Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-31

குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்

மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

கயல்விழி கணவனோடு வாசலிலேயே தனது குடும்பத்தை வரவேற்க காத்திருந்தாள். ஜெயன் கார் சத்தம் கேட்டு அப்போது தான் வெளியில் வந்தான்.

அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்து வீட்டினுள் செல்ல வரவேற்பறையில் அமர்ந்து அனைவருமாய் பேசிக் கொண்டிருந்தனர்.



Advertisement

காயத்ரி அமைதியாய் அவளது அறைக்குள் சென்றிருக்க ஜெயன் இங்கு அமர்ந்து பெயருக்கு பேசுவதைப் போன்று பாவனை செய்து கொண்டிருந்தான்.

“கயல் உங்க அண்ணிக்கு வீட்டைச் சுத்திக் காட்டு”, என்ற மாமியாருக்குத் தலையசைத்தவளாய் தேவாவோடு எழுந்து சென்றிருந்தாள்.

அனைத்து இடத்தையும் பார்வையிட்டவர்கள் இறுதியாய் காயத்ரியின் அறைக்குள் நுழைந்தனர்.

Advertisement

கயல்விழி தங்கையை முறைத்த படி கட்டிலில் அமர்ந்தாள்.

Advertisement

இருவரையும் பார்த்த தேவா என்ன செய்வதென புரியாமல் அமைதியாகவே இருக்க கயல்விழியே பேச்சைத் தொடங்கினாள்.

“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது காயூ.”

“சும்மா என்னைக் குறை சொல்லாத க்கா.. அவரு பண்றது மட்டும் சரியா?”

Advertisement

“மாமா நிலைமையை நீயும் கொஞ்சமாவது புரிஞ்சுக்கணும். அம்மா ஒரு பக்கம் பொண்டாட்டி ஒரு பக்கம்னு இழுத்தால் மனுசன் என்ன டி பண்ணுவாரு?”

“என் நிலைமையில் நீ இருந்தா தான் என் கஷ்டம் புரியும்.”, என்றவள் தேவாவிடம்,

“நீங்களே சொல்லுங்க அண்ணி. எப்போ பார்த்தாலும் அம்மா அம்மா அம்மா தான். இதைப் பண்ணனும் அதைப் பண்ணனும்னு ஓடிகிட்டே இருக்கார்.

இவ புருஷன் முடியும் முடியாதுனு முகத்தில் அடிச்ச மாதிரி எல்லாத்தையும் பேசிடுறாரு. அது மாதிரி இருங்கனு சொன்னால் தப்பா?

இது பத்தாதுனு இவர் தங்கச்சி வேற சும்மா சும்மா இது அதுனு உயிரை எடுக்குறா. ஏற்கனவே குழந்தை பிறந்த அப்பறம் எங்களுக்குள்ளே நெருக்கம் குறைஞ்ச மாதிரி தோணுது எனக்கு.

இதில் மொத்த நேரத்தையும் சுத்தி இருக்குறவங்க எல்லாரும் எடுத்துகிட்டால் எங்க வாழ்க்கைனு ஒண்ணு எப்போ அண்ணி இருக்கும்.”

“அண்ணி அவ சொல்றதெல்லாம் சரி தான் ஆனால் அவர் நிலைமையும் யோசிக்கணும் தான?

அன்னைக்கு நீங்க ஊருக்கு போயிருந்தப்போ நம்ம வீட்டில் இருந்துகிட்டு வர மாட்டேன்னு ஒத்த காலில் நிக்குறா.

அவரும் எவ்வளவோ இறங்கி வந்து பேசுறாரு கண்டுக்காம இருக்கா.

உங்க கல்யாணம் நடக்காம இப்படி எதாவது நடந்துருந்தா அண்ணன் இதை டீல் பண்ற விதமே வேற மாதிரி இருந்துருக்கும்.

இந்த இரண்டு நாளும் நானும் இவரும் அண்ணன் கிட்ட இருந்து எப்போ போன் வருமோனு பயந்துட்டு இருக்கோம்.

கூட்டுக் குடும்பத்தில் இதெல்லாம் இருக்க தானே செய்யும்.
அவர் வேலையும் நேரம் காலம் இல்லாம பார்க்க வேண்டிய நிலைமை. என்ன அண்ணி பண்ணுவாரு?”

