உனது காதலில் விழுந்தேன் – 4
பிரபுவை சென்று அழைத்து வரலாம் என்று நினைத்து திரும்பிய தேவி, பிரபுவே அவர்களை நோக்கி வரவும் அப்படியே நின்றுவிட்டார் .
மகனை பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கண்ட தேவிக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அண்ணாமலையும் நடந்துவரும் மகனை பார்த்தது பார்த்தபடியே நின்று விட்டார்.
தனது பெற்றோரை பார்த்தபடியே வந்த பிரபுவிற்கு அவர்களது நிலை புரிந்தது. எனினும் அதனை மாற்றும் பொருட்டு, ‘’மா நீ கண்ணுல தண்ணி விட்டு அழற அளவுக்கு, இந்த டிரஸ்ல பார்க்க நான் அவ்வளவு கொடுமையாவா இருக்கேன். அப்பா, நீயாவது சொல்லேன்’’ என்று பெற்றோரிடம் வம்பிழுத்து அவர்களை சகஜமாக்க முயன்றான்.
‘’போடா, போக்கிரி’’ என்று அவனை திட்டிய தேவி, ‘’சரி, வா சாமி கும்பிட்டுட்டு எல்லாரும் கோயிலுக்கு கிளம்பலாம்’’ என்றார்.
சாமி அறைக்கு செல்லும் வழியில் காலண்டரை பார்த்தவன் ,’’அம்மா, ஒரு நிமிஷம் நில்லு’’ என்றவனிடம் ‘’என்னடா’’ என்று கேட்டார் தேவி .
‘’ஏன்மா இன்னைக்கு கேலண்டர் தேதி கிழிக்கல ‘’
‘’டேய், நான் என்ன காலையிலிருந்து சும்மாவா இருக்கேன். காலையில் எழுந்து குளிச்சி, சமையல் வேலை எல்லாம் செய்து, அப்புறம் நானும் தயாரானதுல இத கவனிக்கலடா’’
‘’மா, உண்மையா உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. நீதான் சமையல் எல்லாம் செஞ்சியா? என்று கேட்டவனிடம்,
‘’டேய், அதெல்லாம் நீ ஏன் கேக்குற? நான் பண்ணா என்ன? என் புருஷன் பண்ணா என்ன? நாங்க ரெண்டு பேருமே ஒன்னு தான். அதனால, அதை பத்தி எல்லாம் நீ பேச கூடாது. சரியா’’ என்று மகனிடம் கூறியவர் ஒரு காலண்டர் தேதி கிழிக்காததுக்கு, இவ்வளவு அக்கப்போரா’’ என்று தனக்குள் முணுமுணுத்தார்.
‘’ மா இன்னிக்கு எவ்ளோ முக்கியமான நாள். நாம நினைச்ச மாதிரி மட்டும் இந்த கல்யாணம் நடந்து இருந்தா, பெரிய பேனர் வச்சி, அதுல என்னோட போட்டோவும், உன் மருமக போட்டோவும் போட்டு, அதுல எங்க கல்யாண நாள், எங்களோட பேரு, இப்படி எல்லாத்தையும் போட்டு ஊரே பார்க்கிற இடத்துல வச்சு இருக்க மாட்டீங்க .இப்போ அதுக்குதான் வழி இல்லாம போச்சு. நம்ம வீட்டு கேலண்டர்லயாச்சும் அந்த தேதி இருக்கணும்னு நான் நினைக்க கூடாதா மா’’ என்று பாவமாக கேட்டான்.
மகன் கூறிய விளக்கத்தில், அவனைப் பெற்றவர்களின் மனது உருகிவிட்டது. தேவி சென்று தேதியை கிழித்தவர்,’’ இப்போ சந்தோஷமா’’ என்று கேட்டார்.
