Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா

ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 18

காதல் இன்று

வெண்ணிலா அந்த பெரிய கேட்டட் கம்யுனிட்டியின் உள்ளேயே இருந்த கார்டனில் இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தன் லாப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படி காற்றாட வெளியே உட்கார்ந்து இருப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

அந்த பார்க்கில் வயதானவர்களும் நடுத்தர வயதினரும் வாக்கிங் போய் கொண்டிருந்தார்கள்.



Advertisement

சிலர் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு பேசிக் கொண்டு நடந்தார்கள்.

அவள் லாப்டாப்பில் போட்டோக்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவை போன மாதம் அவள் முதல் சம்பளம் வாங்கிய அன்று மறுநாள் எடுத்தது!

Advertisement

ஆமாம். வெண்ணிலா இங்கு இரண்டு மாதங்கள் ஆகி விட்டன!
அவள் குடும்பத்தினர் அவளை ஊருக்கு வருவதற்கு மட்டும் இன்னமும் விட வில்லை!

Advertisement

காரணம் அவள் அப்பா அருண்!

அவர் இன்னமும் கோபமாக தான் இருக்கிறாராம்!

அக்காக்கள் இருவரும் கூடவே அவ்வபோது சுதாவும் கூட வீடியோ காலில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

Advertisement

ஒரு முறை மாமாக்களோடும் அன்புவோடும் கூட சென்னைக்கு அவள் ஆபீசில் வைத்து அவளை நேரில் பார்த்து விட்டும் கூட போனார்கள்!

அவள் அம்மா வசந்தா மட்டும் ஏனோ வீடியோ காலில் வருவதேயில்லை! நேரிலும் கூட அவர்களோடு வர வில்லை!

அது தான் வெண்ணிலாவுக்கு கொஞ்சம் வருத்தம்!

அவள் இந்த கம்பனியில் முதல் சம்பளம் வாங்கிய மறுநாள் அவளின் பிறந்தநாளும் கூட!

அன்று கூட எல்லோரும் வீடியோ காலில் வந்தார்கள்! ஆனால் வசந்தா மட்டும் அன்று கூட வராதது அவளுக்கு வருத்தம் தந்தது!

ஆனால் அந்த வருத்தத்தைக் கூட ஒருவன் நீக்கி விட்டான்! அது வேற யார் ஜீவா தான்!

அன்று ஞாயிறு ஆதலால், அன்று முழுவதும் அவளுக்காகவே ஒதுக்கி அவளை வெளியில் கூட்டி சென்றான்!

மயூவும் போனில் வாழ்த்தி இருந்தாள்!

கூடவே ஒரு டிசைனர் சாரி வேறு பரிசாக கொடுத்தாள்.

அவளின் பிறந்த நாளை அவள் ரெஸ்யூம் மூலம் ஜீவாவுக்கு ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது!

அதனால் மயூவும் அவளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே சாரி பரிசளித்து “இத தான் நீ கட்டுற!” என்று உரிமையுடன் சொல்லி விட்டாள்!

அவள் அதன் ப்ளவுசை எடுத்து அவள் அக்கா மதிக்கு அனுப்பி அவள் அதில் இன்னுமும் அழகாக ஆரி ஒர்க் செய்து ரொம்பவும் அழகாக தைத்து கொரியரில் அனுப்பியும் வைத்து விட்டாள்!

அதை அணிந்து கொண்டு அவள் வந்த போது ஜீவா அவளைப் பார்த்த அந்த பார்வை!

அது இன்னமும் அவளை என்னமோ செய்து கொண்டு தான் இருக்கிறது!

ஆனால் ஏன் அப்படி பார்த்தான்? அதில் அவ்வளவு காதல்! ஆனால் எப்படி அவள் மேலும்? அப்ப மயூ யாரு?

அந்த பார்வையில் தெரிந்த அந்த உண்மையான நேசம் அவளை மிகவும் குழப்பியது!

குழப்பினாலும் உள்ளுக்குள் சந்தோஷ பேரலை உருவாவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை!

இது எங்கே போய் முடியும்?

அவளுக்கு அவன் பார்வையை தாங்க முடியாமல் வெட்கம் தான் வந்தது!

