Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 31

கருப்பன் ஆட்டம் 31



Advertisement

 வானத்தின் உச்சி அமர்ந்து இருந்த அந்த பௌர்ணமி நிலவுக்கு என்ன கவலையோ தெரியவில்லை முழுதாக வெளிப்படுத்த வேண்டிய பிரகாச கீற்றை கூட சற்று மங்கலாகவே அன்றைய தினம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

Advertisement

 மலர்விழி இரவு உணவாக கருப்பனுக்கு மிகவும் பிடித்த கருவாட்டு குழம்பு செய்து அதனை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

 அப்பொழுது கருப்பனோ “மலரு இன்னைக்கு வெளிய பௌர்ணமி நிலா சூப்பரா தெரியுது..! நம்ம ஏன் சாப்பாட்ட வெளியே வச்சு சாப்பிடக்கூடாது….!”என்று கேட்டான்.

Advertisement

“சூப்பர் மாமா நானும் உங்க கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்… ஆனா அந்த பாம்பை நெனச்சு பயந்துகிட்டு தேன்…!”என்று அவள் இழுத்தாள்.

“அந்த பாம்பு அது வந்து வேலய கனக் கச்சிதமா முடிச்சிட்டு போயிடுச்சு…, இதுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு வராது…. நீ வா நம்ம வெளியவே உக்கார்ந்து சாப்பிடலாம்….!” என்று அவளை மேலும் கீழுமாக ஆழ்ந்து பார்த்து கண்ணடித்து கூறினான்.

அதன் பின் இருவரும் சென்று வெளியில் உள்ள பொட்டலில் பாயை விரித்து அதில் அமர்ந்து சாப்பிட தயாராகினர்.

 அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் தர்மன். அவனை பார்த்ததும் இன் முகமாக அவனை வரவேற்றாள் மலர்.

“அண்ணே வாங்க….., நான் உங்களைதேன் நினைச்சுட்டு இருந்தேன்…. இப்ப தான் இவர்கிட்ட சொல்லி உங்கள கூப்புடனும்னு நெனச்சேன்…., அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க… வாங்கண்ணே… சாப்பாடு ஆறிட போகுது…,!” என்று மலர் கூறியவள் தர்மனுக்கும் கருப்பனுக்கும் சேர்த்து இரண்டு தட்டில் உணவினை பரிமாறி அவர்கள் கையில் கொடுத்தவள் பின் தனக்கும் ஒரு தட்டில் உணவை பரிமாறினாள். 

தர்மன் அதன் வாசத்தை உள்ளிழுத்தவன் “ஆத்தா மலரு கருவாட்டு குழம்பு…., மனமே சூப்பரா இருக்குதே…..! அப்போ ருசியும் அருமையா தான் இருக்கும் போ என்று கூறியவன் சோற்றுடன் சேர்த்து குழம்பையும் பிசைந்தான்.

கருப்பன் அந்த உணவின் வாசத்தை உள்ளிழுத்து உணவை பிசைந்து வாயின் அருகே கொண்டு சென்ற நேரம் சற்று தள்ளி இருந்த மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாடு எப்பொழுதும் விட என்று அதிக சத்ததோடு ஒலி எழுப்பியது.

 அதனை கவனித்த கருப்பன் “என்னடா தருமா மாட்டு கொட்டையில இருந்து லட்சுமி சத்தம் போடுது….?” என்று கேட்டான்.

அதற்கு தர்மனோ “தெரியலையாடா…! சரி வா என்னன்னு போய் பார்த்துட்டு வருவோம்…!” என்று கையில் சாப்பிடுவதற்காக எடுத்த உணவினை சாப்பிடாமல் அப்படியே தட்டில் போட்டுவிட்டு மாட்டு கொட்டகைக்கு சென்றனர். 

 அய்யனாரிடம் செல்வம் கூறியதைப் போலவே, அடுத்த சில மணித்துளிகளில் அந்த கிராமத்திற்குள் நுழைந்து இருந்தனர் மாதேஷ், தேவி, நடேசன்,மீனா மற்றும் மீனாவின் கணவன் ராகுல் என அனைவரும்….

காரில் இருந்து இறங்கிய மீனா எதிரில் இருந்த செல்வத்தை முறைத்தவள் பின் தன் கணவன் ராகுலின் பின்னால் சென்று நின்று கொண்டாள். ராகுலுக்கும் செல்வம் மீது கோவமும் கொலை வெறி அளவுக்கு மீறி இருந்தாலும் கூட தற்பொழுது அதனை கட்டுப் படுத்தி கொண்டு தான் வந்த காரியம் ஆக வேண்டும் என்று எண்ணி அமைதியாக இருந்தான்.

