சதா “கனி, இன்னிக்கு ஒரேநாள் தானே சொல்றேன்… லீவ் போடு…” என்றான் தனது யோகா மேட்டை மடித்து வைத்தபடியே…
கன்யா “இல்லைங்க.. இன்னிக்கு கேஷ்ஷியர் லீவ்… நானும் போட்டா நல்லா இருக்காது… சாரி… சாரி….” என சொல்லியபடியே தனது தலைமுடியை பின்னியவள்.. கண்ணாடியில் அழகு பார்த்து கொண்டிருக்க..
பின்னாடியிலிருந்து வந்து அவளின் இடையை இரு கைகளாலும் பிடித்தபடி கண்ணாடியில் அவளை பார்த்தவாறு நின்று கொண்டான் சதா. அவனின் கண்களில்தான் எத்தனை ஏக்கம்…. அப்படியே அவளை ஊடுரும் பார்வை… கன்யாவாலும் அவன் பார்வையை தவிர்க்க முடியவில்லைதான், ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டபடி…
“என்னமோ ஒரு நாள் லீவ் போடாததுக்கு இப்படி பார்க்குறீங்க…ம்… விடுங்க மணியாச்சு” என்று அவனை நகர்த்த தொடங்க…
எங்கே நகர்வது அவன் கைகள் அனைத்திருக்கையில்… அப்படியே நின்றாள் சில நொடிகள், பின் இருவரும் சுதாரித்துக் கொள்ள, கன்யா கிளம்பினாள் மனமேயில்லாமல்…
இந்த ஒரு மாதமும் இருவருக்கும் மனம் பறந்து கொண்டுதான் இருந்தது. எந்த சறுக்கலும் இல்லை… இனிமையான நாட்களை இணைந்தே பயணித்தனர்.
இருவர்க்குமான அலுவல் நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் அனைத்தும் சேர்ந்தேதான் இருந்தனர். கன்யாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் சதா, அதை கடை கண்ணால் பார்த்துவிட்டு சின்ன சிரிப்புடன் கடந்துவிடுவாள் அவன் மனைவி… உடை மாற்றி வந்து சிறிது நேரம் அமர்ந்து எல்லோருடனும் பேச்சு செல்லும், அதன்பிறகு தன் அத்தையுடன் நேரம் செல்ல.. உண்டு முடித்து சதா “சீக்கிரம் வா” வென கண்காட்டி செல்ல.. கன்யா வேண்டுமென்றே நேரம் கடத்த… அதில் ஒரு ஊடல் கொண்டு அவன் வேகம் கூட்ட என இப்படியான பொழுதுகள்தான் அவர்களுக்கு…
சதா அழகாக அவளை தனக்கென செய்து கொண்டான்… அதற்கு பதிலாக அவளின் பேச்சை பழக்கிக் கொண்டான்.
சதா இப்போது, சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளில், விசிட் செய்ய தொடங்கியிருந்தான். மேலும் மாதத்தில் நான்கு நாட்கள் டெல்லி பயணம். அதை தவிரவும் ஆன்லைன் கால்ஸ் என சதா இப்போதும் பிசியாக தொடங்கினான்.
எனவே, தன் வேலைகளை மட்டுமே கவனம் சென்றது அவனிற்கு. மேலும் சதாவின் வேலை நேரம் முற்றிலும் வேறாய், ஒழுங்கு முறையே இல்லாமல் இருந்தது.
ஆனால், இருவர்க்கும் இந்த ஒரு மாதமும் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஒவ்வரு நேரமும் ஓவ்வொரு கதை… இனிமையாகத்தான் சென்றது.
எது எப்படி என்றாலும் கன்யா, தங்களுக்கான தனிமையான நேரங்களில் அந்த கேள்வியை கேட்காமல் இருந்ததில்லை… “எப்படி என்னை பற்றி யோசிக்காமா கூட இருந்தீங்க இத்தனை நாள்” என்பதுதான்.
