அடுத்த இரண்டு நாள் கன்யாவிற்கு மனதேயில்லை… சதா, தெளிந்து கொண்டான்தான்… ஆனால், புது அனுபவமாக கன்யா, நடமாடினாள்… சற்று மெல்ல மெல்லத்தான் இயல்பாக முடிந்தது அவளால். நாட்கள் நகர தொடங்கியது.
இந்த வார இறுதியில், கன்யாவின் வீட்டு விருந்துக்கு சென்றனர் தம்பதிகள்.
மைதிலிக்கு சந்தோஷமே, சொன்னபடி தன் மருமகன் வந்தது. சதா, உணவு முடித்து கிளம்பிவிட்டான் தன் வேலையை பார்க்க, கீர்த்தி கூட “ஏன் ண்ணா… இன்னிக்கு சண்டே தானே” என ஏதோ சொல்ல,
சதா சிரித்தபடியே “இன்னொரு நாள் வரேன்…. கீர்த்தி, டேக் கேர்” என எல்லோரிடமும் இன்முகமாகவே விடைபெற்றான். கன்யா, இருந்துவிட்டு இரவுதான் வீடு வந்தாள்.
வந்ததும் தன் அத்தையுடன் பரபரப்பாக அமர்ந்து “அத்த கீர்த்தி கன்சீவா இருக்கா… இப்போதான் நாள் கணக்கு போல, என்கிட்டே தான் சொன்னாள் இன்னும் யார்கிட்டயும் சொல்லல” என்றாள் முகமெல்லாம் விகாசிக்க….
இவர்கள் இருவர் மட்டும் அங்கு ஹாலில் இருக்க, அவரும் “சந்தோஷம்டா“ என்றவர் கூடவே “நீ எப்போ நல்ல சேதி சொல்ல போற” என்றார்… கன்யா திருதிருவென விழித்தாள். கண்கள் கனவை சுமக்க தொடங்கியது… ஆமாமில்ல… நானும் அம்மா ஆகணுமே… என பொறுப்பு மின்னியது அவளின் கண்ணில்.
சதா, இரவு வரவும் அதற்காகவே காத்திருந்தவள் போல… “டாக்டர் சிவா… நமக்கு எப்போ குழந்தை வரும்” என்றாள்.
சதாக்கு சிரிப்புதான் வந்தது… கூடவே யோசனை “நான் என்ன ஜோசியகாரனா… டாக்டர் ம்மா” என்றான் சிரித்தபடியே சொல்லியவன் குளிக்க சென்றான்.
அவன் வரும் வழி பார்த்திருந்தவள் மீண்டும் முகத்தை சீரியஸ்சாக வைத்துக் கொண்டு “எப்போ…” என தொடங்க…
சதா, கைகாட்டி நிறுத்தியவன்… அருகில் வந்து அமர்ந்து கொண்டான்… அவளின் கைகளை தனது கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன்… “என்ன விஷயம் சொல்லு… முதலில்” என்றான்.
கன்யா “கீர்த்தி கன்சீவா இருக்கா… ரொம்ப நாள் கழிச்சி வீட்டில் குழந்தை சத்தம் கேட்க்க போகுதில்ல… அதான் நமக்கும் எப்போன்னு…” என்றாள் இழுத்து இழுத்து…
சதா “நல்ல நியூஸ்…” என்றான்.
கூடவே “அதெல்லாம் தானே நடக்கும்…. ம்… நிறைய கடலை பர்பி சாப்பிடு… சுண்டல்.. இதெல்லாம் எடுத்துக்க… இப்போதிலிருந்து” என்றான்.
கன்யா “‘நான் என்ன கேட்டேன்… நீங்க என்ன சொல்றீங்க…” என்றாள். சதா அவளின் தலையில் வலிக்காமல் முட்டி விட்டு
தொடர்ந்தான் “விடு… வீடு எப்போ போய் பார்க்கலாம்” என்றான் பேச்சை மாற்றும் விதமாக.
கன்யா “நீங்கதான் சொல்லணும்” என்றாள்.
“நாளைக்கு எனக்கு ஆப்… உனக்கு ஆபிஸ் லீவ் போட முடியும்னா… பார்க்கலாம்” என்றான்.
கன்யா, என்ன செய்வது என தெரியாமல் நின்றாள்… அவனுடன் நேரம் செலவழிப்பது என்பது இன்னமும் குதிரை கொம்பாகவே இருந்தது அவளிற்கு.
