Skip to content
Post Views: 6,513
தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 01
எட்டி எட்டி உதைக்கும் உனது காதலுடன்
இசைக்காட்டும் திசையில் விசைப்படகாய் நான்.
நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணி. கண்ணாடிகளும், பளபள அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்குகளும் என மின்னிக்கொண்டிருந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருந்தேன் நான்.
Advertisement
என்னை கடந்து சென்ற அந்த விமானியை, ட்ராலியை தள்ளிக்கொண்டு செல்லும் பயணிகளை என எல்லோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
என்னை அடையாளம் தெரிந்தவர்களில் ஒரு சிலர் என்னைப் பார்த்துவிட்டு அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டும் ஒரு சிலர் என்னை பார்த்து நட்பான ஒரு புன்னகையை சிந்திவிட்டும் என நகர்ந்து கொண்டிருந்தனர்.
என்னருகில் இருந்த சித்தாரா மட்டும் உச்சக்கட்ட படபடப்பில் நின்றிருந்தாள்
Advertisement
நான் சிங்கப்பூருக்கு செல்வதற்கு தயாராக நின்று கொண்டிருக்கிறேன். திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும். நான் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற பயமும், தவிப்பும் அவளுக்கு.
Advertisement
எனது உடல் நிலை அப்படி. எனது ஒரு சின்னஞ்சிறு அலட்சியம் கூட என்னை மொத்தமாக புரட்டிப் போட்டுவிடும் அபாயம் நிறையவே உண்டு. நியாயமாக எனக்குத்தான் அத்தனை படபடப்பு இருக்க வேண்டும் ஆனால் எனக்கு துளியிலும் துளிக்கூட படபடப்பு இல்லை.
அவற்றையெல்லாம் தாண்டி நான் அவனுடன் செல்லப் போகிறேன் என்ற எண்ணமே எனக்கு உற்சாகத்தை கொடுத்துக்கொண்டிருந்தது.
“ஹாய் சிங்கர் சந்தியாதானே நீங்க?” பின்னாலிருந்து ஒரு பெண் குரல் என்னை அழைத்தது.
Advertisement
“எஸ்” புன்னகைத்தேன் நான்.
“ஷ்யாம் சார் வரலையா?” அடுத்தக் கேள்வி.
“இல்ல அவர் வரலை” சொல்லி வைத்தேன் நான். அவன் வருகிறான் என்று தெரிந்தால் அவனுக்காக காத்திருக்க ஆரம்பிப்பார்கள் அவனது ரசிகர்கள்.
“எனக்கு அவர் பாடெல்லாம் ரொம்ப பிடிக்கும். கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்” அந்த பெண் சொல்ல
“ஓ.. அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் அவரை பார்க்கும் போது கண்டிப்பா சொல்றேன்” என்றேன் நான்.
இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு என்னிடமிருந்து விடைப் பெற்றாள் அந்த பெண்.
‘அவனுடன் சேர்ந்து நானும் ஒரு சில பாடல்களை இசைத்திருக்கிறேன், பாடி மகிழ்ந்திருக்கிறேன். இருந்தாலும் என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை அந்த பெண்.’ எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன் நான்.
இதில் வியப்பொன்றும் இல்லை. அதுதான் ஷ்யாம்.
கர்நாடக இசையை ரசித்து ரசித்து கற்றவன். தமிழ் திரை உலகின் பிரபல இளம் இசை அமைப்பாளன், பின்னணி பாடகன். திரைப்பாடல்கள், மெல்லிசை பாடல்கள், இசை ஆல்பங்கள் என எப்போதும் இசையிலேயே மூழ்கி திளைத்துக்கொண்டிருப்பவன்.
நெடு நெடு உயரம், அளவான மீசை, பளிச்சென ஷேவ் செய்யபட்ட கன்னங்கள் உள்ளத்தில் இருப்பதை எதையும் அத்தனை எளிதாக வெளிக்காட்டி விடாத கண்கள்.
