துர்கா மகியிடம் இருந்து தன்னை பிரித்தக் கொண்டே கீழிறங்கி வந்தாள். இங்கு தானே அவளின் உடைகள் இருக்கின்றன. அதானல் யாரும் விழிபதற்குள் இறங்கி வந்து புடவை உடுத்தி தயாராகினாள்.
அதன் பின் நேரம் அவள் வசம் இல்லை. குழந்தைகள் எழுவதற்குள் காலை உணவு தயாராகி விட, மகி கீழே இறங்கி வந்தான். கொஞ்சம் சிரமம் தான், ஆனாலும் பழக்கிக் கொண்டான்.
மகி உணவு உண்டு முடித்து, “ஸ்ரீ போலாம்” என்றான். இவள், இன்று வீட்டிலிருக்கலாம் என நினைத்திருக்க மகி ‘கிளம்பு’ எனவும் தன் அத்தையை பார்த்தாள், பாவமாக. அவர் ஏதேனும் சொல்லக் கூடும் என தான்.
‘ம்கூம்’ விடுவதாக இல்லை மகி, “ராஜேஷுக்கு இன்று ரெஸ்ட், மாலை அவன் மேட்டூர் போகணும், நீ கிளம்பு” என்றவன். நேற்று காரில் நடந்ததை சொன்னான் எல்லோரிடமும்.
ராஜேஷ் அப்போது தான் எழுந்து வந்தவன் “நான் அம்மாவ கூட்டி போறேன் அங்க “ என்றான்.
வைதேகியும் “ஆமா ப்பா, நான் போயிட்டு வரேன், ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து, அங்க நித்யாவும் பாவம், தனியா சமாளிச்சுட்டா” என்றார் கவலையாக.
“இல்ல டா, நீ இப்போ பசங்களோட போ, ராஜேஷ் மேட்டூர்ல பார்த்துப்பான், நீ போய்ட்டு வா, நான் பார்த்துக்கிறேன் “ என்றான் முடிவாக.
போன் பேசி முடித்தவன். “சரிம்மா, “ என்றவன் அகில் சொன்னதையும் சொன்னான். “அகில், லீவுக்கு சிங்கப்பூர் போறானாம், எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போடவான்னு கேட்டான்.” என்றவன்.
“எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன், முதலில் அவன் போய் வரட்டும், ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் போனால் சரியாக வராது, அப்புறம் ஆறு மாசம் கழிச்சு நான் போய்க்கிறேன்னு சொல்லிட்டேன்.” என்றான்.
பின்பும் அவனே தொடர்ந்து “ராஜேஷ், நீ மேட்டூர் பார்த்துக்குவன்னு சொல்லியிருக்கேன், நானும் நடுவுல வரேன்” என்றவன்.
பின் அசால்டாக “சரிதான் ஒரு பத்து நாள் சமாளிக்க மாட்டோமா டா” என்றான் ராஜேஷை பார்த்து பழைய மகியாக.
வைதேகி, “ஏன்டா, கமலு பாவம்டா“ என்றவர், ஏதோ யோசனை வந்தவராக “அவனையும் அனுப்பறியா“ என்றார்.
அதற்குள் துர்கா கிளம்பி நிற்க. “ம்” கிளம்பு எனும் விதமாக தலையசைத்தவன் முன் சென்றான். துர்கா காரெடுத்து ரெடியாக வெளியே நிற்கவும் கிளம்பினர் இருவரும்.
மகியை ஓபன் டாக் இறக்கி விட்டு, இவள் ஷோ ரூம் வந்து விட்டாள். அன்றைய வேலைகள் தொடங்கின இருவர்க்கும். மகி, இவள் மதியம் வரவும் தான் நிமிர்ந்தான் வேலையிலிருந்து.
வீடு வந்து, இருவரும் மதிய உணவு உண்டு முடித்து, மகி இங்கு கீழ் அறையிலேயே உறங்க. துர்கா பசங்களுடன் சற்று நேரம் விளையாடினாள்.
