Skip to content
Post Views: 6,890
மீண்டும் ஒருமுறை
“உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே……”(உன்னை விட- தமிழ் பாடல்)
பாடலின் இசைக்கேற்ப வேலினி அவனுடன் நளினமாக ஆடிக்கொண்டிருந்தாள். அவன் முகம் அவளுக்கு தெரியவில்லை, எனினும் அவன் இதழ்களில் மிளிர்ந்த புன்னகையும், அவன் கண்கள் கூறும் காதல் கதையும் அவளுக்கு நன்றாக தெரிந்தது.
திடீரென அவள் உடலை யாரோ அசைத்து உலுக்கிட, அவன் கண்ணை விட்டு மறைந்து காணாமல் போயிருந்தான். பட்டென்று இவளும் எழுந்து அமர்ந்து விட, தன் முன்னே சற்று முறைப்போடு நின்று கொண்டிருந்த அன்னையை கண்ட பின்பு தான், தான் கண்டது கனவு என்பது புரிந்தது அவளுக்கு.
Advertisement
நமக்கு எதுக்குடா இப்படி ஒரு கனவு என்று அவள் மனம் நினைத்துக் கொண்டிருந்தபோதே அவள் அன்னை பேச ஆரம்பித்திருந்தார். “என்ன பாப்பா? நான் கூப்பிட்டுட்டே இருக்கேன் எந்திரிக்கவே மாட்டேங்குற.
இன்னிக்கு இரண்டாவது வருஷம் காலேஜ் முதல் நாள். சீக்கிரம் கெளம்பு”, என்று கூறியதும், “அடடா ஆமால”, என்று கண்ணை கசக்கி நேரத்தை பார்க்க அது ஆறரை என்று காட்டியது. “அய்யய்யோ பஸ் ஏழரை மணிக்கு வந்துருமே ஒரு மணி நேரத்துல எப்படி கிளம்பி போக போறேன்”, என்று அறக்கப்பறக்க எழுந்து புறப்பட ஆரம்பித்தாள் வேலினி.
வேலினி, ஆறுமுகம் மற்றும் தெய்வானை தம்பதியின் தவப்புதல்வி. இவளுக்கு பிறகு ஒரு தங்கையும் உண்டு அவள் குழலினி.
Advertisement
பள்ளி இறுதி ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஒரு பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் (ECE) துறையில் சேர்ந்திருந்தாள் வேலினி.
Advertisement
உண்மையில் அவளுடைய விருப்பம் வேறாக இருக்க அவள் பெற்றோரின் விருப்பத்தின் படி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்தவள், இப்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள். இன்று தான் இந்த ஆண்டின் முதல் நாள்.
முதல் நாளிலேயே தாமதமாக கூடாது என்று விரைவாக குளித்து தயாராகி சமையலறைக்கு தன் அன்னையைத் தேடிக் கொண்டு சென்றாள். வேகமாக வந்தவள் அங்கு கண்ட காட்சியை கண்டு அலறி அங்கேயே கால்களை சுருக்கி அமர்ந்து நடுங்க ஆரம்பித்தாள்.
வேலினி குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் குழலினி ஏதோ அவசரத்திற்காக தன் தாயை அழைக்க, தெய்வானை சட்டென்று கையில் இருந்த கைப்பிடி துணியை அடுப்பின் மேலே வைத்து விட்டு சென்றிருந்தார்.
Advertisement
அதன் அருகே இருந்த நெருப்புபட்டு அது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த காட்சியை கண்டு தான் வேலினி அப்படி அலறினாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவருடைய பாட்டி சிவகாமி தான் அந்த வயதிலும் தன் பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு சமையல் கட்டுக்குள் முதல் ஆளாக நுழைந்தார். நெருப்பை கண்டு தான் அலறுகிறாள் என்று புரிந்ததும் உடனே அவளை கட்டிக்கொண்டு அவளை அமைதிப்படுத்த முயல,
கூடவே மற்ற நபர்களும் வந்து விட ஆறுமுகம் முதலில் நெருப்பை அணைத்தவர், மகளை அழைத்துக் கொண்டு வெளியே வரவேற்பறையில் அமர்த்தினார்.