ஏனோ சதாக்கு இப்போதுவரை பதிலே தெரியவில்லை அப்போ தெல்லாம் மீண்டும் அவளை தன்னுள் புதைத்துக் கொள்வான், அதை தவிர பதிலே இல்லை சதாவிடம்… இப்படிதான் சின்ன சின்ன ஆற்றாமை அவ்வபோது வெடிக்கும் கன்யாவிடம்…
கன்யா, கீழே சென்று எப்போதும் போல் பேங்க் செல்ல கிளம்ப… சதா அவசர அவசரமாக கீழே வந்தான்.. “கனி உன்னோட ஆதார் கார்ட் கொடு” என்றான்.
கன்யா உண்டு கொண்டிருக்க, கல்யாணி அவளுக்கும், சண்முகத்திற்கும் தோசை ஊற்றிக் கொண்டிருந்தார். கன்யா “இப்போ எதுக்கு… என் பாக்ல தேடனும் ஈவனிங் தரேன்” என்றாள் அவனின் அவசரம் புரியாமல்.
சதா “ச்சு.. இப்பவே கொடு… வேணும்” என்றான்.
சண்முகம் “என்ன ண்ணா… நேத்தே சொன்னேல்ல… நைட் சொல்லியிருக்கலாம் இல்ல, இன்னிக்கே, வேணும்… அண்ணி கொஞ்சம் தேடி கொடுங்க” என்றான் அவனும் கன்யாவிடம்.
சாப்பிட்ட படியே ஒரு கையால் அவளின் பாக்கை தலைகீழாய் கொட்டிவிட்டு, வந்து உண்ண தொடங்கினாள், சதாவை பார்த்து “சீக்கிரம் எடுங்க” என்றாள் சதா அவளை முறைத்தபடியேதான் தேட தொடங்கினான்…
சண்முகம் சிரித்தபடியே எழுந்து சென்றான். கல்யாணியும் சிரித்தபடியே அடுப்பை அணைத்துவிட்டு நகர்ந்தார்.
ஆனால், தேடிய சதாவிற்கு கிடைத்தது என்னமோ விதவிதமான அவளின் பெர்ப்யூம்தான். கூடவே அவளின் ஒரே ஒரு பேங்க் ID மட்டும்தான் இருந்தது வேறு இல்லை எனவே “என்னடி இது… ஒரே… பெர்ப்யூம்மா… இருக்கு” என்றான் கடுப்பாக.
இப்போது லஞ்ச் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் அந்த அவசரத்திலும் சதாவிடம் வந்து மெல்லிய குரலில்… “இத்தனை நாள் அதுதான் என் பாய்பிரன்ட்..” என்றாள் கண்ணடித்தபடி.
அப்போதே, அவளின் எதிரேயே… எல்லா பாட்டிலையும் கீழே விட்டெறிந்தான் சிரித்தபடியேதான் “தட்டு.. ட்டு, டு” …. என்ற சத்ததுட்டன் எல்லாம் விழுந்தது.
சதா “அதான் இருக்கேன்ல்ல, இனி இத பார்க்க கூடாது நான்… டஸ்ட்பின்ல போடு” என்றான் அவனும் ரசனையான கோவத்துடன்.
சண்முகம் இப்போது கையில் வாட்ச் அணிந்தபடியே வந்து “என்ன ண்ணா, கிடைச்சுதா… இப்போ பத்திரம் எழுதணும்” என்றான் சதாவிடம், ஆனால் கண்கள் அந்த இடத்தை பார்க்க.. எல்லாம் கீழே விழுந்து கிடந்தது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக.. கூடவே இவர்கள் இருவரின் முகமும் புன்னகையில் நனைந்தபடி இருக்க… சண்முகத்திற்கு இங்க சண்ட போட்டுக்க்ரான்களா… இல்லை சமாதானம் பேசிக்கிறாங்களான்னே புரியலேயே என்றெண்ணியே ஆராய்ச்சியாய் அவர்களை பார்க்க…
சதா “இன்னும் இல்ல டா… இரு பார்க்கறேன்” என்றவன் தன் மனைவியின் முகம் பார்க்க..
கன்யா “இங்க இல்லேன்னா.. எங்க வீட்லதான் இருக்கும்.. அண்ணனுக்கு போன் செய்தா, ஆபிஸ்க்கு போகும் போது எடுத்து வருவான்,
இல்ல…
நீங்க போய் அம்மாகிட்ட வாங்கிட்டு வாரீங்களா..” என்றாள் கடைசியாக சின்ன குரலில் சொன்னாள்.
