ஒரு ஆணின் தொடுகை வினோதினிக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது மட்டும் நிஜம். கம்பீரமே உருவாக இருந்த அவனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மயக்கியது. செதுக்கி வைத்த ரோமானிய சிற்பம் போல இருந்தவனின் கம்பீரம் அவள் மனதை அசைக்க அவன் மார்பில் சாய்ந்து கொள்ளும் என்ற ஆசை அவளுக்கே வந்தது.
அந்த ஆசையால் எழுந்த முகச்சிவப்பை அவனுக்கு காட்ட மனதில்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அந்த உணர்வில் அவளே திகைத்து தான் போனாள்.
“ஒரு பெண்ணா நானே இப்படி அவன் நெஞ்சுல சாயணும்னு யோசிக்கிறேனே? அப்படின்னா இன்பா அன்னைக்கு காதலிக்கிற உரிமையில என் கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுல என்ன தப்பு இருக்கு?”, என்று அவள் மனமே அவனுக்கு சப்போர்ட் செய்து பேச அவளுக்கே அவளை நினைத்து பிரம்மிப்பாக தான் இருந்தது. அவனுடைய அருகாமையில் தன்னுடைய சித்தம் கலங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை புரிந்து கொண்டாள்.
அந்த இருள் சூழ்ந்த வேளையில் அவன் அருகே நிற்பது அவஸ்தையாக இருக்க “பிளீஸ் கையை விடுங்க. யாராவது வரப் போறாங்க”, என்று மெதுவாகச் சொன்னாள்.
“வந்தா வரட்டும். நீ தான் நான் விரும்புற பொண்ணுன்னு பாக்குறவங்க தெரிஞ்சிக்கட்டும். நீ கையை விட்டா இங்க இருந்து போயிருவ. அதுக்கப்புறம் என்னால உன் கிட்ட பேச முடியாது. பிளீஸ் இங்கயே இரு”, என்று அவன் உருக்கமாக சொல்ல அவளுக்கே அவன் கெஞ்சுவது ஒரு மாதிரி தான் இருந்தது.
ஆனாலும் இந்த நேரத்தில் இருவரும் தனியாக இருப்பது யார் கண்ணிலாவது பட்டால் அது தவறாக தான் தெரியும் என்று புரிய கையை உருவிக் கொள்ள முயன்றாள். ஆனால் அது முடியவில்லை.
அவளுடைய மனமே அவனுக்கு வக்காலத்து வாங்குகையில் அவளால் என்ன செய்ய முடியுமாம்? அவனுக்கோ அவளுடைய அமைதி திருப்தியை தந்தது. அவள் கோபத்தைக் காட்டி இருந்தால் விலகி இருப்பானோ என்னவோ? அவள் அமைதி அவன் மனதில் இருந்த காதல் உணர்வுகளை மேலே வரச் செய்தது.
அந்த ஏகாந்த வேளையில் அவள் அருகே நிற்பதே அவனுக்கு போதையை தந்தது என்றால் அவள் தலையில் இருந்த ஜாதி மல்லியின் நறுமணமும் அவளுடைய பட்டு போன்ற கரத்தின் மென்மையும் அவன் மனதை முற்றிலும் மயக்கியது. அன்று நடந்த முத்த நிகழ்வு வேறு நினைவில் வர அவன் உடல் லேசாக சூடானது.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வினோதினி. அவன் கண்கள் காதலையும் மயக்கத்தையும் சிந்த “கடவுளே இவன் என்ன இப்படி பாக்குறான்? இதுக்கு மேல இங்க இருந்தா நானே அவன் நெஞ்சுல சாஞ்சுருவேன். அப்புறம் பாட்டி சொன்னதுக்கு நான் மரியாதை கொடுக்கலைன்னு ஆகிரும்”, என்று எண்ணிக் கொண்டு வேகமாக அவனிடம் இருந்து கையை இழுத்தாள்.
அவள் அப்படிச் செய்யவும் அதை தடுக்க நினைத்து அவன் அவளை தன்னை நோக்கி இழுக்க இண்பாவின் மார்பில் போய் மோதினாள். அது தான் சாக்கென்று அவன் கரங்கள் அவளை சுற்றி வளைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டது.
அவன் கட்டிப் பிடிக்கவும் ஏற்பட்ட அதிர்வில் “இன்பா என்ன பண்ணுறீங்க? என்னை விடுங்க”, என்று சொல்லிக் கொண்டே அவசரமாக விலக நினைத்தாள்.