இவன் கொஞ்சம் புன்னகைத்தால்தான் என்ன என யோசிப்பார்கள் இவனை பார்ப்பவர்கள். அந்த அளவுக்கு புன்னகையையும், வார்த்தைகளையும் ரேஷனில் வினியோகிப்பான்.
பொதுவாக இசை நிகழ்ச்சிகள் நடக்கும் போது அவன் மேடையில் வந்து நிற்கும் போது எழும் உற்சாக குரல்கள் சொல்லும் அவனது ரசிகர்களின் அன்பை.
எப்போதும் இது போன்ற பொது நிகழ்சிகளில் ஜீன்சும் அதற்கேற்ற நிறத்தில் மடக்கி விடப்பட்ட முழுக்கை சட்டையும் கழுத்தை ஒட்டிய சங்கிலி, கையில் தங்க நிற வாட்ச் என இவையே அவனது அடையாளங்கள்.
கையில் மைக்குடன் மேடையில் நிதானமாக வந்து நிற்பான். உற்சாக குரல்கள் அதிரும். சில நொடிகள் புன்னகைக்காமலே நிற்பான். கூக்குரல்கள் அடங்கியவுடன் மெல்ல மெல்ல புன்னகை பூக்கும் அவன் இதழ்களில். மறுபடியும் எழும் உற்சாக அலறல்கள்.
இந்தப் புன்னகையில் நான் மயங்கி நின்ற நாட்களுக்கு கணக்கில்லை. அந்தக் குரல்கள் அடங்கியவுடன்,
“எல்லாருக்கும் வணக்கம்” என்பான் அவனது ஆளுமையான குரலில். பின்னர் துவங்குவான் பாடலை.
நான் அவனுடன் இணைந்து பாட ஆரம்பித்த நாட்களுக்கு பிறகு,
“மழைத் தேடி காத்திருந்தேன்…… காத்திருந்தேன்……. பாடல்தான் அவனது முதல் பாடலாக இருக்கும்.
இது ஒரு திரைப்படத்தில் நானும் அவனும் சேர்ந்து இசையமைத்து நாங்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல். இந்த பாடல் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
மனம் தேடும் மழையானாய்…… மழையானாய்…..
கரைந்தேனடி கண்களில்…. விழுந்தேனடி வெள்ளத்தில்….
கரைசேர்ப்பாய் முத்தத்தில்…..
கரைசேர்ப்பாய் எனும் வார்த்தையை சொல்லி சற்றே நிறுத்திவிட்டு முத்த சதத்தை மைக்கில் பதிப்பான். மயங்கி கூவுவார்கள் அவனது ரசிகர்கள்.
“ரொமேன்டிக் சிங்கர்” என்பார்கள் அவனை. ஆனால் அவனுக்குள் நிஜமாக இருக்கும் வலிகளை பற்றி அறிந்தவர்கள் மிகக்குறைவு.
அவன் முதல் பாடல் துவங்கி, அத்தனை பாடல்களுக்குள்ளும் நுழைந்து உருகி இசைப்பான். பாடுவான். அந்த பாடல்களுக்குள்ளேயே கொஞ்சுவான், கெஞ்சுவான், மிஞ்சுவான், காதலிப்பான், அழுவான் சிரிப்பான். அதுதான் ஷ்யாம்.
“உங்க பாட்டை கேட்கும் போது எங்க கவலை எல்லாம் அப்படியே மறைஞ்சு போகுறா மாதிரி தோணுது ஸார். அவ்வளவு நிம்மதி கிடைக்குது. நான் எல்லாம் உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்” எனது காதுபடவே நிறைய பேர் அவனிடம் இப்படி சொல்லி இருக்கிறார்கள்.
அவர்களை பார்த்து மெலிதாக புன்னகைப்பான். “ரொம்ப நன்றி” என கரம் குவிப்பான். அந்த புன்னகைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் எனும் இடத்தை அவன் அத்தனை சுலபமாக அடைந்து விடவில்லை. வெற்றி எனும் ஏணியில் கடகடவென ஏறியவன் ஒரு கட்டத்தில் சரிந்து கீழே விழுந்ததும் ஊர் அறிந்த உண்மை.
