Skip to content
Post Views: 11,290
அத்தியாயம் 18
‘இப்போதா இவன் வர வேண்டும்?’ என தான் ப்ரணித்தா முதலில் பதற காரணமே!
Advertisement
விஜயலக்ஷ்மி கூறிய செய்தி அப்படி இருக்க, இப்பொழுதே அவளிடம் பேசி விட வேண்டும் என்று தான் தோன்றியது ப்ரணித்தாவிற்கு.
தான் நேராய் அர்ஜுனிடம் தன் மனதை சொல்வதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்க போவதில்லை. இதுவே பெரியவர்கள் பார்த்து பேசி என்றால் கூட அர்ஜுன் அவர்களுக்காக தன்னை ஏற்றுக் கொள்ள கூடும் என எண்ணியபடி நிற்க,
Advertisement
Advertisement
“ப்ரணி போலாமா?” என்றான் அர்ஜுன்.
“மாமா! விஜி என்னை பார்க்க வந்திருக்கா… இன்னொரு நாள் போலாமா?” என்றாள் ப்ரணித்தா.
Advertisement
“ஓஹ்! சரி நீ பேசிட்டு வா நான் வெயிட் பண்றேன்!” என்றவனை என்ன சொல்வது என தெரியாமல் ப்ரணித்தா விழிக்க, இவன் என்ன செய்கிறான் என புரியாமல் நின்றாள் விஜயலக்ஷ்மி.
இவ்வளவு நேரமும் பேசியதில் பாதி அவன் ப்ளூடூத் வழி கூறிய கேள்விகள் தான். இதென்ன இப்படி கேட்க சொல்கிறான் என நினைத்தவள் தான் நேராய் தன் அண்ணனும் அன்னையும் இவர்கள் திருமணம் பற்றி கூறியதை ப்ரணித்தாவிடம் கூறி அவள் பதிலைக் கேட்க, இந்த பக்கம் தலையில் அடித்துக் கொண்டான் அர்ஜுன்.
‘அவங்க விதி அவ்வளவு தான்னு விடுவியா!’ தன் அன்னையை ப்ரணித்தா கூறிய விதத்தில் அர்ஜுனுக்கு அத்தனை அதிர்ச்சி! எத்தனை சாதாரணமாய் இந்த வார்த்தைகள் வருகிறது அவளிடம் அதட்டலோடு என்று.
இத்தகைய ப்ரணித்தாவின் குரலும் அதில் தெரிந்த அந்த அதட்டல் மிரட்டலும் என ப்ரணித்தாவின் இந்த முகத்தில் அர்ஜுன் அதிர்ந்தாலும் அவளிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்க, அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தவன்,
‘என்னால உனக்கு என்ன பிரச்சனை?’ என விஜயலக்ஷ்மியை அவன் தான் கேட்க கூறியதே! அதில் ப்ரணித்தா கூறிய பதில் இன்னுமே அதிர்ச்சியாக்க, அதற்குள் விஜயலக்ஷ்மி ‘நான் உனக்காக அர்ஜுனிடம் பேசுகிறேன்!’ என ப்ரணித்தாவிடம் கூறியதில் இன்னுமே சுருசுருவென வந்தது அர்ஜுனிற்கு.
‘இன்னுமா இவளுக்கு புரியவில்லை?’ என்று தான் விஜயலக்ஷ்மியை நினைத்தான் அர்ஜுன்.
அடுத்தடுத்து விஜயலக்ஷ்மி அவர்கள் வீட்டில் பேசியதை எல்லாம் அவளிடம் கூற அதற்கு ப்ரணித்தா நம்ப முடியாமல் காட்டிய சந்தோசம் கூடவே அவள் உளறல் எல்லாம் அர்ஜுனிற்கு மீதி கதைகளை கூறி இருந்தது.
‘வேற ஒரு பொண்ணை லவ் பண்ணினாங்க!’ என்ற ப்ரணித்தா சொல்லில் தான் சுதாரித்தான் அர்ஜுன்.
