Skip to content
Post Views: 5,360
காதல் இன்று
“வெண்ணிலா பேச்சை விடுங்க, முதல்ல என் வாழ்க்கைக்கு ஒரு பதில சொல்லுங்க!”, என்று நடு சபைக்கு வந்து கத்தினாள் சுதா!
“இவ என்ன சொல்ல வர்றா? இவ வாழ்க்கைக்கு நாம என்ன பதில் சொல்லணும்?” என்கிற மாதிரி அன்பு அவளைப் பார்க்க,
அவளோ, “நீங்க எல்லோரும் வெண்ணிலாவுக்கும் அன்பு மாமாவுக்கும் கல்யாணம் பேசி முடிக்க வந்திருக்கிற விஷயம் இப்ப தான் எனக்கு தெரியும்! அதான் ஓடி வந்தேன்!
Advertisement
மாமா முதல்ல எனக்கு ஒரு வழி சொல்லிட்டு அப்புறம் மத்தத பேசு!” என்றாள் அன்புவிடம் நேராக.
“இவ என்ன சொல்றா, ஏற்கனவே நானே இங்க அசிங்கப்பட்டு நிக்குறேன் இவ வேற!” அன்பு நினைத்துக் கொண்டு, “உனக்கு என்னம்மா வழி சொல்லணும்?”
“என்ன மாமா இப்படி சொல்லிட்ட, நீயும் நானும் தான் ஒரு வருஷமா பழகிட்டு வரோம்.
Advertisement
அதனால தான் நீ என்னை உன் வேனிலேயே க்ளீனரா தொடர்ந்து வச்சுட்டு இருக்கிற!
Advertisement
வேற வேனுக்கு அனுப்பினாலும் அவங்க கிட்ட போய் பேசி, திரும்ப உன் வேனுக்கே வர வச்சுடுவ!
அப்புறம் , வெண்ணிலா நிறைய படிச்சுருக்கு, நான் அதுக்கு ஏத்த மாப்பிள்ளை இல்ல, அவளுக்கு வெளியில பார்த்துக்கலாம், எனக்கு உன்னை தான் பிடிச்சுருக்குன்னு நீ சொன்னத நம்பி தானே நான் உன்கிட்ட பழகினேன்.
இப்ப எனக்கு நாள் வேற தள்ளிப் போயிருக்கு! டவுன் ஆஸ்பத்திரிக்கு போய், எனக்கு தெரிஞ்ச நர்ஸ் அக்கா கிட்ட கலைஞ்சு போறதுக்கு மாத்திரைக் கேட்டேன்!
Advertisement
அதுக்கு அந்த அக்கா அன்புகிட்ட போய் பேசி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ, நீ குண்டா இருக்கிறதால உன் வயிறு கொஞ்சம் பெரிசானா கூட யாருக்கும் சந்தேகம் வராது.
ஆனா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுடுன்னு சொல்லிச்சு அந்த அக்கா.
நான் உன்கிட்ட இதப் பத்தி பேசலாம்னு வந்தப்போ, தான் தனம் அத்தை இங்க உனக்கும் வெண்ணிலாவுக்கும் கல்யாணம் உறுதிப் பண்ண வந்திருக்குன்னு தெரிய வந்தது!
மாமா, ப்ளீஸ் நீ என்னை ஏமாத்திடாதே” அவள் சொல்லி முடிக்கவும் அவள் கன்னத்தில் ஓங்கி வலுவாக ஒரு அறை விழவும் சரியாக இருந்தது!
அறைந்தது வசந்தா!
“ஏய்.. யாரைப் பாத்து என்னடி சொல்ற, என் அன்புவ பார்த்து, அவன் அந்த மாதிரி நடந்துக்குற ஆளா?
அப்படிப் பட்டவனையா நான் மூணு வயசுப் பொண்ணுங்க இருக்கிற என் வீட்டில் நடமாட விட்டுருப்பேன்!”
பாவி. பாவி உன் அன்பு மாமா அசிங்கப் பட்டுட்டான்னு, அவன் மானத்தைக் காப்பாத்த தான் நீ இப்படி அபாண்டமான பொய்யை சொல்றன்னு புரியுது!