பிரபுவின் பார்வை கேலண்டரில் இருந்த தேதியில் நிலைத்திருந்தது. அது ஏப்ரல் 7, 2020 என்று காட்டியது.( இப்போ புரிஞ்சுதா மக்களே ஆயிரம் பத்திரிக்கை வீணான ரகசியம் )
‘’சரி, தேதிய பார்த்தது போதும். வாடா சாமி கும்பிட்டுட்டு சீக்கிரம் கிளம்பலாம்’’ என்று சொல்லியவாறே பூஜை அறைக்கு சென்றார். அங்கு சென்று விளக்கை ஏற்றிய தேவி, மகனது திருமணம் எவ்வித பிரச்சினையுமின்றி நடக்க வேண்டும் என்று தனது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டார்.
சாமியை வேண்டி விட்டு தனது கண்களைத் திறந்தவர் , சாமிக்கு அருகிலிருந்த பத்திரிக்கையை காட்டி தனது கணவர் கண் அசைப்பதை உணர்ந்தார். அவர் கண் அசைப்பது எதற்காக என்பதை உணர்ந்தவர், சடுதியில் மகனது பார்வையிலிருந்து கல்யாண பத்திரிக்கையை மறைத்துவிட்டார் .
பின்னே, பத்திரிக்கையில் இருந்த மணப்பெண்ணின் பெயரில் இருக்கும் மாற்றத்தை மகன் பார்த்தால் என்னாவது?
பிறகு, விளக்கை குளிர வைத்து விட்டு, கல்யாணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்து காரில் வைத்தனர் .
‘’தேவி, எதையும் மறக்கலல. அப்புறம் ஒரு சின்ன பொருள் இல்லன்னா கூட வாங்குறதுக்கு அங்க கடை இல்ல’’ என்றவரிடம்
[the_ad id=”6605″]
‘’ஐயையோ, ஒரு நிமிஷம் இருங்க’’ என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவர், கையில் ஒரு பக்கெட் நிறைய கண்ணீருடன் வந்தார் ஏன் தேவி இப்போ தண்ணீர் கொண்டுவர
‘’இதக் கூடவா கோவிலுக்கு எடுத்துட்டு போகணும்’’ என்று கேட்டார் அண்ணாமலை.
‘’அட, இது கோவிலுக்கு இல்லைங்க. வாசல்ல வைக்க கொண்டு வந்தன். நாம கோவில்ல இருந்து திரும்பி வந்ததும், கை ,கால் எல்லாம் கழுவனும் இல்ல அதுக்கு தான்’’ என்று சொன்ன தேவியிடம்..
‘’ ஏண்டி, அதான் வெளியில பழுப்புல தண்ணி வருதுல்ல. அப்புறம், எதுக்குடி இதை கொண்டு வந்த’’என்று கேள்வி கேட்ட கணவனிடம்,
‘’இல்லங்க. இந்த தண்ணியில நான் வேப்பிலை, மஞ்சள், உப்பு எல்லாம் போட்டு வச்சிருக்கேன். இந்தத் தண்ணீல கை கால் கழுவினா, எந்த கிருமியா இருந்தாலும் அழிஞ்சிடும்னு, என்னோட வாட்ஸ்அப் குரூப்பில் வந்துதுங்க’’ என்றார் .
அப்போது பிரபு, ‘’அப்பா, நம்ம அம்மாவை பார்த்தீங்களா, முன்னல்லாம் நாம கோவிலுக்கு போயிட்டு வந்தா, பூஜை அறைக்கு போயிட்டு தான் மத்த எந்த வேலையா இருந்தாலும் பாக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ பார்த்தீங்களா. அவங்களே கோவிலுக்கு போயிட்டு வந்தாலும் கை கால் கழுவிட்டு தான் வரணும்னு சொல்றாங்க’’ என்று கூறி சிரித்தான்.
‘’டேய், பிரபு அதெல்லாம் நம்ம பெரியவங்க சொன்னதுடா. அதனாலதான் நானும் உனக்கு அதையே சொன்னேன். ஆனா, இப்போ இருக்க சூழ்நிலையில, இத விட்டா நமக்கும் வேற வழியில்ல’’ என்று வருந்தியவாறே கூறினார்.