“நடு வானத்திலே ஃப்ளைட்லே வெச்சு ரெண்டு பேரை சாத்து சாத்துன்னு சாத்தியிருக்கார் உன்னோட ஃபேவரிட் இசையமைப்பாளர். தெரியுமா?”
முன்பெல்லாம் என்னை கிண்டலடிப்பார்கள் எனது அலுவலக தோழிகள். இது மூன்றரை வருடங்களுக்கு முன்னால். அப்போது நான் அவனை சந்தித்திருக்கவில்லை.
யார் மீதும் யாரும் எதற்காகவும் கை நீட்டுவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததே இல்லை. அது யாராக இருந்தாலும் சரி.
“ஆமாம். நான்தான் அவங்களை அடிச்சேன். உங்க யாராலே என்னை என்ன பண்ண முடியுமோ பண்ணிப்பாருங்க”
அந்த நிகழ்வின் போது இதே விமான நிலையத்தில் அவனை சூழ்ந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் அவன் சீறிய சீறல் எல்லா தொலைகாட்சிகளிலும் வந்ததே, அந்த நேரத்தில் அவனது விழிகளில் இருந்த ரௌத்திரம் கூட இன்னமும் நினைவிருக்கிறது எனக்கு.
எப்போதுமே கோபம் அவனது பலவீனம். ஆனால் அந்த கோபக்காரனுக்குள் இப்படி ஒரு இசை எப்படி ஊற்றெடுக்கிறது என்பது நான் வியந்த ஒரு விஷயம்.
உயரத்திலிருந்து கீழே விழுந்தவன் மீண்டு எழுந்து மறுபடியும் சாதித்து உயர்ந்து நிற்கிறான். அவனது இந்த வெற்றிக்கு காரணம் இசை மீது அவன் கொண்ட காதல் மட்டுமே.
இதனிடையே அவனது அப்பா விட்டுச்சென்ற குடும்பத் தொழிலை கவனிப்பது அவனது பொழுது போக்கு என்று சொல்ல வேண்டும்..
என்னை பற்றி வேறே என்ன சொல்லிக்கொள்ளலாம்? அவனுடைய காதலி என்று சொல்லிக்கொள்ளவா? அல்லது இசையின் காதலி என்று சொல்லிக்கொள்ளவா? எப்படி சொன்னாலும் ஒன்றுதான்.
இந்த பிறவியில் அந்த இசை என் காதலை ஏற்காது என்று தெரிந்தும் காதலித்துக்கொண்டே இருக்கிறேன். உண்மையில் அவனது குணத்திற்கும், மனதிற்கும் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனை இப்படியே காதலித்துக் கொண்டிருக்கலாம். காதலித்துக் கொண்டிருப்பேன்.
இதில் நான் பெருமை கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், அவனது குரல் எனக்கு நிம்மதியின் வசிப்பிடம் என்றால் என்னுடைய குரல் அவனுக்கு அமைதியின் பிறப்பிடம்.
ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சில விஷயங்கள் தலை கீழாக மாறியிருக்கின்றன.
ஷ்யாமுக்கு தாய் தந்தை இல்லை. அவனுக்கென்ன இருப்பது அவனது அத்தை, மாமா அவர்களது மகள் சித்தாரா. ஷ்யாம் வீட்டு பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது அவனது அத்தை குடும்பம்.
இந்த ஆறு மாதங்களாக நான் இருப்பதும் அவனது அத்தை வீட்டில்தான். ஆனால் நான் அந்த வீட்டில் இருப்பதே அவனுக்கு தெரியாது.
அவன் அத்தை வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவான் என்பதால், அவன் கண்ணில் படாமல் எப்படியோ சமாளித்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறேன்.
நான் என் அறையின் ஜன்னலின் வழியே அவனை அவனே அறியாமல் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் பார்த்துவிடுவேன். ஆனால் அவன் என்னை பார்த்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன.
