கனி எழும் சத்தம் கேட்க்கிறது. ஆனாலும் கண்திறக்க முடியவில்லை சதாவால், இன்று அவனிற்கு லீவ்… நேற்று இரவு கண்விழித்தது… அதற்கு முதல் நாள் கண் விழித்தது என எல்லாம் சேர…
சதா, விழிக்க நினைத்தாலும் கண்கள் சண்டித்தனம் செய்ய… அப்படியும் “கனி… இன்னும் கொஞ்ச நேரம் தூ..ங்குடா..” என வாய் தன் போல் சொல்லியது…
கனி, அப்போதே வாஷ்ரூம் சென்றிருந்தாள். சதாவும் உறங்கிவிட்டான். கனி, குளித்து முடித்து கீழே சென்று தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள்…
ஆனால், மனம் முழுவதும் ஒரு சின்ன சந்தோஷம் ‘எப்படி மேலே… போனேன்… தூக்கி போனாரா… இருக்காதே… கண்டுக்கவே மாட்டாரே..’ என எண்ணிக் கொண்டிருந்தாலும்,
ஒருமனம் ‘தூக்கிட்டுத்தான் போயிருப்பான்’ என சத்தியம் செய்ய, அதன் தாக்கமாக மெல்லிய புன்னகை அவள் முகத்தில் அமர்ந்து கொண்டது.
சமையலுக்கும் ஆள் போட்டிருந்தனர் இந்த ஒரு வாரத்திற்கு… வீட்டில், மேல் வேலைக்கு ஏற்கனவே ஆள் இருப்பதால்… அவர்களுடன் பேசிய படி என்ன செய்வது என்று சொல்லியபடி நேரம் ஓடியது கனிக்கு.
ஊரிலிருந்து பஸ்ஸில் வந்திருந்தவர்கள்… டிபன் முடித்து கிளம்பினர். ஷண்முகம், அங்கிருந்தே, நேரே மறுவிருந்துக்கு தன் மாமியார் வீடு செல்வதால்… இங்கிருந்து வெங்கட்டின் அக்கா, மாமா மட்டும் கிளம்பினர் அவர்களை அழைத்து செல்ல…
எனவே காலை பத்து மணி வரை நிற்க நேரமில்லாமல் வேலை கனிக்கு… இப்போதுதான் எல்லோரையும் வழியனுப்பி வைத்து சற்று அமர்ந்தாள்… ஹால் சோபாவில்…
கல்யாணி அக்கறையாக மருமகளுக்கு… தன் கையால் காபி கொடுத்தார்… அவளையே வாஞ்சாய் பார்த்தபடி… கனி “தேங்க்ஸ் அத்த…” என்றாள்.
கல்யாணி “எங்க சதா, இன்னும் எழவேயில்ல…. எப்போ வந்தான் ராத்திரி” என கேள்வி கேட்க… கனிக்கு எதுவும் தெரியாததால்… “தெரியாது த்த… “ என்றாள் பாவமாக.
அவரும் சிரித்தபடியே “சரி சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஆற அமர உட்காரு ஓடிட்டே இருக்க..” என சொல்லிக் கொண்டிருக்க… கன்யா எழுந்து அங்கிருந்த பாத்ரூம் நோக்கி ஓடினாள்.
கல்யாணி பின்னாலேயே “யசோ… யசோ..” என தன் மகளை உதவிக்கு அழைத்தபடியே மொதுவாக சென்றார்…
கிட்செனில் இருந்து யசோ, அவசரமாக வர… கல்யாணி “கனி… ஏதோ ஓடரா பாரு..” என சொல்ல…
கனி, முகம் கழுவி வெளியே வரவும் சரியாக இருந்தது, வந்தவள் இருவரின் முகத்தை பார்த்தே… “ஒண்ணுமில்ல… ஏதோ ஒத்துக்கல போல…” என சொல்லி திரும்பவும் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
யாருக்கும் கல்யாண பரபரப்பில் இவளின் நிலை புரியவில்லை… எனவே கல்யாணி உடனடியாக உள்ளே போய், உப்பு எடுத்து வந்து சுற்றி போட்டார் தன் மருமகளுக்கு…
யசோ ஒரு லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க… வாங்கி பருகியவளுக்கு இப்போதான் பரவாயில்ல போல் இருந்தது.