அவனிற்கு ஏதோ ஒருநாள்தான் இப்படி எமர்ஜன்சி இல்லாமல் இருப்பான்.. மற்ற நாளானால் கால்ஸ் இருக்கும்… எனவே அவனின் நேரத்தை பொறுத்தே எல்லாம்… நேரங்கட்ட நேரத்தில் விழிப்பு… முகம் பார்த்து பேச முடியவில்லை… அவனிற்கு இதெல்லாம் தெரியவில்லையா… இல்லை நான்தான் ஓவரா அவனை எதிபார்க்கிறேனா என புரியவில்லை கன்யாவிற்கு…
சதா “என்னாச்சு… டா” என்றான் வாஞ்சையாய் கன்யாவிற்கு திக்கியது ஒன்றுமில்லை எனும் விதமாக தலையசைத்தாள்..
சதா “சட்டர்டே எனக்கு… நைட் ஆப்ரேஷன் இருக்கு… சண்டே கண்டிப்பா வீடு வர லேட் ஆகும்…
ஒன்னு பண்ணு, நீயே பார்த்து விடுடா… நான் உனக்கு சர்ப்ரைஸ் தந்தது மாதிரி நீ எனக்கு… வீட்ட ஆரேஞ் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணு” என்றான்.
கன்யா “எது… இந்த வீடு வாங்கி குடுத்ததா… ப்பா, சொல்லவேயில்ல, சர்ப்ரைஸ்ன்னு… அப்போவே… சொல்லியிருந்தா, ஆ…ன்னு வாயில் கை வைத்து கத்தியாவது இருப்பேனே…” என்றாள் கடுப்பில்…
அவளே தொடர்ந்து “நீங்க வந்தீங்களா… நீங்க வந்து சொன்னீங்களா… என்கிட்டே… வீடு வாங்கறேன்னு, வரவும் இல்ல… சொல்லவும் இல்லை, எல்லாம் நானேதானே கேட்டேன்..“ என திரும்பவும் முதலில் இருந்து சிணுங்க தொடங்க…
சதா, ஐந்து வருட கணவனாக “போடி… எனக்கு வேலையிருக்கு… நான் கால்ஸ் போறேன்” என தப்பிக்க போனான்.
கன்யா, அதற்கும் “ஒரு சண்டை கூட போடா முடியலை உங்களோட…” என்றாள், தன்னருகிலிருந்து எழும் அவனை முறைத்தபடி.
சதா அவளை அலட்டாமல் பார்த்து… “இன்னும் கொஞ்ச நாள்தான்… கன்சீவாகிட்டா… வேலையை விட்டுடனும்…” என்றான் மெல்லிய குரலில்.. கன்யாவின் முகம் சுருங்கும், சங்கடபடுவாள்… என சதா நினைக்க…
கன்யாவின் முகம் மலர்ந்தது…. யார் சொல்லுவார்கள் நாம் இதை செய்யலாம் என காத்திருந்தவள் போல கட்டிலில் அமர்ந்தபடியே… “நான் பேப்பர் போட்டுடவா” என்றாள் அவனை மையலாக பார்த்தபடி…
சதாக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை… இது இவ்வளவு எளிதா… போர்க்கொடி தூக்குவாள்… குறைந்த பட்சம் என்னிடம் இரண்டு நாட்கள் சண்டை போடுவாள் என எண்ணியிருந்தான்.
ஆனால் அவளின் பார்வை சொன்ன செய்தி ‘எல்லாம் நீ பார்த்துகொள்’ என்ற பார்வை. முழுதாக என்னிடம் கலந்த பார்வை… அத்தனை நேசம் அவளின் விழியில்.
ஐந்து வருடம் திரும்பியே பாராமல் இவளையா விட்டு சென்றேன்.. என்னை மட்டுமே சுவாசிப்பாள் போலவே… இந்த அன்புக்கு நான் எப்படி ஈடு செய்வேன்… என சதாதான் இப்போது கரைந்து கேரமெல்லாக நின்றான்.
