உனது காதலில் விழுந்தேன்
அத்தியாயம் 3:
தேவி குளித்துவிட்டு சமையலறை வரும்போது அடுப்பில் ஒரு பக்கம் இட்லி ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டு இருந்தது. அடுப்படியில் ஒரு ஓரத்தில் வடைக்கு உளுந்து ஊற வைக்கப்பட்டு இருந்தது., இவற்றைப் பார்த்த தேவி, தனது கணவனை பார்த்து ஏங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லாம் செஞ்சீங்க? என்று கேட்டார்.
பதிலுக்கு அவரை முறைத்துப் பார்த்த கணவரோ, ஏய் மணிய கொஞ்சம் பாருடி. நீ குளிக்க போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகப்போகுது அதுக்குள்ள இதைக்கூட செய்ய முடியாதா என்று கேட்டார்.
ஏண்டி இன்னைக்கு உன் பையன் கல்யாணம் இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் குளிச்சி கெளம்பி வரக்கூடாதா, இன்னைக்கும் வழக்கம்போல ஒரு மணி நேரம் தான் குளிப்பாய? இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா, மொத்த சமையலையும் நானே முடித்து இருப்பேன் இல்ல என்றார்.
சரி சரி விடுங்க விடுங்க இதெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன என்றார் தேவி அலட்டாமல். இனி மீதி சமையல நான் பாத்துக்குறேன், நீங்க போய் குளிச்சு முதலில் ரெடியாகுங்க என்று தன் கணவரை விரட்டினார் தேவி.
அண்ணாமலை குளித்து தயாராகி வருவதற்குள் மீதமிருந்த சமையல் வேலையை முடித்திருந்தார் தேவி. மணி தற்போது ஆறு தான் ஆகியது. பிரபு இன்னமும் தயாராகி தனது அறையிலிருந்து வரவில்லை. எனவே கணவனும் மனைவியும் வீட்டு ஹாலில் சிறிது ஓய்வாக அமர்ந்திருந்தனர். தனது மனைவியை அப்போதுதான் நன்கு உற்றுப் பார்த்தார் அண்ணாமலை. மெல்லிய பார்டர் வைத்த காட்டன் புடவையில் கழுத்தில் தாலி கொடியுடன் வெறும் ஒற்றை சங்கிலி மட்டுமே அணிந்திருந்தார்.அவரைப் பார்த்தால் தனது மகனின் திருமணத்திற்கு தயார் ஆனவர் போலவே இல்லை. எங்கோ வெளியில் செல்ல கிளம்பியது போன்ற தோற்றம் மட்டுமே.
[the_ad id=”6605″]
இதனைப் பார்த்த அண்ணாமலை ஏன்டி பட்டுப் புடவை தான் அயன் பண்ணல, அதனால கட்ட முடியல, கழுத்துல நகை ஆவது கூடக்கொஞ்சம் போடக்கூடாதா? என்னடி இது ஒத்த செயினை போட்டிருக்க என்று அங்கலாய்த்தார்.
ஏங்க நீங்க தானே இப்போ நகை விலை எல்லாம் ஏறிப்போச்சு, அதனால திருட்டு பயமும் அதிகமாயிடுச்சு சொல்லி எல்லா நகையும் பேங்க் லாக்கரில் வச்சீங்க. இப்போ வந்து இப்படிக் கேட்டா நான் எங்க இருந்து நகை போட என்று கேட்டு கணவனை முறைத்தார்.
என்ன ஏண்டி முறைக்கிற, நான் என்ன கனவா கண்டேன் இப்படி எல்லாம் நடக்கும்னு. என்னால முடிஞ்சா லாக்கரில் இருந்து நகையை கொண்டுவந்து தந்திருக்க மாட்டனா. இப்போ இருக்கிற சூழ்நிலையில என்னால ஏதும் பண்ண முடியல, நான் என்ன பண்ண முடியும் அதுக்கு என்று பாவமாக கேட்டார்.
அதான் சூழ்நிலை சரியில்லன்னு தெரியுது இல்ல, அப்போ என்ன பண்ணி இருக்கணும் கல்யாணத் தேதியை மாற்றி வைத்து இருக்கணும்ல என்று ஆதங்கப்பட்டார் தேவி. அவருக்கு தனது ஒரே மகன் திருமணம் இவ்வாறு ஒரு சூழ்நிலையில், சொந்த-பந்தங்கள் யாருமில்லாமல் நடப்பதில் துளியும் விருப்பமில்லை. அவருக்கு அவரது மகனது திருமணம் நீண்ட நாள் கனவு. அதில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக்கூட அவர் கற்பனை செய்து வைத்திருந்தார். மகனது திருமணத்தில் பட்டுப் புடவை கட்டி, நகைநட்டு அணிந்து பத்து பேர் பார்க்க மண்டபத்தை வலம்வந்து, வரும் உறவினர்களை வரவேற்று, அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்து, வந்திருந்தோர் அனைவரும் வாழ்த்த தனது மகன் திருமணம் நடைபெற வேண்டும் என்று கனவு கண்டார்.