அவன் உன்னை யாரும் கேலி பண்ணாம காப்பாத்த தான் தொடர்ந்து அவன் வேனிலேயே உனக்கு தொடர்ந்து ட்யுட்டி வாங்கிக் கொடுத்தான்னு எனக்கும் தெரியும்!
ஆனா உன் அப்பாவைப் பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சியா, என் மாமா உன் அம்மா இறந்த பின்னாடி இன்னொரு பெண்ணை தேடி போகாம, உன்னை வளர்த்து ஆளாக்கினதுக்கு அந்த மனுசனை இப்படி அசிங்கப் படுத்திட்டியேடி பாவி! சுதாவை இன்னும் இரண்டு அடிகள் வைத்தார் வசந்தா!
அவருக்குத் தாள முடியவில்லை!
“என்ன இந்த பெண்கள் இப்படி ஆளாளுக்குக் குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்!”
வசந்தா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, நேராக தனத்திடம் சென்று, “அண்ணி, எப்போ தன் மானத்தைப் பத்திக் கூட கவலைப் படாம இந்த அளவு ஒரு பொய்யை சொல்லி அன்பை காப்பத்த நினைச்சாளோ, இதிலேயே சுதா அன்புவ எவ்வளவு விரும்புறானு தெரியுது!
அன்புக்கு என் பெண்ணை விட இந்த சுதா தான் பொருத்தமா இருப்பா!
அவ அவ்வளவு ப்ரியம் வச்சுருக்கா அவன் மேலே!
நமக்கு தான் இத்தனை நாள் தெரியாம இருந்துருக்கு! சுதாவும் என் பொண்ணு மாதிரி தான்! நீங்க அவளையே அன்புவுக்கு கட்டி வச்சுடுங்க!” என்று சொல்லி விட்டார்!
தனம் அழுதுக் கொண்டே அன்புவைப் பார்த்தார்!
தன்னால் தானே, தன் மகனுக்கு இத்தனை அவமானம்!
கேப்பார் பேச்சு கேட்டு புத்தி கெட்டுப் போய் அவனுக்கு தெரியாம இந்த ஏற்பாட்டை தான் பண்ணியதால் இன்னிக்கு அசிங்கப்பட்டு நிக்கிறது அவனும், அருண் அண்ணனும் அவர் குடும்பமும் தான்!
“அண்ணே என்னை மன்னிச்சுடுண்ணே!” என்று சொல்லி, அருண் அருகில் போய் கையை எடுத்துக் கும்பிட்டார் தனம்!
அருண் ஒன்றும் சொல்லாமல் தட்டுத் தடுமாறி ஒரு அறைக்குள் நுழைந்து கதவைத் தாழ்ப் போட்டுக் கொண்டார்!
யாரும் அதைக் கவனிக்க வில்லை!
வசந்தா உட்பட!
ஆனால் அதை கவனித்து விட்டான் வினய்!
“அய்யோ மாமா, உள்ளே போய் என்ன பண்ணிக்க போறே? கதவைத் திற மாமா!” என்று கத்திக் கொண்டு போய் கதவை வேகமாக தட்டினான்!
அதற்குள் அவன் சத்தம் கேட்டு அனைவரும் அந்த அறைக்கு முன்னே போய் கத்தினார்கள்!
அன்பு அந்த கதவை உடைத்து உள்ளே சென்றால், அங்கே அருண் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்!
அவரைத் தடுத்து வெளியே தூக்கி வந்தார்கள்!
“என்ன மாமா இப்படி பண்ணிட்ட, வெண்ணிலா எங்கயும் ஓடி எல்லாம் போகல.
நான் தான் அவளை ரயில் ஏத்தி விட்டேன், அவள் ஒரு வேலைக்கு இன்டர்வியூ போகணும்னு சொன்னா, அப்பா கிட்ட நீங்க தான் மாமா பர்மிசன் வாங்கித் தரணும்னு கேட்டா!