“பிளீஸ், இப்படியே இரு டி”, என்றான் இன்பா.
அவள் அவனைக் கண்டு அதிர்ந்து விழிக்க அவனோ அவளையே தான் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். காதலும் போதையும் கலந்தால் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் அது தான் இன்பாவின் இப்போதைய நிலை.
“பிளீஸ் விடுங்க”, என்று அவள் மீண்டும் முணுமுணுக்க இப்போது தான் அவளை வியப்பாக பார்த்தான் இன்பா. அன்றைய அவளது மறுப்புக்கும் இன்றைய அவளது நிலைக்கும் இருந்த வித்தியாசத்தை அவன் மனம் எண்ணியது. இந்த வினோதினி அவனுக்கு புதியவளாக தெரிந்தாள். அவளது வெறுப்பில்லா பாவனையில் அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறதோ என்ற சந்தேகம் முதன்முதலாக வந்தது.
அந்த நம்பிக்கை கொடுத்த தைரியத்தில் அவன் அவள் முகம் நோக்கி குனிய அவன் செய்கை உணர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் வினோதினி. அவள் இப்படிச் செய்வாள் என்று அவன் சத்தியமாக எதிர் பார்க்க வில்லை. அவளுடைய வெட்கம் சுமந்த முகத்தைக் கண்டு அவன் உடல் சிலிர்த்தது.
அதற்கு மேல் அவனுக்கு எதற்கு அனுமதி? அவளுடைய மறுப்பில்லா செய்கையே அவள் மனதை சமன் செய்ய ஆவேசத்தோடு அவள் இதழ்க்களில் அழுத்தமான முத்தத்தை பதித்து விட்டான். அவள் விலகுவாள் என்று அவன் எதிர் பார்க்க அப்படி எதுவும் நடக்க வில்லை என்றதும் தன்னுடைய உதடுகளை விலக்காமலே அவளைப் பார்த்தான்.
போன முறை போல அவளது கண்கள் அவனை வெறுப்புடன் நோக்காமல் மயக்கத்துடன் மூடி இருந்தது. அன்றைய நாள் போல இப்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய வில்லை. அன்றைய நாள் போல அவளது கைகள் அவனைக் காயப் படுத்த வில்லை. அன்றைய நாள் போல அவனிடம் இருந்து விலகப் போராடாமல் தோய்ந்து அவன் மீது சரிந்தாள்.
அவனுடைய தோள் பட்டையில் பதிந்திருந்த அவளது கரம் அவன் சட்டையை இறுக்கிப் பிடித்தது.
மனதுக்கு பிடித்தவனிடம் மட்டுமே பெண் இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவாள். அந்த உணர்வுகளை தன்னிடம் வெளிப்படுத்தும் அவளைக் கண்ட பிறகு அவன் கரங்கள் ஆவேசமாக அவளை இறுக அனைத்துக் கொண்டது.
அவனது முத்தத்திலும் ஆவேச அணைப்பிலும் புது உலகுக்கு சென்று கொண்டிருந்தாள் வினோதினி. இது வரை தனக்கு திருமணம் ஆக வில்லை என்ற கவலை அவளுக்கு இருந்திருக்கிறது தான். கவலையில் தோள் சாய ஒரு துணையைத் தேடி இருக்கிறாள் தான். ஆனால் ஒரு ஆணிடம் மயங்கினால் வரும் காதல் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அவள் எண்ணிக் கூட பார்த்ததில்லை.
அந்த புத்தம் புதிய உணர்வுகளை வாரி வாரி அவளுக்கு வழங்கிக் கொண்டிருந்தான் இன்பா. அவன் மனதில் தான் இருக்கிறோம் என்ற நிறைவா? இல்லை திருமணம் பேசியதால் வந்த தைரியமா? ஏதோ ஒன்று அவளை அவன் கைகளுக்குள் கட்டிப் போட்டது.
அவன் தான் தனக்கு எல்லாமும் என்ற உண்மை அவளுக்கு தெளிவாக புரிந்தது. அதனால் எந்த கோபமும் வெறுப்பும் இல்லாமல் அவன் தொடுகையை அவள் உள்மனம் ரசித்தது. எதையுமே தடுக்க மனதில்லாமல் செயலிழந்து போனாள்.
அவனுடைய ஆக்ரமிப்பில் அவள் மனதிலும் காதல் ஊற்று பெருக்கெடுக்க அவனுடைய மென்மையான முத்தத்தில் மயங்கிக் கொண்டிருந்தாள்.
