இதுநாள் வரை அவனை யாரும் கை நீட்டி ஒருவார்த்தை சொன்னதில்லை. அவன் வீட்டினரே கூட அதை செய்ததில்லை. நீ செய்வது தவறு என்று யாரும் சொல்லுபடி ஈசன் நடந்துகொண்டதும் இல்லை. அப்படியே ஏதாவது ஒன்றென்றாலும் யாருக்கும் அப்படி சொல்லும் தைரியமும் இல்லை.
அப்படியிருக்கையில் இன்று.. அத்தனை பேரின் முன்னிலும், அந்த துரைச்சாமி ஈசனை பேசிட, ஒருநொடி ஈசனுக்கே கூட பதில் பேசிட முடியாமல் போனது. திகைத்த, அதிர்ந்த பார்வையுடன் இருந்தது நொடி பொழுதே, ஆனாலும் பதில் பேச முடியாமல் தான் போயிற்று அவனுக்கு.
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே அது போல.
வீட்டிலிருந்து கிளம்பிய ஈசனும் பாலாவும், பிரபுவையும் அழைத்துக்கொண்டு நேராய் துரைசாமியை தான் காண சென்றனர். ஈசன் முன்னமே சொல்லிவிட்டான் அவன் வீட்டிற்கு எல்லாம் தன்னால் வர முடியாது என்று. ஆகையால் ஒரு பொது இடத்தில் வைத்து பேசுவோம் என்று பிரபு சொல்ல, அதுவும் சரியாய் படவில்லை ஈசனுக்கு.
வெளியில் தெரியாமல் பேசி முடிக்கவேண்டியது. தெரிந்தால் அதுவும் தேவையில்லாத கிளை பிரச்சனைகளை உண்டு செய்யும் என்று தோன்ற. பாலாவை விட்டு அந்த துரைசாமியிடமே பேச சொன்னான். ஆனால் அவனோ மிகவும் நல்லவன் போல,
“அதுக்கென்ன தம்பிகளா.. நானே வர்றேன்… உங்க இடத்துலேயே பேசுவோம்….” என்று சொல்ல, சரி கேபிள் ஆபிஸின் மொட்டை மாடியில் வைத்தே பேசி முடிப்போம் என்று தான் ஈசனும் பாலாவும் சென்றது.
துரைசாமியோ தன்னோடு பத்து பேரை அழைத்துவந்திருக்க, அவன் வந்த தோரணையே சுமுகமாய் போகும் எண்ணத்தில் இல்லை என்பதை சொல்ல, ஏற்கனவே உள்ளே குமைந்துகொண்டிருந்த ஈசனுக்கு கேட்கவும் வேண்டுமா.
ஈசனும் ஆட்களை சொல்லி வைத்திருந்தான் தான். ஆனால் யாரையும் உள்ளே விடவில்லை. என்ன இருந்தாலும் இது அவன் தொழில் செய்யுமிடம். அவனிடம்.. தன்னை மீறி இங்கே எதுவுமே நடக்காது என்ற திண்ணம்.
ஈசனும் பாலாவும் அமர்ந்திருக்க, பிரபு சற்று தள்ளியே நின்றிருந்தான். துரைசாமி ஈசனுக்கு நேராய் அமர்ந்திருக்க, அவனுக்கு பின்னே சிலர் நிற்க, தள்ளியும் சிலர் நின்றிருந்தனர். ஈசனது பார்வை ஒருமுறை அவர்களை தொட்டு மீள,
அதை கண்ட துரைசாமியோ, “எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்.. பெரிய ஆளுங்க நீங்க.. நம்மளும் அதுக்கு தக்கன வரணுமா இல்லையா…” என்று நக்கல் தடவிய பேச்சை இறக்கி வைக்க,
“நான் பார்க்கணும் சொன்னது உன்னை மட்டும் தான்…” என்று ஈசன் நேராய் விஷயத்திற்கு வந்தான்.
