Skip to content
Post Views: 2,644
அந்த “ஜெயிச்சிட்டே போ” என்ற வார்த்தைக்கான அர்த்தம் சில நாட்களுக்கு பிறகுதான் புரிந்தது. வாய் திறந்து என்னிடம் சொல்லவில்லை என்றாலும் அந்த நிகழ்வுக்கு பிறகு அவன் யார் மீதும் கை நீட்டவில்லை! அது எனது குரலுக்கு அவன் கொடுத்த மிகப்பெரிய மரியாதை.
“இப்போதான் படத்துக்கு கமிட் ஆகியிருக்கேன். ஒரு வாரம் பத்து நாளைக்குள்ளே நான் பாட்டு கம்போஸ் பண்ணிடுவேன். நீ சொல்லு எப்போ ரெக்கார்டிங் வெச்சுக்கலாம்?” அன்று அவன் கேட்ட போது அதற்கு மேல் என்னால் ஏனோ மறுக்க முடியவில்லை.
எல்லாம் மாறினாலும் அவனது கோபம், அது மட்டும் இன்று வரை அப்படியேதான் இருக்கிறது என்றாலும் அது என்னிடம் மட்டும் அது அவ்வப்போது சலுகை காட்டும்.
அன்று நான் அவனிடம் விடைபெற்று கிளம்பும் நேரத்தில் சித்தாரா வெளியில் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க
Advertisement
“சந்தியா” அழைத்தான் ஷ்யாம். “இனிமே இது மாதிரி கிணத்திலே குதிப்பேன் அது இதுன்னு பேசக்கூடாது சரியா? என்றான்.
அவனை வியப்புடன் பார்த்தபடியே சின்ன புன்னகையுடன் தலையசைத்தேன் நான்.
நான் அவனிடம் ஒப்புக்கொண்டு விட்டு வந்த பிறகுதான் அம்மாவின் ஞாபகம் வந்தது. அவளிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைக்க என்பது சத்தியமாய் எனக்கு புரியவில்லை.
Advertisement
“பாட்டு பாட போறியா? சினிமாலேயா? ச்சே! அசிங்கமா இல்லை உனக்கு?” இப்படித்தான் ஆரம்பித்தார் அவர். “அதுவும் அந்த ஷ்யாம் கூட. அவனுக்கு இந்த ஊருக்குள்ளே என்ன பேர் இருக்கு தெரியுமா?
Advertisement
“கொலைக்காரன்!” ஷ்யாம் சொன்ன அந்த வார்த்தை என்னை பழைய நினைவுகளிலிருந்து நாங்கள் அமர்ந்திருந்த வி.ஐ.பி லாஞ்சுக்கு தரையிறக்கியது.
“ம்? என்னது கொலைக்காரன்?” நான் அவசரமாக கேட்க
“அது ஒரு படத்தோட பேரு. அது பத்தி ரெவியூ பார்த்திட்டு இருந்தேன்” என்றபடியே கைப்பேசியிலிருந்து பார்வையை விலக்கி எனது பக்கம் திரும்பியவனின் பார்வையில் நிறைய வியப்பு கோடுகள்.
Advertisement
“இப்போதான் நான் சரியா கவனிக்கறேன். என்ன நீ அதிசயமா புடவை எல்லாம் கட்டி இருக்கே?” அவன் கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிப்போனேன் நான்.
பொதுவாக நான் புடவை கட்டுவதற்கு யோசிக்கும் ரகம்தான். அது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நான் இப்போது இருக்கும் நிலையில் இந்த நான்கு நாட்களும் புடவை மட்டுமே அணிந்தாக வேண்டும். அதை அவனுக்கு என்னவென்று சொல்லி விளக்க.
“அது….. ஏன்? நா… நான். எப்பவும் புடவை எல்லாம் கட்டுவேனே” அவனை சமாளிக்க நான் முயல
“யாரு நீயா பாப்பா?” என்றான் என் கண்களுக்குள் பார்த்தபடியே “உன்னை பத்தி எனக்கு அணு அணுவா தெரியும் பாப்பா. ஒரு நாள் ஸ்டேஜ் ப்ரோக்ராம்க்கு புடவை கட்ட சொன்னாலே எப்படி மூக்காலே அழுவே?”
“அதெல்லாம் இல்லை, நான் நிறைய கட்டி இருக்கேன். வேணும்னா நீங்க பழைய ஃபோட்டோஸ் பாருங்க. அதிலே நான் நிறைய புடவை கட்டியிருப்பேன்” அவனது ஊடுருவும் பார்வையிலிருந்து அவனை திசைத் திருப்ப விழைந்தேன் நான்.
“நம்ம பழைய ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்கீங்களா?” இந்தக் கேள்வி சற்றே தழைந்த குரலில் எழுந்தது.
