“அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் மு.வ விளக்க உரை: சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.”
ஒரு நொடி அங்கு பெரும் அமைதி நிலவ பெண் விஷயம் என்பதால் ஸ்ரீதரும் கோபாலும் அவசர பட வேண்டாம் என்று இருக்க கணேஷோ அவர் பிடித்த பிடியில் நின்றிருந்தார்.
“இங்க பாருங்க சம்மந்தி..”
“பொண்ணே இல்லைங்குறேன் என்னயா சம்மந்தி? என் வீட்டை விட்டு போங்க முதல்ல..”
“!!”
“இந்த ஒழுக்கம் கெட்டவளை வச்சு சோறு போட நான் ஒன்னும்…”
“போதும் நிறுத்துங்க..”, என்ற சாந்தாவின் குரலில் நீணிதி நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்க பெத்த பிள்ளையவே எல்லார் முன்னாடியும் என்ன பேச்சு பேசுறீங்க? நீங்கலெல்லாம் மனுஷனா?”
“ஏய் என்ன வாய் நீளுது? ஒழுங்கா உள்ள போ டி..”
“பொண்ணு விஷயம்னு தான் அவங்க கூட பொறுமையா இருக்காங்க ஆனா பெத்த பொண்ணு வாழ்க்கை மேல உங்களுக்கு அந்த அக்கறை கொஞ்சமாவது இருக்கா?”
“…”
“முடிவா என்ன தான் சொல்றீங்க?”
“..”
“அப்போ நானும் என் பொண்ணும் இந்த வீட்டை விட்டு போறோம்”
“நானும் பார்த்துட்டே இருக்கேன் என்ன வாய் நீளுது?”, என்றவர் சாந்தாவின் முடியை கொத்தாய் பிடித்திருந்தார்.
“ம்மா..” என்று நீணிதி தாயின் அருகில் ஓட மகிழ் வேலன் கணேஷை பிடித்து தள்ளியிருந்தான்.
“மனுஷனாயா நீ?”
“தம்பி வேண்டாம் விடுங்க எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம்.. இவரை எதிர்த்து பெரிய ஆளா ஆக்க வேண்டாம்.”
“இங்க பாரு இனி செத்தாலும் இங்க வந்து நின்னுராத சொல்லிட்டேன்.
கடைசியா கேட்குறேன் உன் மகளுக்காக என்னை தூக்கி போட்டுட்டு போக போறியா நீ?”, என்றதில் விரக்தி புன்னகை சாந்தாவினிடத்தில்.
“இந்த வாழ்க்கையும் உசுருமே என் மகளுக்காக இருக்குறது தான்.”, என்றவர் கண்ணைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்று தனக்கும் மகளுக்குமான அனைத்தையும் எடுத்து வந்தார்.
“புருஷனே வேண்டாம். ஆனா என் காசுல சம்பாதிச்சதெல்லாம் பை நிறைய அள்ளிட்டு போவியா நீ?”
“இத்தனை வருசம் அடிமையா இருந்ததுக்கு நாலு துணி கூட எடுத்துட்டு போகலைனால் எப்படி..
என் அம்மா எனக்கு போட்ட நகையை தவிர எதுவும் கிடையாது. நீங்க கட்டின இதை தவிர..”, என்றவர் தாலியைத் தூக்கி காட்டிவிட்டு மகளின் கையை இறுகப் பற்றிக் கொண்டார்.
“ம்மா.. நீங்க…”
“அன்னைக்கு கேட்டியே தனியா இங்கே என்ன பண்ணுவேன்னு. இனி நிம்மதியா இருப்பேன்.
அந்த சந்தோஷத்தோட கல்யாணம் பண்ணிக்கோ நீணு..”, என்றதில் கண்கள் கண்ணீரை உகுத்தது.
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டைத் தாண்டி வாசலுக்கு வந்து விட்டவருக்கு எதிர்காலம் பயத்தை அளித்தது.
என்ன செய்வதென புரியாமல் தவித்து நின்றவரிடம் ஸ்ரீதர்,
“நாம போனதில் இருந்தே அவரோட நோக்கம் இந்த கல்யாணத்தை நிறுத்துறது தான். அதுக்கு ஏதோ ஒரு சாக்கு கிடைச்ச உடனே அதை பிடிச்சுகிட்டு தொங்குறாரு.