“என்ன ரொம்பவும் குழப்புகிறேனோ? எனது வாழ்வில் இன்னமும் சுவாரஸ்யமான குழப்பங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றாக சொல்கிறேன்
அவனது அத்தை மகள் சித்தாரா என்ற சித்து ஒரு பெண்கள் நல மருத்துவர். எனது பள்ளித்தோழி. எனக்கென இருக்கும் ஒரே தோழமை. என் முகம் பார்த்து மனம் படிக்கும் திறன் படைத்தவள். அவள்தான் இன்று என் அருகில் தவிப்புடன் நின்று கொண்டிருக்கிறாள்.
ஆரம்பம் முதலே எப்போதும் எனக்காகவே யோசித்து, எனக்காகவே தவித்து, எனக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதுதான் அவள் தலைவிதி. இதிலிருந்து அவள் தப்புவதற்கு வழியில்லை.
நான் சராசரியை விட சற்றே உயரம் அதிகம். ஒல்லியான உடல் வாகு, இடை தாண்டி நீண்ட கூந்தல் கண்கள், மூக்கு என எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டிய சாதாரண அளவில் இருக்கும் நேர்த்தியான முகம். இதுவே எனது அடையாளங்கள்.
பச்சை பூக்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் கிரீம் நிற காட்டன் சேலை என் இடையை தழுவி நின்றது. ஒற்றையாக விரிந்திருந்த முந்தானை என் தோளை தழுவியிருந்தது. காதுகளில் சின்னதாய் ஒரு ஜிமிக்கி. கழுத்தை ஒட்டிய ஒரு செயின். இதுவே எனது அலங்காரம்.
“நடு ராத்திரி ஃபிளைட் புக் பண்ண வேண்டாம்னாவது அவன்கிட்டே சொல்லி இருக்கலாம் இல்ல? அறிவே கிடையாதா உனக்கு?” என்னை கடித்தாள் சித்தாரா.
”எனக்கு தோணலையே நான் என்ன செய்ய?” என்றேன் நான்.
“ஆமாம். உனக்கு ஒண்ணும் தோணாது. புடவையை வேறே கிட்டிக்கிட்டு நீ நடக்குறதை பார்த்தாலே பயமா இருக்கு. நீ அங்கே இருக்குற நாலு நாளும் புடவையைத்தான் கட்டியாகணும்.. எங்கேயாவது விழுந்து வைக்க போறியோன்னு தோணுதுடி. விழுந்தேன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்”
நான் சிங்கப்பூர் கிளம்புகிறேன் என்று சொன்னதிலிருந்து ஆரம்பித்த புலம்பல் இது. இப்போது முன்னூறாவது முறையாக புலம்பி வைத்தாள் சித்தாரா.
”அதெல்லாம் எதுவும் ஆகாது நீ தைரியமா இரு” நானும் முன்னூறாவது முறையாக பதில் சொன்னேன் அவளிடம்.
“இப்போ ரொம்ப தேவைதானா சிங்கப்பூர்?” கேட்டாள் அவள்.
‘கண்டிப்பாக தேவைதான்” சொல்லிக்கொண்டேன் நான். “என்னுடன் வருவது ஷ்யாம் ஆயிற்றே!”
பத்து நாட்களுக்கு முன்னால்,
மலரே மௌனமா மௌனமே வேதமா?
நேரம் காலை ஐந்தரை மணியை தொட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் வந்த அந்த திரைப்பாடலில் உருகிக்கொண்டிருந்தனர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களும் ஜானகி அவர்களும்.
எனது படுக்கையறையில் கண்களை மூடிக்கொண்டு ஏதோ ஒரு தியானத்தில் இருப்பதைப்போல் அமர்ந்திருந்தேன் நான்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் இது போல ஒரு பாடல் உயிரோடு கலந்து இருக்குமா என்ன? எனக்குத் தெரியவில்லை
பாடல் முடிந்துவிட கட்டிலை விட்டு இறங்கி வந்து ஜன்னலின் வழியே பக்கத்து வீட்டை பார்த்தேன் நான். அது அவன் வீடு. அவன் அறையிலும் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.
