Skip to content
Post Views: 209
நேற்றிரவு தன் மனைவி ஷைலஜாவுடன் நிகழ்ந்த முதல் கூடலை நினைத்து தண்ணீரோடு தன் கண்ணீரை கரைத்தவன் வெகுநேரத்திற்கு பிறகு தான் குளியலறையிலிருந்து வெளியில் வந்திருந்தான். விஜய சிவமாறன் வெளியில் வரவும் தன் உறக்கத்திலிருந்து ஷைலஜா எழவும் சரியாக இருந்தது.
ஷைலஜாவை நேருக்கு நேர் பார்க்கும் சக்தியற்று வேறெங்கோ வெறித்தவன்
Advertisement
“சாரி…. நேத்து நான்…. இப்படி நடக்கும் எதிர்பார்க்கல….” என்று வார்த்தை வராமல் தடுமாற்றத்துடன் திக்கி திணறும் விஜய சிவமாறனை கண்டு சிரித்தவள்
“எதுக்கு சாரி? என் சம்மதத்தோட தான எல்லாம் நடந்துச்சு? அப்புறம் என்ன?” என்று சாதாரணமாக கூறிவிட்டு எதுவும் நடவாதது போல் குளியலறைக்குள் புகுந்து கதவடைத்த ஷைலஜாவின் செயல் விஜய சிவமாறனின் மனதை மேலும் இரணமாக்கியது.
Advertisement
Advertisement
அவள் தன்னை கணவனாக ஏற்றுக்கொண்டாள், ஆனால் நான் தான் பெயர் கூட அறியாத ஒரு பெண்ணை நினைத்து நிகழ்காலத்தில் கடந்தகால வாழ்க்கையை தேடுகிறேன் என்று எண்ணியவன் அந்நொடி முதல் ஆழினியை தன் மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்.
முதல் காதல் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய ஒன்றா என்ன? சில நேரங்களில் அது நினைவுகளில் இம்சித்தாலும், வாழ்க்கை கற்று கொடுத்த பாடங்களுக்கு பிறகு, அந்த நினைவுகளை மனமானது தன்மேல் சுமந்தபடியே நகர்ந்து செல்ல பழகிவிடுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களும் தோல்வி அடைந்தவர்களும் இன்றளவும் இருக்க தானே செய்கிறார்கள்?
Advertisement
நொடிகளும் நிமிடங்களாக, நிமிடங்களும் நேரங்களாக கரைய தொடங்கியது. விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவின் திருமணம் முடிந்து இன்றோடு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. இந்த மூன்று மாதத்தில் காதல் கதைகள் பேசிய நேரத்தை விட சண்டையிட்ட நேரங்கள் தான் அதிகம்.
தினந்தோறும் நண்பர்களுடன் வெளியில் செல்வதும், தேவையில்லாமல் பணத்தை செலவழிப்பதும் குறிப்பாக வாரத்தில் நான்கு நாட்கள் குடித்துவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வருவதுமாக இருந்த ஷைலஜாவின் செயலை கண்டு திருமணமான பத்தாவது நாளிலேயே இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று கோபமடைந்த விஜய சிவமாறன் அவளுடன் சண்டையிட தொடங்கிவிட்டான். நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் ஷைலஜாவும் சண்டையிட ஆரம்பிக்க, இறுதியில் விஜய சிவமாறன் தான் பொறுத்து போக வேண்டிய சூழல் ஏற்படுவது போல் நிலை மாறிவிடும். ஆனால் இவை அனைத்தும் அவர்களின் அறையில் மட்டுமே நிகழ்ந்தேருவது போல் பார்த்து கொள்பவன் தாய் தந்தையரின் முன்பு தன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதை போல் காட்டி கொள்வான்.
திருமணமான நான்காவது நாளில் தன் தந்தையுடன் விஜயாஸ் கஃபே சென்ற விஜய சிவமாறன், ஷைலஜா என்று நினைத்த ஆழினியின் புகைப்படம் எவ்வாறு தன் மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டான். இதனால் இனி என்ன பயன்? அனைத்தும் முடிந்தாகிவிட்டது. இது எக்காரணம் கொண்டும் தன் தாய் தந்தையருக்கு குறிப்பாக ஷைலஜாவிற்கு தெரிய கூடாதென்று நினைத்தவன் தன் மின்னஞ்சலில் பதிவிறக்கி வைத்திருந்த புகைப்படைத்தையும், மனதிலிருந்து ஆழினியையும் அழித்துவிட்டான். ஆனால் இடது மார்பில் அவன் ஆசையாக பச்சை குத்தியிருந்த ‘செல்லம்மா’ என்ற பெயரினை தான் அவ்வளவு எளிதில் அவனால் அழிக்க முடியவில்லை என்று கூறுவதைவிட, அதனை அழிக்க மனம் வரவில்லை என்று கூறினால் சரியாக இருக்கும்.