மாதேஷின் அருகில் நின்றிருந்த தேவியையும், மீனாவையும் பார்த்த அய்யனாருக்கு ஆத்திரம் கண்ணை மறைக்க, அவன் அவர்களை அடிப்பதற்கு பாய்ந்தான். அவர்கள் இருவரையும் செல்வமும் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை….தான் மற்றவனுக்கு செய்ய நினைத்த விஷயம் தனக்கே எதிராக திரும்பியதை போன்ற உணர்வு. அவனுக்குள்ளும் பயம் தோன்றவே செய்தது. 

மாதேஷ் அய்யனாரை பார்த்தவன் “ப்ரோ அன்னைக்கு ஊருக்கு வெளியில இருக்குற ஆலமத்து கிட்ட வச்சு உங்ககிட்ட தான அட்ரஸ் கேட்டேனே….! அப்போ ஏன் ப்ரோ உண்மைய சொல்லல, அப்போவே சொல்லி இருந்தா நான் அன்னைக்கே மலர இங்க இருந்து கூட்டிட்டு போய் இருப்பன்ல…!” என்று கேட்டான்.

ஆனால் அது எதுவும் அய்யனாரின் காதில் விழவில்லை, அவன் இப்பொழுது பல்லை கடித்து கொண்டு மீனாவை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

அதனை பார்த்த செல்வமோ எங்கே தனது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமோ என்று பயந்து “ஏய் அய்யனாரு இப்போ எதுக்கு நீ இவ்வளவு கோவப்படுற…?”

“அண்ணே இவய்ங்களையெல்லாம் யாருண்ணே ஊருக்குள்ள விட்டது… இந்த மானங்கெட்ட ஜென்மங்கள புடிச்சு முதல்ல ஊருக்கு வெளிய தள்ளுண்ணே…!” என்று கூறினான்.

அதற்கு செல்வமோ “ஏய் அய்யனாரு செத்த நேரம் அமைதியா இருப்பா…, இந்தப் பயதான்ப்பா மலருக்கு பார்த்த மாப்ள…, இவங்க எல்லாம் இப்போ அந்த பையனோட சொந்தக்காரங்களா இருப்பாங்க போல….!”

“யாரு வேணா வந்துட்டு இருந்துட்டு போகட்டும்..,ஆனா இந்த ரெண்டு பேரு மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு மேல இந்த ஊருக்குள்ளயே இருக்க கூடாது….! அப்பிடி இருந்தா நானே இவளுக ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்ருவேன்” என்று சொல்லிக் கொண்டு முன்னே வந்தான் அய்யனார்.

 அதனைக் கேட்ட மீனாவின் கணவன் ராகுலுக்கும், தேவியின் கணவர் நடேசனுக்கும் அய்யனாரின் மீது சிறு கோபமும் எட்டி பார்க்கவே செய்தது.

ஆனால் அவர்களுக்கோ தற்சமயம் இவர்கள் தானே தன் மகள் இருக்கும் இடத்தை தங்களுக்கு தகவல் கூறியது என்று எண்ணி அமைதியாக இருந்தனர்…! 

பாய்ந்து கொண்டிருக்கும் அய்யனாரை பிடித்து அடக்கிய செல்வமோ “அய்யனாரு இருப்பா உனக்கு இன்னுமா விஷயம் தெரியல….? எனக்கு என்னமோ அந்த நிக்குதே உங்க சின்னம்மா தேவியோட பொண்ணு தான் மலரா இருக்குமோன்னு எனக்கு சந்தேகம் வருது பா….! என்று கூறினான்.

அதனை கேட்டு அதே ஆத்திரத்தில் திரும்பி செல்வத்தை பார்த்தான் அய்யனார்.  

“இங்க வந்திருக்கிறவங்கள பார்த்தா எனக்கு அப்படி தான் தெரியுது. உன் அத்தை மகன்னு தெரிஞ்சதனால தான் இந்த மீனா புள்ளையும் அவனை கல்யாணம் பண்ணிக்கிச்சோ என்னமோ…!” என்று செல்வம் கேட்டான்…!

“யாரோ எக்கேடோ கெட்டு ஒழியட்டும் எனக்கு அது தேவை இல்ல…!”என்று கூறிய அய்யனார் செல்வத்திடம் இருந்து தனது கையை உருவி, தோளை உதறி கொண்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டான்.

 அவன் சென்றதை உறுதி செய்து கொண்ட செல்வம் மாதேஷின் அருகில் சென்றவன்,

“இதுல யாருப்பா மாதேஷு….!” என்று ராகுலையும் மாதேஷையும் மாறி மாறி பார்த்து கேட்டான்.