ஆனால் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியமானது இல்லை என்று மூளைக்கு புரிகிறது. ஆனால் மனது, அது வேதனை படவே செய்கிறது. இந்த இக்கட்டான சூழலில் திருமணத்தை நடத்தி தான் ஆகவேண்டுமா, திருமண தேதியை சற்று தள்ளி வைக்க கூடாதா என்ற ஆதங்கம் அவருக்கு நிறையவே இருக்கிறது. ஆனாலும் அதை வாய்விட்டு கணவனிடம் கேட்கவில்லை.
ஏனெனில் கணவனின் மீது தேவிக்கு மிகுந்த நம்பிக்கை. அவர் எது செய்தாலும் அது குடும்பத்தின் நன்மைக்காகவே இருக்கும் என்று தெரியும். அதனால் அவர் தனது மனதில் இருக்கும் ஆதங்கத்தை தனது கணவனிடம் கூட கூறவில்லை. அண்ணாமலைக்கும் தேவியின் மனதில் இருக்கும் ஆதங்கம் தெரியும். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலை தற்போது. அவரது கருத்தில் இருப்பது எல்லாம் தனது மகன் திருமணம் எப்படியாவது இன்று எந்தவித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்பது மட்டுமே.
இருவருமே சிறிது நேரம் அவரவர் எண்ணங்களில் மூழ்கியிருந்தனர். முதலில் தன் நிலைக்கு வந்த அண்ணாமலை தன் மனைவியைப் பார்த்து, தேவி டைம் ஆகுது பாரு பிரபு இன்னும் வரல, நீ போய் சீக்கிரம் அவன ரெடியாகி வரச் சொல்லு. அங்க பொண்ணு வீட்டுக்காரங்க வந்து வெயிட் பண்ண போறாங்க. நாமதான் முதலில் போய் அவங்கள வரவேற்க செய்யணும்.அதனால சீக்கிரம் கிளம்புற வழிய பாருங்க அம்மாவும் பையனும்.
ஆமா அப்படியே கூட்டம்கூட்டமாக வரப்போறாங்க, நாம முன்னே போய் வரவேற்கலனா பெரிய பிரச்சனை ஆகப்போகுது பாருங்க. வரப் போறது மொத்தம் மூணு பேரு. பொண்ணும், பொண்ணு அப்பாவும், அம்மாவும் மட்டும்தான். அதுக்கு எதுக்கு சீக்கிரம் கிளம்பி கிட்டு, எல்லாம் கரெக்ட் டைமுக்கு போனா போதும் விடுங்க என்றார் தேவி.
இல்லம்மா அது மரியாதையாக இருக்காது. அவங்க வரும்போது நாம கண்டிப்பா அங்க இருக்கணும்.ஏற்கனவே அவங்க தன்னோட ஒரே பெண்ணோட கல்யாணம் இப்படி நடக்குதுன்னு வருத்தத்தில் இருப்பாங்க. அதனால நம்ம பக்கமிருந்து ஒரு சின்ன வருத்தத்தை கூட அவங்களுக்கு தரக்கூடாது என்றார் அண்ணாமலை.
இல்லங்க நான் நேத்து சம்மந்தி அம்மா கிட்ட பேசிட்டேன். முகூர்த்தம் ஏழரை மணியிலிருந்து 9 மணி வரை இருக்கறதால அவங்க கரெக்டா 7 மணிக்கு கிளம்பி கோவிலுக்கு வந்துவிடுவதாக சொன்னாங்க. அதனால நாமும் ஏழு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும். அவங்க வீட்டிலிருந்து கோவில் வர எப்படியும் கால் மணி நேரம் ஆகும். நமக்கு வெறும் அஞ்சு நிமிஷம் நடை தானே. அதனால அவங்க கோவிலுக்கு வருவதற்குள் நாம் முன்னாடியே போய்விடலாம் என்றார் தேவி.
