அத்தியாயம் -9
“இப்போ தான் உனக்கு இந்த அண்ணி ஞாபகமே வருதுல ” என்றாள் லதா எதிரில் நிற்கும் மைத்துனனை பார்த்து.
“அப்படி இல்லை அண்ணி , இந்த விஷயம் யார்கிட்ட சொல்றது தெரியலை. வீட்ல சொல்ல பயமா இருக்கு ஆனால் இதை எப்படியாச்சும் சொல்லியே ஆகனும் அதான் உங்க மூலமா சொல்றேன்” என்றான் கார்த்திக்.
“சரி விடு நீ எதுக்கும் கவலைப்படாத நான் பாத்துக்கிறேன் ” என்று அவனை அனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.
அறையில் கணவன் மொபைலை துலாவிக் கொண்டு அமர்ந்திருப்பதை கண்டாள் லதா.
“என்னங்க ஏதோ லோன் அப்ரூவல் ஆனது நோட்டிஸ் கொரியர்ல வந்தது இன்னைக்கு. உங்க கிட்ட சொல்லனும் நினைச்சேன் இதோ இப்பதான் சொல்ல டைம் கிடைச்சது. இந்தாங்க இதான் அது” என்று நீட்டினாள்.
அதை வாங்கி பார்த்துவிட்டு எடுத்து உள்ளே வைத்துக்கொண்டு..
“அ.. ஒன்றுமில்லை லதா. என் ப்ரண்டுக்காக இந்த லோன் போட்டேன். அவனுக்கு ஒரு அவசரத்தேவை போலருக்கு சரின்னு நான் லோன் போட்டேன் அவன் மாச மாசம் அடைச்சிருவான் ” என்றான் கோபி.
“சரி அதெல்லாம் இருக்கட்டும் கோபி. அது வந்து கார்த்திக்….” என்று கார்த்திக் விஷயத்தை சொல்ல எத்தனிக்கும் போது சட்டென்று எழுந்து
“எனக்கு ஒரு அர்ஜன்ட் வொர்க் நான் வெளியே போய்விட்டு வந்திடுறேன் அப்றம் பேசிக்கலாம் ” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் கோபி.
‘என்ன இவரு பேசுறது கூட காதுல வாங்காம அப்படி எங்கே தான் போவாரோ ரொம்ப மோசம் இந்த மனிஷன். கோவால மட்டும் இனிக்க இனிக்க பேசி பழகிட்டு இப்போ இங்க வந்தப்றம் என்னவாம். என்ன பத்தி கூட அவர் பேச வேண்டாம் அட்லீஸ்ட் அவர் குடும்பத்தை பத்தி யாவது பேசலாமே! ஏன் இப்படி விலகி விலகி போறாரு எதாவது பிரச்சனையா? அப்படியே பிரச்சனையாவே இருக்கட்டுமே அதுக்காக இப்படியா நடந்துக்கிறது ‘ என்று சப்புக் கொட்டிவிட்டு படுக்கையில் படுத்தாள் ‘
அவசர வேலை என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன் ரித்விகாக்கு போன் செய்தான்
“ரித்வி , உனக்கு தர வேண்டிய பணம் ரெடி பண்ணிட்டேன் கூடிய சீக்கிரம் உன் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்வர் பண்ணிடுவேன் ஆனால் ஒன்னு இனி என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது புரியுதா ” என்றான் கோபி சற்று அழுத்தமாக.
“கண்டிப்பா நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சரியா” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் அடுத்த அறையில் படுத்திருந்த தன தந்தையை பார்த்தாள்.
“அப்பா இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு ” என்றாள் ரித்விகா
“வலி தான் மா தாங்கவே முடில ரொம்ப கஷ்டமா இருக்கு ” என்று தந்தை சொன்னதும் ‘கவலை படாதீங்க பா சீக்கிரமே உங்களுக்கு லிவர் ட்ரான்ஸ்பிளாடேஷன் ஆபரேஷன் பண்ணிரலாம் எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும் என்று சொல்லிவிட்டு கடவுள் முன்பு நின்று ” கடவுளே நான் பண்றது சரியா தப்பான்னு கூட தெரியல ஆனால் இதை தவிர எனக்கு வேற வழியும் தெரியல . அதனால தான் இந்த மாதிரி பண்ணேன் என்னை மன்னிச்சிரு என்று சொல்லி கண்ணை கசக்கினாள் .
ரித்விகா இப்படி செய்தது தன் தந்தையின் வைத்திய செலவுக்காக தான் என்று கோபியிற்கு தெரியாது. ஒரு பக்கம் அவள் செய்தது தவறு என்றாலும் இன்னொரு பக்கம் அவளுக்கான ஒரு நியாயம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கோபி லதாவுக்கு செய்தது துரோகம் தான் ,தனிப்பட்ட முறையில் அவன் வாழ்க்கையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எவ்வளவு நாள் தான் லதாவிடம் சொல்லாமல் அவன் சமாளிக்க போகிறான் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாள் பொழுதும் எப்பவும் போல் கழிந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் மனிதனின் அனுபவம் தான் மாறுபடுகிறது . அன்று என்னவோ தெரியவில்லை லதாவுக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்பது போல் இருந்தது. உடனே குளித்து முடித்துவிட்டு கிளம்பி கோவிலுக்கு சென்றாள்.
