Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-1

  அர்.வி.கே மல்டி-ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சென்னை, என்று பொன் நிறத்தினால் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையை தாங்கிக்கொண்டு உயர்ந்து நின்றிருந்தது அக்கட்டிடம். மருத்துவமனையை சுற்றி பச்சை வண்ண தோட்டங்களும் மரங்களும் நிறைந்திருக்க ஆங்காங்கே கானம் வாசித்து கொண்டிருந்த பறவைகளோ மேற்கு நோக்கி செல்லும் சூரியதேவனை வழியனுப்பி கொண்டிருந்தது.

மருத்துவமனையின் நுழைவு வாயிலில் சிறிதாக அமைக்கப்பட்டிருக்கும் விநாயகர் கோவிலிலும் அதனை தொடர்ந்து மருத்துவமனையின் கூடத்தில் வைத்திருந்த சாய் பாபா சிலைக்கு அருகிலும் நின்ற பலதரப்பட்ட மனிதர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்களின் தாய், தந்தை, வாழ்க்கை துணை, உடன் பிறந்தோர், நண்பர்கள், உறவுகளின் உடல்நிலை நலம்பெறவேண்டுமென்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

மருத்துவ ஊர்தியின் சத்தங்கள் சிறிது பயத்தை கொடுத்தாலும் பலரது உயிரை காக்கும் தெய்வத்தின் இரதமாய் மாற,  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் நிற்க நேரமில்லாமல் உழைத்து கொண்டிருந்தனர்.

“சிஸ்டர், ஒரு எமர்ஜென்சி கேஸ்…. டாக்டர் உங்களை உடனே வர சொன்னாங்க….” என்று ஓர் செவிலியர் பதட்டமாக கூற, தன் இதழ் வரை கொண்டு சென்ற தேனீர் கோப்பையை வேகமாக வைத்துவிட்டு அச்செவிலியருடன் சென்றிருந்தாள்.



Advertisement

காலை பத்து மணியிலிருந்து அவசர சிகிச்சை பிரிவில் இதயம் செயலிழப்பினால் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஓர் முதியவருக்கு உடனிருந்து சிகிச்சையளித்து அவரை எமனிடமிருந்து மீட்டெடுத்து மருத்துவரின் ஆலோசனைகளை முதியவரின் உறவுகளுக்கு சொல்லிவிட்டு மதியம் உணவென்பதை மறந்திருந்த வயிற்றுக்கு தேனீரையாவது அளிக்கலாம் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால் இதை எதையும் ஒரு பொருட்டாக மனதில் நினைக்காமல் கடமையே கண்ணென்று அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்திருந்தாள் அவள், ஆழினி.

இருச்சக்கர வாகனத்தை அதிவேகமாய் ஓட்டியதனால் அடிப்பட்டிருந்த ஓர் இளைஞனுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமால் வலது கால் முறிவுடனும், கைகளில் ஆங்காங்கே சிறுசிறு சிராய்ப்புகளுடனும் உயிர் தப்பியிருந்தான்.

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல…. நல்லவேளை ஹெல்மெட் போட்டு இருந்ததால தலையில அடிப்படல…. ரைட் லெக்ல சின்ன ஃப்ராக்ச்சர் இருக்கு ரெண்டு மாசத்துல சரியாயிடும்…. பயப்படாதீங்க, இன்னிக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல வச்சிட்டு நாளைக்கு மதியம் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம்…. ஒரு அரைமணிநேரம் கழிச்சு ஒவ்வொருத்தரா உள்ள போய் பாருங்க…. பேஷண்ட டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்….” என்று இளைஞனின் உறவுகளிடம் கூறியவள் மென்மையான புன்னைகையுடன் அவ்விடத்திலிருந்து விடைப்பெற்றிருந்தாள்.

Advertisement

சுறுசுறுப்பாக நடந்தாலும் உடலிலிருக்கும் சோர்வு கண்களில் காட்சியளிக்க, செவிலியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள்‌ நுழைந்தவளின் கண்களுக்கு மேசையில் ஆடைப்படிந்து ஈக்கள் மொய்த்து கொண்டிருந்த அவளின் தேனீர் கோப்பை அழகாக காட்சியளித்தது. அதை கண்டு மேலும் சோர்வுற்றவள் தேனீரை எடுத்து அருகிலிருந்த தண்ணீர் குழாயில் உற்றிவிட்டு தன் இருக்கையில் அமர

Advertisement

“ஆழினி சிஸ்டர், இன்பன் அண்ணா உங்களுக்காக ரொம்ப நேரமா வெளிய வெயிட் பண்றாரு….” என்று அவளுடன் பணிபுரியும் செவிலியர் ஒருவர் வந்து கூற, அவள் கூறியதை கேட்டவள் நேரம் இப்பொழுது இரவு ஏழுமணி நாற்பத்தி ஐந்து மணித்துளிகள் என்று அழகாக காட்டும் தன் கைக்கடிகாரத்தை கண்டு தலையில் அடித்துக்கொண்டாள்.

