“பெரிய கண்டு பிடிப்பு. போடா. ஆமா போட்டு தான் வாங்கிட்டு இருக்கேன். நீ விரும்புற பொண்ணு யாருன்னு சொல்லு”
“அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரியாம எப்படி சொல்றது?”
“அப்ப அவ கிட்டயே இன்னும் சொல்லலையா? விளங்கிப் போச்சு. சரி இப்பவே அந்த பொண்ணு கிட்ட கேட்டுச் சொல்லு டா”, என்று சிதம்பரம் சொல்ல “கொஞ்சம் அமைதியா இரு சிதம்பரம்”, என்றார் பார்வதி.
“இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தப்பா மா?”
“யார் சொன்னா தப்புன்னு? அது உன் கடமை. உன் மகனுக்கு நீ கல்யாணம் பண்ணி வைக்க யார் சம்மதம் சொல்லணும். நீ கல்யாண வேலையை ஆரம்பி”, என்று பார்வதி சொல்ல “ஆச்சி”, என்று இன்பா அரட்டினான்.
“இங்க பாரு டா. உனக்கு ஒரு மாசம் டைம் இருக்கு. அந்த ஒரு மாசத்துக்குள்ள நீ அந்த பொண்ணு கிட்ட பேசுவியோ, இல்லை கால்ல விழுவியோ? இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி எங்க கிட்ட கூட்டிட்டு வா. அப்படி கூட்டிட்டு வந்தா உனக்கு பிடிச்ச மாதிரியே கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அப்படி இல்லைன்னா நீ சிதம்பரம் பாத்த பொண்ணைத் தான் கட்டிக்கணும். அது வரைக்கும் இங்க இருக்குற யாரும் இன்பாவுக்கு பாத்த பொண்ணு யாருன்னு அவன் கிட்ட சொல்லக் கூடாது. இது தான் என் முடிவு”, என்றார்.
“ஒரு மாசம் டைம் இருக்குல்ல ஆச்சி? நான் கண்டிப்பா என் காதலைச் சொல்லி அவ கிட்ட சம்மதம் வாங்கிருவேன்”, என்று வினோதினியைப் பார்த்துக் கொண்டே சொன்னான் இன்பா. அவள் குனிந்த தலை நிமிர வில்லை.
மகனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பாமா. “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு பாட்டி. நான் வரேன்”, என்று சொல்லி விட்டு வினோதினி அவளுடைய வீட்டுக்குச் செல்ல “எனக்கு எழுத வேண்டியது இருக்கு. நானும் போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் இளவரசி.
பாமா இரவு உணவை தயாரிக்கச் செல்ல சிதம்பரம் வீட்டுப் பின் பக்கம் இருந்த தோட்டத்துக்குச் சென்றார்.
கதிரும் இன்பாவும் அறைக்கு வந்தார்கள். “இப்ப என்ன மச்சான் செய்யப் போற?”, என்று கேட்டான் கதிர்.
“ஒரு மாசம் இருக்குல்ல டா? அவ கிட்ட பேசணும்”
“சீக்கிரம் பேசணும். ஆனா அவ ஒத்துப்பாளான்னு தான் தெரியலை”
“உன்னை அவங்களுக்கு எப்படி டா பிடிக்காம போகும்? கண்டிப்பா வினோதினிக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”
“அது முன்னாடி டா. ஆனா இப்ப அப்படி இல்லை”
“அதெல்லாம் இல்லை. நீ அவங்க கிட்ட உன் காதலைச் சொல்லு. கட்டாயம் ஏத்துக்குவாங்க. நீ அவங்க கிட்ட பேச ஏதாவது சந்தர்ப்பத்தை அமைச்சுக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு”, என்றான் கதிர்.
“பேசினாலும் அவ எப்படி சரின்னு சொல்லுவா?”, என்று எண்ணிக் கொண்டான் இன்பா. ஆனால் அதை கதிரிடம் சொல்ல முடியாவில்லை.
அதே நேரம் துணி மடித்துக் கொண்டிருந்த பாமாவிடம் “என்ன டி இன்பா இன்னொரு பொண்ணை விரும்புறேன்னு சொல்லிட்டான்? நாம வினோதினி வீட்ல பேசிட்டோமே? அந்த பொண்ணு வேற சரின்னு சொல்லிட்டு. இன்னைக்கு அந்த பிள்ளை முன்னாடியே இவன் இப்படிச் சொல்றான்? அந்த பிள்ளை தலை குனிஞ்சிட்டு உக்காந்துருந்ததைப் பாக்கவே பாவமா இருந்துச்சு”, என்றார் சிதம்பரம்.
“அவன் ஒரு லூசுங்க. பொண்ணு அவ தான்னு தெரியாம உளறிட்டு இருக்கான். அவனுக்கு வினோதினியை ரொம்ப பிடிக்கும். வினோதினிக்கும் அது தெரியும். அத்தை சொன்னாங்க. அப்புறம் அவனே அவ கிட்ட நேரா பேசி அவ மனசை தெரிஞ்சிக்கட்டும். நாம எப்பவும் போல கல்யாண வேலையைப் பாப்போம். அது வரைக்கும் அவ தான் பொண்ணுன்னு சொல்ல வேண்டாம்”, என்று பாமா சொல்ல அப்போது தான் தெளிந்தார் சிதம்பரம்.
இன்பா வினோதினியிடம் பேச சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ அவனிடம் இருந்து நழுவிக் கொண்டே இருந்தாள். தனியாக இருந்தால் பிரச்சனை என்பதால் யாருடனாவது ஒட்டிக் கொண்டே அலைந்தாள்.
