அந்தப் பாசறையின் விளிம்புப் பகுதி அது, அங்குக் காவலில் இருந்த அந்த இரண்டு வீரர்களும் குளிர்காய மூட்டியிருந்த தீயில் முயற்கறியை ஆளுக்கொரு குச்சியில் சொருகி வாட்டிக்கொண்டிருந்தார்கள்.
தானாக வந்து சிக்கிக்கொண்ட அந்த முயலை அவர்கள் நாவில் நீரூற உற்சாகமாகப் பேசிக்கொண்டே வாட்டினர்.
சட்டென ஒரு ஓசை கேட்டது – காய்ந்த சருகுகளில் பாதம் படும் ஓசை!
அவர்கள் சட்டெனக் குச்சியைக் கீழே போட்டுவிட்டு வாள்களைக் கையில் எடுத்துக்கொண்டு கூர்மையான கவனத்துடன் அசையாமல் கவனித்தனர்.
வேதாளப் பட்டன் தன்னைத் தானே மனத்திற்குள் திட்டிக்கொண்டான்.
சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட சலனத்தில் அந்த வீரர்கள் எச்சரிக்கையடைந்துவிட்டார்களே!
அவர்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப ஏறத்தாழ ஒரு நாழிகை ஆகிவிட்டது. பட்டனும் அதுவரை அசையாமல் நின்ற இடத்திலேயெ நின்றான்.
அவன் தன் அணிமா சித்தியைக் கொண்டு தன் உடலின் அணுக்களைச் சிறியதாக்கி மற்றவர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தான். இருந்தாலும் தன் அசைவுகளில் கவனம் தேவை என்று எண்ணிக்கொண்டான்.
அந்த வீரர்கள் மீண்டும் தம் வாள்களைக் கீழே வைத்துவிட்டு முயலை வாட்டுவதில் ஈடுபட்டனர்.
வேதாளப் பட்டன் மிகக் கவனமாய் நகர்ந்து அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தோடு மரமாய் நின்றுகொண்டான்.
“உனக்கு உறுதியா தெரியுமா?”
இருவரில் மூத்தவன் போல இருந்தவன் மீண்டும் பேச்சைத் தொடங்கினான்.
அவர்கள் பேசிக்கொண்ட மொழி புதியதாக இருந்தபோதிலும், வேதாளப் பட்டனுக்குக் கேட்டவுடனேயே பொருள் புரிந்தது!
“நல்லா தெரியும், அண்ணே! நம்ம தளபதி வாயாலயே கேட்டேன், தான் தண்ணி கொண்டு வரப் போனப்ப அவர் உபதளபதிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு, நான் என் காதுல எதுவுமே விழாத மாறிப் போய்ட்டு வந்தேன், ஆனா, ஒவ்வொரு சொல்லையும் கவனமா கேட்டு மனசுல பதிய வெச்சுக்கிட்டேன்…”
என்று அவன் குச்சியில் இருந்த முயற்கறியைக் கொஞ்சம் பிய்த்து வாயில் வைத்துப் பதம்பார்த்தவாறே பதில் சொன்னான்.
“ஓஹோ… என்னனு சொன்னாரு?”
மூத்தவன் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதாண்ணே… அரசர் ரொம்ப மனசுடைஞ்சு போயிருக்காராம், தோல்வியோட நாடு திரும்ப அவருக்கு விருப்பமில்லையாம், அதனால இளவரசர அரசனாக்கிட்டு அவர் இந்தக் காட்டுலயே இருந்து உயிரவிட்ரப் போறாராம்…”
[the_ad id=”6605″]
அந்த இளைய வீரன் கிசுகிசுக் குரலில் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னான்.
“இது இந்த மொத்தப் படைக்குமே தெரியுமேடா! இதை என்னவோ புதுசா சொல்ல வந்துட்ட!”
என்று மூத்தவன் அலுத்துக்கொண்டான்.
“அட, முழுசா கேளுண்ணே! இளவரசரும் நாடு திரும்ப போறதில்லையாம்…”
என்று அவன் முடிக்காமல் இழுக்க, மூத்தவனின் கண்கள் ஆர்வத்தால் விரிந்தன.
“அப்புறம்?”
“நம்மளத் தோற்கடிச்ச அந்த விக்ரமாசிய ராஜாவத் தோற்கடிக்காம அவர் நாடு திரும்பப் போறதில்லனு சபதம் எடுத்திருக்காராம்… அதுக்காக…”
என்று அவன் சற்றே தயங்கி நிறுத்தினான்.
“அதுக்காக?”
என்று அந்த மூத்த வீரன் அவனை நெருங்கி அமர்ந்தபடிக் கேட்டான்.
“இளவரசர் யாஸ்னாக்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருக்காராம்!”
