“அப்பாவும் பொண்ணும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ரெண்டு பேரும் எதிரி மாதிரி பேசி சண்டை போட்டு என்னை டென்ஷன் பண்ண வேண்டியது. அப்புறம் அவ செய்றதை ரசிக்க வேண்டியது. உங்க ரெண்டு பேரையும் நினைச்சு எனக்கு தான் எரிச்சலா இருக்கு”
“விடு டி விடு டி. எனக்கு சட்டுன்னு அவ பண்ணுறதுல கோபம் வந்திருது. ஆனா அதை முழுசா காட்டுறதுக்குள்ள அவ என்னை மயக்கிறா, அந்த சீதா தேவியோட மறு ஜென்மம் டி என் மக. ரொம்ப நேரம் என்னால அவ கிட்ட கோபத்தை இழுத்து வச்சிக்க முடியலை. என்ன செய்ய?”
“சரி சரி இப்படியே சொல்லிட்டு இருக்காம அவளுக்கு ஏத்தாப்ல ஒரு ராமனை சீக்கிரம் பாருங்க”
“ரெண்டு மகளை பெத்து வச்சிருக்கோம். ரெண்டு பேருக்கும் கல்யாண வயசு வந்துருச்சு. முதல்ல யமுனாவுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க. அப்புறம் உடனே ஜானகிக்கும் முடிச்சிரனும். ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல முடிஞ்சா கூட எனக்கு சந்தோஷம் தான்”
“என்னது இப்பவே ஜானகிக்கு கல்யாணமா? விளங்கி போச்சு. இவளுக்கு கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்? காலைல எட்டு மணி ஆகுது, இன்னும் குளிக்காம உக்காந்திருக்கா. பல்லு கூட விளக்காம காபி குடிச்சிட்டு இருக்கா. இப்படி பொறுப்பே இல்லாதவளுக்கு கல்யாணம் ஒரு கேடா?”, என்று அவர் மீண்டும் கோபமாக குதிக்க “இப்படி கத்த வேண்டியது. அவ வந்த அப்புறம் அவ கிட்ட ஏடா கூடமா பேசி வாங்கிக் கட்டிக்கிட்டு என் மகளைப் போல யாரும் உண்டானு ரசிக்க வேண்டியது. இப்ப வரை என்னால நான் பெத்த அவளையும் புரிஞ்சிக்க முடியலை. கூட வாழ்ந்த உங்களையும் புரிஞ்சிக்க முடியாலை”, என்று சலிப்புடன் சொன்னாள் அரசி.
“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட? வா வா அத்தானை பத்தி உனக்கு உடனே புரிய வச்சிறேன்”, என்று அவர் கண் சிமிட்டிய படி சொல்ல “நேத்தெல்லாம் புரிய வச்சது போதும்? கிழவனுக்கு ஆசையை பாரு”, என்று வெட்கத்துடன் சொன்னாள் அரசி.
“நான் கிழவனா டி?”
“ஆமா, ஆனா எனக்கு மட்டும் சொந்தமான அழகான கிழவன்”, என்று சொல்லி அரசி சிரிக்க அவருக்கும் புன்னகை வந்தது.
அப்போது குளித்து முடித்து காட்டன் புடவையில் தயாராகி கீழே வந்தாள் அவர்களின் மூத்த மகள் யமுனா.
“குட் மார்னிங் பா, குட் மார்னிங் மா. நான் சாமி கும்பிட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு யமுனா சாமி அறையை நோக்கிச் செல்ல பெற்றவர்கள் அவளை பூரிப்பாக அவளைப் பார்த்தார்கள்.
“இப்ப தான் இவ பிறந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள யமுனா நல்ல வளந்துட்டா அரசி”, என்று நெகிழ்வுடன் சொன்னார் சரவணன்.
“அதான் சொல்றேன், மாப்பிள்ளை பாருங்கன்னு”
“சரி தரகர் கிட்ட பேசுறேன்”
“சரிங்க இருங்க. நான் உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்”
“அருகம் புல் ஜூஸ் தானே?”, என்று கேட்ட சரவணன் மகள் சொன்னதை எண்ணி சிரித்தார்.
“அவ மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க? அப்புறம் ஏன் அவளை வெறுப்பேத்துறீங்க?”
“அவ எல்லாத்துலயும் யமுனா மாதிரி சரியா இருக்கணும்னு எதிர் பாக்குறேன் டி. ஆனா நடக்க மாட்டிக்கு. ஆனா அவ என் உயிர். அதனால அவளோட சேட்டையை ரசிக்கிறேன். அவ இப்ப சின்ன குழந்தை தானே? கண்டிப்பா ஒரு நாள் மாறுவா”
“அப்ப எதுக்கு அவ கூட தினமும் மல்லுக்கு நிக்குறீங்களாம்? உங்க ரெண்டு பேரையும் நினைச்சு எனக்கு தான் பயமா இருக்கு”
“நான் என் மகளுக்கு அறிவுரை சொல்லாம வேற யார் சொல்லுவா? அவ இருக்குறதுனால தானே இந்த வீடு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. மூத்தவ என் பேச்சை அப்படியே கேப்பா. அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் தான். ஆனா இந்த சின்ன குட்டி என் கிட்ட மல்லுக்கு நிக்குறது எனக்கு மகன் இல்லைங்குற குறையே இல்லாத மாதிரி இருக்குது டி. ஆனாலும் இவளை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்குற வரைக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு”
“பாக்கலாம், என்ன நடக்குன்னு. அவளுக்கு ஏத்தவன் பிறக்காமலா இருப்பான்?”, என்று கவலையாக சொன்னார் சரவணன்.
