Skip to content
Post Views: 320
அத்தியாயம் – 20
புது தில்லி, நாடாளுமன்றம் – மக்களவை
Advertisement
“பிரதமரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை இந்த நாடாளுமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது! தாக்குதலில் உயிர் நீத்த முதன்மை செயலாளர் சித்தார்த் ஜோஷியின் நினைவாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்று சபாநாயகர் அறிவிக்க, அவை உறுப்பினர்கள் அமைதியாக எழுந்து நின்றனர்.
அதன் பின், எதிர்கட்சித் தலைவர் சமர்ஜித் சர்மா, முதல் விவாதத்தை துவக்கி வைத்தார்:
Advertisement
Advertisement
“முதன்மை செயலாளர் மறைவுக்கு முற்போக்கு இந்திய கட்சி வருத்தம் தெரிவிக்கிறது. பாரதப் பிரதமரின் வீட்டிலேயே நடைபெற்ற இந்தக் கொலைமுயற்சிக்கு கடும் கண்டனங்கள்.
ஆனால் தன்னுடைய பாதுகாப்பையே கையாள முடியாத பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் தர முடியும்? எனவே பொறுப்பில் இருந்து தவறி விட்ட இந்த அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகிறேன்”.
Advertisement
ஷர்மாவின் உரையைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணியிலிருந்தும், எதிர்கட்சியில் இருந்தும் காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. ஏற்கனவே நிலவிய பதற்றமான கூட்டணி அரசியல் சூழ்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் எதிர்கட்சிக்கு புதிய ஆயுதமாக மாறியிருந்தது
அரசு சார்பாக பேசிய விக்ரம் தேசாய், உதயன் மணிவாசகம் இருவரும் வசுந்தராவுக்கு ஆதரவாகப் பேசிய விடயங்கள், அவையோரை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த வைத்தன.
கடைசியில் வசுந்தரா பேச எழுந்தார். முகத்தில் சிறு வருத்தம் இழையோடினாலும் கம்பீரம் கிஞ்சித்தும் குறையவில்லை. கோபம் இருந்தாலும், வார்த்தைகள் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. கடந்த சில நாட்களாக உணர்ச்சிகளை மறைத்து நிற்பது தான் வாடிக்கையாகி விட்டதே.
சமர்ஜித் சர்மாவை ‘அற்பப் பதரே’ என்பது போல் பார்த்தவர்,
“Z+ பாதுகாப்பை வாபஸ் வாங்கிட்டாலும், இதே மாதிரி பேசுவீங்களா ஷர்மா ஜி…?” என நிறுத்த, அவரது ஆதரவாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த, சர்மாவின் முகமோ இருண்டது.
பின்னர் அவையினரை நேர்கொண்ட பார்வை பார்த்தபடி,
“இந்த அரசு எந்தப் பொறுப்பிலும் தவறவில்லை – தவறவும் போவதில்லை! எங்களோட சாதனைகளை மாண்புமிகு அமைச்சர்கள் துல்லியமான புள்ளி விவரத்தோட உங்களுக்கு முன் வைச்சிருக்காங்க. தேர்தல்ல என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை 5 மிஷன்ஸ் மூலமா தொய்வில்லாம நிறைவேற்றிட்டு இருக்கோம்” என தனது அரசின் செயல்பாட்டை அழுத்தமாக பதிவு செய்தார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்,
“வெளியுறவு பிரச்சனைகளை…புவிசார் அரசியல் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நெருக்கடில நம்ம நாடு இருக்கு. அதுக்கு பலமான உள்நாட்டு அரசியல் கட்டமைப்பும், உங்க ஆதரவும் தான் தேவையே தவிர ஸ்திரமின்மை கிடையாது” என்று ஆவேசமாக முழங்கியவர்,
“கடைசியாக, நடந்து முடிந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வை, திரு. சித்தார்த் ஜோஷியின் உயிர் தியாகத்தை, கீழ்த்தரமான அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்பை எதிர்கட்சிக்கு தர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையை முடித்து அமர்ந்து விட, பலத்த கைதட்டு அவை உறுப்பினர்களிடமிருந்து.
வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று, நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்பட்டது. முதல் ஆளாக உதயன் வந்து வசுந்தராவிடம் கை குலுக்கினார்.
“வாழ்த்துகள் மேடம்! நீங்க போட்ட போடுல்ல, இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு ஷர்மா ஜி அமைதியா இருப்பார்” எனவும், லேசாகப் புன்னகைத்த வசுந்தரா,
“தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட் உதயன்” என்றார்.
“எனி டைம்” என்று இரு கைகளையும் ஆதரவாக விரித்துக் காண்பித்த உதயன்,
“நம்ம கூட்டணியை அப்டி விட்ருவோமா” என்க, வசுந்தரா ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.
“உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் மேடம். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
கூர்ந்து உதயனைப் பார்த்தவர், “தப்பா எடுத்துக்காத மாதிரி கேளுங்க!” எனவும், உதயன் முகத்திலும் அதைப் புரிந்து கொண்ட பாவனை.
“வருண்…” என்று ஆரம்பித்த உடனே, வசுந்தரா முகத்தில் ஒரு இறுக்கம் வந்துவிட, ஒரு நொடி தயங்கிய உதயன்,
“நத்திங் மேம்” என்றுவிட்டு விடைபெறும் விதமாக கையை நீட்ட, அவரை முறைத்தபடி கை குலுக்கி அனுப்பினார் வசுந்தரா.
ஆதரவாகப் பேசிய அனைத்து அவை உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி, அலுவல்களை முடித்து வீடு திரும்பிய போது மாலையாகியிருந்தது.
பாதுகாப்பு குழுவிடம் போராடி சிறப்பு அனுமதி வாங்கி, அஞ்சலி பிடிவாதமாக தில்லியிலேயே தங்கி விட, வனதேவனுக்கும் வேறு வழியில்லை. வெளிக்காட்டிக் கொள்ளா விட்டாலும் வசுந்தராவுக்கும் அது பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
சோர்வாக வந்தவருக்கு, தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்ததும், உதட்டில் மட்டும் சிறு புன்னகை.
“வா வசு. டீ குடிக்கிறியா?” என்ற அஞ்சலி பதிலுக்குக் காத்திராமல் ஒரு குவளையில் தேநீரை நிரப்பி மகள் கையில் கொடுத்து விட்டார்.
“கங்கிராட்ஸ் வசு. நோ கான்பிடென்ஸ் பில் ஃபெயில் ஆயிடுச்சு போலயே” என்றார் வனதேவன்.
“ம்ம்ம், ஆமாம்ப்பா. பட் இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான்…நிறுத்த மாட்டாங்க!”
“ஹ்ம்ம், அன் அவாய்டபுள்” என்ற வனதேவனிடம் ஒரு பெருமூச்சு.
“ஹவ் வாஸ் யுவர் டே, என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்?” என கேட்க, தந்தைக்குத் தெரியாதா மகளின் உண்மையான முக மலர்ச்சி!
ஆனாலும் அதைக் கண்டுகொள்ளாமல்,
“ஓகே டா, இருக்குற சூழ்நிலைக்கு என்ன பண்ணமுடியுமோ அதைப் பண்ணி என்கேஜ்டா வச்சுக்குறோம்” என பதிலளிக்க,
“என்ன இழுக்குறீங்க?” என இடையிட்ட அஞ்சலி,
“ஒன்னும் பண்ண முடியலை கண்ணு. இங்க ஒரு ஃபோன் கூட நிம்மதியா பேச முடியல. எல்லாத்துக்கும் செக்யூரிட்டி வழியா தான் போக வேண்டியது இருக்கு” என்று சலித்துக் கொண்டார்.
