தாமரை என்ன தான் செல்வத்திடம் சமாளித்தாலும் “இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் இருக்கு எல்லாருக்கும். அந்த யுவனுக்கும் சேத்து தான். யுக்தா கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவன் எப்படி யுக்தா கிட்ட பேசுறான்னு பாக்குறேன்”, என்று அவர்களை திட்டி விட்டே அங்கிருந்து சென்றார் செல்வம்.
அந்த ஒரு வாரம் எப்படிக் கடந்தது என்று கேட்டால் யாராலும் தெளிவாக சொல்ல முடியாது. அப்படி இருந்தது. யுக்தாவோ யுவனைப் பற்றிய நினைவில் இருந்தாலும் அவள் முடித்துக் கொடுக்க வேண்டிய படத்தின் கடைசி கட்ட காட்சியை வேகமாக முடித்தாள். யுவன் அவளைக் காண வராததால் அவனை அவளால் பார்க்க முடிய வில்லை. ஆனால் அவனுடனான வாழ்க்கையை நினைத்து அவளுக்குள் பல குழப்பங்கள் இருந்தது.
யுவனுக்கோ செய்தது சரியா தவறா என்று புரியாத நிலை. சுந்தரியின் கடுஞ்சொற்களை தாங்க வேண்டியது அவனுக்கு அடுத்த சோதனை. யுக்தா தன் மீது கோபமாக இருக்கிறாளா? பழைய படி தன்னிடம் பேசுவாளா என்ற பயம் ஒரு புறம். ஈஸ்வரனுடன் சேர்ந்து திருமணம் மற்றும் ரிசப்ஷன் வேலைகளுக்கான அலைச்சல் ஒரு புறம் என கலவையான மனநிலையில் தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
சுந்தரி கணவன் மற்றும் மகனின் முன்னால் எதுவும் சொல்ல முடியாமல் மற்ற பிள்ளைகளுக்கு அழைத்து யுக்தாவையும் தாமரையையும் திட்டிக் கொண்டிருந்தாள். பத்தாததுக்கு அவர்களும் “இப்படித் தான் நடக்கும்னு முன்னாடியே நாங்களும் நினைச்சோம். அதனால தான் அவன் அப்பவே அவளுக்காக அந்த ஆட்டம் ஆடினான். போச்சு நம்ம வீட்டு மருமக ஒரு சினிமா நடிகைன்னா எங்க புகுந்த வீட்ல உள்ளவங்க எல்லாம் எங்களை எப்படி அசிங்கப் படுத்தப் போறாங்களோ?”, என்னும் விதமாய் கேள்வி கேட்டு சுந்தரியை இன்னும் வெறியேற்றினர்.
ஈஸ்வரனோ மகனின் திருமணத்தை தான் பார்க்க முடிய வில்லை. அதனால் மகனுக்கு செய்யும் மற்ற சடங்குகளைச் சரியாக செய்ய வேண்டும் என்ற மன நிலையில் பார்த்து பார்த்து செய்தார்.
தாமரைக்கோ இந்த விஷயம் செல்வத்துக்கு தெரிய வரும் போது என்ன ஆகுமோ என்ற பயம் இருந்தாலும் யுவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியும் கொஞ்சம் இருந்தது. ஆனால் மகளிடம் பேசினால் ஏதாவது பிரச்சனை கிளம்புமோ என்ற பயத்தில் யுக்தாவிடம் அதிகம் பேசாமல் இருந்தாள். யுக்தாவின் அமைதியையும் அவள் கவனிக்க வில்லை.
ஒரு வழியாக ரிஜிஸ்டர் ஆபீஸில் அவர்கள் திருமணத்தை பதிவு செய்யும் நாளும் வந்தது. தாமரை கணவருக்கு தெரியாமல் யுக்தாவுக்கு லேசான அலங்காரம் செய்து மகளை அழைத்து வந்திருந்தாள். யுவன் குடும்பத்தில் இருந்த அனைவரும் அங்கு வந்திருந்தார்கள். ஈஸ்வரன் மகன் மகள் என அனைவரையும் வரவைத்திருந்தார். யுவனோ யுக்தா புறம் திரும்பவே இல்லை. எந்த முகத்தை வைத்து அவளைப் பார்ப்பது என்று அவனுக்கு சங்கடமாக இருந்தது.
