Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 17

அத்தியாயம் – 17

கோவை, வனதேவன் இல்லம்.



Advertisement

வனதேவன் அன்றைய தினம் வழமை போல் தன் நடைப்பயிற்சியை முடித்து வீடு திரும்ப, அஞ்சலி அப்போது தான் பூஜையறையில் இருந்து வெளியில் வந்தார்.

“நாள் தவறாம போய்டணுமா? நேத்து அவ்ளோ முடியலன்னு படுத்திருந்தீங்கல்ல. இன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் நல்லா தூங்கி எழ வேண்டியது தானேங்க?” என்று கணவனிடம் சலித்தபடி சமையலறைக்குள் சென்றார். 

Advertisement

Advertisement

“அதெல்லாம் போனா தான் நல்லா இருக்கும் அஞ்சலி. இல்லாட்டி வீட்டுக்குள்ள இருக்குறதே மூச்சு முட்டும்” என்ற வனதேவன்,

“நீ நகரு. என்ன வேணும் டீயா, காஃபியா?” என்றபடி பாலை எடுத்தார். 

Advertisement

“நிறைய இஞ்சி தட்டிப் போட்டு டீயே போடுங்க” என்ற அஞ்சலி அங்கிருந்த சிறிய உணவு மேசை அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, வனதேவன் வாங்கி வந்திருந்த செய்தித் தாளை விரித்தார்.

முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியைப் பார்த்தவர்,

“என்னங்க இப்டி போட்டிருக்காங்க?” என கணவரிடம் படபடத்தார்.

“என்ன போட்டிருக்காங்க?” என்று நிதானமாகக் கேட்ட வனதேவன், இருவருக்குமான தேநீர் கோப்பையை எடுத்து வந்து, ஒன்றை மனைவியிடம் நீட்டி விட்டு, எதிரில் அமர்ந்தார். செய்தித்தாளை கணவர் பக்கம் திருப்பி வைத்தார் அஞ்சலி.

ஒரு மிடறு தேநீரைப் பருகியவர், கோப்பையை கீழே வைத்து விட்டு, அஞ்சலி கூறிய செய்தியில் கண்ணைப் பதித்தார். 

‘பிரதமர் உயிருக்கு ஆபத்தா? சிறப்பு பாதுகாவல் படை மெத்தனமா?’ எனக் கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர். முழுச்செய்தியையும் மடமடவென வாசித்தவர், செய்தித்தாளை கோபமாக மடித்து வைத்து விட்டு மீண்டும் தேநீர் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டார். 

மகளுக்கு ஒன்றென்றால் தந்தைக்குப் பதறுவது இயல்பு தானே. ஆனால் தனது பதட்டத்தை வெளிக்காட்டினால் மனைவி இன்னுமே பயந்து விடுவார் என்பதால் கனன்ற இதயத்தின் தாக்கத்தை முகத்தில் காண்பிக்கவில்லை. 

“என்னங்க நிதானமா ரசிச்சு டீ குடிச்சிட்டு இருக்கீங்க? எனக்கு படபடன்னு வருது” என்று அஞ்சலி நெஞ்சை நீவினார்,

“ம்ப்ச், என்ன அஞ்சலி? இதெல்லாம் இந்த வேலைல நடக்குற சாதாரண விஷயம் தான். அதுக்கேத்த மாதிரி பாதுகாப்பும் பலப்படுத்திருக்காங்க தானே. நீ கவலைப்படாதே. வசுவுக்கு ஒன்னும் ஆகாது” என்று மனைவியிடம் தண்ணீரை நீட்டினார் வனதேவன். 

அதை வாங்கிப் பருகியவர், சற்று தன்னை நிதானப்படுத்தி,

“உங்க பொண்ணுக்கு ஒரு ஃபோனைப் போடுங்களேன்” என்க, வனதேவன் வசுந்தராவை அழைத்தார். 

அழைப்பு ஏற்கப்படாமல், ‘இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்று தகவல் வர, யோசனையில் நெற்றி சுருங்கியது வனதேவனுக்கு. கணவனிடத்தில் இருந்து பதில் வரவில்லையென்றதும், 

“என்னாச்சுங்க? ஃபோனை எடுக்கலையா அவ?” என மேலும் படபடத்தார் அஞ்சலி.