“என்ன அஞ்சு, அதுக்கென்ன பண்ண முடியும்? எல்லாம் செக்யூரிட்டிக்காகத் தானே. இவ்ளோ நடந்தப்பறம், நம்மள இங்க தங்க அலோவ் பண்ணதே பெரிய விஷயம் தான்” என வனதேவன் மனைவியை அடக்க,
“என்னையவே சொல்லுங்க! அன்னிக்கு ஆஸ்பத்திரிலேர்ந்து வந்தப்போ தேவா அண்ணா குடும்பத்த இங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. வருண் தம்பி மொகத்த பார்த்தீங்க தானே? அப்டியே சுண்டிப் போயிடுச்சு. நாம எப்பப் பேசக் கூப்பிட்டாலும் வசுவை பத்திக் கேட்டு தவிச்சு போகுது” என்றார் அஞ்சலி ஆற்றாமையுடன்.
வருண் என்ற பெயரைக் கேட்டவுடனே மெல்லிய நடுக்கம் பிறந்தது. லாவகமாய் அதை மறைத்து, தேநீரை அருந்தி முடித்த வசுந்தரா,
“சரிப்பா, எனக்கு வேலை இருக்கு. நீங்க டின்னர்க்கு எனக்கு வெயிட் பண்ணாதீங்கம்மா” என விடை பெற்று எழுந்து உள்ளே நடக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“எவ்வளவு அழுத்தம் பாருங்க உங்க பொண்ணுக்கு. இவ்ளோ பேசுறேன்…ஒரு வார்த்தை வாயிலேர்ந்து வருதா?”
“தப்பு அஞ்சு…அவ முகத்தைப் பார்த்தா தெரியலையா உனக்கு? உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருக்கா. நமக்காக தான் இந்த சிரிப்பு கூட. அவ இடத்தில இருந்து யோசிச்சிப் பாரு. துக்கத்துக்கு வாய் விட்டு அழறதுக்குக் கூட அவளுக்கு நேரம் கெடைக்கல…அவளோட பதவிக்கு அப்டி செய்யவும் முடியாது”
“ம்ப்ச், அதுக்கு தான வம்பாடு பட்டு இங்க உக்காந்திருக்கோம். நம்ம கிட்ட மனசைத் தெறந்து பேசினா தான் என்ன? பாரம் கொஞ்சம் குறையுமே, எதுக்கு எல்லாத்தையும் உள்ளுக்குள்ளயே வச்சிகிட்டு மருகணும்…”
“எல்லாத்தையும் நம்மகிட்ட சொல்லுவாளா என்ன?”
“என்கிட்ட சொல்லாட்டி பரவாயில்ல. அப்பாவும், பொண்ணும் ஃப்ரெண்ட்ஸ் தானே. உங்ககிட்டயாச்சும் பேச வேண்டியது தானே”
அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்த வனதேவன், ‘எங்கிட்டயும் சொல்ல முடியாத விஷயமெல்லாம் என் பொண்ணுகிட்ட இருக்கும்னு எனக்கே இப்ப தான் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டார். ஆனால் வெளியே எதுவும் சொல்லவில்லை. அதையும் அஞ்சலி பிடித்துக் கொண்டு இன்னுமே கவலைப்படுவார்.
வசுந்தரா நினைத்திருந்தால் தன்னிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பை உருவாக்கியிருப்பார். ஆனால் விரும்பவில்லை என்று புரிந்து அவருக்கான நேரத்தையும், இடத்தையும் கொடுப்பதே சாலச் சிறந்தது என்று உணர்ந்தவராய், வழக்கமான வேக நடை குறைந்து நிதானமாக நடந்து செல்லும் மகளையே ஒரு நீண்ட பெருமூச்சுடன் பார்த்திருந்தார் வனதேவன்.