“இதென்னடா கதையா இருக்கு? நாம இவ்ளோ பெரிய படைய வெச்சுக்கிட்டே அந்த விக்ரமாசிய ராஜாகிட்ட தோத்துட்டு வந்துட்டோம், யாஸ்னா பண்ணி குதிரை யானையலாம் பலி கொடுத்துட்டா மட்டும் ஜெயிச்சுடுவோமா?”
என்று அவன் அலுப்பாகக் கேட்டான்.
“அண்ணே!”
இளையவனின் குரலில் ஒரு அதட்டல் இருந்தது,
“சொல்ல வந்ததை முழுசா கேக்காம பேசாத!”
என்று அவன் தொடர, பட்டனும் தன் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க ஆயத்தமானான்,
”இளவரசர் பண்ணப் போறது வழக்கமான யாஸ்னா இல்ல, அவர் ஒன்னும் குதிரையையோ யானையையோ பலி கொடுக்கப் போறதில்ல… அவரையே…”
என்று அவன் முடிக்காமல் இழுத்தான்.
மூத்தவனின் கண்கள் விரிந்தன, முகத்தில் சிந்தனை படர்ந்தது.
“உண்மையாவா?”
”ஆமா, அவர் பண்ணப் போற யாஸ்னா யாருக்குத் தெரியுமா… ஃபார்வஷி-”
என்று அவன் முடிக்கும் முன் பாசறை வட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது.
[the_ad id=”6605″]
அந்த இரு வீரர்களும் வாள்களைக் கையில் பிடித்தபடி எழுந்து விறைப்புடன் நின்றனர்.
‘அரசர் வருகிறார்’ என்ற செய்தி பல குரல்களில் பல தொனிகளில் பல வடிவங்களில் அங்குப் பரவியது.
காவல் பணியில் இல்லாமல் வேறு வேலைகளில் இருந்த வீரர்கள் அங்கிருந்த அந்தப் பெரிய கூடாரத்தை நோக்கிக் குவியத் தொடங்கினர்.
பட்டனும் அந்த இரண்டு வீரர்களையும் கடந்து அந்தக் கூடாரத்தை நோக்கிச் சென்றான்.
அங்கே ஏற்பட்டிருந்த சலசலப்பு அவனை மறைத்துக்கொள்ள உதவியது. ஒரு வீரன் பட்டன் மேலேயே மொதிக்கொண்டான், ஆனால், கூட்டத்தில் அவன் எதையும் கவனிக்கவில்லை, பரபரப்புடன் சென்றுவிட்டான்.
ஆனாலும், பட்டன் கவனமாய் அந்தப் பெரிய கூடாரத்தை நெருங்கினான், உள்ளே போவதா வேண்டாவா என்று தயங்கிப் பின் ஒரு அதிகாரி உள்ளே நுழைய அவரோடு அவனும் ஓசைபடாமல் நுழைந்தான்.
உள்ளே இருட்டாய் இருந்தது.
கூடாரத்தின் நடுவே அவன் இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
சற்று நேரம் அங்கு ஒரு அடர்ந்த அமைதி இருந்தது.
“நான் கேள்விப்பட்டது உண்மையா மகனே?”
என்ற குரல் அந்த அமைதியைக் குலைத்தது.
அங்கிருந்த தளபதிகள் பரபரப்பாக, இருளை வெறித்தபடி இருந்தவன் சட்டென எழுந்து நின்றான்.
“தாங்களே இங்கு வர வேண்டிய தேவை என்ன அரசே? அழைத்திருந்தால் நான் ஓடோடி வந்திருப்பேனே?”
அங்கிருந்த அந்தரங்க ஊழியர்கள் சிறிதும் அரவமின்றி விளக்குகளை ஏற்றினர்.
அங்கு மெள்ளப் பரவிய அந்த விளக்குகளின் ஒளியில் வேதாளப் பட்டன் ஹுமவர்கனையும் திக்ரசூதனையும் நன்றாகப் பார்த்தான்.
தளபதிகளும் மற்ற அதிகாரிகளும் வெளியேறினர்.
பட்டன் மூச்சைக் கூட அடக்கிக்கொண்டு இருந்த இடத்திலேயே சிலைபோல நின்றான்.
அவன் அவர்களது கண்களுக்குத் தெரியமாட்டான் என்றாலும் அசைவுகள் காட்டிக்கொடுத்துவிடக் கூடாதே!
தந்தையும் மகனும் யாஸ்னாவைப் பற்றி விவாதம் செய்தார்கள்.
ஹுமவர்கனுக்கு திக்ரசூதன் செய்வதில் சம்மதமோ விருப்பமோ இல்லை என்பதை பட்டன் அறிந்துகொண்டான்.
திக்ரசூதனின் பிடிவாதத்தைக் கண்டு ஹுமவர்கன் கோவத்துடன் கூடாரத்தைவிட்டு வெளியேறியதைப் பட்டன் ஒரு மௌனப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று நேரம் கழித்துப் பட்டனும் ஓசைபடாமல் வெளியேறினான்.
