இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-2
தன் இருச்சக்கர வாகனத்தை இல்லத்தின் வாயிலில் நிறுத்திவிட்டு கூடத்திற்குள் நுழைந்த ஆழினியையும் இன்பனையும் இன்முகத்துடன் வரவேற்றிருந்தாள் நீலவேணி.
“ஹாய் அக்கா, இன்னிக்கு ஏன் இவ்வளவு லேட்? எதாவது எமர்ஜென்சி கேஸ்ல மாட்டிக்கிட்டீங்களா?” என்று வினவிய நீலவேணியை முறைத்தவள்
“என்னை அக்கான்னு கூப்பிடாதன்னு உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது?”
“ஏன் கூப்பிட்டா என்ன?”
Advertisement
“என் தம்பியை லவ் பண்ணிட்டு என்னை அக்கான்னு கூப்பிட்டா நல்லாவாயிருக்கும்? உறவு முறையே மாறுது….”
“இந்த வியாக்கியானமெல்லாமல் நல்லா பேசுங்க…. ஆதவ் உங்க மேல ரொம்ப கோபமாயிருக்கான் அவனை போய் முதல சமாதானப்படுத்துங்க….” என்று நீலவேணி கூற, அவள் கூறியதை கேட்டவுடன் தன்னறைகுக்குள் சென்றிருந்தாள் ஆழினி.
வெள்ளை நிற சட்டையும் அதே நிறத்தில் ட்ரௌசர் அணிந்து தன் கொழுக்கொழு கன்னத்தில் கைவித்து சோகமாக அமர்ந்திருந்தான் ஆழினியின் ஐந்து வயது செல்ல மகன் ஆதவ் கிருஷ்ணன். தன் மகன் அணிந்திருக்கும் பள்ளி சீருடையை கண்டவுடன் தனது தவறினை உணர்ந்தவள் அவனருகில் மண்டியிட்டு அலை அலையாக படர்ந்திருக்கும் அவனது சுருள் முடியை கோதியவாறு
Advertisement
“ஆது கண்ணா…. சாரிடா, இன்னிக்கு உன் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டேக்கு என்னால வரமுடியல….” என்று கூறிய ஆழினியை தன் அழகிய நீலநிற முட்டைக்கண்களால் முறைத்தவன்
Advertisement
“நீ என் கிட்ட பேசாத அம்மா, நான் உன் பேச்சு டூ….”
“சாரி கண்ணா…. இதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் இதுக்கு அப்புறம் அம்மா இந்த மாதிரி பண்ணமாட்டேன்….”
“நீ வருவன்னு நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா? ரன்னிங் ரேஸ், ட்ராயிங் காம்பெட்டிஷன் எல்லாத்துலையும் நான் தான் ஃபர்ஸ்ட்…. ப்ரைஸ் கொடுக்கும்போது கூட நீ வரல…. வேணி அத்தையும் மாமாவும் தான் வந்தாங்க….”
Advertisement
“என் ஆது குட்டி கண்டிப்பா ஃபர்ஸ்ட் வருவாங்கன்னு தெரிஞ்சு தான் அம்மா உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன் தெரியுமா?” என்று கூறிய ஆழினியை ஆர்வாக பார்த்தவன்
“கிஃப்ட்டா? என்ன கிஃப்ட்?” என்று தன் கோபத்தை மறந்து வினவிய தன் ஆசை புதல்வனிடம் பல வண்ண நிறங்கள் கொண்ட பெரிய அளவிலான வண்ணப்பெட்டியை பரிசளிக்க, அதை கண்டவுடன் தன் குண்டு கன்னங்களில் கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாக சிரித்து வைத்தான் அந்த குட்டி மாயக்கண்ணன்.
தன் அன்னை பரிசளித்ததை வாங்கியவன் மிகுந்த உற்சாகத்துடன்
“ஹையா, கலர் பாக்ஸ்…. தாங்க்யூ அம்மா….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறி தன் அன்னையின் கன்னத்தில் முத்தம் வைக்க, அவளும் தன் பிள்ளையின் பிஞ்சு கன்னத்தில் மாறி மாறி முத்தம் அளித்தாள்.
