“இட்ஸ் ஓகே சார். நான் பார்த்துக்கறேன். யூ கேரி ஆன்”
“நாந்தான் டிராப் பண்ணறேன்னு சொல்லறேனே ” குரல் காசுவளாக காட்டிக் கொண்டாலும் “நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்” என்றும் காட்டிக் கொடுத்தது.
அவன் வார்த்தையை மீற முடியாமல் தயக்கத்துடன் ஏறினாள்.
“நீங்க எப்படி இங்க?”
“உங்க கம்பனியோட ஓனர்” அவன் குரலில் எந்த அலட்டலும் இல்லை.
“ஓ! சாரி சார் சாரி ! ஏதோ தெரியாம ஏறிட்டேன். நிறுத்துங்க, நான் ஏதாவது ஆட்டோ புடிச்சு போய்க்கறேன்”
அவளுக்கு பயத்துடன் பதட்டமும் ஒட்டிக் கொண்டது.
“ஹே! நீங்க வேலை செய்யறது ஆஃபீஸுல. திஸ் ஐஸ் நாட் அவர் ஆபீஸ். எல்லாத்துக்கும் மேல நீங்க என்னோட தங்கச்சியோட பிரண்டு. உங்கள பாதுகாப்பா கொண்டு போய் சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு” சொல்லிக் கொண்டே அவள் பதட்டம் தீர்க்க வாட்டர் பாட்டிலை நீட்டினான்.
முதலில் அவளுக்கு இருந்த பயத்தையும் அடுத்தடுத்த வார்த்தை ஜாலங்களில் அவள் பயத்தை போக்கி இருந்தான் அதிபன்.
அவனுடன் பேசிக் கொண்டே வந்ததில் வெற்றிக்கு அழைக்க மறந்து விட்டாள் . அதுதான் அதிபனின் தனித்துவம் அவனுடன் இருக்கும்போது மற்றவர்களுக்கு உலகத்தையே மறக்கடித்துவிடுவான். அவனின் அந்த ஜாலம் இவளுக்கும் பலித்தது.
வெகு நேரம் பொறுத்து இருந்து விட்டு அவனே அழைத்தான்.
“ஓ! சாரி வெற்றி. நான் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன்”
அவன் காரில் இருந்து இறங்கி கொண்டே கூறினாள் . வெற்றி காலை ஹோல்டு செய்து விட்டு இவனுக்கு நன்றி கூறினாள் . வெற்றியுடன் இருந்த பேச்சு மும்மரத்தில் அதிபனின் முகம் மாறியதை அவள் கண்டிருக்கவில்லை.
“யாரு கூட வந்தீங்க?”
“என்னோட பாஸ் தான் கொன்டு வந்து விட்டாரு”
இவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது . போனை வைத்து விட்டான்.
மறு நாள் காலையில் அவன் எதுவும் பேசவில்லை. தன்னவனுக்கு இத்தனை கோபம் வருமா?
“வெற்றி சாரி”
“பரவால்ல மேடம்! நீங்கல்லாம் பணக்காரங்க. பெரிய காருல பெரிய ஆளு கூட போகும்போது எங்க நினைவெல்லாம் வருமா?”
அவனின் பாரா முகம் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தான் செய்த தவறுக்கு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அன்றும் மாலையில் அவன் வரவில்லை. தோழனே வந்தான். மறு நாளும் அவன் வரவில்லை. அவளால் பொறுக்க முடியவில்லை.
“என்னாச்சு! ஏன் அவரு வரல?” தான் செய்த தவறுக்காக அவன் தன்னை தண்டிக்கிறான் என்று நினைத்தாள் .
அவனின் முகம் பார்க்கவும் அவன் வாங்கி கொடுக்கும் பழச்சாறுக்கும் மனம் ஏங்கியது.
“தெரியல மேடம். உடம்புக்கு முடியல நீ போயிட்டு வந்துருன்னு அண்ணன் சொல்லிச்சு”
“சரி! என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?”
“சரிங்க மேடம்”
வெற்றியின் வீடு.
