நவீனைக் கண்டதும் ராகவனுக்கு திருப்தியாக இருந்தது. “ஹாய் நவீன்“, என்று கை கொடுக்க “ஹாய்”, என்ற படி கை கொடுத்தான் நவீன்.
“இன்னைக்கு தான் தேனு உங்க காதலைப் பத்தி சொன்னா. எத்தனை வருஷமா ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க?’, என்று ராகவன் கேட்டதும் “என்ன டி இதெல்லாம்?”, என்ற பார்வையை தேன்மொழி நோக்கி வீசினான்.
அவள் தலை குனிய “காலேஜ் படிக்கும் போதுல இருந்தே”, என்று பதில் கொடுத்தான்.
“அப்ப இருந்தே வா? ஆனா இவ ஒரு வார்த்தை கூட சொல்லலை. சரி உங்க மொபைல் நம்பர் கொடுங்க”, என்று கேட்டதும் வேறு வழியில்லாமல் கொடுத்தான்.
பின் சிறிது நேரம் பேசிய ராகவன் “எனக்கு ஆஃபிஸ்க்கு நேரம் ஆகிருச்சு. நாம அப்புறம் பேசலாம். உங்க வீட்டு நம்பர் கொடுங்களேன்”, என்று சொல்லி நம்பர் வாங்கிக் கொண்டு சென்றான்.
அவன் சென்றதும் “சாரி நவீன்”, என்று தேன்மொழி முணுமுணுக்க “எனக்கு இப்ப ஓபி இருக்கு. முடிஞ்சதும் பேசிக்கிறேன்”, என்று கடுப்புடன் சொல்லி விட்டுச் சென்றான். அவனை எப்படி சமாளிக்க போறோம் என்று எண்ணிக் கொண்டே வேலையைக் கவனிக்க சென்றாள்.
ஆபீஸ் வந்த ராகவனுக்கு மனது சந்தோஷமாக இருந்தது. அது தங்கையின் திருமணத்தை எண்ணியோ என்னவோ?
லேசாக நிமிர்ந்து ஸ்ருதியைப் பார்த்தான். அழகிய வெள்ளை நிறச் சுடிதாரில் தேவதை போல இருந்தாள். தலைக்கு குளித்திருப்பாள் போலும். சில முடிகளை கிளிப்பில் அடக்கி மற்றத்தை விரித்துப் போட்டிருந்தாள்.
அவளிடம் பேச வேண்டும் போல ஆசை எழ அறையை விட்டு வெளியே வந்தான். அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்பப்து போல அவள் அருகில் வந்தான்;.
சந்தன கலர் சட்டையும் மெருண் கலர் பேண்ட்டும் அணிந்து ஹெண்ட்ஸம் லுக்கில் இருந்தவனைக் கண்டு மயங்கிப் போனாள் ஸ்ருதி.
அவள் பார்வையில் அவன் மனம் சிறகடிக்க தன்னை மீறி அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டுச் சென்றான். அது உண்மையா பொய்யா என்று தெரியாமல் திணறினாள்.
“கண்டிப்பா அது கற்பனை தான். அவனாவது கண்ணடிக்கிறதாவது?”, என்று எண்ணிக் கொண்டு வேலையைப் பார்த்தாள்.
அன்று மாலை ஆகாயத்தைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள் ஸ்ருதி. அவளுடைய கண்களில் மயக்கமும் மையலும் தெரிந்தது. உள்ளம் முழுவதும் ஏதோ ஒரு மாய உலகுக்குள் சென்று கொண்டிருந்தது. காதல் மட்டுமே ரகசிய கனவுகளை உற்பத்தி செய்யும் என்பதற்கேற்ப கனவில் சஞ்சரித்திருந்தாள்.
தனிமையில் அவள் ரகசிய கனவுகளில் மெய் மறந்து இருக்க வானம் மேகம் கூடி இருட்ட ஆரம்பித்தது. அதைக் கூட அவள் உணர வில்லை.
மழை வரும் அறிகுறியாக ஜில்லென்ற பூங்காற்று அவள் முகம் வருட கனவுகளில் இருந்து வெளியே வந்தாள். இப்போது மேகம் லேசாக இருட்டிக் கொண்டு வந்தது. சற்று நேரத்தில் மழை பெய்ய ஆரம்பிக்க அவள் மழையை ரசித்தாள்.
“இந்நேரம் அவன் என்ன செஞ்சிட்டு இருப்பான்?”, என்று எண்ணியவளின் முகம் மென்மையானது. ஆறடி உயரத்தில் கம்பீரமாக இருந்த ராகவனின் முகம் மனக் கண்ணில் மின்னியது.