மாலை வினோ வீடு வந்தான், மகியும் ரெப்ரெஷ்ஷாகி ஹாலில் அமர்ந்திருந்தான். வினோ சில டாகுமென்ட்ஸ்ம் சாவியும் கையில் கொடுக்கவும் வாங்கிய மகி நேரே பூஜை அறை சென்று, அங்கு வைத்து எடுத்து வந்தான்.
கூடவே “இது என்னோட கனவு தான், என்னுடைய பெரிய அச்சிவ்மென்ட் தான், ஆனா, இத மட்டும் தான் உனக்கு கொடுக்கணும்னு தோனுது, இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல், அதனால தான், உனக்கு கொடுக்கிறேன். இது வரை மகியினுடையதுன்னு இருந்தது, இனி வெளியே, மிஸ்ஸஸ் மகியினுடையதுன்னு சொல்லணும்.” என்றான் குரலில் ஒரு கனம், தடுமாற்றம் என எல்லாம் கலந்திருந்தது ஆனால் கண்கள் அமைதியை மட்டும் காட்டியது.
ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு, தன் அத்தையிடம் சென்றாள், அவர் கையில் கொடுத்தாள். வினோ தான் “இங்க சைன் பண்ணு துர்கா“ என்றான்.
இப்போது தன் கணவனை பார்த்த துர்கா ஒன்றும் சொல்லாமல் “நான் அப்புறம் பண்றேன்“ என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.
ஏதோ சரியில்லை என எல்லோர்க்கும் புரிந்தது. மகியை பார்த்து நக்கலாக சிரித்தான் வினோ ‘இன்னைக்கு இருக்குடா கச்சேரி’ என்ற வண்ணம் இருந்தது அவன் சிரிப்பு.
மகி ‘பாக்கலாம்டா அதையும்’ என வினோவை பார்த்திருந்தான். எல்லாம் பார்வை பரிமாற்றம் மட்டுமே.
காபி குடித்து மகியும், வினோவும் அலுவலகம் கிளம்பினர். வைதேகி தான் நித்யாவிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
வேலைகள் எல்லாம் முடித்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு. சின்னதுகள் எல்லாம் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வைதேகி இரவு உணவு உண்டு கொண்டிருந்தார். சர்வேஷ் தனது காரில் ஆட்டம், அவன் சத்தம் மட்டும் தான் கேட்டது. என்னென்றே தெரியாத ஒரு நிசப்தம் வந்தது அங்கு.
பசங்க கூட சத்தம் போடவில்லை “அம்மா ஏதோ கோவமாக இருக்காங்க” என்றான் கமல். உணவு உன்ன அழைத்தாள் அனைவரையும், யாரும் எதுவும் சொல்லாமல் உணவு உண்டனர்.
சற்று நேரத்தில் எல்லோரும் படுத்துவிட்டனர். சர்வேஷ் மட்டும் தான், அங்கு பெரியம்மா அறைக்கு செல்வது, வெளியே வருவது என ஓடிக் கொண்டிருந்தான்.
மகியை ராஜேஷ் அழைத்து வந்தான். மகிக்கு பார்த்தவுடன் தெரிந்தது ஏதோ சரியில்லை என்று. ஒன்றும் பேசாமல் அமர்ந்தான் மகி, இருவரும் உணவு உண்டனர். மகி “ஸ்ரீ, மேலே வா “ என்று சொல்லியே சென்றான் அவன்.
துர்காவும் ஏதோ உண்டு விட்டு பால் எடுத்துக் கொண்டு, சர்வேஷை அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்.
மகி இவளின் வரவிற்காக காத்திருந்தான். வந்தவுடன் “வா டா சர்வா” என்றவன், மகனை தூக்க, அவனிடம் சிறிது நேரம் கதை பேசிய பிறகே துர்காவிடம் திரும்பினான்.
எங்கே தொடங்குவது, என்ன கேட்பது என இருவர்க்கும் தெரியவில்லை. இதேபோலெல்லாம் இதுவரை நடந்ததில்லை. மகி எடுக்கும் முடிவே இறுதியானது.
துர்கா விஷயத்தில் எதிலும், அவன் தலையிட்டதில்லை. அப்படியிருக்க, தான் ஆசையாக கொடுத்ததை ஏன் இவள் வேண்டாம் என்கிறாள் என எண்ணம் தான் மகிக்கு.