அந்த பெண் விஜயலக்ஷ்மி தான் என்று ப்ரணித்தா கூற எல்லாம் வாய்ப்பே இல்லை என்றாலும் தன்னை எத்தனைக்கு பேசுகிறாள் என நினைக்கையில் இது துரோகத்தின் உச்சம் அல்லவா என்று தான் தோன்றியது அர்ஜுன் எண்ணத்தில்.
அடுத்து தான் வெளியில் இவ்வளவு நேரமும் காரில் அமர்ந்து அவர்களை பேசுவதைக் கேட்டவன் விடுதிக்கு வந்து ப்ரணித்தா பெயரைக் கேட்டு அவள் வர காத்திருந்தான்.
“வெளில போனும்! நீ ஹாஸ்டல்ல சும்மா தானே இருப்ப? அதான் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்!” என்ற அர்ஜுன் விஜயலக்ஷ்மியை கவனிக்காதவன் போலவே நிற்க, ப்ரணித்தா முதன்முதலாய் அர்ஜுன் அழைத்தும் செல்ல முடியவில்லையே என வருந்தினாலும் இப்போது விஜயலக்ஷ்மியிடம் பேசி முடிக்காவிட்டால் தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பும் சென்றுவிடுமே என தயங்கி நின்றாள்.
அர்ஜுன் என்ன செய்கிறான் என்ன பேசுகிறான் என எதுவும் புரியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
ஆனாலும் எதுவோ ப்ரணித்தாவின் மேல் தவறு இருக்கிறதோ என இந்த சில நிமிடங்களில் தோன்றி இருந்தாலும், ‘அவனுக்காக இத்தனை வருடங்கள் காத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய என்ன இவனுக்கு?’ என்று தான் சிறு கோபமும் அந்த நொடி வந்தது விஜயலக்ஷ்மிக்கு.
“நீ போய்ட்டு வா ப்ரணி! நான் இன்னொரு நாள் பேசுறேன்!” விஜயலக்ஷ்மி சொல்லி நகரப் பார்க்க, அதில் அர்ஜுன் அவளைப் பார்க்க,
“மாமா வீட்டுக்கு தான் போறதே!” என்ற அர்ஜுனிடம்,
“அங்க நான் எதுக்கு மாமா?” என்று ப்ரணித்தா கேட்க,
“அக்கா பார்க்கணும் சொன்னா!” என்று மட்டும் சொல்லி,
“கூட்டிட்டு வா ப்ரணி!” என்று சொல்லி நகர, ப்ரணித்தா ‘அங்கேயா!’ என விழித்தவள் அர்ஜுன் கூறி சென்றுவிட்டதால் வேறு வழி இன்றி விஜயலக்ஷ்மியையும் அழைத்துக் கொண்டு அர்ஜுன் காரில் ஏறிக் கொண்டாள்.
என்ன தான் விஜயலக்ஷ்மி மேல் கயல்விழிக்கு கோபம் இல்லை என்று அனைவர்க்கும் தெரியும் என்றாலும் இன்றைய இந்த நிலைக்கு துவக்கம் என அமைந்தது என்னவோ விஜயலக்ஷ்மி அர்ஜுனின் நிச்சயம் நின்றது மட்டும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாதே!
அந்த ஆதங்கம் வருத்தம் விஜயலக்ஷ்மி மேல் உண்டு தான் ஆனாலும் காட்டிக் கொள்ள முடியவில்லை யாராலும் அவளிடம். எந்தளவுக்கு அவள் உடைந்து போவாள் என அறிந்தே இவ்வளவு யோசித்து யோசித்து அவளிடம் கூறாமல் இருந்து என நாட்களை கடந்து வந்திருக்க, அப்படி இல்லவே இல்லை! இதற்கெல்லாம் காரணம் கூடவே இருந்து தனக்கெதிராய் சதி செய்தது ஒரு பெண். அதுவும் தன் தோழி என தான் நினைத்து பெருமை கொள்ளும் ஒரு பெண் என நினைக்கையில் நெஞ்சின் வெம்மை கூடியது அர்ஜுனுக்கு.