இத்தனை நேரம் தங்களின் உரையாடலை பார்வையாளராய் பார்த்திருந்த இன்பன் மற்றும் நீலவேணியின் அருகில் சென்றவன்
“வேணி அத்தை, இங்க பாருங்க கலர் பாக்ஸ்…. அம்மா கொடுத்தாங்க சூப்பரா இருக்குல்ல? பன்னு, வா நம்ம ரெண்டு பேரும் கலர் அடிக்கலாம்….” என்று தன் மழலை குரலில் கூறிய ஆதவ் கிருஷ்ணனை செல்லமாக முறைத்தவன்
“ஏய் பப்பாளி, முதல என்னைய பன்னுன்னு கூப்பிடாம மாமான்னு சொல்லி கூப்பிட்டு பழகு…. அப்போத்தான் உன் கூட கலர் அடிக்க வருவேன்….” என்று கூறிய இன்பனை கண்டு அழகாக சிரித்தவன் தன்னருகில் நின்றிருந்தவளிடம்
“வேணி அத்தை, பட்டர் பன் வரையலாமா?” என்று நக்கலாக வினவிய ஆதவ் கிருஷ்ணனை இன்பன் முறைத்து கொண்டிருந்தான்.
“கிரீம் பன்னும் சேர்த்து வரையலாம் ஆது கண்ணா….” என்று நீலவேணி கூறியதை கேட்டு மேலும் கோபமுற்றவன்
“அடிங்கு, ரெண்டு பேரும் உலக்க சைஸ் இருந்துட்டு என்னைய கிண்டல் பண்றீங்களா? உங்களை என்ன பண்றேன்னு பாரு….” என்று இன்பன் கூறி அவர்களை அடிக்க வர, அவனிடமிருந்து தப்பித்தவனோ தன் அன்னையின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு
” நான் போய் இந்த கலர் பாக்ஸ ஆறுமுகம் தாத்தா கிட்டயும் ராணி பாட்டி கிட்டயும் காட்டிட்டு வரேன்….” என்று குட்டி கண்ணன் கூறிவிட்டு வீட்டின் கீழ் தளத்தில் குடியிருக்கும் நீலவேணியின் பெற்றோரிடம் சிட்டாக பறந்துவிட்டான்.
இத்தனை நேரமாய் சிறியவனின் சிரிப்பலையில் நிறைந்திருந்த இல்லமானது அவன் சென்ற அந்நொடியே அமைதியாக மாறிவிட்டது. தன் கண்களில் வழிய காத்திருக்கும் கண்ணீரை யாரும் அறியாமல் தனக்குள் ஒளித்தவள்
“நான் போய் குளிச்சிட்டு வரேன் இன்பா….” என்று ஆழினி கூறி முன்னே செல்ல
“என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று வினவிய இன்பனின் குரலை கேட்டதும் அவளது கால்கள் ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றுவிட்டது.
இன்பன் எதை பற்றி கூற வருகிறான் என்பதை அறிந்தாலும் அதனை கிஞ்சிற்றும் மதியாதவள்
“என்ன முடிவு பண்ணனும்?” என்று வினவிய ஆழினியை இயலாமையுடன் பார்த்தவன்
“நான் என்ன பேச வரேன்னு உனக்கு புரியலையா ஆழினி?”
“புரியுது இன்பா…. ஆனா என்னால முடியாது…. நீயும் நீலாவும் கல்யாணம் பண்ணிக்கோங்க…. எனக்கு அது தான் இப்போ முக்கியம்….”
“எதுக்கு தேவையில்லாம எங்களோட கல்யாணத்தை பத்தி பேசுற? நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போற அதை முதல எனக்கு சொல்லு?”
“கல்யாணமா? அந்த வார்த்தைக்கான அர்த்தம் என் வாழ்க்கையில இல்லாமையே போயிடுச்சு….”
“இப்படி பேசாத ஆழினி…. உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா….”
“எனக்கு யாரும் வேண்டாம்…. எனக்கு நீங்க இருக்கீங்க, முக்கியமா என் ஆது இருக்கான், வேறென்ன துணை எனக்கு வேணும்?”
“உனக்கு வேணும்னா துணை தேவைப்படாம இருக்கலாம் ஆனா ஆதவ்க்கு ஒரு அப்பா வேணும்…. கின்டர் கார்டன்ல படிக்குற அஞ்சு வயசு பையனுக்கு இதுவரை அப்பாவை பத்தி தெரியாம இருக்கலாம் ஆனா அவன் வளர வளர ‘என் அப்பா யாருன்னு’ உன் கிட்ட கேட்டா நீ என்ன சொல்லுவ?”
“என் ஆதுவுக்கு அப்பா தேவையில்ல…. அம்மா நான் மட்டும் போதும்….”