சர்வேஷ் தூக்க கலக்கத்தில் இருக்க, அவனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் மகி, இப்போது துர்கா மௌனத்தை உடைத்து “பால்” என்றாள் தன் கணவனிடம்.
பிடித்துக் கொண்டான் மகி “நீ குடிச்சிட்டு கொடு“ என்றான். துர்கா “எனக்கு இப்போ வேண்டாம்” என்றாள் நன்றாக தெரிந்தது இது ஊடல் குரலென.
மகி அவளையே இமைக்காமல் பார்க்க, ஏதோ அவனது காபோர்டில் துணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், தன் வேலையை தொடர முடியாமல் கைகள் அலைபாய்ந்தது.
அவனிடம் எதிர்த்து பேசியதே கிடையாது இதுவரை. இப்போதுதான் இந்த நெருக்கம். எனவே சட்டென சண்டை போட வரவில்லை அவளிற்கு. ஓய்ந்து போய் கதவை மூடினாள்.
அந்த கணம், சரியாக அந்த கணம் அவளை மகி பின்னிலிருந்து அனைத்து திருப்பியிருந்தான். எதுவும் சொல்லாமல் இறுக்கி கட்டிக் கொண்டான்.
அவளும் தன் நிலை மறந்து தன்னவனை சிறு கேவலுடன் ஒட்டிக் கொள்ள, “சாரி ஸ்ரீ” என்றான் குரலில் கரகரப்பு வந்தது.
அவள் முகத்தை நிமிர்த்த, ‘இன்னும் கண் திறக்காது, கண்ணீர் வழிய, வேறு பாவம் காட்டாதிருந்த, அந்த முகத்தை பார்க்க தெவிட்டவில்லை அவனிற்கு.
ஏதோ தோன்ற “இப்பவும் உன்ன நான் கஷ்ட்ட படுத்தரனா” என்றான். குரலில் கொஞ்சம் கவலை.
துர்கா “ம்கூம்……. ஆனால், நான் உங்களுக்கு இன்னும் நெருங்கலைன்னு நினைக்கிறேன். ஏன்? என் பெயரில் அது இல்லை என்றால், நான் அங்கு போக மாட்டேனா, இல்ல, அது நம்மோடதுன்னு இல்லையா” என்றாள், அவன் நிமிர்த்திய முகம் அப்படியே இருக்க, கண் திறவாது அப்படியே பேச.
இந்த வார்த்தைகளில், மகியினுள் இருந்த, காதலன் எனும் அசுரன் வெளி வந்தான். இப்போது மகி என்னும் அசுரன், தான் பிடித்திருந்த அவளின் தாடையை லேசாக கடிக்க “ஸ்..” என்றாள் மனையாள் கண் திறக்கவில்லை.
அவளின் இடையில் கை கொடுத்து லேசாக தூக்கி அவளின் கண்ணிரண்டில் முத்தமிட ‘இன்னும் இறுக்கி மூடிக் கொண்டாள் தன் இமைகளை.
இப்போது துர்கா “விடுங்க பாவா, சும்மா சும்மா தூக்காதீங்க, காலுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது விடுங்க” என்றாள் பட படவென.
“ம்…கூம் கண்ணை திற விடுறேன்“ என்றான் காதல் அசுரன். அவளின் உதடுகள் நான் சிரிக்கிறேன் என அவளை காட்டிக் கொடுக்க.
மகி இப்போது கொஞ்சம் கேலியாக சிரித்தான் அதில் கோவம் வர பெற்றவள், திமிறி இறங்கினாள் அவனிடமிருந்து.
இறங்கி, அவள் திரும்பி செல்ல ஒரு அடி எடுத்து வைத்தவளின் கையை பின்னிருந்து இழுத்து அணைத்தான் மகி.
அந்த வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவனுள் ஓடியது. இப்போது தான் அவனிற்கே புரிந்தது ‘என்னுடையது எல்லாம் அவளதும் கூட.’ என. இப்போது இன்னும் இறுக்கினான் தனது பிடியை.