‘’மா, அப்போதான் சாமி நம்ம வீட்டுக்கு வரும்னு நினைச்சுதான அப்படி சொன்னீங்க. இப்போ மட்டும் என்ன? சாமி வரலைன்னாலும் உங்க மருமக வருவா இல்ல, அத நெனச்சு சந்தோஷப்படுங்க’’ மருமகளை பற்றி சொன்னவனிடம்
‘’அதுக்கு நாம முதல்ல கோவிலுக்கு போனோம். அங்க போனா தான் உனக்கு கல்யாணம் நடக்கும். எங்களுக்கு மருமகளும் கிடைப்பா. இப்படி அம்மாவும் பையனும் பேசிக்கிட்டே இருந்தா, நாம எப்போ கோவிலுக்கு போறது. சீக்கிரம் கிளம்புங்க’’ என்று இருவரையும் காருக்குள் ஏறச் சொன்னார் அண்ணாமலை.
மூவரும் காரில் ஏறி அமர்ந்தவுடன், தனது பெற்றோரிடம் முகவுரையை நீட்டினான் பிரபு.
‘’இந்தாங்க, இதை போட்டுக்கோங்க. இத மட்டும் போடாம, நான் கல்யாணம் பண்றத எவனாவது பத்திரிக்கைகாரன் பாத்தா அவ்வளவுதான். ஒரு கல்லூரியின் விரிவுரையாளர் ,தனது திருமணத்தில் விதிமுறைகளை பின்பற்றவில்லை அப்படின்னு சொல்லி, என்னோட கல்யாணத்த தமிழ்நாடு பாக்குற மாதிரி நியூஸ் சேனல்ல போட்டு விடுவாங்க ‘’ என்றவனிடம்
‘’டேய், மகனே போடுன்னு சொன்னா போட போறேன். அதுக்கு ஏன்டா உன் வாத்தியார் புத்தியை என்கிட்டயே காட்ற’’ என்று மகனை கலாய்த்துவிட்டு, முகவுரையை மாட்டிக்கொண்டார் அண்ணாமலை.
ஐந்து நிமிடத்தில் கோவிலை அடைந்தவர்கள், காரைவிட்டு இறங்கி முதலில் மூவருமாக கர்ப்ப கிரகத்தை நோக்கி நடந்தனர். அது முருகன் கோவில். அங்கு கர்ப்பகிரகத்தில் முருகன் சந்தன அலங்காரத்துடன், கையினில் வேலை பிடித்துக்கொண்டு புன்னகை புரிந்தான்.
என்னவோ அந்த நொடி, அவர்கள் மூவரின் மனதும் அமைதியை தத்தெடுத்தது. முருகனிடம் எதையும் கேட்கத் தோன்றாமல், நிர்மலமான மனதுடன் நின்றிருந்தனர் .
அப்போது, தீபாராதனை தட்டுடன் வந்த ஐயர் அவர்களுக்கு ஆரத்தியை காட்டிவிட்டு, ‘’பொண்ணு வந்தாச்சா .கல்யாண சடங்க ஆரம்பிக்கலாமா?’’ என்று கேட்டார் .
‘’இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க ஐயரே. அதுக்குள்ள நான் கல்யாணத்துக்கு தேவையான பொருட்களை மண்டபத்துல எடுத்து வைக்கிறன். நீங்க கொஞ்சம் வந்து எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க’’ என்றார் தேவி.
‘’அதுக்கு என்னம்மா, நீங்க முன்னே போங்கோ. நான் பின்னாடியே வரன்’’ என்றார் ஐயர் .
தேவி தனது கணவரையும் மகனையும் அழைத்துக்கொண்டு, கர்ப்ப கிரகத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு கோவிலுக்கு அருகே இருந்த மண்டபத்திற்கு சென்றார். பின்னர் தனது கணவனை நோக்கி, ‘’உங்க கார்ல இருக்க எல்லா பொருளையும் கொண்டு வாங்க ‘’ என்றார் .