முகம் சிவந்து தலையை  குனிந்து கொண்டு மறைக்கப் பார்த்தாள்!

“எங்க போலாம் நிலா?” ஜீவா கேட்டான். இப்போது அவனும் நிலா என்றே அழைக்கிறான் அவளை!

“நீங்க சொல்லுங்க சார்!”

“உனக்கு தான் இன்னிக்கு பர்த்டே! நீ தான் சொல்லணும்! உன் இஷ்டப்படி தான் எல்லாம்!”

“நான்… எங்க ஊரில் இருக்கும் போது இப்படி பிறந்த நாள் என்றால் சமயபுரம் போவாம், இல்லையென்றால் ஐயப்பன் கோவில் போவோம்! எனக்கு அது ரொம்ப பிடிக்கும். அந்த கோவிலில் இருக்கும் அந்த அமைதியான சூழ்நிலை!”

வெண்ணிலாவுக்கு அவள் அப்பா செய்யும் அலப்பறைகள் மீது தான் கோபமே தவிர, ஐயப்பன் மீது அல்ல!

அவளும் சிறு பெண்ணாக இருக்கும் போது அவள் அப்பாவுடன் சேர்ந்து மாலைப் போட்டு மலைக்கு சென்று இருக்கிறாள்!

அவளின் இஷ்ட தெய்வம் அவர் தான்!

“ம்ம். சரி அப்ப ஐயப்பன் கோவிலுக்கே போவோம்! இரு.. நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்!

அங்க ட்ரஸ் கோட் இருக்குன்னு நினைக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றவன், ஒரு பட்டு வேஷ்டி சர்ட் அணிந்து வந்தான்!

இருவரையும் பார்ப்பவர்கள், நல்ல பொருத்தமான ஜோடி எண்ணும் அளவுக்கு இருந்தார்கள் இருவருமே!

அவ்வளவு பாந்தமாக இருந்தது பார்ப்பதற்கு!

வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே லிப்டிற்காக நின்று கொண்டிருந்த போது, லிப்டில் இருந்து வெளியே வந்த எதிர் வீட்டு மாமியும் கூட ஆச்சர்யமாக பார்த்தார்!

“இன்னிக்கு நிலாவோட பர்த்டே மாமி, அதான் கோவிலுக்கு போறோம்!” என்றான் ஜீவா அவரிடம்!

“ஓ அப்படியா, வாழ்த்துக்கள்ம்மா நிலா, சாயங்காலம் வீட்டுக்கு வா, வெத்தலை பாக்கு வாங்கிட்டு போ!” என்றார் அவரும்!

கோவிலிலும் அப்படியே!  எதிரில் வந்தவர்கள் திரும்பி ஒருமுறை பார்த்து விட்டே சென்றார்கள் இவர்களை!

வெண்ணிலா திருப்தியாக சாமி தரிசனம் முடித்து, வீட்டுக்கு போகும் வழியில் மயூவின் பாவரிட் அம்மன் கோவில் ஒன்றுக்கும் போய் விட்டு, அங்கிருந்தவாறே மதியுடனும் வளரிடமும் வீடியோ காலில் பேசினாள்! அன்புவிடமும் தான்!

அவர்கள் எல்லோரிடமும் ஜீவாவும் பேசினான்!

அவர்கள் எல்லோர் மனதிலும் ஒரே மாதிரியான எண்ணமே தோன்றியிருந்தது!

இந்த ஜீவா சார்க்கும் நிலாவுக்கு எவ்வளவு பொருத்தம்!

அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் இணைஞ்சா ரொம்பவே நல்லா இருக்கும்!

ஆனால் கடவுள் என்ன முடிச்சுப் போட்டு வச்சுருக்காரோ? என்ற எண்ணமும் கூடவே தோன்றி மறைந்தது அவர்களிடத்தில்!

பகல் முழுவதும் அங்கே இங்கே என்று பல இடங்கள் சுற்றினார்கள்!

மாலை வேளை முடிந்து, இரவு தொடங்கும் நேரம் தான் வீட்டுக்கு வந்தார்கள்!

வீட்டுக்கு  வந்தவுடன் இன்னமும் அவளுக்கு சர்ப்ரைஸ் வைத்திருந்தான் ஜீவா!