“இதை தான நானும் சொல்றேன். நேரங் கெட்ட நேரத்தில் தான் வேலையே முடியுது. இருக்குற கொஞ்ச நேரமும் என்கூட இல்லாம இவங்க எதையாவது பேசிகிட்டு இருந்தா.”

“காயூ நீயே சொல்லு நானும் என் புருஷனும் தூங்க போற நேரத்தை தவிர ரூமுக்கு போய் நீ பார்த்துருக்கியா?”

“!!”

“ஒண்ணு மாத்தி ஒண்ணு எதையாவது சொல்லி என்னை அவரோட பேசவே விடாம தான் வைச்சுருப்பாங்க.

நீ சொல்ற மாதிரி என் புருஷன் எதிர்த்து பேசிருவாரு தான். அதனால தான் அவங்க என்னை வைச்சு நினைச்சதை சாதிச்சுப்பாங்க.”

“..”

“அவங்க குணமே அது தான்னு தெரிஞ்சு போச்சு நம்ம வீட்டுகாரங்க நம்ம மேல அன்பா பாசமா இருக்கும் போது அதுக்காக சிலதை பொறுத்துப் போறதில் என்ன தப்பிருக்கு.”

“..”

“இது இப்படியே இருக்க போறதில்ல கண்டிப்பா. எல்லாம் சரியாயிடும் டி. ஆனால் எதுவாயிருந்தாலும் நீ இங்கே இருந்து சமாளிச்சுருக்கணும்.

அதென்ன அங்கேயிருந்துட்டு வர மாட்டேன்னு சொல்லி செக் வைக்குறது.
அம்மா இதை தான் நமக்கு சொல்லி கொடுத்தாங்களா?

நம்ம மேல தப்பில்லாத அப்போ தான் நாம அடுத்தவங்க குறையைத் தட்டிக் கேட்க முடியும்.”

“..”

“இவளுக்கும் இதெல்லாம் நல்லாவே தெரியும் அண்ணி இருந்த டிப்ரஷென்ல இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கா.

பாவம் இவ புருஷன் உன்னையும் குழந்தையையும் விட்டா அவருக்கும் யாரு டி இருக்கா?”, என்றதில் காயத்ரி கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

தேவா அவளை ஆதரவாய் தோள் பற்றிக் கொள்ள சில நிமிடங்கள் காயத்ரி தன்னைத் தானே தேற்றிக் கொள்வதில் கரைந்தன.

“அழாத காயூ. உன் நிலைமை நல்லாவே புரியுது. நாம இதுக்கு எதாவது வழி யோசிப்போம்.

கண்டிப்பா என்னால முடிஞ்சதை நான் பண்ணுறேன். ஆனால் நீ அண்ணி சொன்ன மாதிரி எதுவாயிருந்தாலும் இங்கே இருந்து ஃபேஸ் பண்ணு.

உன்னோட உரிமையை விட்டுக் கொடுத்துட்டு வரக் கூடாது காயூ.

நாங்க கிளம்பின அப்பறம் அண்ணன் உன்கிட்ட பேசும் போது உன் மனசில் இருக்குதை பொறுமையா எடுத்துச் சொல்லு. சரியா?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

உணவு நேரத்தில் அனைவருமாய் உணவு மேசையில் அமர்ந்திருக்க கணவனை அவ்வப்போது ஓரப் பார்வை பார்த்து அமர்ந்திருந்தாள் தேவா.

அவன் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருக்க என்னவோ ஒரு சிறு கண்ணசைவு கிடைத்து விட்டால் கூட மனம் சமாதானமாகி விடும் என்ற நிலையில் இருந்தவள் என்ன செய்வதென யோசித்து அனைவரையும் ஒரு நொடி பார்த்துக் கொண்டாள்.

உணவு மேசையின் நடு இருக்கையில் அதிரன் அமர்ந்திருக்க தேவா அவனுக்கு இடது புறம் அமர்ந்திருந்தாள்.

லேசாய் தனது புடவையை உயர்த்திக் கொண்டவள் அவனது பாதத்தின் மேல் தனது கட்டை விரலைக் கொண்டு அழுத்தினாள்.