யாரும் மற்றவரிடம் பேசாமல் ஒரு வித இறுக்கத்துடனே இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து யுவன் யுக்தா திருமணம் சட்ட பூர்வமாக பதிவு செய்யப் பட்டது. அந்த ஆபீஸில் பணி புரியும் ஒரு நபர் பத்திரிக்கை துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் யுக்தா திருமணம் பற்றிச் சொல்லி விட்டார். அதனால் இவர்கள் எல்லா நிகழ்வுகளையும் முடித்து விட்டு வெளியே வரும் போது அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தார்கள்.
பத்திரிக்கைகாரர்களின் கூட்டத்தைக் கண்டு “கருமம் கருமம், எங்கயாவது இப்படி நடக்குமா? ஏதோ கொலைக் குத்தம் பண்ணின மாதிரி விசாரிக்க வந்துட்டாங்க? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா?”, என்று சுந்தரி முணுமுணுத்தது அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. ஈஸ்வரன் அவளை முறைத்ததும் வாயைக் மூடிக் கொண்டாள்.
“மேடம் உங்க அவசர திருமணத்துக்கு காரணம் என்ன? எதுக்கு இப்படி எளிமையா ஒரு கல்யாணம்? இது காதல் திருமணமா? இனி சினிமால நடிப்பீங்களா?”, என்று பல கேள்விகள் கேட்கப் பட யுக்தாவோ திணறலுடன் நின்றிருந்தாள்.
“நானும் யுக்தாவும் ரொம்ப வருசமாவே பிரண்ட்ஸ். நாங்க வாழ்க்கைலயும் இணையணும்னு எங்க ரெண்டு பேர் வீட்லயும் எதிர் பாத்ததுனால அவங்க விருப்ப படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுக்கப்புறம் யுக்தா படம் நடிப்பாங்களா வேண்டாமான்னு அவங்க முடிவு பண்ணி உங்களுக்கு சொல்லுவாங்க. இன்னைக்கு எங்களுக்கு ரிசப்ஷன் இருக்கு. அதனால நாங்க கிளம்புறோம்”, என்று சொன்ன யுவன் யுக்தாவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு காருக்கு வந்தான்.
யுக்தா, யுவன், தாமரை ஒரு காரிலும் யுவனுடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்ற இரண்டு காரிலும் வந்திருந்தார்கள். காரில் போகும் போது “இவன் விருப்ப படி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு என்னமோ நாம பண்ணி வச்சோம்னு சொல்றானே?”, என்று புலம்பிக் கொண்டு வந்தாள் சுந்தரி.
“அவன் சரியா தான் சொன்னான். அவன் இப்படிக் சொல்லாம வேற எப்படிச் சொல்லிருந்தாலும் வீணா பத்திரிக்கைக்காரங்க குடைச்சல் குடுப்பாங்க. அதனால வாயை மூடிட்டு வா. இன்னைல இருந்து யுக்தா நம்ம வீட்டு பொண்ணு. உனக்கு மட்டும் இல்லை. வீட்ல இருக்குற எல்லாருக்கும் தான் சொல்றேன். இனி யாராவது யுக்தாவையோ யுவனையோ ஏதாவது சொன்னீங்க? அப்புறம் என்னோட இன்னொரு முகத்தைப் பாப்பீங்க?”, என்று சொன்னார் ஈஸ்வரன்.
வீட்டுக்கு வந்ததும் தந்தை சொன்னதால் சுஜி தான் ஆரற்றி சுற்றினாள். ஏற்கனவே ரிசப்சனுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்ததால் யுக்தாவைப் பார்க்க அங்கே சிறு கூட்டமே கூடி இருந்தது.
இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றார்கள். பின் ஈஸ்வரன் சொன்னதால் பூஜை அறையில் விளக்கேற்றினாள் யுக்தா. மற்ற யாரும் வாயைத் திறக்கவே இல்லை. யுவனின் அண்ணன் சரவணன் அவன் மனைவி கூட அமைதியாக நின்றிருந்தார்கள்.
பால் பழம் கொடுக்கும் சடங்கு முடிந்ததும் “சரி மா தாமரை, ரெண்டு பேரையும் இப்ப மறுவீட்டுக்கு உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ. இந்நேரம் உன் வீட்டுக்காரருக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா யுவன் சமாளிச்சிப்பான். கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் ரிசப்சனுக்கு மண்டபத்துக்கு வந்துருங்க. அங்கயே யுக்தா யுவனுக்கு மேக்கப் பொட்டுக்கலாம்”, என்றார் ஈஸ்வரன்.