பெத்த பொண்ணு சந்தோசமா இருக்குறது எந்த அப்பாவுக்காவது கண்ணை உறுத்துமா டா?”
அவன் கத்தி அத்தனை கோபமாய் பேசியதில் ஆரணி சற்று தள்ளி அப்படியே நின்று விட்டிருந்தாள். இதுவரை தன் கணவனை இப்படியெல்லாம் பார்த்திராதவளுக்கு லேசாய் பயம் கூட எழுந்திருந்தது.
“அண்ணி வாங்க..”, என்று இளன் அழைத்ததில் மனைவியின் முகத்தை கவனித்தவனாய் சற்றே இலகுவாகியிருந்தான்.
“வா ஏன் அங்கேயே நின்னுட்ட..”
“இல்ல சும்மா தான்..”
“இன்னைக்கு அங்கே நீ வந்திருக்கணும். என்ன சீன் தெரியுமா!”
“..”
“நீணிதி இவன் கையைப் பிடிச்சுகிட்டு இவரை தான் கட்டிப்பேன்னு சொல்லிச்சு பாரு. எல்லாரையும் விட ஷாக் ஆனது நான் தான்.”
“..”
“என்ன மாதிரி ட்ரெயின் பண்ணி வைச்சுருக்கான் பாரு. இந்த கொழுந்தனாரை நீ உலகத்துலேயே நல்லவன்னு வேற சொல்லிட்டு இருக்க..”
“டேய்..”
“பின்ன என்ன டா அந்த பொண்ணு வாயே திறக்காதுனு நினைச்சா அந்தர் பல்டி..”, என்றதில் லேசான வெட்கம் இளனின் முகத்தில்.
“என்னவோ போங்க.. நடந்ததெல்லாம் கேட்டதுக்கே தலை சுத்துது. அத்தையும் நீணிதியும் எப்படி தான் அவரோட இருந்தாங்களோ..”
“உண்மை தான் அண்ணி. கிட்டதட்ட ஜெயில் வாழ்க்கை தான் போல. அதனால தான் இவ இவ்வளவு பயந்த சுபாவமா இருக்கா…”
“ம்ம் நல்ல வேளை இப்போவாவது நல்ல முடிவா எடுத்தாங்க இரண்டு பேரும்.
என்னைக்கும் அவளை நல்லா பார்த்துகோங்க கொழுந்தனாரே..”, என்றதற்கு புன்னகையோடு ஆமோதிப்பாய் தலையசைத்தான் இளன்.
ஸ்ரீதரும் கோபாலும் வர ஆரணி உள்ளே சென்றிருந்தாள். பெரியவர்கள் இருவரும் இளனுக்கு இரு புறமும் நின்று தோளைத் தட்டிக் கொடுத்தனர்.
“பிள்ளை மூஞ்சியை பார்க்க முடியலை இளா.. எதாவது பேசிச்சா உன்னோட?”
“ம்ம் தப்பா நினைச்சுராதீங்கனு அழறா.. எனக்கு கஷ்டமா போச்சு.”
“நீ ஒண்ணும் கவலைப் படாத நான் நம்ம சங்கத்திலேயும் பேசி இரண்டு மூணு பேர் காதில் விஷயத்தை போட்டு வைக்குறேன்.”
“..”
“ரொம்ப வெளியே தெரியாது அதே நேரம் அந்த ஆளு பிரச்சனை பண்ணாம இருப்பாருனு எனக்கு நம்பிக்கை இல்ல இளா.
அதனால முதல்லேயே இதை தெளிவா பேசிடணும்.”
“சரி பெரியப்பா..”, என்றவனின் முகமும் சிந்தனையில் இருப்பதை கவனித்தவராய்,
“ஏன் டா வருத்தப்படுற எவன் என்ன கிழிக்குறான்னு பார்த்துருவோம். உங்கப்பன் இன்னைக்கும் பட்டாளத்தான் தான்.
நம்மளை நம்பி வந்த பிள்ளையை நாம பார்த்துக்க மாட்டோமா.. தைரியமா இரு..”, என்றதில் மகிழ் வேலன் சித்தப்பாவின் மீசையை முறுக்கிச் சிரித்திருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.