இதைச் சற்றும் எதிர் பாராதவனுக்கோ மனதின் மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் போயிருக்க சாதாரணம் போல் மனைவியை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் அவளுக்கே அவளுக்கான சிரிப்பு ஒளிந்திருக்க தேவாவோ முகம் மலர்ந்து போனாள்.

அவனது கால் விரல்களின் மேல் தனது கால் விரல் கொண்டு வருடியவள் உணவை முடிக்கும் வரையிலுமே தனது காலை நகர்த்தவே இல்லை.

கை கழுவ அதிரன் எழுந்த நேரம் அவனோடே எழுந்து கொண்டவள் பிறரருக்கு கேட்காத வண்ணம்,

“இப்போ நீங்க ஓகே தான?”

“உன் புருஷனுக்கு கோபம் கூட வரக் கூடாதா?”

“வரலாம். ஆனால் நான் பக்கத்தில் இருந்தா அதைக் குறைக்க எதாவது பண்ணுவேன்.”, என்றவள் கண்சிமிட்ட அதிரனோ கண்களால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.

“என்ன நடந்துட்டு இருக்கு. நாம என்ன டி பண்ணிட்டு இருக்கோம்?”

“ஊரே தீயாப் பத்தி எரிஞ்சாலும் நாம தீராத காதல் பண்ணலாம் ஹீலர்..”, என்றவள் முகச் சிவப்பை மறைக்க முயன்றாள்.

“இவ்வளவு பேசுறவளுக்கு, என்னைப் பத்தி புரியுறவளுக்கு புருஷன் ஒரு புடவையை எதுக்கு கொடுத்தான்னு புரியலை.”, என்றவனின் முனகலில் எதைச் சொல்கிறான் என்று யோசித்த வண்ணம் கை கழுவி நகர விஜயனும் ஜெயனும் மட்டுமாய் இருப்பதைக் கவனித்தவள் அவர்கள் அருகில் சென்றாள்.

“ண்ணா..”

“வாம்மா தேவா.”, என்ற விஜயன் புன்னகைக்க ஜெயன் தயக்கமாய் புன்னகைத்தான்.

“எல்லாம் சரியாயிடும் ண்ணா. வருத்தப்படாதீங்க.”, என்றவள் நேரடியாகவே ஜெயனிடம் கூற அவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தான்.

“என்ன ண்ணா இதுக்கு ஏன் இவ்வளவு சங்கடபடுறீங்க. நாளைக்கு என் புருஷனோட எனக்கு சண்டை வந்தா நீங்க தான சமாதானம் பண்ணணும்?”, என்றதில் இருவருமே மெலிதாய் சிரித்திருந்தனர்.

“பிரச்சனையும் அதுக்கான வழியும் இரண்டுமே அவங்களுக்கே தெரியுது. எனக்குத் தெரிஞ்சு அவங்க உங்ககிட்ட இருந்து இமோஷனல் சப்போர்ட் எதிர் பார்குறாங்க.”

“எவ்வளவோ சொல்லியாச்சு மா. அவ புரிஞ்சுக்க கூடாதுன்னே இருக்கா.”

“நீங்க அவங்களை சமாதானப்படுத்துறதையே நோக்கமா வைச்சு பேசிருப்பீங்க ண்ணா.”

“!!!”

“உங்க அம்மாவோட குணத்தை மாத்த முடியாதுனு அவங்களுக்கும் தெரியும்.

அதையும் மீறி காயூ உங்ககிட்ட புலம்பவோ கோபபடவோ செஞ்சா ஜஸ்ட் அவங்க பேசுறதை கொஞ்ச நேரம் காது கொடுத்து கேட்டுருங்க.”

“..”

“மனசில் இருக்குறதை வெளியில் கொட்டிட்டாலே பாதி பிரச்சனை முடிஞ்சுது.

அவங்க ஒரு வார்த்தை சொல்ல நீங்க அதுக்கு டிஃபெண்ட் பண்ணி பேச இது பிரச்சனையை எப்படி முடிக்கும் ண்ணா..”

“அவங்க இரண்டு பேருக்குமே தேவைப்படுறது அவங்க புருஷன் கூட க்வாலிட்டியான கொஞ்ச நேரம். அது கிடைக்காத ஏமாற்றத்தை எந்த பேச்சாலேயும் சரி பண்ண முடியாது.”

“..”

“உங்க மனைவி உங்களுக்கு முக்கியமானவங்களா அண்ணா?”

