“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். பொருள் பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.”
பின் மதியமாகியும் சாந்தா இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. உணவும் வேண்டாம் என்று கூறி விட நீணிதியும் தாயின் மடியிலேயே படுத்திருந்தாள்.
“ம்மா..”
“ம்ம்?”
“என் மேல கோபம் வரலையா உனக்கு?”
“எப்படிபட்ட ஆளோட வாழ்ந்துருக்கோம்னு தான் கோவமா வந்துது டி..”
“..”
“எங்கடா காரணம் கிடைக்கும்னு இருந்துருக்காரு பாரேன். அப்போ இவரு கல்யாண பேச்சை எடுக்கும் போதே என்ன எண்ணத்தில் இருந்துருக்காரு.
இவரை மாதிரியும் இவர் பையனை மாதிரியும் எவனாவது வருவான்னு தான நினைச்சுருக்காரு.”
“..”
“உன் சந்தோசம் கண்ணை உறுத்திருக்கு டி அதை தான் என்னால ஏத்துக்கவே முடியலை. நீ பேசாம இருந்துருந்தாலும் எப்படியாவது இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைச்சுருப்பேன்.”
“அதெல்லாம் சரி தான் மா.. ஆனால் நீ வெளியே வந்துருக்க வேணாமோனு இருக்கு..”
“அங்கே சொன்னது தான் டி இப்பவும் சொல்றேன். இந்த வாழ்க்கையை இவ்வளவு தூரம் சகிச்சுகிட்டதுக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான். இல்லைனால் இதை எப்பவோ பண்ணிருப்பேன்.”
“!!”
“கொஞ்ச நஞ்ச அடியா வாங்கிருப்பேன். எங்கப்பா என்னை ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது. அதை விட பேச்சு.. காது கொடுத்து சகிக்க முடியாத பேச்செல்லாம் கேட்டாச்சு.
நீ அஞ்சு வயசு குழந்தை தேனியில் நம்ம வீட்டு பக்கம் புருஷனும் பொண்டாட்டியுமா குடி வந்தாங்க. என்னை விட வயசில் சின்னவங்க. அக்கானு கூப்பிட்டு அவ்வளவு மரியாதையா பேசுவாங்க.
ஒரு நாள் சாதாரணமா ஏதோ பேசும் போது சிரிச்சதுக்கு அன்னைக்கு ராத்திரி நான் பட்ட பாடு. மான ரோஷம் இருக்குறவளா இருந்தா அன்னைக்கே தூக்குல தொங்கிருப்பா.
நானும் கிட்டதட்ட அந்த முடிவுக்கும் போயிட்டேன் தான். காலையில எப்பயும் போல என் புடவையைப் பிடிச்சுட்டு நின்ன உன்னைப் பார்த்து தான்..”, என்றவர் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
“இதெல்லாம் ரொம்ப கம்மி தான். சிலதை என்னால உன்கிட்ட சொல்ல முடியலை நீணு. மனசு ரணமாகி கிடக்கு.
மாப்பிள்ளை கையில் உன்னைப் பிடிச்சு கொடுத்துட்டேன்னா போதும். என் காலத்தை எப்படியோ ஓட்டிருவேன். ஆனா திரும்ப அந்த வீட்டுக்கு மட்டும் போக மாட்டேன் டி.”
“ம்மா.. அழாத ம்மா.. நான் இருக்கேன் உனக்கு..”
“நீணு..”
“ம்ம்?”
“நான் எடுத்த இந்த முடிவில் உனக்கு எதுவும் வருத்தமா? இந்த வயசில இப்படியெல்லாம்னு..”
“ம்மா என்ன பேசுற.. உண்மையா இத்தனை வருஷம் என்னால எனக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டேயேனு எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு.
உன் வாழ்க்கைக்கு எது சரினு படுதோ நீ பண்ணு மா.. யாரைப் பத்தியும் யோசிக்காத. இனி எனக்காகனு கூட யோசிக்காத.
அம்மம்மாகிட்ட பேசு அவங்க புரிஞ்சுக்கலைனால் நீ இங்கேயே இப்படியே என்னோட இருந்துரு.”, என்ற மகளை தன்னோடு இறுக்கிக் கொண்டார்.
ஜானகி இருவருக்குமான உணவோடு வர நீணிதி வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.
“பதட்டபடாத டா நீணு. இனி இது உன் வீடு. அம்மாக்கும் அதை புரிய வைக்கணும் நீ தான். இரண்டு பேரும் கொஞ்சமாவது சாப்பிடுங்க..”
“இருக்கட்டும் அண்ணி பசியில்ல..”
“இங்கே பாருங்க பிள்ளையும் சோறு தண்ணி இல்லாம இருக்கா.. நடந்ததை நினைச்சுட்டே இருந்தா அடுத்த அடி எடுத்து வைக்க தெம்பு வேண்டாமா. நாங்க இத்தனை பேர் உங்களுக்கு இருக்கோம் அப்பறம் என்ன?”
