டு புரண்டு விளையாட்டை தொடர்ந்து கொண்டிருக்க, இனியாள் தனது வேலையை முடித்து விட்டு படுக்கையறைக்கே வந்து விட்டிருந்தாள்.

“உங்களுக்கு தூங்க டிஸ்டர்ப் ஆகுமுன்னு.. நா, வெளியே போய் வேல பார்த்தா ரெண்டு பேரும் தூங்காம இன்னும் சேட்டையா பண்ணறீங்க..? 

இருங்க ஆளுக்கு ரெண்டு பெட்டக்ஸ்ல வைக்கறேன்..” என்று பொய்யாக மிரட்ட,

இருவரும் அவளின் அந்த பொய் மிரட்டலுக்கு அஞ்சியது போல.. அவசரமாய் ஒரே பெட்ஷிட்டை தலைமுதல் கால் வரை மூடிக்கொண்டு, 

“நாங்க அப்போவே தூங்கியாச்சு.. இல்லடா சிலுப்பி..?” என்றிட,

“ஆமா ம்மா.. நாங்க தூங்கிச்சு..” என்றாள் குட்டியும் பின்பாட்டாக.

“அப்போ.. யார் பேசறது..?” என்று மீண்டும் இனியாள் கேட்க,

“உஸ்.. உஸ்..” என்று வாய் மீது விரல் வைத்து பெட்ஷிட்டுக்குள் முகத்தை.. முகத்தை நெருக்கி கண்ணை மூடிக்கொண்டு, மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டனர் சித்தியும், மகளும்.

அடுத்த சில நிமிடத்தில் தூங்குவதாய் நடிக்க ஆரம்பித்த குழந்தை.. நிஜமான உறக்கத்தில் ஆழ்ந்து விட பெட்ஷிட்டை விலக்கி அவளை சீராக படுக்க வைத்தாள் சம்யுக்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!