நாட்கள் எப்போதும் போல கடக்க இன்பா தான் உள்ளுக்குள் தவித்துக் கொண்டே இருந்தான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கும் நிம்மதி இல்லை. இன்பா சரியாக உண்பதில்லை, சரியாக உறங்குவதுமில்லை என்பதை கதிர் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
என்ன தான் மாப்பிள்ளை மச்சான் என்று அழைத்துக் கொண்டாலும் இன்பா அவனுடைய உயிர் நண்பனாயிற்றே. “வினோதினி என்ன தான் டா சொல்றா? அவ கிட்ட பேசுனியா இல்லையா?”, என்று கேட்டான் கதிர்.
“பேசினேன் டா. ஆனா அவ சரியா ஒண்ணும் சொல்லலை”
“இப்படி சொன்னா என்ன அர்த்தம் மச்சான்? ஒரு மாசம் முடியப் போகுது. நிச்சய நாளுக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. வீட்ல நிச்சய சேலை கூட மாமாவும் அத்தையும் எடுத்துட்டாங்க. சரி உனக்கு பாத்துருக்குற பொண்ணு கிட்ட போய் உனக்காக பேசலாம்னு நினைச்சா அந்த பொண்ணு யாருன்னு சின்ன தகவல் கூட கொடுக்க மாட்டிக்காங்க. நீ என்னன்னா இப்படிச் சொல்ற?”
“என்னை என்ன பண்ணச் சொல்ற கதிரு? அவ கிட்ட போனா அவ கண்ணுல காதல் இருக்குது. கல்யாணம் பத்தி பேசினா என்னை பிடிக்கலைன்னு சொல்றா. பேசாம செத்துறலாம்னு இருக்கு”, என்று புலம்பியவன் வெளியே சென்று விட்டான்.
கதிர் வினோதினியைத் தேடிச் சென்றான். அவள் திண்ணையில் அமர்ந்து தன்னுடைய போனைக் குடைந்து கொண்டிருக்க “வினோதினி”, என்று அழைத்தான்.
“வாங்கண்ணா, உக்காருங்க”, என்றாள். சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன் “உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும் மா”, என்றான்.
“சொல்லுங்கண்ணா”
“இன்பாவைப் பத்தி பேசணும்”, என்று அவன் சொன்னதும் “ஐயோ அடுத்து இவனா? இப்ப நான் எப்படி சமாளிக்க?”, என்று குழம்பினாள்.
“அவன் உன்னை விரும்புறது உனக்கு தெரியுமா மா? அவன் உன் கிட்ட சொன்னானா?”
“அவர் சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் அண்ணா”
“எப்படி மா?”
“நீங்க தான் அன்னைக்கு சொன்னீங்க?”
“நானா?”
“ஆமா”
“சரி, உனக்கு எப்படியோ விஷயம் தெரியும் தானே? அதுக்கு எந்த பதிலும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் மா?”
“என்னை என்ன சொல்ல சொல்றீங்க?”
“அவனைக் கல்யாணம் பண்ண சம்மதம்னு சொல்லு”
“எனக்கு பிடிச்சிருந்தா தானே நான் சம்மதம் சொல்ல முடியும்?”
“அவனை உனக்கு பிடிக்கலையா? அவன் ரொம்ப நல்லவன் மா. அது உனக்கு உதவி செஞ்சதுலே தெரிஞ்சிருக்கும்”
“உதவி செஞ்சதுனால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”
“அவனுக்கு என்ன குறைன்னு நீ அவனை பிடிக்கலைன்னு சொல்ற? அழகா இருக்கான். கவர்ன்மெண்ட் வேலைல இருக்கான். அது போக உன்னை உயிருக்கு உயிரா விரும்புறான்”
“இந்த பேச்சு இனி பேச வேண்டாம் விடுங்கண்ணா”
“என்ன மா இப்படி சொல்ற? நீ எனக்கு தங்கச்சி மாதிரி மா. உனக்கும் நல்ல வாழ்க்கை அமையனும்ல?”
“நான் உங்களுக்கு தங்கச்சி மாதிரி தான். தங்கச்சி இல்லை”
“வினோதினி”
“நீங்க தானே அன்னைக்கு சொன்னீங்க? நீ என் கூட பிறந்தவளான்னு?”
“நீ நான் பேசினதை மறக்கலையா? மன்னிக்கலையா?”
“நாம வாய் வார்த்தையா மறந்துட்டோம், மன்னிச்சிடோம்னு சொல்றது தான். ஆனா நடந்தது எதுவும் எப்பவும் நம்ம மனசை விட்டு அழியாது”
“இப்ப என்ன சொல்ல வர?”
“நீங்க இந்த விசயத்துல தலையிட வேண்டாம்னு சொல்றேன்”
“சரி மா, என்னை மன்னிச்சிரு”, என்று சொல்லி விட்டுச் சென்றான். “சாரிண்ணா, கொஞ்ச நாளுக்கு என்னை மன்னிச்சிருங்க”, என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பை வேண்டினாள்.
ஒரு வழியாக அடுத்த நாள் நிச்சயம் என்ற நிலையும் வந்தது. வினோதினி வீட்டினர் கூட கிளம்பி வந்து விட்டனர்.
அவர்களை வரவேற்ற இன்பாவுக்கு எதனால் அவர்கள் வருகை என்று தெரிய வில்லை. அவன் மூளை எதையுமே சிந்திக்காமல் செயல் இழந்து நின்றது.