நடந்து சென்ற வசுந்தராவுக்கும், பெற்றோரிடம் கூட ஏன் மனம் திறக்க முடியவில்லை என்ற கேள்வியே மனதை அழுத்தியது. விடை தெரியா கேள்வி இல்லையே. அவரது ஒவ்வொரு செல்லும் தற்போது ஏங்கித் தவிக்கும் ஒரே நபர் வருணன் தேவராஜன். அவர் நெஞ்சில் சாய்ந்து கதறித் தீர்க்க வேண்டும் என்ற மனவேட்கையை என்ன செய்வது என்பது தான் தெரியவில்லை.
வருணனை அவர் தவிர்த்தாலும், சுற்றி இருப்பவர்கள் அவரையே ஏதோ ஒரு வகையில் நினைவு படுத்த, அதில் இருந்து விடுபட தலையை உலுக்கியவராய், நடையை வேகப்படுத்தினார்.
இறுக்கமான முகத்துடன் அலுவலகத்தில் வந்து அடைந்து கொண்டவரை ஆதுரமாகப் பார்த்த லலிதா.
“ஆர் யூ ஓகே மேம்?” என்றார்.
நொடியில் முகபாவனையை மாற்றி,
“எஸ், ஐ ஆம் பைன். ரீலிவ்ட் ஆஃப்டர் த வோட்” என சோர்வாகப் புன்னகைக்க, லலிதாவும் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.
“இருக்குற பிரச்சனைல ஆதரவு தெரட்டுறதுல, வெட்டிக்கு நாலு நாள் போய்டுச்சு. இப்போ அவ்ளோ வேலை பெண்டிங்ல கெடக்கு. ஐ பேட்லி மிஸ் சித்தார்த்” என்ற பெருமூச்சு வசுந்தராவிடம்.
தற்சமயம் சித்தார்த்தைப் பற்றி வசுந்தரா சற்று இயல்பாகப் பேசும் ஒரே நபர் லலிதா என்றாகி விட்டது.
“மேம், நீங்க சித்தார்த் சார் பேரை சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது. அவர் போஸ்ட் யாரு ரீப்ளேஸ் பண்றதுன்னு ப்ரோப்போசல் வந்துருக்கு மேம்…”
லலிதாவின் தயக்கத்தை உணர்ந்த வசுந்தரா,
“அண்ட்..?” எனவும், கையில் இருந்த ஆவணத்தை முன் வைத்தார் லலிதா. அதை மேலொட்டமாகத் திருப்பிப் பார்த்தவர்,
“இதுக்கு தான் இவ்ளோ யோசிச்சீங்களா…” என சில நொடிகள் அமைதி காத்தவர்,
“நான் தான் ஓகே சொன்னேன் லலிதா” என்க, லலிதாவின் முகத்தில் சிறு குழப்பம்.
“பட், வொய் மேம்… உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே”
இருக்கையில் இருந்து எழுந்து சாளரத்தின் அருகில் வந்து நின்ற வசுந்தரா, வானத்தை வெறித்தபடி,
“நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகுறதுக்கு முன்னாடி சித்தார்த்தோட பேரண்ட்ஸ பார்த்துட்டு தான் வந்தேன். மிஸஸ் ஜோஷி மயக்கத்தில தான் இருந்தாங்க” என, லலிதா ‘இது தெரிந்த விடயம் தானே’ என்பது போல் பார்த்தார்.
அவரைத் திரும்பிப் பார்த்த வசுந்தரா லலிதாவின் முகபாவனையை உணர்ந்தவராய்,
“அப்போ மிஸ்டர்.மனோகர் ஜோஷிக்கு நான் ஒரு ப்ராமிஸ் பண்ணிருந்தேன். அதை வைச்சுத் தான் இந்தப் ப்ரோப்போசல் வந்திருக்கு” என்க,
“ஓகே மேம், நான் ஜாயினிங் ப்ரோசிஜர் பாக்குறேன்…” என்று நிறுத்தினார்.