கயல்விழி இறப்பைக் கேட்டு அதிர்ந்து நின்ற விஜயலக்ஷ்மி முகமும் தன் வீட்டிற்கே வந்து என்னால் தானே என முகம் மூடி அழுத விஜயலக்ஷ்மி நிலையும் என நினைத்தவன் எண்ணத்தில் ‘அவங்க விதி அவ்வளவு தான்னு விடு’ என்ற ப்ரணித்தாவின் குரலை நினைக்கையில் மனம் கொதித்தது.
‘அந்த பொண்ணு சரி இல்லைனு என்னவோ தோணுது!’ தீபக் கூறினானே! அனன்யாவிற்கும் கூட அவ்வளவு ஒட்டவில்லை தானே இவளோடு! தான் மட்டும் ஏன் இப்படி ஏமாறும் அளவுக்கு இருந்தேன் என நினைக்கும் பொழுது தன்னை நினைத்தே கோபம்.
“ப்ச்! ஷிட்!” என ஸ்டீரிங்கில் அர்ஜுன் கைகளைக் கொண்டு குத்த,
“மாமா! என்னாச்சு?” என்று கேட்டது ப்ரணித்தா. தலையசைத்தவன் விவேக் வீட்டு வாசலில் வந்து தான் காரை நிறுத்தி இருந்தான்.
காரில் இருந்தே வெளியில் பார்த்த போது இத்தனை வருடங்கள் பின் மீண்டுமாய் அந்த இடத்தில் தானும் அன்னையும் நின்ற நியாபகம்.
கார் கதவை திறந்து வேக வேகமாய் வீட்டினுள் சென்று அர்ஜுன் சோஃபாவில் அமர, அவன் செய்கைகளை வித்யாசமாய் பார்த்து புரியாமல் விஜயலக்ஷ்மியை ப்ரணித்தா பார்க்க, விஜயலக்ஷ்மிக்கு மட்டும் புரிந்திடுமா என்ன?
“அர்ஜுன்?” கார் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து வெளி வந்த அனன்யா ஹாலை அடையும் முன், அங்கு வந்து அமர்ந்திருந்தவனைக் கண்டு என்னவோ என அவனருகே வர, ப்ரணித்தா விஜயலக்ஷ்மியோடு உள்ளே வந்திருந்தாள்.
“ப்ரணி! வா! உக்காரு!” என்று அனன்யா அழைத்தவள்,
“நீயும் இப்ப தான் வர்றியா விஜி? ஹாஸ்பிடல் லீவ் சொல்லியிருக்க ஆனா வீட்டுல சொல்லிட்டு போகல! என்ன பழக்கம் இது? எங்க போன? சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல? அத்தை வேற டென்ஷன் ஆகிட்டாங்க!” என காலையில் எதுவுமே நடக்காததை போல அனன்யா விஜயலக்ஷ்மியிடம் பேசினாள்.
அர்ஜுன் அருகே சிறு இடைவெளி கொடுத்து ப்ரணித்தா அமர, விஜயலக்ஷ்மி எதுவும் பேசாமல் நின்றவள் அர்ஜுன் பேச வேண்டும் என தான் நினைத்தாள்.
“மாமா இல்லையா அனு?” அர்ஜுன் கேட்க,
“இப்ப தான் வந்தாங்க டா! அத்தையும் மாமாவும் கோவில் போகணும் சொன்னாங்க. ட்ராப் பண்ணிட்டு வந்தாங்க” என்றவள் கணவனை அழைக்க,
“வர்றேன் அனு!” என குரல் கொடுத்தான் மேலிருந்து.
இதில் ப்ரணித்தா நிலைமை தான் பரிதாபம். நேற்று அழைத்து வந்ததாவது தான் கேட்டதற்காக எனலாம். இன்று எதற்காக தன்னை இங்கே அழைத்து வந்தான்? ஏன் இப்படி அமர்ந்திருக்கிறான் என எதுவும் புரியவில்லை.
ஒருவேளை வீட்டில் திருமணம் பற்றி பேசியது அவனுக்கு தெரிய வந்திருக்குமோ? வேண்டாம் என்று சொல்ல தான் தன்னை அழைத்து வந்திருக்கிறானோ என சில நொடிகளில் பல எண்ணங்களுக்கு தாவி விட்டாள் ப்ரணித்தா.