பின்புதான் நிமிர்ந்து பார்த்தாள்… எல்லோரும் அங்குதான் இருந்தனர்.. அதன்பின் கல்யாணி “போ கனி ரெண்டு இட்லி சாப்பிட்டு… சதா, கிட்ட சொல்லி மாத்திரை வாங்கி போட்டு தூங்கு…. மதியம் சாப்பிட வந்தா, போதும் நீ” என அமரவிடாமல் விரட்டினார்.
யசோவும் “கிளம்பு கனி… போ … சாப்பிடு” என சொல்ல… வேறு வழியே இல்லாமல் இரண்டு இட்லி உண்டு மேலே சென்றாள்.
சதா, அங்கு இல்லை… பாத்ரூமில் இருக்க… கனி போயி பெட்டில் படுத்ததுதான் தெரியும் மயக்கமா… உறக்கமா என புரியாமல் கண்கள் முடிக் கொண்டது.
சதா, வந்து பார்க்க… கனி உறக்கத்தில் இருந்தாள்… ஏன்.. இப்போ படுத்திருக்கா… என எண்ணி அவளின் நெற்றியில் தொட்டு பார்த்தான்… ஜில்லென இருக்க… நிம்மதியானான்.
தான் கிளம்பி கீழே சென்றான்… அமர்ந்தவாறே “என்ன மா… கனி சாப்பிட்டாளா” என்க.
அப்போ இவன் பார்க்கவில்லையா அவளை என நினைத்தனர் எல்லோரும். கல்யாணி தன் மருமகள் நிலை பற்றி சொல்லி.. “ஏதாவது மாத்திரை இருந்தா கொடுப்பா” என்றார்.
சதாக்கு ஐயோ வென்றானது… “அம்மா… அவ கன்சீவா இருக்கா..” என்றான் படாரென… சொன்ன பிறகுதான், தான் சொன்ன செய்தி புரிந்து சதாக்கே வெட்கம் வர… அந்த ஒரு நொடி அமைதிதான் அங்கு..
கல்யாணிக்கும்.. வெங்கட்டிற்கும் இது வெளிபடுத்த தெரியாத சந்தோஷம்… கல்யாணி சுதாரித்து, நேரே உள்ளே சென்று பிடி சர்க்கரை எடுத்து வந்து தன் மகனின் வாயில் போட்டார்., அமைதியாக வாங்கிக் கொண்டான் சதா.. .மற்ற நேரமாக இருந்தால்… என்ன பேசுவானோ தெரியாது… அவனிற்கும் இந்த ஆர்பாட்டம் தேவையாக இருந்தது போல… ரசனையுடன் நின்றான்.
எங்கோ நின்ற தன் மகனின் வாழ்வை கடவுள் நேர் செய்தத்தாக தான், தோன்றியது அவர்களுக்கு, அந்த மூத்த தம்பதிக்கு.
மீண்டும் உள்ளே சென்ற கல்யாணி, சர்க்கரை டப்பாவுடன் வெளியே வந்தார்… தன் கணவரிலிருந்து அங்கிருந்த தன் மகள் வயிற்று பேரன் வரை எல்லோருக்கும் சர்க்கரையை கொடுத்தார், கண்ணில் நீர் வழிந்தபடியே இருந்தது அவர்க்கு.
கல்யாணி “என்கிட்டே சொல்லவேயில்ல பாரு கனி” என பெருமையாக தன் மருமகளை கோவித்தார் கல்யாணி.
சதா, மெல்லிய குரலில் “அவளுக்கு இன்னும் தெரியாது ம்மா…” என்றான் அவசரமாக.
யசோதா “ஐயோ… சதா ஏன் சொல்லல..” என குதுகலமாக கேட்டாள்.
சதா “எங்க… நேத்து ஏதோ தோன… அவ தூங்கும் போது… நாடி புடிச்சு பார்த்தேன் அவ்வளவுதான்… இனிதான் செக் பண்ணனும் சொல்லணும்” என்றான் பொறுமையான குரலில்.
