Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ- 7.1

“ஏன்டா, டைம் என்னாச்சு பாரு..? அவ தான் விளையாட விட்டா தூங்காம எவ்வளவு நேரம் ஆனாலும் முழிச்சிருப்பான்னு தெரியாதா..? 

கொஞ்ச நாள்.. காலேஜ் முடுஞ்சதுன்னு நீ ப்ரீயா இருந்தே. அதனால ஓகே.. இப்போ நீ வேலைக்கு போகனுமில்லையா..? 



Advertisement

அவகூட சேர்ந்து இன்னும் தூங்காம இருந்தா எப்படி..?” என்று அக்கறையோடு சம்யுக்தாவை இனியாள் அதட்ட,

Advertisement

“இன்னைக்கு நடந்ததை எல்லாம் உன்கிட்ட இன்னும் சொல்லலையே.. அப்போ, எனக்கு எப்படி தூக்கம் வரும்..?” என்று சொன்னபடியே, அக்காவை கட்டிக்கொண்ட சம்யுக்தாவை கண்டு புன்னகையே அரும்பியது இனியாளுக்கு.

Advertisement

“உனக்கும், வெண்பாவுக்கும் சைஸ் மட்டும் தான் வித்தியாசம். ரெண்டு பேரும் மத்தபடி ஒரே மாதிரி இருக்கீங்க..” என்றாள் தன்னை அணைத்திருந்தவளின் தலை கோதி.

Advertisement

“ஊகூம்.. நீ இப்படி தலைய கோதி விட்டா நா தூங்கிடுவேன்.. நா எல்லாம் சொன்ன பின்னாடி.. நீ என்ன தூங்க வை..” என்று அக்காவை சுவரில் சாய்ந்து அமர வைத்தவள் குறுக்காக அவளின் மடியில் படுத்து கொண்டாள்.

கல்லூரி செல்லும் காலம் முதல் எதாவது முக்கியமான விசயமெனில் இப்படி செய்வது பழக்கம் என்பதால்.. இனியாளும் அவளை வாகாக படுக்க வைத்துக்கொண்டாள்.

வெண்பா முழித்திருக்கும் போது அவளின்‌ மடிக்கு போட்டி போட்டு தனத்திடம் வாங்கி கட்டியது எல்லாம் தனிக்கதை..

வாகாய் படுத்து கொண்ட சம்யுக்தா, “காலைல கோவில்ல புளியோதரை கொடுத்தாங்க.. அதை திண்ணுட்டு ஐஸ்கிரீம் சாப்பிட போனா, உன்னோட பொண்ணு எனக்கு வாங்குனதையும் சேர்த்து ஆட்டைய போட்டுட்டா..”

“ம்ம்.. அப்புறம்..” 

“இதனால ஆட்டோல போக போக தண்ணி தாகமுன்னு கொண்டு போன பாட்டில் தண்ணிய புல்லா குடுச்சிட்டேனா..” 

“சரி..”

“அங்கே போனா.. ஏஸிய அப்படி போட்டு வச்சிருக்காங்க.. சும்மா சொல்லக்கூடாது அக்கா.. எங்க ஆஃபீஸ் சும்மா அப்படி கெத்தா இருக்கு தெரியுமா..?”

“ஓ.. அப்படியா..?” 

“அட ஆமாங்கறேன்.. சும்மா பளிச்சுன்னு.. ரிச் லுக்ல.. என்னா இன்டீரியர்.. நிச்சயமா எங்க முதலாளி நல்ல ரசனைக்காரன் தான் க்கா..”

“அவர பத்தி நமக்கு எதுக்கு..? நீ உன்‌ மேட்டரை சொல்லு.. அப்புறம் என்னாச்சு..?”

