இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.. முதலில் யார் பேசுவது என தெரியவில்லை. அதுவும் சதாவுக்கு என்ன கேட்பது, ஏன் இப்படி இருக்கிறாள் எனத்தான் தோன்றியது.
கன்யா, அவன் தன்னிடம் ஏதும் கேட்கவில்லையே என்ற எண்ணம்தான் முதலில்… கூடவே இப்பொது எதற்கு என யோசனைதான் எனவே அமைதியாகவே இருந்தாள்.
சதாதான் முதலில் தொடங்கினான் “என்னப்பா, ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு..” என்று வாஞ்சையாக அவளின் தலை கோத. கன்யாவிற்கு கண்கள் கரிக்க தொடங்கியது..
இந்த அன்பு பொயில்லையே… இவன் கண்களில் தெரிவது அன்புதானே.. அதில் பொய்யே இல்லையே… என உண்மை தெரிய அவளின் கண்கள் நனைந்தது.
ஆனால், ‘இவனிற்கு ஏன் என்கிட்டே சொல்லணும்ன்னு தோனல, என் விருப்பம் தெரியனும்னு நினைப்பே இல்லையா’ என்ற எண்ணம் வர… அதன்தாக்கம் “க்கு..” என கேவலாக எழுந்தது அவளிடம்.
சதா, பதரித்தான் போனான் “ஏன் டா… என்னாச்சு… என்னாச்சு” என அவளின் தோள் பற்ற.. அவள், முகத்தை நிமிர்த்தி, தன் கணவனை பார்க்க… அவனின் பதறிய முகம் ஒரு திருப்த்தியைத்தான் கொடுத்தது, அமைதியை கொடுத்தது… இது அவன் இயல்பே என புரிந்ததோ கன்யாவிற்கு.
இருந்தும் கேட்டாள் “ஏன் என்கிட்டே எதுவுமே சொல்லாமா செய்றீங்க… “ என கேட்டேவிட்டாள்.
சதாவிற்கோ எதுவுமே இதுவரை யாரிடமும் சொல்லியோ, அனுமதி கேட்டோ செய்ததில்லை… சொல்ல போனால் அவன் எதையுமே யாரிடமும் சொல்லியதோ, பகிர்ந்ததோ இல்லை.
எனவே இப்போது இவளின் கேள்வி புதிதாக தெரிய “என்ன..” என்றான் புரியாதவனாக.
கன்யா, உச்சபட்ச கோவத்தில் இருந்தாள்… என்ன புரியலை, என்ன விளக்கனும் இவனிற்கு என கோவம்தான் வந்தது. இவனிடம் புரிதல் இல்லாமாலா என் வாழ்வை தொடங்கினேன் என தன் மேலேயே கோவம் வந்தது.
அதெல்லாம் சேர்ந்து “என்ன புரியல… எதுக்கு இப்போ என் பெயரில் வீடு தீடிர்ன்னு, திரும்பவும் எங்கையாவது போறீங்களா” என்றாள் கோவத்தை அடக்கிய குரலில்.
சதா, முகத்தில் புன்னகைதான்.. வேறு பாவமே இல்லை அவளுள் முழுதாக கலந்தவனாக… அவளின் நிலை புரிந்தவுடன் தன்னையேதான் நொந்து கொண்டான், இன்னும் அவளுக்கு நான் நம்பிக்கையை தரவில்லையே என…
ஆனாலும், அதை பேச்சு வார்த்தையில் சொல்லி, விளக்கி, உணர வைக்க முடியாது என்றுணர்ந்தவன் “ஏன் என் மனைவிக்கு நான் வாங்கித்தரேன்.. அவ்வளவுதான்” என்றான் அவளை மையலாக பார்த்தபடி.
கன்யாவுக்கு இன்னும் தீரவில்லை ஆதங்கம்… “என்ன டையலாக் இது… உண்மைய சொல்லுங்க” என்றாள் கடு கடுகுரலில். அவளிற்கு தன் கணவன் இப்படி செய்வான் என கனவில் கூட நினைக்கவில்லை…
இப்போதுதான் ஒரு இரண்டு மாதமாக என்னை பார்க்கிறான்… அதுவும் இந்த ஒரு மாதமாகத்தான் என்னை நினைக்கிறான் இதில் எங்கிருந்து என்னை நம்பி வீடு, எதற்கு, என்ற கேள்வி அவளிடம்…
“உண்மையாவே கனி… உனக்குத்தான் வாங்கி தரணும்ன்னு தோணுது… ஏன் உனக்கு இது வேண்டாமா… பிடிக்கலையா “ என்றான்.
சதாவிற்கு ஏதோ போல் ஆனது, அவளின் கேள்வியில் அவனின் முகம் வாடித்தான் போனது.