“ம் , ஈஷ்வர் “ என்றாள் சன்ன குரலில். இன்னும் ஒரு தரம் தனது பிடியை இருக்க, அவளும் தன் மூச்சை இழுத்து பிடித்து அவனுடன் ஒன்ற, சரியாக ஒரு நொடி கழித்து, தனது பிடியை தளர்த்தினான் அந்த அசுரன்.
இயல்பாய், ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு, அவளை தள்ளி நிறுத்தியவன் “சரி என்ன பண்ணனும் சொல்லு, நேற்று தானே சொன்னேன், இப்படி தள்ளி தள்ளி போகாதேன்னு” என்றான் காரமாக.
துர்கா “பொண்டாட்டிக்கு கிப்ட் யாராவது, ஒரு கார் ஷோ ரூம்ம ப்ஸன்ட் பண்ணுவாங்களா, ஏதாவது வைர நகை, இல்ல தங்க மோதிரம் இப்படி தான் கேள்வி பட்டிருக்கேன்.
ஆனால் முதல் தடவையா, இப்படி ஒரு ரன்னிங் பிஸினெஸ்சை பொண்டாடிக்கு கொடுக்கறத இங்க தான் பார்க்கிறேன்“ என அவனிடமிருந்து விலகி சொல்லிக் கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
மகி சிரித்துக் கொண்டே அவள் அருகில் வந்து அவளின் தலையை ஒதுக்கியவாறே “இந்த பிசினஸ்ஸ நீ டேக் ஓவர் பண்ணிக்கிட்டா , மாசம் ஒரு வைர நகை வாங்கலாம்” என்றான்.
துர்கா “என்ன அறிவு என் புருஷனுக்கு“ என கிண்டலாக கூற, மகி அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
துர்கா இப்போது தன் ஒரு கண்ணை மூடிக் கொண்டு “நீங்க காலேஜ் போயிருக்கீங்களா, யாரையாவது சைட் அடிச்சிருக்கீங்களா” என சின்ன குரலில் கேட்க.
மகி “என்ன பார்த்தா அப்படியா தெரியுது” என்றான் கொஞ்சம் பரபரப்பாக.
அவள் “ஹ ஹா ஹா” என சிரித்தாள். பின் “எனக்கு அதெல்லாம் வேண்டாம், நீங்க வாங்கிக் கொடுத்தால் போதும், நானே சம்பாதித்து நானே வாங்கிக்கணுமாம்” என்றாள் முனு முனுப்பாக.
சுவாரசியம் வந்தது மகியின் முகத்தில் தன் மனையாளின் கொஞ்சல் மொழி புதிது. இந்த உரிமை புதிது. அவளையே பார்த்திருந்தான். ஏதும் கூறாமல்.
அவனின் பார்வையே, அவளை தின்று கொண்டிருக்க அவனை பார்க்காமல் பார்த்த துர்க்காவிற்கும் கன்னமெல்லாம் சிவந்து அவள் வசமிழக்க தொடங்க…..
“ஸ்ரீ“ என்றான் ஆழமாக. நிமிர்ந்து பார்த்தவளிடம் ஏதும் பேச தோன்றவில்லை அவனிற்கு, அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவளின் புடவையை விலக்கி அவளின் இடையின் மென்மையை தன் கைகளில் உணர்ந்த வண்ணம் கண் மூடிக் கொண்டான்.
### %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% ###
அன்றைய இரவிற்கு பிறகு ஷோ ரூம் போய், வந்தாள் துர்கா, பெயர் மாற்றம் எதுவும் மகி செய்யவில்லை. இப்போதெல்லாம் துர்கா சொல்ல கூட வேண்டாம், பார்த்தாலே புரிந்து கொண்டான் மகி. அவள் என்ன நினைக்கிறாள் என.
நித்யாவிடம் துர்கா எல்லா விஷயத்தையும் சொல்லியிருந்தாள். அதன் மூலம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மற்ற படி யாரும் மகியிடமோ, துர்காவிடமோ ஏதும் கேட்கவில்லை. இவர்களும் ஏதும் சொல்லவில்லை.
இதற்கு நடுவில், மகி வீட்டினர் கீர்த்தி, சந்தோஷியை கூப்பிட்டு விருந்து வைக்கவும் தவறவில்லை.