“உனக்கு ஆபீஸ் முடிஞ்சிருச்சா ப்ரணி?” அனன்யா கேட்க,
“முடிஞ்சது அண்ணி!” என்றாள் ப்ரணித்தா.
அனன்யாவிற்குமே அர்ஜுன் என்ன செய்கிறான் ஏன் ப்ரணித்தா வந்திருக்கிறாள் என எதுவும் புரியவில்லை. விவேக் வராமல் அர்ஜுன் பேச மாட்டான் என புரிந்து அமைதியாய் இருந்தாள்.
“சரி பேசிட்டு இருங்க காபி கொண்டு வர்றேன்!” அனன்யா சொல்ல,
“அனு வேண்டாம்! இங்க உக்காரு!” என்று சொல்ல, என்னவோ முக்கியமான விஷயம் என்றளவுக்கு தான் புரிந்தது அனன்யாவிற்கு.
“வா ப்ரணித்தா!” என அழைத்து தான் மேலிருந்து இறங்கினான் விவேக்.
“ஒரு போன் பண்ணிருக்கலாம்ல விஜி? கால் பண்ணின அப்பறம் தான் பிரண்ட் வீட்டுல இருக்கேன்னு சொல்லுவியா? அம்மா பயந்துட்டாங்க. நான் உங்கிட்ட பேசின அப்புறம் தான் கோவிலுக்கே போறாங்க!” என்ற விவேக்,
“நீ இப்ப ஓகே தானே?” என தங்கையிடம் கேட்க, மெதுவாய் விஜி தலையசைக்க, இன்னமும் கயல்விழி இழப்பு செய்தியில் இருந்து அவள் வெளிவரவில்லை என்று தான் நினைத்தான் அவன்.
“என்ன டா ப்ரணித்தாவை இந்நேரம் கூட்டிட்டு வந்திருக்க?” மனதில் எதுவும் வைக்காமல் அர்ஜுனிடம் நேராய் கேட்டு வைத்தான் விவேக்.
“நான் போய் டிபன் பண்றேன்! சாப்பிட்டு போலாம்!” அனன்யா சொல்லி எழப் பார்க்க,
“இரு அனு!” என அவள் கைகளைப் பிடித்த அர்ஜுனை அவள் வித்தியாசமாய் பார்க்க, அர்ஜுன் விஜயலக்ஷ்மியைப் பார்த்தவன்,
“என்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு தான் விஜயலக்ஷ்மி வந்தது!” என்று சொல்ல அதில் விஜயலக்ஷ்மி அதிரவெல்லாம் இல்லை.
விவேக் அனன்யா இருவருக்கும் ஆச்சர்யம் என்றாலும் அன்னை இறப்புக்காக அர்ஜுனிடம் வருந்தி இருப்பாள் என்றவரை தான் நினைத்தனர்.
மொத்த அதிர்ச்சியும் என்னவோ ப்ரணித்தாவிற்கு தான். இது எப்போது என்பதை போல விஜயலக்ஷ்மியைப் பார்க்க அவள் இவளை கவனிக்கவில்லை.
“சொல்லிருக்கலாமே விஜி! நானும் வந்திருப்பேன்ல?” அனன்யா சொல்ல,
“அம்மாவும் நீங்களும் பேசினீங்களே ண்ணா! அதை தான் கேட்க போனேன்!” என்றதில் தான் அனன்யா பதறியது.
“என்ன சொல்ற விஜி?” என்ற அனு அர்ஜுனைப் பார்க்க, விவேக் ப்ரணித்தாவையும் பார்த்தான்.
இதில் இன்னுமே கலவரமானாள் ப்ரணித்தா! அர்ஜுன் வீட்டிற்கு விஜயலக்ஷ்மி சென்றாள் என்றதற்கே மனம் ஏன் எதற்கு என அத்தனை கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்க, தன்னிடம் சொல்லிய செய்தியை அவனிடமும் சொல்லி விட்டாளா? எப்போது? ஏன் என்னிடம் அதை கூறவில்லை என தலை வெடிப்பதை போலானது.