“ம்ம்ம்ம்…ரீச் ஆகலைமா. டென்ஷன் ஆகாத. நான் லேண்ட் லைனுக்குக் கால் பண்ணிப் பாக்குறேன்” என்றவர் தலைமை அமைச்சரின் தரை வழித் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தார்.

பல நிமிடங்கள் பாதுகாப்பு அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பின்னரே, வசுந்தராவுடன் இணைப்பு கிடைத்தது. அவர் அழைப்பை ஏற்றதுமே,

“வசும்மா” என அஞ்சலி அழ ஆரம்பிக்க,

“அஞ்சலி” என மனைவியை அதட்டிய வனதேவன், அலைபேசியை தன் கையில் வாங்கிக் கொண்டு, ஒலிபெருக்கியை இயக்கி மேசை மேல் வைத்தவர்,

“சொல்லுடாம்மா? ஒன்னும் பிரச்சனை இல்லையே. அம்மா இன்னிக்கு மார்னிங் நியூஸ் பாத்து கொஞ்சம் பார்த்து பயந்துட்டா. வேற ஒன்னும் இல்லை” என்றார்.

“ஓ” என சிறிது தயங்கிய வசுந்தரா,

“என்னோட பெர்சனல் மொபைல் டிரை பண்ணீங்களாப்பா?” என்றார்.

“ஆமாடா. அது யூஸ்ல இல்லன்னு மெசேஜ் வந்துச்சு. என்னாச்சுடா?” என்றார் ஆதுரமாக.

“அது செக்யூரிட்டி இஷ்யூப்பா. நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு என்னோட பெர்சனல் ஃபோன் டீ ஆக்டிவேட் பண்ணிட்டாங்க. கான்டாக்ட்ஸ் ரெஸ்ட்ரிக்ட் பண்ணிடுவாங்க” என்று தந்தைக்கு மேலோட்டமாக சூழலை விளக்கினார் வசுந்தரா.

“ஓ சரிடாம்மா. பார்த்து கவனமா இரு. நான் உன்னைய இந்த நம்பர்ல கூப்பிட்டா பிரச்சனை இல்லையே?” என்றார் வனதேவன் யோசனையாக.

“முடியுறப்போ நானே கூப்பிடுறேனேப்பா. இப்போதைக்கு ஏதாவது எமர்ஜென்சின்னா மட்டும் இந்த நம்பர் கூப்பிடுங்க. நான் இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் செட்டில் ஆனப்புறம் புது நம்பர் வந்தா அது கொடுக்குறேன்” என்ற வசுந்தரா,

“ஃபோனை அம்மாட்ட கொடுங்கப்பா” என்றார்.

“சொல்லு வசு. அம்மா கேட்டுட்டு தான் இருக்கேன்” என்றார் அஞ்சலி. மகள் குரலைக் கேட்ட பின்னரே அவர் பதட்டம் சற்று மட்டுப்பட்டது.

“மா, இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. நாட்டோட பெஸ்ட் பாதுகாப்பு எனக்குக் கிடைக்குது. இப்டி பிரச்சனை இருக்குன்னு சீக்கிரம் கண்டுபிடிச்சதே பெரிய விஷயம் தானே. எல்லாம் சரியாகிடும். கவலைப் படக்கூடாது, ஓகேவா?” என்க, அது நன்றாக வேலை செய்தது.

“சரி கண்ணு, பாத்துக்கோ” என்ற அஞ்சலி கணவரைப் பார்க்க,

“நாங்க வேணும்னா அங்க வந்துரட்டுமாடா?” என்றார் வனதேவன். 

“இல்லப்பா, இப்ப வேண்டாம்” என்ற வசுந்தரா சில நொடிகள் மௌனம் காக்க, அதிலிருந்த தயக்கத்தை உணர்ந்த வனதேவன்,

“என்னடாம்மா? வேற எதுவும் சொல்லனுமா?” என்றார் யோசனையாக.

“இல்லப்பா. வருண் கிட்ட மட்டும் மெசேஜ் பாஸ் பண்ணிட முடியுமா?” என்றார் தயக்கமாகவே. 

“நோ வொரீஸ். அப்பா சொல்லிடுறேன். நீ வேலையப் பாரு” என அழைப்பைத் துண்டிக்க, அவர் வருணனுக்கு அழைக்கும் முன்பே வருணன் அவருக்கு அழைத்திருந்தார்.