அவளிற்கே வேலை பிடிக்கவில்லையோ… என எண்ணம் வர, அவளை பார்க்க… அவளும், கட்டிலில் இன்னும் அவனையே பார்த்தபடி… இரவு ஒரு மணிக்கும் சட்டமாக சம்மணம் இட்டு அமர்ந்திருந்த அவளை பார்க்க பார்க்க… காட்டானாக மாறினானோ மனதுள் ‘வேலையே வேண்டாம் உனக்கு… என்ன வேணும் சொல்… நானிருக்கிறேன்…’ என வசனமெல்லாம் வந்தது சதாக்கு மனதில்தான்.
ஆனால், குரலில் அதே மெல்லினம்மாக “என்ன டா..” என்றான் அவளின் பார்வையை தாங்க முடியாதவனாக. அந்த வார்த்தை அவளை ஏதோ செய்ய கன்யா எழுந்து சென்றாள். இவன பார்த்தேன்… எனக்கு வெட்கமே வராது… வேலைய பாருடி என தனக்குதானே சொல்லிக் கொண்டாள்.
சதா, தெளிந்து “இரு.. கால்ஸ் இப்போ இல்லன்னு டைம் சொல்லிட்டு வரேன்” என்றான்.
கன்யா துணிகளை மடித்தபடியே சரி என்றாள்..
சதா அடுத்த பத்து நிமிடத்தில் வந்தவன் “தேங்க்ஸ் டா… கனிம்மா” என்றபடியே அவளை அருகில் இழுத்து அனைத்துக் கொண்டான். பேசவேண்டும் எனதான் நினைத்தான்…
எங்கே… நேரமே அவனுக்கு இல்லை, இதில் பேசியே நேரத்தை வீணாக்கவில்லை சதா… நீண்ட இரவு இருவருக்கும்… வார்த்தைகள் தேவையில்லை அவனின் நேசம் சொல்ல…
அவளிற்கும் அது தேவையாக இருக்கவில்லை போல… சில நேரம் அவனை கேள்வியால் படுத்தும் “என் நினைவே வராத” என்ற கேள்வி இன்று வரவில்லை அவளிடமிருந்து. அவனுள் கலந்தாள்.
இரண்டுநாள் சென்று எல்லோரிடமும் சொன்னாள் “வேலையை விடபோகிறேன்” என சண்முகம், மானமார் மாமியார் எல்லோருக்கும் சற்று சங்கடமே… “ஏன் ம்மா..” என்றனர்.
சதா, மீதே எல்லா பழியையும் போட்டால்… “அவர்தான் சொன்னார் த்த” என்றாள். அவன் சொன்னதேன்னமோ உண்மைதான். ஆனால் மொத்தமும் அவனை கார்னர் செய்யவும், இதனை கேட்ட படியே இறங்கி வந்த சதா, மனதிற்குள் “ம்… சொல்லிக்க சொல்லிக்க… இன்னும் என்ன வேண்ணா சொல்லிக்க “ என்ற ரகசிய சிரிப்புடன் அமர்ந்தான்.
கனி, அவனை பார்த்து தெனற தொடங்க… சதா “ விடம்மா… நான் தான் சொன்னேன்… ரொம்ப டயர்டா தெரியுறா, அதான்” என சொல்ல…
சண்முகம் “அப்படி ண்ணா… ஒகே அண்ணி, நீங்க வீட்டை மட்டும் பாருங்க… அதான் கரெக்ட்” என்றான்.
இதில் வருத்தம் என்பது கார்த்திக்கு மட்டுமே… ஆனாலும் அவளின் விருப்பத்திற்கு தடை சொல்லவில்லை… சற்று புலம்பினான்.. கீர்த்தியிடம் “என்ன இருந்தாலும் வேலை கையில் இருந்தால் சற்று தெம்புதான்… எவ்வளவு கஷ்ட்டப்பட்டு படிச்சு வேலையை வாங்கினாள், இப்போ சட்டுன்னு தூக்கி எரியற மாதிரி இருக்கு… “ என சொல்ல…
கீர்த்தி என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள்..
மைதிலிக்கு சந்தோஷமே… பொறுப்பாய் குடும்பம் செய்தால் சரிதான் வேலைக்கு போய் என்ன ஆகபோகுது என்றுவிட்டார்.
எனவே கன்யா பேப்பர் போட்டாகி விட்டது. இந்த ஒருமாதம் வேலைக்கு சென்றாள் போதும் என்ற நிலை, யெஸ்வந்தான் “என்ன கன்யா… அதுக்குள்ள.. போறேன்னு சொல்ற.. ச்ச… எனக்கு யாரு லஞ்ச் கொடுப்பா” என்றான்.