வந்து வீட்டுக்குள் நுழைந்து லைட்டை போட்டவுடன் வெண்ணிலா அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள்!

ஏனெனில் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்!

அவன் வருணின் துணையுடன் வீட்டை அலங்கரித்து கேக் ஆர்டர் பண்ணி எல்லாம் ரெடியாக வைத்து இருந்தான்!

“ம்ம். அங்கிள் நீங்க சொன்னபடியே எல்லாம் ரெடி!” என்றான் உள்ளே இருந்து வந்த வருண்!

அவனுக்கும் வெண்ணிலாவை ரொம்ப பிடிக்கும்!

அவளிடம் தினமும் டுயுசன் படிக்கிறான்!

அவன் படிப்பதைப் பார்த்து அந்த ப்ளாக்கில் இருந்த இன்னும் இரண்டு குழந்தைகளும் வர, ஆபிஸ் முடிந்து வந்த பின் அவர்களுக்கும் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டிருந்தாள் வெண்ணிலா டீச்சர்!

இந்த செய்தி வெளியே வாட்ஸ்அப் குருப் மூலம் பரவி, இது போதாது என்று அடுத்த ப்ளாக்கில் இருக்கும் குழந்தைகளுக்கும் கிளாஸ் எடுக்க கேட்க ஆரம்பித்தனர்!

அவர்களுக்கும் ஆன்லைன் மூலமும் எடுக்க தொடங்கி விட்டாள் வெண்ணிலா!

எல்லோரிடமும் நல்ல கணிசமான தொகை பீஸாக கேட்கும் படி ஜீவா கைட் பண்ணினான்!

“இவங்க எல்லாம் நல்ல வசதியானவங்க தான் நிலா, நல்லா கிளாஸ் எடுக்கிற உனக்கு எவ்வளவு வேணுமின்னாலும் தர அவங்க ரெடியா தான் இருப்பாங்க!

உன் ஊரில் பிக்ஸ் பண்ணின மாதிரியெல்லாம் இங்க குறைவா பிக்ஸ் பண்ண வேண்டாம்” என்றும் சொல்லியிருந்தான்!

இதன் மூலமும் அவளுக்கு ஒரு ரெவன்யூ சோர்ஸ் ரெடி பண்ணிக் கொடுத்தான் ஜீவா!

உள்ளிருந்து  வெளியே வந்தார்கள் இன்னமும் சில குழந்தைகள்!

எல்லாரும் அவளின் ஸ்டுடென்ட்கள் தாம்!

குழந்தைகள் எல்லோரும் வாழ்த்து பாட, அவள் கேண்டில் ஊதி அணைத்து விட்டு கேக் வெட்டினாள்!

குழந்தைகள் எல்லோரும் கோரசாக “அங்கிள்க்கு ஊட்டுங்க!” என்று சொல்லி கத்தி அதகளம் பண்ண, அவள் கொஞ்சம் வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்!

அவன் வாங்கிக் கொள்ள ரெடியாக நின்றான், கண்கள் முழுவதும் காதலைத் தேக்கிக் கொண்டு!

என்ன இப்படி பார்க்கிறான்! அப்படியே என்னை கேக்கோடு சேர்த்து என்னையும் முழுங்கி விடுவது போல! அவளுக்கு வெட்கமாக இருந்தது!

“ம்ம். ஆண்ட்டி கேக்கை ஊட்டுங்க” குழந்தைகள் இன்னுமும் ஊக்கினார்கள்!

அவள் வெட்கப்பட்டுக் கொண்டே கேக்கை அவனுக்கு ஊட்ட, அவன் அதை புன்னகையுடன் வாங்கி கொண்டு பதிலுக்கு அதில் இருந்து கொஞ்சம் எடுத்து அவளுக்கும் ஊட்டினான்!

இது எல்லாவற்றையும் திறம்பட தன் கேமிராவில் ஷூட் பண்ணிக் கொண்டிருந்தான் நம் வருங்கால சூப்பர் சினிமாட்டோக்ராபர் வருண்!

கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள் வெண்ணிலா!

கேக்கோடு மற்ற ஸ்நாக்ஸ் ஜூஸ்களும் இருந்தன அவர்களுக்கு!