“அட என்னப்பா ஈசா.. பார்க்கணும்னா சொன்ன?? இல்லையே உன் தம்பி நீ என்கிட்டே பேசணும்னு சொன்னதா தானே சொன்னான்…” என்று பாலாவை காண, அவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.
‘இந்த துரைசாமிக்கு நேரம் சரியில்லை போலவே…’ என்று எண்ணியவன் தன் அண்ணன் முகம் பார்க்க, அதில் என்ன கண்டானோ அமைதியாக இருந்தான். ஆனாலும் அந்த துரைசாமி வந்தது வந்துவிட்டோம் வம்பை இழுப்போம் என்று எண்ணினானோ என்னவோ,
“அப்புறம் பார்க்க வர சொன்னீங்களா, பேச வர சொன்னீங்களான்னு அண்ணனும் தம்பியும் பேசி முடிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.. நான் கிளம்புறேன்…” என்று கிளம்ப தயாராக, அவனுடன் வந்தவர்களும் கிண்டலாய் சிரித்தபடி நகர, ஈசனது கண்கள் இன்னும் இடுக்கியது.
இது என் இடம், இங்கு உன்னை வர வைத்ததும் நான் தான், என்னை மீறி உன்னால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது எனும் போது எப்படி நீ வெளியே செல்வாய் என்று பார்ப்பது போலிருந்தது ஈசனது பார்வை.
அது துரைசாமிக்கு நன்றாய் புரிந்ததுவோ என்னவோ, வேகமாய் எழுந்தவன் அதே வேகத்தில் அமர, வம்பிழுக்கவே முடிவெடுத்து இவ்விடம் வந்தவன் இப்பொழுது வார்த்தைகளை தொடுத்து ஈசனை வாட்டிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
பாலா “அண்ணா…” என்று மெதுவாய் ஈசனை அழைக்க. அவனோ சத்தமாய் “பிரபு…” என்றழைத்தான்.
அவனது தொனியே அங்கு நிற்போருக்கு எதையோ உணர்த்த, அனைவரும் இப்பொழுது துரைசாமியின் முகத்தை பார்த்தனர். ஈசன் அழைத்த அடுத்தநொடி பிரபு வந்து ஒரு வெள்ளை நிற காகித உரையை ஈசனிடம் கொடுத்தவன். அவனுக்கு பின்னே நின்றுகொண்டான்.
பிரபு கொடுத்ததை தன் கையிலேயே வைத்துகொண்டு, அதனுள் இருப்பது என்னவென்றும் சொல்லாமல், அதை எடுத்து வெளியேவும் காட்டாமல், கைகளில் அதனை வைத்து இப்படி அப்படி ஆட்டியபடி,
“உன்கிட்ட பேசவும் சரி, உன்னை பார்க்கவும் சரி.. எனக்கு சுத்தம்மா இஷ்டமில்ல.. ஆனா என்ன செய்ய.. இது நீயா தேடிக்கிட்டது தானே…” என்ற ஈசனின் குரலில் அத்தனை அலட்சியம் தோன்றியது என்றால், அது எதிரே இருந்தவனுக்கு மனதினுள் அத்தனை குழப்பத்தை கொடுத்தது.
‘என்ன இது இந்த கவர்ல..??’ என்று துரைசாமியின் கண்களும் யோசனையும் ஈசன் கைகளில் இருந்த அந்த வெள்ளை நிற உரைக்கே தாவ,
“என்ன துரை… பேசமாட்டீங்களோ இப்ப???” என்று மெல்ல கிண்டலாய் புன்னகைத்துக்கொண்டான் ஈசன்.