அழைப்பை ஏற்றதுமே,

“மாமா, வசு ஓகேவா?” என்றார் வருணன்.

“அவ நல்லாருக்கா தம்பி! இப்ப தான் பேசினோம். அங்க ஏதோ செக்யூரிட்டி இஷ்யூ போல. சோ எமர்ஜென்சிக்கு மட்டும் லேன்ட் லைன் நம்பர் கால் பண்ண சொன்னா. உங்க கிட்டயும் தகவல் சொல்லிட சொன்னா தம்பி” என்றார் வனதேவன்.

“ஓ” என்ற வருணன் சில நொடிகள் அமைதி காக்க, 

“என்ன தம்பி, எதுவும் சொல்லனுமா?” என்றார் வனதேவன்.

“ம்ம்ம்…இல்லை மாமா. நான் பாத்துக்குறேன். அத்தை எப்படி இருக்காங்க?” என்றதும்,

“கொஞ்சம் டென்ஷனா தான் இருந்தா, வசுகிட்ட பேசுனதுக்கப்புறம் இப்ப ஓகே” என்றார் வனதேவன். 

“சரி மாமா, வசு அடுத்து பேசினா நான் கேட்டதா சொல்லுங்க. நான் அப்பா கிட்டயும், தாரா மேடத்துக்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்” என்ற அழைப்பைத் துண்டித்த வருணனுக்கு ஒரே யோசனை.

தனது பதட்டத்தை வெளிக்காட்டவில்லையென்றாலும், லயித்திருந்த இசையில் ஏதோ அபஸ்வரம் தட்டிய உணர்வு. புது தில்லி போய் சேர்ந்ததும் வசுந்தரா வந்துவிட்டதாக அனுப்பிய குறுஞ்செய்திக்குக் கூட பதிலளிக்காமல், எதிர்வினை மட்டுமே செய்திருந்தார். 

அவராக நேரம் கிடைக்கும் போது அழைக்கக் காத்திருந்தது, இப்போது பெருங்குற்றமாக விஸ்வரூபம் எடுத்து வருணனை அலைக்கழித்தது. சித்தார்த்திற்கு அழைத்து விபரம் கேட்கலாம் தான். ஆனால் அங்கிருக்கும் சூழல் தெரியாமல் அப்படிச் செய்வதும் உகந்ததாகத் தெரியவில்லை.

முதலில் வசுந்தராவே அதை விரும்ப மாட்டார் தானே. பெரிதாக எதுவும் இருக்காது; ஊடகங்கள் சிறு விடயத்தைக் கூட ஊதி பெரிதுபடுத்துவது ஒன்றும் புதிதல்ல என புத்திக்குத் தெரிந்தாலும், மனமோ அதை ஏற்க முடியாமல் நெருடலாகவே இருந்தது. 

ஒரு பக்கம் உடனே தில்லி கிளம்பிவிட வேண்டும் எனத் துடித்த மனதை அடக்கும் வழி தெரியாமல், வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அதுவும் பயனளிக்காமல் போகவே, எல்லாவற்றையும் மூடி வைத்தவர், ஓடுவதற்கு ஏதுவான உடையணிந்து மாடியிலிருந்த தனதறையில் இருந்து கீழிறங்கி வந்தார்.

அந்த நேரத்தில் வருணனை அந்த உடையில் எதிர்பார்க்காத தேவராஜன், மகனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே,

“என்ன கண்ணு, காலைலயே ஜாகிங் எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்களே? இந்நேரம் எங்க போக போறீங்க? வெயில் வேற மண்டையப் பொளக்குதே” என்றார்.

“சும்மா தான்ப்பா. ஜஸ்ட் ஐ நீட் டு கிளியர் மை ஹெட்” என்றார் வருணன் முகத்தை சீராக வைத்துக் கொண்டு.

“சரி, கவனமா போய்ட்டு வாங்க. டிரைவர வரச் சொல்றேன். தலைக்குத் தொப்பி வைச்சிருப்பீங்களே, அதைப் போட்டுட்டு போங்க” என்றார் அக்கறையாக.

“ஏன்ப்பா, நானே போய்ட்டு வந்துடுவேன்” என வருணன் லேசாக சலிக்க,

“வருண்!” என்றார் தேவராஜன் அழுத்தமாக. 