கன்யாவிற்கு, அவனின் வாடிய முகம் அவளை படுத்தினாலும், என்ன செய்வது அவளின் மனம்தான் நம்ப மறுக்கிறதோ… சற்று நேரத்திற்கு முன்பு இருந்த அந்த சிரிப்பும், அந்த கண்ணும் பொய் சொல்லவில்லையோ.. எனவும் தோன்ற… கன்யா தடுமாறினாள்.
உண்மையும் அதுதான் இயல்பான ஒரு நிகழ்வை கூட அவளால் ஏற்க முடியவில்லை… திணறினாள். எதுக்கு இப்போ வீடு என யோசனை வந்தது. கூடவே பயம் எங்காவது விட்டு சென்று விடுவானோ என்ற பயம் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
சதா, வாகாக அமர்ந்து கொண்டு, அவளை மெதுவாக தன் தோள் சாய்த்துக் கொண்டான்… கன்யாவின் கண் தன் போல் மூடிக் கொண்டது. கணவனின் வார்த்தை மட்டும் காதில் விழுந்தது “பயப்படாத, இனி உன் கிட்ட சொல்லிட்டு எதா இருந்தாலும் செய்யறேன், வாங்குறேன்…
ஆனா, இத மாத்த முடியாது… நாளைக்கு ரெஜிஸ்டேஷன்… ஒன்னும் பண்ண முடியாது, நீ நாளைக்கு லீவ் போட்டே ஆகணும்” என பொறுமையாக சொன்னான், ஏதோ உணர்ந்தவனாக அவளை, கருத்தில் கொள்ளும்.. உடல் மொழியில் என்னை நம்பேன் என்ற அன்பு கட்டளை இருந்ததோ…
கன்யா, அமைதியாகவே இருந்தாள்… சதாவின் கைகள் அவளின் கைகளுடன் கோர்த்துக் கொண்டு… பின்னிலிருந்து சின்ன சின்ன முத்தங்காளாக வைக்க… கன்யா “ஏங்க.. எனக்கு இப்போ வேண்டாமே, அத்த பெயரில் வாங்குங்க” என்றாள் மெல்ல.
சதா “ம்ச்சு… என்ன இப்படி சொல்ற உனக்காகத்தான் வாங்குறேன்… எதுவும் சொல்லாத, வீடு சூப்பரா இருக்கு… நீ பார்த்தா, உனக்கு பிடிச்சிடும்…” என பொறுமையாக சமாதானமே செய்தான் சதா,
ஆனால், ஏதோ அவளிற்கு ஏற்கவே முடியவில்லை. இந்த ஐந்த வருட தவறை ஈடுகட்ட நினைக்கிறானோ என்பதே மனதின் உள்ளே உள்ளே உறுத்திக் கொண்டே இருந்தது.
ஆனாலும், இப்போது அவனின் கை கோர்த்தலும், உனக்கே உனக்குத்தான் என்ற வார்த்தைகளையும் அவளால் ஈசியாக விடமுடியவில்லை எனவே இன்னும் தெளியவில்லை… அவள். வெறுமனே “ம்…ம் “ என்றாள்.
இப்படியே அவளை பேசி பேசியேதான் கொண்டு சென்றான் சதா. ஒருதரம் அவன் செய்த செயல், அதனின் தாக்கம் அவளிடம் தளும்பி நிற்கிறது என சதாவால் உணர முடிந்தது… இப்போது சுதாரித்தான், அதனால் பொறுமையும் வந்தது அவனுள்.
மறுநாள் காலை இனிதே விடிந்தது… வெங்கட்டும் கல்யாணியும் நங்கநல்லூர் ஆஞ்சினயார் கோவிலுக்கு சென்றுவிட்டனர். அதனால் கன்யா டிபன் வேலைகளை செய்துக் கொண்டிருக்க.. சதா, இன்னும் தனது த்யானத்தை முடிக்கவில்லை.
அவனின் எல்லாம் அதுதான்… எதற்கும் அலட்டிக் கொள்ளாத பாவம் அப்படிதான் வந்தது. அதிகமாக உணர்ச்சியை காட்டாத முகமும் அப்படிதான் வந்தது.
இதோ இப்போது எல்லாம் செய்துவிட்டு எனக்கு எதுவுமே தெரியாது எனும் பாவத்தையும் அதுதானே கொடுத்தது.. ஆக அதில் அவன், முழுமையாக தன்னை தொலைப்பான்.
ஆனால், கீழே, சதாவை விட ஷ்ணமுகம்தான் பரபரப்பாக இருந்தான், யாரிடமோ பேசியபடியே அந்த ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.
திடிரென “அண்ணி நீங்க லீவ் சொல்லிட்டீங்களா, எல்லா ப்ரூபும் ஒரிசினல் எடுத்துக்கோங்க…” என இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தான்.