“ரொம்ப கவலைப் படாதீங்க மாமா. எல்லாம் நல்ல படியா நடக்கும். அடுத்த வீடுன்னா நம்ம மக எல்லாம் புரிஞ்சு நடந்துக்குவா. நம்ம வீட்லயே பாருங்களேன். அவ உங்க கிட்ட மட்டும் தான் இப்படி அலம்பல் பண்ணுவா. ஆனா என் கிட்ட எப்பவும் சமத்து தான். உங்க அண்ணன் வீட்ல உள்ளவங்களும் சரி, என் கூடப் பிறந்தவங்களும் சரி எல்லாருக்குமே மூத்தவளை விட இவளை தான் ரொம்ப பிடிக்கும். எல்லாரையும் உயிர்ப்போட வச்சிக்குவா மாமா”
அரசியின் மாமா என்ற அழைப்பும் மகளைப் பற்றி மனைவி சொன்ன உண்மையும் சரவணன் மனதில் ஒரு நிறைவைக் கொண்டு வந்தது. அதனால் அவர் முகம் தெளிந்தது.
“நீ சொல்றதும் சரி தான் அரசி, சரி நான் கடைக்கு போகணும். போய்க் குளிக்கிறேன்”
“சரி நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
“சரி மா”, என்று சொல்லி விட்டு அவர் அறைக்குள் செல்ல அரசி சமையல் அறைக்குச் சென்றாள்.
அதன் பின் சரவணன் குளித்து முடித்து அங்கே வர யமுனாவும் மலர்ந்த முகத்துடன் அவருடன் சாப்பிட அமர்ந்தாள். மங்கையர்க்கரசி சரவணனுக்கும் யமுனாவுக்கும் காலை உணவை பரிமாறினாள். அப்போது அங்கே வந்த ஜானகி “அம்மா எனக்கும் டிபன் தா, பசிக்குது”, என்றாள்.
”இன்னும் குளிக்கலையா டி நீ?”, என்று கேட்டாள் யமுனா.
தன்னை முறைத்த படி அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்த ஜானகி பின் தன்னுடைய அக்கா புறம் திரும்பி “நீ வேலைக்கு போற? அதனால குளிச்சு கிளம்பி சாப்பிடுற? நான் எங்க போகப் போறேனாம்? அதனால குளிக்கிறது முக்கியம் இல்லை. சாப்பிடுறது தான் முக்கியம். அம்மா பல்லு விளக்கிட்டேன் மா. சாப்பாடு தா”, என்று நீண்ட விளக்கம் கொடுக்க வேறு வழியில்லாமல் தலையில் அடித்த படி அவளுக்கு பரிமாறினாள் அரசி.
“உன்னை யார் வீட்ல உக்காரச் சொன்னா? ஒழுங்கா நீ செலக்ட் ஆகிருக்குற கம்பெனிக்கு வேலைக்கு போயிருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டார் சரவணன்.
“லூசப்பா நீ?”, என்று ஜானகி சட்டென்று கேட்க அவர் மகளை முறைத்தார். அரசியும் யமுனாவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
அப்பாவின் முறைப்பை சிறிதும் கண்டு கொள்ளாத ஜானகி “காலைல ஒன்பது மணிக்கு கடைக்கு போற நீ, நைட் பதினொரு மணிக்கு தான் வீட்டுக்கே வர. இவ்வளவு கஷ்டப் பட்டு யாருக்கு சம்பாதிக்கிற? எல்லாம் எனக்கு தானே? அப்புறம் எதுக்கு நான் வேலைக்கு போகணும்? எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல என்னை எவன் கையிலாவது பிடிச்சு கொடுத்துருவ. அது வரைக்கும் ஜாலியா இருக்கேனே?”, என்று சொன்ன மகளை வெட்டவா குத்தவா என்பது போல அவர் பார்க்க அவளோ “இட்லி அப்பா கன்னம் மாதிரியே இருக்கு, என்ன மா?”, என்று கேட்டுக் கொண்டே இட்லியை உள்ளே தள்ளினாள்.
“நான் ஒண்ணும் உன் ஒருத்திக்காக சம்பாதிக்கலை. உனக்கு உன் அக்காவும் இருக்கா. உன் அம்மாவும் இருக்கா. எல்லாருக்காகவும் தான் சம்பாதிக்கிறேன். நான் ஒரு கடையையும் உன் அக்கா ஒரு கடையையும் பாத்துக்குறோம். டவுன்ல இருக்குற கடை பாக்க ஆள் இல்லாம இருக்கு. நீ போய் அங்க உக்கார வேண்டியது தானே?”, என்றார் சரவணன்
“அப்பா நான் காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ளே என் தலைல இவ்வளவு பெரிய பாறாங்கல்லை வச்சா எப்படி? நான் கொஞ்ச நாள் பிரியா இருக்கேனே?”, என்று சொல்ல சரவணன் தான் வாயை மூட வேண்டியது இருந்தது. அவர் என்ன சொன்னாலும் தான் அவள் கேட்பதாக இல்லையே.
சரவணன் மற்றும் யமுனா இருவரும் கிளம்பிச் செல்ல தாயுடன் அரட்டை அடித்த படியே டிவியைப் போட்டு அமர்ந்தாள் ஜானகி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.