“அத ஏன் கேட்கறே.. அங்கே போன கொஞ்ச நேரத்துல.. வழியில குடுச்ச தண்ணி வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சு. வயித்த முட்ட.. பாத்ரூம் எங்கடா ன்னு ஓடனும் போல ஆகிடுச்சு..” என்று சொன்னதும்,

“ஹா.. ஹா..” என சிரித்தவளை கண்டு போலியாய் முறைத்த சம்யுக்தா,

“என்னோட அவஸ்த்தை உனக்கு சிரிப்பா இருக்கா..?” என்றிட,

“இல்லடாம்மா.. நம்ம வெண்பா குட்டி சுச்சா வருதுன்னா வந்து நெளிவாளே.. அந்த மாதிரி நீ பண்ணியிருந்தா எப்படி இருக்குமின்னு நினைச்சு பார்த்தேன்.. சிரிப்பை அடக்க முடியல..” என்று சிரிப்போடே இனியாள் சொல்ல,

அதை கற்பனை செய்து பார்த்த சம்யுக்தாவுக்கும் இப்போது சிரிப்பு தான் வந்தது.

சிரித்து முடித்த சம்யுக்தா, “அக்கா.. டைவர்ட் பண்ணாம கதைய கேளு.. இங்கே தான் ஒரு டேர்னிங் பாயிண்ட் இருக்கு..” என்று பில்டப் கொடுக்க,

“அப்படி‌ என்ன‌ டேர்னிங் பாயிண்ட்..?” என்று ஆர்வமாக கேட்பதாக நடிக்க,

முகத்தை சோகமாக மாற்றி கொண்ட சம்யுக்தா, “என்னோட நேரம் நாங்க இருந்த ஃப்ளோர்ல ப்ளம்மிங் வேலை நடக்குதுன்னு.. மேல போக சொல்ல.. நானும் லெஃப்ட்.. ரைட்.. எந்த பக்கம் போகனுமின்னு கேட்காம போய்‌.. ஒரு வெள்ளக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டேன்..” என்று சொன்னதும், 

அதுவரை அவளின் கதை போன்ற பேச்சை புன்னகையோடு கேட்டு கொண்டு, “ம்ம்..” கொட்டி கொண்டிருந்த இனியாள்,

“என்ன மாட்டிக்கிட்டையா..? என்னாச்சு..? அவன் உன்னை எதாவது செஞ்சானா..? இல்ல எதாவது தப்பா..?” என படபடக்க,

“அய்யோ அக்கா.. ரிலாக்ஸ்.. ஏன் இப்படி பதட்டமாகறே..? அப்படி எதாவது ஆகியிருந்தா.. வந்ததும் சொல்ல மாட்டேனா..? 

இவ்வளவு கூலா.. உன் மடியில படுத்து கதையா பேசிட்டு இருப்பேன்..?” என்று சொன்ன பிறகே இனியாளின் படபடப்பு கொஞ்சம் குறைந்தது.

ஏனென்றால் ஏற்கனவே இந்த சமுதாயத்தின் சில மோசமான கருப்பு பக்கங்களை கடந்து வந்தவளாகிற்றை..! 

அதனால், ‘தனது தங்கைக்கு என்னவானதோ..?’ என்ற பதட்டம் எழுவது இயல்பானது தானே..?

இனியாளுக்கு அந்த அறையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து கொடுத்து.. அவள் இயல்புக்கு வந்ததை உணர்ந்த பின் அவளை இன்னும் இயல்பாக்கும் பொருட்டு,

“யூ நோ அக்கா.. அந்த வெள்ளக்காரனுக்கு கண்ணு கூட வெள்ளக்கலர்ல.. லைக் பூனை கண்ணுன்னு சொல்வோமே.. அப்படி இருந்துச்சு தெரியுமா..?

ஆனா.. முடி மட்டும் நம்ம ஊரு ஆளு மாதிரி கருப்பா.. அது எப்படி அப்படின்னு தோணுச்சு.. 