சதா சத்தமில்லாமல் பல்லை கடித்தான். ஆனால் கன்யாவிற்கு மட்டும் நன்றாக கேட்டது. சண்முகம் என்னவோ பண்ணுங்க என்பதாக நகர்ந்து கொண்டான்.
சதா “ஏன்… வரும்போது அதெல்லாம் எடுத்து வரமாட்டியா… என்ன பேங்க் ல, வேலை பார்க்கரீயோ” என்றவன் “நான் எங்க போறது… எனக்கு வேலையிருக்கு.. உங்..” என சொல்லி ஏதோ சொல்ல வர. இன்று அவனிற்கு விடுமுறை எனவே கன்யா சட்டென “நானே ஆபிஸ் போறேன்ல்ல… உங்களுக்கு என்ன வேலை” என்றாள் இப்போது சற்று நேரத்திற்கு முன் அவன் லீவ் போட சொன்னது நினைவு வர, சொல்லிய பிறகுதான்… தான் பேசியது உரைக்க… திரும்பி உள்ளே சென்றுவிட்டாள். சதாக்கு இது உளறுவாயா, இல்ல ஒட்டைவாயான்னே தெரியலையே என எண்ணியபடியே செல்லும் அவளையே பார்த்திருந்தான்…
சதா என்ன செய்வான் பாவம்… வாரத்தில் நான்கு நாட்கள் ஹோஸ்பிட்டல் விசிட்… அதனின் நேரம் என்பது முற்றிலும் வேறு வேறாய்..
முதல் இரண்டு நாட்கள் மதியம் மூன்று மணி என்றால், அடுத்த வந்த இரண்டு நாட்கள்… இரவு பதினோரு மணிக்கு.. அதை தவிர பெரும்பாலும் ஆபரேஷன் என்று வந்துவிட்டால் நேரம் காலமே இல்லாமல் சதா அங்கேயே இருப்பான். எனவே கன்யாவின் ரெகுலர் டயமுக்கும்… இவனின் நேரம் காலமில்லா வேலைக்கும் நடுவே கன்யாதான் திணறி போனாள். எங்கும் பேசுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை… பல நேரம் இப்படிதான் போகிற போக்கில் சண்டை போடுவது, சமாதானம் ஆவதெல்லாம் நடக்கும். எனவே பெரும்பாலும் இவர்கள் இருக்கும் இடங்களில், தாங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வர் குடும்பத்தினர்.
இவர்களின் பரபரப்பை பார்த்த கல்யாணி, எங்கையாவது சண்டை வந்துவிடுமோ என “நானும் அப்பாவும் போய் வாங்கிட்டு வரோம்… ரொம்ப நாளாச்சு அங்க போயி…” என்றார்.
சதாவிற்கு இப்போதுதான் நிம்மதியானது. ஷண்முகம் “எப்போ வருவீங்க… இன்னிக்கு வேணும்… மதியத்துக்குள்ள வேணும்” என்று அவன் வாசலில் நின்று அவசரபடுத்த..
கன்யா எதற்கு இது என இப்போதான் யோசிக்க தொடங்கினாள்.. “எதுக்கத்த… அதெல்லாம்… எதுக்கு” என்றாள்.
அவர் “சதா சொல்லையாம்மா… உனக்கு” என்று தன் பையனை பார்க்க..
சதா “நீங்களே சொல்லுங்கம்மா… எனக்கு வேலையிருக்கு” என்றவன் அவள் அருகில் வந்து “கேட்டா கொடுக்கணும்.. சும்மா… பேசிக்கிட்டே இருக்க வேண்டியது” என அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் முனகிக் கொண்டே, மேலே சென்றான்.
கன்யாவிற்கு என்ன ஏது என கேட்க நேரமில்லை எனவே “அத்த ஆபீஸ் போயிட்டு கால் பண்றேன், மணியாச்சு அத்த” என்றபடி வேகமாக செல்ல… சதா, படியில் நின்றபடியே அவளை பார்த்திருந்தான், அவளும் ஏமாற்றாமல் அவனை திரும்பி பார்த்தே சென்றாள்.