தன்னெதிரில் நின்றிருந்த செவிலியருக்கு நன்றியை தெரிவித்தவள் தன் கைப்பையினையும் உணவு பையினையும் எடுத்துக்கொண்டு வேகநடையுடன் மருத்துவமனையின் வரவேற்பு பகுதிக்கு சென்றிருந்தாள். வரவேற்பறையில் அமைத்திருந்த காத்திருப்பு இருக்கையில் கோபமாக அமர்ந்திருந்தவனின் அருகில் வேகமாய் விரைந்தவள்

“சாரி இன்பா…. ஒரு எமர்ஜென்சி கேஸ் அதான் லேட்….” என்று கூறியவாறு தன் குண்டு கண்களால் அவ்விடத்தை சல்லடையிட்டு அலசிக்கொண்டிருந்தாள் ஆழினி.

Advertisement

“யாரை தேடுற?” என்று இன்பன் வினவ, அவனை பாவமாக பார்த்தவள்

     “ஆதவ் வரலையா?” என்று சோகமாக வினவிய ஆழினியை முறைத்தவன் அவள் கைகளில் வைத்திருந்த உணவு பையினை வாங்கிய அந்நிமிடமே தன்னெதிரில் நின்றிருப்பவளை தீயாய் முறைத்து கொண்டிருந்தான்.

இன்பனின் முறைப்பிற்கான காரணத்தை கண்டறிந்தவள்

“அதான் சொன்னேன்ல எமர்ஜென்சி கேஸ்னு….” என்று உள்சென்ற குரலில கூறியவளின் கூற்றை காதில் வாங்காது வேகநடையுடன் முன்னே சென்றவனின் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தாள் ஆழினி.

தன் கரங்களை இறுக்கமாக பிடித்திருக்கும் அவளது கரங்களை பிரிக்க மனமின்றி அவளை போல் இறுக்கமாக பிடித்தவாறு நடக்க தொடங்கியிருந்தான் ஆழினியின் செல்ல தம்பி இன்பன்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னருகிலிப்பவளின் கரம் பற்றி நடந்தவன், தனக்காக அவளது வாழ்வின் விதியை மாற்றியவளின் தியாகத்தை அறிந்தவன், உயிரை வதைக்கும் அளவிற்கு மனதில் துன்பம் நேர்ந்தாலும் அதை என்றுமே தனக்குள்ளேயே வைத்து மறுகுவளின் நிலையை உணர்ந்தவன், இருபத்தியெட்டு வயதானாலும் அவ்வளவு எளிதில் தன் தமக்கையின் கரத்தினை விடுவிக்கும் அளவிற்கு பிறந்த நிமிடத்திலிருந்து இந்நிமிடம் வரை  அவனுக்கு தைரியம் வரவில்லை.

இன்பனுடன் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்தவள்

“இன்பா, ஆதவ் ஏன் வரல?” என்று ஆழினி வினவ

“அவன் உன் மேல கோபமாயிருக்கான்….”

“ஏன்? நானென்ன பண்ண?”

“பண்றதையும் பண்ணிட்டு கேள்வியா கேக்குற?”

“நீ சொல்றது எதுவும் எனக்கு புரியல இன்பா…. என்னென்னு சொல்லேன்?”

“ப்ச்ச்…. என் கிட்ட எதுவும் கேக்காத ஆழினி, வீட்டுக்கு வந்து நீயே பாரு….” என்று கோபமாக கூறிய இன்பனை பாவமாக பார்த்தவள் இல்லத்திற்கு செல்லும் வரை அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

********

     இரவின் ராணியாம் பௌர்ணமி நிலவவள் வானின் உச்சியில் நின்று இருளை நீக்கி ஒளிவீசி கொண்டிருந்தது. சுற்றியெங்கும் பூந்தோட்டமும் ஆங்காங்கே மரங்களும் அமைந்திருக்க, அதற்கு மத்தியில் மூன்று அடுக்குமாடிகள் கொண்ட அழகான மாளிகை ஒன்று நிலவு வெளிச்சத்தில் அழகாக ஜொலித்தது.

இரவு நேரத்தின் அமைதியை கலைக்கும் விதமாய் கருப்பு நிற மகிழுந்தொன்று மாளிகைக்குள் சீரான வேகத்தில் நுழைய, மகிழூந்திலிருந்து வெள்ளை நிற சட்டையும் கருப்பு நிற கால்சாராயும் அணிந்து கம்பீரமாய் இறந்கியிருந்தான் அவன். சிரிப்பு என்பதை அவனது உதடுகளும் கண்களும் மறந்தாலும் தன் அன்னை ஒருவருக்காகவே உயிர் வாழ்கிறேன் என்று சொல்லாமல் வாழந்து காட்டும் ஜீவன். தனியோராளாய் நின்று தொழில் தொடங்கி தன் கடின முயற்சியால் விரல்விட்டு எண்ணும் ஐந்து கோடீஸ்வரர்களில் ஒருவனாய் திகழ்ந்திருந்தான் அவன், விஜய சிவமாறன்.

