பேங்கில் வேலையை ஆரம்பித்த வினோதினியால் உடனே வேலைக்குள் கவனம் செலுத்த முடிய வில்லை. இன்பாவைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருந்தாள்.
கூடவே அவள் மனது அடுத்து என்ன என்பதை தான் யோசித்தது. கட்டாயம் இனி தன்னால் விஜி வீட்டில் உண்ண முடியாது என்று புரிந்தது.
அதே போல் அவளிடம் கெஞ்சி கேட்டு அவளது கேஸ் அடுப்பை உபயோகப் படுத்தவும் மனதில்லை. அதிகம் ஹோட்டல் இல்லாத இந்த ஊரில் மூன்று வேலையும் ஹோட்டலில் சாப்பிடவும் முடியாது.
இதற்கு ஒரே தீர்வு அவள் விறகில் சமைத்து பாழக வேண்டும். அவள் அதற்கு தயாரானால் கூட விஜி அவளுடைய பாத்திரங்களை சமைக்க தருவாளா என்பது சந்தேகமே.
வினோதினியே பாத்திரம், மளிகை சாமான் எல்லாம் வாங்கி விஜியின் வீட்டில் மற்றொரு சமையல் செய்வது சாத்தியப் படாதது. இதற்கு அவள் தனி வீட்டுக்கு தான் போக வேண்டும். முதலில் வேறு வீடு தான் பார்க்க வேண்டும். (staminaproducts.com) விஜி இருக்கும் ஊரில், தான் மற்றொரு வீட்டில் இருந்தால் அதுவும் சரிப் படாது.
வேறு ஏதாவது ஊரில் ஏதாவது வீடு பார்த்தாக வேண்டும். யாரிடம் வீடு பார்க்கச் சொல்வது என்று யோசித்ததில் அவள் நினைவில் வந்தது இன்பா தான்.
அவன் இன்று பேங்க் வருவானா? வந்தால் அவனிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.
அதன் பின் மக்கள் அனைவரும் பணம் எடுக்க, போட என்று வர அவள் கவனமும் வேலையில் சென்றது.
சரியாக பன்னிரெண்டரை மணிக்கு இன்பா பேங்க்க்கு வந்தான். அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் நேராக அவள் அருகே வந்து நிற்க மற்றவர்கள் பார்வையும் அவர்கள் மேல் நிலைத்தது.
அதை உணர்ந்த இன்பா அருகில் இருந்தவர்களுக்கு கேட்கும் வகையில் “உங்க தங்கச்சி புருஷன் சாப்பாடு கொடுத்து விட்டார். அவர் வண்டி பஞ்சர். அதான், நான் வர வழியில் வாங்கிட்டு வந்தேன்”, என்று சொல்லி அவளிடம் கொடுத்தான்.
திகைப்பாக அவனைப் பார்த்துக் கொண்டே அவள் நிற்க “ப்ளீஸ், வாங்குங்க. எல்லாரும் பாக்குறாங்க”, என்றான்.
அவசரமாக அதை வாங்கி அவள் கீழே வைக்க அவனும் பேங்கில் முடிக்க வேண்டிய வேலையைப் பார்த்தான். கடைசியில் பணம் எடுப்பதற்காக அவளிடம் வர “எதுக்கு உங்களுக்கு கஷ்டம்? நான் கடையில சாப்பாடு வாங்கிருக்க மாட்டேனா?”, என்று கேட்டாள்.
“இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. சொல்லப் போனா இது சந்தோஷம் தான்”, என்று சொன்ன படியே எழுதி வைத்திருந்த பார்மைக் கொடுத்தான்.
அதைப் பார்த்து பணத்தை எண்ணி அவன் கையில் கொடுத்தவள் “எனக்கு உங்க நம்பர் வேணும். ஒரு விஷயம் பேசணும்”, என்றாள்.
கண்கள் வியப்பால் விரிய அவன் மனம் சந்தோசத்தில் மலர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை தவற விட மனதில்லாமல் “இதோ இந்த பேப்பர்ல உங்க நம்பர் எழுதித் தாங்க. நான் மிஸ்டுகால் கொடுக்குறேன்”, என்றான்.
எந்த வித தயக்கமும் இல்லாமல் தன்னுடைய எண்ணை எழுதி அவனிடம் நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்டு நகர்ந்து நின்றவன் அடுத்த ஆள் வரவும் பேங்க் விட்டு வெளியே வந்தான்.
வண்டியை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் வந்தவன் ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு தன்ன்டைய போனை எடுத்து அவளுடைய எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான். கூடவே ஒரு மெஸ்ஸேஜையும் அனுப்பி வைத்தான்.
அன்று பேங்கில் கூட்டம் அதிகம் இருக்க உணவு இடைவேளையில் தான் போனை எடுத்துப் பார்த்தாள். அவனது எண்ணை இன்பா என்று செவ் செய்து வைத்தாள். பின் சாப்பிடும் டேபிளுக்கு சென்று உணவு கேரியலை வைத்தாள். மூன்று பேர் சாப்பிட்டு விட்டே கிளம்பி விட்டனர். இவளும் இன்னொருவரும் தான் சாப்பிட அமர்ந்தார்கள். இவள் கேரியலைத் திறக்க வாசனை மூக்கைத் துளைத்தது.
“இன்னைக்கு கெவி சாப்பாடு போல?”, என்று அருகில் இருந்தவர் கிண்டல் செய்ய “எடுத்துக்குறீங்களா?”, என்று மரியாதையாக கேட்டாள்.