ஈசனின் புன்னகையே இவன் எதோ ஒன்றை செய்து முடித்தே இங்கு வந்திருக்கிறான் என்பதை உணர்த்த, “ஏ ஈசா.. என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா போகுது.. இங்க பாருப்பா உன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் வந்தேன்.. நீ இப்படில்லா செஞ்சேன்னு…” என்று இழுக்க,
“என்ன செய்வ?? இல்ல என்ன செய்வ?? மறுபடியும் கேபிள் வயரை எல்லாம் பிடுங்கி போடுவியா??? இல்லை ஊர்ல ஒவ்வொருத்தர் வீடா போய் டீவிய உடைச்சு போடுவியா?? சொல்லு துரைசாமி என்ன செய்வ நீ…??” என்று மீதி வாக்கியத்தை முடிக்க,
பாலாவிற்கோ இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து இன்னும் அவனுள் வேகம் பிறந்தது.
“அண்ணா என்னண்ணா இவன்கிட்ட பேசிகிட்டு.. சட்டுபுட்டுன்னு வந்த வேலையை முடிக்க வேணாமா??” என்று எகிற, தன் தம்பியை தன் பார்வை கொண்டே அடக்கியவன்,
“சொல்லு துரைசாமி என்ன செய்வ?? இல்லை நீ என்ன செய்றதா இருக்க??” என்று மீண்டும் தன் கேள்வியை எதிராளியிடமே வீசினான்.
“இங்க பாரு ஈசா… நீ ஒன்னும் இங்க வாத்தியார் இல்லை.. நானும் உன்கிட்ட படிக்கிற பையனும் இல்லை.. நீ கேட்கிற எல்லாத்துக்கும் பதில் சொல்ல. ஆமா கேபிள் வயர் எல்லாம் நான் தான் பிடுங்கி போட்டேன். அதுக்கு என்ன செய்யலாம்னு இருக்க..
இல்லை உன்னால அதை நிரூபிக்க முடியுமா?? முடியும்னா தாராளமா போயி கம்ப்ளைன்ட் குடு.. உனக்கு மட்டும் தான் வக்கீல் போலீஸ் எல்லாம் தெரியுமா எங்களுக்கும் சட்டம் தெரியும்..” என்று அவன் பாட்டிற்கு பேச, ஈசன் முகத்தில் அப்பொழுதும் சலனமில்லை.
“சரி… நீ தான் செஞ்சன்னு ஒத்துக்கிட்ட.. ஏன் இப்படி பண்ணன்னு உன்கிட்ட நான் காரணமும் கேட்க மாட்டேன்… இனிமேல் இப்படி பண்ணாதன்னு கெஞ்சிட்டும் இருக்க மாட்டேன்… அதுனால…” என்று சொல்லி ஈசன் நிறுத்த,
“அதுனால.. என்ன அதுனாலா…?? சரி எதோ நம்ம பைய புதுசா தொழில் ஆரம்பிக்கிறான் அவனும் பொழைச்சு போகட்டும்னு விட்டா நீ என்னவோ ஊர்ல நடக்குற அம்புட்டும் படம் எடுத்து போடுற… எவன் வீட்ல கல்யாணம்னா உனக்கு என்ன??
அதை எதுக்கு டீவில போட பேசுற.. இங்க பார் நீ பண்றது என்னை பாதிக்காம இருக்கிற வரைக்கும் நான் சும்மா தான இருந்தேன்.. இப்போ என்கிட்டே இருக்க பாதி ஆளுங்க உன் பக்கம் மாறிட்டாங்க…” என்று கொந்தளித்தான் நஷ்டம் ஏற்பட்ட எரிச்சலில்.
ஈசன் எதிர் பார்த்தது இது தானே. அவனே அவன் வாயால் ஒவ்வொன்றாய் சொல்லிட வேண்டும்.. அதற்கு சிறு சிறு தூண்டல் பேச்சுக்கள் போதும். ஆனால் இன்னும் முழுதாய் துரைசாமி அனைத்தும் சொல்லி முடிக்கவில்லையே. ஈசன் தானே சொல்ல வைக்க வேண்டும்.