‘யாமிருக்க பயமேன் ‘ என்று முருகர் சன்னதியில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு ‘முருக நீ இருக்கிற தைரியத்துல தான் நான் இருக்கேன். நீ எப்பவுமே துணையை இருப்பான்னு எனக்கு தெரியும். முருகா ….எப்படியாவது என்னையும் என் புருஷனையும் சகஜமா இயல்பாக இருக்க வச்சிடு. என்று சொல்லி புலம்பினாள் லதா .
இவளுக்கு எதிரே ஒரு பெண் சாமி கும்பிட்டு விட்டு தூணில் சாய்ந்தவாறு வந்து அமர்ந்தாள். அடுத்து லதாவும் சாமி கும்பிட்டு விட்டு அந்த பெண்ணின் அருகில் வந்து அமர்ந்தாள்.
‘இவங்கள பார்க்கவே ரொம்ப சோகமா இருக்காங்க போல இருக்கு. நமக்கு தான் பிரச்சனை என்று பார்த்தால் ஊர் உலகத்துல நிறைய பேருக்கு பிரச்சினை இருக்கும் போல இருக்கு’ என்று நினைத்துவிட்டு அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தாள் லதா.
கண்களில் பெருகியோடும் நீரோடு அந்த பெண் அமர்ந்திருந்தாள்.
‘அச்சச்சோ அழறாங்களே என்னவா இருக்கும்’ என்று சிந்தித்தபடியே அந்த பெண்ணிடம் கேட்டாள் லதா.
“எதுக்கு அழறீங்க என்ன ஆச்சு சொல்லுங்க” என்றதும்.
“சொன்னா மட்டும் அந்த பிரச்சனையை தீர்த்து வச்சிடவா போறீங்க. அடபோங்க”என்று அந்தப் பெண்மணி கண்களை துடைத்துக் கொண்டாள்.
“உங்க பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா அப்படின்னு எனக்கு தெரியல ஆனா ஒருவேளை என்கிட்ட ஷேர் பண்ணா உங்களுடைய மனசுல இருக்குற சுமை வேணும்னா குறையலாம் இல்லையா?” என்றாள் லதா.
“கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு இன்னும் வயித்துல ஒரு பூழு பூச்சி கூட உண்டாகல. என்னதான் நானும் என் புருஷனும் சந்தோஷமா இருந்தாலும் இந்த சமுதாயம் எங்க போனாலும் கேட்கிற கேள்வி குழந்தை இருக்கா அப்படின்னுதான். நானும் எவ்வளவோ வாட்டி ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணி பார்த்தேன் ஒன்னும் சரியான பாடே இல்ல. என் வருத்தத்தை யார் கிட்ட போய் சொல்ல முடியும் அதான் கடவுள் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்” என்று லேசான ஒரு புன்னகையோடு லதாவை பார்த்தாள் அந்த பெண்.
“ஐயோ என்னங்க நீங்க, இந்த காலத்துல எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி இருக்கு. இது சகஜமான ஒரு விஷயமா மாறிடுச்சு. சமுதாயம் அப்படிங்கிறது எங்க ஆரம்பிக்குது? நம்ம சொந்தக்காரங்க ,நம்ம ப்ரண்ட்ஸ் இப்படி தானே? உங்க கிட்ட கேள்வி கேட்கிற யாரும் உங்களுக்கு உதவின்னு வரப்போ எதுவும் செய்யப்போறது இல்லை அப்றம் ஏங்க அவங்க கேட்கிற கேள்விக்கு நீங்க பயப்படுறீங்க.” என்றாள் லதா.
“பயம்னு இல்லைங்க, ஒருவிதமான சங்கடம்.” என்றாள் அந்த பெண்.
“சங்கட படுறதுக்கு ஒன்னுமில்லை அக்கா. எதை பத்தியும் யோசிக்காதிங்க. நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?” என்றாள் லதா.
லதாவை உற்று நோக்கினாள் அந்த பெண்.
“அட மத்தவங்கள மாதிரி இந்த ஆஸ்பிட்டல் போ அந்த ஆஸ்பத்திரி போ அப்படின்னு எல்லாம் நான் சஜஷன் சொல்ல வரலைங்க நான் சொல்ல வந்ததே வேற” என்றாள் லதா.
“சொல்லுடா மா இப்போ நான் இருக்கிற வருத்தத்துக்கு நீ எது சொன்னாலும் எனக்கு அது ஆறுதலா தான் இருக்கும் சொல்லு கேட்கிறேன்” என்றாள் அந்த பெண்.