“என்னால கண்ட்ரோல் பண்ண முடியல அண்ணி! யார் என்ன சொன்னாலும் கயல் அத்தை இறப்புக்கு நான் தான் காரணம். நான் எப்படி இனி நிம்மதியா வாழ முடியும்? அதனால தான் அர்ஜுன்கிட்ட பேச போனேன்!” என்று விஜயலக்ஷ்மி கலங்கியபடி கூற, ப்ரணித்தா எழுந்துவிட்டாள் அந்த செய்தியில்.
“என்னை டி உலர்ற? படிச்சு படிச்சு சொன்னேன்ல உன்கிட்ட?” அனன்யா கோபமாய் கத்த,
“அப்போ ஏன் இவங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல? இவங்க ப்ரணித்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் எனக்கு கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும் அண்ணி! ப்ரணித்தாக்கு நல்லது பண்ண தான் நான் அன்னைக்கு அப்படி பேசினதே! அதனால தான் கயல் அத்தைக்கு இப்படி ஆனதே!” என்று விஜயலக்ஷ்மி சொல்ல, புரியவே இல்லை மற்றவர்களுக்கு.
ஆனால் புரிந்தவள் மூச்சு அங்கே இல்லை. கண்கள் எல்லாம் இருண்டு வந்தது. இப்படி விஜயலக்ஷ்மி கூறுவாள் என நினைக்காத ப்ரணித்தா தடுமாறி நிற்க, ரயில் வேகத்தில் ஓட்டமெடுத்தது இதயம்.
இத்தனைக்கும் இன்னும் அர்ஜுன் வந்ததில் இருந்து ப்ரணித்தா புறம் திரும்பவில்லை.
“விஜி! என்ன சொல்ற நீ?” விவேக் கேட்க,
“பிராணித்தாக்காக தான் நான் எல்லாம் பண்ணினேன்!” என்ற விஜயலக்ஷ்மி,
“சாரி ப்ரணி! இனியும் நாம மட்டும் பேசிட்டு இருந்தா எதுவும் நடக்காது. என்னால தான் ஒரு உயிர் போயிருக்குன்னு நினைக்கவே என் மனசு பதறுது! இது தான் ஒரே வழி!” என்று ப்ரணித்தாவிடம் கூறியவள் இதனால் தான் இப்படி தான் இதற்காக தான் நிச்சயத்தை நிறுத்தினேன் என்று அனைவரும் கேட்க அவள் கூற, நெஞ்சாங்கூடே காலியாகிவிட்டது ப்ரணித்தாவிற்கு.
“ப்ரணித்தா பாவம் அண்ணி! அவளும் என்ன தான் பண்ணுவா? முதல்ல அவ வேண்டாம்னு தான் சொன்னா! ஆனா ஆசை இருக்கும்ல? அதனால தான் நான் முடிவெடுத்தேன்! ஆனா நான் முன்னாடியே சொல்லிருக்கணும் அண்ணி! புரியாம ப்ரணித்தா சொன்னதை நானும் செஞ்சு எல்லார் முன்னாடியும் அப்படி பேசி நிறுத்தி இருக்க கூடாது! அதனால தான கயல் அத்தை இப்போ….” என்றவள் மீண்டும் மீண்டும் இறந்த ஒரு ஜீவனுக்காக மட்டுமே அழ, அனன்யா பேச்சச்சு நிற்க, கல்லென சமைந்திருந்தான் அர்ஜுன்.
“ப்ரணி?” என்ற அனன்யா அதிர்ச்சியில் பேசாமல் நிற்க,
“ஏன் என்கிட்ட சொல்லல ப்ரணி?” என்றான் அர்ஜுன் அவள் முகம் பாராமல்.
“மாமா!” என்றவளுக்கு மூச்சைடைத்து வந்தது. என்ன நடக்கிறது என புரியவே நேரம் எடுத்தது. ஆனால் இன்னும் முழுதாய் புரியவில்லை.