அவன் பார்வை அவளையே சுற்றி வருவதை அவள் உணர்ந்திருந்தாள். கூடவே அவன் காதலைச் சொல்ல வந்தால் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூட அவளுக்கு தெரிய வில்லை. சரி என்று சொல்லவா? முடியாது என்று சொல்லவா? இந்த குழப்பத்தில் தான் அவள் அவனிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தாள்.
கதிர் வேறு “சொல்லிட்டியா…. சொல்லிட்டியா?”, என்று கேட்டு அவனை வெறுப்பேத்திக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் இப்படி ஒரு மனநிலையில் இருக்க கதிர் இளவரசி மனதோ வேறு மாதிரி இருந்தது. இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒரு வார்த்தைக்கே பஞ்சமாக இருந்தது. எப்போதுமே வீட்டில் ஆட்கள் இருந்து கொண்டே இருக்க அவனால் அவளிடம் உரிமையாக பேச முடியவில்லை.
முன்பெல்லாம் கண்களாலே அவனைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் அப்படிப் பார்ப்பதே இல்லை. அதனால் அவளை காலேஜ்க்கு அழைத்துச் செல்லும் நாளுக்காக காத்திருந்தான்.
அடுத்த நாள் அவள் சேலைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அடுத்த நாளுக்காக காத்திருந்தான். அன்றைய நாளும் வந்தது.
குளித்துக் கிளம்பிய இளவரசி சேலை கட்டி, தலை சீவி, பூ வைத்து அழகு சிலை என தயாராக இருந்தாள். கதிருமே அன்று சீக்கிரம் கிளம்பி விட்டான். “கதிரு அவளை காலேஜ்ல விட்டுட்டு வந்துரு டா”, என்ற பாமாவின் வார்த்தைகளுக்கு காத்திருந்தான்.
ஆனால் பாமாவோ “கிளம்பிட்டியா இன்பா?”, என்று கேட்டாள்.
“ஆமா மா”
“அப்படியே பாப்பாவை காலேஜ்ல விட்டுட்டு வந்துரு”, என்று சொல்ல கதிர் நொந்து போனான். அதற்கு “சரி மா”, என்று இன்பா சொல்ல கதிரின் முகம் விளக்கெண்ணையைக் குடித்தது போல ஆனது.
பாமா அங்கிருந்து சென்றதும் “மச்சான் இன்னைக்கு உனக்கு நிறைய வேலை இருக்குல்ல?”, என்று கேட்டான் கதிர்.
“இன்னைக்கு ஒரு வேலையும் இல்லை டா”, என்று அவன் மூக்கை உடைத்தான் இன்பா.
“பிளீஸ் டா, அரசியை நான் கூட்டிட்டு போறேன். நீ எப்பவும் போல அத்தை கிட்ட உனக்கு வேலை இருக்குனு சொல்லிரு”, என்று வெட்கத்தை விட்டுக் கெஞ்ச இளவரசி களுக்கென்று சிரித்தாள். அவளை கதிர் முறைக்க அவள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.
“என்ன டா இப்படி வெக்கமே இல்லாம கெஞ்சுற?”, என்று கேட்டான் இன்பா.
“காதல் வெக்கம் அறியாது மச்சான்”
“இந்த டயலாக் இப்படி வராதே”
“இப்ப அதுவா முக்கியம்? பிளீஸ் டா நான் அவளை கூட்டிட்டு போறேன். ஒரே வீட்ல இருந்தாலும் அவ கிட்ட பேசக் கூட முடியலை டா. பிளீஸ் ஏற்பாடு பண்ணு”
“அதுக்கு வாய்ப்பே இல்லை ராசா. கண்டிப்பா நான் தான் என்னோட உடன்பிறப்பை கூட்டிட்டு போவேன்”
“இத்தனை நாளும் நான் தானே கூட்டிட்டு போனேன்? இப்ப மட்டும் ஏண்டா இப்படி பண்ணுற?”, என்று கதிர் சிணுங்க “இத்தனை நாள் மாதிரி இப்ப இல்லையே மாப்பிள்ளை. கல்யாணம் வரைக்கும் உங்களை ஜோடியா விடக் கூடாதுன்னு ஆச்சியோட ஆர்டர். அதான் இந்த சதி”, என்றான்.
“கிழவி”, என்று பல்லைக் கடித்த படி பார்வதியைத் தேடிச் சென்றவன் அவரை முறைத்த படி நின்றான். பின் முகத்தை மாற்றிக் கொண்டு “அம்மாச்சி…”, என்று பாசமாக அழைத்தான்.
“என்ன டா எலி டவுசர் போட்டுட்டு ஓடுது?”, என்று கேட்ட பார்வதி அவனை ஆராய்ச்சியாக பார்த்தார்.
“உங்க கல்யாணம் முடியுற வரைக்கும் உங்களை தனியா விடக் கூடாது”
“ஏன் கிழவி?”
“இப்ப நான் கிழவியா? சரி இருந்துட்டு போறேன். இளவரசி இன்பா கூட தான் போவா”
“அதான் எதுக்குன்னு சொல்லு”
“ஏன்னா கல்யாணத்துக்கு மணமேடைக்கு நீ பிள்ளையோட வந்துறக் கூடாது பாரு. அதுக்கு தான்”, என்று அவர் சொன்னதும் நே என்று விழித்தான்.
“என் டா லுக்?”
“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“சத்தியமா இல்லை டா”
“கிழவி”
“என் கிட்ட பாயாம போய் வேலையைப் பாரு. இன்னைக்கு ஊரெல்லாம் ரோட் போட ஆட்கள் வறாங்கன்னு சொன்னீயே? அதைப் போய் என்னன்னு பாரு”, என்று சொன்ன அம்மாச்சியை முறைத்த படியே அன்றைய காலை உணவைக் கூட மறந்து வேலையைப் பார்த்து சென்று விட்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.