“உங்க ஷாக் லிஸ்ட் இன்னும் முடியல போலயே. சொல்லுங்க லலிதா, ஐ வோண்ட் ஷூட் த மெசஞ்சர்!”
“எஸ்.பி.ஜி சீஃப் போஸ்ட்க்கும்…ப்ரோப்போசல் வந்துருக்கு மேம்” என்கவும் வசுந்தராவின் உடல் மீண்டும் இறுகியது. இருக்கையில் வந்து அமர்ந்தவர், ஆவணத்திற்காகக் கை நீட்டினார். லலிதா அதைத் தரவும் பரபரவென பக்கங்களைப் புரட்டியவர் அதன் சாராம்சத்தைத் தெரிந்து கொண்டார்.
“கௌதம் வாசுதேவனுக்கு ஓகே சொல்லிடுங்க. இப்போ நமக்கு ரியாக்ஷன் இல்ல, ப்ரிவென்ஷன் வேணும். அவர் இமிடியட்டா சார்ஜ் எடுக்கட்டும். நான் அர்ஜுன் கிட்ட பேசிக்கிறேன்” என்றவர் “ப்ரதாப்?” என கேள்வியாகப் பார்க்க,
“ப்ரதாப் சார் இஸ் ஸ்டில் ரெகவரிங். அவர் தான் கௌதமை ரெக்கமெண்ட் பண்ணிருக்காரு மேம். அவருக்கு இந்த போஸ்ட்டுக்கு திரும்பி வர மனசு இல்ல. இதை ஒரு பெர்சனல் ஃபெயிலியரா எடுத்துக்கிட்டு ரிசைன் பண்ணிட்டாருன்னு அர்ஜுன் சார் சொன்னாரு” என்றவுடன், வசுந்தரா முகத்தில் யோசனை.
“ம்ம்ம்ம்..என்கொயரி ரிப்போர்ட் என்னாச்சு?”
“ப்ரிலிமினரி ரிப்போர்ட் வந்திருக்கு மேம். இங்க இருக்குற ஸ்டாஃப் எல்லாரும் வெட்டட்* அப்டின்றதால, அவுட் சைட் செக்யூரிட்டி தான் ஃபோக்கஸ் பண்ணிருக்காங்க”
“ப்ச், என்னோட டிராவல் பிளான் எல்லாம் லீக் ஆயிருக்கு! கோவைல அட்டாக் பிளான் பண்ணிருக்காங்க! அப்போ உள்ள பிரச்சனைன்னு தானே அர்த்தம்”
“கரெக்ட் மேம், பி.எம்.ஓ ஸ்டாஃப் எல்லாருக்கும் செக்யூரிட்டி கிளியரன்ஸ் திருப்பியும் பண்ணாங்க. மோர் ரெஸ்ட்ரிக்ஸன்ஸ் கொண்டு வந்தாங்க. இன்சைடு லீக் அப்படின்னா, இது செக்யூரிட்டி இஷ்யூ மட்டும் இல்ல…டிரஸ்ட் பிரேக்டவுன் ”
“எக்சாக்ட்லி…சித்தார்த் அன்னிக்கே தெளிவா சொன்னாரே. மேபி ப்ரதாப் ரொம்ப டிஃபென்சிவ்வா எடுத்துக்கிட்டார்னு நினைக்கிறேன்” என்ற பெருமூச்சு விட்ட வசுந்தரா,
“RAW லேர்ந்து வார்னிங் வந்துச்சு. சோ, இது ஜஸ்ட் மிஸ்கம்யூனிக்கேஷன் இல்ல லலிதா… கம்ப்ளீட் சிஸ்டம் ஃபெயிலியர்! ஏத்துக்கவே முடியாது! இன்னிக்கு பார்லிமென்ட்ல கிழிகிழின்னு கிழிச்சாங்க” என்றபடி தலையை உலுக்கினார்.