அவரும் ‘’சரி’’ என்று மனைவியிடம் தலையாட்டிவிட்டு, பொருட்களை எடுக்க காருக்குத் சென்றார். வெறும் இரண்டு பைகள் மட்டுமே என்பதால், ஒரே நடையில் இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு வந்தார்.
அப்போது நின்று கொண்டிருந்த பிரபுவை பார்த்து, ‘’அடேய் மகனே, அப்பா வயசான காலத்துல கஷ்டப்பட்டு பைய தூக்குறேன். ஒன்ன வந்து வாங்கிக்க கூடாதா’’ என்றவரிடம்,
‘’போங்கப்பா, நான் இன்னைக்கு கல்யாண மாப்பிள்ளை. அதனால இன்னைக்கு நான் எதையும் செய்கிறதா இல்லை’’ என்றவனிடம்
‘’தாலியையாவது நீ கட்டுவியா, இல்ல அதையும்… என்று இழுத்தவரிடம், விரலை தூக்கி காட்டி மிரட்டினான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த ஐயர் ‘’பொருட்களைக் கொண்டு வாங்கோ’’ என்றார். அவர் பொருட்களை வாங்கிக்கொண்டு, கல்யாண சடங்கை ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்யத் தொடங்கினார்.
அதற்குள் பெண் வீட்டாரின் கார் கோவில் மண்டபத்தின் வந்து நின்றது. அதிலிருந்து கல்யாண பெண்ணும், அவளின் அம்மாவும், அப்பாவும் இறங்கினர். அவர்களும், இவர்களைப் போலவே முகத்தை மூடிக்கொண்டு இருந்தனர்.
அது சிறிய கோவில் மண்டபம் என்பதால் உள்ளிருந்தவாரே, அவர்களை பிரபுவால் பார்க்க முடிந்தது.
பார்லர் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், அவர்கள் வீட்டிலேயே தான் மேக்கப் செய்திருக்க வேண்டும். ஆனாலும், அதிலேயே அவள் அழகாய் இருப்பதாய் அவனுக்கு தோன்றியது.
‘ஏன்டா முகமே சரியா தெரியலையே. அப்புறம் எப்படி அழகா இருக்கான்னு சொல்ற’ என்று அவனது மனது அவனை கிண்டல் அடித்தது.
[the_ad id=”6605″]
‘இல்ல… இல்ல.. அவ மூக்கும் வாயும் தானே தெரியல. அவ கண்ணு, அது எவ்வளவு அழகா இருக்கு. அப்புறம், அவ புடவை கட்டியிருக்க விதமே பார்க்கவே அவ்வளவு பாந்தமா இருக்கு’ என்று மனசாட்சிக்கு பதில் சொன்னான்.
ஆனா, பெண் பார்க்க சென்ற அன்றை விட, இப்போது சற்று உயரம் குறைந்து இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அப்போதுதான் அவர்களைப் பார்த்த உமாவும் அண்ணாமலையும் அவர்களை முன்னே சென்று வரவேற்றனர் . அவர்களின் பின்னே வந்த பிரபுவும், பெண்ணின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து ‘’வாங்க’’ என்றான்.
பெண்ணின் அம்மா உமாவைப் பார்த்து, ‘’லேட் ஆயிடுச்சா’’ என்று கேட்டார்.
‘’இல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல. கல்யாணம் சடங்கு ஆரம்பிக்கிறதுக்கான வேலைய தான் பார்த்துகிட்டு இருந்தோம். நீங்க அதுக்குள்ள வந்துட்டீங்க’’ பேசியவாரே தேவி அவர்கள் மூவரையும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு கூட்டிச் சென்றார். தேவியின் பின்னாலேயே பிரபுவும் அண்ணாமலையும் வந்தனர்.
அவன், அவளையே பார்த்துகொண்டே தான் பின்னால் வந்தான்.கோவிலுக்கு வெளியே தலை நிமிர்ந்து நின்றவள், தன்னை பார்த்ததிலிருந்து தலையை உயர்த்தவில்லை என்பதை அவன் உணர்ந்தான். பிரபுவுக்கு ஏதோ ஒன்று மனதை நெருடியது. ஆனால், அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை.