“இதுதான் அண்ணன் வீடு மேடம்”
“நீங்க இங்கையே வெய்ட் பண்ணுங்க. நான் இதோ ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள வந்துருவேன்”
“சரிங்க மேடம்”
அவனே வெற்றியின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
“அண்ணே ! வித்யா மேடம் வந்துருக்காங்க”
படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து வந்தான். அருகில் இருந்த துண்டை மேலே போர்த்திக் கொண்டான்.
“நான் வெளில இருக்கேன் மேடம்”
“டேய்! மேடத்துக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வா”
“இல்ல! அதெல்லாம் எதுவும் வேணாம். ஜஸ்ட் உங்கள பார்த்துட்டு போக தான் வந்தேன் “
தோழன் அவர்களுக்கு தனிமை தந்து வெளியில் சென்ற பிறகு,
“எங்கிட்ட என்னடா வெட்கம்? என்னை பார்த்த உடனே போதிக்கற?” சட்டென அவன் தோளில் போர்த்தி இருந்த துண்டை எடுத்தாள் .
உடல் முழுவதும் பெல்டால் அடித்த அடி , காயம் ஆற ஆரம்பித்திருந்தது.
“என்னடா இது?”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
மாடியில் இருந்த துணிகளை அள்ளி எடுத்துக் கொண்டு மலர்தான் வந்தாள் .
“பரவால்ல இருக்கட்டும். இவருக்கு என்ன? இது என்ன காயம்?”
“அது உங்க விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு”
“எப்டி?”
“உங்கப்பா தான் எங்க அப்பாவை கூப்பிட்டு சொல்லி இருக்காரு. பணக்கார வீட்டு பொண்ண உங்க பையன் மயக்கி வச்சிருக்கான். என்னோட பொண்ணுக்கு பெரிய பெரிய இடத்துலேர்ந்து எல்லாம் கேட்டு வராங்க. எங்களோட தகுதி…
“அக்கா போதும்” மலரை அடக்கினான் தம்பி. அதற்கு மேல் அவள் தந்தை சொன்னதை எல்லாம் அவள் சொல்லவில்லை. ஆனால் வேறு விதமாக தொடர்ந்தாள் .
“அதுக்குத்தான் எங்கப்பா இவனை பெல்டால அடி வெளுத்து வாங்கிட்டாரு. இது எல்லாம் முதல்லயே நடக்குன்னு எனக்கு தெரியும். இவன் கிட்ட தலையா அடிச்சுக்கிட்டேன்.இவன்தான் கேக்கல”
வித்யாவின் கண்களில் தன் கணவனை நினைத்து கண்ணீர் மல்கியது. அடுத்த அடி எடுத்து வைத்து அவனை ஆற தழுவிக் கொண்டாள் . அவன் அவளை கட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவளின் அணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. உடல் காயத்திற்கும் சரி மன காயத்திற்கும் சரி. இது காம வேட்கை அல்ல. ஒரு விதமான ஆறுதல். தோழமை தரும் ஆறுதல். ஆனால் சில நிமிடங்களில் அதன் அர்த்தம் உனக்காக நான். உனக்காகவே நான் என்று மாற தொடங்கியது. அவனின் லேசான உடல் சூட்டை அவள் வாங்கிக் கொண்டாள் . பதிலுக்கு கணவனுக்கு மனைவி என்ன கொடுப்பாள்? மலருக்கு அங்கே நிற்க கூச்சமாக இருந்தது. அவர்களுக்கு தனிமை கொடுத்து சமையல் அறைக்கு சென்று விட்டாள் . வெற்றியின் உடல் சூட்டிற்கு விலையாக, வித்யா கொடுக்கும் முத்த சத்தம் உள்ளே நின்றிருந்த மலருக்கு அங்கேயும் கேட்டது. இதை எப்படி தடுப்பது? மலருக்கு ,புரியவில்லை. பயமாகவும் இருந்தது. அதே சமயம் தன் தம்பிக்கும் வித்யாவுக்கு திருமணம் நடந்தால் ? மனம் ஆசை பட்டது. எத்தனை அழகாய் இருக்கிறாள்?படித்தவள் தன் தம்பியின் வாழ்க்கை நிலையே மாறி விடும். இவளின் ஒற்றை கண் பார்வை போதும்.அவனை ஆட்டி வைக்க. மலருக்கும் ரொம்ப பெரிய வயது ஆகவில்லை என்றாலும் மனதளவில் அவள் மிகவும் முதிர்ச்சி அடைந்தவள் தான். அதே சமயம் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை எளிதில் புரிந்து கொள்பவள். எல்லா விஷயங்களையும் சாதாரண கோணத்தில் பார்க்காமல் வேறு கோணத்தில் சிந்திப்பவள். நல்லது. கெட்டது தெரிந்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவள்.