அடுத்த நாள் இந்நேரம் நிச்சயம் முடிந்திருக்கும் என்று தெரியும். ஆனால் இப்போது வரை வினோதினி அவனிடம் காதலை ஒப்புக் கொள்ள வில்லை.
காதல் கூட வேண்டாம், அவனைப் பிடித்திருக்கிறது என்று கூட சொல்ல வில்லை. அவனும் எவ்வளவோ அவளிடம் போராடிப் பார்த்து விட்டான்.
அவளிடம் கெஞ்சக் கூட செய்து விட்டான். அவளோ அவனை ஆவலாக பார்க்கிறாளே தவிர சம்மதம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை.
அவளுடைய கண்களில் காதல் இருப்பது போல தோன்றும். அவன் அவளை நெருங்கி நின்று முத்தம் கொடுத்தால் அதையும் வாங்கிக் கொள்கிறாள். கட்டி அணைத்தால் அவன் பிடியில் இருந்து விலகவும் இல்லை.
ஆனா திருமணம் பற்றி பேசினால் மட்டும் அவளிடம் எந்த பதிலும் இல்லை. மொத்தத்தில் மண்டை காய்ந்து போனான் இன்பா. கதிரும் அவனை நினைத்து கவலையில் தான் இருந்தான்.
இன்பாவை அப்படி ஒரு நிலையில் பார்த்திராதவன் மீண்டும் வினோதினியிடம் பேசினான். அவளோ “என் வாழ்க்கையிலே தலையிடாதீங்க. நான் ஒண்ணும் உங்க கூட பிறந்தவ கிடையாது”, என்று முகத்தில் அடிப்பது போல மீண்டும் பேசி விட்டாள்.
அவனுடைய அன்றைய பேச்சுக்கு எதிர் வினை தான் அது என்று அவனுக்கு தெரியும். வெறும் வாய் வார்த்தையாக அவள் மன்னித்து விட்டேன் என்று சொன்னாலும் அவள் மனதில் அந்த காயம் இருக்கிறது என்று புரிந்து அவனும் சுவரில் பட்ட பந்தாக திரும்பி வந்து விட்டான்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. “பத்தரை பன்னிரெண்டரை நல்ல நேரம். எல்லாரும் பொண்ணு வீட்டுக்கு கிளம்பனும். குளிச்சு தயாராகுங்க”, என்று அனைவருக்கும் சொன்ன சிதம்பரம் “பாமா, வினோதினி வீட்ல இருக்குறவங்ககிட்டயும் சொல்லிட்டு வந்துரு”, என்றார்.
“சரிங்க”, என்று சொல்லி விட்டு பாமா சென்றதும் மற்ற அனைவரும் சிதம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இன்பா ஒரு மாதிரி அவஸ்தையில் நிற்க “என்ன டா?”, என்று கேட்டார்.
ஒண்ணும் இல்லை என்பதாக தலையசைத்தான். “அப்புறம் என்ன கிளம்பு”, என்று சொன்ன சிதம்பரத்துக்கே மகனை நினைத்து பாவமாக இருந்தது. அவனிடம் உண்மையைச் சொல்லி விடலாமா என்று கூட எண்ணினார். ஆனால் பார்வதி சொல்லக் கூடாது என்னும் விதமாக தலையசைக்க அமைதியாக அவருடைய அறைக்குச் சென்று விட்டார்.
சண்முகநாதன் பேரனின் முகத்தைப் பார்க்க முடியாமல் பார்வதியை வறுத்தெடுத்தார். “இத்தனை நாள் பொறுத்துக்கிட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க முடியாதா?”, என்று பார்வதி கேட்க அவருக்கு வேறு என்ன செய்ய என்று தெரியவில்லை.
கதிர் ஏதோ யோசனையில் இருக்கவும் “என்ன டா யோசிக்கிற?”, என்று கேட்டார் பாமா.
“இப்ப எதுக்கு அத்தை வினோதினி வீட்ல இருந்து வந்துருக்காங்க?”, என்று கேட்டான் கதிர்.
“அவங்க வினோதினியைப் பாக்க வறேன்னு பொதுவா சொன்னாங்க டா. நான் தான் இன்னைக்கு இன்பாவுக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லி நேத்து வரச் சொன்னேன். அப்படியே அவங்க இந்த பங்க்சனுக்கும் இருந்த மாதிரி இருக்கும்ல?”
“அத்தை, ஏன் நீயும் இப்படி பண்ணுற? அவன் பாவம்”
“நான் என்ன டா பண்னினேன்?”
“மச்சான் மனசுல வினோதினி தான் இருக்கா. அவனால வேற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ண முடியும். மாமா கிட்ட நீ பேசு”
“இதை நீ என் கிட்ட நூறு தடவை சொல்லிட்ட. இங்க பாரு கதிரு. உன் மாமா அவனுக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தாரு. வினோதினியும் நம்ம வீட்ல தான் இருக்கா. அவன் அவ கிட்ட பேசிருக்க வேண்டியது தானே?”
“அவன் பேசினான். நானும் கூட பேசினேன். ஆனா அவ சரின்னு சொல்லலை”
“அவளுக்கு அவனைப் பிடிக்கலையோ என்னவோ?”
“ஆனா மச்சானுக்கு அவளைத் தானே பிடிச்சிருக்கு?”
“அது அவன் பிரச்சனை. என்னால இனி எதுவும் செய்ய முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணு வீட்டுக்கு கிளம்பனும்”
“அவனால வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது”
“அரைச்ச மாவையே அரைக்காத டா. போய்க் கிளம்புற வழியைப் பாரு. அவனையும் கிளம்ப வை. நான் போய்க் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள் பாமா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.