சதா, இப்போது அவளின் வாய் பேச்சை ரசிக்க தொடங்கியிருந்தானா, கடக்க தொடங்கியிருந்தானா, ஏற்க தொடங்கியிருந்தானா… தெரியவில்லை. அதுவும் இருவர்க்குமான தனிமையான நேரங்களின் அவளின் வாய் இன்னும் அதிகமாகத்தான் பேசும். “ஏன் போனீங்க, என் நினைப்பே இருக்காது அப்போல்லாம், நான் யாரெனவாது தெரியுமா ” என்பதாகதான் ஒவ்வரு முறையும் அவனை கேள்வி கேட்பாள்..
ஆனால், சதா இதையெல்லாம் இப்போது கண்டுகொள்வதில்லையா… இல்லை அப்படி பழகிக் கொண்டானா, இல்லை கடக்க கற்றானா.. தெரியவில்லை… மேலும் அவளை சமாதனம் செய்ய அவனிடம் அதற்கான விடையும் இல்லை. எனவே அவளின் மனதில் இருப்பதெல்லாம் அவள் பேசும் போது வெளிவரட்டும் என அமைதியாகி, அவளின் பேச்சை ரசிக்க பழகிக் கொண்டானோ தெரியவில்லை….
சதா, இப்போது பொறுமையானவனாக ஆனான். மேலும் அவளின் முகம் பார்த்து, அவளின் கண் பார்த்து பழக் தொடங்கியிருந்தான்… அதனால் செல்லும் அவளை இப்போதும் பார்த்தான்… சின்ன சிரிப்புடனேயே இருந்தது அவள் முகம்.. அதே சிரிப்பு அவனையும் அடைய… தன் வேலையை பார்க்க தொடங்கினான்.
இதெல்லாம் காலை எட்டேகாளுக்கே முடிய… இப்போது வெங்கட்டும் கல்யாணியும் அங்கு கன்யாவின் வீட்டிற்கு கிளம்பினர்.
கீர்த்தியும், மைதிலி இனிமையாகவே வரவேற்றனர்… வந்த விஷயத்தின் சாரம் கேட்டு.. மைதிலிக்கு, மிகுந்த சந்தோஷமே… இப்படியே நின்றுவிடுமோ தன் பெண்ணின் வாழ்வு என எண்ணியிருந்தவற்கு இவர்களின் செய்கை மகிழ்ச்சியைத்தான் தந்தது.
சதா, கன்யாவின் பெயரில் ஒரு வில்லா வாங்குவதாக ஏற்பாடு… அதற்காகத்தான் இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்… சதா இன்னும் கன்யாவிடம் சொல்லவில்லை.
மைதிலிக்கும் இதை கேட்டுதான் சந்தோஷம் கூடவே கல்யாணி, சொல்லிய அனைத்து செய்திகளும், பெற்றவராய் அவர் மனதை நிறைக்கவே செய்தது.
இப்படியே நேரம் கடக்க… சண்முகம் போன் செய்துவிட்டான்… “என்ன ம்மா, கிளம்பிட்டியா… சீக்கிரம் வாங்க, அப்புறமா பேசுங்க.. இப்போ இது முக்கியம்” என விரட்ட தொடங்கினான்.
இவர்களும் கிளம்ப தொடங்க மைதிலி மெல்ல “மாப்பிள்ளையும் பெண்ணையும் ஒரு, ஒருவாரம் இங்க விருந்து அழைத்து கொள்ளட்டுமா… நீங்க பேசிட்டு சொல்லுங்க” என்றார்.
வெங்கட்க்கும், கல்யாணிக்கும் சந்தோஷமே… “தாரளாம கூப்பிட்டுக்கோங்க… எங்களுக்கு எந்த ஆட்சபனையும் இல்லை” என்றனர்.
மைதிலி “நாளைக்கு வரோம் அழைக்க..” என்றார் உடனே.
இப்படியே இருவரும் விடைபெற்று கிளம்பினர் கன்யாவின் அடையாள அட்டையுடன்.