இல்லம்மா ஏற்கனவே இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனை. நாம இந்த பிரச்சனையிலிருந்து மீண்டுவர அவங்கதான் நமக்கு உதவி இருக்காங்க. அவங்க செஞ்ச அந்த உதவியால தான் இன்னைக்கு நம்ம பையனோட கல்யாணமே நடக்கப்போகுது. அத நாம என்னைக்கும் மறக்கக்கூடாது தேவி. அதனாலதான் அவங்களுக்கு ஒரு சின்ன சங்கடம் கூட வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.
நீங்க சொல்றது எனக்கும் தெரியுங்க அதான் நான் உங்களை கூட கேட்காம சில முடிவுகளை எடுத்து நம்ம சம்மந்தி அம்மாகிட்ட சொல்லிட்டன் அதுக்காக நீங்க முதலில் என்னை மன்னிக்கணும்.
[the_ad id=”6605″]
என்னம்மா நீ மன்னிப்பு அது இதுன்னு கேட்கற, நீ என்ன பண்ணாலும் கண்டிப்பா அது சரியாத்தான் இருக்கும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்றார் அண்ணாமலை.
தனது முடிவின் மீதான கணவனின் நம்பிக்கையில் நிச்சயம் தேவிக்கு பெருமையே. தனது முப்பத்தி ஓர் ஆண்டுகால வாழ்க்கையின் சாதனை அல்லவா இது. எத்தனை பெண்களுக்கு கிடைப்பர் இப்படியோர் புரிதல் ஆன கணவன். தனது போன ஜென்ம புண்ணியத்தால் தான் இப்படி ஒரு கணவர் தனக்கு கிடைத்திருப்பதாக அவருக்கு தோன்றியது. தேவி தனக்குத் தோன்றிய எண்ணங்களின் ஊடே தனது கணவனை கண்களில் காதல் பொங்க பார்த்தார் .
அவரின் கண்களின் வார்த்தைகள் புரியாத அண்ணாமலை என்னம்மா தேவி என்ன சொன்ன நம்ம சம்பந்தி கிட்ட என்று கேட்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் .
அது ஒன்னும் இல்லைங்க எப்படியும் இப்ப இருக்க சூழ்நிலையில கல்யாணம் நடந்தாலும், மறுவீடு விருந்து இந்த மாதிரி சம்பிரதாயம் எல்லாம் செய்ய முடியுமா தெரியல. அதனால கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் நீங்களும் எங்களோட தங்கனும்னு சொல்லிட்டேன். முதல்ல அவங்க அதெல்லாம் சரியா வராது தான் சொன்னாங்க. ஆனா நான்தான் எப்படியோ பேசி அவங்கள சம்மதிக்க வச்சுட்டன். அவங்களுக்கும் அவங்க பொண்ணு மருமகன் கூட இருக்கணும்னு ஆசை இருக்கும்ல, அதாங்க நான் அப்படி சொல்லிட்டேன்.
அதுக்காக மட்டும் நான் இப்படி பண்ணல, இப்போ நடுவுல வந்த பிரச்சனை எதுவும் பிரபுவுக்கு தெரியாது. அது தெரிய வரும் போது நாம எடுத்து சொன்னா நம்ம பையன் புரிஞ்சுப்பான் அது நமக்குத் தெரியும். இதே தான் நாமும் அவங்ககிட்ட சொல்லி வச்சிருக்கோம். நாம ஆயிரம் சொன்னாலும் அவங்களுக்கு ஒரு சின்ன உறுத்தல் இருக்கத்தான் செய்யும். இப்போதைக்கு எந்த சடங்கும் முறையா செய்ய முடியாத சூழ்நிலையில் அவங்க பொண்ண இங்க விட்டுட்டு, நம்ம பிரபு அவங்க பொண்ண எப்படி நடத்துறான் என்று அவங்களுக்கு ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யும். கூடவே இருந்து பார்த்தா அவங்களும் நிம்மதியா இருப்பாங்க. அதனாலதான் நான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்றார் தேவி.
[the_ad id=”6605″]
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்த அண்ணாமலை பின்னர் தேவி, நீ எடுத்த முடிவு ரொம்ப சரியானது .நான் கூட அவங்களுக்கு வருத்தம் வரக்கூடாதுன்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனால் நீ எடுத்த முடிவால் அவங்க நிச்சயம் நிம்மதியா இருப்பாங்க என்றார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கடிகாரம் ஏழு மணி ஆகிவிட்டதை உறுதிப்படுத்த ஏழு முறை சத்தம் கொடுத்தது. கடிகாரத்தை பார்த்த அண்ணாமலை தேவி இப்போ கிளம்பினா தான் நேரம் சரியாக இருக்கும் நீ போய் பிரபுவை கூட்டிவா என்று அனுப்பி வைத்தார்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.