லலிதா அமைதியாக இருக்க,
“நான் டார்கெட்டா இருந்தது பரவாயில்லை லலிதா. ஆனா சம்பந்தமே இல்லாம சித்தார்த் வந்து நடுவுல மாட்டிக்கிட்டார்” என்று கண் கலங்க,
“மேம், ப்ளீஸ்” என்றவாறு, அவருக்கு எதிரில் அமர்ந்தார் லலிதா. ஆதரவாக வசுந்தராவின் கைகளைப் பிடித்துக் கொள்ள மனம் உந்திய போதும், தங்களது பதவிகளை நினைவில் வைத்து, முன் சென்ற கையை பின்னிழுத்துக் கொண்டார்.
சட்டென தன்னை மீட்டுக் கொண்ட வசுந்தரா,
“இந்த ரிப்போர்ட்ல முழு உண்மையும் சொல்லல! அந்த கார்ட ஷூட் பண்ணிட்டாங்க ஓகே. ஆனா யாரு இதுக்குப் பின்னாடி இருக்கா? இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனை ஃப்யூச்சர்ல எப்படி மிட்டிகேட் பண்ணுவாங்கன்னு உருப்படியா ஒரு இன்புட்டும் இல்ல. கௌதம்க்கு முதல் வேலையே இதை சரி பண்றது தான்!” எனவும்,
“டன் மேம்” என்றபடி எழுந்து கொண்டார் லலிதா.
அவர் அறையை விட்டு வெளியேற ஆயத்தமாக,
“சாரி லலிதா, நான் என்னைப் பத்தியும், வொர்க் பத்தியும் தான் பேசுறேன். ஹவ் ஆர் யூ? இங்க எல்லாத்தையும் எப்டி சமாளிக்கிறீங்க?” என்றார் வசுந்தரா அக்கறையுடன்.
“வீ ஆர் ஆல் ரெக்கவரிங் மேம். சித்தார்த் சார் இஸ் இர்ரிபேளசபிள்! டீம்ல நிறைய ஆஃபிஸர்ஸ் ஓவர் டைம் பண்றாங்க. சோ ஓரளவு சமாளிக்கிறோம்”
“ரைட், ஐ வோண்ட் ப்ராமிஸ் இட் வில் ஆல் கெட் பெட்டர் ஆர் ஈசியர். பட், புது பிரின்சிபல் செக்ரட்டரி வந்துட்டா உங்களுக்கு கொஞ்சம் ரீலிஃப் கெடைக்கும்”
“எஸ் மேம், ஹோப்ஃபுலி” என லலிதா புன்னகைக்க, அவருக்கு தலையசைத்து விடை கொடுத்த வசுந்தரா, சில நிமிடங்கள் வாசலையே பார்த்திருந்தார். என்ன முயன்றும் அந்த வீட்டில் சித்தார்த் அங்கங்கு நின்று பேசுவது கண்ணில் இருந்து மறைய மறுத்தது.
நடந்த நிகழ்வு, தனது பாதுகாப்பு துறையின் தோல்வி என்பதில் நெஞ்சு கொதித்தது. ஆனால் தடுப்பதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதும் இயலாமை உணர்வைக் கொடுக்க, அந்த இயலாமை கூட கோபமாகத்தான் திரும்பியது. யார் மீது கோபம் என்று கூட தெரியவில்லை.
மீண்டும் ஒரு முறை அன்று நடந்ததை மனதில் ஓட்டிப் பார்த்தவர்,
‘இந்த சித்தார்த் ஏன் இப்படி செய்ய வேண்டும்? தன்னை மட்டும் தள்ளாமல், சேர்ந்தே வேறு பக்கம் இழுத்திருந்தால் ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருப்பாரோ? SPG வேறு விதமாக சமாளித்து இதை தடுத்திருப்பார்களோ?’ என்று அதிலேயே உழன்றார். ஆனால் தெளிவு தான் கிடைத்த பாடில்லை.