கன்யா “உனக்கு உன் கவலை…என்னை பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா..“ என்றாள். அவனிடம் தனது லஞ்ச் பாக்கை கொடுத்தபடி, அதன்பிறகு சத்தமே இல்லை யெஸ்வந்திடம்… கைக்கும் வாய்க்கும் சண்டை மட்டுமே.
நாட்கள் நகர… சதாவும் கன்யாவும் குடும்பத்தினருடன் இன்றுதான் வீட்டை பார்த்து வந்தனர்.
சொல்லபோனால் கடலின் அருகில், இரவு நேரத்தில் நன்றாக சத்தம் கேட்கும் போல, அப்படி ஒரு ரம்யமான பகுதியில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் எல்லா பாதுகாப்பு அம்சங்களுடனும் இருந்தது வீடு… சற்று பெரிய்ய வீடு… பங்களோ… ஆம், அப்படிதான் தெரிந்தது குடும்பத்தினருக்கு…
அப்பர் மிடில் கிளாஸ்தான் இப்போது வரை, இன்று முற்றிலும் வேறாய்… எதிர்பார்க்கவில்லை இவர்கள்… பிரம்மாண்டமான வீட்டை, விழி விரித்து பார்த்துதான் இருந்தனர். கல்வி எல்லாம் தரும்… அப்படிதான் சதாவின் படிப்பு போல…
வெங்கட்க்கு, பெருமை பிடிபடவில்லை… தன் மனைவியிடம் “பாத்தியா… பையன.. “ என சொல்ல சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
தன்னால் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாததை, தன் மகன் இந்த ஐந்து வருடத்தில் கொடுத்ததும், தன் ஆயுள் நிறைந்ததாக உணர்ந்தார்… ஜென்ம பயன் வந்தே வந்தது என எண்ணினார் போலும்… இருவர்க்குள்ளும் அமைதி மட்டுமே… சந்தோஷத்தின் அமைதி.. அத்துடனேயே அந்த வீட்டை வளம் வந்தனர்.
சதா, கன்யா, ஷண்முகம் என மூவர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்… அதிலும் சதா, தன் மனைவியும் தம்பியும் சொல்லுவதை தலையசைத்து ஆமோதிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தான். அவனிற்கு செலவு செய்ய தெரியவில்லை… அதனை காக்க மட்டுமே தெரிந்தது போல.
எங்கு எங்கு, என்ன என்ன பார்னிச்சர்… என்ன கலர் ஸ்க்ரீன்… என்ன வால் ஹாங்கிங்… என சகலமும் கன்யாவின் விருப்படியே அமைத்தது, ம்.. அதை அமைத்து தந்தான் சதா.
வீட்டிற்கு வந்ததும் வெங்கட்டுக்கும் கல்யாணிக்கு அந்த வீட்டை பற்றியே பேச்சு சென்றது. சதா “என்னப்பா வீடு ஓகேவா” என்றான்.
வெங்கட் “ரொம்ப நல்லா இருக்குப்பா… புது விதமா… எல்லா வசதியும் உள்ளேவே இருக்குள்ள.. அந்த முன்னாடி இருக்குற இடத்தில் ஒரு வேப்பமர வைக்கனுப்பா… அந்த காத்து உடம்புக்கு நல்லது…” என்றார் தன் கருத்தாய்.
கல்யாணி “பூஜை ரூம் அவ்வளவு பெருசா இருக்கு சதா… நல்லா நாலு விளக்கு வாங்கி தினமும் ஏற்றணும்” என்றார் தன் பங்குக்கு. வீடு என்பதற்கு.. நம் வாழ்வில் பாதி பங்கு உண்டு போல.. சிலருக்கு கனவாய், சிலருக்கு வரமாய், சிலருக்கு எட்டா கனியாய்… சிலருக்கு கோவிலாய், என பல பிம்பம்.
கன்யா, உணவை எடுத்து வைத்தபடியே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். பேசி பேசி இன்னும் சலிக்கவில்லை அவர்களுக்கு, அதிலும் அன்னை தந்தை இருவரும் தன் பெரிய மகனின் பெருமையை பேசிக் கொண்டே இருந்தனர்.