அவர்கள் கொஞ்சம் கேக்கை எடுத்து வெண்ணிலா முகத்தில் அப்பி விட்டு “ஓ!” என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்!

வெண்ணிலா திகைத்து விட்டாள்!

“டேய் என்ன பண்றீங்க?” ஜீவாவும் அவர்களை செல்லமாக மிரட்டினான்!

டிஷ்யூ கொண்டு அவனே அவள் முகத்தை துடைத்தும் விட்டான்!

மிக அருகே அவன் முகம் கண்டு அவள் கூச்சப்பட்டு நிற்க, அவனோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை!

ஒரு வழியாக அவர்கள் எல்லோரும் ஆடி பாடி முடித்து கிளம்பியவுடன்,

வெண்ணிலா மெதுவாக அவனிடம் வந்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ் சார்!”

“எதுக்கு நிலா தாங்க்ஸ் எல்லாம்!”

“இல்ல நான் இதுவரைக்கும் இப்படி ஒரு பர்த் டே கொண்டாடினது இல்ல!

என் வீட்டில் கேக் வெட்டி கொண்டாட நீ என்ன சினி ஸ்டாரா என்று கேட்பார்கள்!

கோவிலுக்கு போவோம் புது ட்ரஸ் போட்டுக்கிட்டு! அப்புறம் ஸ்கூலில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுப்போம். அவ்வளவு தான்!

ஆனா எனக்கு இப்படி கேக் வெட்டி கொண்டாட ஆசை தான்! ஆனா முடிஞ்சது இல்லை!

இப்படி கொண்டாடுறது இது தான் முதல் முறை உங்களால் தான்!

அதான் தாங்க்ஸ் சொன்னேன்!”

அவள் கொஞ்சம் இமோஷனலாக பேசினாள்!

அவளை அப்படியே தன் தோளோடு சாய்த்து அணைத்துக் கொள்ள பரப்பரத்தன ஜீவாவின் கைகள்!

“இதுல என்ன இருக்கு நிலா! ஒண்ணும் பீல் பண்ணாதே, இனி எல்லா பர்த்தேயும் இப்படியே கொண்டாடுவ!”

“எல்லா பர்த்டேக்கும் கூட நீங்க இருப்பீங்களா ஜீவா சார்?” அவள் கண்கள் அவனைப் பார்த்து காதலுடன் கேட்டன!

“நீ விரும்பினா கண்டிப்பா இருப்பேன்” என்றன அவன் கண்களும் பதிலுக்கு!

“குட் நைட்” சொல்லி தூங்க சென்றார்கள்!

அப்போது எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் திரும்ப திரும்ப போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா!

இப்போதும் கார்டனில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதும் அதையே தான்!

அப்போது அருகில் ஒரு சத்தம்!

“ஆ. அம்மா.. கால் பிசகிடுத்தே” வலியின் வேதனையில் ஒரு வயதான குரல்!

வெண்ணிலா லாப்டாப்பை மூடி வைத்து விட்டு திரும்பிப் பார்த்தாள்!

எதிர் வீட்டு மாமி தான்!

அவரும் அங்கே வாக்கிங் செய்து கொண்டிருந்தவரின் கால் தான் இப்போது பிசகி வலியில் துடித்துக் கொண்டிருந்தார்!

வெண்ணிலா அவர் அருகே ஓடினாள்!

“என்ன ஆச்சு மாமி!”

“கால் பிசகிடித்துடிம்மா, ரொம்ப வலிக்கறது!” அவர் முகம் வேதனையில் கோணலாகியது!

“இருங்க.. இருங்க இப்படி காலை வைங்க”  என்று சொல்லிய வெண்ணிலா அவரை மெதுவாக லிப்ட் அருகே தோளில் சாய்த்து பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு போய் விட்டாள்!

கூடவே வந்த அவர் கணவர், வெண்ணிலாவின் லாப்டாப்பை தூக்கிக் கொண்டு பின்னலாயே வந்தார்!

வீட்டிற்குள் போனவுடன் “கொஞ்சம்  நல்லெண்ணெய் எடுத்துட்டு வாங்க” என்று சொன்ன வெண்ணிலா மெல்ல அவரின் காலை நீவி விட்டு சுளுக்கு வழித்து விட்டாள்! அவளின் கிராமத்தில் கூட அவளிடமும் வசந்தாவிடமும் தான் வருவார்கள்! அவளுக்கு சுளுக்கு வழித்து விட தெரியும்!