சதா, பொறுமையாக கிளம்பி வந்தான், கன்யா பேசியபடி நிமிர்ந்து அவனை பார்த்தாள்… சதா “என்ன..” என்பதாக புருவம் உயர்த்த… கன்யா சிரித்தபடியே தலை குனிந்து கொண்டாள்.
சதா, நேரே பூஜை அறை சென்று, திருநீறு வைத்து சண்முகத்திடம் வந்து அமர்ந்து கொண்டான். உடனே போன் வந்தது சதாவிற்கு… அமைதியான குரலில் பேச தொடங்கினான்.
ஷணமுகத்திடம், கன்யா “இது லோனா.. சண்முகம்” என கேட்டுக் கொண்டிருந்தாள்.
இந்த வீட்டை புதுசா.. கட்டதான் லோன் போடுறோம்… “ என்றான். கன்யாவின் கண்கள் விரிந்த விதத்தில் அவனே தொடர்ந்து
“எல்லாம் அண்ணன் ஏற்பாடு அண்ணி… முதலில் அம்மா பேர்லதான் வாங்கறதுன்னு நினைச்சேன்… ஆனா அண்ணன்தான் உங்க பேர்லதான் வாங்கனும்னு சொல்லிட்டாரு… அத்தோட இந்த வீடு அம்மா பேர்லதானே இருக்கு, சோ, நான் புதுசா கட்டி தரேன்னு.. சொல்லி, அதுக்கும் கம்பன்செட் பண்ணிட்டாரு போல…
எது எப்படியோ அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் … உங்க பெயரில் வீடு வாங்குவது… “ என சொல்லி கொண்டிருந்தான். கன்யா, வாய் திறந்து கேட்டிருந்தாள்.
அன்று, நீயேன்… என்னிடம் பேசவில்லை என சண்டை போட்டவன்… இப்போது வீடு வாங்குகிறான். அதுவும் என்னிடம் சொல்லாமல் கூட எனும்போது… கொஞ்சம் கிறங்க தோன்றியது தன் கணவனிடம்…
எல்லாவற்றையும் சொல்லி செய்யலாம் தான், ஆனால் இப்படியும் அன்பை காட்டலாம் என முதலில் உணர்ந்தால் கன்யா. இது சொல்ல தெரியாத அன்பு… கூடவே வருவான்… ஐ லவ் யூ என வசனம் பேசமாட்டான். அக்கறையை கூட இப்படிதான் காட்ட தேறியுமோ என அவளின் மனமே எடுத்து கூற… கொஞ்சம் தெளிவு வந்தது..
சதா, அதுவரை போன் பேசியபடியே இருந்தான் மெல்லிய குரலில். கன்யாவின் பார்வை இப்போது தன் கணவனையே மொய்க்க தொடங்கியது, என் பெயரில் எனும் போது அவனின் அன்பு விஸ்வரூபமாக தெரிந்தது.
நேற்று எண்ணிய தனது எண்ணமெல்லாம் இன்று, அவளிற்கே சங்கடம் தந்தது… புரிதல் என்பதும்.. நேசம் என்பதும் வேறு வேறா… நான், என் அன்பனை புரிந்து கொள்ளவில்லையோ… என்ன விதமாக உணர்ந்தாள் என தெரியவில்லை…
ஆனால், சின்ன நம்பிக்கை தெரிந்தது அவளின் பார்வையில்… அந்த சின்ன நம்பிக்கையாவது அவளின் பார்வையில் காண வேண்டும் எனதான் அவன் நினைத்தது.
ஆனால் சதா, அதனை உணரவில்லை… தனது மருத்துவம் குறித்த பேச்சு… கவனம் முழுவதும் அதில்தான் இருந்தது அவனிற்கு.
கன்யா “ம்… இதோ சம்மு.. தட்டு எடுத்து வைக்கிறேன்” என உள்ளே சென்றாள்.
உணவு உண்ண அழைத்தாள் கன்யா, ஷ்ணமுகம்தான் வந்தான், சதா இன்னும் பேசி முடிக்கவில்லை.. அவன் இவளை திரும்பியும் பார்க்கவில்லை…
அழகான ஹல்ப் வைட், புல் ஹன்ட் ஷர்ட்… பீச் கலர் பேண்ட் கையில் பாஸ்ட் ட்ரக் வாட்ச்… நெற்றியில் திருநீறு… இதை தவிர சொல்லிக் கொள்ளும் படி வேறு எந்த அலங்கார பொருட்களும் அவனிடம் இல்லை… அதற்கெல்லாம் சேர்த்து அவனின் தீட்சண்யமான கண்கள் மின்னியதோ… அங்கிருந்தபடியே பார்த்து இருந்தாள் கன்யா …
சண்முகம் “அண்ணி, இன்னும் கொஞ்சம் சட்னி” என்றான், தன் அண்ணியின் மெய் மறந்த நிலை பார்த்து… தானே எழுந்து போட்டுக் கொண்டான், கன்யாவை பார்க்காமல் உண்ண தொடங்கினான்.