பட்டனின் உள்ளத்தில் அந்த இளைய வீரன் சொன்ன அந்தப் பெயர் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது-
‘ஃபார்வஷி’
அதை அவன் உள்ளம் மொழிபெயர்த்தபோது பட்டனைக் குழப்பம் ஆட்கொண்டது.
அவன் சிந்தனையுடன் அந்த பாசறைக்குள் நடந்தான்.
சற்று நேரத்தில் அங்கே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
அரசர் இறந்துவிட்டார் என்ற செய்தி அங்குப் பரவ, திக்ரசூதன் தன் கூடாரத்தை விட்டு அரசரின் கூடாரத்தை நோக்கி ஓடுவதை வேதாளப் பட்டன் பார்த்தான்.
பாசறையின் நடுநாயகமாக இருந்த அந்தப் பெரிய கூடாரத்தை நோக்கி சில அடிகள் நடந்தவன், அதைச் சுற்றி வீரர்களின் கூட்டம் அதிகமாவதைக் கண்டதும் பின் வாங்கினான்.
பாசறையைச் சுற்றிக் கண்களை ஓடவிட்டவனின் பார்வையை மிக மிகத் தொலைவில் தெரிந்த அந்த மெல்லிய வெளிச்சப் பரவல் ஈர்த்தது.
பட்டன் சற்றென்று உணர்ந்து கொண்டவனாய் அதை நோக்கி விரைந்து நடந்தான்.
அவன் அதை நெருங்க நெருங்கக் காட்டுத் தீயைப் போலப் பெரிதாக எரிந்து கொண்டிருந்த அந்த யாஸ்னா தீ அவனை வரவேற்பதைப் போல தன் தீ நாக்குகளை ஆடவிட்டது.
அங்கிருந்த ஹோதாக்கள் தங்கள் குரலை ஒற்றைக் குரலாக்கிக் கணீரென்று மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தனர்.
வேதாளப் பட்டனுக்கு அந்த மந்திரங்கள் புரிந்தன. அவற்றின் கோரிக்கை புரிந்தது. அவை அழைக்கும் அந்தத் தேவதையின் பெயரும் தன்மையும் புரிந்தன…
அவன் அதன் ஈர்ப்பில் மயங்கியவனாய் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் பின்னால் அரவம் கேட்கத் திரும்பிப் பார்த்தவன் திக்ரசூதனும் அவனைத் தொடர்ந்து அவனது பரிவாரமும் பிரதானிகளும் படையும் அந்த இடத்தை நோக்கி விரைந்து வருவதைக் கண்டான். ஹோதாக்கள் அவனை வரவேற்று எல்லாம் தயார் என்று சொன்னார்கள்.
திக்ரசூதன் தன் அரசச்சின்னங்களையும், தான் அணிந்திருந்த தோற்கவசத்தையும் கழட்டி வீசினான்.
தன் தந்தையின் வாளுடன் நின்றவன் மீது ஹோதாக்கள் நீரை ஊற்றினர்.
மந்திர உச்சாடனம் வலுப்பெற்றது.
திக்ரசூதன் கையிலிருந்த வாளால் தன் நெஞ்சில் கீறிக்கொண்டு அந்தத் தீக்குள் புகுந்தான்.
சற்றும் தாமதிக்காமல் அவனது பரிவாரமும் படையும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
ஹோதாக்கள் கூட மந்திர உச்சாடனம் செய்தபடியே அத்தீக்குள் இறங்கினர்.
பட்டன் அவர்களை வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான்.
அவன் மனத்தில் அந்தப் பெயர் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது-
ஃபார்வஷி… ஃபார்வஷி… ஃபார்வஷி…
அதன் பொருள்-
சிவசக்தி!
அப்படித்தான் அவனது மனம் அதை மொழிபெயர்த்தது!
‘ஹே மாகாளி!’ என்று மனத்தில் எண்ணினான் பட்டன்,
”அஹோ ஃபார்வஷி” என்று உரைத்தது அவன் வாய்.
‘செல் மகனே, திக்ரசூதனைப் பின் தொடர்ந்து நீயும் அந்த யாஸ்னாவில் இறங்கு… கலியுகத்திற்கு நீயும் தேவை!’
என்று அவன் காதுகளில் கேட்டது. காதுகளிலா கேட்டது? இல்லை மனத்தில் நேரடியாகக் கேட்டதா?
பட்டனின் மனத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன, அடுத்த கணமே ஆயிரம் விடைகளும் எழுந்தன…
ஒரு நொடி சூறாவளியாய், அடுத்த நொடி பேரமைதியாய்…
பட்டன் அந்த மாபெரும் தீயை நெருங்கினான்…
[the_ad id=”6605″]
திக்ரசூதன் விட்டுச் சென்ற வாளை எடுத்துத் தன் கையில் கீறிக்கொண்டான்,
“ஜெய் மாகாளி!” என்றது அவன் வாய்,
’நெமோவே ஃபார்வஷி’ என்றது அவன் மனம்!
*****
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.