ஒரு வார காலமாக தினமும் ராஜாவோடு சென்று கிரௌண்டில் விளையாட சென்றாலும் இன்னும் பேசவே இல்லை இளா. அன்றொரு நாள் கோபத்தில் பேசியது தான், அதன் பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருக்க ராஜாவால் தாள முடியவில்லை. முகத்தில் இறுக்கம் குறைந்தாலும் வார்த்தைகள் பேசா விட்டால் மறந்த, அவன் அன்பை எப்படி வெளி கொணர முடியும். அன்றும் வீட்டுக்கு வண்டியில் வந்து இறக்கி விட சட்டென இறங்கி சென்றவனை பார்த்ததும் தன்னாலே கோபம் வந்து விட்டது ராஜாவிற்கு.
” அடேய்! தேங்க்ஸ் கூட சொல்லாம போறியே பக்கி, வீட்டுக்கு வந்து டீ குடிச்சிட்டு போன்னு கூட சொல்ல மாட்டியாடா..? “
மேலே சென்று தன் அறை பால்கனி வழியே இளா எட்டி பார்க்க, உள்ளிருந்து தமயந்தி வந்தார்.
“காலையிலே வந்து ஏன்டா வம்பு இழுத்துட்டு இருக்க?”
” ஹ்ம்ம், வேண்டுதல் வச்சிருக்கேன். உங்க பையனை வம்பு பேச வைக்கனும்னு. வந்துட்டாங்க ராஜமாதா! பையனை திட்டுன உடனே மூக்கு வேர்த்துரும். அவனை மட்டும் ஒன்னும் சொல்லிட கூடாது. “
“ஏன் இத்தனை வருசமா அவன் சொல்லி தான் உள்ளே வந்தியா, நீயா வந்து டீ போட்டு குடிப்பே, இப்ப மட்டும் பெர்மிசன் கேக்குற?
” அப்போ அவன் என் பிரண்ட், வந்தேன், இப்போ இல்லியே? எப்படி வர்றது? “
“அவனுக்காக தான் இங்கே வர்றியா, அப்போ நான் அத்தை இல்லையா உனக்கு.?
” உங்களை விட அவன் தான் எனக்கு முக்கியம், ஏன் அத்தை நீங்களும் இப்படி பண்றிங்க ? நீங்க பேசாத வரை, அவனும் யாருகிட்டயும் பேச மாட்டான், எத்தனை வருஷம் ஆனாலும். ” தானே வழிய சென்று பழகினாலும், ஒதுக்கி தள்ளி விட்டு போவதினால் கோபம், தன் அத்தை மேலும் திரும்பி விட்டது ராஜாவிற்கு.
” நான் அமைதியா தான் இருக்கேன், அவனை எதுவும் திட்டினேனா யாருகிட்டயும் பேச கூடாதுனு ? “
” நீங்க பேசாம இருந்து கொல்லுறதே பெரிய தண்டனை தான் அவனுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு மூஞ்சை பார்த்துட்டு இருப்பிங்க. நடந்தது தப்பு தான். நான் இல்லைனு சொல்லல. முதல்ல நீங்க அவன்கிட்ட பேசுங்க. “
ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் தமயந்தி நிற்க.
