Skip to content
Post Views: 2,462
இன்னிசை தர மறுக்கும் வேங்குழலாய் நீ!
நீயே அறியாமல்
உன்னிசை திருடிக்கொண்ட இளங்காற்றாய் நான்!
“உனக்கு சாருவை எப்படித்தெரியும்?” அவனது அந்தக் கேள்வியில் சற்று திகைத்து எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டேன்.
Advertisement
“அது.. நீங்க… இப்போ தனாவோட போன் பேசும் போது சொன்னீங்களே சாருன்னு. அது வெச்சு கேட்டேன்” தடுமாறி திக்கிப் பேசி முடித்தேன்.
“அப்படியா?” அவன் குரலில் கொஞ்சம் வியப்பு கலந்திருந்தது. என்ன யோசித்தான் என புரியவில்லை. அதற்கு மேல் எங்கள் புகைப்படங்கள் எதையும் பார்க்காமல் கைப்பேசியை மூடியிருந்தான்.
“சாரு நல்லா பாடுவாங்களா?” எத்தனை தடுத்தும் கேட்காமல் அவசரப் பட்டு கேட்டே விட்டன எனது உதடுகள்.
Advertisement
என்னுடைய கேள்வியில் மெல்ல மூடிக்கொண்ட அவனது இமைகளுக்குள் அழுத்தங்கள் கூடியிருக்க வேண்டுமோ? சில நொடிகள் மௌனம் அவனிடத்தில். ஒரு ஆழ் மூச்சு எடுத்துக்கொண்டான் அவன். பின் கண் திறந்து எனது முகம் பார்த்தான்
Advertisement
“இல்ல அவங்க நல்லா பாடினா நீங்க உங்களோட அவங்களை பாட வைப்பீங்கதானே?” ஒரு தவிப்பில் கேட்டும் விட்டேன் நான்.
“இப்போ உன் பிரச்சனை என்ன?” என்றான் சற்றே சூடு விரவியிருந்த குரலில். “அவ என்கூட பாடக்கூடாது. முக்கியமா மலரே மௌனமா பாடக்கூடாது. அப்படிதானே?” எப்படித்தான் புரிந்துக்கொண்டானோ என் மனதில் இருப்பதை தெள்ளத்தெளிவாக கேட்டான் அவன். “கடுப்பா இருக்கு எனக்கு. நீ திருந்தவே மாட்டே”
அவன் சற்று முன் சொன்னதைப் போல் என்னை அணு அணுவாக அறிந்தவன் அவன். இந்த நான்கு நாட்கள் எனது ரகசியங்களை அவனிடமிருந்து மறைத்து வைப்பது ரொம்பவே கடினம்தான்.
Advertisement
“இல்ல அப்படியெல்லாம் இல்ல ஷ்யாம். நான் சும்மாதான் கேட்டேன். எனக்கு இப்போ அது மாதிரி எல்லாம் எதுவும் தோணலை. நீங்க ரெண்டு பேரும் பாடினா நான் அதை ரசிச்சு கேட்பேன். நிஜமா. எனக்கு உங்க மேலே லவ் எல்லாம் இல்லை ஷ்யாம்” படபடபடவென பேசினேன் நான்.
“பச்” என்றபடி பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் ஷ்யாம்.
“ப்ளீஸ் ஷ்யாம். நான்தான் சொல்றேன்ல. அதுதான் உண்மை. நீங்க இந்த நாலு நாள் கோபப்பட மாட்டேன்னு சொன்னீங்க தானே?” நான் கெஞ்சலாக கேட்க கொஞ்சம் தளர்ந்தான்.
அதற்குள் அங்கிருந்த விமான நிலைய ஊழியர் அவனிடம் வந்து ஏதோ சொல்ல
என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் “போர்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. கேட்டுக்கு போயிடலாம்” என்று எழுந்திருந்தான் அவன்.
என்னால் சட்டென எழுந்து விட முடியவில்லைதான். சற்றே மரத்துப் போயிருந்தன எனது பாதங்கள். அவற்றை ஒரு நிலைக்கு கொண்டு வந்துக்கொண்டு நான் சிரமப்பட்டு எழுந்துக்கொள்ள, அதை கவனிக்காமலே அவன் சில பல அடிகள் முன்னால் நடந்திருந்தான்.
விமான நிலையத்தின் வழுவழு தரையில் வழுக்கி விழுந்துவிடப் போகிறேனோ எனும் பயம் என்னை சூழ்ந்துக்கொண்டது. இருந்தும் சமாளித்துக்கொண்டு கொஞ்சம் வேகமாக நடந்து அவனை அடைந்தேன் நான்.
