காலை ஐந்து மணி இருக்கும். பிரவீனா எழுந்து தயாராகி தனக்கு ஒரு காப்பியை போட்டுக் கொண்டு பால்கனி வர, அதை வாயில் வைக்கும் முன், கணவன் வரும் சத்தம் கேட்டது அவளுக்கு…
தன்னைப்போல் பிரவீனா முகம் மலர்ந்து போனது. திருமணம் முடிந்து நாட்கள் இயல்பாக கடக்க, மித்ரனை பற்றி அவள் நன்றாக அறிந்த ஒரு விஷயம். பிரவீனா உறங்கும் வரை தான் மித்ரனின் உறக்கமும் நீளும்… அவள் எழுந்து வந்ததும் மனைவி இல்லை என்பதை அவன் எங்கிருந்து தான் உணர்வானோ, அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்து விடுவான்.
“குட் மார்னிங்” என்று அவன் சொல்ல, அவளும் முகம் மலர்ந்து வாழ்த்து சொன்னாள். அந்த நேரம் இவர்கள் இருவருக்கும் ஆனது. சந்தோஷமாக எதிர்கால திட்டங்களை விவரிப்பார்கள். இன்னும் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்காமல் இருந்தாலும், அடுத்த குழந்தை வரை திட்டமிடல் இருக்கிறது.
இப்போது பிரவீனா கணவனின் அருகாமையை சகஜமாக ஏற்கத் தொடங்கி விட்டாள். இங்கு வந்த ஒரு வாரத்தில் அவன் அறையில் இருந்தால் பாத்ரூம் போக, குளிக்க, அலங்காரம் செய்ய என்று சங்கடமாக இருக்கும்.
ஆனால், மித்ரன் தெளிவாக சொல்லிவிட்டான். இதுதான் நம் வாழ்க்கை, இப்படித்தான் நாம் பயணிக்க வேண்டும். இதையும் தாண்டி நாம் இணைய வேண்டும். அதன் பின் மெல்ல மெல்ல அவனை மனதளவில் ஏற்றுக் கொண்டாள்.
காலையில் அதிரனை கிளப்ப பரபரப்பாக வேலை நடக்கும் பிரவீனாவுக்கு… தற்போது ஆதிரன் முழுதாக மித்ரன் கவனிப்பில் இருக்கிறான் முன்பெல்லாம் கிச்சனுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து கொண்டே இருப்பாள்.
“நடக்கிறதுல போட்டி உனக்கு தான் வைக்கணும் பிரவீனா” என்று கணவன் கூட கேலி செய்வான்.
“ஏன் சொல்ல மாட்டீங்க. ஒரு காபியை ஒரு மணி நேரமா வச்சிட்டு பேப்பர் பாத்துட்டு இருக்கீங்க. அங்க கேரட்டை அடுப்பில் வச்சுட்டு, இங்க உங்க மகனுக்கு பிரஷ் வாயில வைக்கணும். அதுக்குள்ள திரும்ப கேரட்டை பார்க்க ஓடணும். உங்களுக்கு ரசத்துக்கு தாளித்துவிட்டு, இவனை குளிக்க வைக்கணும். திரும்ப ரசம் கொதிக்கிறதுக்கு முன்ன போய் ஆஃப் பண்ணனும். அதுக்குள்ள இது இல்லாத சேட்டை எல்லாம் பண்ணி வச்சிருப்பான்” அதைக் கூட நடந்து கொண்டேதான் சொல்வாள் பிரவீனா.
“இந்த சிரமம் எல்லாம் இனி உனக்கு வேணாம். அவன நான் பாத்துக்குறேன். நீ கிச்சனை மட்டும் பாரு”
“முடியாது. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிளம்புனா பதினொரு மணிக்கு மேல தான் வீட்டை விட்டு போவீங்க. அவங்க மிஸ் எனக்கு போன் பண்ணிடுவாங்க. அதனால அவனை நானே குளிக்க வைக்கிறேன்” என்றதும்,
“இனிமே நானும் குளிக்க லேட் பண்ணுவேன். எங்க மேனேஜரும் உனக்கு போன் பண்ணுவாரு” என்று சிரிப்பே அடக்கிக் கொண்டு மித்ரன் சொல்ல, திரும்பி நின்றாலும் மனைவி முகம் சிவப்பதை அறிவான் மித்ரன்.