 அதற்கு மாதேஷ் “நான் தாங்க மாதேஷ், இவர் பெயர் ராகுல் மீனா அக்காவுடைய ஹஸ்பண்ட்” என்று மீனாவையும் ராகுலை அறிமுகம் செய்தான்.

“சரி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க எல்லாரும் கொஞ்சம் அப்படி வரீங்களா…?” என்று கூறி அவர்களை மறைவான ஒரு இடத்திற்கு அழைத்து சென்றவன், நேற்று பொழுது வரை மலருக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவர்களிடம் கூறினான்.

அதனை கேட்ட மாதேஷ் “என்கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, ஊரை விட்டு ஓடி வந்து இங்கே யார் எவன்னு தெரியாதவன் கிட்ட கழுத்தை நீட்டி கல்யாணம் பண்ணிட்டாளா…? இப்ப அவ எங்க இருக்கா…?” என்று கோபமாக கேட்டான் மாதேஷ்.

 “அந்த புள்ள இப்போ தோட்டத்து வீட்ல அந்த பய கூட தான் இருக்கு” என்று செல்வம் கூறினான்.

“உடனே என்ன அங்க கூட்டிட்டு போங்க…!” என்று செல்வத்தை அவசரப்படுத்தினான் மாதேஷ்.

“தனது கையில் கிடைத்த லட்டு போன்ற அறிய வாய்ப்பை தவற விடுவானா….! என்ன…..! உடனே அனைவரையும் அழைத்துக் கொண்டு கருப்பனின் தோட்டத்து வீட்டிற்கு கிளம்பினான்.

தேவியும் மீனாவும் ஊருக்கு வந்திருக்கும் செய்தி அந்த ஊர் முழுவதும் மீண்டும் காட்டித்தீயாய் பரவத் தொடங்கியது. 

தொழுவத்தில் மாடு கத்தியதன் பொருள் நடக்கவிருக்கும் அவலத்திற்கான குரல் என்று அப்பொழுது நண்பர்கள் இருவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. 

சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த தர்மனோ “என்னன்னு தெரியல மச்சான்….. பூச்சி வட்ட ஒன்னும் சுத்தின மாதிரியும் இல்ல, ராசு தண்ணியெல்லாம் சரியாத்தேன் வச்சிருக்கியான்….! அப்போவும் எதுக்குடா கத்துச்சுக ….?” என்று தர்மன் கேட்டுக்கொண்டே கையை கழுவி விட்டு மீண்டும் சாப்பிடுவதற்காக அமர்ந்தான்.

அவனுடனே அமர்ந்தான் கருப்பன். இருவரும் கையில் உணவு தட்டுடன் அமர்ந்திருக்க, அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தனர் மாதேஷ், ராகுல்,தேவி, நடேசன் மற்றும் மீனா என அனைவரும்.

 தூரத்திலேயே கூட்டமாக ஆட்கள் வருவதை கவனித்து பார்த்த தர்மன் “டேய் மச்சான் என்னடா, இந்நேரத்துல கூட்டமா கிளம்பி நம்ம வீட்டுக்கு வராய்ங்க…?” என்று கேட்டான்.

 அவன் கூறிய பிறகு அந்த திசையில் கவனித்த கருப்பன் “என்னடா சொல்ற…?” என்றவாறு பார்த்தான்.

அங்கே வந்து கொண்டிருந்த உருவங்கள் கிட்ட நெருங்க நெருங்க தன்னுடைய குடும்பத்தையே நிலைகுலையச் செய்த தன் அத்தை தேவியும், மீனாவும் என்பதை பார்த்த கருப்பனுக்கு உடல் முழுவதும் உலை கனல் என கொதித்தது.

 அவன் தட்டில் உள்ள உணவினை ஒரு வாய் கூட உண்ணாமல் அதனை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்தவன், சென்று கை கழுவி விட்டு தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் அவர்களை வெறிகொண்டு முறைத்து உருத்து விழித்துக் கொண்டிருந்தான்.

 மலர்விழியும் தொலைவில் வருவது தன்னுடைய குடும்பம் என்பதை கவனிக்காமல் இல்லை, அவளுக்குள் பலவிதமான எண்ணங்கள் பயங்கள் தொற்றிக் கொண்டது.