நாட்களும் அதன் போக்கில் செல்ல, உடனிருந்தாலும் தனித்திருந்தாலும் விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவின் உலகம் தனித்தனியாக தான் இருந்தது. புதுமண தம்பதியர்களுக்கு நடுவிலிருக்கும் கெஞ்சல் கொஞ்சல் மொழிகள், சிறுசிறு குறும்புகள், யாருமறியாமல் சீண்டி விளையாடும் பொழுதுகள், இவ்வளவு ஏன் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிய நொடிகளை தேடினால் கூட கிடைக்கும் பதில் பூஜ்ஜியம் தான்.
ஷைலஜாவுடனான வாழ்க்கையை விஜய சிவமாறனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று கொள்ள தொடங்கினாலும் அவனின் மனநிலை நிம்மதி இல்லாமல் தவித்து கொண்டிருந்தது. காரணம், முதல் முறை அவளுடன் கொண்ட கூடலினால் உண்டான குற்றவுணர்வில் தவித்தவன் ‘தன் சுயநினைவில்லாமல் நிகழ்ந்த கூடலானது இதற்கு பிறகு காதலோடு தான் நிகழவேண்டும்’ என்று நினைத்து சபதமெடுத்த விஜய சிவமாறன் அன்று இரவே அவளுடன் இணைந்துவிட்டான்.
தன் மனதை தன்னால் அடக்க முடியாமல் இருப்பதை நினைத்து உள்ளுக்குள் வருந்தியவன் இரவானால் ஷைலஜாவை நாடும் தன் உடலை நெருப்பில் பொசுக்கிவிடும் அளவிற்கு கட்டுக்கடங்காமல் பெருங்கோபம் எழுந்தது. ஏனோ அந்நொடி தன்னை சுற்றி மாயை தோன்றுவதை போல் உணர்ந்தவன், அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு நொடிகளிலும் முள் மீது நிற்பவன் போல் வேதனையில் தவித்தான் விஜய சிவமாறன்.
தன் மனையாள் என்றாலும் சிறிதளவு கூட காதலே இல்லாமல் அவளுடன் இணைவதை நினைத்து புழுவாய் துடித்தவன் தன் கவனத்தை வேலையில் செலுத்த தொடங்கியிருந்தான். சிறிது நாட்களில் அதில் வெற்றியும் கண்டிருந்தான்.
தன் குடும்ப கடையான விஜயாஸ் கஃபேவை, விஜயாஸ் ரெஸார்ட்டாக உருவாக்கும் பொருட்டு அதன் கிளையை புதுச்சேரியில் செயல்படுத்த தொடங்கியிருந்த நேரம். மூன்று மாதத்தில் வேலை முடித்தாக வேண்டும் என்ற காலக்கெடுவில் வேலைகள் அனைத்தும் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது. வேலைப்பளுவால் வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது புதன் மற்றும் வியாழன் அன்று மட்டுமே தன் இல்லத்திற்கு வருபவன், அப்பொழுதும் கூட விஜயாஸ் கஃபேவில் தன் தந்தையோடு உதவிக்கு சென்றுவிடுவான்.
ஷைலஜாவிடம் சில நேரம் நண்பனாக பழகினாலும், பல நேரம் சண்டையிட்டு வாக்குவாதம் செய்தாலும், இரவில் அவளை நாடுவதை தவிர்ப்பதற்கு, வேலை மட்டுமே பிரதானம் என்ற முடிவில் நிற்க நேரமில்லாமல் ஓடிய விஜய சிவமாறன் தன் தாய் மற்றும் தந்தையையும் குறிப்பாக தன் மனைவியை பற்றி நினைக்காமல் இருந்தது தான் அவன் செய்த மாபெரும் தவறு.