அப்புறம் தான் கெஸ் பண்ணேன்.. அந்த பக்கி டை அடிச்சிருக்கான். ஏன்னா.. அங்கே அங்கே டை போய்.. வெள்ள மூடி நட்டுக்கிட்டு நின்னுச்சே..” என்று சொல்லி சிரிக்க,

“இதென்ன பேச்சு சம்யூம்மா.. இப்படி அடுத்தவங்க உருவத்தை வச்சு கேலி பேச கூடாது.. அது தப்பு..” என்று அறிவுரை சொல்ல,

“அட நீ வேற அக்கா, நா நேர்ல அவன் முன்னாடி தான் இதை சொல்றேன்.. பேந்த பேந்த விழிக்கிறான். வெள்ளக்காரனாச்சே.. சுத்தமா தமிழ் தெரியல..” என்றாள் அலட்டாமல்.

“தப்பும்மா.. அவங்களுக்கு புரியுமோ.. இல்லையோ.. அவங்கள அப்படி பேச கூடாது. இனி யாரையும் அப்படி பேசாத..” என்று பெரியவளாய் எப்போதும் போல சம்யுக்தாவின் தவறை சுட்டி காட்டி சொல்ல,

“ஓகே அக்கா.. இனி இப்படி பேச மாட்டேன்..” என்று சமத்தாய் தலையாட்டியவளின் தலையில் மெல்லமாய் கொட்டியவள், 

“வெண்பா மாதிரி ட்ரை பண்ணதே.. ரெண்டு பேரும் கேடீ’ஸ்ன்னு எனக்கு நல்லா தெரியும்..” என்றாள் ‘உன்னை நானறிவேன்..’ என்ற பதத்தில்.

“உஸ்… நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே..” என்றாள் வடிவேல் பாணியில் சம்யுக்தாவும்.

அதில் இருவருக்கும் சிரிப்பு வந்திட, சிரிப்போடே,

“உன் கதை முடுஞ்சதுன்னா தூங்கலாமா..?” என்றதும்,

“என்ன க்கா.. இன்னும் மிச்சத்த சொல்லலையே..?” என்றாள் அவசரமாக,

“சரி.. சீக்கிரம் முடிம்மா.. தூங்கனுமில்ல..” என்றாள் அசதி கொடுத்த அலுப்போடு,

“அந்த வெள்ளக்கார ஆளு.. அங்கே ஒரு குட்டி பையனை அழ வச்சிட்டு இருந்தான். 

எனக்கு வந்துச்சு பாரு கோபம். போய் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டேன்..” என‌ மீண்டும் தொடர்ந்தவளை,

“ஏய்.. அது அந்த ஆளோட குழந்தையோ என்னமோ..? நீ ஏ.. ம்மா தேவையில்லாத வேலை பார்த்துட்டு இருக்கே..?” என இடைமறிக்க, 

“அச்சோ.. இல்லக்கா.. அந்த பாய் பேபி அசல் நம்ம ஆளு.. அவனுக்கு எப்படி பாரீன் அப்பா..? 

அந்த ஆளு அந்த பையனோட பேபி சிட்டர்..” என்றதும்,

“ஓ.. அந்த ஆள் சொன்னானா அதை..?” என்றவளுக்கு,

“அவனெங்கே சொல்ல.. நானே கண்டுபிடிச்சுட்டேன்.  

ஆனா ஒண்ணுக்கா.. நா திட்டினதும் அவனோட தப்பு புரிஞ்சுட்டு.. சாரி கேட்டு.. அப்புறம் நா தப்பான சைட் வந்துட்டேன்னு சொல்லி, அந்த குட்டி பையன் தங்க அங்கே ரூம் இருந்துச்சா.. அந்த ரூமை காட்டி அதுல இருக்கற வாஸ்ரூமை எனக்கு யூஸ் பண்ண கொடுத்தான்..” என்று விளக்க,

“நல்ல ஆள் தான் போல.. நீ ஆரம்பத்துலையே பொறுமையா சொல்லியிருக்கலாம். அவசரப்பட்டு திட்டியிருக்கே..”