“உனக்கு சரியா மக்களை திருப்தி படுத்த தெரியலை. ஒழுங்கா ப்ரோக்ராம்ஸ் போட முடியலை.. பாதி நாள் சேனல் எதுவும் சரியா வரலைன்னு எத்தனையோ பேர் என்கிட்டவே வந்து சொன்னாங்க.. ஒழுங்கா செய்ய துப்பில்லாட்டி… ஏன் செய்யணும்…”
“ஏய் ஏய்.. யாரப்பாத்து… யாரப்பாத்து துப்பில்லைன்னு சொன்ன.. என்னை பார்த்தா?? நீ கேபிள் ஆரம்பிக்க முன்னாடி இங்க என்ன ஓடுச்சாம்.. நான் போட்ட ப்ரோக்ராம் தான… இப்பவும் எனக்குன்னு இருக்குற கூட்டம் இருக்கத்தான் செய்யுது… நீ என் வழியில வந்த அவ்வளோதான். அதுக்கு தான் இதெல்லாம்…
இதோ இவன் தான் நைட்டு நேரம் போய் வயரை எல்லாம் அத்துவிட்டு வந்தான்.. இதோ இங்க நிக்கிறானே.. இவன் தான் ஜங்சன் பாக்ஸை எல்லாம் உடைச்சான்.. இப்போ என்ன செய்ய முடியும் உன்னால.. நீயும் அது போல செய்வியா.. செஞ்சுக்க.. யார் வேணாம்னு சொன்னா…” என்று எவன் எவன் என்ன செய்தான் என்று அழகாய் அவனே ஒன்றுவிடாமல் சொல்லிவிட ஈசனின் புன்னகை இன்னும் மலர்ந்ததே தவிர குறைந்தபாடில்லை.
அதே புன்னகையுடனே எழுந்தவன், “எப்படி எப்படி… நான் வந்து நீ குடுத்திருக்க லைனை எல்லாம் பிடுங்கி போடணுமா?? வேற வேலையில்லை பாரு எனக்கு.. ” என்றபடி அவனருகே வர, துரைசாமியும் எழுந்து நின்றான் அவனறியாமல்.
“இங்க பாரு ஈசா…” என்று எதுவோ அவன் பேச ஆரம்பிக்க,
“இரு இரு இன்னும் நான் பேசியே முடிக்கலையே… அதுக்குள்ள என்ன அவசரம்.. எப்படி எப்படி என் இடத்துக்கே வந்து நான் தான் செஞ்சேன்னு சொல்லுவ.. நானும் அதை கேட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?? ஹா…” என்றவன் துரைசாமி தோள் மீது கை வைத்து அவனை மீண்டும் அமர செய்து,
“என்னை என்னனு நினைச்ச துரைசாமி.. நீ என்ன பண்ணாலும் சும்மா இருப்பேன்னு நினைச்சியா??” என்று அடிக்குரலில் உறும, துரைசாமிக்கு உள்ளே நடுக்கம் ஆரம்பித்தது.
ஈசன் அழைக்கிறான் என்றதும் அவனிடதிற்கே வந்தது தவறோ என்று தோன்ற, மனதினுள்ளே தோன்றிய நடுக்கத்தை வெளிக்காட்டாது,
“ஆமா சரியில்லதான் என்ன செய்ய.. நான் நேர்மையா தொழில் செய்றேன்.. (Zolpidem) செய்ற தொழில்ல யோக்கியமா இருக்கணும்.. அதை விட்டு அடுத்தவன் பொழப்பை கெடுக்கனும்னு யோசிச்சா இப்படி தான் வந்து சிக்கனும்…” என்றவன்,
துரைசாமியை சுற்றி இருப்பவர்களை ஒரு பார்வை பார்க்க, அவர்களோ ஈசனையும் துரைசாமியையும் ஒருசேர பார்த்துவிட்டு இரண்டு அடி பின்னே தள்ளி நின்றனர்.