நாட்கள் இப்படி தான் அழகாக சென்றது எல்லோர்க்கும், நாளை கோவையிலிருந்து சிங்கப்பூர் கிளம்புகிறார்கள் அகில் குடும்பம் என்ற நிலையில், இப்போது தான் சேலம் வந்தனர் இருவரும்.
ராஜேஷுக்கு திருமணம் கூடி வரும் போல் இருந்தது. அதை பற்றிய பேச்சுகள் சென்று கொண்டிருந்தது. இரு குடும்பத்திற்கும் நடுவில்.
இதோ இப்போது இவர்கள், எல்லோரும் கோவை கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆம், அகில் பட்டாளத்தை வழியனுப்பி விட்டு, ராஜேஷ், வைதேகி, பெரியம்மா அனைவரும் மேட்டூர் செல்லுகின்றனர். மகிக்கும் துர்காவிற்கும் தனிமை தர எண்ணி இந்த ஏற்பாடு.
அங்கு ஏர்போர்ட்டில் சர்வா தான் ஒரே ரகளை “ம்மா… நானும், ம்மா நானு” என நித்யாவை பார்த்து கத்தி, தன் அன்னையின் முகத்தை திருப்பி “ம்…. போலாம் ம்மா” என ஒரே அழுகை. நித்யாவிற்கு தான் சற்று சங்கடமாக கிளம்பினாள்.
“ஏன், பாவா எங்க போகணும்” என்றாள் சாலையில் கவனமாக. அவன் ஒரு நகைக்கடை பெயரை சொல்லவும். “ஷுக்………..ஷூ” என விசில் சத்தம் வந்தது அவளிடமிருந்து.
மகியும் அதற்கு போட்டியாக “ஷுக்………..ஷூ..ஷூ” என அவனும் சத்தமாக விசில் செய்ய, அவன் தோளில் இருந்த சர்வா சற்று நெளிந்தான்.
அவள் கவனத்தை கலைக்காமல் “ஒழுங்கா வண்டி ஓட்டுடி” என்றான் சிரித்தவாறே. பின் அவனே தொடர்ந்து “என்ன வேணும் உனக்கு, கோல்டா, டைமண்டா “ என்றான்.
“என்ன பாவா தைரியமா, நகை கடைக்கு கூட்டிட்டு போறீங்க. நான் ரொம்ப டைம் எடுப்பேன் பாவா. என் கூட நீங்க இது வரை பர்சேஸ்க்கே வந்தது இல்ல, பார்த்துக்கோங்க” என்றாள் மிரட்டும் தொனியில்.
மகி சிரித்தவாறே இருந்தான் பேசவே இல்லை, பின்னும் அவளே தொடர்ந்து “அந்த கடையில டெம்ப்ள் ஜூவல் தான் சூப்பர்ரா இருக்கும், டைமன்ட் அப்பா கிட்ட சொல்லி நல்லதா வாங்கிக்கலாம், இப்போ இது போதும்.” என்றாள்.
இப்போது மகி ”என்ன டி, சின்ன பொண்ணு மாறி இவ்வளோ பேசுற, நீ பேசுவன்றதே இப்போ தான் தெரியுது” என்றான் அதே சிரிப்புடன். இப்படியாக பேச்சுக்கள் சென்றது.
அதற்குள் கடை வரவும், உள்ளே சென்றனர். பொறுமையாக பார்த்து பார்த்து எடுத்தாள் துர்கா, தங்கம் அவளிற்கு பரீச்சையம் என்பதால், கொஞ்சம் அமைப்பு பார்த்தே வாங்கினாள்.
சுத்தமாக நான்கு மணி நேரம் ஆனது, துர்கா அந்த கடையின் கலெக்ஷனை எல்லாம் பிரித்து போட்டிருந்தாள் என்றால், மகன் அந்த கடையை, தன் குறும்பால் அதனை நடத்திக் கொண்டிருந்தான்.
மகி வலிக்காதா மாதிரியே இருந்தான். அவன் இருந்த இடத்தை விட்டு எழவில்லை. கடை பணியாளர்களே சர்வாவை பார்த்துக் கொண்டனர். இவனின் வேலை துர்காவை பார்ப்பது மட்டுமே.