அவளை வெகு நேரம் சமாதானப்படுத்த முயற்சி பண்ணிக் கொண்டிருந்தனர் அந்த குடும்பத்தினர். வேலினி இப்படி அலறுவதற்கும் குடும்பத்தினரின் முகத்தில் குடியிருந்த பயத்திற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருந்தது.
வேலினி சிறு பிள்ளையாக இருந்த சமயத்தில் ஒருமுறை நெருப்புக்கு இடையே மாட்டிக் கொண்டாள். அப்பொழுது இருந்து இப்போது வரை அவள் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை கண்டு விட்டாள் பயந்து அலற ஆரம்பித்திடுவாள்.
இதன் காரணமாக மருத்துவரை அணுகிய போது மருத்துவர் கூட இவளுக்கு பிரச்சினை மனதில் இருப்பதால் அதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய முடியும். அதுவும் அவள் மனது வைத்தால் மட்டுமே என்று கூறியிருக்க, இன்றுவரை அவளுடைய இந்த பிரச்சனை தீராமலே இருக்கிறது.
அலறி துடித்து பிரம்மை பிடித்தது போல் அமர்ந்துவிட்டாள் என்றால், அவளை அதன் பிறகு அசைப்பது என்பது அத்தனை எளிதாக முடியாத காரியம்.
கல்லூரி செல்லும் முதல் நாள் காலையிலேயே இப்படி நடந்தது, சிவகாமி தெய்வானை இருவருக்கும் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
இருந்தும் இவள் இப்படியே அமர்ந்திருந்தால், சரிப்பட்டு வராது கல்லூரிக்கு சென்று தோழிகளை சந்தித்தால் ஒருவேளை மனநிலை மாறலாம் என்று அவளை அதட்டி உருட்டி, அவள் தோழியை வரவழைத்து வீட்டிலிருந்தே அவளுடனே அனுப்பி வைத்திருந்தனர்.
வேலினியின் நெருங்கிய தோழியான தருணிகா தான் அவளை அழைத்துக் கொண்டு சென்றது. இருந்தும் அவளுடைய தகப்பன் ஆறுமுகம் தன்னுடைய மிதிவண்டியை மிதித்துக் கொண்டு தூரத்தில் இருந்தே அவள் பத்திரமாக செல்கிறாளா என்று பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அவள் பேருந்தில் ஏறும் வரை பார்த்துவிட்டே திரும்பினார்.
தருணிகா எவ்வளவு முயற்சி செய்தும் வேலினி தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்க, அடுத்தடுத்த நிறுத்தங்களில் அவளுடைய தோழிகள் சிலரும் சேர்ந்து கொண்டு, தருணிகாவின் முயற்சியை தாங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளை எப்படியோ சீண்டி அதட்டி மிரட்டி என்று ஒரு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.
முழுதாக விடுபடவில்லை என்றாலும் ஓரளவு சமாளித்து வேலினி அவர்களுடன் புன்னகைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவர்கள் செய்த கலாட்டாவில் பேருந்திலிருந்த மொத்த கூட்டத்தின் கவனமும் அவர்கள் புறம் தான் இருந்தது.
அவர்களை கண்ட சிலர், பெண்கள் சிரிப்பதை கண்டதும் எப்போதும் வரும் கருத்து போல, “என்ன பொண்ணுங்களோ?” என்று பேசிக்கொண்டு செல்ல, சிலர் தன் தோழிக்காக இத்தனை செய்யும் இந்த பெண்களை கண்டு புன்னகையை வீசி விட்டு சென்றனர்.
கல்லூரிக்கு ஒரே பேருந்தில் செல்வது அரிய காரியம். அந்த பேருந்து அரிதாக தான் வரும் என்பதால், இரண்டு பேருந்துகள் மாறி செல்வதே தோழிகளின் வழக்கமாக இருந்திருக்க, அன்றும் அதே போல் ஒரு நிறுத்தத்தில் இறங்கினர்.
அது அத்தனை பிரதான சாலை ஒன்றும் அல்ல. ஒரு குறுகிய சாலை தான். ஆனாலும் பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு சற்று வசதி உள்ளதாக இருந்தது.