நான் தான் உன்னை ரயில் ஏத்தி விட்டுட்டு அப்புறம் சொல்லிக்கறேன், இப்பவே சொன்னா மாமா கட்டையை போட்டுடும்னு சொல்லி சமாதானம் படுத்தி வச்சுருந்தேன்!
அதுக்குள்ள என் அம்மா இப்படி ஊரைக் கூட்டுட்டு வந்து கல்யாணம் பேசும்னு நான் நினைக்கவேயில்லை!
இந்த விசயமே எனக்குத் தெரியாது!” அன்பு கதறினான்!
“உனக்கு தான் தெரியாது அன்பு, ஆனா அவளுக்கு தெரியுமே, அவ கம்ப்யூட்டர்ல உக்காந்து வேலைப் பார்த்துட்டு இருந்தப்போ நானே அவ கிட்ட நேரிலே சொன்னேனே” என்றார் வசந்தா கசப்புடன்!
தான் சொல்லியிருந்தும் கூட, அவ தன் கிட்ட கூட சொல்லாம இப்படி கிளம்பி போய் இருக்காளே என்ற ஆதங்கம் அவருக்கு!
“அம்மா நல்லா கவனிச்சியா, அவ நீ சொல்றத முதல்ல காதில வாங்கினாளா? பதில் சொன்னாளா?” மதி கேட்டாள்.
“இல்லடி ஒண்ணுமே சொல்லல அவ! ஒண்ணும் பேசாம அவ கம்ப்யுட்டரையே பார்த்துட்டு இருந்தா!
சரி வெக்கப் பட்டு பேசாம இருக்கா போலன்னு தான் நான் நினைச்சேன்!”
“அய்யோ அம்மா, நீயும் தப்பு பண்ணிட்டியே, அவ காதில் சின்னதா வெளியே சட்டுன்னு தெரியாத மாதிரி ஹெட் போன் போட்டுட்டு கிளாஸ் கவனிச்சுட்டு இருந்திருக்காம்மா!
அவ தன் பத்து நாளா விழுந்து விழுந்து படிச்சுட்டு இருக்காளே, கேட்டா ஏதோ புது கோர்ஸ் படிக்கிறேன்னு கூட சொல்லிட்டு இருந்தாம்மா,
இப்ப தான் புரியுது, நீ சொன்ன எதையும் அவ கேக்கவே இல்லைன்னு!” மதியும் வளரும் தங்கைக்காக அம்மாவிடம் வாதிட்டார்கள்!
“இது ஏதுடா, எல்லோரும் சமாதானம் ஆகி விடுவார்கள் போல இருக்கே, அப்புறம் இந்த வக்கீலுக்கு என்ன வேலை” என்று வினய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
அந்த பிரவுசிங் செண்டர் நடத்தும் மாரி அங்கு வந்து விட்டாள்!
அன்பு தான் அவளை போனில் வர சொல்லியிருந்தான் அதற்குள்!
“வா மாரி, நீயே சொல்லு, நான் தானே அன்னிக்கு உன் கிட்ட கொடுத்து தானே வெண்ணிலாவுக்கு டிக்கெட் புக் பண்ணினேன்!
அப்ப கூட வெண்ணிலாவுக்கு இன்டர்வியூ இருக்குன்னு கூட சொன்னேனே!” என்று அன்பு அவளை சாட்சி சொல்ல அழைக்க,
அவளோ தயங்கியபடி நின்றாள்.
இது என்ன, நாம இப்ப உண்மையை சொல்லலாமா கூடாதா? சொன்னா நமக்கு எதாச்சும் பிரச்சினை வருமா? என்று சுற்றிலும் உள்ளவர்களைப் பார்க்க,
“சொல்லும்மா, அதான் அன்பு கேக்குறானே சொல்லு..” என்றான் வினய் கண்களால் அவளிடம் “சொல்லாதே” என்ற எச்சரிக்கை செய்தியுடன்!
அவள் அதை புரிந்து கொண்டாள்!
அய்யோ வக்கீலை எதிர்த்து வில்லங்கத்தை உண்டு பண்ணிக்க கூடாது! அவர் மூலம் தான் நிறைய பிசினெஸ் வருது அவளுக்கும் ப்ளெக்ஸ் பிரிண்டிங் தொழில் நடத்தும் அவள் புருசனுக்கும்!
