Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 19.2

சந்தியா வீட்டின் முன்னே கார் நிற்கவும் இறங்கியவள் காரினுள் இருந்த சூரியாவுக்கும், ஆரியாவுக்கும் டாட்டா காட்டிவிட்டு வீட்டினுள் செல்லத் திரும்ப கார் நிற்கும் ஓசை கேட்டுச் சுமித்ரா வெளியே வந்தாள்.

 

சந்தியாவைக் கண்டதும் முகம் விகசித்தவள் வேகமாகக் காரின் அருகே சென்று உள்ளேயிருந்த சூரியாவிடம் புன்னகையுடன் “அண்ணா! வீட்டுக்கு வந்துட்டுப் போங்க.. ஊரில இருந்து எல்லாரும் வந்திருக்காங்க.. வந்த நாள்ல இருந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்லிட்டிருக்காங்க” என்று கூற சூரியாவும் ஆரியாவும் காரை விட்டு இறங்க, விஷயம் கேட்டச் சந்தியா இவர்கள் மூவருக்கும் முன்னதாக ஆர்வத்துடன் வீட்டுக்குள் ஓடினாள்.

 



Advertisement

உள்ளே கோமதியம்மாளின் சத்தம் கேட்கவும் ஓடிச் சென்று “ஆச்சி!” என்ற சந்தோசக்கூவலுடன் அவரைக் கட்டிக்கொள்ள அவள் கத்திய சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தனர் அவளது அன்னை ரேணுகாவும், பெரியன்னை ரேவதியும்..

 

கோமதியம்மாள் இளைய பேத்தியை அணைத்து உச்சிமுகர்ந்தவர் “ஏன் இவ்ளோ இளைச்சுப் போயிட்டடி ராஜாத்தி?” என்றபடி பயணத்தால் கலைந்திருந்த அவளது கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிடவும் சமையலறையிலிருந்த அன்னையர் இருவரும் ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது.

Advertisement

 

Advertisement

அதே நேரம் சுமித்ரா சூரியாவையும், அவனையொத்த ஜாடையுடன் இன்னொரு வாலிபனையும் அழைத்து வருவதைக் கண்ட ரேவதி புன்னகையுடன் “வாப்பா தம்பி! எப்பிடி இருக்க? அம்மா அப்பா எல்லாரும் சுகமா இருக்காங்களா?” என்று வினவ சூரியா நீண்டநாள் கழித்து அவர்கள் அனைவரையும் கண்ட மகிழ்ச்சியில் ரேவதியின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

 

சுமித்ரா அவனது செய்கையில் துணுக்குற்றவள் தன்னருகில் நின்ற ஆரியாவிடம் “இப்போ எதுக்கு அண்ணா அம்மாவோட கால்ல விழுறாரு?” என்று கேட்க

Advertisement

 

அவனோ “இவ்ளோ நீளமா முடி வச்சிருக்கியே! உனக்கு அதுல ஒன் பர்சன்டேஜாவது மூளையா வளர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ஜெகன்மோகினி.. இந்தச் சின்ன விஷயம் கூடவா புரியலை? அவன் வருங்கால மாமியார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கிறான்… பாரு அடுத்து விழுந்துட்டான்” என்று அவளைக் கேலி செய்தபடி அண்ணனின் செய்கைக்கு விளக்கம் கொடுக்கும் போதே சூரியா ரேணுகா, கோமதியம்மாளின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி முடித்துவிட்டான்.

 

ஆரியா அதைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, சுமித்ரா அவன் சொன்னதை நம்ப இயலாதவளாய் அவனது புஜத்தில் சுரண்டி “நீ விளையாட்டுக்குத் தானே சொல்லுற?” என்று கேட்க

 

ஆரியா அவளைக் கிண்டலாகப் பார்த்தவன் “ஆமா இவ என் அத்தைப் பொண்ணு, இவ கிட்ட நான் விளையாடுறேன்… அட போமா! அவன் அங்கே உங்க முழுக்குடும்பத்தையும் செண்டிமெண்டால கவர் பண்ணிட்டிருக்கான்.. இது புரியாம நான் விளையாடுறேனு சொல்லுற” என்று கூறவும் அவனை முறைத்துவைத்தாலும் அவன் சொன்னதில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்டாள் சுமித்ரா.