“இல்லை மா, நீ சாப்பிடு. நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன்”, என்று சொல்லி விட்டு அவர் உணவை உண்ண ஆரம்பித்தார்.
நாட்டுக் கோழி பிரியாணி, தயிர் வெங்காயம், நாட்டுக் கோழி சிக்ஸ்டீபை, நாட்டுக்கோழி ஈரல் தொக்கு என்று பாமா விதவிதமாக அடுக்கி இருந்தாள். அதைப் பார்த்த வினோதினிக்கு இப்படி ஒரு சாப்பாடை சாப்பிட்டு விட்டு உடனே செத்து விட வேண்டும் என்று தோன்றி வைத்தது.
வாசனையும் சிக்கன் கறியும் வினோதினியின் பசியை கிளப்ப அவசரமாக எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
அவள் வேகத்தைக் கண்டவர் “நமக்கு இன்னும் நேரம் இருக்கு மா. மெதுவா சாப்பிடு”, என்றார்.
“ஏண்டி இப்படி பறக்க?”, என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு நிதானமாக உண்ண ஆரம்பித்தாள்.
அவள் பசியை அறிந்து கொஞ்சம் அதிகமாகவே பாமா வைத்திருந்தாள். இன்பா தான் அவ்வளவு வைக்கச் சொன்னான். அந்த சாப்பாடை உண்டு முடித்ததும் அவளது மனமும் வயிறும் நிறைந்து போனது. இப்படி ஒரு சாப்பாட்டை அவள் எப்போதுமே சாப்பிட்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவள் நாட்டுக்கோழி சாப்பிட்டதே இல்லை.
பிராய்லர் கோழி தான் தேவி சமைப்பாள். அதுவுமே குழம்பாக தான் வைப்பாள். கிருஷ்ணனுக்கு பிரியாணி பிடிக்காது என்பதால் அதை செய்ய மாட்டாள். ஸ்கூல் காலேஜில் நண்பர்களுடன் அமர்ந்து தான் அவள் பிரியாணி சாப்பிட்டது.
இன்று அதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் இருந்தது பாமாவின் சமையல். கையைக் கூட கழுவாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவர்கள் வீட்டில் தானும் ஒரு ஆளாய் பிறந்திருக்க கூடாதா என்று அவளுக்கு தோன்றி வைத்தது.
சிறிது நேரம் கழித்து எழுந்தவள் டிபன் கேரியலை கழுவி வைத்து விட்டு வேலையில் அமர்ந்தாள். உடனே சாப்பாடுக்கு நன்றி சொல்லி அவனுக்கு ஒரு தகவலையும் அனுப்பி வைத்தாள். உண்ட உணவுக்கு கண்ணைச் சுழற்றியது. ஆனால் பணம் எடுக்க வந்தவர்களும் போட வந்தவர்களும் அவளது தூக்கத்தை களவாடிக் கொண்டார்கள்.
அன்று வேலை முடிந்து வெளியே வந்த வினோதினி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்தாள். போகும் வழியில் இன்பா நின்றிருந்தான். அவளைக் கண்டு அவன் புன்னகைக்க இவளே அவன் அருகில் சென்று நின்றாள்.
அவள் கையில் இருந்த உணவு பையை அவனிடம் நீட்டியவள் “இந்த மாதிரி சாப்பாடை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. அம்மாக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுங்க”, என்றாள்.
“சரி சொல்லிறேன். சாப்பாடு பத்துச்சா?”, என்று கேட்ட படி பையை வாங்கி வண்டியில் மாட்டினான்.
“கொஞ்சம் அதிகமா தான் இருந்தது. ஆனா எனக்கு இருந்த பசிக்கு எல்லாத்தையும் முடிச்சிட்டேன்”, என்று அவள் வெகுளியாக சிரிக்க அவள் வெள்ளை மனத்தைக் கண்டு அவன் மனம் உருகியது. கூடவே அவள் உரிமையாக தன்னிடம் பேசுவதும் அவனுக்கு பிடித்தது. அதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தான் அவனுடைய மனதில் இருப்பதை அவளிடம் அவன் சொல்லவும் இல்லை.
“அப்புறம் இந்தாங்க”, என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தான் இன்பா.
“இது எதுக்குங்க?”, என்று கேட்டாலும் உரிமையாக அதை வாங்கிக் கொண்டாள்.
“இப்ப நீங்க தங்கிருக்குற வீட்ல என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனா பிரச்சனைன்னு மட்டும் தெரியும். ஏன்னா பிரச்சனை இல்லைன்னா கண்டிப்பா உங்களை ஒரு நாள் முழுக்க பட்டினி போட்டுருக்க மாட்டாங்க. என்ன பிரச்சனைன்னு உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லுங்க. அப்புறம் இது நைட்டுக்கு சாப்பிட தான் எடுத்துட்டு வந்தேன். உங்க வீட்ல வந்து என்னால சாப்பாடு கொடுக்க முடியாது. அது தப்பா போயிரும். அதான் இங்க வச்சு தந்தேன். அப்புறம் ஒரு விஷயம். என்னால தினமும் வந்து உங்களுக்கு சாப்பாடு தர முடியாது. இன்னைக்கு ஒரு நாள் கொடுத்ததுக்கே எல்லாரும் ஒரு மாதிரி பாத்தாங்க. நீங்களும் நான் கொண்டு வந்து கொடுக்கணும்னு எதிர் பார்க்க மாட்டீங்க தான். அதுக்காக அந்த வீட்ல இருந்து நீங்க பட்டினியும் கிடக்க முடியாது. ஏதாவது யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. எந்த உதவியா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க”