கல்யாணத்தில் ஆரம்பித்து இறப்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் திருவிழா, ஜல்லிக்கட்டு, அரசியல் தலைவர் வருகை என்று எல்லாவற்றிற்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் கிராமங்களில் ரொம்பவும் அதிகம்!
அதனால் அவன் தொழில் நன்கு போய்க் கொண்டிருக்கு!
அதற்கு வினய் மாதிரி ஆட்களின் சப்போர்ட் மிகவும் முக்கியம்!
அவன் தட்டி விட ஆரம்பித்தால், தாங்கள் தொழில் நடத்துவது சிரமம்! எனவே அவள் மனதார பொய் சொல்ல தயாரானாள்!
“என்ன அன்பு அண்ணே சொல்ற? நீ எப்ப என் கடைக்கு வந்த? நான் எப்ப உனக்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்தேன்?” அவள் திருப்பிக் கேள்வி கேட்டாள்!
“ஏன் மாரி இப்படி பொய் சொல்ற? நான் உன் கடைக்கு வரவே இல்லை?” அன்பு பதறினான்!
“இல்லைண்ணே, நல்ல நினைப்பு இருக்கு, நீ என் கடைப் பக்கம் வந்து ரொம்ப நாளாவுது!”
“என்னம்மா இப்படி சொல்ற, இது வெண்ணிலா மானம் சம்பந்தம் பட்ட விஷயம், என் மாமாவோட மரியாதையே நீ சொல்றது தான் இருக்கு ப்ளீஸ் உண்மைய சொல்லு!”
“அய்யோ அண்ணே, நானும் உண்மைய தான் சொல்றேன்! எனக்கும் ஒரு பொம்பள பிள்ளை இருக்கு! நான் அப்படியெல்லாம் மாத்திப் பேசுவேனா?
சரி இப்படி வச்சுக்கோ, அப்படியே வெண்ணிலாவுக்கு டிக்கெட் புக் பண்ணனும்னா அதுவே அதோட லாப்டாப்பில் இருந்து பண்ணிக்காதா?” மடக்கினாள் மாரி!
“அது தான் அன்னிக்கே சொன்னேனே உன்கிட்ட! அதுக்கு ரயில்வே வெப் சைட் ஓபன் ஆக மாட்டேங்குது, அதோட லாப்டாப்பில் ஸ்பீட் கம்மியா இருக்கு, நெட் ஸ்பீடும் கம்மியா இருக்குன்னு தான் உன்கிட்ட சொல்லி பண்ண சொன்னுச்சு ன்னு சொல்லி தானே டிக்கெட் புக் பண்ண சொன்னேன், இன்னிக்கு வந்து இப்படி மாத்தி பேசுறியேம்மா!”
“அண்ணே வார்த்தை பார்த்து பேசு, உன்கிட்ட போய் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!
அனாவசியமா என்னை தப்பு சொல்லாத! உன் மாமா மானத்தை காப்பாத்த என்னை தப்பா சொல்றியா, இதெல்லாம் நல்லா இல்ல ஆமா!” மாரி குரலை உயர்த்தினாள்!
“நீ போம்மா, நாங்க பேசிக்கிறோம்” வசந்தா அவளை அனுப்பி வைத்து விட்டாள்!
அன்பு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டான்!
தங்களை சுற்றி என்ன நடக்கிறது? யார் செய்கிறார்கள் இதையெல்லாம்? அவன் குழம்பி கொண்டிருக்கும் போது, அங்கு வினய் அடுத்து தன் காயை நகர்த்தி வேலையைக் காட்ட துவங்கி விட்டான்!
அவன் அருணை தன் மேல் சாய்த்து பிடித்துக் கொண்டிருந்தான் இவ்வளவு நேரமாக!
“நீ ஒண்ணும் கவலைப் படாதே மாமா, எப்படியும் வெண்ணிலா திரும்பி வந்துடும்!
வந்தா அது எந்த மாதிரி திரும்பி வந்தாலும் சரி, நான் அதை கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா.