அத்தி பூத்தாற் போல் எப்போதாவது வெளிப்படும் அந்தக் குரலை மீற விரும்பவில்லையென்றாலும், அந்த நேரம் வருணனுக்கு தனிமை அவ்வளவு தேவையாக இருந்தது. 

மகனின் முகத்தில் இருந்தே எதிர்ப்பை சரியாகப் படித்த தேவராஜன்,

“அப்பா சொன்னா காரணம் இருக்கும் கண்ணு! நீங்க மனசுக்குள்ள என்னத்த போட்டு குழம்பிட்டு இருக்கீங்கன்னும் தெரியும். அதுனால தான் சொல்றேன். நானும், அம்மாவும், அஞ்சலிய கூட்டிட்டு கோவிலுக்கு தான் கெளம்பிட்டு இருக்கோம். மனசே சரியில்லன்னு அம்மணி ஒரே புலம்பல்” என்க,

“சரிப்பா” என்று அதற்கு மேல் வாதிடாமல், தந்தை சொன்னது படியே சென்றார் வருணன்.

உச்சிப் பொழுது என்பதால் யாருமே இல்லை அந்தத் திடலில். சில தினங்களுக்கு முன்னர் தான் வசுந்தராவுடன் மெல்லோட்டத்திற்கு வந்தது பசுமையாக நினைவில் நின்றது வருணனுக்கு. 

அதை அசைபோட்ட மனம், இன்னும் கொஞ்சம் உடைத்துப் பேசி இருக்க வேண்டுமோ என்ற ஏக்கத்தில் சுழன்றது.

எண்ணங்களை ஒரு புறம் ஒதுக்கி, வழமை போல் கால் தசைகளை இளக வைக்கும் பயிற்சிகளை முதலில் செய்தவர், மெல்லோட்டமாக ஒரு சுற்று சுற்றி வந்தார். மனம் மெல்ல சமன்பட ஆரம்பிக்க, வேகத்தை கூட்டினார். 

எத்தனை சுற்று என்றே கணக்கே இல்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்க, பார்த்துக் கொண்டிருந்த வாகன ஓட்டுனருக்கோ பதட்டம் தொற்றிக் கொண்டது. தாமதிக்காமல் தேவராஜனுக்கு அவர் அழைத்து விட,

“சொல்லு பெருமாளு” என்றார் அழைப்பை ஏற்ற தேவராஜன்.

“ஐயா, தம்பி இன்னும் ஓடிட்டு தாங்க இருக்காரு. நடுவுல நின்னு ஒரு வாய் தண்ணீ கூட குடிக்கலைங்கய்யா. எங்க மயங்கி விழுந்துருவாரோன்னு பயமாக இருக்குங்கய்யா” என்றார் ஓட்டுனர் படபடவென.

“எத்தனை ரவுண்ட் ஓடிருக்காரு?”

“தோராயமா பத்துக்கு மேல இருக்குங்கய்யா” என்றதும், நேரத்தைப் பார்த்த தேவராஜன்,

“நீ பயப்படாத பெருமாளு. நாங்க கோவில் போய்ட்டு அந்த வழியா தான் வந்துட்டு இருக்கேன். நான் பாத்துக்குறேன்” என்றவர் மனைவியுடனும், அஞ்சலியுடனும் சற்று நேரத்தில் அங்கு வந்து விட, அவர்களைப் பார்த்ததும் தான் வருணன் ஓட்டத்தை நிறுத்தினார்.

வியர்வையில் குளித்து, வெயிலில் கருத்து, களைத்து வந்து நின்ற மகனை கவலையாகப் பார்த்தார் ராஜி. அஞ்சலியோ,

“ஏந்தம்பி இந்நேரம் இப்டி ஓடிட்டு இருக்கீங்க? இந்தாங்க இந்த மோரைக் குடிங்க” எனக் கையில் இருந்ததை நீட்டினார்.

அவரிடத்தில் என்ன சொல்ல முடியும். எதற்கென்றாலும் பதட்டப்படுவார், அதில் தானும் எதையாவது சொன்னால், இப்போதிருக்கும் நிம்மதியும் குலைந்து போகும் என்று நினைத்த வருணன், எந்த பதிலும் சொல்லாமல், மடமடவென மோரை வாயில் கவிழ்த்தார்.