“அவனுக்கும் உறக்கம் வரவில்லையோ? சீக்கிரம் விழித்துவிட்டனோ? அவனும் இந்த பாடலை பார்த்திருக்கக் கூடுமோ? பார்த்தவுடன் ஏதாவது நினைவு அலைகள் அவனை தட்டுமோ? ஒரு வேளை உடனே என்னை அழைப்பானோ?” ஒரு நொடிக்குள் இத்தனை கேள்விகள் என்னை சுழற்றி அடித்தன.
அவனுடன் பேசிவிடலாமா எனும் எண்ணம் எப்போதும் போல் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கும் மேலாக இப்போது அவனிடம் பேசவும் ஒரு விஷயம் இருக்கிறது.
ஒரு தொலைக்காட்சி சேனல் நடத்தும் மிகப்பெரிய இசைத் திருவிழா ஒன்று சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது. அதில் கலந்துக்கொள்ள எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. அவனும் கலந்து கொள்கிறான் எனும் செய்தியும் வந்திருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு பிறகு அவனுடன் சேர்ந்து இசைக்கும் இப்படி ஒரு வாய்ப்பை நழுவவும் விடுவேனா என்ன?
நான் இப்போது இருக்கும் உடல் நிலையில் நான் அங்கே செல்வதில் சித்தாராவுக்கு உடன்பாடு இல்லை. அதுவும் நான் தனியாக செல்வதில் கண்டிப்பாக உடன்பாடு இல்லவே இல்லை.
“அவன்கிட்டே பேசு. அவன் கூட வரேன்னு சொன்னா கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது யோசிப்பேன். அவன் உன்னை பார்த்துக்கலைன்னாலும் ஏதாவது பிரச்னைன்னா கண்டிப்பா கூட நிப்பான்” என்னுடைய தொடர் கெஞ்சலுக்கு பிறகு ஒப்புக்கொண்டாள் சித்தாரா.
அவனை ஒரு முறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஜன்னலின் வழியே தெரிந்த அவன் அறையை ஒட்டிய பால்கனியை பார்த்துக்கொண்டே இருந்தேன் நான்.
“வெளியே வா ஷாம்ஸ். ப்ளீஸ்” நான் வாய்விட்டு அழைத்த முடித்த நேரத்தில் டி ஷர்டும், ஷார்ட்சுமாக பால்கனியில் வந்து நின்றான் என்னவன். எனக்குள்ளே மொத்தமாக பூத்தன சந்தோஷப் பூக்கள்.
பக்கவாட்டு சுவற்றில் கை வைத்துக்கொண்டு அதிகாலைக்கான அலங்காரங்களுடன் சூரிய உதயத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம் வானத்தை ரசிக்கலானான் அவன்.
“பேசிவிடலாமா? அவனிடம் பேசிவிடலாமா?” யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாக கைப்பேசியை எடுத்து அவனைப் பார்த்துக்கொண்டே அவனது எண்ணுக்கு அழைத்தேன்.
நிதானமாக அதை எடுத்து பார்த்தான் அவன். எப்போதும் என் அழைப்பு வரும் போது அவனது கைப்பேசி திரையில் எனது புகைப்படம் ஒளிரும்.
அழைப்பை ஏற்காமல் திரையை பார்த்துக்கொண்டு அவன் நிற்பதை என்னால் பார்க்க முடிந்தது. சில நொடிகள் கழித்து இடம் வலமாக தலையசைத்துக் கொண்டவன் அழைப்பை ஏற்காமல் மறுபடியும் வானத்தை பார்க்கலானான்.
நான் விடுவதாக இல்லை. மறுபடியும் அழைத்தேன். அவனுக்குள் கொஞ்சம் கோபம் மூண்டிருக்க வேண்டும். கைப்பேசி திரையை பார்த்துவிட்டு கைப்பேசியை அங்கிருந்த கூடை ஊஞ்சலின் மீது தூக்கி போட்டுவிட்டு திரும்பி நின்றுக் கொண்டான்.
‘இல்லை நீ இன்று என் அழைப்பை ஏற்றே ஆக வேண்டும்” எனக்குள் சொல்லிக் கொண்டவள் மறுபடியும் அழைத்தேன். ஒலிக்கிறது கைப்பேசி திரும்பவேயில்லை அவன்.