முன்பெல்லாம் கணவனின் நெருக்கத்தையும் ரசனையான பார்வையையும் தயங்கி நின்று ஏற்பவள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு ஒட்டி நின்று மயங்குகிறாள். கணவனின் இரட்டை அர்த்த பேச்சு கூட அவளை சிவக்க வைக்கிறது.
வீட்டை கிளீன் செய்ய மட்டும் ஆள் வைத்துக் கொண்டாள் பிரவீனா. மற்றபடி கிச்சன் எல்லாம் அவள் பொறுப்பில் இருந்தால்தான் அவளுக்கு திருப்தி. திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் வேலைக்கு சென்றாள். அப்புறம் அவளை சொல்லிவிட்டாள்.
“என்னங்க, எனக்கு ஆதரவு கூட இருக்கணும். அவன் பொறந்ததுல இருந்து அவன் கூடவே இருந்தாலும் அவன முழுமையா நான் பார்த்துக்கொண்டதில்லை. அவன் மேல நான் கவனமாக இருந்ததில்லை. அவனுடைய எதிர்காலத்தை யோசிச்ச அளவுக்கு, அவனோட நிகழ்காலத்தில் நான் பங்கெடுக்க வில்லை”
“அத்துக்கு தாய்ப்பால் கூட ஒழுங்கா கொடுக்கல… மாமா இறந்ததுக்கு அப்புறம் எதிர்காலம், வேலை, சம்பாத்தியம் அப்படியே ஓட…எல்லாம் அவனுக்காக தான். ஆனா, அவன் கூட இருந்து பார்க்கல. நான் வீட்ல இருக்கவா?”
“நான் சம்பாதிக்கிறதே நம்ம எல்லாருக்கும் போதும்.. நீ சந்தோசமா வீட்ல இரு” வேற என்ன சொல்வான் மித்ரன் மனைவி விருப்பத்துக்கு மீறி…
ஆனாலும், மித்ரனுக்கு ஆச்சரியம். கல்யாணம், கணவன், குழந்தை குடும்பம் என்பது மட்டுமா ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை என்று நீதி ஏக்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால் இங்குதானே பல பெண்களுக்கு இவையெல்லாம் கனவாக இருக்கிறது. அவரவர் தேவை பொறுத்து வேலை. தற்போது ஆதரவனுக்கு அம்மாவின் கவனிப்பு தேவையாக இருக்கும் பொழுது, பிரவீனா பார்த்துக் கொள்ளட்டுமே…
முழு இல்லத்தரசியாக இருந்தாள் பிரவீனா. கணவனை கவனிப்பது, பிள்ளையை பார்ப்பது குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவது… மதியத்துக்கு மேல் ஒரு குட்டி உறக்கம். திரும்ப கணவன், பிள்ளை என்று தனக்கான ஒரு குட்டி உலகத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள் பிரவீனா.
கணவன் ஆபீஸ் இருக்கும் பிள்ளை ஸ்கூலுக்கும் சென்ற பின் திரும்ப ஒரு காபியோடு அமர்ந்து கொள்வாள். அடுத்த ஒரு மணி நேரம் பயங்கர பிசி அவள். முதலில் சாரதா விடமிருந்து கால் வரும், மகனைப் பற்றி தான் கேட்பார்…
அடுத்து மகேஸ்வரி இடமிருந்து அடுத்த குழந்தை எப்போது பெற்றுக் கொள்வாய் என்றுதான் ஆரம்பிப்பார். அடுத்து இரு நாத்தனார்களும் நட்பாக பேசிக்கொள்வார்கள். மித்ரன் முன்மாதிரியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் அக்காக்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று வந்து கொண்டிருந்தான்.