இனியும் அமைதியாய் இருப்பதா என நினைத்தவள், “மாமா! எனக்கு உங்களைப் பிடிக்கும்! அதை அப்ப உங்ககிட்ட நேரா சொல்ல முடியல!” ப்ரணித்தா தயங்கி என்றாலும் சொல்லிவிட,
“ஒரு நிச்சயத்தை நிறுத்த முடிஞ்ச உனக்கு உன் விருப்பத்தை சொல்ல முடியலையா?” என்றாள் அனன்யா அதிர்ச்சியுடன் கோபமும்.
“இல்ல அண்ணி! அது அப்படி இல்ல!” என்ற பிரணித்தா எப்படி கூறுவாள் அர்ஜுனையும் அவன் காதலையும்? அது தெரிய வர கூடாதே மற்றவர்களுக்கு என்று தான் இப்போதும் நினைத்தாள்.
“நான் வேண்டாம்னு தான் சொன்னேன்!” ப்ரணித்தா விஜயலக்ஷ்மியை முறைக்க,
“இப்ப அவ என்ன தப்பு பண்ணினா? நான் தான் சொல்றேனே! நான் தான் பண்ணினேன்!” என்றாள் விஜயலக்ஷ்மி.
“அர்ஜுன்! என்ன டா இதெல்லாம்?” விவேக் கேட்க, அர்ஜுன் எழுந்தவன் ப்ரணித்தா முன் சென்று நிற்க, நடுங்கிவிட்டாள் அவள்.
“விஜயலக்ஷ்மி காலேஜ் முடிச்சதும் இந்தியா வர வேண்டாம்னு சொன்னியா?” அர்ஜுன் கேட்க, கண்களை அகல விரித்தவள் அரண்ட பார்வை பார்த்தாள்.
“அர்ஜுன்!” விஜயலக்ஷ்மி கத்தி அழைக்க,
“ஜஸ்ட் ஷட்டப்!” என அவளை கூறிவிட்டு மீண்டும் ப்ரணித்தாவிடம் அர்ஜுன் திரும்ப, விஜயலக்ஷ்மி இன்னமும் தனக்காக பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது ப்ரணித்தாவிற்கு.
“மாமாகிட்ட என்ன சொன்ன விஜி? ஏன் மாமா என்னல்லாமோ கேட்குறாங்க?” என விஜயலக்ஷ்மியிடம் ப்ரணித்தா கேட்டவள்,
“எனக்கு மாமாவை பிடிக்கும் சொன்னேன்! நீ தானே சொன்ன எனக்கு என் அண்ணா இருக்காங்க இதைவிட நல்ல மாப்பிள்ளையா பார்த்து தருவாங்கன்னு! நீயா தானே நிறுத்தின?” எனவும் சொல்ல, இந்த மாதிரியான ப்ரணித்தாவின் பேச்சை விஜயலக்ஷ்மி எதிர்பார்க்கவில்லை.
“ஆனா நீ அழுதியே ப்ரணி! கேட்குறதுக்கு யாருமே இல்லை எனக்குன்னு சொன்னியே! அதுக்காக தானே நான் பண்ணினேன்!” என்றவளுக்கு புரியவில்லை பிரணித்தாவின் பேச்சு.
“டேய்! என்ன டா நடக்குது இங்க?” அனன்யா அர்ஜுனிடம் வர,
“அவளோட இன்னசன்ஸை நீ யூஸ் பண்ணிக்கிட்ட இல்ல? நீ போய் இப்படி…” என்ற அர்ஜுன் வார்த்தைக்கு,
“மாமா நான்… எனக்கு உங்களை பிடிக்கும். ஆனா நான் எதுவும் பண்ணல! விஜி…” என சொல்லும் போதே கை நீட்டி தடுத்த அர்ஜுன் தனது மொபைலை எடுத்து நீட்டினான்.
“நான் எல்லாம் கேட்டேன்! நானே கேட்டேன்! நீ போய் இப்படி?” என்றவன் தன் நம்பிக்கை பொய்த்துப் போன உணர்வில் நிற்க, பயம் தொண்டையை கவ்வியது ப்ரணித்தாவிற்கு.
“என்ன பண்ணின நீ? ப்ரணித்தா உண்மையை சொல்லு! நீ தான் நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்துனியா?” அனன்யா கோபமாய் கேட்க,
“அனு! என விவேக் அவளருகில் வந்து பிடித்தபடி நின்று கொண்டான்.