“நீ கவலைப்படாதே அம்மணி, தம்பி எப்பவும் பண்றது தான். வேலை ஏதாச்சும் ரொம்ப சிக்கலா இருக்கப்போ, அப்பப்போ இப்டி தான் நேரங்காலம் பாக்காம ஓடுவாரு, இல்லாட்டி நீச்சலடிப்பாரு” என தேவராஜன் தான் அஞ்சலிக்கு பதிலளித்தார். 

இந்த சந்திப்பை நீட்டிக்க விரும்பாததால்,

“பெருமாளு, நீங்க அம்மணிய வீட்ல விட்டுட்டு வாங்க” என்றவர், அஞ்சலியிடம்,

“அம்மணி, நீ போய் மச்சானைப் பாரு. ஒன்னும் ரோசிக்காத. சாப்டுப்போட்டு செத்த நேரம் உறங்கியெழு. எல்லாம் சரியாப் போகும். நான் தம்பிய கூட்டிட்டுப் போறேன், போற வழில ஒரு வேலை இருக்கு” என்றார்.

“சரிங்கண்ணா, வர்றேண்ணி. நீங்களும் ரெஸ்ட் எடுங்க தம்பி” என்று அஞ்சலி விடைபெற, தேவராஜன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார்.

“பா, ஐ ஆம் ஓகே. நான் ஓட்டுறேன்” என வருணன் முன்னே வர,

“எனக்கு உங்கம்மா கூட இன்னும் ரொம்ப நாள் வாழோணும் கண்ணு” என்றுவிட, தந்தையை முறைத்தபடி அடுத்த பக்கம் வந்து வாகனத்தில் ஏறினார் வருணன். 

ஏறி அமர்ந்தவர், தலையை நன்றாக இருக்கையில் சாய்த்து ஒரு நீண்ட பெரு மூச்சை வெளியேற்றினார். 

“என்ன பிரச்சனை கண்ணு” என்றார் ராஜி மகனிடம். வருணன் சோர்வாக இருந்த கோலம் அவரை வெகுவாக வருத்தியது. 

“ஒன்னும் இல்லீங்கம்மா. மனசு ஒரு மாதிரி இருந்துச்சு, இப்ப ஓடினப்புறம் ஐ ஃபீல் பெட்டர்”

“அது சரி, நீ ஓடினா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன?”

“தீராது தான்! ஆனா கொஞ்ச நேரம் அந்தப் பிரச்சனையே மறந்துடும். ஓடுறதுல மட்டும் தான் உடம்பும், மனசும் ஃபோக்கஸ் பண்ணும். அப்புறம் பிரச்சனைய ஃபேஸ் பண்ற தைரியம், தெளிவு எல்லாம் வரும்” என்றார் தீவிரமாக.

“நான் வெளயாட்டுக்குக் கேட்டேன் கண்ணு” எனவும், தேவராஜன், கண்ணாடி வழியாகவே மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அதில் ராஜி வாய்ப்பூட்டு பூட்டிக்கொள்ள, தேவராஜன் மகனிடம் ஒரு நொடி பார்வையை திருப்பி,

“சில சமயம் நாம கை கட்டி வேடிக்கை மட்டும் தான் கண்ணு பாக்க முடியும். நம்ம கைல தான் எல்லாம் இருக்குன்னு எல்லாப் பிரச்சனைய தீர்க்க முடியாது. உங்களுக்குத் தெரியாதது இல்லீங்களே” என்க,

“ம்ம்ம், புரிஞ்சுதுங்கப்பா. கை கட்டி நிக்க முடியாம தான் ஓடிட்டு வந்தேன். இப்ப எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு தோனுது” என்றார் வருணனும் தெளிவுடன்.

“டெல்லிக்கு வேணும்னா போறீங்களா? தாரா மேடத்துக்கிட்ட கேக்கட்டுமா? இங்க வேலையெல்லாம் நான் பார்த்துக்குவேனுங்க” என்றார் தேவராஜன்.

“இல்லப்பா, இப்ப வேண்டாம்! எலெக்‌ஷன் வேலை தலைக்கு மேல இருக்கு. உதய் அண்ணா வேற சென்னை வர சொல்லிருக்காங்க. பேசாம அங்க வேணும்னா ஒரு வாரம் போய்ட்டு, கொஞ்சம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வரேன்” என்றார் வருணன் யோசனையுடன்.