அவர் மனதிலோ ” அத்தனை பேர் முன்னாடி என் மானத்தை வாங்கிட்டான். போன பேரு திரும்பி வருமா., இல்லை ஒவ்வொருத்தனையும் கூப்புட்டு உட்கார வச்சி அவன் தப்பு பண்ணலன்னு சொல்லிட்டு இருக்க முடியுமா.,”
” இங்கே பாருங்க உங்களை விட இந்த உலகத்துல அவனுக்கு யாரும் முக்கியமில்லை, நீங்க கூப்பிடாத பேரை கூட, யாரும் கூப்பிட கூடாதுன்னு பிடிச்ச பேரையே மாத்தி வச்சிட்டு திரியிறான். உங்களுக்காக எல்லாரையும், எல்லாத்தையும் மாத்திட்டு மறந்துட்டு நிற்கிறான். இன்னும் அவன் என்ன பண்ணும்னு நினைக்கிறீங்க., ஊருல உள்ளவனை மட்டும் பார்த்து பெத்த பையனை தண்டிச்சிட்டு இருக்கீங்க..,
எனக்கு இருக்கறது அவன் ஒருத்தன் தான். அவனும் பேச மாட்டேங்கிறான். இன்னும் என்னால இவனை தவிர வேறொருத்தனை குளோசா நினைக்க முடியல. எங்களையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க, உங்களுக்கே புரியும்.” சொல்லியவன் விருட்டென கிளம்பி சென்று விட்டான். இத்தனை பேச்சும் வாசலில் நடைபெற அனைத்தும் கேட்டு கொண்டு தான் இருந்தான் இளா. தனக்காக தன் தாயிடம் பேசும் நட்பை கண்டு கலங்கி நின்றான்.
ஏனெனில் பிரச்சனை ஆரம்பித்தது தன் நட்பினால் தானே. சுகுமாரனால் நடைபெற்ற துரோகத்தால் தானே அவன் வாழ்வின் வசந்த காலங்கள் அனைத்தும் இருண்ட காலமாய் மாறிவிட்டது. அவனை பற்றி நினைக்க கூட பிடிக்காமல் உள்ளே சென்று விட்டான். ராஜாவின் பேச்சினை கேட்டு தமயந்திக்கும் கொஞ்சம் குற்ற உணர்வு எட்டி பார்க்க ஆரம்பித்தது.
****************
ரோஜா கேட்ட விஷயங்களில் உள்ள சாதக பாதகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு, பதில் கூறி அலசி ஆராய்ந்தவன் மனதில் ” நல்ல டேலண்ட் ஆன பொண்ணு தான் ராஜா அப்பாய்ன்மெண்ட் பண்ணிருக்கான். டிரையல் பேலன்ஸ அக்கு வேறா ஆணி வேறா அலசி கேள்வி கேக்குறா. அந்த மஞ்ச மாக்கானுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கே.”
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவன் ஆபீஸ்க்கு வந்து பழைய கணக்குகள் அனைத்தையும் தூசி தட்டி எதனால் நட்டம் ஏற்பட்டது என்பதை அலசி ஆராய்ந்து, ஒவ்வொன்றாக சரி செய்ய முற்பட்டனர். தினசரி பழகி ரோஜாவும் சகஜமாய் இளாவோடு இப்போது பேச ஆரம்பித்திருந்தாள்.
” எனி டவுட் ” கிளம்பு சமயம் இளா அவளிடம் கேள்வி எழுப்ப,
” இப்போ நீங்க ஆடிட்டர் இல்லை. நான் உங்க கிளைண்ட் இல்லை. உங்க தங்கச்சி மட்டும் தான். டீல் ஓகேயா.”
” பெருசா பிட்டு போடுறாளே என்னவா இருக்கும் ..,”என ஆர்வமாக பார்த்து சரியென தலையசைக்க.
“அதுண்ணா, நான் பத்து நிமிஷம் பேசினா எண்ணி எண்ணி வேர்ட்ஸ் யூஸ் பண்ணி பேசுறீங்களே. தொண்டைக்குள்ள என்ன வாய்ஸ் கவுண்டிங் மிஷின் வச்சிருக்கீங்களா? “
அவள் கேள்வியில் மனதில் அடங்கமாட்டாமல் சிரித்து, இதழ் கடையோரம் மெல்லிய முறுவல் எட்டி பார்க்க, அதையும் மறைத்து, தோளை குலுக்கியபடி இலகுவாய் ” பேசினா மட்டும் என்னம்மா ஆக போகுது, எதுவும் மாற போவதில்லையே.”