பிரகாஷ்தான் “கன்க்ராட்ஸ் டா மச்சான்” என தோளனைத்து வாழ்த்து சொல்ல… அங்கு சற்று சூழல் மீண்டது.
அதன்பின் பேசியே சதாவை ஒருவழியாக்கினர் எல்லோரும்… ஆனால் சதா எதற்கும் வாயே திறக்காமல் அமைதியாக சிரித்தபடியே இருந்தான்.
இன்று சதாக்கு லீவ் என்பதால் இன்றே செக்கப் செய்துவிடலாமா என்றான் தன் அன்னையிடம். கல்யாணியும் சம்மதம் சொல்ல… அன்றே தன்னுடன் வேலை செய்யும் இடத்தில், தனக்கு தெரிந்த மருத்துவரிடம் அவளிற்கு அப்பாயின்மென்ட் வாங்கினான்.
கல்யாணி கனியின் வீட்டிற்கு அழைத்து சொல்லியாகிவிட்டது. இங்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார் கல்யாணி… வீடே அந்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு விழாவிற்கு தயாராக தொடங்கியது.
சதாக்கு, மனதெல்லாம் தன் மனைவியிடமே, மேலே சென்று கனியை பார்க்கவேண்டும் போல்தான் இருந்தது அவனிற்கு. ஆனாலும் நகராமல் அமர்ந்திருந்தான்..
சற்று நேரத்திற்கு மேல், முடியவில்லை அவனால்… “அம்மா, ரொம்ப நேரமாச்சு… நான் போயி அவள, பார்க்குறேன்… ஏதாவது குடிக்க கொடும்மா” என்றான்.
தன் மாமாவை பார்த்து “ நீங்க சாப்பிடுங்க… மாமா.. நான் வரேன்“ என்றவன் மேலே ஏறினான்.
கனி, அப்போதுதான் விழிப்பு வர சற்று நெளிந்தபடியே படுத்துக் கொண்டிருந்தாள்.
சதா, உள்ளே வர… கனி எழுந்து அமர்ந்தாள்.. சதா “என்ன பண்ணுது… எதுவும் சொல்றதில்ல..” என்றான் கண்டிப்பான குரலில்.
நேற்றிலிருந்து அவன் மேல் உள்ள சின்ன கோவத்தை நினைவு படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள்.,
கையிலிருந்த பழரசத்தை அவளிடம் கொடுத்தான்… பேசாமல் வாங்கிக் கொண்டாள்.. அவனை மேல் பார்வை பார்த்தபடியே கட கடவென குடித்து, முடித்து கப்பை அவனிடம் கொடுக்க… வாங்கி வைத்தவன்.
அவளின் அருகில் வந்து அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.. கனி வேண்டுமென்றே அவனை பார்க்காமல் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.
சதா “கனி… பேசு டி… நேத்திலிருந்து கண்டுக்கவே மாட்டேங்கிற” என அவன் புகார் சொல்ல.. சிரிப்புடன் கர்வம் வந்தது கனிக்கு…
தொடர்ந்து “எல்லாம் உனக்கு புரியும்.. தெரியும், ஆனாலும்… ஏன் இப்படி படுத்தற… உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன்… அப்புறம் என்ன” என்றான் படபடவென…
இப்போதுதான் அவன் முகம் பார்த்தாள்… அவளின் கைகளை எடுத்து தன் தலையில் வைத்தபடியே… “சொல்லு… சாரி சொல்லனுமா…” என்றான் இன்னும் தெளியாத குரலில்.
கனியின் கைகள் அவனின் தலை கோத… கண் முடிக் கொண்டான் சதா… ஏதோ அமைதி தந்தது அந்த விரல்கள், அவனின் தல கோதி.. அதை அனுபவித்தான்.
கனிக்கு தன் நிலைமை தெரியவே இல்லை, அதை அவள் நினைக்கவும் இல்லை… அமைதியாகவே இருந்தாள்… சதாவே “என்ன டி…” என்றான் ஏக்கமாக.