அவனது கைப்பேசியின் அழைப்பு ஒலி எப்படியும் நான் பாடிய பாடல்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் முகத்தை கூட அவனால் ஒதுக்கி விட முடியும். ஆனால் என் குரலை அவனால் நிராகரிக்கவே முடியாது.
அவன் கண்களை மூடிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்பது தெரிந்தது.
“பிக் அப் ஷாம்ஸ்” நான் வாய்விட்டு சொல்ல ஏதோ ஒன்று எனது இருப்பை அவனுக்கு உணர்த்தியதைப்போல் சடக்கென என் ஜன்னலின் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். நான் இங்கே சுவற்றோடு பதுங்கிக்கொண்டேன்.
சில நொடிகள் கழித்து தலையசைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டான். ஒரு ஆழ் மூச்சை எடுத்துக்கொண்டேன் நான். அழைப்பு ஒலித்து. ஓய்ந்தது.
“என்ன செய்வான்? திட்டுவானா? திட்டிவிட்டுப் போகட்டும்” மறுபடியும் அழைத்தேன்.
இந்த முறை விருட்டென திரும்பியவன் கைப்பேசியை கையிலெடுத்தான். என்ன தோன்றியதோ அழைப்பை ஏற்று கைப்பேசியை காதுக்கு கொடுத்தான். எனக்குள்ளே படபட அலைகளின் நாட்டியம். அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க அவனது அழுத்தமான மூச்சுகள் மட்டும் எனக்கு கேட்டுக்கொண்டிருக்க
“ஹலோ ஷ்யாம்” மெல்ல அழைத்தேன்.
“என்ன மேடம்? சௌக்கியமா?” கேட்டான் நிதானமாக அதே நேரத்தில் அழுத்தமாக.
“ம். நல்லா இருக்கேன். நீங்க?”
“ம். இருக்கேன்” என்றான் அவன் கொஞ்சம் காரம் கலந்த குரலில். “உன் கால் எடுக்கவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உன்னோட இத்தனை நாள் பழகி தொலைச்சிட்டேனே! ஒரு ஸ்டேஜுக்கு மேலே என்னாலே உன்னை இக்னோர் பண்ண முடியலை.”
ஜன்னலின் வழியே அவனை பார்த்தபடியே மெலிதாக சிரித்துக்கொண்டேன்.
“சிரிக்காதே” என்றான் சூடாக ‘இந்த ஆறு மாசத்திலே உன் மனசு கொஞ்சமாவது மாறியிருக்கும். இனிமே காதல், கண்றாவின்னு எதுவும் உளற மாட்டே அப்படிங்கிற நம்பிக்கையிலே மறுபடியும் உன்கிட்டே பேசறேன். திரும்பவும் ஏதாவது அது மாதிரி நீ நடந்துகிட்டா இந்த ஜென்மத்திலே உன் கிட்டே பேச மாட்டேன். புரிஞ்சதா?”
“ம். புரிஞ்சது” என் குரல் அடி மட்டத்தில் இருந்தது.
“சரி சொல்லு எதுக்கு போன் பண்ண?’
“வர இருபதாம் தேதி சிங்கப்பூர்லே ரெண்டு மூணு நாள் மியூசிக் ஃபெஸ்டிவல் இருக்கில்ல அதுக்கு நீங்க வரீங்களா?”
“எஸ். வரேன்”
“நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா?”
“டன்” என்றான் சட்டென. “நான் போற ஃப்ளைட்லேயே உனக்கும் டிக்கெட் புக் ஆகியிருக்கும் டோன்ட் வொர்ரி.”
“தேங்க்ஸ்” என்றேன் மெதுவாக.
“சரி”. அப்புறம் பேசறேன்” என்று முடித்தான் அவன்.
அதன் பிறகு அவன் பேசவில்லை. டிக்கெட் பதிவுகள் பற்றிய குறுஞ்செய்திகள் மட்டுமே வந்தன அவனிடமிருந்து.