மித்ரனுக்கு பிரவீனா வைக்கும் வத்தல் குழம்பும், ரசமும் அவ்வளவு பிடிக்கும். இரவில் சாதம் எடுத்துக் கொள்ளாதவன் மனைவி வத்தல் குழம்பு வைத்தால் மட்டும் ஒரு பிடி, பிடித்து விடுவான். பிரவீனாவும் கணவனின் தேவை அறிந்து மித்ரனுக்கு மதிய உணவில் என்ன இருந்தாலும், ஒரு டப்பாவில் ரசம் தனியாக வைத்திருப்பாள்.
மித்ரனுக்கு அவளைப் பிடித்து காதலித்து தான் கல்யாணம் செய்து கொண்டாலும்… கல்யாண வாழ்க்கை அவன் எதிர்பாராத அளவுக்கு திருப்தியையும், மகிழ்ச்சியும் கொடுத்தது. ஒரே பெண்ணோடு எவ்வாறு வாழ முடியும் என்றவன் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
கல்யாணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவுக்கான லைசன்ஸ் என்று கேலி பேசியவன், இன்று தாம்பத்திய வாழ்க்கை இல்லாமலே ஒரு முழுமையான இல்லற வாழ்க்கையை தன் மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இன்னைக்கு இதை சாப்பிடலாம் என்று ஆசையாக மித்ரன் நினைக்கும் போதே பிரவீனா அதை செய்து வைத்து விடுவாள். அவ்வளவு புரிதல் அவர்கள் இருவருக்கும்…
• அவனின் உணவு பிடித்ததை நன்றாக அறிந்தவள், அதை ரொட்டீனாக மாற்றி இருந்தாள். ஆதிரனுக்கு வாழ்க்கையை கொண்டாட்டம்தான். அதில் தான் தான். அதில் தான் ராஜா. தன்னைக் கொண்டாடும் பெற்றோர்கள்… ஆதரனின் ஆர்வத்திற்கு தக்க என்னவென்றாலும் செய்தான் மித்ரன்.
எல்லோரும் அவரவர் வாழ்க்கை வாழ்ந்தாலும் பிரவீனா, தன் உடன் பிறப்புகளிடமிருந்து ஒரு எல்லையிலே நின்றாள். தினமும் போன் செய்வதோ, அவரவர் நல்லது, கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதோ, உடன்பிறப்புகளாக சிறுசிறு உதவி செய்வதோ எதுவும் கிடையாது.
ஏதாவது பிறந்தநாள், கல்யாண நாள் என்று போனில் ஸ்டேட்டஸ் பார்த்தால் விஷ் பண்ணுவதோடு சரி… பிரேமுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அன்று கணவனோடு சென்று அத்தையாக சீர் செய்தாள். அவரவர் கடமை என்ற நிலையில் இருந்தார்கள் நீ எனக்கு செய்கிறாயா? நான் உனக்கு செய்கிறேன். அவ்வளவுதான்.
தேவதாஸுக்கு தன் பிள்ளைகளை நினைத்து அவ்வளவு வருத்தம். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்கள் இருக்கும் வரை வாருங்கள் நாங்கள் இல்லாத காலத்தில் அவரவர் வாழ்க்கை. ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணை மித்ரன் திருமணம் செய்தது அவர்கள் வீட்டில் எத்தனை பேருக்கு பிடிக்கும் ஆனாலும் நின்றார்கள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஒற்றுமையாக நின்று அரவணைத்தார்கள். அது அல்லவா உடன் பிறந்த பாசம். தன் தம்பியின் குழந்தை அல்ல என்று அறிந்தும் கூட தன் தம்பியின் மகவாக நினைத்து அவர்களின் பூர்வீக சொத்தை விட்டுக் கொடுக்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.
அதனால் தானே பிரவீனாகும் எந்த இடத்திலும் நாத்தனார், மாமனார், மாமியார் என்ற சுற்றத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. சாரதா கொஞ்சம் சிடுசிடுப்பாக இருந்தாலும், பிரவீனா அனுசரித்தே செல்கிறாள். மித்ரனின் முழு ஆதரவும் மனைவிக்கு தான்.