இல்லத்திற்குள்‌ வந்ததும் அவனது கண்கள்‌ முதலில் கண்டது ஆளுயர உயரத்திற்கு சுவற்றில் மாட்டியிருந்த படத்தில் தெய்வீக முகத்துடன் அழகாக சிரித்திருக்கும் அவனது தந்தை விஜய திருநாவுக்கரசரை தான். சில வருடங்களாய் மனதில் இரணங்களுடன் சுற்றி திரிந்தவனுக்கு பேரிடியாய் வந்தது அவனது தந்தையின் இழப்பு. இவனை விட அதிகமாய் பாதிக்கப்பட்டிருந்தார் அவனது தாய் பருவதம்.

ஒரே மகனின் வாழ்க்கையை நினைத்து கவலையில் வருந்தியவர் தன் காதல் கணவனின் பிரிவில் முற்றிலுமாய் மனமுடைந்துவிட்டார். தந்தையின் பிரிவில் வாடும் தன் தாயின் மனதினை தேற்றும் வழி அறிந்தவன் அதை அறியாதது போல் அவர் முன் நடித்து, தன் வாழ்நாளிலேயே அதை முற்றிலுமாய் புறக்கணித்துவிட்டான்.

தன் தந்தையின் படத்தை ஒருநிமிடம் பார்த்துவிட்டு தாயின் அறையை நோக்கி நடக்க தொடங்கியிருந்தான் விஜய சிவமாறன். அறையிலிருந்த மெத்தையில் படுத்திருந்த தன் அன்னையின் அருகில் சென்றவனின் காலடி சத்தத்திலேயே விழித்து கொண்டார் பருவதம்.

“வா சிவா…. சாப்பிட்டியா?” என்று பருவதம் வினவ, அவரிடம் ஆமென்று கூறி பொய்யுரைத்தவன்

“கால் வலி எப்படியிருக்கு அம்மா? மாத்திரை சாப்பிட்டீங்களா?” என்று வினவியவனிடம்

“சாப்பிட்டேன் ப்பா…. வலி இருக்கு ஆனா பரவாயில்ல…. அப்புறம் சிவா…. நான்….” என்று பருவதம் அடுத்த வார்த்தை கூற முடியாமல் தயங்க, அவர் எதை பற்றி கூற வருகிறார்  என்பதை உணர்ந்தவன்

“தூங்குங்கம்மா…. நாளைக்கு ஹாஸ்பிடல் போகனும்….” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்தவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார் பருவதம்.

“கோவப்படாத சிவா…. நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா…. எனக்கு அப்புறம் உன்னை பார்த்துக்க யாரு இருக்கா சொல்லு? கலகலன்னு இருந்தவன் இப்போ எப்படி மாறிப்போயிருக்க? உன்னை பத்தி நினைச்சாலே எனக்கு பயமாயிருக்கு…. பழசெல்லாத்தையும் மறந்துடு சிவா…. ஒரு கல்யாணம் பண்ணிக்கோப்பா, எனக்காக….” என்று நாதழுதழுக்க கூறிய பருவதத்தை கண்டு வலிகளுடன் சிரித்தவாறு

“கல்யாணமா? அந்த வார்த்தைக்கான அர்த்தம் என் வாழ்க்கையில இல்லாமையே போயிடுச்சும்மா….” என்று கூறிவிட்டு ஒருநொடி அமைதிகாத்தவன்

“நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு ஹாஸ்பிடல் போகனும்…. தூங்குங்கம்மா….” என்று கூறி தன் அன்னையை தூங்க வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்திருந்தான் விஜய சிவமாறன்.

     இரவு உணவினை உண்ண மனமில்லாமல் தன் அறைக்குள் நுழைந்தவன் அவனது மெத்தையில் பொத்தென்று சரிய, தன் கண்களை மூடியவின் முன்பு கடந்த கால நிகழ்வுகள் யாவும் நிழற்படமாய் ஒளிபரப்ப தொடங்கியிருந்தது. அதிலிருந்து சிரமப்பட்டு மீண்டவன் தன் அறையிலிருந்த பால்கனிக்கு சென்று வானில் ஒளிரும் நிலவினை வெரிக்க தொடங்கிவிட்டான். வழமைப்போல் அந்நாளின் இரவும் அவனுக்கு தூங்கா இரவாகிப்போனது.

 

ஒளி வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!