“இந்த மாதிரி நேரத்திலே எல்லாம் எவ்வளவு ஜாக்கிரதையா..” சித்தாராவின் குரல் என்னை மறுபடியும் விமான நிலையத்துக்கு தரை இறக்கிக் கொண்டுவர
“யம்மா தாயே…” நான் அவளை இடைமறித்தேன். “இதோட முந்நூறு தடவை ஆச்சு. நீ இப்படியே சொல்ல சொல்ல எனக்கு எதுவும் ஆயிடுமோன்னு எனக்கே பயமா இருக்கு. நீ தான் எல்லா டெஸ்டும் பண்ணி பார்த்துட்டே. பெருசா எந்த பிரச்னையும் இல்லைன்னு. சொல்லிட்டே. அதுக்கு மேலே நான் பார்த்துக்கறேன்ன்னு சொல்றேன்ல. அதுக்கும் மேலே அவன் பார்த்துப்பான்.”
“யாரு ஷ்யாமா? கிழிப்பான்” என்றாள் சித்தாரா “உன் உடம்பு இப்போ இருக்குற .நிலைமை பத்தி அவனுக்கு ஒரு க்ளூ கூட கிடையாது. நீயும் சொல்ல மாட்டே. ஆனா ஒண்ணு உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா கண்டிப்பா கூட நிற்பான் அந்த ஒரு நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கு”
“கண்டிப்பா நிற்பான் டோன்ட் வொர்ரி ” என்றேன் உறுதியாக.
“பார்க்கலாம்” பெருமூச்சு எடுத்துக்கொண்டாள் சித்தாரா. “ஆண்டவா. நீதான்பா கூட இருக்கணும்” மேல்நோக்கி கை கூப்பினாள் அவள்.
“ஸ்ஸ்ஸ்…. ஷப்பா…ஏண்டி இப்படி புலம்புற?” என்றபடியே நான் அவள் முகம் பார்க்க
“ஏன்னா நான் உன் ஃப்ரெண்ட்.டி. உனக்கு ஏதாவதுன்னா நான் எப்படி தாங்கிப்பேன்” அவள் விழியோரம் கண்ணீர் தேங்க
“ஆண்டவா இவ தளபதி ரஜினி ரேஞ்சுக்கு பேசறாளே. என்னை காப்பாத்து” என்றபடியே பார்வையை திருப்பிக்கொண்டேன் நான்.
இல்லையென்றால் என் கண்களில் கூட நீர் சேர்ந்திருக்கும். எப்போதும் அவள் கண்களில் நீர் சேரும் தருணங்களில் என் கண்களிலும் நீர் சேர்வதை என்னால் தவிர்க்கவே முடியாது.
“இந்த எருமை வேறே அப்போவே கிளம்பிடுச்சு வீட்டை விட்டு. அது நாம வர்றதுக்குள்ளே வந்து சேர்ந்திடும்னு நினைச்சேன். இன்னமும் காணோம்.” என்றாள் ஷ்யாமை கண்களால் தேடியபடியே
“நான் இப்போ அவனுக்கு போன் பண்ணவும் முடியாது. பண்ணா நீ எப்படி அவளை கூட்டிட்டு வந்தே, எங்கிருந்து கூட்டிட்டு வந்தே என்ன ஏதுன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பான்” புலம்பிக்கொண்டே இருந்தாள் என் தோழி.
‘இரு இரு. நான் ஏர்போர்ட்லே வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்கேன். வந்ததும் கண்டிப்பா கூப்பிடுவான்” என்றேன் நான். அதற்குள் ஒலித்தே விட்டது எனது கைப்பேசி. அழைத்தது அவனே.
கைப்பேசியில் “ஷாம்ஸ்” என ஒளிர்ந்தது திரை. நான் எப்போதும் அவனை அப்படி அழைத்துதான் பழக்கம். சித்தாராவின் முகத்துக்கு நேரே காட்டினேன் கைப்பேசியை.
“சொல்றேன்ல அவன் பார்த்துப்பான்னு. கவலைப்படாதே” அவள் தோளை தட்டிக்கொடுத்தேன்.