“மெதுவா மெதுவா” சித்தாரா எங்கிருந்தோ கத்துவதைப் போலவே இருந்தது.
“ஷ்யாம்” அழைத்தேன் அவனை “கொஞ்சம் மெதுவா நடங்களேன் என்னாலே வேகமா ஓட முடியலை”
நடந்துக் கொண்டிருந்தவன் நின்று திரும்பி என்னை ஏற இறங்கப்பார்த்தான். இப்போது அவனது மனம் ஒரு நிலைக்கு வந்திருக்க வேண்டுமோ என்னவோ?
“என்னாச்சு உனக்கு?” என்றான் கொஞ்சம் பரிவாக
‘இல்ல உடம்பு கொஞ்சம் சரியில்லை” என்றேன் அவன் பார்வையை தவிர்த்தவாரே.
“என்னாச்சு திடீர்னு?”
“இல்ல போன வாரமெல்லாம் வைரல் ஃபீவர். அதான் கொஞ்சம் டயர்டா இருக்கேன்” சமாளித்து வைத்தேன்.
“சரி வா” என மெதுவாகவே நடந்தான் அவன்.
“மத்தவங்க எல்லாரும் வரலையா?” என் மீது அவ்வபோது படரும் அவனது யோசனை பார்வையை திசைத் திருப்புவதற்காகவே கேட்டேன் நான்.
“எல்லாரும் நேத்து நைட் ஃபிளைட்லேயே கிளம்பிட்டாங்க. எனக்குத்தான் ஆபிஸ்லே கொஞ்சம் வேலை இருந்தது. நீ என்னோட ஜாயின் பண்ணிக்றேன்னு சொன்னதாலே உனக்கும் இதிலே சேர்த்து டிக்கெட் புக் பண்ணேன்.” என்றான் போர்டிங் பாஸை ஆராய்ந்துக்கொண்டே.
“ஓ சரி சரி” தலையாட்டிக் கொண்டேன். மற்ற பயணிகள் விமானத்தில் ஏறி இருக்க வி.ஐ.பி லாஞ்சில் இருந்தவர்கள் மட்டும் வாயிலுக்கு வந்திருந்தோம்.
விமானத்தில் ஏறும் போது விழுந்துவிடுவேனோ என மனம் பதற “ஷ்யாம் உங்க கை பிடிச்சுக்கட்டுமா?” கேட்டேன் நான்.
பதில் பேசாமல் ஒரு கையால் முதுகில் மாட்டியிருந்த பையை சரி செய்துக்கொண்டே என்னை நோக்கி வலக்கையை நீட்டினான் ஷ்யாம்.
மழைத்துளியை கண்டவுடன் இழுத்துக்கொள்ளும் வேர் நுனியாக சட்டென அவன் கரம் பற்றிக்கொண்டேன். இதழ்களில் மலர்ந்த எனது புன்னகை அவனுக்கு எதை உணர்த்தியதோ தெரியவில்லை.
“இது வரைக்கும் என் கையை நீ பிடிச்சதே இல்லையா?” என்றான் என்னை சற்றே அழுத்தமாக பார்த்தபடியே.
“அதுதானே?” எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நல்ல கேள்விதான் அது. இத்தனை நாள் பழக்கத்தில் பல முறை வெகு இயல்பாக அவன் கரம் பற்றிக்கொண்டிருக்கிறேன் நான். அவன் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கூட உறங்கியிருக்கிறேன்.
‘அவன் கை பிடித்துக் கொள்வதற்கெல்லாம் நான் எப்போதிலிருந்து சந்தோஷப்பட ஆரம்பித்தேன் என எனக்கே புரியவில்லை. ஒரு வேளை இது போன்ற நேரங்களில் மனம் இதையெல்லாம் கேட்குமோ?’.
“இல்ல லேசா தலை சுத்தறா மாதிரி இருந்தது. அதுதான் கேட்டேன்” ஏதோ சம்மந்தம் இல்லாமல் சொல்லி சமாளித்தேன். .அவன் கரம் பற்றிக்கொண்டே நடந்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன் நடுங்கிக்கொண்டிருந்த எனது கரத்தை அவன் இதமாக அழுத்திக்கொடுத்த அந்த நொடி, அந்த ஸ்பரிசம் ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது எனக்கு.
நான் ஷ்யாமுடன் பாடுவதற்கு அம்மா ஒப்புக்கொள்ள மறுத்துக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஒவ்வொரு நாளும் அம்மாவை சம்மதிக்க வைக்க போராடிக் கொண்டிருந்தேன் நான். இந்த விஷயம் அவனுக்கு சித்தாரா மூலமாக தெரிய வந்திருந்தது.