“விதாண்டாவாதம் பண்ணாத ஆழினி…. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்கோ….” என்று கூறிய இன்பனை தன் கண்களில் வழிய காத்திருக்கும் கண்ணீரோடு முறைத்தவள்
“நீயும் விதாண்டாவதம் பண்ணாத இன்பா…. உனக்கும் நீலாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்…. எத்தனை நாள் தான் உனக்காக நீலாவும் அவளோட அப்பா அம்மாவும் வெயிட் பண்ணுவாங்க? அவங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவள் கல்யாணத்தை பத்தி என்னென்ன ஆசைகளும் கனவுகளும் இருக்கும்…. கொஞ்சம் யோசிச்சு பாரு இன்பா…. என் வாழ்க்கையை பத்தி யோசிக்காம உன் வாழ்க்கையை பத்தியும் கொஞ்சம் யோசி….” என்று ஆழினி கூறியதை கேட்டதும் உள்ளம் உடைந்தவன்
“உன் வாழ்க்கையை பத்தி நீ யோசிச்சிருந்தா நான் இங்க இருந்திருக்கமாட்டேன் அக்கா….” என்று இன்பன் நாதழுதழுக்க கூற, அவனின் நிலையை அறிந்தவள் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஆழினி சென்றதும் தன் கடந்த காலத்தையும், இயலாமையையும் நினைத்து கண்களில் கண்ணீருடன் பொத்தென்று கட்டிலில் அமர்ந்தவனின் அருகில் சென்று ஆதரவாய் தலை கோதிய நீலவேணியை கண்டதும் அவளது வயிற்றில் முகம் புதைத்து அழ தொடங்கிவிட்டான் இன்பன்.
“இன்பா…. பிளீஸ்…. அழாதடா…. நீயே இப்படி உடைஞ்சு போனா அப்புறம் ஆழினி அக்காவை எப்படி சமாதானம் பண்ணுவ?” என்று நீலவேணி கூறியதை கேட்டு மறுப்பாக தலையசைத்தவன்
“என்னால முடியல வேணி…. ஆழினி இப்படி இருக்கிறதுக்கு நான் தான காரணம்? அதை நினைக்க நினைக்க மனசெல்லாம் வலிக்குது டி….” என்று இன்பன் கூறியதை கேட்டு மனம் கலங்கியவள் அவனிடம் ஏதோ கூற வருவதற்குள்
“பன்னு….” என்று சத்தமாக அழைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்த ஆதவ் கிருஷ்ணனின் குரலில் இருவரும் வேகமாக விலகியிருந்தனர்.
அவ்விருவரின் நிலையை கண்டு தன் கண்கள் விரிய அழகாக சிரித்தவன்
“ஒஹோ…. ரெண்டு பேரும் லவ்ஸ் பண்றீங்களா?” என்று ஆதவ் கிருஷ்ணன் கேலியாக வினவ, அவனது கேள்வியை கேட்டதும் தன் மனதிலிருந்த சோகத்தை தற்சமயம் மறந்தவன்
“டேய் பப்பாளி, என்ன பேச்சு பேசுற நீ? இருடி, இன்னிக்கு உன் கிளாஸ்ல ஒரு பாப்பாவுக்கு முத்தம் கொடுத்தல்ல அதை உன் அம்மா கிட்ட போட்டு கொடுக்குறேன் பாரு….” என்று இன்பன் கூற
“என் ஃபிரண்ட்க்கு இன்னிக்கு பர்த்டே அதுனால நான் அவளுக்கு விஷ் பண்ணி கிஸ் கொடுத்தேன்…. நீ மட்டும் வேணி அத்தை பர்த்டேவுக்கு அவங்களுக்கு விஷ் பண்ணி கிஸ் கொடுத்தியே…. நான் என்ன அதை அம்மா கிட்ட போட்டடா கொடுத்தேன்?” என்று கூறிய ஆதவ் கிருஷ்ணனின் கூற்றில் அதிர்ந்தவள்
“இதுக்கு மேல நான் இங்கிருந்தா என் மானம் போயிடும் நான் வீட்டுக்கு போறேன்ப்பா….” என்று நீலவேணி இன்பனிடம் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டாள்.
தன்னெதிரில் தன் கால்முட்டி வரையிருக்கும் உயரத்தில் நின்று தன்னை முறைத்து கொண்டிருக்கும் ஆதவ் கிருஷ்ணனின் உயரத்திற்கு ஏற்ப குனிந்தவன்
“நான் உன் அம்மா கிட்ட உன் ஸ்கூல்ல நடந்த எதையும் சொல்லமாட்டேன்….” என்று இன்பன் இரகசியமாக கூறியவாறு அவனிடம் தன் வலது கரத்தினை நீட்ட
“நானும் உன் அக்கா கிட்ட வீட்ல நடந்த எதையும் சொல்லமாட்டேன்….” என்று ஆதவ் கிருஷ்ணனும் இரகசியமாக கூறி தன் வலது கரத்தினால் அவனுடன் கைக்குளுக்கி கொள்ள
“புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்….” என்று இன்பனால் தன் மனதில் நினைக்க மட்டுமே முடிந்தது.