“ஏன் இல்லாம? நீ புடவை கட்டியிருக்க மாதிரி ரெண்டு ஃபோட்டோஸ் காட்டிடு நீ என்ன கேட்டாலும் வாங்கித்தரேன்” சொன்னவனின் விரல்கள் கைப்பேசியை துழாவ இன்னமும் அந்த புகைப்படங்களை வைத்திருக்கிறான் எனும் எண்ணமே என்னுள் ஆனந்த மழையை தூவியது.
“பாரு. இங்கே பாரு. இது சல்வார், இது ஜீன்ஸ்.” என நாங்கள் ஒன்றாக இசையமைத்த பாடிய சந்தர்ப்பங்களில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தான் என்னிடம்.
எங்களது சந்தோஷக் காலங்களின் சுகமான நினைவுப் பொக்கிஷங்கள் அவை.
அப்போதெல்லாம் பல நேரங்களில். அவனது அலுவலகத்திற்கும் அழைத்து சென்று அவன் தந்தை நடத்திக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தை பற்றியும், அவனது தொழில்கள் பற்றியும் எல்லா விவரங்களையும் எனக்கு கற்றுக்கொடுப்பான்.
இசை என்றில்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் கூட என்னைத் துணையாக சேர்த்துக்கொண்டான் அவன். அவனது அலுவலகத்தில் அமர்ந்து எனக்கும் ஏதாவது ஒரு வேலையை கொடுத்துவிட்டு அவனும் மடிக் கணிணியில் மூழ்கியிருப்பான்
அப்போது திடீரென “கண்ணாமூச்சி ஏனடா?” பாட்டு என்ன ராகம் சொல்லு என்பான்
“சஹானான்னு நினைக்கிறேன்” கொஞ்ச நேரம் அந்த பாட்டை பாடி பார்த்துவிட்டே சொல்வேன்.
“அருமையா பாடறே பாப்பா. இங்கே மண்டை காயுது. உன் குரல் கேட்டா ரிலாக்ஸ் ஆகிடும். கேள்வி கேட்டா நீ உடனே பாடுவே அதுக்குத்தான் கேட்டேன்.” என்பான் ரசிப்பான குரலில். “ஆனா கண்ணாமூச்சி ஏனடா சஹானா இல்லை. நாட்டகுறுஞ்சி” என்பான் கண்சிமிட்டி.
“இல்ல சஹானாதான்” நான் பாடிக்காட்டுவேன்.
“உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா” அவனும் பாடுவான் “இதுக்கு அப்புறம் ஒரு ஆலாபனை வரும் தெரியுமா? அதுதான் சஹானா”.
அந்த ஆலாபனை அவன் குரலில் திளைத்து மகிழ்ந்து என் செவி தொடும். நான் மயங்கிப்போய் கிடப்பேன்.
“என்ன?” என்பான் புருவம் உயர்த்தி.
“ஒன்ஸ் மோர் ப்ளீஸ்” என்பேன் கெஞ்சலாக.
புகைப்படங்களை திருப்பிக்கொண்டே வந்தவன் அவனது வீட்டு பால்கனியில் எடுத்த ஒரு புகைப்படத்தை காட்டினான்.
“இது எப்போ எடுத்தது தெரியுமா? ஞாபகம் இருக்கா?” புருவம் உயர்த்தி புன்னகையுடன் பார்த்தான்.
“மறக்க முடியுமா ஷ்யாம்?” என்றேன் நான் மென்னகையுடன்..
அப்போதெல்லாம் ஒரு சில நாட்கள் அவன் வீட்டு சமையலறையில் எனக்காக காபி போட்டுக் கொண்டிருப்பான்.
“ஹேய்.. இப்போ திடீர்னு ஒரு டியூன் ஸ்ட்ரைக் ஆகுது பாப்பா. வா வாசிச்சு காட்டறேன்.” என்பான் திடீரென.
அப்படி உருவானதுதான் அவன் சற்று முன் ரசித்துக்கொண்டிருந்த “மழைத்தேடி காத்திருந்தேன்” பாடல்.
அவன் வீட்டு பால்கனியில் மழைச்சாரல் எங்களை உரசி உரசி விலகிக்கொண்டிருந்த நேரத்தில் இருவரும் அருகருகே அமர்ந்து உருவாக்கினோம் அடுத்த பாடலை. அப்போது எடுத்த புகைப்படம் அது.
“லவ்லி டேஸ் இல்லையா பாப்பா? நீ எனக்கு எவ்வளவு செஞ்சிருக்கே பாப்பா. கீழே விழுந்து எழுந்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்த என்னை உன் குரலாலே எழுப்பி விட்டு, அதுக்கு அப்புறம் என்கிட்டே நிறைய திட்டு வாங்கி, அப்பப்போ மிரட்டி..”