” ஏன் மாறாது? நம்ம மனசில் உள்ள எல்லா உணர்ச்சியும் வார்த்தையா தான் வெளி வருது. நீங்க யாருகிட்டயும் பேசாம இறுகி போய் இருந்தா, மெண்டல் ஸ்ட்ரெஸ் அதிகமாகி எல்லா வியாதியும் தானாவே வந்து ஒட்டிக்கும். மனசு விட்டு பேசுங்க, ஜாலியா இருங்க, இந்த வயசில் எல்லா பசங்களும் எப்படி அரட்டையடிச்சுட்டு இருப்பாங்க. நீங்க என்னனா பேச கூட யோசனை பண்ணிட்டு அதுக்கும் அமௌண்ட் கேப்பிங்க போல. எல்லார்கிட்டயும் முடியலைன கூட நெருக்கமானவங்க கிட்டயாச்சும் பேசுங்க. ” நீண்ட உரையை முடித்தவள் அவன் முகம் காண அங்கோ மெல்லிய சிரிப்பே.
ஏனெனில் அவள் வந்த நாட்களில் இங்கு கேட்டவை அனைத்தும் அவன் இல்லாத போது ” அமைதிப் புறா வெளியே போயிருச்சு. அவன் வந்தா பேச விட மாட்டான். இஞ்சி தின்ன மங்கி மாறி உர்ருனு வேலை மட்டும் பார்க்கும். ரோபோ மாதிரி இருக்க இதையெல்லாம் வீட்டுல வச்சிக்க முடியாம தான் காலங் கார்த்தால இங்க பத்தி விட்றாங்கனு…” காது படவே அங்கே வேலை செய்வோர் பேசுவதை கேட்டும் இருக்கிறாள். அவனிடமும் அதை உணர்ந்தும் இருக்கிறாள்.
நல்லவனாய், அமைதியாய் இருப்பது கூட குற்றம் போல சொல்லும் உலகத்தை எண்ணி கோபம் வந்தாலும் கொஞ்சம் அவன் சிரித்து பேசினாலே போதுமே. இவர்கள் வாயை மூடலாமே. வாய் ஓயாமல் கேள்வி கேட்கும் தன்னிடமே மௌனம் சாதிப்பவன் முன்னால் வேறொரு அமைதி புறா வந்துவிட்டால் அமைதியோ அமைதியாய் தானே இருக்கும். மனம் தாளாமல் தான் இன்று அவனிடம் கேட்டது.
இவன் முகத்தில் காட்டும் இறுக்கமே அனைவரையும் தள்ளி நிறுத்தி விட்டது. தானுண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பதால் அனாவசிய பேச்சுக்கள் அவனிடம் இருக்காது. இளம் வயதில் திறந்த வாயை மூடாமல் அரட்டை அடித்த இளாவை பற்றி யாருக்கு தெரியாதே . வேண்டுமென்றே மௌனமாய் இருப்பவனிடம் மொழிகள் ஸ்வரம் இசைக்குமா ? பேசியவள் ஓடி விட்டாள். பேசியவை அவன் மனதில் நின்று விட்டன.
***********
பஸ்ஸில் கண்மூடி அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தவள் தன் அருகே யாரோ அமரும் அரவம் கேட்டு இமை திறந்து பார்த்தாள். அறுபது வயது மதிக்கதக்க பெண்மணி முகம் வெளுத்து, கண் கலங்கி, கசங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். ஜன்னல் தட்டும் சத்தம் கேட்டு வெளியே பார்க்க அவரது மகன் “அம்மா.., அண்ணே ஸ்டாப்ல வந்துறேனு சொல்லிருக்கான். பயப்படாம போ..” என அவரிடம் பேசி விட்டு,
” பாப்பா அவங்கள செங்கல்பட்டு வந்தா கொஞ்சம் எழுப்பி விடு. பார்த்துக்கோமா ” என வேண்டுதலாய் கேட்க சரியென தலையசைத்தாள்.