 

ரேணுகா ஆரியாவைக் காட்டி “இந்தத் தம்பி…..” என்று இழுக்க

 

சூரியா “அவன் தம்பியே தான் அத்தை… என்னோட ஒன் அண்ட் ஒன்லி பிரதர்… பேரு ஆரியா” என்று இளையச் சகோதரனை அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

ஆரியா சகோதரனின் ‘அத்தை’ என்ற வார்த்தையை மனதில் குறித்துக்கொண்டவன் பெரியவர்களுக்கு வணக்கம் சொல்லவே, சந்தியாவும் சுமித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

சந்தியா சூரியாவின் அருகில் சென்று நின்றுகொண்டபடி அவன் சட்டையை இழுக்க அவன் என்னவென்று அவளருகில் குனிந்தான். அவன் காதுக்குள் “என்னடா புதுசா அத்தை, சொத்தைனு கூப்பிடுற? அப்போலாம் நீ ஆன்ட்டினு தானே கூப்பிடுவ” என்று துருவித் துருவி விசாரிக்க

 

சூரியா “எப்பிடி காதல்ங்கிறது உனக்கு த்ரீ இயர்ஸ் முன்னாடி ஒரு மாதிரியும் இப்போ ஒரு மாதிரியும் தெரியுதோ, அதே மாதிரி தான் எனக்கும் அவங்க த்ரீ இயர்ஸுக்கு முன்னாடி ஆன்ட்டியா இருந்தாங்க.. இப்போ அத்தையா ப்ரொமோட் பண்ணிட்டேன்” என்று குத்தலாகக் கூறிவிட்டு கோமதியம்மாளிடம் சென்று அமர்ந்து “கிரானி” என்று கொஞ்ச ஆரம்பித்துவிட்டான்.

 

சந்தியா பல்லைக் கடித்துவிட்டு நிற்கவும் ஆரியா ரேவதியிடம் பேசிக்கொண்டிருந்தவன் கண்ணால் என்னவென்று விசாரிக்க அவள் சூரியாவைப் பெருவிரலால் சுட்டிக்காட்டி உன் அண்ணனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சைகையால் காட்டிவிட்டுச் சுமித்ராவை அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

உள்ளே சென்றவள் சுமித்ராவிடம் மூச்சுவிடாமல் அமெரிக்காவில் நடந்தது, இன்று காலையில் நடந்தது என்று பாக்கியின்றி சொல்லிமுடித்தாள். சுமித்ரா சூரியாவுக்காகச் சந்தோசப்படுவதா, அல்லது சந்தியாவின் நிலையை எண்ணி யோசிப்பதா என்று புரியாமல் விழித்தாள்.

 

இரு சகோதரிகளும் அறைக்குள் சென்று நீண்டநேரமாகியும் வராமலிருக்க ரேணுகா “சுமி, சந்து ரெண்டு பேரும் உள்ளே என்ன பண்ணுறிங்க? வீட்டுக்கு ஆட்கள் வந்திருக்கப்போ இப்பிடியா தனியா போய் இருப்பிங்க?” என்று அதட்ட அடுத்த நிமிடம் கதவைத் திறந்து வெளியே வந்தனர் இருவரும்.

 

அங்கே சூரியாவும் ஆரியாவும் அதிரசத்தை விழுங்கிக் கொண்டிருக்க ஆரியா கோமதியம்மாளிடம் “கிரானி திஸ் இஸ் ஆசம்! நெக்ஸ்ட் டைம் சென்னைக்கு வர்றப்போ தியாக்கும், ஜெகன்மோகினிக்கும் எடுத்து வைக்கிற மாதிரி எனக்கும் ஒரு ஷேர் எடுத்து வச்சிடுங்க” என்று அன்புக்கட்டளையிட கோமதியம்மாளுக்குத் தான் செய்த அதிரசத்தை அவன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு பாராட்டியச் சந்தோசத்தில் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்ப் எரிய “உனக்கு இல்லாததா? கண்டிப்பா எடுத்துட்டு வர்றேன்டா ராஜா” என்று மனதாறக் கூறினார்.

 

சுமித்ரா சந்தியாவின் காதில் “அடியே! இன்னொரு தடவை அவன் என்னை ஜெகன்மோகினினு சொன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று பல்லைக் கடிக்கச்

 

சந்தியா “சுமிக்கா! அப்போ பாஸ் உனக்கு விளையாட்டுக்கு வச்சப் பேரை உண்மையாக்கப் போறேனு சொல்லு” என்று அவளைக் கேலி செய்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தேவராஜும், சதாசிவமும் தங்கள் நண்பர்களைச் சந்திப்பதற்காக வெளியே சென்றவர்கள் வீடு திரும்பிவிட்டனர். வீட்டுக்குள் நுழையும் போதே பெண்களின் கலகலப்பான உரையாடல் காதில் விழ உள்ளே நுழைந்தவர்கள் சூரியாவைக் கண்டதும் புன்னகையுடன் பேச ஆரம்பித்தனர்.