அப்போது திடீரென ஒரு நாள் கைப்பேசியில் அழைத்தான் ஷ்யாம்.
“நாளைக்கு ஈவினிங் ஒரு மியூசிக் ப்ரோக்ராம் இருக்கு. நீ என்னோட பாடறே. உங்க அம்மாக்கும் உனக்கும் டிக்கெட் அனுப்பியிருக்கேன். சித்தாரா கொண்டு வந்து கொடுப்பா. உங்க அம்மாவை கூட்டிட்டு வர்றது உன் பொறுப்பு” எதையுமே ஆணையிடும் தோரணையில் சொல்வதுதான் அவன் பழக்கம்.
“நான் எப்படி ஷ்யாம் ஸ்டேஜ்லே?” பதறினேன் நான். “எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. ப்ராக்டீசும் பண்ணலை.”
“இனிமே பழகு. எல்லாம் சரியா வரும்”.
“பயமா இருக்கு ஷ்யாம். ஏதாவது சொதப்பிட்டேன்ன்னா என்ன செய்ய”?” தவிப்பும் பயமுமாக கேட்டேன் அவனிடம்.
“அதெல்லாம் எதுவும் நடக்காது பாப்பா.” என்றான் ஷ்யாம் அதுதான் அவன் முதல் முறையாக என்னை பாப்பா என அழைத்தது. அவன் அழைப்பில் நான் சிலிர்த்து நின்றேன்.
“நான்தான் பக்கத்திலேயே இருப்பேனே அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை. நீ கூட்டத்தை பார்க்காதே. நான் மட்டும் இருக்குறா மாதிரி நினைச்சுக்கோ. என்னை மட்டுமே பார்த்து பாடு. “மலரே மௌனமா” மட்டும் பாடு போதும். அது உனக்கு ரொம்ப கம்ஃபர்டபிள் பாட்டு. எனக்கு உன் மேலே நம்பிக்கையிருக்கு”
“எதுக்கு ஷ்யாம் இதெல்லாம் திடீர்னு?”
“எல்லாம் நல்லதுக்குதான். அம்மாகிட்டே நீ பாடறேன்னு சொல்ல வேண்டாம். லெட் இட் பீ அ சர்பரைஸ்.. ஸ்டேஜ் ஏறுறா மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டுவா அவ்வளவுதான்.” முடித்துவிட்டான் ஷ்யாம்.
அம்மாவை எப்படியோ பேசி சமாளித்து, அழைத்துக்கொண்டு அரங்கத்திற்கு வந்திருந்தேன் நான். சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரத்தில் யாரோ ஒருவர் வந்து எங்களை உள்ளே அழைத்து சென்று முன் வரிசையில் அமர வைத்தார். அவனும். அவனது இசைக்குழுவினரும் நடத்தும் இசை நிகழ்ச்சி அது என புரிந்தது எனக்கு.
சில பெரிய பாடகர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க இதயம் அசுர வேகத்தில் தாளம் போட்டுக்கொண்டிருக்க மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் நான்.
அவனது வழக்கமான, மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை. அதற்கேற்ற ஜீன்ஸ் என அமர்களமாக மேடையில் வந்து நின்றான் ஷ்யாம். அரங்கம் அதிர்ந்த கரகோஷங்களுக்கிடையிலும் என்னை பார்த்து புன்னகைக்க மறக்கவில்லை அவன். அதுவே என்னை ஆசுவாசப்படுத்தியது.
மேடையின் மீது. இதமாய் துவங்கியது அவனது இசைத்தூறல். எல்லாம் மறந்து சுகமாய் நனைய ஆரம்பித்தேன் நான். அவனது இசை ஆளுமை என்னையும் சேர்த்து அரங்கம் முழுவதையும் ஆட்கொண்டிருந்தது.
அம்மாவுக்கு இசையில் பெரிய நாட்டமில்லைதான். அப்படி இருந்த போதிலும் அசையாத சிலையாய் அவரை அமர்த்தியிருந்தது அவனது இசை.
நான் அவனது இசையில் மயங்கி உருகிக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்து உன்னை அழைக்க போகிறேன் என்பதை எனக்கு சைகையால் உணர்த்தியிருந்தான் ஷ்யாம்.
“அடுத்து இன்னைக்கு உங்க எல்லாரோட கரகோஷத்தோட ஒரு புது பாடகியை உங்களுக்கு அறிமுகப் படுத்தப்போறேன். கேன் ஐ ஹேவ் மிஸ் சந்தியா ஆன் தி ஸ்டேஜ் ப்ளீஸ்.”
error: Content is protected !!