சில நிமிடங்களில் கடந்த காலத்தை மாற்றமுடியாத நிதர்சனத்தை உணர்ந்தவராய், ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவர் பார்வைக்கென்று அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் மேலிருந்ததை எடுத்து வைத்தார். கண்கள் அதில் பதிந்திருந்ததே தவிர, கருத்தில் எதுவும் பதியவில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு பக்கத்தைக் கூட மனதில் நிறுத்த முடியவில்லை.
‘ம்ப்ச்’ என்ற சலிப்புடன் அதை மூடி வைத்தவர், கைகளை தலைக்குப் பின்னாகக் கோர்த்த படி அமைதியாக அமர்ந்திருந்தார். எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. அவரது மேசையில் இருந்த தொலைபேசி அலற, அதில் கவனம் கலைந்தவராய் அழைப்பை ஏற்றார்.
“மேம், மிஸ்டர் வருணன் தேவராஜன் லைன்ல இருக்கார். கனெக்ட் பண்ணட்டுமா?”
“எஸ் ப்ளீஸ்” எனவும் வருணன் அழைப்பில் இணைந்தார்.
“எப்டி இருக்க வசு?” என்றார் மென்மையாக.
“ம்ம்ம், இருக்கேன்…” என்றார் ஓய்ந்து போன குரலில்.
“என்னடாம்மா?” எனவும், அந்தக் குரலில் எந்த நொடியும் உடையத் தயாராக இருந்தார் வசுந்தரா. அதை மறைக்கும் விதமாய், லேசாக இருமி தனது மனநிலைக்கு நேரெதிராக குரலை இயல்புக்கு கொண்டு வந்தவர்,
“உதயன் கிட்ட என்ன சொன்ன நீ?” என்றதும் மறுமுனையில் மௌனம்.
“சொல்லு வரு, உன்னோட அண்ணா இன்னிக்கு ஏதோ கேட்க வந்தார். அப்புறம் அப்டியே சமாளிச்சிட்டு கிளம்பிட்டார். அப்பவே தெரியும் எனக்கு, இது உன் வேலையா தான் இருக்கும்னு”
“ம்ப்ச், இப்ப என்ன? நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிரா பாயின்ட்ஸ் எடுத்தோம். விக்ரமுக்கும், உதய் அண்ணாக்கும் நான் தான் டிராப்ட் பண்ணி கொடுத்தேன்”
“நினைச்சேன்! என்னடா எங்கேர்ந்து இவ்ளோ ஃபேக்ட்ஸ் எடுத்தாங்கன்னு. அது ஓகே, தாரா மேம் சொல்லிருப்பாங்க. ஆனா அதுக்கப்பறம் எங்கிட்ட ஏதாச்சும் கேட்க சொன்னியா அவரை?”
“ஒன்னும் பெருசா இல்ல. நீ எப்டி இருக்கன்னு கொஞ்சம் பேசிப் பார்க்க சொன்னேன். ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் உன் கூட பேச முடியலை. அப்பாவும், அம்மாவும் கூட கோவைக்கு கிளம்புறாங்க” என்றதும் மௌனம் காப்பது வசுந்தராவின் முறையாயிற்று.
“சொல்லு வசு. நான் இங்க இருந்து என்ன யூஸ்?”
“உன்னை இங்க இருக்க சொல்லியது நான் இல்ல வருண்…” என்றார் துடிக்கும் மனதை அடக்கி.
“ரைட், நீ சொல்லல! நானா தான் அந்த முடிவு எடுத்தேன். ஆனா இப்ப கேக்குறேன்…உன் கூட இருக்க என்ன பண்ணனும்னு சொல்லு” என்றார் அடிபட்ட குரலில்.
