“என் குழந்தை தான் மேடம்”. அடையாளத்திற்கு வேறு சில அத்தாட்சியங்களை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்தார்கள்.
குழந்தையின் காதில் இருந்த தோட்டை பிடுங்கி எடுத்திருந்தார்கள். காது புண்ணாகி இருந்தது.
காப்பாற்றிய மலரை ரவி சந்தேகமாக பார்த்தான்.
“சார்! அவங்கள சந்தேகப்படாதீங்க. தன்னோட உயிரை பத்தி கூட கவலை படாம உங்க குழந்தையை காப்பாத்தி இருக்காங்க”
கையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்தான். “ரொம்ப நன்றிங்க”
அவன் கொடுத்த பணத்தை பார்த்தாள் . இந்த சில ஆயிரங்களில் என்ன நடக்கும்?
“இதெல்லாம் வேண்டாங்க. குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க சார்”
‘கன்னங்கள் ஒட்டி போய் தலை கலைந்து சாயம் போன சுடிதாரில் இருந்தவள் கையில் கிடைக்கும் பணத்தை வேண்டாம் என்கிறாளே ?’ ஆச்சர்யமாக இருந்தது ரவிக்கு.
“மிஸ்டர் ரவி! நீங்க ஏன் இவர்களையே குழந்தையை பார்த்துக்க வேலைக்கு வச்சுக்க கூடாது?இவங்க வீட்டுகாரரு இப்பத்தான் இறந்து போனாரு. எனக்கும் தெரிஞ்சவங்கதான். நம்பிக்கையான ஆளுதான்”
மதுவின் உதவியால் அவளுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது.கூடவே தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடமும் தான்.
சார்ஜ் போட்டு போனை உயிர்பித்ததும் வெற்றி முதலில் பார்த்தது அந்த காவல் நிலையத்தின் எண்ணைத் தான். என்னவோ ஏதோ என்று பதறி அடித்து போன் செய்தான் . மதுவே அழைப்பை ஏற்றதால் எல்லா விவரங்களையும் சொன்னாள் .
‘இந்த இரவில் எப்படி ரவிக்கு அழைப்பது? அவனுக்கு உடனே அக்காவிடம் பேச வேண்டும். எப்படி?’
ரவியின் வீட்டிற்கு வந்தவள் அங்கே இருந்த சமையல் அம்மாவிடம் இருந்தது போன் வாங்கி வெற்றிக்கு அழைத்து விவரங்களை சொல்லி விட்டாள் . அக்காவின் கணவனும் இல்லை. இனி அவன் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்ல.
” நாம நாளைக்கே போய் அவரு அம்மா மேல ஒரு புகார் குடுத்துடலாம்”
“ஏண்டா! புகார் குடுக்கறதா இருந்தா அந்த போலீஸ் மேடம் கேட்டப்பவே குடுத்துருக்க மாட்டேனா? போகட்டும் விடுடா. ஒரே ஒரு ஹெல்ப் வெற்றி. நான் எங்க இருக்கேன்னு மட்டும் யாருக்கும் தெரியாம பார்த்துக்கடா”
“சொல்லனுமா அக்கா? நீ கவலைய விடு. நான் பார்த்துக்கறேன்”
அன்றைய இரவு மீனு குட்டி தந்தையுடனேயே தூங்கி இருந்தாள். யார் யார் கையிலோ சிக்கி தவித்தவள் தன்னை அறியாம ல் தந்தையின் தோளில் படுத்து உறங்கி இருந்தாள் . அவனும் தான் நன்றாக உறங்கி இருந்தான். அலைச்சலினாலா அல்லது மகளின் தழுவளினாலா ? அவனுக்கு அந்த குழந்தையின் மீது பெரியதாக பாசம் எல்லாம் இல்லை. இது அண்ணனின் உயிரா? இந்த சந்தேகம்தான் அவனுக்கு எப்போதுமே இருக்கும். ஏனோ அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அண்ணியின் முகமே வந்து செல்லும். ஏதோ ஒரு விதமான வெறுப்பு என்று இல்லை என்றாலும் மனதிற்குள் ஒரு வித நெருடல் அதனாலேயே அவன் குழந்தையிடம் பெரியதாக நெருங்கியதில்லை. அதுவே குழந்தையை பார்த்துக் கொள்ள வந்தவளுக்கு குழந்தையை கடத்துவதற்கு வசதியாக போனது. பல நாட்களுக்கு பிறகு குழந்தையை தழுவிக் கொண்டவனுக்கும் ஆழ்ந்த உறக்கம்தான்.