சதா, அதனை கொண்டு, சண்முகத்தின் அலுவலகம் செல்ல… தொடர்ந்து வேலைகள் சென்றது. இப்படியே நேரம் சென்றது.
கன்யா, இப்போதுதான் தன் அத்தைக்கு போன் செய்தாள் “த்த, என்ன விஷயம் அத்த எதுக்கு ID ப்ரூப் எல்லாம் “ என இயல்பாக கேட்க..
கல்யாணி, எல்லாம் சொல்லி முடித்தார். ஆனால், கன்யாவிற்கு சந்தோஷத்திற்கு பதில் கலக்கமே வந்தது.
என்கிட்டே கூட சொல்லாமல் இப்போது என்ன அவசரம் என ஒரு எண்ணம் எழுந்தது.. கூடவே எதற்கு என் பெயரில் என தோன்றியது… ஏனோ கன்யாவால் அதனை இயல்பாக ஏற்க முடிவில்லை… குழப்பம்தான் வந்தது.
கன்யா வீட்டிற்கு வந்தவள், உடை மாற்றி வந்து தன் அத்தையுடன் வேளையில் இருக்க, கைகள் செய்தாலும்… மனம் முழுவதும் ஏதோ யோசனைதான்.
இப்போது கல்யாணி “உங்க வீட்டிலிருந்து, விருந்துக்கு அழைக்க வரேன்னு சொன்னாங்க… சதா கிட்ட பேசிட்டு, ஒரு நாலுநாள் அங்க போயிட்டு வாங்க, உங்க அம்மாக்கும் உங்களை பார்க்கனும்னு இருக்குமில்ல” என தொடர்ந்து ஏதோ சொல்ல சொல்ல…
கன்யாவிற்கு பிறந்து வீட்டில் தனது நிலையை எண்ணி, இத்தனை நாட்கள் தன்னுடன் பேசாத தாயை எண்ணியும், தன் அண்ணியின் பாரம் முகம் என எல்லாம் சேர்ந்து கொள்ள… ஏற்கனவே குழம்பி இருப்பவள் இப்போது கண்ணில் நீர் வந்து, ஆளே சோர்ந்து போனாள்… சரி சரி என கல்யாணியிடம் தலையை ஆட்டி வைத்தவள்… மேலே சென்றுவிட்டாள்… “அவர் வந்ததும் சாப்பிடுறேன் அத்த “ என சொல்லியபடி.
இரவு சதாவும், சண்முகமும் வரவே மணி பதினோன்றானது. சதா, வந்தவுடன் “எங்கம்மா… கனி, நீங்க படுங்க, நாங்க சாப்பிட்டுகிறோம்” என்றான்.
“இல்ல ப்பா… அப்பா, இப்போதான் வாக்கிங் போயிட்டு வந்தாரு நான் இன்னும் தூங்கல, கனிக்கு ஏதோ முடியல போல, அவ முகமே சரியில்ல… நீ சாப்பிட்டு மேல போய் பார்” என்றார்.
சதாவும், சண்முகமும் உடை கூட மாற்றாமல் உண்டுதான் படுக்க சென்றனர்.
சதா தன்னறைக்கு வர… aC கூட போடாமல் அப்படியே தன் கை கால்களை குறுக்கி… பெட்டில் உறங்கிக் கொண்டிருந்தாள் கன்யா.
சதா “கனி… கனி “ என்றேழுப்ப.. அசைவில்லை அவளிடம், முகமெல்லாம் வெளுத்து, அழுதிருப்பாள் போல கதகதவென இருந்தது உடல்.
கன்யா அரை தூக்கத்தில்… “இல்ல…” என்றாள் சின்ன குரலில்.
சதா “நான் எடுத்து வரவா” என்றான்.
“மச்சு…. நான் போறேன், பசிக்குது… நீங்க இருங்க” என எழுந்தாள்.
சதா “இரு வரேன்” என்றவன் உடைமாற்றி அவளுடன் சென்றான்… பேசியபடியேதான் உணவு உண்டாள் கன்யா. ஆனால் சதாவும் வீடு வாங்கும் விஷயத்தை சொல்லவில்லை. கனியும் கேட்கவில்லை… இப்படியே இருவரும் மேலே வந்தனர்.