“சரி கண்ணு. முதல்ல சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. மீதிய அப்புறம் பேசிக்கலாம்” என்றதும்,

“நான் இன்னிக்கே நைட் ப்ளைட்ல, இல்ல டிரெயின்ல டிக்கெட் கிடைக்குதா பாக்குறேன்” என்ற வருணன் உடனே அலைபேசியில் அதைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். என்னவோ கோவையில் இருப்பது மூச்சு முட்டுவது போலிருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து செல்ல வேண்டும் என முடிவெடுத்து, அதற்கு தேவையானதை செய்த பிறகே ஓய்ந்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே, மடமடவென பிராயணத்திற்கு தேவையானதை அடுக்க ஆரம்பித்து விட, ராஜி கணவரை கவலையாகப் பார்த்தார்.

“என்னங்க இந்தப் பையன் இப்டி பண்றான்? ஓடிட்டு வந்தா மொத வேலையா குளிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான், பசி தாங்க மாட்டான். இன்னிக்கு என்னடான்னா ஒன்னும் காதுல வாங்காம அவன் பாட்டுக்கு மூட்டை கட்டிட்டு இருக்கான்” என்க,

“விடு அம்மணி. தம்பி இன்னிக்கி நியூஸ் படிச்சுட்டு வசுவை நினைச்சி பயந்து போய் இருக்காரு. போய்ட்டு வரட்டும். உதய் தம்பி பேசியே சரிக்கட்டிருவாரு. வேலைன்னு வந்துருச்சுன்னா அப்புறம் ஒன்னும் யோசிக்க மாட்டாரு உங்க புள்ள” என்று தேவராஜன் மனைவியைத் தேற்றினார். 

“என்னவோ போங்க. ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு ஒத்தப் பையன பெத்து வைச்சிருக்கோம். அவனுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்க முடியல. அவன் குடும்பம், குழந்தைன்னு இருந்தா தானே நமக்கும் நிம்மதியா இருக்கும்”

“ம்ம்ம், என்ன செய்றது அம்மணி? யாருக்கு என்னன்னு எழுதிருக்கோ அது தானே நடக்கும். நம்ம கைல என்ன இருக்கு, சொல்லு. பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒரு நல்லா முடிவா எடுப்பாங்கன்னு நம்புவோம். நீ இதெல்லாம் மண்டைல ஏத்திட்டு குழம்பிட்டு இருக்காத சொல்லிட்டேன்”

“இந்த தடவை வசு வந்தப்போ ஏதாவது அதிசயம் நடந்துறாதான்னு நான் வேண்டாத தெய்வமில்ல. ஆனா அம்மணி வந்ததும் தெரியல, போனதும் தெரியல. அப்பக் கூட உங்க புள்ள சிரிச்ச முகமாத்தான் இருந்தாரு. இவங்க போக்குல இத்தனை வருசம் விட்ருக்கக் கூடாதுன்னு தோனுது”

“ம்ப்ச், என்ற தங்கசியாட்டம் நீயும் புலம்பாத அம்மணி! கையக் காலைக் கட்டியா கல்யாணம் பண்ண முடியும்? ரெண்டு பேரும் அப்டியே சொன்னா கேக்குற ஆளுங்களா? அப்படியெல்லாம் எதுவும் பண்ணிருந்தோம்னா இது மாதிரி வாய்ப்பெல்லாம் வசுந்தராவுக்கு கிடைச்சிருக்குமா சொல்லு?”

“ம்க்க்ம், நீங்க தான் அரசியல்வாதியாச்சே. அந்த லாப நஷ்டம் மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுது. எனக்கு எம் புள்ள வாழ்க்கை வீணாகுதேன்னு தான் வேதனையா இருக்கு” என்று கலக்கத்துடன் சொல்ல, தேவராஜன் அதற்கு பதிலளிக்கும் முன் வருணன் வந்து விட்டார்.

மகனைப் பார்த்த தேவராஜன், ‘இவனைக் குறித்தா உனக்குக் கவலை?’ எனப் பார்வையாலயே மனைவியிடம் கேள்வியெழுப்பினார். 

சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்தவைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல், குளித்து, களையாக வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரத்துடன் நடந்து வந்தார் வருணன்.