இரவு ஏழு மணி போல் இல்லத்திற்குள் நுழையும் விஜய சிவமாறனை கண்டு புன்னகைத்தவர்
“வாங்க தம்பி, புதன் கிழமை தான எப்பவும் வருவீங்க, இன்னிக்கு என்ன செவ்வாக்கிழமை அன்னிக்கே வந்துட்டீங்க?” என்று வினவிய செல்வியிடம்
“காலையில அம்மா கிட்ட பேசினேன் அக்கா, அவங்க பேச்சே சரியில்ல…. என் கிட்ட ஏதோ மறைக்குற மாதிரி இருக்கு…. எனக்கு அங்க வேலையே ஓடல அதான் வந்துட்டேன்…. ஏதாவது பிரச்சனையா அக்கா? அம்மாவும் அப்பாவும் எங்க? ஷைலஜா எங்க?” என்று விஜய சிவமாறன் கவலையாக
“அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு போயிருக்காங்க தம்பி…. ஷைலஜா…. அவங்க எங்க போனாங்கன்னு தெரியாது….” என்று செல்வி கூறியதை கேட்டவன் தன்னெதிரிலிருப்பவரை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.
விஜய சிவமாறனின் பார்வையினது அர்த்தத்தை புரிந்து கொண்டவர்
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, ஷைலஜாவோட நடவடிக்கைகள் எதுவும் எனக்கு பிடிக்கல, முக்கியமா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சுத்தமா பிடிக்கல….” என்று செல்வி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவன் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருக்க, தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டவர் தான் கூற வந்த கூற்றை முழுவதுமாக கூற தொடங்கிவிட்டார்.
“என்னென்னு சொல்றது தம்பி, கல்யாணமான புதுசுல எல்லா பொண்ணுங்களுக்கும் தன் மாமியார் மாமனார் கிட்ட, இவ்வளவு ஏன் நெருங்கின சொந்தத்துல கல்யாணம் பண்ணியிருந்தாலுமே அவங்க கிட்ட ஒரு ஒட்டுதல் வர கொஞ்ச நாளாகும்…. ஆனா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல அந்த ஒட்டுதல் சீக்கிரமே வந்துடும், சில நாளிலேயே ஒரு அன்னியோன்யம் வந்துடும் அதை நான் நிறைய பேர் கிட்ட பார்த்திருக்கேன் ஆனா உங்க கிட்யயும் ஷைலஜா கிட்டயும் அதை நான் பார்க்கல தம்பி….
வாரத்துல ரெண்டு நாள் வீட்டுக்கு வந்துட்டு போயிடுறீங்க, இருக்கிற ரெண்டு நாளாவது புருஷனும் பொண்டாட்டியும் ஒன்னா இருக்கீங்களா? வேலை வேலைன்னு நீங்க ஒரு பக்கம் ஓடிடுறீங்க…. ஷைலஜா இந்த வீட்டு பொண்ணு தான? உங்களுக்கு இருக்க உரிமை எல்லாமே அந்த பொண்ணுக்கும் இருக்கு, ஆனா இதுவரை அவங்க இந்த வீட்டு மருமகளா ஒருதடவை கூட நடந்தது இல்ல…. ஷாப்பிங், பார்லர், பர்த்டே பார்ட்டி, மேரேஜ், ஃபிரண்ட் கூட வெளிய போறேன்னு ஏதாவதொரு காரணம் சொல்லி தினமும் வெளிய போயிட்டு தான் இருக்காங்க…. நீங்க எப்போவெல்லாம் வீட்டுக்கு வருவீங்களோ அப்போ மட்டும் வீட்டுல தங்குவாங்க, அதுக்கு அடுத்த நாள் நீங்க போன பிறகு மறுபடியும் எல்லாம் ஆரம்பிச்சிடும்…. வீட்டிலிருக்கவங்களை மதிக்கிறது கிடையாது, என்னை விடுங்க நான் இந்த வீட்டு வேலைக்காரி ஆனா அப்பா அம்மா? அவங்க கிட்ட ஷைலஜா பேசி நான் பார்த்ததேயில்ல…. ‘எப்போ வெளிய போறேன், எப்போ வரேன்னு’ சொல்ற பழக்கம் இல்ல….