அவன் அதை வெட்கம் என்று எடுத்துக் கொண்டான். ஆனாலும், இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வெட்கம் வருமா? என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்டது.
அதற்குள் ஐயர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் மணையில் உட்கார வைக்கச் சொன்னார் .பின்னர் , ஐயர் மந்திரங்கள் சொல்லி முடித்து, அவனது கையில் தாலியை கொடுத்து, பெண்ணின் கழுத்தில் கட்டுமாறு சொன்னார்.
தாலி கட்டும் போது அவளது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில், அவனது மனது தடுக்கி விழுந்தது. தாலிக்கட்டி முடிந்ததும், அக்னியை வலம் வந்தவர்கள் தங்களது பெற்றோரின் கால்களில் விழுந்து எழுந்தனர்.
சொந்த பந்தங்கள் யாருமின்றி நடந்த திருமணம் என்றாலும், அவர்களின் பெற்றோர்களின் மனது நிறைந்து இருந்தது .
[the_ad id=”6605″]
பிறகு தம்பதி சமேதராக மணமக்களை அழைத்துக்கொண்டு, மீண்டும் சன்னதிக்கு சென்ற இரண்டு குடும்பங்களும், அந்த ஆறுமுகனை வணங்கிவிட்டு, வீட்டிற்குச் செல்ல தங்களது காரின் அருகில் வந்தனர்.
அண்ணாமலை தங்கள் காரிலேயே மணமக்களை அழைத்துச் செல்வதாக கூறினார். பெண்ணின் பெற்றோரும் ‘’சரி’’ என்று சொல்லி விட்டு, தங்களது காரை நோக்கி சென்றனர் .
இரண்டு கார்களும் அண்ணாமலையின் வீட்டின் முன்பு நின்ற போது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சற்று எட்டிப் பார்த்தனர்.
அதை கண்டுகொள்ளாமல் தேவி காரிலிருந்து இறங்கி, வேகமாக சென்று தனது கை, கால்களை கழுவிக்கொண்டு, கதவை திறந்து உள்ளே வந்து ஆரத்தி கரைத்துக் கொண்டு வந்தார்.
தேவி ஆரத்தி எடுத்து வருவதற்குள் ,மீதமிருந்த ஐந்து பேரும் அவர் வைத்திருந்த வேப்பிலையை நீரில் தங்களது கை, கால்களை கழுவி, வாசலுக்கு அருகே வருவதற்கும், தேவி உள்ளே இருந்து ஆரத்தி கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
தேவி மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தவர், தனது மருமகளையும் மகனையும் பூஜை அறைக்கு கூட்டி சென்று, மருமகளை அங்கிருந்த காமாட்சி விளக்கை ஏற்றச் சொன்னார் .
அவளும் மாமியார் சொற்படி விளக்கை ஏற்றியவள், தனது கணவனுடன் நின்று, எதையோ தீவிரமாக கடவுளிடம் வேண்டினாள்.
சாமி கும்பிட்டு முடித்தவுடன், வராந்தாவில் இருந்த சோபாவில் மற்றவர்களை அமரச் சொன்ன தேவி, சமயலறை சென்று பாலும் பழமும் கொண்டு வந்தார் .
அதுவரை தங்களது முகமூடியைக் கழற்றாமல் இருந்த மணமக்கள், தேவியின் கையில் பாலையும் பலத்தையும் பார்த்ததும் கழற்றினர் .
அவளுக்கு முகமூடியை கழட்டும் போது, சற்று உதறல் ஆகத்தான் இருந்தது. எனினும் மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரு வழியாக தனது முகமூடியை கழற்றினாள்.
முதலில் பாலை வாங்கி அருந்திய பிரபு, மீதி பாலை அவளிடம் கொடுக்க அவளின் முகத்தை பார்த்தவன், ‘’நீயா என் பொண்டாட்டி’’ என்று அதிர்ந்தான்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.