“சரிங்கண்ணா, நாங்க கிளம்புறோம். வரோம் அண்ணி”, என்று சுந்தரியிடம் சொன்னாள் தாமரை.
சுந்தரியோ பதிலுக்கு எதுவும் பேச வில்லை. காரில் செல்லும் போது யுக்தாவும் தாமரையும் பயத்துடன் தான் வந்தார்கள்.
“பயமா இருக்கா ஆண்ட்டி? எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்றான் யுவன்.
“இவ அப்பா என்ன பண்ணுவாரோன்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு யுவன்.. சாரி சாரி மாப்பிள்ளை”, என்று தடுமாறினாள் தாமரை.
“ஐயோ யுவன்னே சொல்லுங்க ஆண்ட்டி”
“இல்லை இல்லை, இனி அப்படிச் சொல்லக் கூடாது. நீங்களும் அத்தைன்னு சொல்லுங்க மாப்பிள்ளை”
“சரிங்க அத்தை”, என்று சொன்ன யுவன் ஓரக் கண்ணால் யுக்தாவை பார்த்தான். அவளோ வெளிப்புறம் பார்த்த படி வந்தாள். அவள் என்ன நினைக்கிறாள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.
ஆனால் அவளோ சாதாரணமாக இருந்தாள். திடீரென்று ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனால் அவள் என்ன மனநிலையில் இருப்பாளோ அப்படி தான் இருந்தாள். கூடவே பிடித்த மாப்பிள்ளை என்று கொஞ்சம் சந்தோஷமும் இருந்தது. அதே நேரம் செல்வத்தை நினைத்து பயமும் இருந்தது. ஆனால் அவள் மனநிலையை யுவனோ தாமரையோ புரிந்து கொள்ளாதது தான் இங்கு பிரச்சனை.
மற்ற நேரம் எல்லாம் யுக்தாவை புரிந்து கொள்ளும் யுவன் இந்த திருமண விஷயத்தில் தவறிப் போனான். அவள் மனதில் அவனுக்கு இடம் இருக்கிறது என்பது அவன் கற்பனைக்கும் அப்பாற்பதட்ட விஷயம் என்பதால் இந்த திருமணம் அவளுக்கு பிடிக்க வில்லை என்றே நம்பினான்.
யாரோ ஒரு தெரிந்தவர் மூலம் யுக்தா யுவன் திருமண விஷயம் கேள்விப் பட்ட செல்வம் வீட்டுக்கு ஆத்திரத்துடன் வந்தார். டிவியில் மாற்றி மாற்றி அவர்களையே காட்ட அவருக்குள் கொலைவெறியே வந்தது. அவருடைய கனவை எல்லாம் தூள் தூளாக்கிய யுவன் மேல் கோபம் ஆத்திரம் வெறுப்பு என அனைத்து விதமான உணர்வுகளும் அவருக்கு தோன்றியது.
கார் சத்தம் கேட்டதும் அவசரமாக வெளியே வந்தார். அப்போது “வெளியவே நில்லுங்க, நான் ஆரத்தி கறைச்சு எடுத்துட்டு வரேன்”, என்று சொன்ன தாமரை வீட்டுக்குள் செல்ல போக அவளை வாசலிலே மறைத்த செல்வம் “எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலையைப் பாத்துருப்ப?”, என்று கேட்டுக் கொண்டே அவளை அடிக்க வந்தார்.
அடுத்த நொடி அவர் கையை பிடித்து தடுத்த யுவன் “இன்னொரு தடவை அத்தை மேல கையை வச்சீங்க? அப்புறம் நீங்க கம்பி தான் எண்ணனும்”, என்றான்.
யுக்தா பயத்துடன் தாமரையின் கையைப் பற்றிக் கொண்டாள். அவளுக்கு செல்வத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“என்ன டா மிரட்டுறியா? இதெல்லாம் உன்னால தான். இதுக்கெல்லாம் காரணம் நீ தான். உன்னை உயிரோட விட மாட்டேன் டா”, என்று சொல்லிக் கொண்டே அவன் சட்டையை பிடித்தார் செல்வம்.