“சீக்கிரம் எழுந்து கிளம்பு. மீட்டிங் இருக்கு. சூரியன்தான் முகத்தில் தன் ஒளியை பரப்பி எழுப்பி விட்டார். இன்று ஒரு பெரிய ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முக்கிய அதிகாரியுடன் சந்திப்பு. அவர்களுக்கு இந்தியா முழுவதும், மூன்று, நான்கு, ஐந்து ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் பல உள்ளன. மிகப் பெரிய இடம். வெளி நாடுகளிலும் அவர்களுக்கு கிளைகள் உண்டு. இந்த டீல் ஓகே ஆனால் இவர்களின் கம்பனியின் நிலை வேற லெவலுதான். அதற்காகத்தான் இவனே நேரில் செல்கிறான். வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்ட மலருக்கு செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. குழந்தை எழுந்தவுடன்தான் வேலை. சமையல் அம்மாவிடம் இருந்து ஒரு பழைய புடவையை வாங்கி கட்டி இருந்தாள் . தலைக்கு குளித்திருந்தவள் நன்றாக துவட்டி விட்டு நுனியில் முடி போட்டுக் கொண்டாள் .
காபி குடிக்க கீழே வந்தவன் பார்த்த காட்சி புது மலராக கையில் பவள மல்லியுடன் வந்தவளைத் தான்.
“வணக்கம் சார் “
குட் மார்னிங் கேட்டு கேள்வி பட்டவனுக்கு இது வேறு மாதிரி இருந்தது.
“குட் மார்னிங் சொல்லணும் புரிஞ்சுதா?” சமையல் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள்
“இட்ஸ் ஓகே!உன்னோட பேரு என்ன?”
“கொடி மலர் சார். எல்லாரும் மலருன்னு சொல்லுவாங்க”
“ஏத்த பேருதான்” சொல்லிக் கொண்டே ரவிக்கு காபியை கொடுத்துவிட்டு சென்றாள் சமையல் அம்மா.
ரவி காலையில் கிளம்பும் போது ,
“அப்பாவுக்கு டாடா சொல்லுங்க” வாயில் வரை குழந்தையுடன் வந்து நின்றாள். குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை. குழந்தையின் கையை இவளே ஆட்டி டாடா சொன்னாள் . அவனே அறியாமல் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் .வழக்கம்போலவே சென்ற காரியம் வெற்றி. வரும் வழியில் வரிசையாக துணி கடைகள் இருந்தன. ஏனோ சம்பந்தமே இல்லாத ரவிக்கையுடன் அந்த புடவையை சுற்றி கொண்டு நின்றிருந்தவளின் முகம் கண்ணில் வந்தது. வண்டியை ஓரம் கட்டி விட்டு அவளுக்கென சில ஆடைகளையும், உள்ளாடைகளையும் சேர்த்தே வாங்கி கொண்டான் ரவி. ஒரு பெண்ணுக்காக ரவி வந்து இப்படி உள்ளாடை பிரிவில் நிற்கப் போகிறான் என்று யாராவது சொல்லி இருந்தால் அவனே நம்பி இருக்க மாட்டான்.
வீட்டிற்கு வந்து அவள் துணிகளை கொடுத்ததும் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
‘அப்டரால் ட்ரெஸ்க்கு இவ்ளோ சந்தோசப்படுவாங்களா?ரொம்ப ஓவராத்தான் பண்ணறா’மனதிற்குள் லேசாக திட்டினான். அவன் வாங்கி கொடுத்தது நான்கு செட். அவள் உபயோகப்படுத்துவது இரண்டு தான். அதே உடைகளையேத் தான் மாற்றி மாற்றி போட்டுக் கொண்டாள்.
“ஏன் இதையே மாத்தி மாத்தி போடற” பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டான் ரவி.
“போட மனசு வரலைங்க “
“ஏன்? போட்டுக்கத்தானே வாங்கி கொடுத்தேன்?”
“அப்புறம் அழுக்காய்டும்” அவள் பதிலில் நெற்றியில் அடித்துக் கொண்டான்.