“வர வர ரொம்ப அழகா ஆகிட்டே வரான். இன்னைக்கு அவன் கண்ணடிச்ச மாதிரி இருந்தது உண்மையா இருந்தா எப்படி இருக்கும்?”, என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அன்று ஸ்ருதி அலுவலகம் வரவில்லை. எப்போதும் அலுவலகம் வந்ததும் ராகவனின் கண்கள் அவளைத் தேடும். இன்றும் அப்படி தான் அவளைத் தேடினான். ஆனால் அவளது சீட் வெறுமையாக இருக்கவும் சற்று குழம்பி போனான்.
“ஒரு வேளை பாத்ரூம் போயிருப்பாளோ?”, என்று எண்ணியவன் அவளுடைய சிஸ்டம் ஆன் பண்ணாமலே இருக்கவும் அவள் இன்னும் வரவில்லை என்று புரிந்தது.
“வைஷு”, என்று அழைத்தான்.
“சொல்லுங்க சீனியர்”
“எங்க உங்க ஃபிரண்ட்? லீவா இன்னைக்கு? ஹெவி வொர்க் இருக்கும் போது லீவ் போடலாமா?”
“எப்பவும் லீவ் போட மாட்டா சீனியர். அவளுக்கு வீட்ல இருக்குறதை விட இங்க இருக்க தான் பிடிக்கும். ஆனா இன்னைக்கு ஏன் லீவ்ன்னு தெரியலை. கால் பண்ணினேன், எடுக்கலை”
“சரி உங்க வேலையைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்தவனுக்கு அன்று வேலையே ஓட வில்லை.
அவளுக்கு ஒரு வேளை உடம்பு சரி இல்லாம போயிருக்குமோ என்று கவலை கொண்டான். அவளுடைய எண் அவனிடம் இருக்கிறது தான். ஆனால் அதை அழுத்த தான் அவனுக்கு தைரியம் இல்லை. தேன்மொழி இப்போது ஹாஸ்பிட்டலில் இருப்பதால் அவளிடமும் கேட்க முடியாது என்று உணர்ந்து கொண்டான்.
“ஏன் டி லீவ் போட்ட? என்ன ஆச்சு உனக்கு?”, என்று அவன் மனம் புலம்பித் தவித்தது.
அதே நேரம் உச்ச கட்ட டென்சனில் வீட்டில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி. திடீரென்று அவளை கம்பெனிக்கு லீவ் போடச் சொன்னார் தேவேந்திரன். வேணியும் அதற்கு ஒத்து ஊத நவீனும் அன்று மருத்துவமனைக்கு லீவ் போட்டிருந்தான்.
ஏன் என்று எத்தனை முறை அவள் காரணம் கேட்டாலும் யாருமே சொல்ல வில்லை. என்னவா இருக்கும் என்று அவள் மூளை குடைந்தது. ஆனால் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று மட்டும் அவளது உள் மனது எச்சரித்தது.
அதே நேரம் ராகவனைப் பற்றியும் யோசித்தாள். “இன்னைக்கு ஆபீஸ் வரலைன்னு என்னைத் தேடுவானா? அவன் எங்க தேடப் போறான்? நான் வரலைன்னு ஜாலியா இருப்பான்”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டாள்.
அப்போது அறைக்குள் வந்த வேணி “ஸ்ருதி குட்டி, இந்த சேலையை எடுத்துக் கட்டு டா”, என்று சொல்ல அவள் மூளைக்குள் சங்கு சத்தம் கேட்டது.
“சேலையா? எதுக்கு மா?”
“எதுக்கு இப்படி கேள்வியா கேட்டுட்டு இருக்க? சொன்னா கேளு”
“சொன்னா தான் மா செய்வேன்”
“உன்னை பொண்ணு பாக்க வராங்க போதுமா? அப்பா கூட லோக்கோ பைலட்டா ஒரு பையன் ஜாயின் பண்ணிருக்கான். பேர் விக்ரம். உன்னை மாதிரியே இன்ஜினியரிங் படிச்சு ரயில்வேல வேலை வாங்கிட்டார். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வீட்ல இருந்து வந்துருவாங்க. கிளம்பு டா”, என்று சொல்ல அடுத்த நொடி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
அதைக் கண்டு திகைத்து போனாள் வேணி. “ஸ்ருதி”, என்று அலறிய வேணியின் குரல் கேட்டு அங்கு வந்தார்கள் தேவேந்திரனும் நவீனும்.
“இதோ பாக்குறேன் மா”, என்று சொன்னவன் அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தினான்.
“அம்மா ஏதாவது ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாங்க”, என்று சொல்லி தாயை அனுப்பியவன் அவளை பரிசோதித்தான்.
“என்ன ஆச்சு நவீன்?”, என்று கேட்டார் தேவேந்திரன்.