“அக்கா இந்த உலகத்தில் எத்தனையோ அனாதை குழந்தைகள் இருக்கு. அப்பா அம்மா இல்லாம குடும்பம் அப்படின்னு எதுவும் இல்லாம அன்புக்காக ஏங்கிட்டு அனாதை ஆஸ்ரமத்தில் வளர்றாங்க. அந்த மாதிரி ஒரு அனாதை குழந்தைக்கு நீங்க ஏன் வாழ்க்கை தரக்கூடாது? அம்மா அப்படிங்கிற பந்தத்தை நீங்க ஏன் அந்த குழந்தைக்கு தரக்கூடாது? ” என்று கேட்டவுடன் அடக்கி வச்சிருந்த துர்க்கம் இன்னும் பீரிட்டு வந்தது கண்ணீராய்.
“நீ சொல்றது சரி தான் மா, இத்தனை நாள் வரைக்கும் எனக்கு ஏன் இது தோணவே இல்லை… ” என்று சொல்லி அந்த பெண்மணி அழுதாள்.
“அக்கா இனி நீங்க அழக்கூடாது. உங்களுக்கு நிச்சயம் அம்மா அப்படிங்கிற அங்கிகாரம் கிடைக்கும். நான் சொன்ன விஷயத்தை மனசுல வச்சிக்கிட்டு சந்தோஷமா வீட்டுக்கு போய் ஒரு நல்ல முடிவு எடுங்க. சட்டப்படி எப்படி தத்தெடுக்கனும்னு விசாரிச்சிட்டு நீங்களும் உங்க வீட்டுக்காரும் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க. சரி நான் கிளம்புறேன்” என்று எழுந்தாள் லதா.
“அம்மாடி நீ யாரு பெத்த புள்ள தெரியல சாமி மாதிரி என் பிரச்சனைக்கு பதில் சொல்லிட்டு போயிருக்க.. ரொம்ப நன்றி மா” என்றாள் அந்த பெண்மணி.
“உங்கள நான் அக்கானு கூப்பிட்ட அப்புறமா எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க என்ன உங்க தங்கச்சியா ஏத்துக்க மாட்டீங்களா” என்று புன்னகையித்தாள் லதா.
“ஹாஹா… கண்டிப்பா. நீ அவசியம் என் வீட்டுக்கு வரனும். இதோ இந்த கோவில்ல இருந்து நாலாவது வீடுதான். சரி அப்போ நானும் கிளம்புறேன் ” என்று விடைப்பெற்றாள் அந்த பெண்மணி.
கோவிலை விட்டு படி தாண்டி வெளியே வரும்போது ஒருவித மகிழ்ச்சி லதாவுக்கு இருந்தது .மற்றவர்களுடைய பிரச்சினையை தீர்த்து வைத்து அவர்கள் முகத்தில் பார்க்கும் சந்தோஷமே நமக்கு தனி சந்தோஷம் தான். விரைவில் கோபிக்கும் லதாவுக்கும் இடையே ஒருவித நெருக்கம் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கையும் சகஜமாக மாறிவிடும் என்று நம்பினாள் லதா.
ரித்விகாவுக்கு பணம் செட்டில் பண்ண போகும் மகிழ்ச்சியில் இருந்தான் கோபி இனி ரித்விகாவுக்கும் கோபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி லதாவுடன் வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான் கோபி. வேலைக்கு சென்றிருந்த கோபி சிங்கப்பூர் செல்லும் பிளான் பற்றி மீண்டும் யோசித்தான். சிங்கப்பூர் போகலாமா வேண்டாமா இப்பதான் லதாவோட சந்தோஷமா வாழலாம் அப்படின்னு சொல்லி முடிவு பண்ணினோம் இப்போ மறுபடியும் சிங்கப்பூர் போயிட்டா லதாவுக்கும் எனக்கும் ஒரு கேப் வந்துருமே. பேசாம லதாவையும் சிங்கப்பூர் அழைச்சிட்டு போயிடலாமா? என்று மனதுக்குள் போட்டு குழப்பிக் கொண்டிருந்தான் கோபி.
கோபி யோசித்துக் கொண்டிருக்கும் போதே லதாவிடம் இருந்து போன் வந்தது.
“ஆபீஸ்ல இருக்கேன் லதா சொல்லு என்ன விஷயம் “என்றான் கோபி.
“நேத்து கார்த்திக் பற்றி ஒரு விஷயம் சொல்ல வந்தேனே அதை நீங்க காது கொடுத்து கூட கேட்கல இப்ப சொல்லவா வேண்டாமா” என்றாள் லதா.
“சரி சொல்லு ” என்றதும் கார்த்திக் தன்னிடம் சொல்லிய எல்லாவற்றையும் கணவனிடம் சொன்னாள் லதா.
‘இப்பதான் நமக்கு கல்யாணம் ஆச்சு சரியா லதாவோட இன்னும் வாழ்வே இல்லை.அதுக்குள்ள நம்ம தம்பி இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு இருக்கான். என்ன செய்றது. நம்ம வாழ்க்கையை பார்க்கிறதா இல்ல இன்னும் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்கிறதா’ என்று தலையை சொரிந்தான் கோபி.
தொடரும்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.