என் கணவன் என் பக்கம் நிற்கிறான். நீங்கள் யார்? என்று இல்லாமல் குடும்பத்தை கட்டி சேர்க்கிறாள் பிரவீனா. மித்ரன் நிற்காத இடத்தில் கூட அவன் குடும்பத்திற்காக பிரவீனா நிற்பாள். மித்ரனுக்கு சில விஷயங்கள் எல்லாம் புரியாது, பிடிக்காது. ஆனால், பிரவீனா விட்டு விட மாட்டாள். ஒருவருக்கொருவர் அனுசரிப்பதும், அரவணைப்பதும் தானே குடும்பம்.
அதை விட்டுவிட்டு பணரீதியாக உறவுகளை எடை போட்டால், அதே அளவில் தானே தங்களையும் எடை போடுவார்கள். தங்கள் வருமானத்தை மீறிய செலவாக இருந்தாலும் பரவாயில்லை. பொதுவாக குடும்பங்களுக்குள் செய்யும் செலவுகளுக்கும் கணக்கு பார்த்து உறவுகளை தள்ளி நின்றால், நம்மையும் தள்ளித்தான் வைப்பார்கள். எங்காவது கோவில், விசேஷம், பொதுவான நாட்களில் சந்தித்து பேசிக் கொள்வதோடு சரி… அப்படியெல்லாம் தம்பி வீடு, தங்கை வீடு என்று பிரவீனா சொல்ல மாட்டாள்.
மித்ரன் வீட்டில் குலதெய்வ கோயில் கும்பிட்டார்கள். முறையாக சத்தியமூர்த்தி சொல்ல, மித்ரன் தம்பதிகள் சரி என்று தான் சொன்னார்கள். ஆனாலும் சத்தியமூர்த்திக்கு ஒரு நெருடல். பிரவீனாவை பொறுத்தவரை எந்த குறையும் கிடையாது. ஆதிரன் விஷயத்தில் பெரிதாக அவர்கள் தலையிட்டதில்லை. சின்ன பையன் தானே அவனிடம் என்ன வேறுபாடு என்று பெரியவராக அவருக்கு மனதில் தோன்றியதோ என்னவோ?
“மித்ரன் கிடா வெட்டுனா, பொங்கல் வைத்து மொட்டை எடுக்கணும்?” என்றதும்,
“நீங்க எடுங்க. என்னை ஏன் கேக்குறீங்க? நான் லீவு போட்டு வாரதே பெருசு. சும்மா எல்லாத்துக்கும் என்ன தொந்தரவு பண்ணக்கூடாது. இந்த காலத்துல நான் வந்து மொட்டை எடுக்கவா” என்று அவன் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க…
“டேய் உன்ன யாருடா எடுக்க சொன்னா? நான் சொன்னது உன் பையனுக்கு?” என்றதும்,
“அப்படியா கட்டாயம் செய்யணுமா?”
“ஆமா, இருவது வருஷம் கழிச்சு நம்ம கோயில்ல பூஜை வைக்கிறாங்க. நம்ம பங்காளி வகையறா எல்லாரும் தான் மொட்டை எடுப்பாங்க. அவங்கவங்க வாரிசுக்கு” என்றதும் மித்ரனுக்கு புரிய உடனே பிரவீனாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டான்.
அவள் என்ன சொல்லப் போகிறாள் மாமனாரை போன் செய்திருக்கும் பொழுது சரி என்று தான் சொன்னார் சாரதா தான் நாற்பத்தி எட்டு நாள் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று சொன்னது.
“எல்லா நாளும் சுத்தமா தான் போயிட்டு இருக்கு” என்றும் மனைவியிடம் கேலி பேசினான் மித்ரன்.
பிரவீனா, தன் கணவனோடு வாழ தயாராக தான் இருந்தாள். அதை சொல்வதில் தான் தயக்கம். மித்ரனும் தினமும் கேலி பேசுகிறானே தவிர ஒரு நாளும் நெருங்கி வருவதில்லை.
அன்று அவனுக்கு பிறந்தநாள். சீக்கிரமே உணவு உண்டு. மகனோடு உறங்கி விட்டான். மகன் நன்றாக உறங்கி விட்டான் என்ற பின் பிரவீனா மெல்ல கணவனை எழுப்பினாள்.