கனி “வேலையில்லையா… போங்க… உங்க ஆபீஸ் ரூம்முக்கு” என்றாள் அவனை தன்னிடமிருந்து எழுப்பியபடியே…
சதா “இன்னிக்கு நீதான்… நீ மட்டும்தான்…” என்றான் ரசனையாக…
கனிக்கு, அந்த வார்த்தையில் முகம் சிவக்க… திரும்பிக் கொண்டாள் அவனிடம் காட்டாமல்… சதா “எங்க என்ன பாரு..” என வம்பு செய்ய… கனிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை… சிரித்தேவிட்டாள்.
சதா, அமைதியாக “என்ன டா… பேசேன்…” என்றான் என்ன குரலது கனிவும், குழைவுமாய்… கரகரப்பாய்… கணவனின் யாசிப்பில், குரல் கூட மின்னியது இனி பஞ்சாயித்துதான் என நினைத்த கனி..
எல்லா கோவத்தையும் இழுத்து வைத்து “ அங்க மண்டபத்துல… நீங்க இல்லவே இல்ல… உங்க தம்பிக்குதானே கல்யாணம், கேட்கறவங்களுக்கு பதிலே சொல்ல முடியல… பாவம் மாமா…
ஒரு போட்டோல கூட நீங்க இல்ல தெரியுமா…
நிச்சியத்துல, நான் என்ன கலர் புடவை கட்டியிருந்தேன் தெரியமா உங்களுக்கு” என்றாள்
சதாக்கு, சிரிப்போ சிரிப்பு அவளின் பேச்சை கேட்டு… ஆனால், அவளின் முகம் அவ்வளவு கோவமாக இருக்க… சதா, சிரிப்பை அடக்கியபடியே… அமைதியாக “அன்னிக்கு… ரொம்ப எமர்ஜன்சி டா… சொன்னா நீ அழுவ” என தொடங்க…
கனி “நிறுத்துங்க… ப்ளீஸ் வேண்டாம்…. “ என்றாள்.
சதா, இப்போது எழுந்து அமர்ந்து கொண்டு… அவளின் கை விரல்களுடன் தன் விரல்களுடன் பிணைத்துக் கொண்டே “கனி… இது ஒரு வரம் டா… சட்டுன்னு எல்லோருக்கும் கிடைக்காது…
அத்தோட… நீ, எனக்கு இன்னமொரு வரம்….
நீ இருக்கறதாலதான் நான் நிம்மதியா என் வேலைய பார்க்கறேன்… அதான் உண்மை…
உன்கிட்ட பேச முடியல… உன் கூட போட்டோ எடுக்க முடியல… வெளிய வர முடியல, ஒண்ணா உட்கார்ந்து டிவி பார்க்க முடியல… இதெல்லாம் இருக்கும்தான்… ஆனா.. அதெல்லாம் விட… அதை புரிஞ்சிகிட்டு, அமைதியா இருக்க பத்தியா… லவ் யூ மை பெப்பி… அங்கதான் அம் புல் சரண்டர்… பெப்பி… தேங்க்ஸ் டா… நோ நோ… சொல்ல மாட்டேன்” என அவளை தோள் சாய்த்துக் கொண்டான்.
கனி அமைதியாக அமர்ந்து கொண்டாள்… ஆம், இவன் இப்படிதான் என புரிகிறதுதான்… ஆனால் என்ன செய்ய மனைவியாய் மனம் அவனின் அருகாமையை தவிர வேறு எதையும் கேட்பதேயில்லை.
சதா, கனியின் புடவை விளக்கி, அவளின் இடையில் கை பதித்தவாறே… “கனி… “ என அழைக்கக்…
கனி ”ம்…” என்றாள் எதையோ யோசித்தபடியே…
சதா “ஏதாவது பீல் பண்றீயா பெப்பி “ என்றான்.
கனிக்கு, அவனின் வார்த்தையும், தவிப்பும், உள்ளங்கை சூடும்… வயிற்றில் தெரிய… ஏதோ உணர்ந்தாள். கண்கள் கரித்தது… புரியவும் செய்தது… தான் உணர்வது உண்மையா… “எ… என்ன…” என்றாள் வார்த்தைகள் திக்க…
சதா “யெஸ்… பேபி வர போகுது…” என்றான், அப்படியே அவளின் உச்சியில் இதழ் பதித்து… மென்மையாய் நெற்றி வருட… கனி அவனிடம் ஒன்றினாள்.