உனக்காக, உன் மானத்தைக் காப்பாத்த! உனக்காக மட்டும் தான் மாமா வேறெந்த உள் நோக்கமும் இல்ல எனக்கு!”
“என்ன அத்தை சொல்ற?” என்று அவன் வசந்தாவைப் பார்க்க,
“அவள் என்ன சொல்றது, இந்த வீட்டுத் தலைவன் நான் தான்!
நான் தான் முடிவு எடுப்பேன்!
நீ தான் என் பொண்ணை கட்டிக்கணும் மாப்பிள்ளை” என்று சொல்லி அவன் கைகளை பிடித்துக் கெஞ்சினார் அருண்!
“என்னங்க இது!” என்று பதறிய வசந்தாவிடம்,
“நான் உயிரோட இருக்கணுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்க” என்று சொல்லி விட்டார் தீர்மானமாக!
“அல்லி ராஜ்ஜியமாடி நடத்துறீங்க எல்லா பொம்பளங்களும் சேர்ந்துட்டு, என்னை யாருன்னு நினைச்சே?
இனி இந்த வீட்டுல நான் சொல்றத தான் எல்லோரும் கேக்கணும்.
இல்லன்னா இன்னிக்கு காப்பாத்திட்டீங்க. எப்பவும் அது முடியாது.
ஒரு முழக் கயித்துல என்னை முடிச்சுக்குவேன்! பார்த்து நடந்துக்கங்க” என்று சொல்லி விட்டு போனார் அந்த ஆம்பிளை சிங்கம்!
இத்தனை நாள் வசந்தாவும் வெண்ணிலாவும் ஓடி ஓடி உழைத்துக் கொட்டும் போதெல்லாம் கோமாவில் இருந்தது அந்த சிங்கம்!
என்ன செய்றது? பெரும்பான்மையான வீடுகளில் இதுவே தலையெழுத்து!
“மாமா அவசரப் படாதீங்க” என்று சொல்லித் தடுக்க வந்த அன்புவை
“நீ பேசாத, இவளுங்க செய்ற எல்லாத்துக்கும் ஆரம்பத்தில் இருந்தே துணை போனது நீ தானே? இப்பவும் அந்த சனியனுக்கும் நீ தான் மாமா வேலைப் பார்த்தியா?’ என்று அசிங்கமாக பேச ஆரம்பிக்க,
“அன்பு, நீ அம்மாவையும் , சுதாவையும் அவ அப்பாவையும் அழைச்சுட்டுப் போய் மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாரு. இங்க நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டு உள்ளே போய் விட்டார் வசந்தா!
வந்திருந்த எல்லோரும் வளரிடமும் மதியிடமும், “அம்மா அப்பாவைப் பார்த்துக்கங்கம்மா” என்று சொல்லி விட்டு கிளம்பியிருந்தார்கள்!
வினய் மேலும் கொஞ்ச நேரம் அருணிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பி விட்டான்.
வெற்றிப் புன்னகையை மறைக்க முயலவில்லை அவன்!
சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்த அவனை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள் வளரும் நட்ராஜும்!
அடுத்த நாள் காலையிலேயே நட்ராஜ். எல்லாமே இந்த வினய் போட்டு நடத்திய நாடகம் இது என்ற தகவலுடன் வந்து சந்தித்தான்.
மதி, செல்வம், வளர்,சுதா அன்பு என்று அனைவரும் கூடி இவன் கொண்டு வரும் தகவலுக்காக காத்திருந்தனர்!
நட்ராஜ் அவனுக்கு தெரிந்த ஒருவன் மூலம் வினய் பாரில் தண்ணீ அடித்துக் கொண்டு உளறியதை கேட்டு வந்து சொன்னான்!
அவன் மூலம் வினய் நடத்திய நாடகமும் அவனின் அடுத்த பிளானும் அவர்களுக்கு தெரிந்தே விட்டது!
எப்படியும் இன்டர்வியூ முடிந்து வெண்ணிலா இரண்டு நாட்களில் திரும்பி வந்து விடுவாள்.