“உள்ளதை சொல்றேன். யாருக்கும் இருக்குற எண்ணம் தான இதெல்லாம். நீணிதி எனக்குப் பிடிச்சு நான் பார்த்து கூட்டிட்டு வந்த பொண்ணு.
என்னைக்கும் எங்க மக தான்.
அவரும் பெரிய மாமாவும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்க எல்லாம் பண்ணிட்டாங்க. இப்போ சாப்பிடுங்க..”, என்றதில் மறுக்க முடியாமல் மகளுக்கு ஊட்டி விட்ட படி தானும் பேருக்கு கொரித்து வைத்தார்.
இப்படியாய் இவர்கள் பேசிக் கொண்டிருக்க வாசலில் சலசலப்பு சத்தம் கேட்டு ஜானகி வெளியே வந்தார். கணேஷும் ஆகாஷும் தான் கத்திக் கொண்டிருந்தனர்.
“பிரச்சனை பண்ணணும்னு வந்திருந்தா அப்படியே கிளம்பி போயிடுங்க..”
“என் பொண்டாட்டியும் பொண்ணையும் கடத்திட்டு வந்து வைச்சுருக்கீங்கனு நானும் கம்ப்ளெண்ட் தான் பண்ண போறேன்.”
“தாராளமா பண்ணுங்க.. எங்க வரணுமோ நாங்க வரோம். இப்போ இங்கிருந்து கூச்சல் போடாம இடத்தை காலி பண்ணுங்க..”
“ஏய் புருசன் வந்து கத்திட்டு இருக்கேன் உள்ளே என்ன டி பண்ற?”, என்றதில் பக்கத்து வீட்டில் இருந்தவர் வெளியே எட்டிப் பார்த்தார்.
வெளியே சென்றிருந்த வேலனும் இளனும் வந்து விட இவர்களைப் பார்த்து வண்டியை நிறுத்தி விட்டு வேகமாய் வந்தனர்.
“அவங்களோட பேசணும்னால் உள்ளே வந்து பேசுங்க.. இல்லைனால் கிளம்புங்க முதல்ல..”
“இவரை எதுக்கு பா உள்ளை கூப்பிட்டுகிட்டு..”
“வேலா அமைதியா இரு..”, என்றவர் கணேஷை கேள்வியாய் பார்க்க வேண்டா வெறுப்பாய் மகனோடு உள்ளே நுழைந்தார்.
சாந்தாவும் நீணிதியும் வரவேற்பறையின் ஒரு ஓரமாய் நின்றிருக்க இளன் அவர்களை விட்டு சற்று இடைவெளி விட்டு அதே நேரம் கைக்கெட்டும் தூரத்தில் தான் நின்றான்.
“ம்மா என்ன பண்ணி வைச்சுருக்கீங்க.. கிளம்புங்க முதல்ல..”, என்ற மகனைப் பார்த்தவர் அழுத்தமாய் நின்றிருந்தார்.
“ம்மா உங்களைத் தான் கூப்பிடுறேன்.”
“பரவால்ல நான் தான் உன் அம்மானு உனக்கு நியாபகம் இருக்கா?”
“எல்லாம் இவளை சொல்லணும். அறிவிருக்கா கொஞ்சமாவது. இப்படி எவன் வீட்டிலேயோ வந்து நிக்குறியே அசிங்கமா இல்ல..”
“ஏய் இங்கே இருந்தா மரியைதை ரொம்ப முக்கியம்”, என்ற வேலன் கைகளை மடித்தபடி நின்றிருந்தான்.
“இவளுங்ககிட்ட என்ன டா பேச்சு நாலு அடியை போட்டு அவளை இழுத்துட்டு வா உன் அம்மா தன்னால வருவா..”, என்றதில் ஆகாஷ் நீணிதியின் அருகில் வந்து கையை நீட்ட அப்படியே அழுத்திப் பிடித்திருந்தான் இளன்.
“என்ன ஹீரோனு நினைப்பா.. கல்யாணத்துக்கு முன்னாடி எந்த உரிமையும் இல்லாத பொண்ணை கூட்டிட்டு வந்து வீட்டுல வைச்சுருக்கியே..“, என்றவனின் கன்னத்திலேயே அறைந்திருந்தான் இளன்.
“மீசை வைச்சா நீ ஆம்பளையா? பெத்த அம்மாவை மரியாதையா நடத்த தெரியலை கூடப் பிறந்தவளுக்கு என்ன பிரச்சனைனு கேட்க முடியலை வந்துட்டான் வசனம் பேசிகிட்டு.”
“ஏய் எவ்வளவு தைரியமிருந்தா என் பையன் மேலேயே கையை வைச்சுருப்ப நீ?”
“…”
“இதோ பாரு ஒழுங்கு மரியாதையா கிளம்பு. உன் ஆத்தா வீட்டு ஆளுங்ககிட்ட பேசி நானே அத்து விட்டுறலாம்னு தான் இருக்கேன். அப்பறம் நீ எங்கே வேணா போ எவன் வீட்டில வேணா..”, என்றதில் சாந்தா கணவனின் சட்டையைக் கொத்தாய் பிடித்திருந்தார்.