சிறிய சாலையில் பெரிய பேருந்துகள் வருவது இடைஞ்சல் ஆகவும் இருக்கத்தான் செய்தது. அப்படி இடைஞ்சலாக இருந்த அந்த சாலையின் இடது புறமாக தோழிகள் அனைவரும் இறங்கி இருந்தனர்.
வாகனங்கள் நிரம்பிய அந்த சாலையில் சிறிதாக கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு வேலினியை தவிர்த்து மற்ற தோழிகள் அனைவரும் கடந்து மறுப்புறம் சென்றிருந்தனர்.
வேலினி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் தன்னுடைய துப்பட்டா மாட்டிக் கொள்ளவும் அதை எடுக்கும் பொருட்டு அங்கு தேங்கி நின்றவள், அதன் பிறகு வண்டிகள் இடைவிடாமல் வேகமாக செல்ல சாலையை கடக்க இயலாமல் நின்றாள்.
அச்சமயம் அவள் அருகே “அப்பா அப்பா”, என்று ஒரு மழலை குரல் கேட்க யாரென்று திரும்பி பார்த்தாள். அங்கு பள்ளி சீருடை அணிந்து ஒரு குழந்தை நின்று கொண்டிருந்தாள்.
அவள் அப்பா அப்பா என்று சாலைக்கு மறுபுறம் இருந்த யாரையோ கை காட்டிக் கொண்டிருக்க, அங்கு காக்கி உடையில் ஒரு காவல் அதிகாரி நின்று கொண்டிருந்தார்.
அவரை பார்த்ததும் அந்த குட்டி பெண் அவருடைய குழந்தை தான் என்று விளங்கியது. இவர் எதற்காக பிள்ளையை தனியாக விட்டுவிட்டு அங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று எண்ணி குழந்தை அருகே பார்த்தாள்.
அங்கு போலீஸ் என்று ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும் இந்த வண்டியில் தான் குழந்தையை நிறுத்திவிட்டு எதுவோ வாங்க சென்றிருக்க வேண்டும்.
குழந்தை வண்டியில் இருந்து இறங்கி நின்று கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள் வேலினி.
அச்சமயம் குழந்தை சாலையை கடக்க முற்பட, கெட்டியாக அவள் கைகளை பிடித்துக் கொண்டவள், “பாப்பா வண்டி வந்துட்டு இருக்கு பார். அப்பா இங்கதான் வந்துட்டு இருக்காரு. அவர் வந்தது அவர் கூட போ”, என்று குழ்நதையை ஆறுதல் படுத்திவிட்டு நிமிர்ந்து அந்த காவலரை பார்க்க,
அவர் இன்னும் நகராமல் நின்ற வாகனங்களை கடக்க முடியாமல் தடுமாறி அவளை பார்த்தார். அவள் அவரிடம் கை காண்பித்து தான் பார்த்துக் கொள்வதாக செய்கை செய்ய, காவலருக்கு ஒரு புறம் நிம்மதியும் மறுப்புறம் புது ஆளை கண்ட சந்தேகமும்.
குழந்தை இடம், “உங்க பெயர் என்ன?”, என்று விசாரித்து கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்க சட்டென்று அங்கு ஒரு கலவரம் மூன்டிருப்பதை கண்டாள்.
போக்குவரத்து நெரிசலில் ஒருவரை ஒருவர் முந்தும் முயற்சியில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து கொள்ள, அதன் உரிமையாளர்கள் இருவரும் இறங்கி வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இருவருக்கும் உதவுகிறேன் என்று அவர்களுடன் வந்திருந்த சில நபர்களும் அங்கு கூட, ஒரு பெரிய தள்ளுமுள்ளே அங்கு நடந்தது. தள்ளுமுள்ளை கண்ட அந்த காவல் அதிகாரியும் வாகனங்களுக்கு கையை காட்டி வேகமாக சாலையை கடந்து வந்து அவர்களை தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அவர்கள் யாரும் அங்கு ஒரு காவலர் இருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளாமல் தீவிரமாக சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
வேலினி சண்டை ஆரம்பித்த பொழுதே அங்கு இருந்த ஒரு சிறிய டீக்கடைக்கு பக்கத்தில் ஒதுங்கினாள். அங்கிருந்த கடை உரிமையாளர் “அம்மா கொஞ்சம் உள்ளே தள்ளி நின்னுக்கமா. பாப்பா வேற இருக்கு. இவனுங்க உங்களை தள்ளிடுவானுங்க”, என்று கூறி அவர்களை தன் கடைக்கு உள்ளேயே அழைத்து சென்றிருந்தார்.