இப்போதுதான் சதா போன் பேசி முடித்து அமர்ந்திருக்க… கன்யா “வரீங்களா… சாப்பிடலாம்” என சத்தமாகவே அழைத்தாள். இது நேசத்தின் குரலென சின்ன சலிப்புடன் வந்தது அவளின் குரல்.
சதா மெல்லிய சிரிப்புடன் வந்து அமர்ந்தான்… தனது புல் ஹன்ட் ஷர்ட்டின் கை பட்டனை கழற்றி விட்டு லேசாக தனது தோள்களை உலுக்கி… அந்த ஷர்ட்டை மேலே, கசங்காமல் இழுத்து, மணிக்கட்டில் மடித்துக் கொண்டு அவன் உண்ண அமர.. கன்யா மொத்தமாக கசங்கிதான் போனாள் அந்த அழகில்… என்னவன் என கர்வம் வந்தது அவளுள்…
சதா “ம்…” என அசால்ட்டாக சொல்லி… தட்டை பார்த்து கண் காட்ட..
வெங்கட் சைகை மொழியாக … “அப்புறம் “ எனும்படி கை அசைத்து சதாவை காட்ட… கன்யா ஏதும் சொல்லாமல் நின்றிருந்தாள். சதா உண்டு முடித்து எழுந்து கொண்டான்.
அதன்பிறகு தனது மாமனார் மாமியாருடன் உண்டாள் கன்யா… எல்லோரும் ஹாலிற்கு வரவும்… சதா, பூஜை அறையிலிருந்து ஒரு பாக் எடுத்து வந்து கொடுத்தான் கன்யாவிடம் “இத கொடுத்துடு… பலன்ஸ், நான் கொடுப்பேன்னு சொல்லிடு… சாவி தருவாங்க… வாங்கிக்க…“ என்றான்.
கன்யா “நீ.. நீங்க” என கேட்க..
“இத பிடி “ என அவளின் கைகளில் பண பையை வைத்தவன். அமர்ந்து கொண்டு “எனக்கு இப்போ ஹோஸ்பிட்டல் போகணும்…. சம்மு வருவான்… போய் கையெழுத்து போட்டு வந்திடு… அவ்வளவுதான்… ஆப்டர்நூன் முடிஞ்சிடும்… நான் பார்க்கிறேன், வர முடிஞ்சா வரேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
கன்யா, முகம் அப்படியே சோர்ந்து போனது தன் அத்தையை அனிச்சையாய் பார்த்தாள் ‘நீங்க சொல்லுங்க’ எனும் விதமாக…
சதா, அவளின் எண்ணம் புரிந்தவனாக “சின்ன விஷயத்துகெல்லாம் அப்செட் ஆகாத… கிளம்புங்க, மணியாச்சு.. ம்” என இருவரையும் விரட்ட தொடங்கினான்.
கன்யாவிற்கு “எது டா, சின்ன விஷயம்… எனக்கெல்லாம் இது ரொம்ப பெருசு… நானெல்லாம் கோடியில் வீடு வாங்குவேன்… அதுவும் என் கணவன் வாங்கி தருவான் என நினைக்கவேயில்லை… இதில் நான் மட்டும் போகனும்மாம்… போடா… போ…” என சிறு குழந்தையாக மனம் அறற்ற தொடங்க…
சதா, அவளின் கை பிடித்து நகர்த்த தொடங்கினான். கன்யா அவனை ஏதும் சொல்லாமல் பார்த்துவிட்டு தன் அத்தை மாமாவிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கிளம்பினாள் …
அவளின் பின்னாடியே சதா, வந்தான் வழியனுப்ப… கண்டு கொள்ளவில்லை அவள்… சின்ன திமிர் வந்தது… “போடா போ..” என எண்ணம்தான். ஆனால், பெரிய ஆதங்கம் “ஏன், கூட வரவில்லை” என… இது தீராத ஆதங்கம் அவளிடம்.
அதற்கெல்லாம் நேரமில்லை சதாவிற்கு. அவன் மருத்துவமணை சென்றுவிட்டான். சண்முகம் ரெஜிஸ்டரேஷன் முடிந்து கால் செய்தான். சதா எடுக்கவில்லை.
சண்முகமும், கன்யாவும் சாவி வாங்கி, வீடு வந்திருந்தனர். சதா இன்னும் வந்திருக்கவில்லை. கன்யாவிற்கு ஒரு சொத்து வாங்கிய திருப்தியே இல்லை… தன் அன்பனை சுற்றியே மனம் நின்றது… ஏங்கி நின்றது.