“ஆமாக்கா.. அந்த குழந்தை அழுததும்.. எனக்கு நம்ம வெண்பா குட்டி நியாபகம் வந்திடுச்சா.. அதான் திட்டிட்டேன்.. 

அந்த குட்டி பையன் கூட நம்ம பாப்பு மாதிரி ரொம்ப அழகு.. ஆனா‌, லீனா இருக்கான். 

எனக்கென்னாமோ.. அந்த பேபி சிட்டர் சரியா அந்த குழந்தைக்கு ஃபுட்டே கொடுக்கறது இல்லை ன்னு நினைக்கிறேன்..” என யோசனையோடு சம்யுக்தா நிறுத்த,

“அது.. அவனை வேலைக்கு வச்சவங்க பாடு.. நமக்கு என்னடா..?” என்று அக்கறையின்றி சொன்ன இனியாளின் மடியிலிருந்து அவசரமாக எழுந்த சம்யுக்தா,

“அவன் பாவம் க்கா.. என்கிட்ட தூக்குன்னு வந்தான். நம்ம சிலுப்பு வயசு தான் இருக்கும். 

ஆனா அவனுக்கு ஸ்ட்ரென்தே இல்லக்கா.. பாவமா இருந்துச்சு…” என்றாள் அந்த குழந்தை மீது பரிதாபம் மேலிட.

“அதுக்கு நீ என்ன பண்ண முடியும்..? டெய்லி நீயே போய் சாப்பாடா ஊட்ட முடியும்…?” என்று எதார்த்தமாக இனியாள் சொல்ல,

ஆர்வமாக சம்யுக்தா, “அப்படி பண்ணா என்ன..?” என்றிட,

அவள் சொன்னதன் பொருள் புரியாமல், “எப்படி..?” என கேட்டாள் இனியாள். 

“அதான்.. நீ சொன்னையே.. டெய்லி ஃபுட் கொடுக்கறது..” என்று அசால்ட்டாக சொன்னவளை கண்டு கடுப்பானவளோ,

“அறிவிருக்கா உனக்கு..? நீ ஐடில வேலை பாக்க போறையா..? இல்ல ஆயம்மா வேல பார்க்க போறையா..?

அங்கே உன்னோட வேலைய பார்க்கவே உனக்கு நேரம் பத்தாது.. இதுல நீ அந்த குழந்தைய பார்க்க போறையா..? நடக்கறத பேசு..” என்று திட்ட,

“நீ சொல்றதும் வாஸ்தவம் தான். இன்னைக்கு வேலையே பார்க்கல. ஆனாலும் பெண்டு கழண்டு போச்சு.. அவங்க கொடுத்த ஃபார்ம்ல சைன் பண்ணியே. 

ஆனா அக்கா.. அவன பார்த்தா பாவமா இருக்கே..! ஒண்ணு பண்ணறேன்.. நாளைக்கு நா போனதும்.. அந்த குட்டியோட பேரண்ட்ஸ் யாருன்னு பார்த்து.. அவங்ககிட்ட பேபி சிட்டர் பார்த்துக்கறது சரியில்ல போல.. நீங்க கொஞ்சம் நல்லா பாருங்கன்னு சொல்லிடறேன்..” என்று சொல்ல,

இதற்கும் மறுப்பு சொல்லி.. மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், “அது நாளைக்கு நீ ஆஃபீஸ் போய் முடிவு பண்ணிக்கோ.. டைமாச்சு பாரு தூங்கு..” என்றுவிட்டு,

பெற்ற பிள்ளையும், பெறாத பிள்ளையும் இரு பக்கமும் தூங்க நடுவில் படுத்தாள் நிம்மதியாக.

நாளை முகுந்துக்காக பேச போகும் சம்யுக்தா.. எதிர்கொள்ள போவது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!