கடை சிறிய அளவிலேயே இருந்தது. அதுவும் அந்த கடையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க, பாலும் டிகாஷனும் கொதித்துக் கொண்டிருந்தது.
அதன் அருகில் இருந்த அந்த சின்ன இடைவெளியில் ஒரு நபர் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும் அளவு இடம் இருக்க, வேகமாக அதில் நுழைந்து அவளும் ஒரு ஓரமாக குழந்தையுடன் நின்று கொண்டாள்.
அந்த காவலரும் முதலில் தன் பிள்ளை என்ன செய்கிறாள் என்பதை கவனத்தில் வைத்த பின்னே சண்டையை தடுக்க முயற்சி செய்தார்.
இப்போது அந்த கடை உரிமையாளரும் தள்ளுமுள்ளு பெரிதாவதை கண்டு வேகமாக வெளியே வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
வேலினி வெளியே நடந்த சண்டையை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, மறுபுறம் இருந்த தோழிகளும் சாலையில் நடந்த விஷயங்களை பார்த்தனர்.
கூடவே வேலினி கடையில் ஒதுங்கி நிற்பதையும் கண்டு அவர்களும் சாலையை மெதுவாக கடந்து வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் அந்த நிகழ்வு நடந்து முடிந்தது.
சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் வேகமாக கடையை நெருங்கி அதிலிருந்து எதையோ எடுத்து இன்னொருவனை தாக்க முற்பட, பட்டென்று அடுப்பு கீழே சரிந்து விழுந்தது. அதிலிருந்த நெருப்பு அங்கிருந்த அன்றைய செய்தித்தாள்கள் அனைத்திலும் பரவ, உடனே உள்ளே வெளியே என்று தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
வேலினி அடுத்த நொடி அலறல் ஒலியோடு அங்கேயே குனிந்து அமர்ந்து விட, கையில் இருந்த குழந்தை அவள் அலறல் சத்தத்தில் அஞ்சி அவள் கையை விட்டுவிட்டு ஓடினாள்.
அனைவரும் அந்த கூச்சல் சத்தத்தில் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.
காவல் அதிகாரி தன் பிள்ளையை எண்ணி வேகமாக உள்ளே செல்ல முயற்சிக்க, கடையில் உள்ளே போக முடியாத அளவுக்கு நெருப்பு எரிந்தது கொண்டிருப்பதை கண்டு மற்றவர்கள் அவரை தடுத்து நிறுத்தி இருந்தனர்.
அவர் பதட்டத்தில் ஏதாவது செய்து அதனால் விபரீதமாக எதுவும் ஆகிட கூடாது என எண்ணினர்.
குழந்தையும் வேகமாக ஓடியவள், தடுக்கி கீழே விழுந்தாள். அவள் மேல் அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் கொட்டியிருக்க, அது உடம்பெல்லாம் பட்டது.
அடுத்த நொடி அவள் உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. ஒரு பக்கம் அந்த காவலரை பிடித்து நிறுத்திய போதும், அதே சமயத்தில் குழந்தையை காப்பாற்றும் முயற்சியும் செய்தனர் மற்றவர்கள்.
ஆனால் யாராலும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் பாதி எரிந்த பின்னே அவள் மற்றவர்கள் கைக்கு அகப்பட்டாள்.
அவள் அலறல் சத்தம் அங்கிருந்த அத்தனை பேரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் வேலினி மட்டும் அசையவே இல்லை. சிறிது நேரத்தில் அவள் மயங்கி விழ, அவளையும் சிலர் பிடித்து வெளியேற்றினர்.
அடுத்த கால் மணி நேரத்தில் அவசர ஊர்தி அங்கு வந்து சேர, நெருப்பில் எறிந்த குழந்தையையும், வேலினியையும் ஏற்றிக்கொண்டு மருத்துவனை நோக்கி மின்னல் வேகத்தில் புறப்பட்டது அந்த அவசர ஊர்தி.
மீண்டும் ஒருமுறை வேலினியை சந்திப்போம்….
error: Content is protected !!