வெற்றி அவளை பார்க்க வரும்போது சில துணிகளை கொண்டு வந்து கொடுத்தான்.
“என்னடா! வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எனக்கு என்னக்கா தெரியும்?”
” இது என்னடா? நம்ம குடும்பம் இப்டி ஆயிட்டுது . இந்த மாதிரி எதுவும் ஆகிட கூடாதுன்னு தானே நான் அவ்ளோ கஷ்டத்தை பொறுத்துகிட்டேன். அப்பாதான் ஏதோ கோபத்துல பேசிட்டாருன்னா நீயும் ஏன்டா இப்டி புடிவாதமா தொங்கிகிட்டு நிக்கற?”
“அவங்களுக்கு என்ன பேச உரிமை இருக்கு. ஆனா வித்யாவை?” கண்களில் குளம் காட்டியது. “நான் வரேன்” சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் தனது காரில்.
காரா ? ஆட்டோவா? கார்தான். நம் வெற்றி இப்போது ஆட்டோ ஓட்டும் வெற்றி அல்ல. வாழ்க்கையில் வெற்றி அடைந்தது கொண்டிருக்கும் வெற்றி. வித்யாவின் வீட்டை விட்டு வந்த போது ஒரு பெரிய பணக்காரருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இவன்தான் கொடுத்திருந்தான். அவர் இவனுக்கு நிறைய உதவிகளை செய்தார். அவர் பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர். அவருக்கு பெரிய பெரிய கடைகள் இருந்தன. அதில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டான். யாரிடம் எப்படிப் வேண்டும்? எப்படி டீலர் ஷிப் எடுக்க வேண்டும். குறைகள், நிறைகள் அத்தனையும் கற்று கொடுத்தார். அவருக்கு ஒரு மகள் வெளி நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். தொழில் அனைத்தையும் அவர் ஒருவரே தான் பார்த்துக் கொண்டிருந்தார். வேலைக்கு என்று நிறைய ஆட்கள் இருந்தார்கள்தான். கண்ணுக்கு கண்ணாக, மூளைக்கு மூளையாக அவர் கண்ணை காட்டினாலே செய்து விடும் செகரட்டரி இருந்தாள் . பார்த்து பார்த்து கவனிக்கும் மனைவி இருந்தாள் . இருந்தாலும் இவனின் உதவி, ஒரு பெற்ற பிள்ளையை போன்றது. கணவன் மனைவி இருவருக்குமே இவனை மிகவும் பிடித்து விட்டது. தந்தையிடம் கிடைக்காத பாசம் அவரிடம் கிடைத்ததாகவே வெற்றியும் நன்றியுடன் இருந்தான்.
இதோ அவரே இவனுக்கு தனியாக ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்து கொடுக்கப் போகிறார். பணம், கடை, பெயர் அனைத்தும் அவருடையது. கவனிப்பும் உழைப்பும் வெற்றியினுடையது. வரும் லாபத்தில் ஒரு பெரிய பகுதி வெற்றிக்கு. அவர் மகளுக்கு திருமணம் ஆகி இருந்தது. இதற்கு மேல் வெற்றி அந்த வீட்டில் இருக்க கூடாது. புரிந்து கொண்டு தானே நகர்ந்து கொண்டான். ஒரு பெரிய அடுக்ககத்தில் தான் அவர்கள் கடை வைக்க போகிறார்கள். அங்கேயே பார்த்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான்.
அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. ஏனோ அனைவருமே கதவை சாத்தியே வைத்திருக்கின்றனர். சற்று தூரத்தில் நின்று பார்த்தால் குடும்பங்கள் வாழும் இடம் போல் அல்லாமல் ஏதோ பெரிய நட்சத்திர தங்கும் விடுதிக்கு வந்தது போலவே இருக்கும். பின் விழும் சத்தம் கூட அத்தனை துல்லியமாக கேட்டு விடும். இவன் இருப்பது பன்னிரண்டாவது தளம். இன்னும் கடை திறக்கவில்லை. இன்விடேஷன் அடிக்க வேண்டும். இதே அடுக்ககத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க கிப்ட் பேக் ரெடி செய்ய வேண்டும். கடையில் வேலை செய்ய ஆட்கள் ரெடி. இன்னும் டெலிவெரிக்கு ஆட்கள் எடுக்க வேண்டும். ஏஜென்சியிடம் சொல்ல வேண்டும். அடுத்து வெளியில் டெலிவரி கொடுக்க ஆரம்பிக்கும் போது சில எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டி வருமா ? யோசித்து கொண்டே லிப்டை திறந்தான். தவறுதலாக 12க்கு பதில் 11ஐ அமுக்கி இருந்தான் போலும். மேல் தளத்திற்கு படி ஏறி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் குழந்தை தத்தி தத்தி படிகளில் இறங்கி கொண்டிருந்தது. ஒரு வயது முடிந்திருக்கும். இளங்கன்று பயம் அறியாது. படியின் கைப்பிடி அடியில் முழுவதுமாக மூடி இருக்கவில்லை. அலங்கார கம்பிகள் வைத்திருந்தார்கள். பெரியவர்களுக்கு அது ஓகே தான் என்றாலும் குழந்தைகளுக்கு ஆபத்துதான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி. குழந்தை அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் தாவி சென்று தூக்கி இருந்தான்.
“அப்பா ! சிரித்துக் கொண்டே அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் குட்டி தேவதை. அப்போதுதான் மூச்சு வந்தது என்றாலும் அவளின் பிள்ளை மொழியும் மேனி வாசமும் அப்பப்பா சொல்ல முடியாதது. யார் வீட்டுக் குழந்தை யோசிக்கும்போதே யாரோ ஒரு பெண் வந்தாள் . குழந்தையை பார்த்துக் கொள்பவள்.
“யார் வீட்டுக்கு வந்துருருக்கீங்க?”
இவன் கேள்வி அவளுக்கு புரியவில்லை. ஏதோ வட கிழக்கு மாநிலத்தில் இருந்து வந்திருப்பாள் போலும். வீட்டை அடையாளம் காட்டினாள்.
வெற்றிக்கு குழந்தையை விட மனமில்லை. தன் வீட்டிற்கு எதிர் வீடு தான். அங்கே சென்றான். ‘வந்திருப்பது யாராக இருக்கும்? தனது யூகம் சரியாக இருக்குமா?’
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் படபடப்பு அதிகமாகிக் கொண்டே போனது.
‘இது என் குழந்தையா? தன்னவளின் உயிரில் வந்த கண்மணியா?’
ஆம்! அவன் நினைத்தது சரியே. அங்கே ஹவுஸ் ஓனரிடம் பேசிக் கொண்டிருந்தது விஜயனும் காயத்ரியும் தான்.
“ஆமா! ஆமா! அதுக்குத்தான் நானே நோ ப்ரோகர்ஸ்ல விளம்பரம் கொடுத்துட்டேன்” .ஹவுஸ் ஓனர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இவன் லேசாக கதவை தட்டினான்.
“நீங்க ?” புருவத்தை நெளிந்தார் அவர்.
பெரியவர்களுக்கு வாயில் வார்த்தை வரவில்லை. அதிர்ச்சியில் அவர்களுக்கு வாய் ஒட்டிக் கொண்டதோ? ஹவுஸ் ஓனர் எதிரில் வெற்றி எதையும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
“நான் இங்கதான் இந்த வீடு. குழந்தை ? “
“ஓ ! நீங்களும் புதுசா வந்துருக்கிறீங்க இல்ல? நீங்கதானே இங்க அந்த வெல்கம் சூப்பர்மார்கெட் ஓபன் பண்ண போறீங்க? “மஹாதேவன் சொன்னான். நைஸ் டு மீட் யூ ! இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். அவர்தான் ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்களுக்கு வாயில் இருந்து வார்த்தை இன்னும் வரவில்லை.
வேலை செய்யும் பெண் குழந்தையை வாங்கி கொள்ள போனாள் .
“பரவால்ல இருக்கட்டும்” வெற்றி தடுத்து விட்டான். குழந்தை தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு தலையை சாய்ப்பதும், நிமிர்வதும் வேடிக்கை பார்ப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த சில நிமிடத்திலேயே கையில் இருந்து நழுவி அங்கும் இங்கும் ஓடினாள். அடுத்த இரண்டாவது நிமிடம் “அப்பா! தூக்கு” சொல்ல வரவில்லை அப்பா மட்டும் சொல்லி தூக்க சொல்லி சைகை காண்பித்தாள். மனம் கொள்ளை போனது. வீடு எப்படி இருந்தாலும் இனி கவலை இல்லை.அவர்கள் இங்கேதான் இருக்க போகிறார்கள். வீட்டிற்காக இல்லை என்றாலும் வெற்றிக்காக.