“அதிர்ச்சில மூளை செயல் இழந்து இப்படி ஆகிருக்கும் பா. நாம முன்னாடியே இவ கிட்ட சொல்லிருக்கணும். மாப்பிள்ளை வீட்ல இன்னொரு நாள் வரச் சொல்லி சொல்லிறீங்களா?”
“பின்ன பிள்ளை இந்த நிலைமையில இருக்கும் போதா அவங்களை வர வைக்க முடியும்? நான் இப்பவே அவங்களை வர வேண்டாம்னு சொல்லிறேன்”
“சரிப்பா, அந்த தண்ணியை எடுங்க”, என்று சொல்ல அவர் எடுதுக் கொடுத்தார்.
அதை வாங்கி அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்ததும் அவள் மயக்கம் தெளிந்தது. ஆனால் அவள் முகத்தில் கலக்கமும் கண்களில் கண்ணீரும் வந்து அமர்ந்தது.
கண்களில் நீருடன் அமர்ந்திருக்க வேணி ஜூஸ் எடுத்து வந்து “முதல்ல இதைக் குடி”, என்று சொல்லி அவளை பருக வைத்தாள்.
அதை ஒரே மூச்சில் குடித்து முடித்த ஸ்ருதிக்கு ஆழ வேண்டும் போல் இருந்தது.
“இப்ப ஓகே வா ஸ்ருதி? “, என்று நவீன் கேட்டதும் “ம்ம்”, என்றாள். .
“கல்யாணம்னா எல்லாரும் சந்தோஷம் தான் படுவாங்க. நீ என்ன இப்படி மயங்கி விழுற?”, என்று தேவேந்திரன் கேட்க அவரை பயத்துடன் பார்த்தாள்.
“ரிலாக்சா இரு டா பாப்பா. அப்பா அவங்களை இன்னைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்ப கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. அப்பா அம்மா வாங்க, நாம வெளிய போகலாம். அவ தூங்கட்டும்”, என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றான் நவீன்.
அவர்கள் அங்கிருந்து சென்றதும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் ஸ்ருதி. அடுத்து என்ன என்று அவளுக்கு புரியவே இல்லை. இன்று தப்பித்தாலும் இது மீண்டும் நடக்கும் என்று அவளுக்கு தெரியுமே?
மூளை மறுத்து போனது போல இருந்தது. செயல்பட முடியாத படி இருந்தது அவள் நிலை. அவன் மனதில் அவள் இருக்கிறாள் என்று தெரிந்தால் வீட்டில் பேசலாம். ஆனால் தன்னைக் கண்டாலே ஒதுங்கிச் செல்பவனை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்யவாம்?
ஆனால் அவனை அன்றி வேறு யாரையும் மனதால் நினைக்க முடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். இன்றே திருமணம் நடக்க போவதில்லை தான். ஆனால் நான் உங்களை திருமணம் செய்ய தயார் என்பது போல அலங்காரம் செய்து கொண்டு கண்டவன் முன்பு நிற்க அவள் தயாராக இல்லை. அவளுடைய மனதும் உடலும் ராகவன் ஒருவனுக்கே சமர்ப்பணம். அதை மற்றவர்களின் காட்சிப் பொருளாக்குவதா?
இதை எப்படித் தடுக்க என்று தெரியாமல் அவளால் கண்ணீர் வடிக்க மட்டும் தான் முடிந்தது. அவள் அங்கு வேலைக்கு சேர்ந்து வருடக் கணக்கில் ஆகி இருந்தது. ஆனால் இப்போது வரை ராகவனிடம் எந்த மாற்றமும் இல்லை .
காத்திருப்பு கூட காதலில் சுகம் தான் என்று சொல்லுவார்கள். ஆனால் ஸ்ருதியின் காத்திருப்பு அவளுக்கு பயத்தை தான் கொடுத்தது.
அன்று மாலை வரை அவளை தூங்க விட்டவர்கள் அதன் பின் விக்ரமை எப்போது வரச் சொல்ல என்று கேட்க “எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். ஒரு ரெண்டு மூணு மாசம் போகட்டும்”, என்று சொன்னாள்.
“நல்ல மாப்பிள்ளை டா”, என்று தேவேந்திரன் சொல்ல “பிளீஸ் பா”, என்று அவரிடம் கெஞ்சி நினைத்ததை சாதித்துக் கொண்டாள்.
அதே நேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராகவன் தேன்மொழிக்காக தான் காத்திருந்தான். சரியாக ஏழு மணிக்கு தேன்மொழி ஸ்ருதியை அழைப்பாள் என்பதால் அவர்கள் பேச்சைக் கேட்க அங்கேயே வட்டம் அடித்தான். அவனுக்கு எதனால் ஸ்ருதி அலுவலகம் வரவில்லை என்று தெரிய வேண்டி இருந்தது.