“என்ன ம்மா கேள்வி இது. அவ மட்டும் தான் என் உலகமே.”

“அதை அவங்களுக்கு விடாம காட்டிகிட்டே இருங்க.. சத்தமா தெளிவா அவங்களுக்குள்ளே இந்த மாதிரியான ஏக்கங்களே வராத மாதிரி வெளிப்படுத்துங்க.

மத்த படி என்னோட இரண்டு நாத்தனாரும் அவங்க புகுந்த வீட்டுக்கு ஏத்த மருமகங்க தான்.”, என்றவள் புன்னகைத்தாள்.

“எல்லா விஷயத்தையும் மாதிரி இதிலேயும் எங்க மச்சான்கிட்ட நாங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு போலேயே தேவா!”, என்ற விஜயனின் கேள்வியில் புன்னகைத்து தலை குனிந்தாள்.

“தேங்க்ஸ் தேவா.”, என்ற ஜெயனிடம் மேலும் சில நொடிகள் பேசி விட்டு உள்ளே வந்தவளைத் தான் பார்த்திருந்தான் அதிரன்.

நிச்சயம் அவள் அனைத்தையும் சரி செய்து விட்டாள் என்று புரிந்தது அவனுக்கு.

அவளின் இந்த குணம் மேலும் மேலும் அவள்புறம் அவனை சாய்ப்பதாய்.

அதன் பின் சிறிது நேரத்தில் அதிரனும் தேவாவும் காத்யாயினியோடு கிளம்பியிருக்க காரில் அமர்ந்ததும் மேலோட்டமாய் தேவா விஷயத்தைக் கூறியிருந்தாள்.

“இவ என்ன சின்ன குழந்தையா தேவா? வேலைக்கு போற மனுஷன் எப்போ பார்த்தாலும் இவளோடவே இருக்க முடியுமா?”

“ம்மா உங்களுக்குத் தெரியாததா அன்புக்கு அறிவு எப்பவுமே கம்மி தான்.”, என்று புன்னகைத்தவளைப் பார்த்தவன்,

“ஏன் ம்மா நீங்க இப்படியெல்லாம் அப்பாவோட சண்டை போட்டதில்லையா?”, என்றதில் காத்யாயினி புன்னகைத்தார்.

“இருந்திருக்கு அதி. நீ பிறக்குறதுக்கு முன்னாடி. ஆனால் இவளை மாதிரி அம்மா வீட்டுக்கெல்லாம் போய் உட்காரலை.”, என்றதில் அதிரனும் தேவாவும் சிரித்தனர்.

தங்களறைக்குள் நுழைந்த மறு நொடி தேவாவின் இதழ்களைத் தனதாக்கியிருந்தான் அதிரன்.

தேவா மூச்சிற்குத் திணறியவளய் அவனைப் பிரிக்க முயல, அவனாகவே பிரிந்தவன்,

“கொஞ்ச நாள் முன்னாடி வரை என் கண்ணைப் பார்த்து பேச முடியாதவ இன்னைக்கு என்னை சரியாக்கணும்னால் என்ன வேணாலும் பண்றா..”

“..”

“என்னை சார்ந்தவங்க எல்லாரையும் அவளுக்கானவங்களா பாக்குறா.”

“..”

“இவ்வளவு மெச்சூர்டா இருக்காத டி. பிடிவாதம் பிடி என் மூளையை கொஞ்சம் சூடாக்கு அப்பபோ. உன்னைச் சமாளிக்க முடியாம தவிக்க வை. எல்லாத்தையும் நான் ஹேண்டில் பண்ணிக்குறேன்.”, என்றவனின் மூச்சுக் காற்று அவளது உதடுகளில் மோதிக் கொண்டிருந்தது.

“இதெல்லாம் நடக்காதுங்கிற தைரியத்தில் சொல்றீங்க.. ஒரு வேளை எதிர் காலத்தில் நீங்களும் வேலை பொறுப்புனு பிஸி ஆகிட்டால் இதெல்லாத்தையும் கண்டிப்பா நான் பண்ணுவேன்.

அப்போ ஏன் டா இப்படி சொன்னோம்னு ஃபீல் பண்ணுவீங்க.”, என்றவள் புன்னகைத்து முத்தம் வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!