“வெள்ளி கிழமை வந்து பால் காய்ச்சிக்கறோம்”இது விஜயன்.
“அப்ப டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணறேன்.விடை பெற்றுக் கொண்டு ஹவுஸ் ஓனர் கிளம்பி விட்டார் .
அவர்களை வெற்றி தன் இல்லத்திற்கு அழைத்தான்.
வீட்டில் சாமான் எதுவும் இல்லை. நான்கு பிளாஸ்டிக் சேர் இருந்தது.எல்லா அறைகளிலும் ,மின் விசிறி இருந்தது.
“வாங்க! உக்காருங்க டீ போடறேன்”
பிரிஜ்ஜில் இருந்து பால் எடுத்து டீ போட்டான். வேலை செய்யும் பெண்ணிற்கும் ஒரு கப்பை நீட்டினான் . அவர்கள் குடித்ததும் டம்ளரை வாங்கி மகளுக்கு ஆத்திஆத்தி ஊதி ஊதி ஹார்லிக்ஸ் ஊட்டினான்.
“அவளை நான் பார்த்துக்கறேன் “
சொல்ல வந்த காயத்ரியை விஜயன் தடுத்துவிட்டார். காயத்ரியை விடவும் அவர் தானே வெற்றியை பற்றி நன்கு அறிந்திருந்தவர் . வித்யாவை விடவும் அவருக்கு வெற்றியை பற்றி நன்றாகவே தெரியும். அவன் தன் மகள் மீது வைத்திருக்கும் காதலை பற்றியும் தெரியும் அவள் மகள் மேல் வைத்திருக்கும் அன்பை பற்றியும் அறிந்திருந்தவர் .குழந்தையை கையில் வாங்கியது முதல் முழுக்க முழுக்க அவளை பார்த்துக் கொண்டவன் அல்லவா? அதிலும் பிறந்த சில நாட்களில் கையில் இருந்த அந்த குட்டி குட்டி நகத்தை எத்தனை பாந்தமாக எடுப்பான்? நினைத்தவருக்கு கண் கலங்கியது.
காயத்ரி வெற்றியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இது ஏதோ கடவுளின் செயல்தான் அவள் நிச்சயம் நம்பினார். . இனியாவது தன் மகளுக்கு நல் வாழ்வு வருமா? மனதில் ஏக்கம் வந்தது.
“எப்படி இருக்கீங்க வெற்றி?”
“நல்லாருக்கேன் மேடம்”
“வேற கல்யாணம் பண்ணிக்கலையா?”
“நீங்க என்னை பார்த்து இப்டி கேக்கறீங்களே?”
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்டியே ஓட்ட முடியும் வெற்றி?
“உயிரு போச்சுன்னா வேற இன்னொன்னு வாங்க
முடியுமா?”
பூவுக்கு வலித்து விடுமோ ? குழந்தையின் முகத்தை கர்சீப்பால் மிக மெதுவாக துடைத்தான். அவன் எப்போதுமே அப்படிதான். அவன் இல்லை என்றால் வித்யா இருந்த நிலையில் அவளை விஜயனால் மட்டும் மீட்டிருக்க முடியாது.
“மேடம் எப்படி இருக்காங்க?”
“அப்டியேத்தான் இருக்கா . யாருகிட்டயும் பேசறது கூட இல்ல. “சாட்டர் பாக்ஸ் ஸ்விட்ச் ஆப் பண்ணுன்னு சொல்லிகிட்டே இருப்பேன். இப்ப? நான் உங்கள பத்தி அவகிட்ட முதன் முதல்ல பேசினப்ப,
“ ரொம்ப யோசிக்காத. போய் உன் பொண்ணுக்கு பொடிமாஸ் செஞ்சு வைன்னு சொன்னா “ இப்ப? அம்மா! பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்கறா ” சொல்லிய காயத்ரி குலுங்கி குலுங்கி அழுதார்.
ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த தந்தைக்கும் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.
தொடரும்……..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.