சிறிது நேரத்தில் ஆழினி குளித்து முடித்து வெளியில் வர, மூவரும் ஒன்றாக சமைத்து இரவு உணவினை உண்டு முடித்தனர். ஆனால் உணவு உண்ணும்போதும் இன்பன் மற்றும் ஆதுவின் இடையில் யார் முதலில் உண்டு முடிப்பார்கள் என்று போட்டி நிகழ்ந்தேர அவர்களுக்கு நடுவில் நடுவராய் மாட்டிய ஆழினியின் பாடுதான் திண்டாட்டமாயானது.
மூவரும் உணவினை உண்டு முடித்து சமையலறையை ஒன்றாக சுத்தம் செய்துவிட்டு அவரவர் படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். அறையிலிருந்த மெத்தையில் அமர்ந்திருந்தவள் தன் மடியில் படுத்து தன்னிடம் பல கதைகளை கூறி கொண்டிருக்கும் அவளின் கண்ணனது தலையை ஆதுர்யமாய் கோதி கொண்டிருக்க, அவள் மனமோ ஒருநிலையில் நில்லாமல் பல்வேறு சிந்தனைகளில் சுழன்று கொண்டிருந்தது.
“அம்மா….” என்று அழைத்த ஆதவ் கிருஷ்ணனின் குரலில் தன் சிந்தனையை விடுத்தவள் அவனை என்ன என்பதை போல் பார்க்க
“தூக்கம் வருது…. பாட்டு பாடும்மா….” என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்கும் குழந்தையின் அழகை கண்டதும் அவளது மனதில் நிறைந்திருந்த கவலைகள் யாவும் காணாமல் போனது.
இது இவ்விருக்குள்ளும் தினமும் நடக்கும் அழகான நிகழ்வுகளில் ஒன்று. பிறந்ததிலிருந்து இன்று வரை ஆழினி பாடும் பாடலை கேட்டு தான் அவளின் பாலகன் துயில் கொள்வான். மருத்துவமனையில் இரவு நேரப் பணிக்கு ஆழினி செல்லும் நாளெல்லாம் இன்பனுக்கும் ஆதவுடன் இரவு நேரப் பணியும், அதனுடன் இலவச இணைப்பாக தலைவலியும் வந்துவிடும். அலைபேசியின் அழைப்பும் அதில் குரல் சேமிக்கும் ஒலிப்பானும் இல்லையென்றால் இன்பனின் நிலை கவலைக்குரியது தான்.
தன் மடியில் படுத்திருக்கும் நீலக்கண்ணனின் சுருள் முடியை கோதியவள் அவனது மார்பில் மெல்லமாக தட்டியவாறு பாட தொடங்கும் நேரம் தன் அறையிலிருந்து வந்த இன்பனும் அவனது சகோதரியின் மற்றொரு மடியில் படுத்துக்கொள்ள அவ்விருவரது தலையையும் கோதியவள் தன் பாடலை பாடத் தொடங்கியிருந்தாள்.
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ….
என்ற பாடலை ஆழினி பாடத்தொடங்க, அடுத்த பத்து நிமிடத்தில் இன்பனும் ஆதவ் கிருஷ்ணனும் உறங்கியிருந்தனர்.
அவ்விருவரின் தலைக்கு அடியில் தலையணையை வைத்துவிட்டு அவர்களின் துயில் கலையாதவாறு எழுந்தவள் ஆதவ் கிருஷ்ணன் அருகில் சென்று படுத்து கொண்டாள்.
தன்னருகில் பத்து மாதம் வயிற்றில் சுமந்த அவளின் மகனையும், அவளது தாயின் கைகளில் தவழ்ந்திருந்தவனை இரண்டு வயதிலேயே மற்றொரு தாயாய் கைகளில் மட்டுமல்லாது மனதில் சுமந்த தன் சகோதரனையும் இமைக்காது பார்த்து கொண்டிருந்தவளின் மனக்கண்ணில் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நிழற்படமாய் காட்சியளிக்க, அதிலிருந்து சிரமப்பட்டு மீண்டவள் தன் மகனின் தலையை கோதியவாறு
“உனக்கு அப்பா வேணுமா கண்ணா? அப்பா வேண்டாமே…. உனக்கு எல்லாமாவும் நான் இருப்பேன் கண்ணா…. உனக்கு அப்பாவும் நான்தான் அம்மாவும் நான்தான்…. இதை யாராலையும் மாத்த முடியாது….” என்று தன் மனதில் சூளுரைத்தவள் அவளின் கண்ணனை இறுக்கமாக அணைத்தவாறு உறங்க தொடங்கிவிட்டாள்.
ஒளி வீசும்….