“யாரு நான் உங்களை மிரட்டினேனா?” நான் விழி விரித்து கேட்க
“பின்னே? வந்த முதல் நாளிலேயே என் கையை கட்டிப்போட்டியே. அதுக்கு அப்புறம் இன்னைக்கு வரைக்கும் அது யார் மேலேயும் ஒங்கலையே பாப்பா” குரல் சற்றே கரைய சொன்னான். அவன். சிறு புன்னகையுடன் விழிகளை தாழ்த்திக்கொண்டேன் நான்.
“ஒவ்வொரு பாட்டுக்கும், படத்தோட ரீ ரெக்கார்டிங்க்கும் உன்னைத் திட்டி, சண்டைப்போட்டு அப்புறம் சமாதான படுத்த ஐஸ்க்ரீம், சாக்லேட்ன்னு லஞ்சம் கொடுத்து…” அழகான சிரிப்புடன் அவன் பேசிக்கொண்டே இருக்க,
அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தந்த ஏதேதோ சந்தோஷ நினைவுகளின் ஊஞ்சலில் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க, அவன் விரல்கள் ஒவ்வொரு புகைப்படமாய் நகர்த்திக்கொண்டேயிருக்க அப்போது அந்தத் திரையில் வந்து நின்றது அந்த புகைப்படம்.
புகைப்படங்களை நகர்த்திக்கொண்டிருந்த அவனது விரல்கள் சட்டென நின்றன. அந்த புகைப்படத்தில் நின்றிருந்தாள் அந்தப் பெண்.
நிறத்திலும், அழகிலும், முக வடிவிலும் கொள்ளை அழகு பெட்டகம் அவள். அந்த விஷயத்தில் எனக்கும் அவளுக்கும் நூறு கிலோமீட்டர் தூரம்.
இதுவரை நான் அவளையோ அவள் புகைப்படத்தையோ பார்த்ததே இல்லை எனும் போதிலும் அவளை பார்த்தவுடனேயே, அவள்தான் சாருவாக இருக்க வேண்டுமென எனக் கூவியது எனது உள்மனது.
திடீரென அவனிடம் ஓடி வந்து தஞ்சம் புகுந்த ஒரு வித அமைதியுடன் அந்த புகைப்படத்தின் மீது விரல்கள் தாளமிட கண்களை விலக்காமல் அந்த புகைப்படத்தையே பார்த்தபடியே அமர்ந்திருந்தான் ஷ்யாம்.
சடசடவென பொழிந்த மழை ஒரே நொடியில் நின்று போனதைப் போன்றதொரு உணர்வு எனக்கு.
‘அவளென்றால் அவனுக்கு அத்தனை பிடித்தமோ? இருக்கட்டும் அதனால் என்ன? மகிழ்ச்சியுடன் வாழட்டும் இருவரும்” புன்னகையுடன் சொல்லிக்கொண்ட எனக்குள்ளே அடுத்த கேள்வி உதயம்
“பார்ப்பதற்கே இத்தனை அழகென்றால் அவள் குரல் எப்படியிருக்கும்? என்னைவிட நன்றாக பாடுவாளோ?. திருமணம் என்ற ஒன்று முடிந்தவுடன் அவளையும் தனது இசையில் கண்டிப்பாக பாட வைப்பானோ? கொஞ்சம் மருகியது என்னுள்ளம்
‘அதனால் என்ன? அப்படி பாடவைத்தால் என்ன? அவர்கள் இருவரும் பாடும் பாடல்களை நானும் ரசித்து கேட்பேன்.’ என்னை நானே சாமாதான படுத்திக்கொண்டேன்.
‘இருவரும் இணைந்து “மலரே மௌனமா” பாடலையும் பாடுவார்களோ?’ மெலிதாக ஒரு அழுத்தம் எனக்குள்ளே. ஏனோ அந்த ஒரு எண்ணத்தை மட்டும் ஜீரணித்துக்கொள்ள சற்று சிரமமாக இருந்தது எனக்கு,
“பாடினால் பாடட்டும். அந்த பாடல் எனக்கு மட்டுமே சொந்தமா என்ன? எனக்கு இந்த நான்கு நாட்களும், அவன் இசையும் போதும்.” மூன்றாவது முறையாக எனக்குள்ளே சொல்லிக்கொண்டே அவன் முகம் பார்த்துக்கேட்டேன்
“இவங்க சாருதானே?” நான் கேட்டு முடிக்கவில்லை சரேலென விழிகள் விரிய என் பக்கம் திரும்பினானே பார்க்க வேண்டும்.
“உனக்கு சாருவை எப்படித்தெரியும்?”
தொடரும்
error: Content is protected !!