அவளின் கை வைத்தியத்தில் கொஞ்சம் வலி குறைந்ததும் மாமி கேட்டார்!

“ரொம்ப தாங்க்ஸ்டிம்மா குழந்தை! இந்த காலத்து பொண்ணா இருந்தாலும் இன்னும் நம்ம பழைய வைத்திய முறையை கத்து வச்சுருக்க!

அன்னிக்கு கூட போர்த் ப்ளோர்ல ஒரு வீட்டுக் குழந்தைக்கு குடல் ஏத்தம் வந்து நீ தான் வயிற்றைத் தட்டி விட்டு சரி ஆக்கினாயாம்!

அசோசியேஷன் மீட்டிங்கில் உன்னைப் பற்றியும் பெருமையா பேசினாங்க!

அடுத்த மீட்டிங்கிற்கு என்னோட கூட உன்னையும் கூட்டி வர சொன்னாங்க!

ஏன்னா அசோசியேசன் செகரட்டரியே நீ வைத்தியம் பார்த்த குழந்தையின் தாத்தா தான்!

நீ மட்டும் இல்லை அவங்க பயந்து போய் ஆம்புலன்ஸ்கே போன் பண்ணி இருப்பாங்க!

நீ அந்த குழந்தைக்கு தட்டி விட்டு சரி பண்ணிய பிறகு அவர்கள் ஹாஸ்பிட்டல் போய் இருக்காங்க!

குழந்தைக்கு நல்லாவே சரி ஆகிடுச்சு, ஆனா இனிமே இப்படி டாக்டர் இல்லாதவங்க கிட்ட காட்டி ரிஸ்க் எடுக்க வேண்டாம், ஒரு நேரம் போல இருக்காதுன்னு அட்வைஸ் வேறே பண்ணினாங்களாம்!”

மாமி சொல்லி சிரித்தார்!

“எப்படியோடிம்மா, இங்க எல்லோர் மனசுலயும் உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம்தான் இருக்கு!

ஆனா எனக்கு மட்டும் ஒரு சின்ன நெருடல்!”

“நெருடலா என்ன மாமி?” இதுவரை சும்மா சிரித்துக் கொண்டு மாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கொஞ்சம் அதிர்ந்து போய் கேட்டாள்!

“இவ்வளவு நல்ல குழந்தை நீ! அப்புறம் ஏன் ஜீவாவோட இப்படி லிவிங்கில் இருக்க?”

“லிவிங்கிலா நானா? ஜீவா சாரோடா? என்ன மாமி சொல்றீங்க?” அவள் வெகுவாக அதிர்ந்து போய் தான் விட்டாள்!

“ஆமா, அப்படி தான் நாங்க நினைச்சுட்டு இருக்கோம்!

அப்படி தான் இந்த வருண் கூட சொன்னான்! இது மயூவுக்கும் தெரியும்னு வேற சொன்னானே!”

“வருணா? அடப்பாவி!”

“அய்யோ மாமி!  நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல! அவர் என்னோட மென்டார், குரு மாதிரி! என்ன மாமி இப்படி சொல்லிட்டீங்க!”

“அப்ப லிவிங்கில் இல்லையா? அது தானே பார்த்தேன்! ஜீவா அப்படிப்பட்ட பையன் இல்ல! மயூவும் இப்படி விட்டுட்டு இருக்க மாட்டான்னு!”

வெண்ணிலா அவள் ஜீவா அவளைப் படிக்க வைத்தது, அப்புறம் அவள் வேலைக் கிடைத்து இங்கே வந்த விவரம் எல்லாம் சொன்னாள்!

கேட்டுக் கொண்ட மாமி, நான் தப்பா நினைச்சாலும், இவங்க ஜோடி ரொம்ப பொருத்தம் தான் என்று மனதுள் நினைத்துக் கொண்டார்!

ஆனால் மயூ இதை ஒத்துக் கொள்வாளா? ஜீவா தானே அவளுக்கு எல்லாம்! என்ற கேள்வியும் அவருள் எழுந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!