ஷண்முகம் பாவமாக தன் அம்மா மடியில் தலை வைத்து படுத்து, கேட்டுக் கொண்டிருந்தான். கன்யாவிற்கே தன் கணவன் பெருமை போரடிக்க “அத்த, அந்த பொண்ணு வீட்டுகாரங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க அவர் கிட்ட “ என பேச்சை மாற்றினால்.
கல்யாணி “ஆமாம் சதா… நம்ம சண்முகத்துக்கு வரன் வந்தது… நல்ல இடம் தான், ரெண்டு வீட்டிலும் ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு… நம்ம பதிலுக்காக காத்திருக்காங்க… நான்தான் உன் கிட்ட பேசிட்டு சொல்லலாம்னு நினைச்சேன் மறந்தே போயிட்டேன், சொல்லு” என்றார்.
சதாவின், பார்வை இயல்பாய் தன் எதிரில் அமர்ந்திருந்த மனைவி மீது விழ… ஒரு நொடி அங்கு அமைதி. கன்யா ‘என்னதிது பெரியவங்க கேட்க்கும் போது என்னை பார்ப்பது’ என நினைக்க…
இப்போது துடுக்கு சண்முகம் “அம்மா… இத போயி நீ அவன்ட்ட கேட்டீனா, அண்ணிய கேளு… அவனுக்கு தல வலி, கால் வலிக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியும்…. நீ வேற ஏன் ம்மா…
அத்தோட அவன கேட்டு, எனக்கு கல்யாணம் பண்ணும்னு நினைச்ச, இன்னும் நான் ரொம்ப நாள் இப்படியே இருக்க வேண்டி இருக்கும் பார்த்துக்க….” என்றான் சலித்த குரலில்.
கன்யா “த்த… பாருங்க எவ்வளோ பெரிய டாக்டர, என்ன சொல்றாரு அத்த… “ என கம்ப்ளைன்ட் சொல்ல.
ஷண்முகம், எழுந்து தன் அண்ணன் முகத்தை பார்க்க… சதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்ன மறைத்தும் கண்கள் சிரிக்கவே செய்தது சம்முவை பார்க்காமல், தன் மனையாளை பார்த்து.
சண்முகம் “சர்தான்… “ என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டான்.
அன்று இரவு வெகு நேரமானது அவர்கள் எல்லோரும் படுக்க செல்ல…
நாட்கள் வாரங்களாக… வீட்டை மொத்தமாக மாற்றும் வேலைகள் நடக்க தொடங்கியது. அந்த பழைய வீட்டை புதிபித்து… வாடகைக்கு விடலாம் என பேச்சு சென்றது.
அழகாக தம்பதி சமேதராய் சதாவும் கன்யாவும் அமர்ந்து…. க்ரஹப்ரவேசம் செய்தனர். சற்று எளிமையாகவே சதா போதும் என்றுவிட்டான்.
இருவீட்டு உறவுகள் மட்டுமே வந்திருந்தனர்… சின்ன முத்து ஜிமிக்கிகள் மின்ன… மாம்பழ கலர் பட்டுடுத்தி… தன் அன்பன், அருகில் அமர்ந்திருந்தாள்.. கன்யா. முன்பு விட்டு போன எல்லா கனவையும் கண் முன் காண்பவள் போல் அமர்ந்திருந்தால் கன்யா…
அவனின் அருகில் இருந்த உணர்வே இல்லாமல்தானே, தாலிக்கட்டிக் கொண்டாள். இன்று… அந்த ஹோமம்.. அதன் பிறகு பூஜை, இப்படி எல்லாவற்றிலும்… தன் கணவனின் அருகாமையை உணர்ந்து… கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்து எல்லாம் செய்தாள்.
இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் வாராமலே போய்விடுமா… என்று எண்ணி இருந்த நிலைமாறி… இப்போது.. ஒவ்வன்றாக நடக்க, அதனை ஒரு இனுக்கு கூட விடாமல் உள்வாங்கிக் கொண்டாள் கனிசிவா.
வீடு அந்த குடும்பத்திற்கு பாந்தமாய் பொருந்தியது. தோட்டத்தை தானே பார்த்து பார்த்து செதுக்கினார் வெங்கட். இப்படி ஓவ்வருவரும் ஒவ்வரு பொறுப்பு… எனவே அந்த மாளிகை ஒளிரதானே செய்யும்.