“என்ன பிரவீ?”
“வெளிய வாங்க” என்று கை பிடித்து அழைத்து செல்ல,
“என்ன ராத்திரி டைம்ல சேலையோடு இருக்க” அவனுக்கு கொஞ்சம் புரிந்ததோ…
“ஹாப்பி பர்த்டே”
“அதான் காலையில விஷ் பண்ணிட்டியே”
“விஷ் பண்ணு கிப்ட் கொடுக்கலையே”
“கிப்ட்டா நான் என்ன ஆதிரனா? சரி கொடு. மேடம், அப்படி என்ன வாங்கி இருக்கீங்க” என்றதும்,
“கண்ணை மூடுங்க”
“என்ன ஓவர் அலும்பா இருக்கே.. ஏதாவது சப்புனு முடிச்ச” என்று மிரட்டலோடு கணவன் கண்ணை மூட, அவன் கையில் என்னவோ போட்டாள். வேகமாக கண் திறந்து பார்த்தான் மித்ரன். அது ஒரு காப்பு.
நல்ல கனமாக இருந்தது..
“பிரவீனா கிரேசி கேர்ள்” என்றான் மித்ரன்.
அவனை முறைத்தவள் “நல்லா பாருங்க”
“என்னடி சொல்ற” என்று மித்ரன் பார்க்க. அந்த தங்க காப்பு முடிவில், இவர்கள் இருவரின் பெயரின் முதல் எழுத்தும் அதன் நடுவில் லவ் சிம்பள் இருந்தது. அந்த குட்டி ஹார்ட் இருவர் பெயரையும் இணைத்தது.
மித்ரனுக்கு மனைவியின் அறிவைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “பர்த்டே ப்ரொபோஸ்ல்லா?”
“இல்லையே, சும்மா பார்க்க நல்லா இருந்துச்சின்னு வாங்கினேன்” கணவன் கேட்டதும் ஒத்துக்கொள்ள மனம் முரண்டு பிடித்தது.
“எனக்காக தானே இந்த சேரி, கெட்டப் எல்லாம்”
“கிடையவே கிடையாது”
“நம்பிட்டேன். மித்ரன் எப்பவோ கண்டுபிடிச்சிட்டான். உன்கிட்ட இருந்து ஒரு சிக்னலாது வரணும் இல்ல. ஆனா, ப்ரொபோஸ் பண்ணுவேன்னு எதிர்பார்க்கல. பிரவீனா தேறிட்ட” என்று கேலி பேச,
அவள் முறுக்கிக் கொண்டு எழுந்தாள். “ஹே பிரவீ, சும்மாதான்” என்று அவள் கை பிடிக்க.
“விடுங்க. எனக்கு தூக்கம் வருது” என்று கிளம்ப பார்க்க, அவளை பலம் கொண்டு இழுக்க, அவன் மேலே பூ பந்து போல விழுந்தாள். அருகில் இருந்த அவள் முகம், காந்தமாய் இழுக்க, இரு கைகளால் தன்னை நோக்கி திருப்பினான்.
பிரவீனாவுக்கு ஒரே படப்பாக வந்தது. அவனோடு வாழ வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அந்த நிமிடத்தை கடக்க தெரியவில்லை. ஒரு மாதிரி வெட்கமும், பயமும் அவளை திணற வைக்க…
அவள் தவிப்பை பார்த்தவன் தன் கட்டுப்பாட்டையும் மீறி, அவள் இதழில் தன் இதழை பதித்தான். முதலில் அரண்டு போன பிரவீனா, அவன் கையில் கரைய … நேரம் கழித்தே விட்டவன். கொஞ்சம் பயம்தான் அவசரப்பட்டு விட்டோமோ?… அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று!…
பிரவீனா முகத்தில் இருந்த வெட்கமும், தயக்கமும் அவள் சம்மதத்தைக் கூற… முழு திருப்தியோடு அவளையும் அணைத்தவன். முழுமையான வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.