 

சூரியா அவர்கள் இருவரின் காலையும் தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதோடு மூச்சுக்கு முன்னூறு முறை மாமா மாமா என்று அழைத்துச் சந்தியாவின் சந்தேகத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 

சதாசிவம் சூரியாவிடம் “அப்புறம் தம்பி எங்க பொண்ணு எப்பிடி வேலை செய்யுறா?” என்று கேட்க

 

சூரியா “பிரவுனி வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரி மாதிரி மாமா! அவ்ளோ பெர்ஃபெக்டா பார்த்து முடிச்சிடுவா… படிப்பிலயும் அப்பிடித் தான்… உங்கப் பொண்ணு வேற எப்பிடி இருப்பா” என்று பெரிய ஐஸ்பாரைத் தூக்கி சந்தியாவின் பெரியப்பா தலையில் வைக்க அதன் குளுமை அவர் அருகிலிருந்த அவளது தந்தை தேவராஜையும் சென்றடைந்தது அவரது முகத்தில் தெரிந்த பெருமிதத்திலேயே கண்டுகொண்டாள் சந்தியா.

 

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அலுவலகத்துக்கு நேரமாவதாக அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப எழ, கோமதியம்மாள் தாங்கள் இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் தான் இருப்போம்; அடிக்கடி வீட்டுக்கு வந்துச் செல்லுமாறு இரு சகோதரர்களுக்கும் அன்பாக ஆணையிடவே இருவரும் அதை ஏற்றுக்கொண்டு கிளம்பினர்.

 

சந்தியா அவர்களை வாசல் வரை வழியனுப்பிவிட்டு வருவதாகச் சொல்லி அவர்களுடன் வந்தவள் சூரியாவிடம் “உன் நடவடிக்கை எதுவுமே சரியில்லையே மார்ஸ்மாலோ… ஏன் இப்போ எல்லாருக்கும் ஐஸ் வச்சிட்டு வந்த? வார்த்தைக்கு நூறு மாமா அத்தை வேற” என்று எரிச்சலுடன் முணுமுணுக்க

 

ஆரியா “அவ கேக்குறதுக்குப் பதில் சொல்லு ப்ரோ! டேரக்டா சொல்லு, உன்னை மிசஸ் சூரியா ஆக்கிறதுக்கான முயற்சி தான் இதுனு” என்று சொல்லிவிட்டுக் காரை நோக்கி வேகமாகச் சென்றுவிட அவன் சொன்னதைக் கேட்டுச் சந்தியா திகைத்துப் போனாள்.

 

சூரியாவிடம் “ஏய் மார்ஸ்மாலோ! அப்பிடி எதாவது எண்ணம் உன் மனசுல இருந்தா ரப்பர் போட்டு அதை அழிச்சிடு…. இன்னும் அஞ்சு வருசத்துக்கு எந்தப் பேரழகன் வந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்லை” என்று அவனை எச்சரிக்கச் சூரியா அதை நமட்டுச்சிரிப்புடன் கேட்டபடி காரினருகில் வந்துவிட்டான்.

 

தன்னை குறுகுறுவென்று பார்த்தபடி நின்றவளின் கூந்தலைச் செல்லமாகக் கலைத்துவிட்டு “என் மனசுல உள்ளதைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு இன்னும் நீ வளரலை பிரவுனி… சோ ரொம்ப யோசிக்காதே… போய் அதிரசம் சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு காரினுள் அமர்ந்தவனை முகத்தைச் சுருக்கியபடி பார்த்தவள் அவன் டாட்டா காட்டவும் அவனுக்கு உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு அவளது போனிடெயில் கூந்தல் அசைந்தாட வீட்டுக்குள் ஓடி மறைந்தாள்.

ஆரியா அண்ணனைக் குறும்பாகப் பார்த்தபடி “என்னடா அண்ணா! நீ என்னடானா மூச்சுக்கு முன்னூறு தடவை அத்தை மாமானு அங்கே எல்லாரையும் கவுக்க டிரை பண்ணுற… தியா என்னடானா இப்போதைக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சபதம் போடுறா… அப்பிடி அமெரிக்கால என்ன தான் நடந்துச்சு?” என்று கேட்க

 

சூரியா புன்னகையுடன் “உன் கிட்ட சொல்லாம இருப்பேனா? பட் ஆபிஸ்ல இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா இருக்கும்… அதெல்லாம் முடிச்சுட்டு ஈவினிங் ஃப்ரீயானதுக்கு அப்புறமா சொல்லுறேன்” என்று கூறியபடி ஸ்டீயரிங் வீலை வளைத்துத் திருப்பி அலுவலகத்தை நோக்கிக் காரைச் செலுத்த ஆரம்பித்தான்.

 

சாரல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!