இருவரும் முத்தத்தில் கரைந்து கொண்டிருக்க “அம்மா, நான் பழைய வீட்டுக்கு போறேன். வினோதினி தனியா இருப்பாங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு சாப்பிட வரேன்”, என்ற இளவரசியின் குரலும் “படிச்சு முடிச்சியா இல்லையா டி? இல்லை படிக்க டிமிக்கி கொடுத்துட்டு போறியா?”, என்று அவளிடம் கேள்வி கேட்ட பாமாவின் குரலும் கேட்டது.
அந்த கேள்விக்கு பதில் சொல்லி விட்டு இளவரசி வந்து விடுவாள் என்பதால் தான் சட்டென்று அவளை விட்டு விலகினான் இன்பா. அவளுக்கோ அந்த குரல் எல்லாம் கேட்கவே இல்லை. ஏதோ ஒரு மோன நிலையில் இருந்தவள் அவன் விட்டதும் தடுமாறி விட்டாள்.
அவள் கையைப் படுத்தி நிலை படுத்தியவன் “இளவரசி வரா”, என்று சொல்லி தங்கையைக் கை காட்டினான். அவன் சொன்னது புரிந்தாலும் தன்னுடைய நிலையில் இருந்து வெளியே வர முடியாமல் அப்படியே திண்ணையில் அமர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.
இருவருக்குமே வேகமாக மூச்சு வாங்கியது. அவள் தலை குனிந்து இருக்க அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. ஏதேதோ பேச வந்து கடைசியில் இப்படி ஆகி விட்டதே என்று நொந்து போனான் இன்பா.
அப்போது இளவரசி அங்கே வந்து விட்டாள். இன்பாவைக் கண்டதும் “அண்ணா நீயும் இங்க தான் இருக்கியா?”, என்று கேட்டாள்.
“ஆமா”, என்று அவன் சொல்ல வினோதினிக்கோ இளவரசியிடம் எதுவுமே பேச முடியவில்லை. அவள் நடந்து முடிந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவே இல்லை. அவள் நிலை உணர்ந்தவன் தான் இங்கேயே நின்றால் அது வினோதினியை இன்னும் பாதிக்கும் என்று உணர்ந்து “சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் வீட்டுக்கு போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகும் வினோதினி அமைதியாக இருக்க “என்ன ஆச்சு? அமைதியா இருக்கீங்க? வீட்டு நினைவா?”, என்று கேட்டாள் இளவரசி.
“ஆமா, இந்நேரம் அம்மா கூட உக்காந்து பேசிட்டே சமையல் செய்வேனா? இப்ப தனியா இருக்கவும் ஒரு மாதிரி இருந்துச்சு”, என்று சொல்லி சமாளித்தாள். உணர்வுகளின் பிடியில் இருந்து வெளியேவும் வந்து விட்டாள். இளவரசி ஏதேதோ பேசிக் கொண்டிருந்ததால் வினோதினி இயல்பாகி விட்டாள்.
முத்தத்தைப் பற்றி எண்ணிக் கொண்டே வீட்டுக்குள் வந்த இன்பாவைக் கண்ட பார்வதிக்கு புருவம் முடிச்சிட்டது. ஏதோ ஒரு மோன நிலையில் அறைக்குள் சென்ற பேரனைப் பார்த்தவள் வினோதினியிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். அறைக்குள் சென்ற இன்பாவோ அவள் நினைவில் கட்டிலில் சாய்ந்தான். அவன் மனதில் இப்போதே அவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டது போல ஒரு நிறைவு வந்தது.
கூடவே மீண்டும் தவறு செய்து விட்டோமோ என்றும் தோன்றத் தான் செய்தது. அன்றைய தவறுக்கே மன்னிக்க மாட்டேன் என்று சொன்னவள் இன்று நடந்ததற்கு என்ன சொல்வாளோ என்று பயமாக இருந்தது. ஆனாலும் அவன் தொடுகையின் போது அவள் முகத்தில் வந்து போன வர்ண ஜாலங்களை பார்த்தவனுக்கு சிறிது நம்பிக்கையும் வந்தது. கண்டிப்பாக அவள் மனதில் தான் இருக்கிறோம் என்ற நிம்மதி வந்தாலும் கண்டதையும் நினைத்து குழப்பம் அடைந்தான்.