“மா, பசிக்குது. சாப்டலாமா?” என்றவாறு, உணவு மேசைக்கு செல்ல, 

“தோ வந்துட்டேன் கண்ணு” என்று திடீரென திரும்பி விட்ட இளமையுடன், ராஜி அவருக்கு முன்னதாக போய் நின்றார்.

தாயின் பரிவில் புன்னகைத்த வருணன், ராஜியின் கைப்பிடித்து தன்னருகே அமர்த்திக் கொண்டார். 

“அப்பா, நீங்களும் வாங்க. சேர்ந்தே சாப்பிடலாம்” என்றவாறு, முதலில் அன்னைக்குப் பரிமாற, ராஜியின் கலக்கம் எல்லாம் சற்று நேரம் மறைந்தது. 

தான் பேசாமல், பெற்றோரைப் பேச வைத்து, அவர்களது எண்ணவோட்டத்தை உள்வாங்க முயன்றார் வருணன். அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால், எல்லாம் நியாயமான எதிர்பார்ப்புகள்; இயல்பான ஆசைகள். அதில் தவறொன்றும் இல்லை தான்.

இன்னும் சொல்லப்போனால் இத்தனை வருடங்கள் அவர்கள் நெருக்கடி தராததினாலேயே வருணனால் தனது வேலைகளைத் திறம்பட செய்ய முடிந்தது. தேவராஜன் மகன் முகம் பார்த்தே மனதறிந்து நடக்கும் தந்தை. வருணனின் அரசியல் ஆசான்.

வருணன் வசுந்தராவை முன்னிறுத்தி எல்லாம் செய்த போதும், தனக்காகவோ, இல்லை மகனுக்காகவோ கூட பொறாமைப் படாமல், நிறைந்த மனதுடன் வாழ்த்தி, வழிகாட்டிய பேரன்புக்கு சொந்தக்காரர். 

அந்த நிமிடம், இவர்களுக்காகவாது தன் வாழ்க்கை தோற்றுப் போகக் கூடாது என வருணன் உறுதியெடுத்துக் கொண்டார். போராடித்தான் பார்த்து விடலாமே என்னவாகி விடும் என மனமும் திடமாகவே இருக்க, உணவு நேரம் முடிந்த பின்னரும் அவர்களது பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. 

மாலையில்,

“பா, நா இப்பவே கிளம்புறேன். போற வழில வசு வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு மாமா, அத்தைட்ட சொல்லிட்டு போறேன்” என்று கிளம்பினார் வருணன்.

“சரி கண்ணு, கவனமா இரு. எங்களைப் பத்திக் கவலைப்படாத. நான் உன்ற அத்தையையும், மாமாவையும் சேர்த்தே பாத்துக்கிறேன்” என தேவராஜன் கூறவும், லேசான வெட்கச் சிரிப்பு வருணனுக்கு.

வனதேவனை சந்தித்தவர்,

“மாமா, ஒரு வாரம் தேர்தல் வேலைக்காக சென்னை போறேன். நீங்க பத்ரமா இருங்க” என்றிட, வனதேவனிடம் லேசான சோர்வு.

“என்ன மாமா, உடம்பு எதுவும் சரியில்லையா?”

“இல்ல தம்பி, கொஞ்சம் டயர்ட்டா இருக்கு. வேற ஒன்னும் இல்ல. நீங்க கவனமா இருங்க” 

“சரி மாமா, பார்த்துக்கோங்க. எதுனாலும் அப்பாக்கு கூப்பிடுங்க” என்று விடைபெற்ற வருணனுக்கு ஒரே யோசனை. இங்கு வனதேவனுக்கும், அஞ்சலிக்கும் கூட எதுவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டுமோ? அடுத்த முறை வசுந்தராவிடம் பேசும் போது இதைக் கேட்டிட வேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டவர், இரவு ரயிலில் சென்னை பயணமானார்.

அதிக நேரம் ஓடிய களைப்பில், படுத்ததுமே உறங்கி விட்டார். அடுத்த நாள் காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவரை வரவேற்றது –

‘பிரேக்கிங் நியூஸ் – பிரதமர் இல்லத்தில் துப்பாக்கி சூடு.’

அந்த செய்தியைப் பார்த்தவர், கால்கள் நகர மறுத்து அங்கேயே உறைந்து நின்றார். அந்த நேரம் அலைபேசி ஒலி எழுப்பியது – ‘உதய் அண்ணா காலிங்…’



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!