தான் திருமணத்திலிருந்து தப்பி வந்தது, அதனால் அவளின் திருமணம் தடைப்பட்டது. மாதேஷ் என்னும் பணக்காரனிடம் தன் அப்பாவை மாட்டி விட்டது. இப்பொழுது இருக்கும் பெரிய பிரச்சனையாக…, கருப்பனின் முழு வெறுப்பிற்கு காரணமான அவனின் அத்தை தேவியாக தன் அம்மாவும் கருப்பனின் தங்கை மீனாவாக தன்னுடைய அண்ணியும் இருப்பதை பார்த்தவள், 

‘போச்சு இன்னையோட எல்லாம் முடிஞ்சு போச்சு…, நல்ல வேலை கருப்பு மாமா முன்னமே என் கழுத்துல தாலி கட்டிடுச்சு, இல்லன்னா வந்த கிருக்கு பய மாதேஷ் எதனாலும் வேலை பார்த்திருப்பியான். இப்போ என்ன பண்ணி இந்த பிரச்சனையை சமாளிக்க போறேன்னு தெரியலையே….!” என்று நினைத்தவளுக்கு பயத்தில் அந்த இரவு நேர குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.

 தேவி அந்த இடம் நோக்கி வந்தவர் அந்த இடத்தை சுற்றிலும் பார்வையை சுழல விட்டவர் பின் மகளை அங்கு பார்த்ததும் அவளின் அருகில் வந்து,

“மலருமா, என் செல்லமே…! நீ எப்பிடிமா இருக்க…..? நடக்க இருந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லன்னு முன்னமே ஒரு வார்த்தை சொல்லாம, இப்பிடி இத்தனை நாள் எங்கள தவிக்க விட்டுட்டு கிளம்பி வந்துட்டியேம்மா….!

எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்க மாட்டோமேம்மா…! ஏம்மா இப்படி பண்ணிட்ட…?” என்று கேட்டார்.

அன்னையின் பாசமான பேச்சில் உருகிய மலர்விழியோ அந்த நொடி கருப்பனின் நினைவை அவன் மேல் இருந்த பயத்தை புறந்தள்ளி விட்டு ஓடிச்சென்று தன் அன்னையை அணைத்து கொண்டாள்.

அருகில் இருந்த நடேசனுக்கும் அதே நிலைதான். அவரும் தன் மகளை ஆரத்தழுவி கொண்டவர் “தங்கம் முன்னமே அப்பா கிட்ட இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்கலாம்லமா…, உன் வாழ்க்கை அதுல உன் விருப்பத்தை தாண்டி எனக்கு பிசினஸ் ஒரு விஷயமாம்மா, உனக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை நானே நடக்க விட்டிருக்க மாட்டேன்ம்மா…!” என்று ஒரு பெண் பிள்ளையை பெற்றவராக இத்தனை நாட்கள் அவளை தொலைத்து விட்டு பிரிந்த வேதனையில் கண் கலங்க கூறினார் நடேசன்.

“ஐயோ…! அப்படியெல்லாம் இல்லப்பா…, இனிமே உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்பா….!” என்று தன் தந்தையின் மீது உள்ள பாசத்தில் மலர்விழியும் கூறி விட்டாள்.

இதனை கேட்டுக் கொண்டிருந்த மாதேஷிற்கு ஒரு புறம் ஆத்திரம் என்றாள். இங்கே கருப்பனின் நிலையோ இன்னதென்று சொல்ல முடியாது ஆத்திரத்திற்கு மேலான ஆத்திரமாக இருந்தது. 

இதனை பார்த்திருந்த தர்மனுக்கோ தன் நண்பன் பட்ட வேதனையை இத்தனை வருடம் கூட இருந்து பார்த்தனால் கருப்பனை நினைத்து அவனின் கோபத்தால் ஏற்படும் மலரின் நிலையை நினைத்து கவலை பட்டான்.

 அவன் மனதிலோ ‘அப்போ இவ… அந்த தேவியோட பொண்ணா…., அப்போ அவ பக்கத்துல என் குடியை கெடுத்த அந்த மீனாவும் நிக்கிறாளே….! அந்த மீனா இவளுக்கு யாரு….? அவளும் இவளுக்கு சொந்தமோ….! ஒருவேளை அவ திட்டம் போட்டு தான் என்னோட நிம்மதி கெடுக்குறதுக்காக இவளை இந்த ஊருக்கு அனுப்பி வச்சாளோ….!’என்று பலவிதமாக யோசித்த கருப்பனுக்கு ஆத்திரம் மட்டுமே கட்டுக்கடங்காமல் கிளம்பியது. 

 தன் நாத்தனார் தேவியும் தன் ஆசை மகள் மீனாவும் வந்த செய்தி அறிந்த பொண்ணுத்தாயி,அமுதா, மலர்விழி மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இப்பொழுது கருப்பனின் தோட்டத்தில் வீட்டு வாசலில் வந்து கூட்டம் கூடி நின்றனர்…. 

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!