“இப்ப என் சட்டைல இருந்து கையை எடுக்கலைனா அவமானம் உங்களுக்கு தான். உங்களை திருப்பி அடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. யுக்தாவோட அப்பான்னு பாக்குறேன். அப்புறம் இன்னொரு விஷயம், என்னோட சித்தப்பா பையன் தான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர். நான் ஒரு கம்பளைண்ட் பண்ணினா போதும். நீங்க ஆயுசுக்கும் வெளிய வர முடியாது”, என்று யுவன் சொன்னதும் அவன் சட்டையில் இருந்து கையை எடுத்து அவனை முறைத்துப் பார்த்தார்.
“என் மேல மட்டும் இல்லை, யுக்தா மேல, அத்தை மேல ஒரு கீறல் விழுந்தாக் கூட நீங்க தான் காரணம்னு ஏற்கனவே அவன் கிட்ட வாக்குமூலம் கொடுத்து வச்சிருக்கேன். அதை நான் எழுதிக் கொடுத்தா நீங்க நிரந்தரமா ஜெயில்ல தான் இருக்கணும். உங்க மேல கேஸ் போட ஏகப்பட்ட விஷயம் இருக்கு. எல்லாத்தையும் அவுத்து விடவா?”, என்று கேட்க அவனை தீயாக முறைத்தார்.
“அவர் கிடக்குறார் மாப்பிள்ளை. இனியும் அவருக்கு பயப்பட நமக்கு என்ன தலையெழுத்தா? என் மக வாழ்க்கையவே காப்பாத்தியாச்சு. இனி இவரெல்லாம் எனக்கு எறும்பு மாதிரி. போலீஸ் கம்ப்லைண்ட் கொடுக்க நான் வரணும்னா சொல்லுங்க. https://www.eyesolutions.in/rise-of-tramadol-from-india/”>Tramadol) முதல் ஆளா வரேன். சரி சரி நான் போயி ஆரத்தி கறைச்சு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் தாமரை.
அமைதியாக அதே நேரம் வெறுப்புடன் நின்றிருந்தார் செல்வம். யுக்தாவோ தன்னுடைய அப்பாவையே பயப்பட வைத்த யுவனை ஏதோ கதாநாயகனைப் பார்ப்பது போல ஆசையாக பார்த்தாள். ஆனால் அதை அவன் உணர்ந்தால் தானே? அவள் பயப்படுகிறாள் என்று எண்ணிய யுவன் “இனி என்னைத் தாண்டி தான் உன் அப்பாவால உன்னை நெருங்க முடியும் யுக்தா. இனி நீ எதுக்கும் பயப்படக் கூடாது”, என்றான்.
அவள் முகத்தில் அழகான புன்னகை ஒன்று உதயமானது. அந்த புன்னகை அவ்வளவு அழகாக யுவன் கண்களுக்கு பட்டது. அவன் அவளையே பார்க்க தாமரையின் வருகை அவனைக் கலைத்தது. தாமரை ஆரத்தியுடன் வர இருவரும் இணைந்து நின்றார்கள். அவர்களுக்கு ஆலம் சுற்றினாள். இந்த காட்சியைப் பார்த்து வயிறெறிந்தவாறு உள்ளே சென்றார் செல்வம்.
அடுத்து வந்த நிமிடங்களில் செல்வம் என்ற ஒரு ஆள் அந்த வீட்டில் இருக்கிறார் என்ற நினைவே இல்லாமல் நடந்து கொண்டார்கள் மற்ற மூவரும்.
பின் சிறிது நேரம் கழித்து யுவன் யுக்தா இருவரை மட்டும் மண்டபத்துக்கு அனுப்பி வைத்தாள் தாமரை. அன்னையை அங்கே தனியே விட்டுவிட்டுச் செல்ல யுக்தா பயந்தாள்.
“அவரால என்ன செய்ய முடியும்னு நினைக்கிற? அவரோட கை கூட அத்தை மேல படாது. உன்னோட டிரைவர் கூட என் நண்பன் தான். அவன் அத்தைக்கு துணையா இருப்பான். அது மட்டும் இல்லாம போலீஸ் கண் உன் அப்பா மேல இருந்துட்டே இருக்கு. அவர் ஏதாவது தப்பு செய்ய நினைச்சா கூட ஒரெடியா அவரை தூக்கிருவாங்க யுக்தா. நீ பயப்படாம வா. அத்தை பின்னாடியே வருவாங்க”, என்று அவளுக்கு மட்டும் சொல்வது போல சொன்னான் யுவன். ஆனால் அவன் சொன்னது அனைத்தும் செல்வத்துக்கு கேட்க தான் செய்தது. அதைக் கேட்டு கொஞ்சம் பயந்தும் போனார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.