“அண்ணி! என்ன பண்றீங்க நீங்க? ப்ரணித்தா உங்க மாமா பொண்ணு தானே? அவளுக்கு அர்ஜுனை கல்யாணம் பண்ணினா தான் என்ன?” என விஜயலக்ஷ்மியும் பேச, இப்போது விஜயலக்ஷ்மி மேல் சந்தேகம் திரும்பியது ப்ரணித்தாவிற்கு.
வேண்டும் என்றே அனைவரின் முன்னும் தன்னை கூறி இருக்கிறாளோ என நினைத்து நிற்க,
“ஆமா! நான் காலேஜ் முடிச்சதும் யூஎஸ்லேர்ந்து வர்றதா தான் இருந்தேன். ப்ரணித்தா வேண்டாம்னு சொன்னா தான்! ஆனா அதுல என்ன தப்பிருக்கு? உங்க தம்பி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கவங்க எங்க நான் வந்தா என் மேல இருக்க கோவத்துல எப்பவுமே கல்யாணம் பண்ணிக்காம இருந்துடுவாங்களோனு என்னை வர வேண்டாம்னு சொல்லி இருப்பா! இது ஒரு விஷயமா? என்றும் சொல்ல, அனன்யாவும் விவேக்கும் அதிர்வை உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
“பைத்தியமா டி நீ? அவ சொன்னா நான் செஞ்சேன்னு சொல்ற? உன் தப்பு உனக்கு புரியுதா?” அனன்யா விஜயலக்ஷ்மியிடம் கேட்க,
“எனக்கு நல்லா புரியுது அண்ணி! நான் அன்னைக்கு நிச்சயத்தை நிறுத்தினது பெரிய தப்பு தான். ஆனா… அது ப்ரணித்தாவோட வாழ்க்கை அண்ணி! நான் எப்படி அங்க?” என்று சொல்ல அர்ஜுன் ப்ரணித்தாவை தான் பார்த்தான்.
இப்போதாவது தன் தவறை கூற வேண்டுமே அவள். எத்தனை சாமர்த்தியமாய் விஜயலக்ஷ்மியை ஏமாற்றி இருக்கிறாள்.
“கேளுங்க! உங்க தங்கச்சி பேசுறதை கேளுங்க!” அனு கோபமாய் சொல்ல,
“அனு!” என அர்ஜுன் அவளை தன் பக்கம் இழுக்க, அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள் அனன்யா.
“நான் பண்ணினது தப்பு! உங்க எல்லார் முன்னயும் ப்ரணியை நிறுத்தி நான் அப்பவே பேசி இருக்கனும்!” என்ற விஜயலக்ஷ்மி,
“இப்பவாச்சும் பேசு ப்ரணி!” என இன்னும் அவளுக்காக மட்டும் கெஞ்சி பேச,
“என்ன டி பேச? அதான் மொத்தமா போட்டு உடைச்சுட்டியே! அந்த பக்கம் அர்ஜுன் மாமாவை தனியா பார்த்து எல்லாம் பேசி தானே ட்ராமா செட் பண்ணி இருக்க? நான் என்ன பேச?” என்ற ப்ரணித்தா சொல்லில் விஜயலக்ஷ்மி புரியாமல் விழிக்க,
“நான் தான் பைத்தியம் மாதிரி மாமா மாமானு சுத்தி வந்துட்டு இருந்தேன்! நான் விஜியை லவ் பண்றேன்னு நீ இங்க காலேஜ் படிக்கும் போதே, அனு அண்ணி கல்யாணம் ஆன புதுசுலேயே என்கிட்ட வந்து இவங்க சொல்லறாங்க!” என்ற ப்ரணித்தா சொல்லை அர்ஜுனோடு அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.
“ப்ரணி!” அர்ஜுன் கத்த,
“ஆமா நான் தான் உங்க கல்யாணத்தை நிறுத்தினேன்! போதுமா?” என்றாள் ப்ரணித்தா அவனிடமும்.
தொடரும்..
error: Content is protected !!