வந்த அவளை இங்கு யாருமே நம்ப மாட்டார்கள்! அந்த டவுன் பையனை நம்பி ஓடிப் போய் விட்டு, இப்போது ஏமாந்து கெட்டழிந்து, திரும்பி வந்திருக்கும் அவளுக்கு, தான் வாழ்க்கைக் கொடுத்து அருணின் மானத்தைக் காப்பாற்றும் நாடகம் ஒன்றை நடத்த அவன் திட்டமிட்டு இருப்பதையும் அறிந்து கொண்டார்கள் அவர்கள்!
அப்போது பார்த்து வெண்ணிலாவின் போன்!
அன்புவின் நம்பருக்கு!
“மாமா, நான் இன்டர்வியூ ஒரு செசன் முடிச்சுட்டேன், நாளைக்கு ஜிடி இருக்கு!
அப்புறம் மாமா, நான் கட்டாயம் ஒரு ஆறு மாசமாவது இங்க தங்கி வேலைப் பார்க்க வேண்டியிருக்கும் போல!
நான் நாளை மறுநாள் வந்து ட்ரெஸ் எல்லாம் பாக் பண்ணிட்டு திரும்ப போக வேண்டியிருக்கும்!
என்ன மாமா நீ அப்பாகிட்ட இத பத்தி பேசிட்டியா? அம்மா என்ன சொல்லுச்சு?” வெண்ணிலா ஆர்வமாக கேட்டாள்.
“உன் அப்பா கோபமா தான் இருக்காரு, நீ அவருக்கு போன் கீன் போட்டுடாதே, எல்லாத்தையும் அத்தை பார்த்துக்கிறேன்னு சொல்லிடுச்சு, இந்தா நீயே பேசு அது கிட்ட”
போனை சுதாவிடம் கொடுத்தான்.
சுதா குரலை தயார் ஆக்கிக் கொண்டு வசந்தாவின் குரலில் பேசினாள்!
“நிலா, வாழ்த்துக்கள் நிலா, உனக்கு வேலை கிடைச்சா அம்மாவுக்கு சந்தோசம் தாண்டி!
பார்த்து கவனமா இருந்துக்கோ, அன்புவ நான் அனுப்பி வைக்கிறேன், அவன் நல்லதா ஒரு ஹாஸ்டல் பார்த்து உன்னை சேர்த்து விடுவான்!
“நீ கிளம்பி இங்க வந்திடாதே, அப்புறம் உன் அப்பா திரும்ப அனுப்பவே மாட்டார்!
அதனால நீ அப்படியே அங்கியே இருந்துக்கோ, அன்பு கிட்ட நான் உன் ட்ரெஸ் எல்லாத்தையும் கொண்டு வந்து தர சொல்றேன்!
மறுபடியும் சொல்றேன், நீ இங்க ஊருக்கு எக்காரணம் கொண்டும் வரக் கூடாது!
அன்பு வருவான், மதிக்காவும் மாமாவும் வருவாங்க, வளரும் நட்ராஜ் மாமாவோட வந்து உன்னைப் பார்ப்பா அடிக்கடி! ஆனா நீ மட்டும் இங்க வராதே!
அப்புறம் என்கிட்ட பேசணும்னா, ஒண்ணு அன்பு நம்பருக்கு பேசு, இல்ல சுதா நம்பருக்கு பேசு, மறந்துக் கூட என் நம்பருக்கு பேசிடாதே!
சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ஜாக்கிரதை!” என்று பேசி முடித்தாள் சுதா!
“சரிம்மா, அது சரி, நீ உன் உடம்பைப் பார்த்துக்கோ, உன் குரலே சரியில்ல ஏதோ மாதிரி இருக்கு!”
“அது ஒண்ணும் இல்ல வண்டியில போயிட்டு இருக்கேன் அதான் காத்து சத்தம்! சரி நான் வச்சுடறேன்!”
இப்படி மூன்று ஜோடிகளும் சேர்ந்து கொண்டு வெண்ணிலாவை அந்த வினய்கிட்ட இருந்து காப்பாற்றினார்கள்!
வெண்ணிலாவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?
error: Content is protected !!