இப்போது,அவன் முகத்தில் லேசாக ஒட்டி இருந்த சில முடிகள் அவள் நகர்ந்ததும் தானாகவே விலகிக் கொண்டன.
“சாரி டா ! எனக்கு இதை பத்தி எதுவுமே தெரியாது “
“நாம இனிமே பாக்காம இருக்கறது தான் நல்லது மேடம். உங்க அப்பா சொல்லறதும் சரிதானே! பெரிய பணக்கார மாப்பிள்ளை கிடைச்சா நீங்களும் சந்தோசமா இருப்பீங்க. நாலு கார் அஞ்சு கார் வச்சிருப்பாங்க. வித விதமா நகை புடவை போட்டுக்கிட்டு மஹாராணி போல வாழலாம்”
இத்தனை நேரம் அணைத்து முத்தம் கொடுத்தவள் இப்போது கன்னத்தில் பளீரென அறைந்திருந்தாள் . இந்த சத்தமும் மலருக்கு கேட்டது.
“எப்டிடா உன்னோட பொண்டாட்டிய வெறும் நகை பணத்துக்காக உன்னால அடுத்தவனுக்கு கட்டி வைக்க முடியும்? நீ எப்படி வேண்ணா நினைச்சுக்கோ. உன்கிட்ட என்னோட விருப்பத்தை சொன்ன நாளில் இருந்து உன்னைத்தான் புருஷனா நினச்சுருக்கேன். என்னால வேற யாரையும் நினைச்சு கூட பாக்க முடியாது. இல்லாத மூளையை வச்சு ரொம்ப யோசிக்க ட்ரை பண்ணாத. கேவலமா இருக்கு.உடம்ப பார்த்துக்கோ. சீக்கிரமா வந்து எனக்கு பிக் அப் டிராப் பண்ணு . ரொம்ப நாள் என்னால உன்ன பாக்காம இருக்க முடியாது. வீடியோ கால் பண்ணு “
வித்யாவை பார்த்து மலருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. (இதுக்கே இப்படின்னா எப்படி? இன்னும் வித்யா யாருன்னு நீ பாக்கவே இல்லையே?)
“இந்தாங்க! இதை செலவுக்கு வச்சுக்கோங்க. மலரின் கையை பிடித்து சில ரூபாய் நோட்டுகளை வைத்து அழுத்தினாள் .
அப்போது எதேச்சையாக அங்கே வந்த வெற்றியின் தந்தையிடம்,
” தோலுக்கு உசந்த பசங்க உங்ககிட்ட அடி வாங்கறாங்கன்னா அதுபயத்துல இல்ல. உங்க மேல இருக்கற மரியாதைனால” நேராக அவர் கண்களை பார்த்து பேசினாலும் கண்களில் குளம் கட்டியது வெற்றியை நினைத்து.
அவள் சென்றதும் வெற்றிக்கு மனதில் ஏதோ ஒரு விரக்தி. தன்னால் அவளை திருமணம் செய்ய முடியுமா? எந்த முகத்துடன் அவள் தந்தையை பார்ப்பது? அவளுக்கு இருக்கும் தைரியம் அவனுக்கு இல்லை.
வீட்டிற்கு சென்ற மகள் அன்னையிடம் தந்தையிடம் சண்டையிடவில்லை. அமைதியாகவே பேசினாள் .