“அவன் அப்படி பார்த்துகிட்டா நான்தான் ரொம்ப சந்தோஷப்படுவேன். சரி பேசி எங்கே இருக்கான்னு கேளு. நீ அவன்கிட்டே போனதும் நான் கிளம்பறேன்” என்றாள் அவள் சற்றே நிதானப்பட்டவளாக.
அழைப்பை நான் ஏற்க “எங்கே இருக்கே?” என்றான் நேரிடையாக.
“ஏர்போர்ட்லேதான் இருக்கேன்”
“நான் இப்போதான் வரேன். கார்குள்ளே இருக்கேன். நேரே வி.ஐ.பி லாஞ்சுக்கு போயிடலாம். நீ பார்க்கிங் வா” ஆணையிட்டான் அவன்.
“சரி” அழைப்பை துண்டித்தவள் “காருக்கு வர சொல்றான்” என்றேன் சித்தாராவை பார்த்து.
சட்டென என் கரம் பற்றிக்கொண்டாள் அவள் “சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கில்ல. பத்திரமா இரு. ரொம்ப ரொம்ப பத்திரமா இரு.”
“கண்டிப்பா இந்த நாலு நாள் அவன் கூட சந்தோஷமா பாடிட்டு பத்திரமா திரும்ப வந்திடுவேன். அப்புறம் அவன் கண் முன்னாடி கூட போக மாட்டேன். போகவும் முடியாது” அவளிடம் சொல்லிக்கொள்ள வேண்டுமென தோன்றியது.
“அப்படி எல்லாம் இல்லை. ஒரு வேளை இந்த ட்ரிப்னாலே எல்லாம் சரியாகிட்டா?”
“ப்ச்” மறுத்தேன் நான்
“அதெல்லாம் நடக்காது சித்து. என்னை மனைவியா கனவிலே கூட ஏத்துக்க முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டான். அவன் மனசிலே கண்டிப்பா அப்படி ஒரு எண்ணம் இல்லை. இத்தனை நாளிலே ஒரு தடவை கூட அவன் என்னை தப்பா பார்த்தது கூட இல்லை. அதனாலே தேவை இல்லாம அவனை நான் கட்டாயப் படுத்தவும் விரும்பலை. இந்த நாலு நாள் எனக்கு போதும்” என்றேன் நான் புன்னகையுடன்,
‘அவன் என்னை ஏற்க முடியாததற்கு இருக்கும் வலுவான காரணம், அது சித்தாரா கூட அறியாத காரணம். அதை நான் அவளிடம் சொல்லவும் விரும்பவில்லை. ஒரு நாள் அதைப்பற்றி ஷ்யாமே சொல்லும் போது அவளுக்கு தெரியாமலா போய்விடும். எது எப்படிப் போனாலும் எனக்கு இந்த நான்கு நாட்கள் போதும்’
“சரி அதை விடு. எல்லாம் ஆண்டவன் நினைச்ச படியே நடக்கட்டும். மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு. கொஞ்சம் சின்னதா, சின்னதே சின்னதா எதாவது பிரச்சனைன்னாலும் உடனே எனக்கு போன் பண்ணு. நான் என்ன பண்றதுன்னு உடனே சொல்வேன் சரியா” படபடத்தாள் என் உயிர்த்தோழி. இல்லை இல்லை. அவள் உயிராக என்னை மதிக்கும் என் தோழி.
“சரிடா, நான் பார்த்துக்கறேன். நீ ரிலாக்ஸ்டா இரு. பத்திரமா வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு” அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தேன்.
விடுவிக்க மனமே இல்லாமல் என் கரத்தை விடுவித்தாள் அவள் பார்கிங் நோக்கி நடந்தேன் நான். நின்ற இடத்தில் அப்படியே நின்றுகொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் எனது தோழி.
வானெங்கும் இருள் சூழ்ந்திருக்க, நிலவு மட்டும் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, பார்க்கிங்கை அடைந்ததும், அவனது ஆடியை தேடி சுழன்றன என் கண்கள்.
அவனை முதல் முறை பார்க்க நான் அவன் வீட்டுக்கு சென்ற போது இருந்த அதே சந்தோஷ படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிக்கொண்டது என்னை.
தொடரும்
error: Content is protected !!