அவனுடைய குழப்பங்கள் அவனுக்கே புரிய “நான் ஏன் அப்படி செஞ்சேன்?”, என்று எண்ணினான். அவளுடைய அருகாமையில் மட்டும் அவன் அவனாக இருப்பதில்லை என்று எண்ணி அவன் இதழ்களில் புன்னகை வந்தது.
அவளுடைய இதழ்களை தொட்ட தன்னுடைய இதழ்களை விரலால் வருடினான். இன்னும் அவளுடைய இதழ்களின் மென்மை மிச்சம் இருப்பது போல பிரம்மை உருவானது.
அவளை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் எந்த ஜென்மத்திலும் தன்னால் வாழ முடியாது என்று உணர்ந்து கொண்டான். அன்றைய இரவில் அவனுக்கு தூக்கம் என்பது கிடையவே கிடையாது என்று எண்ணிக் கொண்டான். ஒரு இதமான இம்சை அவனைப் போட்டு பாடாய்ப் படுத்தியது.
அதே நேரம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நைசாக இளவரசியைத் தேடிச் சென்றான் கதிர். அவன் பதுங்கி பதுங்கி போவதை பார்வதி பார்த்து விட்டார்.
“அடுத்து இந்த பூனை போவுதா?”, என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டார்.
அவன் போன போது இலவரசியும் வினோதினியும் ஏதோ கதை பேசிக் கொண்டிருக்க “ரொம்ப சுவாரசியமா பேச்சு வார்த்தை நடக்குது போல?”, என்று கேட்ட படி அவர்கள் அமர்ந்திருந்த திண்ணைக்கு அடுத்த பக்கம் இருந்த திண்ணையில் அமர்ந்தான்.
அவனைக் கண்டதும் இளவரசி அமைதியாக “சும்மா என்னோட காலேஜ் லைப் பத்தி சொல்லிட்டு இருந்தேண்ணா”, என்று சொன்ன வினோதினி “உங்களை அண்ணான்னு சொல்லலாம் தானே?”, என்று கேட்டாள்.
“தாராளமா சொல்லலாம். நீ எப்பவும் என்னோட தங்கச்சி தான். அன்னைக்கு நான் லூசு மாதிரி பேசிட்டேன்னு இப்ப புரியுது”, என்றான்.
“அதை விடுங்கண்ணா”
“சரி மா. அப்புறம் என்ன வினோதினி. இவ்வளவு நேரம் இங்க ஒரு குயில் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு. இப்ப கேக்கலை?”, என்று கேட்டான் கதிர்.
அவன் தன்னிடம் வம்பிழுப்பது புரிய தலை குனிந்தே அமர்ந்திருந்தாள் இளவரசி. “அந்த குயிலுக்கு உங்களைப் பாத்ததும் வெக்கம் வந்துருச்சு போல அண்ணா? சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் ஒரு போன் பேசிட்டு வரேன்”, என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டுச் சென்றாள்.
வினோதினி சென்றதும் “நானும் வீட்டுக்கு போறேன்”, என்று எழுந்து கொண்டாள் இளவரசி.
“ஏய் முட்டைகண்ணி உக்காரு டி. எந்திச்ச கொன்னுருவேன்”, என்று அவன் ஒரு விரல் நீட்டி அரட்ட அதே இடத்தில் அமர்ந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன டி முழிக்கிற? ஆமா உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க? என்னமோ என் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடிட்டே இருக்க? என்னைப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது? என்னை நிமிந்து கூட பாக்க மாட்டிக்க? என் கூட வண்டில கூட வர மாட்டிக்க? இந்த கிழவி வேற உன் கிட்ட நெருங்க விட மாட்டிக்குது”, என்று தன்னுடைய தவிப்பை அப்படியே அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க “உன் கிட்ட பேசணும்னு தான் வந்தேன் டி. பிளீஸ் அரசி பேசு டி”, என்றான்.
“பேசுன்னா என்ன பேசவாம்?”
“இத்தனை நாள் பேச தானே செஞ்ச? என் முகத்தையே பாத்துட்டு இருப்ப? இப்ப ஏன் விலகி விலகி போற?”
“அப்படி எல்லாம் இல்லை. அதோ ஆச்சி வராங்க. நான் போறேன்”
“அதானே, இந்த கிழவிக்கு மூக்கு வேத்துருமே. இன்னைக்கும் உன் கிட்ட பேச முடியாதா?”, என்று அவன் ஏக்கத்துடன் கேட்க அவசரமாக எழுந்து அவன் அருகே வந்தவள் அதே வேகத்தில் அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.