பாட்டி உம்மென முகத்தை சுண்டி அமர்ந்திருக்க,
” என்ன பாட்டி, பையன் தனியா விட்டுட்டு போய்ட்டாங்கன்னு கவலையா ” என்றாள் அவரிடம் சகஜமாக.
“ம்ஹ்ம்ம்.. இதுவரைக்கும் தனியா போனதே இல்லை. அவரு இவங்கட்ட என்னை விட்டுட்டு போயிட்டார். பயமா இருக்கு “என புலம்ப தொடங்கினார்.
“டார்லிங் பாட்டி, நான் தான் இருக்கேனே. டோன்ட் ஒர்ரி…,” என அவரின் கைபிடித்து கூறியவளை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
சற்று நேரம் தன் குடும்பத்தை பத்தி பேசி கொண்டிருந்தவர், பின் குரலை தழைத்து கொண்டு அருகே இருப்பவருக்கு கேட்காதவாறு மெல்லிய குரலிலே பேச ஆரம்பித்தார்.
“நீ எங்கேடியம்மா போகனும்..,”
“நானும் உங்க ஊர் தான் பாட்டி…,”
“தனியாவா வந்த..,”
“இல்லை பாட்டி, மேலே கிருஷ் இருக்கான்..,”
“வீட்டுக்காரரா..,” என்க
“இல்லை, பாய் பிரண்ட். .,”என்றாள் மெதுவே குரலை இன்னும் தலைத்து.
“எதே பாய் பிரண்டா. கலிகாலம் பொம்பள பிள்ளை அவன் கூட இப்படி வரலாமா ..,”
“நான் எங்க போனாலும் அவரும் துணைக்கு வருவாரு..,”
“என்ன பன்றார்..,”
“எல்லாரோட கணக்கையும் உட்கார்ந்து செக் பண்ணிட்டு இருப்பாரு. வேற என்ன வேலை பார்க்க போறாரு..,”
“அழகா இருப்பாரா? “
“செம்ம ஸ்மார்ட். ப்ளூ ஷர்ட்ல சூப்பரா இருக்கார். பார்த்த உடனே எல்லாருக்கும் பிடிக்கும், அவ்ளோ அழகு ..,”என்றாள் ரசனையாய்
“ஏண்டி., என்கிட்டயே இப்படி சொல்ற,..,” என முறைத்து பார்த்தவர் “ரொம்ப வருஷ காதலோ? “
“அச்சோ டார்லிங், அப் டு டேட் ட்ரெண்ட்டிங் எல்லாம் தெரியுது உனக்கு, அதே ..,”என்றால் சிரித்து கொண்டே.
அவர்கள் பேசுவதை முதலில் அசிரத்தையாய் கேட்க ஆரம்பித்தவன் அவள் மேலே இருக்கார் என அடுத்தடுத்து கூற கூற முழிக்க ஆரம்பித்தான். அதே ப்ளூ கலர் சர்ட் போட்டு, மேல் பர்த்தில் அமர்ந்து அம்சமாய் லேப்டாப்பில் கணக்கு பார்த்து கொண்டிருந்த நம் இளா. “இவ நம்மள சொல்றாளா,, கேட்ட குரல் மாதிரி வேறு இருக்கு ..,” என்று குழம்பி போய் அமர்ந்து இருந்தான்.
அவனை குழப்பி விட்டு இவள் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருந்தாள் செங்கல்பட்டு வரும் வரை. பாட்டியோ பேசுவதற்கு ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் மடை திறந்த வெள்ளம் போல் தன் கணவன் புராணமே பாட ஆரம்பித்து விட்டார். சற்றும் கண் அசரவில்லை. ஸ்டாப் அருகே வந்ததும் கிரிஷையும் கீழே இறங்க சொல்ல சொல்லி, பாட்டி சொல்ல… அவளோ கலகலவென சிரித்தாள்.
“என்னதுக்குடி சிரிக்கிற இப்போ அவனை தானே கூப்புட சொன்னேன் .?”