பெண்கள் அனைவருமாய் சாந்தாவைப் பிடித்துக் கொள்ள சாந்தாவோ வெறி பிடித்தவராய் கணவனின் மீது கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்திருந்தார்.
“என்ன பிறவி நீ.. பொண்டாட்டியா இல்ல ஒரு மனுசியா கூட நடத்த மாட்டியா?
என் அப்பா அம்மாவோட இருந்தப்போ நான் எப்படி இருந்தேன்னு தெரியுமா உனக்கு?
ஒரு நாள்.. ஒரு நாள் என்னோட சாதாரணமா பேசிருக்கியா நீ? என்ன பெரிய சந்தேகம் அப்படி எப்படியோ போறவ ஏன் யா உன்னோட இத்தனை வருசம் குடும்பம் நடத்தணும்.
இந்த புள்ளை என்னைக்காவது சிரிச்சு இருந்துருக்கா வீட்ல.. அது வயசு பிள்ளைங்களை மாதிரி சந்தோஷமா கவலையில்லாம நினைச்சதை பண்ணிட்டு பிடிச்சதை சாப்பிட்டுகிட்டு என்னைக்காவது இருந்துருக்காளா?
உனக்கு அடிமை மாதிரி தான இருந்தோம். ஆனால் இப்போ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுறது உனக்கு அவ்வளவு எரிச்சலா இருக்கு இல்ல?
அப்பறம் இவன் என்னைக்காவது என்னை அம்மானு மதிச்சுருக்கானா? யாரால உன்னால தான். இங்கே பாரு நான் எங்கேயும் வர போறதில்ல.
இப்போ கூட உன்னை மீறி நானா வெளியில் வந்துட்டேன்னு ஊருக்குள்ளே தெரிஞ்சா உனக்கு அவமானம் அதனால நீயாவே என்னைப் பத்தி அசிங்கமா எதையாவது சொல்லி துரத்தி விட்டா உனக்கு கௌரவம் இல்ல?
த்து என்ன ஜென்மம் யா நீயெல்லாம். உன்னால ஆனதை பார்த்துக்கோ இந்தா நீ கட்டின தாலி இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
என்னையோ என் மகளையோ எதாவது தொந்தரவு பண்ணின நானே உன் மேல புகார் கொடுப்பேன்.
போ போய் உன் புள்ளையும் நீயுமா அந்த வீட்டில் ஆம்பளை திமிரை தூக்கி சுமந்துட்டு இருங்க. ஒண்ணு சொல்றேன் இவன் உன்னை காப்பாத்துவான்னு எல்லாம் கனவு காணாத சத்தியமா மிகப் பெரிய சுயநலவாதி இவன்.
கை கால் இழுக்காம கிடையில கிடக்காம போய் சேரணும்னு வேண்டிக்கோ கடவுளை.
அப்படி எதுவும் நடந்தா உன்னை தூக்கி ரோட்டில் போட கூட தயங்க மாட்டான்.”, என்றவர் மகளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தார்.
கணேஷும் ஆகாஷும் இப்படியான சாந்தாவை எதிர் பார்த்திருக்கவில்லை என்பது அவர்களது உடல் மொழியிலேயே தெரிந்தது.
தனது குஞ்சு பறவைக்கு ஆபத்து எனில் ஐந்தறிவு பறவை கூட புலியாய் மாறி விடுவது போல் சாந்தா இன்று தன் மகளுக்காக அத்தனை வருட பயத்தையும் தகர்த்தெறிந்து வெளியே வந்திருந்தார்.
தரையில் கிடந்த அவரது தாலியை எடுத்து கணேஷின் கையில் திணித்தவனாய் இளன் அவர்களுக்கு வாசலை நோக்கி கைகாட்ட இருவருமாய் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
சாந்தாவும் நீணிதியும் உள்ளேயிருக்க கூடத்தில் அப்படியே அமர்ந்து விட்டிருந்தனர் ஸ்ரீதர் குடும்பத்தினர்.
அதிலும் ரங்கமணிக்கும் ஜானகிக்கும் கண்ணெல்லாம் கலங்கி விட்டிருந்தது.
சாந்தாவின் இடத்தில் தங்களை நினைத்தால் கையெல்லாம் நடுங்கியது.
உடலளவிலும் மனதளவிலும் எத்தனை போராட்டங்கள் அதுவும் இத்தனை வருடங்களாய்.
யாரும் யாருக்கும் ஆறுதல் கூறும் நிலையில் இல்லை. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாய் அதிர்வாய் இருந்தது.
ஆரணி தான் தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் எழுந்து அனைவருக்குமாய் காபி கலந்து வரச் செல்ல வேலனும் அவளுக்கு உதவி செய்வதற்காக உள்ளே சென்றிருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.