அதில் சில நொடிகள் தயங்கிய வசுந்தரா,
“நான்… தான் அன்னிக்கே சொல்லிட்டேனே வருண். தப்பு செஞ்சா தண்டனைய ஏத்துக்கிட்டு தான் ஆகணும்னு”
“இங்க யாருக்கு வசு தண்டனை?”
இதற்கு என்ன பதில் கூறுவார்? தனது இந்த முடிவில் வருணனுக்கான நியாயம் இல்லையென்று அவருக்கே தெரியுமே.
“இப்ப மட்டும் உனக்கு பேச்சு வராது! உனக்கு தண்டனைன்றது எனக்கும் தண்டனை தான் வசு. ப்ளீஸ் கரெக்டா யோசி. உன்னையவே வருத்திக்கிற அளவுக்கு நீ எந்தத் தப்பும் பண்ணல வசும்மா” என்க, அதற்கும் பதிலில்லை.
“ம்ப்ச், எனக்கு உன்னைப் பார்க்கணும் வசு. அதுக்கு என்ன ப்ரோசிஜர்னாச்சும் சொல்லு ப்ளீஸ்!”
“ஹாங்…அது எஸ்.பி.ஜி தான் கிளியர் பண்ணனும். புது சீஃப் ஜாயின் பண்றார்”
“ஓ, ப்ரதாப்புக்கு என்னாச்சு…ரெக்கவர் ஆனப்பறம் ஜாயின் பண்ணுவார் நினைச்சேன்? ” என்றார் வருணன் யோசனையுடன்,
“அவர் ரிசைன் பண்ணிட்டார்” எனவும், சில நொடிகள் மௌனம்.
“சரி, நான் விசிட்டுக்கு என்ன ப்ரோசிஜர்னு பாக்குறேன்” என்ற வருணனுக்கு வசுந்தரா லலிதாவிடம் சொன்னால், இது ஒரு நிமிட வேலை என்பது தெரிந்தே இருந்தது. தன்னை வேண்டுமென்றே அவர் தவிர்ப்பதும் புரியாமலில்லை.
ஆனாலும் மனம் கேட்காதவராய்,
“வசும்மா, நீ ஓகேவா?” என்கவும், இனி தாக்குப்பிடிக்க முடியாது என உணர்ந்தவராய்,
“நான் வைக்கிறேன் வருண்!” என அழைப்பை துண்டிக்க, வருணனுக்கோ இயலாமை எள்ளி நகையாடியது.
அதற்கும் மேல் வேலையில் கவனம் செலுத்தும் நம்பிக்கை இல்லாததால், இரவு உணவையும் மறுத்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டார் வசுந்தரா. வருணனை ஒதுக்கி வைக்க முடிவெடுத்த பின், வேறு யாரிடமும் எதையும் பகிர மனம் ஒப்பவில்லை..அது தந்தையென்றாலும் கூட. நேரே படுக்கையில் விழுந்தவர் கண்ணீரை மட்டுமே துணையாகக் கொண்டு உறங்க முயன்றார்.
ஆழ்ந்த உறக்கமில்லாத ஒரு அலைப்புறுதல். மீண்டும் மீண்டும் சித்தார்த் குண்டடி பட்டு விழுவது போல மங்கலான காட்சிகள் வந்து குழப்பியடிக்க, விதிர்விதிர்த்து எழுந்தவர், அதிகாலையிலேயே தன்னையும் மீறி உறங்கியிருந்தார்.
*வெட்டிங் – Security Vetting – பாதுகாப்புப் பின்னணி ஆய்வு – ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ (முக்கியமாக அரசு அல்லது பாதுகாப்புப் பணிகள்), பொறுப்பிற்கோ அல்லது முக்கியமான தகவல்களை அணுகுவதற்கோ தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த, அவரின் பின்னணி, நடத்தை, மற்றும் முந்தைய பதிவுகளைக் கவனமாக ஆராயும் செயல்முறை.
error: Content is protected !!