“என் செல்ல பாட்டி.. இல்லாத ஆளை எப்படி வர சொல்றது, அப்படி யாருமே இல்லை, நீங்க அழுதுட்டு இருந்ததால் உங்கள நார்மலாக்க நான் சும்மா விளையாண்டேன் ..,” என கொஞ்சி பேச
“அட நாராயணா! ஏண்டி என்னை ஏமாத்துன? “
“உங்க நாராயணனை தான் நான் கிருஷ்னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கும் எப்பவும் அவன் தான் துணை. நான் ஒன்னும் பொய் எல்லாம் சொல்லல. அவரோட மேட்ச் பண்ணி பாருங்க. எல்லாம் கரெக்டா இருக்கும் ..,” என மேலும் வம்பிலுக்க.
“போடி, கொஞ்ச நேரத்துக்கு என்னன்னமோ நினைச்சிட்டேன் ..,” என அங்கலாய்த்தார்.
“அழுகாச்சி பாட்டியை பார்க்க பிடிக்கல. சிரிச்சி பேசிட்டு இரு டார்லிங் ” என கண் சிமிட்டியவள் ” நான் லைட்டா என் ஆளுன்னு கோடு தான் போட்டேன். நீங்க உங்க ஆளை பத்தி பேசி ரோடு போட்டிங்க பாத்திங்களா..,” என சிரித்தவளை காணாமலே அவனுக்கும் பிடித்தது.
” நீ எப்பவும் இப்படித்தான் விளையாடிகிட்டு இருப்பியா ?”
“டார்லிங்! .., யாருக்காகவும் நம்ம இயல்ப விட்டு கொடுத்து நம்ம வாழனும்னு அவசியம் இல்லை. எது சரியோ அதை மட்டும் பண்ணுவோம்…”
“சரிடி, நீ சொன்ன மாதிரி மேலே ஒரு பையன் உட்கார்ந்து இருந்தானு வையி. என்ன ஆகும். யோசிச்சியா? “
” நம்ம மெதுவா தானே பாட்டி பேசுறோம். யாருக்கும் கேட்ருக்காது. அப்படி கேட்டு இருந்தா என்னை தேடி வரட்டும். அப்போ பார்ப்போம்..,” என கண் சிமிட்டி சிரித்தவளை பார்த்து பாட்டியும் சிரித்தார்.
எந்த பெண்ணையும் பார்க்க விரும்பாத அவன் மனம் அவளை காண எண்ணியது. பஸ்ஸில் இருந்து இறங்கி செல்லும் அவளை காண விரும்பியவன் சற்றே கண்ணாடி வழியே எட்டி பார்க்க, பாட்டியோடு பேசியபடியே சிரித்து நடந்தவள் பின்னால் திரும்ப கண்டவனோ மனதில் இதமாய் அதிர்ந்தான். பைபாஸ் ரோட்டில் நடுவே நிறுத்த சொல்லி தான் இறங்க முற்பட்டனர். அவள் இறங்க கார் ஒன்று அவளுக்காகவே காத்திருந்தது போல சட்டென ஏற்றி கொண்டு நகர்ந்தது. இதழ் சொற்களில் எண்ணம் நுழைந்தவள், இமை வழியே அவன் இதயத்திலும் நுழைந்து விடுவாளோ? அறிவார் யாரோ?
இன்று காலையில் இருந்து ராஜா, ரோஜா, யாரென தெரியாமலேயே அவன் மனம் தொட்ட பெண் பேசியவைகள் அனைத்தும் மனதில் வலம் வர தொடங்கின. அவன் மனம் மாறினால் மகிழும் உறவுகள் சுற்றியும் காத்திருக்க மாற்றம் நடந்தால் நன்றாக தான் இருக்கும் என அவன் உள்ளமும் எண்ண தொடங்கியது. எண்ணங்கள் வண்ணம் பெற்று திண்ணமாய் உலா வர இளாவும் தன் உள்ளம் மாற்றி கொண்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.