முந்தாநாள் வெளிய போன உங்க பொண்டாட்டி இன்னிக்கு காலையில தான் வீடு திரும்புனாங்க தெரியுமா? முந்தாநாள் மதியம் போல வெளிய போனவங்க ராத்திரி எட்டாகியும் வீட்டுக்கு வரல…. என்னவோ ஏதோன்னு பயந்து போய் ஷைலஜாவுக்கு பருவதம்மா ஃபோன் பண்ணா ‘ஃபிரண்ட் வீட்டுல இருக்கேன் இங்கிருந்து அப்படியே அப்பா அம்மா வீட்டுக்கு போயிடுவேன்னு’ தகவல் சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க…. அம்மாவுக்கு மனசே கேட்கல, நீங்க இங்க இல்லாம உங்க பொண்டாட்டியை என்னென்னு கண்டிக்கிறதுன்னு தெரியாம அப்பாவும் அம்மா கிட்ட ‘சின்ன பொண்ணு போக போக சரியாகிடும்னு’ சொல்லி சமாதானம் பண்ணாரு…. ரெண்டு நாள் கழிச்சு இன்னிக்கு காலையில வீட்டுக்கு வந்தவங்க மாமனாரையும் மாமியாரையும் துளிக்கூட மதிக்காம உங்க ரூம்க்கு போய் கதவை அடைச்சிட்டு படுத்துட்டாங்க…. ஆறு மணிக்கு அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு போனவுடனே இவங்க வெளிய கிளம்பிட்டாங்க இன்னும் வீடு வரல….” என்று இத்தனை நாட்கள் தன் மனதில் தேக்கி வைத்த அனைத்தையும் விஜய சிவமாறனிடம் செல்வி கூறி முடிக்கவும் விஜய திருநாவுக்கரசரும் பருவதமும் இல்லத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது.
இல்லத்திற்குள் நுழைந்த விஜய திருநாவுக்கரசரும் பருவதமும் கூடத்தில் அமர்ந்திருந்த விஜய சிவமாறனை கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அவன் அருகில் சென்று நலம் விசாரித்தவர்களிடம்
“ஷைலஜா எங்கம்மா? எங்க போயிருக்கா? எங்க போறான்னு உங்க கிட்ட சொன்னாளா அப்பா?” என்று வினவிய விஜய சிவமாறனின் கேள்வியில் திடுக்கிட்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
இருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டவன்
“ஏன் என் கிட்ட இத்தனை நாளா எதுவும் சொல்லாம இருந்தீங்க? சரி என் கிட்ட சொல்லலை, அவங்க அப்பா அம்மா கிட்டயாவது சொல்லலாம்ல? அதுவும் வேண்டாம், நீங்களாவது கண்டிக்கலாம்ல?” என்று விஜய சிவமாறன் வினவ
“இல்ல சிவா, இப்போத்தான கல்யாணம் நடந்திருக்கு? நீயும் இங்கில்ல, அதான் அந்த பொண்ணு பொழுதுப்போகாம அவங்க அப்பா வீட்டுக்கும், ஃபிரண்ட்ஸ் பார்க்கவும் போயிட்டு வருது…. சின்ன பொண்ணு தான, போக போக புரிஞ்சிக்கும்….” என்று விஜய திருநாவுக்கரசர் மகனுக்கும் மருமகளுக்கும் எவ்வித சண்டையும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கூற, அதை உணர்ந்தவன் தன் மனையாளிடம் இன்று இதை பற்றி பேசவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.
நள்ளிரவு ஒன்றரை மணிக்கு இல்லத்தின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஷைலஜாவிற்காக கூடத்தில் காத்திருந்தான் விஜய சிவமாறன். தன் கணவனை இன்று அதுவும் இந்நேரத்தில் சற்றும் எதிர்பாராதவள் முதலில் அதிர்ந்தாலும் அதை சிறிதளவும் முகத்தில் காட்டாமல்
“ஷிவ்? எப்போ வந்தீங்க?” என்று ஷைலஜா கூறி சிரிக்க, அவளை கூர்மையான விழிகளுடன் பார்த்தவன்
“எங்க போயிட்டு வர ஷைலஜா?” என்று விஜய சிவமாறன் தீர்க்கமாக வினவ, அவனது கேள்வியில் ஷைலஜாவின் புன்னகை அனைத்தும் காணாமல் போனது.
இல்லத்தின் கூடத்திற்கு அருகிலேயே பெற்றோர்களின் அறை இருப்பதால் இவ்விடத்தில் நின்று எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தவன்
“ரூம்க்கு வா….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு அறையை நோக்கி வேகமாக செல்ல, அவன் பின்னே மதுபோதையில் தள்ளாடியவாறு மாடிப்படிகளில் ஏறினாள் ஷைலஜா.
ஒளி வீசும்….
error: Content is protected !!